விவசாயி
கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 17

அந்த ஏழை விவசாயியின்
உழைப்பில் விளைந்த
விலை மதிக்க முடியாத
நெல் மணிகள்
இந்த பிரபஞ்சத்தின்
பசியை தீர்த்து
அந்த மனங்கள் நிறைவடைய
அதிகாலையில் எழுந்து
ஓடி ஓடி களைத்து விடும் போது
அவனுக்கான அங்கீகாரம்
எங்கே என்று
ஏழு உலகிலும்
தேடி அலைந்தாலும்
கிடைப்பதில்லை…
இங்கே எந்த உடல் உழைப்பையும்
மதிக்காமல்
வெட்டி கதைகளை பேசி
அந்த விவசாயியின் உழைப்பை
மதிக்காமல் நடு இரவில்
பிரியாணி சாப்பிட்டு விட்டு
அங்கே சாலையில்
தனது இரு சக்கர வாகனத்தில்
அதி வேகமாக
அந்த நடுநிசி இரவை
கிழித்துக் கொண்டு பறக்கிறான்
அந்த ஒருவன்…
அங்கே பகலில்
மும்முனை மின்சார சரியாக
கிடைக்காத காரணத்தால்
எரிபொருளால் நிரப்பிய
வண்டியில் சென்றால் கூட
இந்த இயற்கை நோகுமே என்று
சைக்கிளில்
அந்த நான்கு வழி சாலை வழியாக
சென்று கொண்டிருந்த
அந்த ஏழை விவசாயியின்
இரேழு உலகிலும் விலை சொல்ல முடியாத உயிரோ
அந்த நடுநிசி பிரியாணி பிரியன்
ஒருவனால் காவு வாங்கப்படுகிறது …
அங்கே அந்த உயிர்
துடித்து துடித்து
இறப்பதை கொஞ்சமும்
சட்டை செய்யாமல்
அவன் மட்டும் அல்ல
அந்த நான்கு வழி சாலையில்
அதி அற்புதமான சொகுசு சிற்றுந்தில்
போகிறவர்கள்
அந்த விபத்தை கண்டும்
காணாதது போல
சிற்றுந்தின் உள்ளே
தன் சக பயணியிடம்
அங்கே பாருங்கள்
ஏதோ விபத்து ஏற்பட்டு விட்டது என்று
உணர்வற்ற மொழியில்
கடத்திக் கொண்டே
அந்த விவசாயியின் இரத்தத்தில்
தன் சிற்றுந்தின் டயரை
ஏற்றி கடந்து செல்கிறார்கள்…
இங்கே அந்த சொகுசு சிற்றுந்தில்
செல்பவனின் ஜீவனுக்கும்
ஜீவித்து இருக்க
அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த
அந்த ஏழை விவசாயியின்
ஒரு பருக்கை சோறு
அவன் தட்டில் ஏதோவொரு நாள் விழுந்து
அவனும் சாப்பிட்டு இருக்கலாம்…
அவனுக்கு அவனது மரியாதை இப்படி
கிடைத்து இருக்கக் கூடாது என்று அங்கே
இரவு பறவைகள் சிறகடித்து
தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி
தனது இறுதி அஞ்சலியாக
தான் அமர்ந்து இருந்த மரத்தில் இருந்து
பூக்களை தனது அலகால்
கொய்து அவன் உடலில் தூவி
தனக்காக தானியங்கள் விளைவித்து
தன் ஜீவனை காப்பாற்றியவனுக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை…
அந்த இருள் கருணையோடு
அந்த பறவைகளுக்கு
தன் விழிகளில் கண்ணீர் மல்க
கைகூப்பி நன்றி தெரிவித்து கொண்டு இருந்ததை
இந்த பிரபஞ்சம் மௌன சாட்சியாக
மனம் கனத்து
வேடிக்கை பார்த்தது
தன் கண்களில் வழியும்
கண்ணீரை துடைக்க மறந்து…
தொடர்புள்ள சிறுகதைகள்
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 17, 2026
காடு
மருதம் கேதீஸ்
July 14, 2026
ஏகேஆர் 87 42 23 17
கே.ராஜலக்ஷ்மி
July 14, 2026