ஆமைக் கதை
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 251
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பெரிய ஆமை கடலில் வசித்து வந்தது. அது தினந்தோறும் மக்கள் நடமாட்டம் இல்லாதபோது கடற்கரைக்கு வந்து செல்லும் வழக்கம் உடையதாய் இருந்தது. ஒருநாள் மணலில் நீண்டதூரம் நடந்து சென்றது. கெட்டியான நிலம் வந்தது. அதில் நடக்கும்போது அதற்கு ஒரு சுகம் பேசியது. அதனால் வெகுதூரம் நடந்து விட்டது.
நேரம் போனதே அதற்குத் தெரியவில்லை. எங்கிருந்தோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நாய் கிட்ட வந்துவிட்டது. ஆமை உடனே ஐந்தையும் அடக்கிக் கொண்டது. நாய் சுற்றிச் சுற்றி மோந்து பார்த்தது. அந்த மணம் நாய்க்கு அருவருப்பைக் கொடுத்தது. நாய் குரைத்துக் கொண்டே ஓடிச் சென்றுவிட்டது.
வெகுநேரத்தின் பின் ஆமை தலையை நீட்டிப் பார்த்தது. நன்றாக இருட்டிவிட்டது. வந்த வழியையுந் தவறவிட்டுவிட்டது. கால் போனவழியே சென்றது. ஒரு பள்ளம் போல ஏதோ தெரிந்தது. எட்டிப் பார்த்தது. தண்ணீர் போல ஏதோ தெரிந்தது. அதற்குள் ஆமை குதித்துவிட்டது.
அது ஒரு கிணறு. அதற்குள் ஒரு ஆமையும் ஒரு தவளையும் கவலை ஒன்றும் இல்லாமல் சிநேகமாய் வாழ்ந்து வந்தன. கடலாமை குதித்த சத்தம் கிணற்றுக்குள் இருந்த இருவருக்கும் அணுக்குண்டு விழுந்தது போலிருந்தது. கடலாமை உருவத்தில் பெரியது. கிணற்றுள் இருந்த இருவரும் கடலாமையைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.
நீ எங்கிருந்து வருகிறாய் என்று கிணற்றாமை கேட்டது. நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது கடலாமை. கடல் எப்படியிருக்கும்? கடலைப் பற்றி எப்படிச் சொல்வது? அதற்குக் கரையே இல்லை என்றது கடலாமை. நீ ஒரு புழுகன். இந்தக் கிணற்றிலும் பார்க்கப் பெரியது எங்கேயாவது உண்டா? என்று கேட்டது கிணற்றாமை. கடலைப் பற்றி இவர்களுக்கு எப்படி விளங்க வைக்க முடியும் என்று சிந்தித்தது கடலாமை.
இந்த நேரத்திலே தவளை ஒரு துள்ளித் துள்ளிப் பாய்ந்தது. திரும்பிக் கடலாமையைப் பார்த்தது. நான் பாய்ந்தளவு தூரம் உனது கடல் இருக்குமா என்று கேட்டது. இதற்கு மறுமொழி சொன்னால் நான் இங்கிருக்கவே முடியாது என்று கடலாமை எண்ணியது. நீ பாய்ந்தளவு தூரம் இருக்கும் என்று கடலாமை கூறியது.
அவர்கள் இருவருக்கும் பெரிய சந்தோஷம். அப்படி வா வழிக்கு என்றன. நீ இந்தக் கிணற்றின் ஆழத்தைப் பார். இதை ஒரு முறை சுற்றிப் பார் என்றன. கடலாமை தனக்குள்ளே சிரித்துக்கொண்டது.
இந்தக் கதையைக் கூறியவர் அப்பர் சுவாமிகள். ஏன் இந்த உவமைக் கதையைக் கூறினார் என்றொரு கேள்வி? அதற்கும் அவரே பதில் சொல்லுகின்றார்.
உலகில் கடவுள் உண்டு என்பவர்களும் உண்டு. இல்லை என்பவர்களும் உண்டு. உண்டு என்பவர்களை ஆஸ்திகர் என்பார்கள். கடவுள் இல்லை என்பவர்களை நாஸ்திகர் என்பார்கள். நாஸ்திகர் கடவுள் இல்லை என்றே அழுத்தமாகக் கூறுவார்கள். அப்படி ஒருவர் இருந்தால் அவர் ஏன் வெளிப்படாமல் இருக்கிறார்?. அவர் ஏன் பயப்பட வேண்டும்? யாராவது பிடித்து அடைத்து விடுவார்களா?
கடவுள் ஒருவர் இல்லை என்று சொல்பவர்களை பாவகாரிகள் என்று சொல்வார்கள். கடவுள் ஒருவர் இல்லை என்றும் அப்படி இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாது என்றும் சொல்வார்கள். எங்கள் ஊனக் கண்ணுக்குத் தெரியாதனவெல்லாம் இல்லை என்று சொல்லலாமா? அவர்களைப் பார்த்து நீங்கள் உங்களைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் ஓ பார்த்திருக்கிறோமே என்பார்கள். எப்படிப் பார்த்தீர்கள் என்றால், கண்ணாடியில் பார்த்தோம் என்பார்கள். பின்பக்கத்தைப் பார்த்தீர்களா என்றால் பாபர் சலூனில் பார்த்தோம் என்பார்கள். உங்களைப் பார்த்தீர்களா? உங்கள் உடலைப் பார்த்தீர்களா என்றால் அப்போதான்,ஓ நான் வேறா எனது உடல் வேறா என்பார்கள்.
நீ உன்னையே பார்க்கவில்லையே. ஆனபடியால் நீ இல்லை என்று நான் சொன்னால் நீ நம்புவாயா? அது போலவே கடவுள் உனது கண்களுக்குத் தெரியவில்லையே என்பதற்காகக் கடவுளே இல்லை என்று சொன்னால் அது பெரிய பாவமாகும்.
எமது சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் தேவனாயிருக்கிறார்.
அவருடைய அருளைக் கண்ணாகக் கொண்டு காண்பதேயல்லாமல் வேறு எவ்வகையிலும் காணமுடியாது. அவனை வணங்குவதற்கே அவனருள் வேண்டும். தீவினையாளர்கள் சிவசிவ என்றே கூறமாட்டார்கள். இத்தகையவர்களுக்கு கடவுளைப் பற்றி விளங்க வைக்க முடியாது.
முருகப் பெருமான் தனது விசுவரூபத்தைக் காட்டினார். சூரன் மேலும் கீழும் பார்த்து விழித்தான். முருகன் அவன் நிலையை உணர்ந்தார். விசுவரூபத்தைப் பார்க்கும் ஞானக் கண்ணைச் சூரனுக்குக் கொடுத்தார். அக்கண்ணால் பார்த்து உண்மையை அறிந்தானாயினும் அவனது அகங்காரம் பணிய மறுத்தது. இக்கருத்துக்களை அமைத்தே அப்பர் சுவாமிகள் பின்வரும் தேவாரத்தைப் பாடினார்.
கூவலாமை குரைகட லாமையைக்
கூவலொக்குமோ கடல் என்றல்போல்
பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.
கிணற்று ஆமை கடலாமையைப் பார்த்து நான் வசிக்கும் கிணற்றுக்கு நீ வசிக்கும் கடல் சரியாகுமோ என்று கேட்டதுபோல் பாவம் செய்தவர்கள், தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானின் பெருமையை அறியமுடியாது என்று சொல்வார்கள்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
என்னிலும் இனியவன் ஒருவன்
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026