ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 60 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5

ஒருநாள் வேங்கடேசப் பெருமாளுக்கு வேட்டையாடி வரவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. உடனே காலைக் கடன்களை முடித்துவிட்டுத் தம்மை அலங்கரித்துக் கொண்டார். வகுளா தேவி அன்புடன் கொண்டுவந்து கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டார். தாம்பூலம் தரித்துக்கொண்டார். பின்னர் ஓர் அழகிய குதிரையை வரவழைத்தார். அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு வேங்கடமலையிலிருந்து வேட்டை யாடுவதற்காகப் புறப்பட்டார். 

வழியில் சிங்கம் புலி முதலிய கொடிய மிருகங்களை வேட்டையாடிய வேங்கடேசப் பெருமாளின் எதிரே ஒரு மூர்க்கமான மதயானை தென்பட்டது. அதைக் கொல்லக் கருதி அதனைப் பின் தொடர்ந்தார். வெகுதூரம் ஓடிய யானை வேங்கடமலையை விட்டு ஆகாச ராஜன் ஆட்சி புரியும் திருச்சானூர் வரை சென்றுவிட்டது. வேங்கடேசப் பெருமாளும் விடாமல் அதைத் துரத்திச் சென்றார். 

முதலில் அந்த மதம் பிடித்த யானை ஆகாச ராஜனின் மகள் பத்மாவதி தம் தோழியருடன் விளையாடிக் கொண்டிருக்கும் தோட்டத்தருகில் வந்ததும் திடீரென்று மறைந்துவிட்டது. 

வேங்கடேசப் பெருமாள் யானையைத் தேடித் தோட்டத்திற்குள் சென்றார். அங்கு தம் தோழியருடன் விளையாடிக்கொண்டிருந்த பத்மாவதி தேவியைப் பார்த்தார்.

பிற ஆடவன் ஒருவன் இளவரசியின் தோட்டத்திற்குள் நுழைந்ததைக கண்ட தோழியர்கள் வேங்கடேசப் பெருமாளை உள்ளே வர விடாதவாறு தடுத்தனர். வேங்கடேசப்பெருமாள் அவ்விடத்தை விட்டுப் போகாமல் அங்கேயே வெகுநேரம் நின்றுகொண்டிருந்தார்.

இதனால் கோபம்கொண்ட தோழியரும் பத்மாதேவியும் கற்களை எறிந்து அவரைத் துரத்தினர். கல்லடி பட்டதால் அவருடைய குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது. வேங்கடப்பெருாமள் குதிரையை இழந்து கால்நடையாக வேங்கடமலைக்கு வந்து சேர்ந்தார்.

போகும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்ற வேங்கடப்பெருமாள் வரும்பொழுது மிகுந்த சோகத்துடன் வந்ததை வகுளாதேவி கண்டுவிட்டாள். அவள் மனம் பதறியது.

“வேங்கடவா, உனக்கு உற்ற துயரம் என்ன? உன்னுடைய குதிரை எங்கே? உடம்பெல்லாம் காயமா யிருக்கிறதே! இஃது என்ன? இந்தக் கோலத்திற்கு உன்னை ஆளாக்கியது யார்!” என்று வகுளாதேவி வேங்கடேசப்பெருமாளைக் கேட்டாள்.

“தாயே, இம்மாதிரிக் கோலத்திற்கு என்னை வேறு எவராவது ஆளாக்கியிருந்தால் அவர்களை அந்நேரமே நிர்மூலமாக்கி யிருப்பேன். ஆனால், பாவம் ஒரு பேதைப் பெண் என் குதிரையை அடித்துக் கொன்றுவிட்டு என்னை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டாள்” என்றார் வேங்கடேசப்பெருமாள். 

‘”உன்னை இவ்வாறு செய்தது ஒரு பெண் பிள்ளையா? அவளுக்கு என்ன துணிச்சல்? யார் அவள்? சொல். இப்பொழுதே நியாயம் கேட்டு வருகிறேன்” என்று துள்ளி எழுந்தாள் வகுளாதேவி. 

“தாயே, அவளிடம் சண்டைபோடச் செல்வதில் எவ்விதப் பயனும் இல்லை. அவள் எனக்கு மனைவியாக வரவேண்டியவள். திருமணம் ஆனபிறகு போட வேண்டிய சண்டையை முன் கூட்டியே போட்டிருக்கிறாள். பரவாயில்லை. இப் பிறப்பில நான் மணந்து கொண்டால் அவளைத்தான் மணந்துகொள்வேன் ” என்றார் வேங்கடேசப்பெருமாள். 

“அப்படியா? உன்னை மணக்கக்கூடிய பாக்கியத் தைச் செய்த அந்தப் பெண்மணி யார் ? அவள் எங் கிருக்கிறாள் ? சொல். உடனே போய் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தே எழுகிறது ” என்றாள் வகுளாதேவி. 

“இந்த வேங்கடமலையை விட்டு இறங்கித் தெற்கு நோக்கி ஒன்றரை காத தூரம் சென்றால் அங்கு நாராயணபுரம என்ற ஊர் 

என்ற ஊர் உள்ளது. அதை ஆட்சி புரியும் ஆகாச ராஜனின மகளதான நான் சொலலும் பெண். அவள் பெயர் பத்மாவதி. அவளதான எனனை இந்தக் கோலத்திற்கு ஆளாக்கினாள்” என்றார், வேங்கடேசப்பெருமாள். 

“உன் பெருமை அறியாமல் உன்னை இந்தக் கோலத்திற்கு ஆளாக்கி விட்டாள். நீ கவலையை விட்டு நிம்மதியாக இரு. நான் நாராயணபுரம் சென்று எவ்வித மாயினும் பத்மாவதியையும் அவளுடைய பெற்றோரையும் கண்டு உனக்குப் பத்மாவதி தேவியை மணமுடித்து வைக்குமாறு கூறுகிறேன்” என்றாள் வகுளாதேவி. 

“அவ்விதமே செய், வேங்கடமலையை விட்டு இறங்கியதும் முதலில் அங்கேயிருக்கும் கயில தீர்த்தத்தில் முழுகிவிட்டு, அதன் பக்கத்தில் உள்ள கபிலேஸ் வரரை வணங்கிவிட்டுப் பிறகு திருச்சானூர் செல் உன் காரியம் வெற்றி பெறும்” என்றார் வேங்கடேசப் பெருமாள். 

வகுளாதேவியும் வேங்கடேசப்பெருமாள் கூறிய வாறே வேங்கடமலையை விட்டு இறங்கி முதலில் கபிலதீர்த்தத்தில் முழுகிவிட்டுக் கபிலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றாள். 

அங்கு பத்மாவதியின் தோழியர் கபிலேஸ்வரருக்குப் பூசை செய்து தொழுதுகொண்டிருந்தனர். 

வகுளாதேவி அவர்கள் யாரென்று விசாரிக்க. “தாயே, நாங்கள் ஆகாச ராஜனின் செல்வப் புதல்வியான பத்மாவதி தேவியின் தோழியர்கள். நேற்று எங்கள் இளவரசியும் நாங்களும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஓர் அழகிய வாலிபன் குதிரை மீது வந்தான். பித்துப் பிடித்தவன் போல் வெகு நேரம் எங்கள் இளவரசியையே பார்த்துக்கொண்டிருந்தான். எவ்வளவு சொல்லியும் கேளாமல் இருந்ததால் கோபம் கொண்ட எங்கள் இளவரசியாரும் நாங்களும் கற்களால் அடித்து அந்த வாலிபனைத் துரத்தினோம். கல்லடிபட்ட அவனுடைய குதிரை கீழே விழுந்து உயிரை விட்டது.

அந்த வீரன் சென்றதிலிருந்து எங்கள் இளவரசி யார் படுத்த படுக்கையாகி விட்டார். நோயினால் பிதற்றுகிறார். அவர் நோய் தீர்வதற்காக இங்கே இறைவனை வேண்டிக்கொள்ள வந்திருக்கிறோம்” என்றனர் பத்மாவதியின் தோழியர்.

அவர்கள் சொல்லியதைக் கேட்ட வகுளாதேவி “பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ என்று எண்ணிய வளாக, “பாங்கிமார்களே, நான் வேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளுக்குத் தொண்டு செய்பவள். நேற்று வேட்டைக்கு வந்தவர் வேங்கடேசர்தான். அவர் இன்னாரென்று நீங்கள் அறிந்து கொண்டிருந்தால் அவரை இவ்வாறு கல்லால் அடித்துத் துன்புறுத்தி யிருக்கமாட்டீர்கள்.

அவருடைய தாய் தேவகி. தந்தை வசுதேவர். அவருடன் பிறந்த அண்ணன் பலராமர். எல்லோருக்கும் எல்லா நலன்களையும் கொடுக்கக்கூடியவர் அவர் அருள் இருந்தாலே போதும். அப்படிப்பட்டவரை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல், நீங்கள் அடித்துத் துன்புறுத்தி விட்டீர்கள். இம்மாதிரிச் செய்கையை வேறு எவராவது செய்திருந்தால் அவர்களை, அக்கணமே அவர் நீர்மூலமாக்கி யிருப்பார். தங்கள் இளவரசியார் பேரில் உள்ள அன்பினால் உங்களை மன்னித்து விட்டார்” என்றாள் வகுளாதேவி.

“தாயே, எங்கள் இளவரசியாரும் நாங்களும் அவர் இன்னாரென்று அறியாமல் அவரைத் துன்புறுத்தி விட்டோம். எங்கள் இளவரசியாரும் பிறகு மிகவும் வருந்தினார். அந்த வருத்தத்தினால் அவளுக்குச் சுரம் கண்டுவிட்டது. தாம் செய்த செய்கையை நினைத்துப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்” என்றாள் தோழியரில் ஒருத்தி. 

“சரி, நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்க வேண்டியதைக் கவனிப்போம். என்னை உங்கள் அரசி யாரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரிடம் பேசி உங்கள் இளவரசியாரை எங்கள் வேங்கடேசருக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்கிறேன்’ என்றாள் வகுளாதேவி. 

“அது முடிகிற காரியமா? ஊர் பேர் தெரிபாத ஒருவருக்கு எங்கள் இளவரசியாரைத் திருமணம் செய்துதர எங்கள் அரசியார் ஒப்புவார்களா?” என்றாள் தோழியரில் ஒருவள். 

“எங்கள் வேங்டேசரைத் திருமணம் செய்து கொள்ள உங்கள் பத்மாவதி பாக்கியம் செய்திருக்க வேண்டும். என்னை அரசியாரிடம் கூட்டிச் செல் லுங்கள். நான் பேசிக் கொள்கிறேன்” என்றாள் வகுளாதேவி. 

இதற்கிடையில் பகவான் வேங்கடேசர் குறத்தி வடிவம் கொண்டு ஆகாசராஜன் ஆட்சி புரியும் நாராயணபுரம் சென்றார் அரண்மனைப் பக்கம் சென்ற போது குறத்தி வேடத்திலிருந்த எம்பெருமானைப் பணி பெண் ஒருத்தி வந்து அரசியார் அழைப்பதாகக் கூறினாள். 

குறத்தி வேடத்திலிருந்த எம்பெருமானைப் பார்த்து அரசி தரணிதேவியார், “குறத்தி. என் மகள் பத்மாவதி தேவி நேற்று முதல் படுத்த படுக்கையாக இருக்கிறாள். இதன் காரணம் என்னவென்று செல்லுவாயா” என்று கேட்டாள். 

“அரசியாரே, இது மட்டுமல்ல. முக்காலமும் அறிந்து சொல்லுவேன். உங்கள் மகளிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். அவள் கையைப் பார்த்து உங்கள் மகளின் நோய்க்குக் காரணம் என்னவென்றும். அது தீர்வதற்கு உரிய உபாயமும் கூறுகிறேன்” என்றாள் குறத்தி. 

தரணி தேவியார் பதமாவதியிடம் குறத்தியை அழைத்துச் சென்றாள். குறத்தி இளவரசியின் கையைப் பார்த்துவிட்டு, “தாயே, நேற்று இவளும் இவள் தோழியர்களும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வழியே வீரன் ஒருவன் வந்தது உண்மையா என்று உங்கள் மகளைக் கேளுங்கள்” என்று சொல்ல, தரணிதேவியார் பத்மாவதி தேவியைப் பார்க்க, அவளும் “ஆம்” என்பதற்கறிகுறியாகத் தலையை ஆட்டினாள். 

“உங்கள் மகளும் தோழியர்களும் தோட்டத்திற்குள் புக முயன்ற அந்த வீரனைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தி விட்டனர். அது மட்டுமன்று அந்த வீரனின் குதிரையைக்கூடக் கல்லால் அடித்துக் கொன்று விட்டனர்” என்றாள் குறத்தி. 

“இவள் சொல்லுவது உண்மையா அம்மா!” என்றாள் தரணிதேவி. 

“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள் பத்மாவதி தேவி.

“அரசகுலப் பெண்கள் பக்கம் வந்ததே தவறு, சரியான தண்டனைதான் கொடுத்தாய்” என்றாள் தரணிதேவி. 

“தண்டனையை அந்த வீரனுக்கு தரவில்லை. தனக்கே கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் அவளுக்குச் சுரம் வந்து படுத்த படுக்கையாகி விட்டாள். இவள் எந்த வீரனை அடித்துத் துரத்தினாளோ அந்த வீரன் இவளை மணந்து மன்னித்தா லொழிய இவள் நோய் தீராது” என்றாள் குறத்தி. 

“இஃது என்ன வைத்தியம்! எவனோ ஒருவன் – அரசகுலப் பெண்கள் இருக்கும் இடத்திற்கே வந்தான் அதுவே தகாத செயல். அவனைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுக்கவேண்டும். அதைவிட்டு அவனை அழைத்து அவனுக்கா என் திருமகளை மணமுடித்துத் தரச் சொல்லுகிறாய்?” என்று கோபமாகக் கூறினாள் தரணி தேவி. 

“தாயே, அவனை விட்டால் அவளுக்கு வேறு மாப்பிள்ளை கிடைப்பது அரிது. மூவுலகங்களிலும் தேடினாலும் அம்மாதிரியான மாப்பிள்ளையை நீ அடைய மாட்டாய். அவனுக்கு உன் மகளை மணம் செய்து கொடுத்தால் உன் மகளின் நோயும் குணமாகும். உன் குலமும் புகழ் பெற்று விளங்கும்” என்றாள், குறத்தி. 

”குறத்தி, நீ சொல்வது உண்மையா? அவனைத் தவிர வேறு ஒருவருக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால் என் மகளுடைய நோய் குணமாகாதா?” என்று வருத்தத்துடன் கேட்டாள் தரணி. 

“இது சத்தியமான வார்த்தை தாயே. உனக்கு, மருமகனாக வரப்போகிறவர் சாதாரணமானவர் என்று நினைக்காதே! தேவாதி தேவர்களும் போற்றிப் பரவும் பரந்தாமன் – வைகுண்டவாசன்தான் இக்கலியுகத்தில் வேங்கடேசப்பெருமானாக அவதரித்திருக்கிறார். முற்பிறப்பில் வேதவதியாக இருந்த உன் மகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காக்கவே அவர் திரு அவதாரம் செய்துள்ளார். அவர் வாக்குறுதி நிறைவேறக்கூடிய தருணம் வந்துவிட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் உன் மகளை வேங்கட மலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடேசனுக்கு மண முடித்து நற்புகழ் அடைவாயாக” என்று கூறினாள். 

அச்சமயத்தில் மகளைப் பார்ப்பதற்காக அந்தப் புரத்திற்கு வந்த ஆகாசராஜன், “குறத்தி, நீ சொன்னதை யெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். நீ சொல்வது உண்மையாயிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால், பெண்ணைப் பெற்றவர்களாகிய நாங்களே எவ்விதம் வலியச் சென்று வேங்கடேசரிடம் எம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவோம்” என்றான் ஆகாசராஜன். 

“மன்னனே, கவலைப்படாதே! இன்னும் கொஞ்ச நேரத்தில் வேங்கடேசனே ஒரு வயதான மூதாட்டியை உன்பால் அனுப்பி வைப்பான். அவள் வந்து கேட்டதும் எவ்விதத் தடையும் சொல்லாமல் ஒப்புக்கொள். இத் திருமணத்தினால் உன குலம் மேன்மையடையும்” என்றாள் குறத்தி. 

பின்னர் குறத்திக்கு நிறையப் பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தான் ஆகாசராஜன்.

சற்று நேரம் கழித்துப் பத்மாவதியின் தோழியர்களுடன் வகுளாதேவி அரண்மனைக்கு வந்தாள். அரசரையும் அரசியையும் வணங்கிவிட்டுத் தான் வந்த காரியத்தைக் கூறினாள். 

“அரசே, வேங்கடமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடேசப் பெருமானுக்குப் பணிவிடை செய்பவள் நான். என் பெயர் வகுளாதேவி. எங்கள் பெருமான் நேற்று வேட்டையாட வந்தபோது தங்கள் மகள் பத்மாவதி தேவியைப் பார்த்து விட்டார். அவளையே திருமணம் செய்துகொள்வது என்ற எண்ணத்துடன் உணவு உறக்கமின்றி வருந்துகிறார். அவருக்கு உங்கள் திருமகளை மணமுடித்துத் தருமாறு கேட்டுக் கொள்ளவே நான் இவ்விடம் வந்தேன்” என்றாள் வகுளாதேவி. 

“தாயே, திருருணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். குலம் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். என் மகளுக்கும் உங்கள் வேங்கடேசரை மணந்துகொள்ளப் பிரியம் போலிருக்கிறது. அதனால் தான் நாம் பேசுவதை முகமலர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள். என் மகள் விருப்பத்திற்கு மாறாக நான் ஒன்றும் செய்யமாட்டேன். ஆயினும் நான் என் மகளை இந்திரலோகத்திற்கு அனுப்பிப் பிரகஸ்பதியை அழைத்துவரச் செய்து அவர் ஆலோசனையைக் கேட்ட பிறகு உங்கள் வேங்கடேசருக்கு ஓலை அனுப்புகிறேன்” என்றான் ஆகாசராஜன். 

வகுளாதேவியும் அரச தம்பதியரிடம் விடை பெற்றுக்கொண்டு வேங்கடமலையை அடைந்தாள். 

வகுளாதேவி சென்றதும் ஆகாசராஜன் தன் மகன் வசுதானனை அனுப்பி இந்திரலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை அழைத்து வருமாறு கூறினான். 

வசுதானனும் இந்திரலோகம் சென்று பிரகஸ்பதியை நாராயணபுரத்திற்கு அழைத்து வந்தான். பிரகஸ்பதி வந்ததும் அவரை எதிர்கொண்டழைத்து அவருக்குச் சகல மரியாதைகளும் செய்வித்து அவரை ஆகாசராஜனும் அவன் மனைவியும் வணங்கினர்.

“ஆகாசராஜனே, திடீரென்று என்னை அழைத்து வரச் சொன்னதன் காரணம் என்ன” என்று ஆகாச ராஜனைப் பார்த்துக் சேட்டார் பிரகஸ்பதி.

“குலகுருவே, வேங்கடமலையில் வாசம் செய்து கொண்டிருக்கும் வேங்கடேசருக்கு என் பெண்ணை மணமுடித்துத் தரச் சொல்லி அங்கிருந்து வயதான மூதாட்டி ஒருத்தி வந்து கேட்டுச் சென்றாள், என் மகள் பத்மாவதிக்கும் வேங்கடேசரை மணம் செய்து கொள்வதில் விருப்பம். மாப்பிள்ளையைப்பற்றித் தங்களிடம் தீர விசாரித்துத் தங்கள் கருத்தை அறிந்து கொள்ளவே தங்களைக் கூப்பிட்டு அனுப்பினேன்” என்றான் ஆகாசராஜன்.

“ஆகாசராஜனே, நான் பூலோகத்திற்கு அடிக்கடி வருபவனல்லன். எனவே எனக்கு வேங்கட மலையைப்பற்றியும் தெரியாது; வேங்கடசரைப்பற்றியும் தெரியாது. தாங்கள் பூலோகத்திலேயே வாசம் செய்யும் சுகமுனிவரிடம் கேட்டால் வேங்கடேசரைப் பற்றிய விவரங்கள் கூறுவார்” என்றார் பிரகஸ்பதி.

உடனே ஆகாசராஜனும் தன் தம்பி தொண்டைமானை அழைப்பித்து, “தொண்டைமான், நீ சென்று சுக முனிவரை அழைத்து வா. அவரிடம் ஆலோசனை கேட்போம்” என்றான்.

தொண்டைமான் நேரே சுகமுனிவரிடம் சென்றான். அவர் கால்களில் விழுந்து வணங்கினான். தன் அண்ணண் ஆகாசராஜன் அவரை அழைத்துவருமாறு கூறியதைப் பணிவுடன் கூறினான் தொண்டைமான். 

சுகமுனிவரும் தொண்டைமானின் உரையைக் கேட்டு மகிழ்ந்து அவனுடன் நாராயணபுரம் வந்தார். 

அவரிடம் ஆகாசராஜன், “முனிவர் பிரானே, என் மகள் பத்மாவதியை வேங்கடமலையில் குடி கொண்டிருக்கும் வேங்கடேசனுக்கு மணமுடிக்கக் கருதியுள்ளேன். தாங்கள் வேங்கடேசப் பெருமாளைப் பற்றி நிறைய அறிந்திருப்பீர்கள். எனவே தங்களை அழைத்துக் கேட்ட பிறகு சம்மதம் தெரிவிக்கலா மென்று கருதியுள்ளேன்” என்றான் ஆகாசராஜன். 

இதைக் கேட்ட சுகமுனிவர், ”நல்ல காரியம் செய்தாய். நீ கூறியவாறு உன் மகளை வேங்கடேசருக்கு மணம் முடித்துக் கொடுத்தால் யாரும் அடையாத உன்னத நிலையை நீயும் உன் குடும்பத்தினரும் அடைவீர்கள். முன் பிறவியில் நீ செய்த பாக்கியம் தான் உனக்கு வேங்கடேசர் மருமகராகக் கிடைப்பது. வேங்கடேசரைப் போன்ற ஒரு மாப்பிள்ளை இப் பூவுலகம் முழுவதிலும் தேடினாலும் கிடைக்கமாட்டார். எனவே விரைவில் ஆகவேண்டிய காரியத்தைப் பார்” என்றார் சுகமுனிவர். 

சுகமுனிவர் சொல்லியதைக் கேட்டு மனம்பூரித்த ஆகாசராஜன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் பெண் மாப்பிள்ளை ஆகியவர்களின் ஜாதகங்களைப் பார்த்துத் திருமணத்திற்கு நல்ல நாள் குறித்துத் தரச் சொன்னான்.

தேவ குருவான பிரகஸ்பதியும் இருவருடைய  ஜாதகங்களையும் பார்த்து நல்ல நாளையும் குறித்துக் கொடுத்தார். 

உடனே ஆகாசராஜன் திருமண ஓலையை எழுதிச் சுகமுனிவரிடம் கொடுத்து அதை வேங்கடேசப் பெருமானிடம் சேர்ப்பித்து விடுமாறு கூறினான். 

சுகமுனிவரும் திருமண ஓலையுடன் ஸ்ரீ வேங்கடேசரைக் காண வேங்கடமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

– தொடரும்…

– ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம், முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பைலட் பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *