நரிக் கதை
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 236
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஒரு வேடன். அவன் பெயர் வனசரன் என்பது. வேட்டை ஆடி அதில் கிடைத்ததை உண்பதுதான் அவனது வாழ்வு. ஒரு முறை மூன்று நாளாக ஒரே பட்டினி. காய்கனி கிழங்குதானும் அகப்படவில்லை. அவரவர் செய்த வினையின் பிரகாரம்தான் அவரவருக்கு உணவு கிடைக்கும். “தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்” என்பது ஔவையின் வாக்கு.
“இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்
பலர் நோலாதவர்”
என்பது வள்ளுவர் வாக்கு. உலகத்திலே வறியவர் அதிகமாயிருத்தலுக்கும் செல்வர் மிகக் குறைவுடையவரா யிருத்தலுக்கும் காரணம் தவம் செய்தவர்கள் சிறுதொகையினர். தவம் செய்யாதவர்கள் அனேகர் என்பது பொருள். சிவபெருமானைப் போற்றாதவருக்கு இவ்வுலகில் ஒரு அடையாளம் உண்டாம். அதாவது உடுக்கத் துணியும் அற்று ஒரு சோற்றுப் பருக்கை தானும் கிடையாது அலைவார்களாம். இரந்தாலும் ஒரு சோற்றுப் பருக்கைதானும் கிடையாதாம். பிச்சையிலே கிடைப்பதற்கும் முன்பிறப்பில் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்.
வனசரனுக்கு நாலாவது நாள் ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. ஒரு கண் குருடான யானை தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நாணைக் காதளவுக்கும் இழுத்து அம்பைக் குறி வைத்தான். பார்வையுள்ள கண்ணை அந்த அம்பு குருடாக்கியது. யானை உரத்த சத்தமிட்டு நிலத்திலே விழுந்து இறந்தது.
வேடனுடைய வில்லிலிருந்து அம்பு புறப்படும்போது வேடனுடைய காலில் ஏதோ சுரீர் என்றது. வேடன் காலை உதறினான். படம் எடுத்த நாகம் ஒன்று பக்கத்தே சென்று விழுந்தது. வேடன் வில்லால் நாகத்தின் தலையில் ஓரடி ஓங்கி அடித்தான். பாம்பும் அக்கணமே இறந்தது. வேடனும் விடம் தலைக்கேறி இறந்தான். வேடனின் அம்படிப்பட்டு யானையும் இறந்தது.
மூன்று உயிர்கள் ஒரே நேரத்தில் இறந்ததை பற்றை மறைவில் பதுங்கி இருந்த நரி ஒன்று கண்டது. சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தது.
நரி ஒரு கணக்குப் போட்டது. யானை ஆறுமாதத்திற்குப் போதியது. வேடன் மூன்று நாளைக்கு உணவாவான். பாம்பு இன்றைய உணவுக்குப் போதியது. நரியனார் வாலைக் குழைத்துக் குழைத்து பலமுறை மூன்றையும் சுற்றிச் சுற்றி வந்தார். எதை முதலில் சாப்பிடுவது என்பது தான் நரியின் இப்போதைய பிரச்சினை.
நரி அவசரப்பட்டு உண்ணவும் இல்லை. ஊளையிட்டு மற்றைய நரிகளை அழைக்கவும் விரும்பவில்லை. அவ்வளவையும் தானே முழுதாகத் தின்று தீர்க்க வேண்டும் என்பதுதான் நரியின் பேராசை. ஒரு துண்டு இறைச்சிதானும் வேறு எவரும் சாப்பிடக் கூடாது என்ற லோபத்தன்மை நரிக்கு. மனிதனும் இந்த நரியைப் போலப் பேராசை உள்ளவன்தான். இதனால்தான் ‘எச்சில் கையால் காகம் துரத்தாதவன்’ என்ற பெயரும் மனிதனுக்கு உண்டு.
நரியனார் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். வில்லில் பூட்டியிருந்த நாண் நரியனாரின் பார்வையில் விழுந்தது. இந்தவாரைக் கடித்துப் பல்லைத் தீட்டிக் கொண்டால் மற்றைய இறைச்சிகளைச் சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும் என்று நரி நினைத்தது. வாரை நறுக்கென்று கடித்தது. வில்லு நிமிர்ந்து நரியின் தலையில் அடித்தது. நரி தலை கிறுகிறுத்து அந்த இடத்திலேயே இறந்தது.
இரைதேடப் போயிருந்த இந்த நரியின் சோடி நரி தற்செயலாக அவ்விடம் வந்தது. நால்வரையுங் கண்டு கவலை கொண்டது. கவலை எவ்வளவு நேரத்திற்கு? பிறந்தோர் இறப்து உலக நியதி என்று மனதைத் தேற்றிக் கொண்டது.
மனித இறைச்சியைச் சுவை பார்த்து எத்தனை நாளாகிவிட்டது என்று பேராவலோடு வேடனைக் கடித்து உண்ணத் தொடங்கியது. பாம்பின் விடம் ஏறிய வேடனின் உடம்பு பெண் நரிக்கும் எமனாகியது. ஒரே நேரத்தில் ஐந்து உயிர்கள் உயிர் பிரிந்தமை பெரிய நூதனமல்ல. எங்கள் நாட்டிலே பொம்பர் ஒரு குண்டு போட்டு ஐந்து குடும்பங்களையே நாசமாக்கிவிட்டது. இக்கதையைப் புலவர் ஒருவர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்.
கரியயொரு திங்க ளாறும் கானவன் மூன்று நாளும்
இரிதலைப் புற்றி னாகம் இன்றுணும் இரையா மென்று
விரிதலை வேடன் பக்க விற்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே.
மனிதனும் இந்த நரியைப் போல் பேராசைக்காளாகி அதனாலேயே தினமும் இறந்து கொண்டிருக்கிறான். பேராசை பெருந் தரித்திரம் என்று சொல்வார்கள். இங்கே பேராசை பெருமரணத்தையல்லவா விளைவித்துவிட்டது.
நாவுக்கரசரும் இக்கதையைக் கேள்விப்பட்டிருக்கிறார். தான் பாடிய ஆதிபுராதனக் குறுந் தொகையில் “நரிவிருத்த மதாகுவர் நாடரே என்றொரு வரி குறிப்பிடுகின்றார். அக்கினி வளர்த்துப் பெருந்தொகைப் பணம் செலவு செய்து யாகங்கள் செய்வர். ஆனால் இறைவன் அந்த அக்கினியின் உருவினன் என்பதை உணர்ந்தாரில்லை. பிரம விஷ்ணுக்கள் இருவரும் பிரம்மமாய் நின்ற சோதியைத் தேடித்தேடி அலுத்து முடிவில் உண்மையைத் தெளிந்தனர். நரிக்கு இறுதியைக் கொண்டு வந்தது அதன் பேராசை. பிரம விட்டுணுக்களுக்கு அறியாமையால் இறைவனை அறிய முடியவில்லை. நரிக்கும் பேராசையினால் அறியாமை வந்தது. இதனை அப்பர்:
எரிபெருக்கு வரவ்வெரி யீசன்
உருவருக்க மதாவது ணர்கிலார்
அரியயற் கரியானை யயர்த்துப் பொய்
நரிவிருத்த மதாகுவர் நாடரே.
என்று அருளியுள்ளார்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
என்னிலும் இனியவன் ஒருவன்
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026