ஜமீன்தார் வரவு
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 81
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
ஜமீந்தார், பொட்டியம்மாள், குழந்தைகள், கன்னியம்மாள், ஞானசுந்தரம், தம்பியப்பன்.
முதற் காட்சி
இடம்:- ஒரு சிறு வீட்டில் ஓர் அறை
பொட்டியம்மாள் கைராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
கன்னியம்மாள் கறிகாய் நறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
ஆறு குழந்தைகள் வெவ்வேறு வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஜமீன்தார் வருகிறார்.
ஐ. பொட்டியம்மா! சவுக்கியம் தானா?
பொ. ஆ! ஜமீன் தாரய்யாவா? – வாருங்கள்! வாருங்கள்! – ஐயா க்ஷேமம் தானே? வீட்டிலே அம்மா – எல்லோரும் சவுக்கியமா யிருக்கிறார்களா?
ஐ. ரொம்ப சவுக்கியமா யிருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் என்னமா யிருக்கிறீர்கள்?
பொ.உங்கள் தயவால் சவுக்கியமா யிருக்கிறோம். தயவு செய்து உட்காருங்கள், இது சின்ன வீடு – இருந்தாலும் சுத்தமாய் வைத்திருக்கிறோம். இதோ இங்கு உட்காருங்கள். இந்த இடம் பெருக்கி யிருக்கிறது. கன்னி, ஜமீந்தார் அவர்களுக்கு ஒரு நாற்காலி எடுத்துப் போடு.
[அப்படியே செய்ய அதன் மீது உட்கார்ந்து கொண்டு.]
ஐ. எல்லாம் மிகவும் சுத்தமா யிருப்பதைப் பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். உனது புருஷன் கழனி வேலை செய்கிறானோ?
பொ. ஆமாம், இரண்டு பிள்ளைகளோடு, பறம்படித்து விதை விதைக்கப் போயிருக்கிறார்.
ஜ. சந்தோஷம் – மற்றவர்கள்- இரண்டு – மூன்று – நான்கு ஆறு இவர்கள் எல்லாம் உங்கள் குழந்தைகள் தானே- எல்லோரும் அவரவர்கள் வயத்துக்குத் தக்கபடி ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பதைக் காண சந்தோஷப் படுகிறேன்.
பொ. ஆமாம் ஜமீன்தார் அவாள்! இந்த காலத்தில் எல்லோரும் ஏதாவது வேலை செய்தால்தான் குடித்தனம் செய்ய முடியும். என் புருஷனும் நானும் எப்பொழுதும் வேலை செய்து வழக்கப்பட்டிருக்கிறோம் – அப்படியே எங்கள் குழந்தைகளையும் அந்த பழக்கத்தில் கொண்டு வருகிறோம். கைக் குழந்தைகள் தவிர மற்றவர்கள் ஏதாவது வேலை செய்வார்கள்.
ஜ. அதுதான் சரி. சோம்பேறித்தன மின்றி ஏதாவது சுறு சுறுப்பாய் வேலை செய்தால், எப்பொழுதும் சுகமாய் வாழலாம் ஏழைகளாய்ப் போய் பிச்சை யெடுக்க வேண்டி வருமேயென்று பயப்பட வேண்டியதில்லை என்ன நேரிட்டாலும் – மஹா ராஜர்களுடைய பிள்ளைகள் கூட ஏதாவது கைத் தொழில் கற்றுக்கொண்டால் மிகவும் நலமாயிருக்கும்.
பொ. மஹாராஜர்களுக்கு என்னாங்க? அவர்களுக்குத் தான் செல்வம் கையிலிருக்கிறதே. அவர்கள் வேலை செய்வானேன்?
ஜ. பணத்தை செலவழிப்பது சுலபம், சம்பாதிப்பது தான் கஷ்டம்; கையிலிருக்கும் பணம் செல்வானபின் மறுபடியும் பணப்பையை நிரப்ப அவர்கள் ஏதாவது வேலை செய்து தானே ஆக வேண்டும்?
பொ. அது மெய்தானுங்கள். வேலை செய்ய எங்களுக்குச் சக்தியு மிருக்கிறது ஊக்கமு மிருக்கிறதென்று நாங்கள் சந்தோஷப்பட வேண்டும். அன்றியும் உங்களைப் போன்ற நல்ல ஜமீன்தார் கீழ் வாழ்கிறோமே என்று அதிக சந்தோஷப்பட வேண்டும்.
ஜ. நல்ல குடித்தனக்காரர்களுக்கு நல்ல ஜமீன்தார்கள் இருக்க வேண்டியது தானே உங்களுடைய நற்குணத்தைப் பற்றி நான் நெடுநாள் அறிந்திருக்கிறேன் – வாருங்கள் குழந்தைகளே! உங்களுக்காக ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்.
[அவர்களுக்கெல்லாம் அப்பங்கள் எடுத்து கொடுக்கிறார்.]
பொ. கன்னி, ஜமீன்தாருக்கு வந்தனம் ஏன் சொல்லா திருக்கிறாய்?
ஜ. இவ்வளவு பெரியவளான பெண் உங்களுக்கு ஒருத்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை.
பொ. எங்களுக்கு இவ்வளவு பெரிய பெண் உண்மையில் கிடையாது. இவள் எங்க பெண் அல்ல, ஆயினும் அவளை எங்கள் சொந்த பெண்ணைப் போலவே பாவித்து வருகிறோம்.
ஜ. உங்கள் பந்து போலும்?
பொ. இல்லை ஐயா, எங்கள் பந்து அல்ல.
ஜ. பிறகு யார்?
பொ. [ஒருபுறமாக அவரிடம்] அவள் வெளியே போன பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறேன். [உறக்க] கன்னி, தொழுவத்திலே யிருக்கிற கன்றுக் குட்டிக்கு கொஞ்சம் தண்ணீர் குடிப்பி.
[கன்னி போகிறாள்.]
ஜ. வாஸ்தவத்தில் நிரம்ப மரியாதையுடைய அழகிய பெண்னாகத் தோன்றுகிறாள்.
பொ.ஆம் ஐயா! அவள் அழகுக்கேற்ற நற்குண முடையவள் இவள் ஏதோ தூரதேசத்திலிருந்து வந்த பரதேசிப் பெண்: இவள் அகஸ்மாத்தாய் இங்கு வந்து சேர்ந்தாள். எங்களுடன் ஒரு வருஷமாக வசித்து வருகிறாள். அதைப் பற்றிய விவரமெல்லாம் அறிய விரும்புவதா யிருந்தால் உங்களுக்குச் சொல்கிறேன்.
ஜ. சொல்லம்மா, அதைக் கேட்க ஆவலா யிருக்கிறேன் – முதலில் – எனக்கு சாப்பிட கொஞ்சம் மோர் கொண்டு வந்து கொடு.
பொ. ஐயோ! அதை நான் முன்பே உங்களுக்கு கொடுக்கா தற்காக என்னை மன்னிக்க வேண்டும் – மாரி, அடுப்பண்டை போய் ஐயாவுக்கு சொஞ்சம் நல்ல மோராக, ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொண்டுவா.
[ஒரு குழந்தை உள்ளே போய் கொஞ்சம் மோர் கொண்டு வந்து கொடுக்கிறது.]
ஜ. [அதைச் சாப்பிட்டு விட்டு] உம் – உன் கதையை இனி ஆரம்பியம்மா.
பொ. என்னவென்றால் – என் புருஷன் ஒரு நாள் சாயங்காலம் கழனியில் வேலை செய்துவிட்டுத் திரும்பி வரும் பொழுது, ஒரு கட்டை வண்டி கொஞ்சம் தூரத்தில் ஒரு புறமாக குடம் கவிழ்ந்திருப்பதைக் கண்டார். உடனே ஓடிப் போய்ப் பார்க்க, அதன் ஒரு பக்கமாக கரையோரம் மல்லாக்காய் வீழ்ந்த ஒரு கிழவி மிகுந்த காயத்துடன் விழுந்து கிடப்பதையும், அவள் பக்கத்தில் இந்த பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதையும் கண்டார்.
இவர்களிடம் போய் அந்த அம்மாளை கஷ்டத்துடன் வண்டியில் ஏற்றி இப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீடு வந்து சேர்ந்தார். உடனே அந்த அம்மாளுக்கு தாகத்திற்குக் கொடுத்து உபசரித்தோம். பிறகு, நாங்களிருவரும் யோசனை செய்து, வீட்டுக்குள் அவர்களை அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்தோம். அவர்கள் தலையில் பெரியகாயம் பட்டிருந்தது ஒரு வயித்தியரை வரவழைத்துக் காட்டினோம்.எங்களால் ஆனமட்டும் சிகிச்சை செய்து பார்த்தோம். ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. சீக்கிரம் அவர்கள் உயிர் போகும் எனக் கண்டோம். இந்தப் பெண் கன்னி, பாபம், அவளுடைய பாட்டியை விட்டு இரவும் பகலும் பிரியாதிருந்தாள். அவள் அச்சமயம் அழுததைக் கேட்டிருப்பீராயின் உங்கள் மனதைக் கரைத்திருக்கும். இவளுக்கு அந்த பாட்டியைத் தவிர வேறு இவ்வுலகில் ஒரு வருமில்லை என்றாள்: அந்தப் பாட்டியும் போய் விட்டால் தன் கதி என்னவாகுமென்று கதறினாள். கன்னியின் தாய் தகப்பன்மார் காலமாய் விட்டார்களாம். பிறகு தன் பாட்டியுடன் அந்தம்மாளுடைய பிறந்த ஊருக்கு வடக்கே போய், யாராவது தங்கள் பந்துக்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தறிந்து, அவர்களுடன் சொல்ப சம்சாரம் பண்ணலாம் என்று புறப்பட்டார்களாம் – பிறகு கதையைச் சுருக்கிச் சொல்லுமிடத்து, கொஞ்ச நாட்களுக்குள் அந்த அம்மாள் இறந்து போனார்கள். அவர்களிடமிருந்த கொஞ்ச பணம் வயித்தியச் செலவிற்கும் சமாதி வைப்பதற்கும் சரியாகப் போச்சுது. கன்னி மிகவும் துயரத்தில் ஆழ்த்தப்பட்டாள். அவளை அவள் பாட்டியின் சமாதியை விட்டுப் பிரிப்பதே எங்களுக்குக் கஷ்டமாகப் போயிற்று. இந்தக் கதையை யெல்லாம் சொல்லி உங்கள் பொழுதைப் போக்குகிறேன்.
ஜ. இவ்லை இல்லை! இந்தக் கதையை முற்றிலும் கேட்க மிகவும் ஆவலாயிருக்கிறேன்.
பொ. எங்களால் ஆனமட்டும் சமாதானம் சொல்லிப் பார்த்தோம். இவள் ‘என் கதி யென்னாவது? – நான் எங்கே போவது? என்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்!’ என்று அழுதுகொண்டே யிருந்தாள். இதைக் கேட்டு நான் என் புருஷனிடம் ‘ஐயோ பாவம்! இவள் கதியைக் காண என் மனம் தாளவில்லை. இவள் நம்மைவிட ஏதோ அந்தஸ்தில் வாழ்ந்து வந்தவளாகக் காணப்பட்ட போதிலும் ஒருவேளை நம்முடன் வசிக்க விரும்பினாலும் விரும்பக்கூடும். இவளைத் தனியாக விட்டால் இவள் இப்பாழுலகில் எப்படி வாழப் போகிறாள்’. என்று சொல்ல அவரும், அவளைக் கேட்டுப் பார் என்றார். இதைப் பற்றி சொன்னவுடன் அவள் முகம் வருத்த மெல்லாம் போய் மாறியது! “அம்மா, உங்களுடனே என் வாழ்நாட்களைக் கழிப்பதைத் தவிர நான் வேறொன் றும் கேட்கவில்லை. உங்களுக்கு உதவியாக வேலை செய்ய ஒன்றும் தெரியாமற் போனாலும், சீக்கிரம் கற்றுக் கொண்டு உங்களுக்கு வேலைசெய்து வருகிறேன்” என் றாள். அதற்கு நான் உனக்கிஷ்டமான வேலையைச் செய். நாங்கள் உன்னை ஒன்றும் கட்டாயப் படுத்தவில்லை. நீ உனக்கிஷ்ட மிருக்கும் வரையில் எங்களுடனேயே யிருந்து, நாங்கள் சாப்பிடும் உணவை நீயும் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிரு” என்று பதில் கூறினேன். பிறகு அவள் எங்களுடனேயே வாழ்ந்து வந்தாள். சீக்கிரம் நாங்கள் செய்யும் வேலை யெல்லாம் மிகவும் விரைவில் சுறுசுறுப்பாய்க் கற்றுக்கொண்டு எங்களுக்கு மிகவும் ஒத்தாசையா யிருக்கிறாள்; மிகுந்த பொறுமைசாலி, நற்குண முடையவள், எங்கள் மீதும் எங்கள் குழந்தைகளின் மீதும் மிகவும் அன்பா யிருக்கிறாள். ஆகவே நானும் அவளை என் பெண்ணைப் போலவே பாவித்து வருகிறேன். பால்யத்தில் அவள் நல்ல ஸ்திதியில் கொண்டுவரப்பட்டவளா யிருக்க வேண்டும். இவளுக்கு எழுதப்படிக்கத் தெரியும், தையல் வேலையும் செய்கிறாள், எங்களை விட நன்றாக. வீட்டு வேலை யெல்லாம் முடிந்த பிறகு எங்கள் சின்ன குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். இதுதான் எங்கள் கன்னியின் கதை.
ஐ. பொட்டியம்மா! இதையெல்லாம் எனக்குத் தெரிவித்ததற்காக உனக்கு வந்தனம் செய்கிறேன். கன்னியின் நற்குணத்தையும் அறிந்தேன். உன் அருங் குணத்தையும் மெச்சினேன் – உம் – இவள் தகப்பனார் யாராம்? தெரியுமா?
பொ.தெரியும் – என்னமோ சொன்னாளே – ஆம் – பலபத்திரர்!-
ஜ. பலபத்திரர்! – அந்தப் பெயர் கொண்ட ஒருவர் எனக்குத் தெரிந்தவர் இருந்தார்! – இவளுடன் நான் சற்று பேச விரும்புகிறேன்.
பொ. ஆனால் அவளை உள்ளே அழைக்கிறேன் – கன்னி;
ஜ. ஆம்.
க. [உள்ளிருந்து] ஏன் அம்மா!
[கன்னி வருகிறாள்.]
ஜ. இங்கே வா அம்மா! அம்மா குழந்தை, உன் விர்த்தாந்தத்தை யெல்லாம் ஆவலுடன் கேட்டேன். நீ தாய் தந்தையர் இல்லாத ஒரு அனாதை யென்றறிந்தேன்.
க. ஆமாம் ஐயா நான் ஒரு – அனாதைப் பெண்.
ஐ. உன் தகப்பனார் பெயர் பலபத்திரரா?
க. ஆமாங்க.
ஐ. உன் தாய் தந்தையர் எங்கே வசித்தார்கள்?
க. பட்டணத்தில் ஐயா, அவர்களிருவரும் நான் சிறு குழந்தையா யிருக்கும் பொழுது இறந்து போனார்கள். அதன் பேரில்தான் திருவாப்பூரில் என் பாட்டியார் வீடுபோய்ச் சேர்ந்தேன்.
ஜ. அந்தம்மாள் என்ன உன் தகப்பனாரைப் பெற்ற பாட்டியா? நான் இந்தக் கேள்விகளை யெல்லாம் கேட்பதற்காக மன்னிக்க வேண்டும் – நான் ஒரு காரணமாக இவைகளை யெல்லாம் கேட்கிறேன்.
க. ஆமாங்கள், அவர்கள் அனேக வருஷங்களாக விதைவை யாயிருந்தார்கள்.
ஜ. அந்தம்மாளுடைய பெயர் என்ன தெரியுமா உனக்கு?
க. பர்வதம்மாள் என்று அவர்கள் பெயர் ஐயா.
ஐ. பர்வதம்மாள்! – இந்த துக்ககரமான கட்டை வண்டி விபத்து நேரிட்டபொழுது நீங்கள் எங்கே போய்க் கொண்டிருந்தீர்கள்?
க. வானகரத்தின் பக்கத்திலுள்ள அடையாளம் பேட்டுக்கு, அங்கே தான் என் பாட்டியார் பிறந்தார்களாம்.
ஜ. ஓ! அவர்கள் தான் – எல்லா சந்தர்ப்பங்களும் ஒத்திருக்கின்றன. அம்மா கன்னி, நீ அறியாதபடி உனக்கு ஒரு பந்து கிடைக்கப் பெற்றாய் – நான் தான் அந்த பந்து! என்னுடைய தாயாரும் வானகரத்தில் பிறந்தவர்களே. அவர்களுக்கு பர்வதம்மாள் என்று மாற்றாந் தாய் வயிற்று சகோதரி ஒரு அம்மா இருந்தார்கள். நீ பிறந்ததைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; உன் தகப்பனார் இறந்ததும் எனக்கு ஞாபக மிருக்கிறது. அவர் சித்திரம் வரைவதில் மிகவும் கெட்டிக்காரராயிருந்தார். உன் தாயாரும் சீக்கிரத்தில் அத்துயர் ஆற்றாது மடிந்தது எனக்கு ஞாபக மிருக்கிறது. அவர்கள் இறந்தபொழுது எத்தனை குழந்தைகளை விட்டுச் சென்றார் என்று எனக்குத் தெரியாது. உன் கதியும் என்ன வாயிற்றோ என்று நான் அறியேன். ஆயினும் இப்பொழுதாவது இப்படி ஆச்சரியகரமாய் உன்னை நான் கண்டு பிடித்தேனே என்று மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீ என்னுடன் வந்து என் வீட்டில் வாழவேண்டும். என் பெண்சாதியும் பெண்களும் இவ்வளவு நற்குணமும் நன்னடத்தையும் உடைய உன்னை சந்தோஷத்துடன் வரவேற்பார்கள்.
க. ஐயா, நீங்கள் என்னிடம் காட்டும் அன்பிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயினும் பணக்காரராகிய உங்கள் குடும்பத்தில் ஏழையான நான் எப்படி வாழ்வது?
ஐ. அதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை, ஏழைகளாகிய சுற்றத்தாரை இகழ்ச்சியாக மதிக்கும் குடும்பமல்ல என் குடும்பம். அன்றியும் உனது பேச்சும் நடவடிக்கையும் நீ தகுந்த அந்தஸ்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறாய் என்று தெரிவிக்கின்றன.
க. இறந்துபோன என் பாட்டியார் தன்னால் கூடியமட்டும் எனக்கு கல்வி கற்பித்தார்கள். அவர்கள் உதாரணத்தைக் கொண்டும், அவர்கள் கற்பித்ததைக் கொண்டும் நான் பலன் அடையாவிட்டால் அது என் குற்றமாகும்.
ஐ. மிகவும் தக்கபடி பேசுகிறாய், உன் பேச்சைக் கேட்க உன்மீது பிரீதி எனக்கு அதிகமாய் உண்டாகிறது. சரி, என்னுடன் புறப்பட்டு என் வீட்டுக்குப் போக ஏற்பாடு செய், உனக்கு இவ்வளவு அன்பு பாராட்டிய இவர்களுக்குத் தக்கபடி பிரதி செய்ய ஏற்பாடு செய்கிறேன்.
பொ. கன்னியம்மா, உனக்கு வாய்த்த அதிர்ஷ்டத்திற்காக நாங்கள் சந்தோஷப் படுகிறோம்,ஆயினும் உன்னை விட்டுப் பிரிய வேண்டுமே யென்றுதான் எங்களுக்கெல்லாம் துக்கமா யிருக்கிறது.
க. என்னைத் தாய் தந்தையர்களைப் போல வளர்த்த உங்களை விட்டுப் பிரிவதென்றால் எனக்கும் வருத்தமாகத் தானிருக்கிறது. ஒரு ஆதரவுமில்லாத அனாதையாய் நான் பொழுது என்னை உங்கள் குழந்தைகளில் ஒருத்தியாக பாதுகாத்தீர். உங்களுக்கு நான் என்றும் நன்றியறித லுடையவளா யிருக்க வேண்டும்.
ஞானசுந்தரமும் தம்பியப்பனும் வருகிறார்கள்.
ஞா. ஆஹா! ஜமீன்தார் அவர்கள் வந்திருக்கிறார்களா இங்கு!
ஜ. ஆமப்பா, ஞானம். நான் இன்று இங்கு வந்ததற்கு நல்ல பயன் கிடைத்தது,
ஞா. அது என்ன பயன் ?
ஐ. என்னுடைய பந்துவைக் கண்டு பிடித்தேன், அப்பா, நீங்கள் அன்போடு பாதுகாத்து வந்த இச் சிறு பெண் என் உறவு:
ஞா.யார்?- நம்முடைய கன்னியா?
த. கன்னியா?
ஐ. ஆம், வாஸ்தவத்தில் அவளுக்கும் அவளது பாட்டியா ருக்கும் நீங்கள் செய்த உதவிக் கெல்லாம் உங்களுக்கு வந்தனம் அளித்த பின், நான் இவளை என் மனைவி மக்களுடன் வாழ அழைத்துக் கொண்டு போகலாமென்றி ருக்கிறேன்.
ஞா. இது ஆச்சரியமான சமாசாரமே! சரி கன்னி. நீ பணக்காரர் வீட்டில் போய் வாழ வேண்டி வந்திருக்கிறதே யென்று நாங்கள் மிகவும் சந்தோஷப் படுகிறோம் – உன் நற்குணத்திற்கு அது பொருந்திய தாகும். ஆயினும் நீ இங்கு இனி இருக்க முடியாது என்பதை நினைக்கும் பொழுது எங்களுக்கெல்லாம் வருத்தமாகத்தா னிருக்கிறது.
பொ. அதைத் தான் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்.
த. [ஒருபுறமாய் கன்னியிடம்] என்ன! – கன்னி – எங்களை விட்டுப் பிரியவா போகிறாய்? நாம் இருவரும் பிரிய வேண்டுமோ?
க. [ஒருபுறமாக அவனிடம்] நான் என்ன செய்யக் கூடும்? எனக்கும் வருத்தமாகத்தா னிருக்கிறது?
ஐ. இங்கு விட்டுப் போவதென்றால் எல்லாருக்குமே வருத்தமாக யிருக்கிறாற் போலிருக்கிறதே!
பொ, ஆமாம் ஐயா, அப்படித்தான் நானும் நினைக்கிறேன் நாங்கள் எல்லாம் இங்கு இதுவரையில் சுகமாய் வாழ்ந்து வந்தோம்.
த. [கன்னியிடம்] நான் – உன்னைவிட்டுப் பிரிய வேண்டியது தான் – ஆயினும் கன்னி என்னை நீ மறக்க மாட்டாயே?
க. [அவனிடம் ஒரு புறமாக] என் துக்கத்தை அதிகப் படுத்தாதீர்கள்! [கண்ணைத் துடைத்துக் கொண்டு] உங்களை மறப்பதாவது! ஒருகாலும் மறக்கவே மாட்டேன்.
ஜ. ஓகோ! இவர்கள் இரண்டு பேர்களுக்குள் ஏதோ அன்யோன்யம் இருக்கும் போலிருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்லலாமே பொட்டியம்மா! தாராளமாகச் சொல் நீ தான்.
பொ. ஐயா, எங்களுக்கு கன்னி அம்மாள் உங்கள் பந்து என்பது தெரிவதற்கு இடமில்லை. ஆகவே தம்பியப்பனும் கன்னி அம்மாளும் ஒருவர் மீதொருவர் காதல் கொண்டு மணக்க விரும்பியபோது நாங்கள் அதற்கு ஆட்சேபனை சொல்லவில்லை; கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் கொஞ்சம் நிலம் வாங்கி அதைக் கொண்டு அவர்கள் சம்சாரம் செய்ய ஏற்பாடு செய்யலாமென் றிருந்தோம்.
ஞா. அதெல்லாம் இப்பொழுது முடியாது.
த: ஏன் அப்பா?
ஞா.ஜமீன் தாருடைய உறவாகிய பெண்ணை நீ கலியாணம் செய்துகொள்ள நினைக்கலாமா?
ஐ. கன்னி வா! உன் அபிப்பிராயம் என்ன? நீ தான் இவ் விஷயத்தைத் தீர்மானம் செய்ய வேண்டும்.
க. ஐயா! நான் ஒரு அனாதையான ஏழையென்று எண்ணிய பொழுது, இவர் என்மீது மிகவும் அன்பு பாராட்டினார் அவர் அப்படிச் செய்தது என் அதிர்ஷ்ட மென்று நானும் எண்ணினேன். அவர் என் காதலைப் பெற்றார் அதினின்றும் நான் என்ன சந்தர்ப்பங்கள் மாறினபோதிலும் மாறமாட்டேன். அது எப்படியா யிருந்தாலும் அவரைத் தான் மணம்புரிய வேண்டுமென்பது என் தீர்மானம்.
த. கன்னி! நீயே உத்தமி.
ஜ. கன்னி! நன்றாய்ச் சொன்னாய். இப்படிப்பட்ட தைரியசாலியான பெண் என் பந்துவாயிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தருகிறது. நீங்கள் இருவரும் மணக்க என் மனப் பூர்வமாய் உத்திரவளிக்கிறேன். அன்றியும் உனக்குத் தக்க ஸ்ரீதனமும் ஏற்பாடு செய்கிறேன், நீங்களிருவம் சுகமாய் வாழ.
பொ .ஜமீன்தார் அவர்களை ஸ்வாமி ரட்சிப்பாராக! – கன்னியை விட்டுப் பிரிந்தால் என் பிள்ளையின் ஹிருதயம் துயரத்தால் வெடித்துப் போயிருக்குமென நான் அறிவேன். கன்னி! தீர்க்க சுமங்கலியாய் வாழ்வாயாக!
ஜ. என்னிடம் இரண்டு காணி நிலம் தற்காலம் பயிரிடப் படாமலிருக்கிறது; அதை உன் பிள்ளைக்குக் கொடுக்கிறேன். அதைப் பயிரிட வேண்டிய மாடுகள் கலப்பை முதலியவையெல்லாம் நான் கன்னிக்குக் கொடுக்கும் ஸ்ரீதனப் பணத்தைக் கொண்டு வாங்கிக் கொள்ளட்டும்.
த. ஜமீன்தார் அவர்களுக்கு என் நமஸ்காரம்.
ஞா. எங்கள் எல்லோருக்காக நானும் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன்.
க. ஐயா, இவ்வளவு தூரம் எங்கள் மனதைத் திருப்தி செய்ததால் இன்னொரு விஷயத்திலும் என் வேண்டுகோளுக்கு இணங்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நான் உங்கள் வீட்டிற்குப் போய் அங்கிருப்பவர்களுக் கெல்லாம் என் மரியாதையைச் செலுத்தி விட்டு இங்கு திரும்பிவர விரும்புகிறேன். இதுவரையில் நான் வாழ்ந்து வந்தபடியே நான் வாழட்டும். இங்கேயே எனக்கறிமுக மானவர்களுடன் என் மாமனார் மாமியாருடன் இவ்வூரிலேயே வாழ விரும்புகிறேன்.
ஐ. கன்னி, நீ கேட்பது மிகவும் நியாயமானதும் பொறுத்த மானதுமா யிருப்பதினால் அதை மறுக்க எனக்கு மனம் வரவில்லை. ஆயினும் நீ எங்களவர்களை யெல்லாம் நன்றாய் அறியவேண்டும். அப்படிச் செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும்.
க. ஐயா, உங்கள் வார்த்தைக்கு எப்பொழுதும் இரண்டு சொல்ல மாட்டேன்,அப்படியே ஆகட்டும்.
ஜ. ஆனால் தம்பியப்பன் உன்னை எங்கள் வீட்டிற்கு மத்யானம் அழைத்துக்கொண்டு வரட்டும். அங்கு உன் உறவினர்களுக் கெல்லாம் உன்னைத் தெரியப்படுத்துகிறேன் – பிறகு எல்லாம் கலந்து பேசுவோம். நான் வருகிறேன். அம்மா, எல்லோரிடமிருந்தும் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன்.
மற்றவர்கள். நமஸ்காரம்!
[ஜமீன்தார் – போகிறார்]
பொ. கன்னி, உன்னை இனிமேல் நான் மருமகளே என்று கூப்பிடலாமல்லவா? நீ எனக்குண்டாக்கின சந்தோஷத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்?
த. எனக்குண்டான சந்தோஷத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்?
க. நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்?
ஞா. ஹா ! குடை கவிழ்ந்த கட்டை வண்டியைச் சரிப்படுத்த நான் சென்ற பொழுது, அதன் மூலமாக எங்களுக்கெல்லாம் இவ்வளவு நன்மைக்கு அது வழி காட்டும் என்று நான் எள்ளளவும் நினைத்ததில்லை.
பொ. பிறருக்கு நாம் செய்யும் உபகாரம் ஒரு பொழுதும் வீண் போகா தென்கிறார்களே!
க. நீங்கள் எனக்குச் செய்த உபகாரம் வீண் போகவில்லை யென்று ரூபிப்பதே என் ஆயுள் பர்யந்தம் என் கடமை யாகும், ஸ்வாமியின் கிருபையால்.
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது.
– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
கடவுள் போட்ட முடிச்சு!
கல்பனா ராஜகோபால்
August 1, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026