ஆனந்த சுதந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 455 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடு முழுவதும் ஒரே கொண்டாட்டமும் குதூ கலமும்! முப்பத்தோர் ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்ட ஆனந்தப் பூரிப்பில் அன்னை பூமியின் அழகுக் கோலம்! சின்னஞ் சிறார்களும் இளையோரும் முதியோரும் எல்லோருமே அந்த ஆனந்த வெள்ளத்தில் நீந்திக் கொண் டிருக்கும் நேரம்!

வீதியெங்கும் வண்ணவண்ண விளக்குகளாலும் தோர ணங்களாலும் அழகுபடுத்தப்பட்ட அற்புதக் கோலம்! வீடுகளிலும் கடைகளிலும் பணியகங்களிலும் கூடத் தேசியக் கொடி கம்பீரமாய்ப் பட்டொளி வீசிப் பறக்கின்ற பரவசக் காட்சி!

இன்று சிங்கை நாட்டின் தேசிய தினக் கொண்டாட் டத்தில் எல்லோரும் மூழ்கிக் கிடக்கின்றார்கள். ஆனால் பசீர்பாஞ்சாங் சாலை சின்னசாமி மட்டும், விச்சிராந்தி யாய் வானத்தைப் பார்த்தவாறே அந்த மொட்டை மாடியில் கயிறுகள் நைந்து போன சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடக்கிறார். அவரது மனத்துக்குள் மட்டும் இந்தப் பூரிப்பும் மகிழ்ச்சியும் இருப்பதாகக் கொஞ்சம்கூடத் தெரியவில்லை.

இறுகிப்போன பாறையைப் போல் இதயம் கனத்துக் கிடக்கின்றது. சலவைக்குப் போட்ட தும்பைப்பூ போன்ற வேட்டியும் அரைக்கை சட்டையும் இடது தோளில் துண்டுமாய் அமர்ந்திருந்தவர் கண்ணாடியைக் கழற்றித் துண்டால் துடைக்கிறார். தூசு படிந்திருந்த கண்ணாடி இப்போது தெளிவாய்த் தெரிந்தது. நன்றாக வானத்தைப் பார்க்கிறார். நீலநிறம் காணாமல் போய் இப்போது மேகங்கள் திரண்டு வந்து, மறுபடியும் அவை கலைந்து வானம் முழுவதையும் அடைத்துக் கொள்ள, மேகத்திரை கொண்டு ஒளிக்கப்பட்ட சூரியன் தன் ஒளிக்கதிர்களை வெளிக்காட்ட முடியாமல் திணறினான். இப்போது வானத்தில் ஒரு மஞ்சள் ஒளிச் சிதறல்!

மழையும் பெய்யாமல் வெயிலும் எதிர்க்காமல் ஏன் இந்த வீம்பு! திணறிக் கொண்டிருந்த வானத்திடம் கேட்பது போல் தனக்குள் பேசிக் கொண்டார் சின்னசாமி. திடீரென்று அவர் கண்களில் ஓர் ஒளி மின்னல். முகத்தில் ஒரு பரவசம்! சிறுபிள்ளைபோல் வானத்தைப் பார்க்கிறார்.

எழில் கொஞ்சும் ஏழு வண்ணங்களில் ஓர் அழகிய வானவில்! ஓடுகின்ற கன்றுக்குட்டியைப் பார்த்து அதன் பின்னாலேயே ஓடும் சிறுபிள்ளையின் துள்ளல் மனத்தில்.

அடடா! இறைவனின் படைப்பில் இந்த வானவில் தான் அற்புதமான பரிசோ… எப்படி இவனால் இந்தக் கலவையை உண்டு பண்ண முடிந்தது.

ஒவ்வொரு வண்ணங்களால் மனத்தில் அடுக்கி வைத்துக் கொண்டு அதைப் பற்றிய கற்பனையில் மூழ்கிக் கடைசியாய் அவரே ஒரு முடிவுக்கு வந்தபோது முகம் நிறைவாய் மலர்கிறது.

பல வண்ணங்கள் சேர்ந்ததனால்தான் இந்த அழகு வந்தது. அதைப்போல் பல இன மக்கள் ஒன்று சேர்ந் ததால்தான் இம்மண்ணிலும் இவ்வளவு அழகும் அற்புதமும் சேர்ந்ததோ? சின்னசாமி தனக்குத்தானே தலையை ஆட்டிக் கொள்கிறார். இப்படி அழகைத்தான் தன்னுடைய வீட் டிலும் பார்ப்பதற்கு அவர் ஆசைப்பட்டார். ஆனால் அது வெறும் நிராசையாகவே போய்விட்டது. அந்த வெறுமை தான் இதோ இந்தத் தனிமையும், தாங்க முடியாத மனச் சோகமும்.

சின்னசாமி பதினேழு வயதில் கப்பலேறி மலேசியாவுக்கு வந்தார். அப்போது மலாயா என்று அழைக்கப்பட்ட அந்தப் பூமியில் பணம், பார்க்குமிடமெல்லாம் கொட்டிக் கிடப்ப தாகச் சொல்லி யாரோ அவரை அழைத்து வந்தார்கள். வந்து பார்த்தபோது பணம் கொட்டிக் கிடக்கவில்லை. ஆனால் பணத்தைச் சம்பாதிக்க வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன.

அந்தக் காலத்தில் அந்த நாட்டில் “இ.எஸ்.எல்.சி.” எட்டாம் வகுப்பை மட்டுமே படித்துவிட்டு வந்தவர்தாம் என்றாலும் அந்த எட்டாம் வகுப்பு படிப்பே அவரை ஒரு “வாத்தியாரைய்யாவாக்கி” வாழ்வுக்கு அடிக்கோலும் நாட்டி வைத்தது. முப்பது வயதில் அவர் மலாயா நாட்டில் பேரா மாநிலத்தில் தைப்பிங் வட்டாரத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதராகிவிட்டார்.

சின்னசாமி வாத்தியாருக்குப் பெண் கொடுக்க நான், நீ என்று பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும் அவர் என்னவோ தனக்குத் தனது சொந்த மண்ணிலிருந்தே மனைவி வரவேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தார். அந்தப் பிடிவாதப்படியே பங்கஜம் என்ற தமிழ்நாட்டுத் தமிழச்சியே தாரமாக வந்து சேர்ந்தாள்.

சின்னசாமி வாத்தியாருக்கு இனப்பற்று, மொழிப் பற்று, சமயப்பற்று எல்லாவற்றிலும் மேலாக நாட்டுப் பற்றுதான் அதிகமாய் இருந்தது. மனைவியிடம் சொல்லித் தனது விசுவாசம் இந்த மண்ணிலேயே படிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். ஆனால் அவளுக்கு அந்த வார்த்தையைக் கேட்கவே பிடிக்காது. அவள் தன் பெற்றோரும், உற்றாரும் வாழ்கின்ற பிறந்த நாட்டின் மீதே பற்றும் பாசமும் மிகுந்து கிடந்தன.

சின்னசாமிக்கு மூன்றாவது பிள்ளை பிறந்தபோது அவர் சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போனார். மலாயா நாடு மலேசியாவாகி அப்புறம் சிங்கப்பூர் ஆகஸ்டு திங்கள் 9-ஆம் நாள் தனி நாடாகித் தன்னை உலக அரங்கில் உயர்த்திக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் ஆரம்பித்தபோது அவரும் உழைக்கத் தொடங்கினார்.

அவரிடம் தமிழ் இருந்தது. சமயம் இருந்தது. ஆனால் தம் வம்சத்துப் பிள்ளைகளுக்குத் தங்கள் மொழி, சமயத்தின் பால் ஆர்வமும் பற்றும் ஏற்பட பல வழிமுறைகளை மேற்கொண்டார். அவரிடம் தமிழ் படிக்க ஆர்வம் காட் டியதுபோல், சமயத்தைக் கற்றுக் கொள்ளவும் பலர் வந்தார்கள்.

சின்னசாமி வாத்தியாருக்கு இப்போது ஆறு பிள்ளைகள் இருந்தார்கள். மூன்று பையன்களும் மூன்று பெண்களுமாய் வீட்டில் பூஞ்சோலையாய் மணம் பரப்பிக் கொண்டிருந்தார்கள். திருமண வயதில் பெண்கள் இருந் தாலும் அவர்களின் படிப்பை நினைத்து அவர்களின் மணவிழாவை அவர் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், பிள்ளைகளோ அவர் விருப்பத்தைச் சிறிதும் நினைத்துப் பார்க்காமல் அவரவர் விருப்பத்திற்குத் தங்களது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க ஆரம்பித்தார்கள். மொழிக்காகவும் சமயத்திற்காகவும் உயிரையும் அர்ப் பணிக்கத் தயாராக இருந்த அவருடைய பிள்ளைகளோ அவருக்கே எதிராகப் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்கள்.

நவநாகரிக மாற்றம்… வாழ்க்கையில் கிடைத்துவிட்ட சகலவசதிகள்… தகப்பனாருக்கு இருந்த சமுதாய மரியாதை இவை எல்லாம் அவர்களின் வெளிவட்டாரத் தொடர்புக்குப் பக்கபலமாக அமைந்துவிட்டதாலும், தாயாரின் சலுகைகள் அளவுக்கு மீறிப் போனதாலும் அவர்கள் தாங்களாகவே தங்களுக்குத் துணையைத் தேடிக் கொள்ளவும் தயங்க வில்லை.

பிள்ளைகள் படித்து முடிக்க வேண்டும். பட்ட தாரிகளாக வேண்டும், நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் களுக்கு வேலையில் அனுபவ முதிர்ச்சியும், அறிவு வளர்ச் சியும் ஏற்படும். அந்த நேரத்தில் அவர்களுக்கு மணவினை நடத்தி மகிழலாம் என்று எண்ணமிட்டிருந்த சின்னசாமியின் ஆசையில் இடிவிழுந்தது போன்ற நிலை. எதற்கும் கவலைப் படாத மனிதர் இந்த விஷயத்தில் தடுமாறிப் போனார்.

திருமண விஷயத்தில் கவனம் பிசகிப் போனால், அது தலைமுறைக்கே தலைகுனிவை ஏற்படுத்திவிடுமே என்ற தாங்க முடியாத தவிப்பு உண்டானது. பிள்ளைகளிடம் மன்றாடிப் பார்த்தார். அவர்கள் மசிவதாக இல்லை. இப்போதுதான் பங்கஜத்திற்குத் தனது தவறு உறைக்கத் தொடங்கியது. தன் வளர்ப்பு முறைதான் இந்தத் தன்மூப்புத்தனத்திற்கு மூலகாரணம் என்று உணர்ந்தாள். பிள்ளைகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தாள். அவர்கள் சொன்னார்கள்:

“எங்களுக்கு வயது வந்துவிட்டது. எங்களால் சிந்திக்க முடியும்… திட்டமிடத் தெரியும். நீங்கள் பேசும் பழைய பஞ்சாங்கம் இப்போது ஒத்து வராது. பல இன சனங்கள் வாழும் நாட்டுல எங்களோட முடிவுதான் நல்ல முடிவு” என்றார்கள். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கணவரின் காலைக் கட்டிக்கொண்டு அழுதாள். சின்னசாமி தமக்குள் சிரித்துக் கொண்டார்.

பல இன மக்கள் வாழும் நாட்டில் புரிந்துணர்வோடும், சுபீட்சத்தோடும் ஒற்றுமையாகவும் வாழவும், வாழ்க்கையில் முன்னேறவும் இதுதான் வழி என்று இவர்களுக்கு யார் சொன்னார்கள் என்று தமக்குத்தாமே சிரித்துக் கொண்டார்.

அவரவர் மொழியைச் சமயத்தைக் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதிலும், மதித்துப் போற்றிப் பின்பற்று வதிலும் மரியாதை கொடுப்பதிலும் அவரவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பையும் கட்டுப்பாட்டையும் மறப்பதால் ஏற்படும் கலாச்சாரச் சீர்கேடுகளை இவர்கள் உணராது போனால் எதிர்காலம் என்ன ஆகும் என்று தனக்குள்ளேயே நொந்து கொண்டார். இந்த வேதனையிலேயே அவர் மனைவி பங்கஜம் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

பிள்ளைகள் அவரையும் அந்த வீட்டையும் விட்டு விட்டுத் தனிப்பட்ட பறவைகளாய்ப் பறந்து விட்டார்கள்.

தனிமை… தனிமை… தனிமை… சின்னசாமி வாத்தியார் தனி மரமாகிவிட்டார்…

காலம் ஓடிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்து நண்பர்கள் தன்னிடம் படித்த பிள்ளைகள் என்று நாள்களும் கரைந்து கொண்டிருந்தன. ஒரு நாள் அவரது நண்பர் ஒருவர் வந்தார். அவரது பிள்ளைகளோடு ஒத்துப் போகும்படி வற்புறுத்தினார்.

உதிர்ந்த சருகு மீண்டும் துளிர்க்காது. முறிந்த உறவு மறுபடியும் தொடராது என்று, முடிவாகச் சொல்லிவிட்டுத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வந்தவர்தாம். தாமுண்டு, தம் புத்தகங்கள் உண்டு என்று சொந்தமான வீட்டில் சொந்த சமையலில் மறுபடியும் நாள்களை ஓட்டுகிறார். மனம் மட்டும் இறுக்கத்தை விடவேயில்லை.

வானத்திலிருந்து மழைத் தூறல்கள் விழத் தொடங்கின. வானத்தில் இருந்த வானவில்லைக் காணவில்லை. துளித் துளியாய் விழுந்த மழை இப்போது சோ.. வென்று கொட்டத் தொடங்கியது. மெள்ள எழுந்து உள்ளே போகிறார். வீட்டு வாசலில் கதவு தட்டப்படும் ஓசை, வெளியே வந்து கதவைத் திறக்கிறார். கண்ணில் மின்னல் தாக்கிய அதிர்ச்சி! அவரால் நம்ப முடியாத காட்சியாய் அவரின் பிள்ளைகள்… அவர்களுடன் அவர்களின் மனைவிகள். அவர்கள் பெற்ற பிள்ளைச் செல்வங்கள்.

மழையில் நனைந்தவர்களாய் அவர் வாய்மொழியை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் அவர்களை வாரியணைக்க இரண்டு கைகள் போதாத காரணத்தால் இரு கதவுகளையும் திறந்து விடுகிறார். எல்லோரும் உள்ளே வருகிறார்கள். அவர் காலில் விழுகிறார்கள். அவர்கள் கேட்பது மன்னிப்பா…. ஆசீர்வாதமா… சின்னசாமி வியப்பும் திகைப்புமாய் அவர்களை ஆசீர்வதிக்கிறார். வீடு பல வண்ண விளக்குகள் தட்டப்பட்டது போல் ஒளிர்கிறது.

‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோம் என்று ஆடுவோமே…”

சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஒலிபரப்பிக் கொண்டிருந்த அறிவிப்பாளர் பாடலை ஒலிபரப்புகிறார்.

“எங்களை மன்னிச்சிடுங்கப்பா… எங்களுக்கு நீங்க கொடுத்த சுதந்திரத்தை முழுசா முறையா நாங்க பயன் படுத்திக்காம அவசரப்பட்டுட்டோம். ஆனா, எங்க தவற்றை நாங்க உணர்ந்திட்டோம்பா.. உங்க மனசு புண்படற மாதிரி இனிமே நாங்க நடக்கமாட்டோம்.

“பாதை தவறிப் போனாலும் பண்பு தவற் மாட்டோம்… உங்க நல்ல பேரைக் காலம்பூரா காப்பாத்து வோம்பா” என்றார்கள்.

சின்னசாமிக்கு அந்த வார்த்தைகள் அமரகவி பாரதியின் பாடலைவிட அதிகமாய் இனித்தது. பிள்ளைகளை அணைத்துக் கொண்டார். இந்தச் சுதந்திரநாள் நமக் கெல்லாம் ஆனந்தம் பொங்கும் சுதந்திர நாள் பிள்ளைகளே… என்னோட கவலையைத் தீர்த்து வைக்க நெனைச்ச உங்களை இனிமேல் எப்பவும் நான் பிரிய மாட்டேன் என்று அன்போடு கூறுகிறார். வெளியே தேசிய தின ஊர்வலத்தின் ஆரவாரம் கேட்கிறது. அதே சமயம் வீட்டின் தொலைக் காட்சியில் ராணுவ வீரர்கள் கம்பீர நடையைக் கண்ட அந்த முதியவரின் மனத்திலும் அந்தப் பீடுநடை எதிரொலித்தது.

– தமிழ் முரசு 9-8-96

– சிங்கப்பூர் சுதந்திரதினம் சிறப்புக் கதை

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *