ஆசை..!




தேன்மொழியைப் பார்க்க மனசு துடித்தாலும்……நான்கைந்து நாட்களாக கணவன் குமாரின் முகத்தில் வாட்டம், நடையில் துவளல்.! – குழப்பத்தை ஏற்படுத்தியது அம்மணிக்கு.
தேன்மொழி கொள்ளை அழகு குழந்தை. வயது இரண்டு. குமாரின் தம்பி குமணனின் சுட்டிக் குழந்தை.
பின்னாளில் பிரச்சனை வந்து உறவு முறிந்து விடக்கூடா து என்கிற முன்னெச்சரிகை காரணத்தால் மூன்று கிலோமீட்டர் தள்ளி தனிக்குடித்தனம் வந்தாலும் குழந்தையின் மேல் குமாருக்குக் கொள்ளை ஆசை.
அலுவலகம் விட்டால் போதும் தம்பி வீட்டிற்குப் போய் அவன் தேன்மொழியைக் கொஞ்சிவிட்டுத்தான் திரும்புவான். அந்த அளவிற்கு அதன் மேல் அலாதியானப் பிரியம், அன்பு, ஈடுபாடு. இதற்குக் காரணம்…… குமாருக்குக் குழந்தைகள் இல்லாமலில்லை. பெற்றது இரண்டும் ஆண். சிங்கக்குட்டிகள். பெண் குழந்தை இல்லாத குறையை நிறைவு செய்யவே இந்த குழந்தையின் மேல் அப்படி ஒரு கொஞ்சல், குலாவல், ஒட்டுதல்.
குழந்தைக்கும் குமாரிடம் அதிகம் பற்றுதல் , ஒட்டுதல் அதிகம். இவன் தலையைக் கொண்டுவிட்டால் போதும்….”அப்பா ! அப்பா..!”என்று மழலையோடு வந்து ஒட்டிக்கொள்வாள். தன்னைப் பெற்ற தாய் தந்தைகளை மறந்துவிடுவாள்.
இவனிடம் மட்டுமா இத்தனை அன்பு..? இவன் மனைவி அம்மணியைக் கண்டாலும் …”அம்மா..! அம்மா..!”என்று கட்டிக் கொள்வாள். இதனால் அவளுக்கும் அக் குழந்தையின் மேல் அதிக அன்பு.
குமாரே மறந்துவிட்டால் கூட தூக்கி வரச்சொல்லி கொஞ்சுவாள். இவளுக்கும் பெண் குழந்தை இல்லாத ஏக்கம்.
குமணனின் மனைவி குண்டலகேசி அடுத்த குழந்தைக்குத் தயாராக… அவளுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்கிற நினைப்பில் இருவருமே போட்டிப் போட்டுக்கொண்டு தேன்மொழியைக் கொண்டு வந்து இறுத்திக் கொள்வார்கள்.
இப்படி அன்பு, ஆசை உள்ள குழந்தையைக் கொஞ்ச நாட்களாக குமார் சென்று பார்க்காமலிருக்கிறான். கொண்டு வராமல் இருக்கிறான்.
‘ஏன்..?’இதுதான் அம்மணி மனம் முழுக்க தற்போதையக் குழப்பம்.
‘தம்பி மனைவி குண்டலகேசியின் இரண்டாவது குழந்தை பிரசவ நொடி வரை தேன்மொழியைக் கொண்டு வந்தவர், கொஞ்சியவர், பிரசவத்திற்குப் பிறகு ஏன் தம்பி வீட்டுப் பக்கம் திரும்பாமலிருக்கிறார்..? அவளைக் கொண்டு வராமலிருக்கிறார்..? இவரின் இந்த போக்கிற்குக் காரணமென்ன..?’- அம்மணி தனக்குள்ளேயே கேள்விகள் கேட்டாள். குடைந்தாள்.
‘அண்ணன் – தம்பிக்குள் தகறாரா..?’
இப்படி இருக்க நியாயமில்லை. அப்படி தகராறு வந்து உறவு விட்டுப் போகாமல் இருக்கத்தானே தனிக்குடித்தனம். அப்படி இருக்கும்போது அவர்களுக்குள் தகராறு, வம்பு, சண்டைகள் இருக்க வாய்ப்பில்லை.
வேறு காரணம்…?
தம்பி மனைவி இவர் மனம் கோணும்படி ஏதாவது சொல்லிவிட்டாளா.? நடந்து கொண்டாளா..? குழந்தையைத் தூக்காதீர்கள் கொஞ்சாதீர்கள் என்று சொல்லி விட்டாளா தடைபோட்டு விட்டாளா..?
அவளுக்கு கொழுந்தன் மேல் அளவுகடந்த அன்பு, பாசம், மதிப்பு , மரியாதை. காரணம்…இவர்தான் இவளைப் பெண் பார்த்து தம்பிக்குக் கட்டி வைத்த நேசம். அதனால் அவள் வாயைத் திறக்கவே வாய்ப்பில்லை.
பின் என்ன காரணம்… தம்பி வீட்டுப் பக்கம் திரும்பாமல் இருக்கிறார்..? குழந்தை தேன்மொழியைத் தூக்கிவராமல் இருக்கிறார்..?
தாயிடம் புதுக் குழந்தை. விபரம் புரியாத இந்தக் குழந்தை…. தாய்க்கும், அதற்கும் தொந்தரவு கொடுப்பாளே..?! ஏன் விட்டு வைத்திருக்கிறார்.? அம்மணி இப்படி ஏதேதோ நினைத்துக் குழம்பினாள்.
மாலை.
குமார் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தான்.
உடைகள் களைந்து, கைகால் முகம் கழுவி, காபி குடித்து ஆசுவாசப் பட்ட பின்…
“என்னங்க…?”- அருகில் வந்து அழைத்தாள்.
“என்ன..?”
“கொஞ்ச நாளா உங்க நடப்பு சரி இல்லே. மனசுல உள்ளதை மறைக்காம சொல்லனும்…”
திடீர் தாக்குதல் ! துணுக்குற்றுப் பார்த்தான்.
“உங்களுக்கும், தம்பிக்கும் தகறாரா..?”
”இல்லீயே..?”
“தம்பி பொண்டாட்டி மேல வருத்தமா..?”
”இல்லே..”
“பின்ன ஏன் தேன்மொழியைப் பார்க்காம, தூக்கிவராம இருக்கீங்க..?”
குமார் பதில் சொல்லாமல் இறுக்கமாக இருந்தான்.
“பதில் சொல்லுங்க..?”
“அவளை மறந்துடு..”
“ஏன்..?”துணுக்குற்றுப் பார்த்தாள்.
“தம்பிக்கு அடுத்ததும் பெண்ணாய்ப் பிறக்கும். இவளை நாம தூக்கி வந்து நம்ம குழந்தையாய் வளர்க்கலாம் என்கிற ஆசை நிராசையாகிடுச்சு.”
“புரியல..? !”
“தம்பிக்கு அடுத்துப் பிறந்தது ஆண். ஆண் ஒன்னு, பெண் ஒன்னு அவுங்களுக்கு திருப்தி ஆகிடுச்சு. நமக்கு எப்படி தேன்மொழி கிடைப்பாள்..? நமக்கு கிடைச்சதை வச்சுதான் திருப்தி படணுமே ஒழிய வீணா அடுத்ததுக்கு ஆசைப் படக் கூடாது என்கிறதுக்கு என் நிராசை ஒரு பாடமாகிடுச்சி. அவளை நீயும் மறந்துடு.”சொல்லி வாய் மூடவில்லை….
“அப்பா ! அம்மா..!”
தேன்மொழிக் கூவிக்கொண்டு ஓடிவந்தாள்.
இவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.
பின்னால்… குமார் தம்பி குமணன்.
இருவரும் குழந்தையை வாரி அணைத்து அவனைப் பார்க்க…
“நீ இப்படி ஏடாகூடமா முடிவெடுத்துதான் குழந்தையைப் பார்க்க வராமல் இருக்கேன்னு நினைச்சேன் . சரியாகிடுச்சு. அண்ணா ! அண்ணி..! உங்க அன்பு, அரவணைப்பில் மூச்சுத்திணறிக் கிடந்த பிள்ளை திடீர்ன்னு நீங்க நிறுத்தியதால் வாடிட்டாள். அம்மா, அப்பான்னு உங்கள நினைச்சு அழ ஆரம்பிச்சுட்டாள். அண்ணா ! நம்ம குடித்தனம்தான் தனியேத் தவிர…. உனக்கும் எனக்கும் மூணு ஆம்பளை பிள்ளை, ஒரு பெண் குழந்தை. கூடி கும்மி அடிப்போம். கொண்டாடி மகிழ்வோம் இதுதான் சரி.”என்று குமணன் சொல்ல…..
குமாரும் அம்மணியும் தேன்மொழியை இறுக்கி அணைத்து முத்தமிட்டார்கள்.