கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2025
பார்வையிட்டோர்: 772 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கமலாம்பிகே! ஜம்பு குருக்கள் துண்டை உதறிப் போட்டுத் திண்ணைமேல் உட்கார்ந்தார். 

பெயரைச் சொல்லிச் சொல்லி, அது மூச்சோடேயே கலந்துபோய், மூச்சும் நாமமும் வேறென்று நினைக்கவே மறந்துபோச்சு. 

அம்மன் சன்னதிக்கு வெளியே சுவரை ஒட்டி ஒரு திண்ணை,அதில்தான் அவர் ஒழிந்த நேரங்களில் உட்காரு வதும், சமயங்களில் இரவு படுப்பதும் வழக்கம். இன்று (பௌர்ணமி மட்டும்) நடு நிசியில், கர்ப்பக்ருஹத்தில் ஒரு சந்துவழி, சந்திரன் அம்மன் முகத்தை வியாபிக்கும்போது அவள் கண்கள் விழித்தெழுவதுபோல மாயங்காட்டுவதற்குக் காத்திருப்பார். அவருக்கு அது கண்கொளாக் காக்ஷி. 

கமலாயதாக்ஷி. 

ஏனோ தெரியவில்லை. மனது அலசிப் பிழிந்து உலாத்தி னாப்போல், துல்லியமாய், லேசாய், குளுமை வழிந்து நிறைந்திருந்தது. 

கைகளைக் கோர்த்து, தலைக்கு வைத்து மல்லாந்து படுத்தார். கண்ணுக்கு நேரே கூரையில் கல் தாமரை? இதவான மோனம் சூழ்ந்தது. 

கோவிலுக்கடுத்தாற் போலேயே சொப்பாட்டம் வீடு. ஒரு சின்ன அறை, அதற்கேற்ற கூடம். இந்த இரண்டு கட்டைகளுக்குப் போதாதா? 

அகிலா இரண்டாவது ஜாமத்தில் இருப்பாள். அவளுக்கு இப்போ கொஞ்சம் முடியல்லே. வயசாகல்லியா? இரண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அஞ்சுக்குள். உறவு விட்டுப் போகாமல் இருக்க அவளுக்கு அஞ்சு வயசிலேயே போட்ட முடிச்சு.சட்டம் இருந்தாலும் கிராமத்துள் எட்டாது. 

ஆனால் புத்ர பாக்யம் இல்லை. விரதங்கள் முழிச்சது தான் மிச்சம். யார்மேல் குத்தம்னு ஆராய விஞ்ஞானம் அந்த அளவுக்கு அப்போது வளரவில்லை. வளர்ந்திருந் தாலும் அதன் உதவியைத் தேடத் தோன்றியிருக்காது. நமக்கு ப்ராப்தி அவ்வளவுதான்; அகிலாண்டேசுவரியின் சித்தம், அதனால் நம் வசத்தில் என்ன இருக்கு? 

உறவில் ஒரு பையனை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டார். 

பின்னால் தனக்கு வாரிசாயிருப்பான் என்று வரித்த பையன். ஒருநாள், கிழங்காட்டம் பொன் கட்டிய அவருடைய ருத்ராக்ஷ கண்டியை எடுத்துக்கொண்டு ராவோடு ராவாய் மறைந்தவன், போனவன் போயே போனாண்டி ஆனபின் ஆத்திரப்பட்டு, அழுது ஓய்ந்தபின் அகிலா ஒருமுறை கைகொட்டிச் சிரித்துவிட்டு, இனி னி உங்களுக்கு நான் குழந்தை. எனக்கு நீங்கள் குழந்தை என்று தேற்றினபோது, குருக்களுக்குப் புத்தி தெளிந்தது. ஆனால், இருந்த இடத்தில் தொடரப் பிடிக்கவில்லை. அன்று தென்னாட்டை உதறி வந்ததுதான், இங்கு வந்து. நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. 

இந்தக் கோவில் பெரிசு ஒழிய, ரட்சணையும் போஷணை யும் போதாது. இன்னமும்தான். வந்த புதிதில், முதன் முதலாக அம்பாளை ஆள் உயரத்துக்கு, கிழிசல் தோம்பும் பாவாடையில் கண்டதும் வயிறு ஒட்டிக்கொண்டது. இரண்டு கால பூஜை என்று பேர். நாட்டாமைக்காரிட மிருந்து தினம் இரண்டுபடி அரிசி. அதுதான் சாமி நைவேத்யத்துக்கும் அவர் சம்பளத்துக்கும். 

தெய்வத்தின் தீனநிலை ஜம்பு குருக்களுக்குப் பலத்தைத் தந்தது. அல்லது அவருக்கே சமயத்துக்கு முகராசி வந்ததா? பார்க்கவேண்டிய இடங்களில், பார்க்கவேண்டியவர்களைப் பார்த்தார். கெஞ்சினார். அதட்டினார். கொஞ்சினார். முயற்சி ஓரளவுக்குத் திருவினை கண்டது. ஓரளவுக்குத்தான் அம்பாளுக்கு உடுக்கை மாற்ற முடிந்தது! 

“கமலாம்பிகே! என் குழந்தே!” 

ஆம், குழந்தைதான். மதமதவெனப் பதினாறு வயதுக் குழந்தை. வளர்த்திக்குக் கேட்பானேன்? தினே தினே எத்தனை நீராட்டல், எத்தனையெத்தனை ஸஹஸ்ரநாமங் கள் லக்ஷக்கணக்கில் சேர்ந்து அர்ச்சனையின் ஊட்டம்! சில சமயங்களில் தொங்கும் அகலில் சுடரின் நிழலாட்டத்தில் கல் ஓவியம் கண் திறந்தபடி சிரிப்பில் முன் பற்கள் இரண்டு லேசாய்த் தெரிவதுபோலும் – பரபரத்து நெருங்கி வந்து உற்றுப் பார்ப்பார். கல்லுக்கு அத்தனை நெகிழ்ச்சி ஸ்தபதி யின் வெறும் கைத்திறன் மட்டுமல்ல, ஸ்வயார்ப்பணம். சிற்பி யாரோ? அவன் பேரும் அடையாளமும் தெரியாமல் இருப்ப தால்தான் அவள் அநாதியாய் அத்தனை ஸௌந்தர்ய வதியாய் விளங்குகிறாள். 

கமலாம்பிகை பற்றி அகிலாவுக்கு குருக்களின் படபடப்பு உண்டோ? யார் கண்டது? வெளியில் தெரியவில்லை. சுபாவத்திலேயே அவள் கொஞ்சம் கெட்டி. வளவளவென் றிருக்க மாட்டாள். சற்று விரக்தியானவள்கூட, கோவிலில், தேவி வழிபாடில் தன் கணவனின் உற்சாக ஈடுபாடுடன் அவள் இழையாவிட்டாலும் அவளுக்கும் பக்தி உண்டு- ஆசாரம் உண்டு. 

குருக்கள் தூக்கத்தின் மெத்தான ஆலிங்கனத்தில் புரண்டு படுத்தார் செருகிய இமைகளின் கீற்றில் எட்ட ஒரு நீலப்பொறி தெரிந்தது. அது கிட்டக் கிட்ட நெருங்கு கையிலேயே பெரிதாகிக்கொண்டே வந்து, அந்த ராக்ஷஸச் சுடரின் தண்ணொளி கண் கூசிற்று. கண்ணைக் கசக்கிக் கொண்டு விழித்தபோது பொலபொலெனப் புலரும் வேளை, திண்ணையில் அவர் பக்கத்தில் வெகு நெருக்கமாய், அவர் மேல் இடித்துக்கொண்டு ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது. பதறி எழுந்தார். 

“நான்தான் அப்பா!” குரலில் ஆண் கார்வை. அவர் தோளைத் தொட்டாள். சிரித்தாள். ‘ஏன் பயப்படறேள்?’ பாவாடைத் தாவணியில் மதமதவெனப் பதினாறு. 

குருக்களுக்கு முகத்தின் அங்கங்கள் துடித்தன. வாயுள் நாக்குத் தடித்தது. இழுத்து விடுமோ? “நீயா?” 

“ஏன், நானாயிருக்கப்படாதா?” 

கைகள் கூப்பிக்கொண்டன. 

“ஜகன்மாதா, நீ என்னை அப்பா என்று அழைக்கும் விபரீதம் என்ன? அபராதம் ஏதேனும் நேர்ந்துடுத்தா? மன்னிச்சுடு தாயே, மன்னிச்சுடு”. கண்கள் துளும்பின. 

“உம் – என்ன உளறல்? ஆசைப்பட்டு வந்திருக்கேன்!”

அவர் பார்வை அவரை அறியாமலே கர்ப்பக்ருஹத்துள் சென்றது. 

“அங்கே என்ன இருக்கு, கல்தான்!” கைகொட்டிச் சிரித்தாள். “நான் இங்கேன்னா இருக்கேன், அப்பா நீங்கள் வளர்த்த நான். அப்பா. நீங்கதான் சொல்லணும். மனுஷாள் என்னைக் கல்லில் பார்க்கத் தயாராயிருக்காள். ஆனால் உயிரில் பார்க்க ஏன் பயப்படறாள்? அவர்களுக்கே இஷ்டமில்லையா?” – அவள் கண்கள் பளபளத்தன். கண்ணீரிலா? 

“தேவி, என்னை – எங்களை மன்னிச்சுடு” 

“ஸப்!” கூம்பலில் உறைந்துபோன அவர் கைகளைப் பிரித்துவிட்டாள். அவளுடைய உடலின் உற்ற கறுப்பில் உள்ளங்கைகள் செந்தாமரை. வெள்ளை விழியோரங்களில் செந்நரம்புக் கொடி. உதடுகள் வெற்றிலைச் சிவப்பு. புருவ நடுவில் குங்குமம். நெற்றியில் சூர்யோதயம். 

“அப்பா, நான் பிறந்த வீட்டுக்கு வர ஆசைப்படறேன். என்ன முழிக்கறேள்? நான் உங்கள் வீட்டில் வந்து இருக்கப் போறேன். ஒருநாள்தான்” – சுட்டுவிரலைக் காட்டினாள். 

வாயடைத்துப் போனார். உள்ளே சந்தோஷம், பயம் இரண்டும் சேர்ந்த குழப்பம். 

“அப்பா, பொண்ணாப் பிறந்தால் பிறந்தாத்து ஆசை துப்புற விட்டுடாது”. 

”பாண்டிய ராஜகுமாரி, நீ என்னை கேலி செய்கிறாய்.” 

“கமலாம்பிகே குழந்தேன்னு மூச்சுக்கு மூச்சு கூப்பிட்டது யார்?” 

“அம்மா, என்னைக் கேட்கணுமா, என்னைக் கேட்காமலே என் வீட்டுக்கு நீ வந்து உட்கார முடியாதா?” 

”வாய்ச்சொல் கௌரவம்னு ஒண்ணு இருக்கேப்பா! தவிர, நான் வெகுளி. என் கணவரின் எல்லையற்ற பொறு மையும் உங்களைப் போலோரின் எல்லையற்ற அன்பும்தான் நான் இந்த அளவுக்கு என் இஷ்டத்துக்கு வளரக் காரணம். பொறுமைக் கடல்னா அவர்தான். எனக்கு அது முற்றிலும் பொருந்தாது. நான் வெகுளி, இப்பவும் அவரைக் கேளாமல் தான் வந்திருக்கேன். அவர் தடுக்கவில்லை. உங்கள் விஷயத்தில் தடுக்கமாட்டார். என் குழந்தைகளிடம் எப்போது தான், எப்படித்தான் நான் இருக்கிறது அப்பா?” 

அவள் குரல் நடுங்கிற்று, “அப்பா, நீங்கள் எல்லோரும் தெய்வத்தை உங்கள் தன்மையில்தான் படைத்திருக்கிறீர் கள். எனக்கும் ஏக்கம் உண்டு. கண்ணீர் உண்டு. அவருக்கு அதெல்லாம் இல்லை. அவருக்கு உருவமே இல்லை”. 

சிரித்தாள். “வாங்கோ போகலாம்”. 


குனிந்த தலை நிமிராமல், அகிலா கோலத்தில் முனைந் திருந்தாள். பெரிய தாமரை. அடுக்கடுக்கான இதழ்களின் சிக்கலான கோடுகள். விரல்களின் நுனியிலிருந்து கோல் மாவு, தீர்மானமான வளைவுகளில் சொரிந்தது. 

இந்த வயதிலும் அகிலா நிறம் குன்றவில்லை. அழகா யிருந்தாள், அது. கண்ணைப் பறிக்கும் ஒரு தினுசான வெளிறிச் சிவப்பு வயதுக்கு மயிர் நரைக்கவில்லை. வங்கிக் கூந்தல், இன்று, எண்ணெய்ஸ்நானத்தில் சற்று புஸு புஸு. தாடைகளில். கழுத்தில் இப்பத்தான் சுருக்கங்கள் தேரிய ஆரம்பித்திருக்கின்றன. பட்டுப்புடவையிலிருந்தாள். வெள்ளிக்கிழமை அல்லவா! 

கோலத்தின் வெளி ஓரங்களைச் சரிபண்ணிவிட்டு பார்வை திரும்புகையில் பூவின் மையத்தில் இரண்டு பாதங்கள் நின்றிருக்கக் கண்டாள். கண்கள் மெதுவாய் மேனோக்க… 

யாரிந்தப் பொண்ணு? எப்படிக் கோலத்துள் வந்தாள்?

“என் பாதங்களுக்கு அளவெடுத்த மாதிரியே இருக்கே அம்மா!” 

அகிலாவின் விழிகள் வட்டங்களாயின. எனக்கு வள் மேல் ஏன் கோவம் வரல்லே? வந்தவளின் கண்கள் அவள் மேல் குனிந்து சிரிக்கையில் அகிலாவுக்கு என்னவோ பண்ணிற்று (வயிறு திறந்துகொண்ட மாதிரி என்று சொல்ல லாமா?) கோலத்தில் சில கோடுகள் அழிந்திருந்தன. 

அருகே கைகட்டி நின்ற குருக்கள்மேல் அவள் பார்வை திரும்பியது. 

“அகிலா, இவள் நம்மோடு இருக்க வந்திருக்காள்”. 

அகிலாவின் புருவங்கள் உயர்ந்தன. உடனே சமாதானப் படுத்துகிறமாதிரி, அவர், “இவள் கணவன் வீட்டிலிருந்து வந்திருக்காள்”. 

“கோவிச்சுண்டா?” 

குருக்கள் முகம் மாறிற்று. ஓ, இப்படியும் ஒரு கோணம் இருக்கா? 

அவள் சிரித்தாள். “சுமாச்சுமா வந்திருக்கேன். ராத்ரி போயிடுவேன்”. 

“ராத்ரி என்ன கணக்கு?” 

“சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம்வரை ஒரு பகலாகு மோன்னோ?” 

அகிலாவுக்குப் புரியவில்லை. 

”உள்ளே வா கண்ணு – இல்லே சத்தேயிரு, கோலத்தில் நிக்கறே ஆரத்தி கரைச்சு கொண்டு வரேன்,” 

அவள் தோளைத் தொட்டபடி, வாசற்படி தாண்டி யதும், அவளுக்குக் கழுத்திலிருந்து கால்வரை – “ஜிவ்” – உயிர் வெளியே குதிக்கும்போல் பரபரப்பு, ஆனந்தம்,பயம். கையை மார்க்குலையில் அழுத்திக்கொண்டாள். 

“ஏண்டிம்மா குழந்தே, மாப்பிள்ளையைக் கூட அழைச்சுண்டு வரப்படாதோ?” 

“அவர் மாப்பிள்ளையாச்சேம்மா. அவர் எப்பவும் மாப்பிள்ளை முறுக்குத்தான், எனக்குப் பிறந்தாத்து எண்ணம் வந்துடுத்து, வந்துட்டேன்.” 

“குழந்தை, நீ உறவு கொண்டாடச்சே எனக்கு உன்னைப் பெத்த சந்தோஷமே வரது.” 

“ஏம்மா, பெத்தால்தான் உறவா? பாவனைதான் உறவு. ரெண்டுபேரும் சேர்ந்து நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்”. 

“பண்ணடி கண்ணே, மகராஜியாயிரு” 

அவர் கண்கள் பயத்தில் சுழன்றன. தடுக்க முயன்ற கை களைச் சிரமப்பட்டு, பின்னுக்கு இழுத்துக்கொண்டார். 

நமஸ்கரிப்பில் குனிந்த அவள் முகம் நிமிர்கையில், கூடத்து ஜன்னல் வழி வெயில் பட்டு, முகமே சிவப்பாய் ஏற்றிக்கொண்டது. 

ஜ்வாலாமுகி. 

அகிலா கண்களைக் கசக்கிக்கொண்டாள். ஊஹும் ஒன்றுமில்லையே. அந்தப் பெண் எழுந்து நின்றுகொண்டிருந்தாள்: “நீங்கள் இப்படி வாழ்த்தி வாழ்த்தித்தான் நான் வயசுக்குமீறிக் குதிரையா வளர்ந்துட்டேன். ஹும்” – மூக்கைச் சுருக்கிக்கொண்டாள். “‘கம்’முனு வாசனை! அப்பா பசிக்குது.” 

அடுப்பு மேடைமீது இறக்கி வைத்திருந்த வெண்கலப் பானையின்மேல் தட்டை எடுத்தவுடன். 

“ஆ, சக்கரைப் பொங்கல்! எனக்கு உசிராச்சே! அம்மா, அத்தனையும் எனக்குத்தானே?” 

“ஆமாண்டி செல்லம், உனக்கேதான். வெள்ளிக்கிழமை, பெளர்ணமியாச்சே! நைவேத்யத்துக்குப் பொங்கல் வெச்சேன்.அப்பா ஸ்நானம் பண்ணிண்டிருக்கார். நிமிஷ மாக் கோவில் பூஜை பண்ணிட்டு வந்துடுவா ஆ- என்னடி பண்ணறே?” 

அவள் பொரிக்கப் பொரிக்கப் பொங்கலை விரலால் வழித்து வாயில் கப்பி, விரல்களைச் சப்பினாள். 

‘திக்’கென்றது. அகிலா குருக்களைத் தேடிச் சென்றாள். அவர் கிணற்றடியில் ஸந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டிருந்தார். 

“யார் இந்தப் பெண்? இவளை எங்கே பிடிச்சுண்டு வந்தேள்?” 

“என்ன ஆச்சு?” 

“நைவேத்யத்தை ருசி பார்த்து, எச்சில் பண்ணி வழிச்சு முழுங்கிண்டிருக்கா.” 

“ஓ!” குருக்களுக்கு ப்ரமை பிடித்தாற்போல் ஸ்தம்பித்து, உடனே சிரித்துவிட்டார். 

“இதிலே என்ன சிரிக்கக் கண்டுட்டேள்?” 

குருக்கள் சமாளித்துக்கொண்டு “இதோ பார் அகிலா. பொறுத்துக்கோ. இன்னி சாயங்காலம் வரைக்கும்தான்”. 

“இதென்ன ரெண்டுபேரும் சாயந்திரத்துக்குக் கண்டம் வெச்சிப் பேசறேள்! அவளை வெள்ளிக்கிழமை அதுவுமா யார் போகச் சொல்றா?” 

“அகிலா, அவள் நம் இஷ்டத்திலில்லை. நாம்தான் அவள் இஷ்டத்திலிருக்கிறோம்”. 

“இதென்ன பாஷை, என்ன புதிர்?” 

“சாயந்தரம் வரைக்கும்தான்” – கெஞ்சினார். 

ஒன்றும் புரியவில்லை. பொட்டைத் தேய்த்துக்கொண்டு அகிலா உள்ளே சென்றாள். கூடவே பிடரி குறுகுறுத்தது. பயம்? 


அவள் டப்பாக்களைத் திறந்து, உள் பார்த்து மூடிக் கொண்டிருந்தாள். 

“என்னம்மா தேடறே?” 

“பசிக்கறதம்மா” 

அகிலாவின் பார்வை அடுப்பு மேடைமேல் சென்று திக்கிட்டது. 

“பெண்ணே, உன் பேர் என்ன?” 

“கமலா” 

“சரி, வா கமலா, இந்த மணைமேல் உட்கார். வெள்ளிக் கிழமை ஒரு கை எண்ணெய் தலையில் வைக்கறேன். சற்றுப் பொறு, சமையலாயிடும்”. 

“ஆமாம், எத்தனை நாள் வேணுமானாலும் பட்டினி கிடப்பேன். பசிக்கணும்னு நெனச்சேன்னா தாங்கவே முடியாது. என் பசி ஒருத்தி பசி மட்டுமல்ல. எத்தனையோ பசிகள்”. 

என்ன உளறுகிறாள்? வெண்கலப் பானை காவி இன்னுமா பசி? அதென்ன பசி? ஆச்சரியம், கூடவே பயம். 

கூந்தலின் அடர்த்திக்கும் நீளத்துக்கும் எண்ணெய் பற்றவில்லை. எண்ணெய்க் காப்பில் கருங்காலி சிற்பம் போலப் பளபளத்தாள். 

சுவரில் மாட்டியிருந்த படத்தெதிரே – அவள் நின்றாள். 

அகிலாவின் பட்டுப் புடவையில், கோடாலி முடிச்சிட்டுக் காடாய்ப் படர்ந்த கூந்தல், நெற்றியில் குழைத்துப் பட்டையாயிட்ட விபூதி (அவள் வீட்டுப் பழக்கமாம்) நடுவில் குங்குமம். அசைவற்ற சுடராய்த் தியானத்தில் நின்றாள். 

குத்துவிளக்குச் சுடர் அவளைக் கண்டு அஞ்சினாற் போல் பின் வாங்கி முதுகு நெளிந்து ஆதரவு கண்டா போல நிமிர்ந்து பிதுங்கிற்று. உதடுகள் செதுக்கலில் அசலன மாய், மோவாய் நடுவே குழிவு அகிலா அதிசயித்து நின்றாள். அறியாமல் கைகள் கூப்பிக்கொண்டன. பார்க்கப் பார்க்க இவளிடம் ஏதேதோ புதுப்புது அழகுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அப்படியே கல்லாகிவிட்டாளா? பயம் வந்துவிட்டது. “கமலா!கமலா!! அவள் தோளைத் தொட்டு அசைத்தாள். 

விழிகள், மெல்லத் திறந்து, அவளை அணைத்தன 

அகிலாவுக்கு நெஞ்சு விம்மிற்று “என்ன அம்மா?” அவள் அவளை அணைத்துக்கொண்டாள். அகிலா பொட்டென் உடைந்து போனாள். விக்கி விக்கி அழுதாள். இத்தனை நாள். தனக்குத் தானே ஒப்புக் கொள்ளாமல், தன்னுள் சிறை கிடந்த தாய்மையின் தவிப்போ? குருக்கள் இல்லை. கோவிலுக்குப் போயிருந்தார். 

அவர் கோவிலிலிருந்து திரும்பியபோது, அவர் முகம் ஒரு தினுசாக மஞ்சள் பூத்து வெளிறிட்டிருந்தது. 

‘என்ன ஆச்சு?’ – அகிலா பதறிப் போனாள். 

அவர் உதடுகள் நடுங்கின. வாய், ஏதோ சொல்ல முயலும் முயற்சியில் தோற்றன. 

அவர் கண்கள் அவளை நாடின. அகிலாவின் கேள்விக்குப் பதில் அங்கேதான்…கமலா பொட்டெனச் சிரித்தாள். அவள் விழிகள் கூத்தாடின. 

“ஒண்ணுமில்லேம்மா, அப்பா அனாவசியமா மிரண்டு போயிருக்கார். காரணம் இங்கிருக்க, எங்கேயோ தேடினால்? சரி சரி, ரொம்பப் பசிக்கிறது. அப்பா, சோத்து மூட்டையை அவிழுங்களேன். அம்மா, எனக்கு ஊட்டிவிடறியா?” சிரித்தாள். “பருப்புஞ் சாதத்துலே நெய்யும் சர்க்கரையும் கலந்து. இது போதாது, நிறையப் பிசை. எல்லாருக்கும் சேர்த்துப் பிசை. ஒரே பாத்திரத்தில்.” 

சிரித்தாள். பற்களில் நக்ஷத்ரங்கள் மின்னின அகிலா கண்ணைக் கசக்கிக்கொண்டாள். ஒண்ணுமில்லியே! 


அவள் வாயில் கவளத்தைப் போட்டதும் அகிலா ஒரு அசாத்ய பரவசத்தில் ஆழ்ந்தாள். திடீரெனச் சுரப்பில் தன் ரவிக்கை நனைந்ததை உணர்ந்தாள். அவளுக்கு அது ஆச்சர்யமில்லை. ஊட்டக் கேட்டது ஆச்சர்யம் இல்லை. எதுவுமே ஆச்சர்யமில்லை. ஒரே அன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போனாள். 

“”இப்ப நான் உங்களுக்கு ஊட்டறேன், அ…ஆ… அப்பா, வாயைத் திறவுங்கோ”. 

ஆ…மதுரமே! ஒரே கலம். எச்சில் தீண்டல், ஆசாரம், பூஜை, புனஸ்காரம் என்ன வேண்டிக்கிடக்கு? எல்லாமே ஒரே அன்பு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயின. 

முதன் முத்தத்தின் எச்சிலில் ஆரம்பித்து 
உயிர் முத்து வைத்த வித்திலிருந்து கடைசியில்
கடைவாயில் வழியும் எச்சில்வரை 
தலைமுறை தலைமுறை எச்சில்
இல்லாவிடில் 
இப்புவனமே ஏது? 

வந்தவள் சொன்னாளா? நெஞ்சில் தானே தோன்றியதா? ஒரே ஆனந்த மூர்ச்சையில் எந்நேரம் மூழ்கியிருந்தனரோ? 

தோட்டத்தில் கிணற்றடியில் பலா மரத்தில்கூட்டில், இரையைத் தாங்கிவரும் தாயைக் கண்டு குஞ்சுகள் ஆர்ப்பரிக்கின்றன. 

தூரக் காட்டில் தேன் குருவி பகு சொகுசில் பூவுக்குப் பூ அந்தரத்தில் நின்று தேனை உறிஞ்சுகிறது. 

மேகங்களற்ற நிர்ச்சலமான நீலத்தில் வெள்ளித் தாம்பாளம் கண் கூச தகதகக்கிறது. இல்லை, இது அவள் அபய கரத்தில் ஜ்வலிக்கும் மோதிரத்தின் முகப்பு. 

நண்பகல் சொக்கல். 

நேரம் முதிர முதிர. அவள் வதங்கலுற்றாள். வேர் கழன்ற இலைபோல் கொஞ்சங் கொஞ்சமாய்த் துவண்டு…

“என்ன குழந்தை ஒருமாதிரி ஆயிட்டே, உடம்பு சரியில்லையா?” 

“அவர் நினைப்பு வந்துவிட்டதம்மா..” 

“என்ன அதுக்குள்ளேயுமா? சாயந்தரம்தான் போப் போவதாச் சொல்லிண்டிருக்கே! வெள்ளிக்கிழமையு மதுவுமா.” 

“அவர் நினைப்பு வந்துட்டதம்மா. நினைப்பு வந்தால் விடாதம்மா. நொடியும் யுகம் அம்மா.” 

“நீ என்ன சொல்றேன்னு விளங்கல்லியே!” 

“புரியறதுக்கு ஒண்ணுமில்லேம்மா. அவர் பொறுமை கடலினும் பெரிது. கோபம் கடல் பற்றி எரியும்போல். நான் போகணும்.” 

அகிலாவுக்குப் பயத்தில் உடல் சிலிர்த்தது. 

“நீ வந்த அதிசயம் என்ன, போற சுருக்கு என்ன? ரெண்டுமே எனக்கு அப்பாற்பட்டது. சரி வா, பின்னி விடறேன்.” இதுமாதிரி சடையைப் பின்ன எத்தனையோ கொடுத்து வெச்சிருக்கணும். இது கூந்தலா, காட்டாறா. பின்னப் பின்னச் சோம்பிக்கொண்டே, தடுமனாய்ப் பாம்பு நீண்டது. 

“கமலா, என் பட்டுப் புடவையிலேயே அவரிடம் போ, என் நினைவாயிருக்கட்டும்.’ 

“ஐயையோ அதெல்லாம் வேண்டாம். எப்படி வந்தேனோ அப்படித்தான் போகணும். அவர் அப்படி.” 

இப்படியும் ஒரு புருஷன். அவன்மேல் இவளுக்கு இத்தனை மோகம்! ஒண்ணும் புரியல்லே. “சரி வா, போகலாம்”. 

“நீங்கள் வேண்டாம். எப்படிப் போனேனோ அப்படிப் போயிடறேன் அப்பா வேணும்னா கோவில்வரை வரட்டும். அவர் சுவாமி சன்னதியில் இருப்பார்.” 

அகிலா அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றாள். தானே தன்னை விட்டுப்போவது போலிருந்தது 

அப்பாவும் மகளும் இடைவழியில் பேசவில்லை. குருக்கள் நெஞ்சில் ஏதேதோ குழுமிற்று. சொல்லவில்லை. 

த்வஜஸ்தம்பத்தண்டை அவரைக் கையமர்த்தினாள்.

“போயிட்டு வரேனப்பா…” 

உள் ப்ரகாரத்துள் ஆவலுடன் ஓடினாள். 

“அப்பா! அப்பா!” அலறல் கேட்டு குருக்கள் உள்ளே ஓடினார். 

“அப்பா, அப்பா! அவரைக் காணோமே!” – இரண்டு கைகளையும் விரித்தவண்ணம் அவள் கதறுகையில், பிரமிக்கத்தக்க அழகில் பொலிந்தாள். 

ஐயர் எட்டிப் பார்த்தார். கர்ப்பக்ருஹத்தில் லிங்கத்தைக் காணோம். 

“ஆண்டவா, ஆண்டவா!” கதறிக்கொண்டே வெளியே ஓடினாள். குருக்களும் கத்திக்கொண்டே தொடர்ந்தார். “இங்கே லிங்கம் இல்லை. அம்மன் சன்னதியில், மத்யானத்தி லிருந்தே மூலவர் இல்லை. ஐயோ என்ன செய்வேன்!” 

“என்ன செய்வேன்! என்ன செய்வேன்!” அழுது கொண்டே, தன்னை அழுத்திய துக்கத்தைத் திமிறிக் கொண்டு குருக்கள் விழித்தெழுந்தார். உடல் பூரா வேர்வை ஸ்நானம். கண்ணைக் கசக்கிக்கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். கனவின் பீதி தெளியவில்லை. இருக்கிறாளா? இருந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தார். 

கர்ப்பக்ருஹத்தில், சந்து வழி, சாய்வாட்டில், அவள் முகத்தில் நிலாவின் வியாபகத்தில் சிரித்துக் கொணடிருந்தாள். 

– இந்தியா டுடே

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *