அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 14,831 
 
 

“ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்…” அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது..

‘யாரா இருக்கும்’.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன்.

“ஹலோ.. நான் சேது பேசறேன்”, என்ற குரலைக் கேட்டவருக்கு தூக்கி வாரிப்போட்டது.

“டே.. எப்படிடா இருக்க?.. எங்க இருக்க..? எங்களையெல்லாம் மறந்துட்டியா? ஏன்டா.. ஊருக்கே வரமாட்டேங்கறே?”, என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனார்.

ஆமாம்… எத்தனை வருஷமாச்சு… ஏழு வருடங்களாக ஒரு பேச்சு மூச்சில்ல..ஆர்மில சேர்ந்திட்டதா காத்துவாக்குல ஒரு சேதி வந்தது.. அவ்வளவு தான்..அதனால் தான் இந்த பரிதவிப்பு… இந்த அங்கலாய்ப்பு….

“அப்பா.. நான் நல்லா இருக்கேன்.. இப்ப காஷ்மீர்ல இருக்கேன்.. சீக்கிரமா ஊருக்கு வரேன்… ஆனா.. அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன்… நம்ம குடும்பத்துல வந்த சண்டையில எல்லோருமே பிரிஞ்சு இருக்கறதா நான் கேள்விப்பட்டேன். நான் வீட்டுக்கு வரணும்னா.. எல்லாரும் ஒன்னு சேரணும்.. நான் வரும்போது, எல்லாரும் நம்ம வீட்ல இருக்கணும்.. அதுக்கு சம்மதம்னா அடுத்த செவ்வாக்கெழம நான் வீட்ல இருப்பேன்”

“டே… சண்ட என்னடா சண்ட.. இதோ இப்பவே எல்லார்ட்டையும் பேசிடறேன்…உன்னப்பார்க்கத்தாண்டா இத்தன நாளா தவிச்சுக்கிட்டு இருந்தோம்..”

“சரிப்பா அப்படீனா.. சூப்பர்.. செவ்வாய்கிழமை பார்க்கலாம்”, என்றவாறு சொல்லி இவன் போனை கட் பண்ணவும், உடனடியாக இவனை வரச்சொல்லி வாக்கி டாக்கியில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

அந்த செவ்வாயும் வந்தது. அவனது வருகை எதிர்பார்த்து முழுக்குடும்பமும் சண்டை மறந்து சமாதானமாய் காத்திருந்தது.

அப்போது, அந்த ஊருக்குள் ஒரு ராணுவ வண்டி நுழைந்தது.

அது முகவரி கேட்டவாறு வீட்டின் அருகில் வர வர, புன்னகைத்து நின்றிருந்த முகங்கள் ஒவ்வொன்றும் கண்ணீரை உதிர்க்க ஆரம்பித்தது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது உடலையும், உடைமைகளையும் குடும்பத்திடம் கண்ணீருடன் ஒப்படைத்தார்கள் ராணுவ வீரர்கள்..

ஆம்… எல்லையில் நடந்த ஒரு பயங்கரத்தாக்குதலில் தன் இன்னுயிரை நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தான் சேது….

அவனால் ஒற்றுமையான வீடு, இப்போது சேர்ந்து அழுதுகொண்டிருந்தது.

– 10.05.2020 – திருச்சி தினமலர் வார‌மலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *