அரட்டைக் கச்சேரி




பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள். தீர்வு காணவா பிரச்னைகளைப் பிறரிடம் கூறுகிறோம்? ஒரு விஷயத்தையே பலரிடமும் பலமுறை பகிர்ந்துகொண்டால் ஏதோ ஆறுதல். அவ்வளவுதான்.

பெண்களின் இந்த மனோபாவம்கூட ஆண்களுக்குப் புரிவதில்லை. மனைவியோ, பிற பெண்களோ அரைகுறையாக எதையாவது கூற ஆரம்பித்த உடனேயே அதை எப்படிச் சமாளிப்பது என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த இடைநிலைப் பள்ளியில் நாற்பது பேரில் இரண்டே இரண்டு ஆண்கள்தாம். அவர்களைப்பற்றி நமக்கென்ன! விடுங்கள்.
ஆசிரியர்கள் அறையில் பெண்களின் குமுறல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அங்கிருந்த சுவர்களுக்கு வாயிருந்தால், கதறி அழும்.
பிறரது வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள எல்லாப் ஆசிரியைகளும் ஆர்வம் காட்டினார்கள். நாளைக்கே அவர்களுடைய பிரச்னைகளுக்கு அனுதாபம் காட்ட யாராவது வேண்டாமா? பத்து பேராவது வகுப்பிற்குப் போகாத நேரமெல்லாம் வாய் ஓயாது பேசினார்கள். அனுதினமும்.
திங்கட்கிழமை
“நீ ஒண்ணும் எனக்கு புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!” கோகிலாவின் குரல் கீச்சென்று ஒலித்தது. அவளுடைய மகள் அப்படித்தான் இரைந்திருப்பாளோ, என்னவோ!
சிறுவயது முதல் பாட்டி வீட்டில் அருமை பெருமையாக வளர்ந்திருந்தாலும், பெற்றவள் தன்னைக் கைகழுவி விட்டதாகத்தான் தாரா நினைத்தாள். அந்த வருத்தம்தான் கோபமாக வெளிப்பட்டது.
இடைநிலைப் பள்ளிக்கு வந்தபின், பெற்றோரிடம் திரும்ப வந்தது ஏதோ தண்டனைபோல் இருந்தது அவளுக்கு. தான் எது செய்தாலும் பாராட்டிய பாட்டி, தாத்தா எங்கே, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் அம்மா எங்கே!
`நீ ஒண்ணும் எனக்கு புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!’ என்று அழுகைக்குரலில் கத்தத்தான் அவளால் முடிந்தது.
கோகிலா மகளைப்பற்றிய அதே கதையை சக ஆசிரியைகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். அவர்களும் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டார்கள்.
“பாட்டி-தாத்தாகிட்ட வளர்ந்திருந்தா, அருமையாக இருந்திருப்பாங்க,” பொதுவாகக் கூறினாள் பூமா. “என் மகனுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லே. வேலைக்காரி போட்டிருந்தேன் பிறந்ததிலிருந்தே அவனை வளர்க்க!”
“ரொம்ப அடிச்சாளா?” கம்மிய குரலில் யாரோ கேட்டார்கள்.
அவள் பதில் சொல்வதற்குள் இருவர் குறுக்கிட்டுப் பேசினார்கள்.
“பிள்ளை பெத்து லீவு முடிஞ்சதும் நாம்ப வேலைக்கு வந்துடணும். வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க சொந்தக்காரங்க இல்லாட்டி என்ன செய்யறது?”
“நாப்கின் மாத்தற வேலையை அடிக்கடி வைக்கிறதுன்னு ஒரு சின்னக் குழந்தையைக் கொன்னுட்டாளாமே ஒரு ராட்சசி! பேப்பரில பாத்தீங்கல்லே?”
“கடவுள் புண்ணியத்திலே எங்க வீட்டிலே அப்படி எதுவும் நடக்கலே,” என்ற பூமாவின் குரலில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஒலிக்கவில்லை. “குழந்தையை அடித்தோ, திட்டியோ செஞ்சா வேலை போயிடும்னு பயம் அவளுக்கு. வீட்டுக்குள்ளே காமெரா போட்டிருந்தோமா! அதனால அவன் பெரியவன் ஆனதும்கூட என்ன தப்பு செஞ்சாலும் கண்டுக்கமாட்டா”.
சிறிது மௌனம்.
வேலைக்காரிகளிடம் வளர்ந்த பிள்ளைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது அவர்கள் உத்தியோகத்தில் அறிந்ததுதான். இப்போது எல்லா மாணவ மாணவிகளும் அதனால்தானே யாருக்கும் அடங்காமல் இருந்தார்கள்!
“அன்னிக்கு க்ளினிக்கில பாத்தேன். ஒரு ஆறு வயசுப் பையன் ஹாண்ட்ஃபோனில என்னவோ விளையாடிக்கிட்டு இருந்தானா! அவங்கம்மா அதைப் பிடுங்கப்பாத்தப்போ அவ கையைக் கடிச்சுட்டான்!”
`ஒன் பிள்ளையும் அப்படித்தானோ!’ என்ற ஏளனம் அந்த சமாசாரத்தில் தொக்கி இருந்தது.
சண்டை ஆரம்பமாவதற்குள் மணி அடிக்கவே, அவர்கள் கலைந்தார்கள்.
செவ்வாய்
“தோளெல்லாம் ஒரே வலி!” முனகலுடன் அரட்டைக்கச்சேரி ஆரம்பித்தது.
“என்ன ஆச்சு, லாய்?” அனுதாபத்தைவிட உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமே அக்கேள்வியில் தொக்கி இருந்தது.
முதல் நாள் இரவு, கணவர் குடித்துவிட்டு, வீட்டு வாயிலிலிருந்த சாக்கடையில் விழுந்துவிட, நாலடி ஆழத்துக்குள் இறங்கி அவரைத் தன் தோளில் தாங்கியபடி மாடிவரை தூக்கிப்போனதை விவரித்தாள், தோளைப் பிடித்துவிட்டுக்கொண்டபடி, மிஸஸ்.லாய் என்ற சீன ஆசிரியை.
`நானாக இருந்தால், அந்தக் குடிகாரரை அப்படியே விட்டுத் தொலைத்திருப்பேன்!’ என்று தமக்குள் எழுந்த எண்ணத்தை யாரும் வெளியிடத் துணியவில்லை.
“ஆண்கள் வளர்ந்துவிட்ட சிறுகுழந்தைகள்!” கசந்து வந்தது ஒரு குரல். “என் கணவர் எப்போதும் நண்பர்களுடன் கிளப்பில் குடித்துக்கொண்டு இருப்பார். அபூர்வமாக ஒருநாள் வீட்டில் தங்குவார். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொள்வார், எதையோ எதிர்பார்த்தபடி. அப்போது குழந்தைகள் அவரைக் கண்டுகொள்வதேயில்லை என்று ஆத்திரப்படுவார்”. அவள் அனுபவம் சிரிப்பில் முடிந்தது.
“பசங்களை வெளியில கூட்டிட்டுப்போய், நாலு விஷயத்தைப் பத்திக் கலந்துபேசி – இப்படியெல்லாம் செஞ்சாத்தானே அவங்களுக்கு நம்பளை மதிச்சுப் பேசத் தோணும்!”
“பெண் குழந்தைகள் ரொம்ப மோசம்!” என்றபடி மிஸஸ்.கூ தன் கதையை ஆரம்பித்தாள். “நேத்து ராத்திரி என் மகளை பிரம்பால் அடிச்சேன். ராத்திரி பூராவும் `ஙொய் ஙொய்’னு அழுகை. சரியான நியூசன்ஸ். என் மகன் அப்படி இருந்ததே இல்லே. என்ன அடிச்சாலும் அழமாட்டான். சமர்த்து!”
பதினைந்து வயதான மகனுக்குப் பிறகு, அல்லோபதி, அக்யூபங்க்சர் என்று பல சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த வருடம் பிறந்தது! ஒரே வயதான பச்சைப்பாலகியைப் பிரம்பால் அடிப்பார்களா!
இந்திய ஆசிரியைகள் அதிர்ச்சியுடன் எதுவும் பேசாதிருக்க, அது புரியாது, “பிரம்பால் அடிக்காத குழந்தை ஒழுங்கா வளராது,” என்று தன் வளர்ப்புமுறையைப் பாராட்டிக்கொண்டாள் மிஸஸ்.கூ.
`நாம் நல்ல தாயாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழ, அன்றைய கும்பல் கலைந்தது.
புதன்
“என் பொண்ணுக்கு மூணு வயசாகுது. நேத்து மத்தியானம் படத்துக்குக் கூட்டிப்போறதா இருந்தேன். `மழை வந்துடும். இல்லாட்டி வெயில் காயும். நம்ப காரை டிரைவரோட அனுப்பறேன்,’ அப்படின்னாரு ஹஸ்பண்ட்”. மூச்சு விட்டுக்கொண்டாள் நர்மதா.
எல்லாரும் சுவாரசியமாகக் கேட்டபடி இருந்தார்கள், அவர்கள் முன்னால் வைத்திருந்த நூடுல்ஸ் ஆறியதைப் பொருட்படுத்தாது.
“எப்பவும் காரிலேயே போனா, ஏழைபாழைங்க படற கஷ்டத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது? பஸ்ஸுக்காக வெயில்லே காத்துக்கிட்டு நிக்கறப்போ, `நான் பாவம்!’னு திரும்பத் திரும்பச் சொன்னா. `பாவம் இல்லே!’ன்னு நல்லா திட்டிட்டேன்”.
“நீ ஒரு நல்ல அம்மா!” மிஸஸ் லாய் சிலாகிக்க, அதை ஆமோதித்து, எல்லாரும் தலையாட்டினார்கள் – வயிற்றெரிச்சலை மறைக்க ஒரு சிறு புன்னகையுடன்.
வியாழன்
“நேத்து எனக்கும், ரவிக்கும் ஒரே சண்டை,” ஆரம்பமே சூடு பிடித்தது. கணவன்-மனைவி சண்டை பூசலென்றாலே சுவாரசியம்தான்.
“எதுக்கு?”
“பின்னே என்ன? சமையல், வீட்டு வேலை, பசங்களுக்குப் பாடம் சொல்லிக்குடுக்கறது எல்லாம் என் தலையிலதான். புதன்கிழமை அவரோட முறை — குப்பையை வெளியே கொட்ட. அந்த ஒரு வேலைகூடச் செய்யாம டி.வி பாத்துக்கிட்டு இருந்தா? வந்த கோபத்திலே நல்லா கத்திட்டேன்”.
“திரும்பக் கத்தினாரா?”
“அதான் இல்லே. `இஸ்மயில் சொன்னான், இந்தப் பெண்களால எப்பவும் தொல்லைதான்’ அப்படின்னார், என்னை மட்டம் தட்டறதா நினைச்சுக்கிட்டு. `ரெண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’னு பதிலடி குடுத்தேன்!”
அப்போது எழுந்த சிரிப்போசையில் சுவர்கள் நிமிர்ந்தன. `நாம்ப இப்படி பேசறமாதிரி, ஆம்பளைங்களும் நம்பளைப்பத்திப் பேசுவாங்களா?’ என்று அப்பெண்கள் மனதில் எழுந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.