அம்மா…! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 18,137 
 
 

செய்தியைக் கேள்விப் பட்டதுமே சித்ராவிற்குக் கண் மண் தெரியாத ஆத்திரம். புறப்பட்டு வந்து ஆளை அந்த கோலத்தில் பார்த்ததும் அது இன்னும் அதிகரித்தது.

வீட்டிற்குள் நுழைந்த அடுத்த விநாடி, ”அம்மா !” அதிரடியாய்க் கத்தினாள்.

”என்ன ? ” அலமேலு அமைதியாய்த் திரும்பினாள்.

”உனக்கு இது வெட்கமாய் இல்லே ? ” சீறினாள்.

”இல்லே.”

”அப்பா செத்து முழுசாய் மூணு வருசம் ஆகலை. இந்த கோலம். நாக்கைப் படுங்கிக்கிட்டு சாகலாம் போலிருக்கு.”

”சாவு !”

”அம்மா !”

”நிசம்தான்டி சொல்றேன். புருசன் செத்ததும் பெத்தவளைப் பொண்ணு, புள்ளைக் காப்பாத்தலை. அதுக்குப் பதிலாய் ஆண்டவன் நல்ல உடம்பை கொடுத்திருக்கான் பொழைக்கிறேன்.”

”அம்மா ! ”

”சுசூ! சும்மா அம்மா நொம்மான்னு குதிக்காதே ! புருசன் செத்து ஒரு மாசம் கழிச்சு பெத்தப் பொண்ணு காப்பாத்தும்ன்னு உன் வீட்டுக்கு வந்து நாலு நாள் தங்கி இருந்தேன். அந்த நாலு நாள்ல நாப்பதாயிரம் கத்துக்கிட்டேன். நான் பாரமாகிட்டேன்னு புருசன் பொண்டாட்டி முகம் மட்டுமில்லாம நடப்பும் சரி இல்லே. அப்படியேத்தான் மகன் மருமகளும். அப்போதான் இருக்கிற உடலை வைச்சு வாழலாம் உழைக்கலாம்ன்னு யோசனை. தப்பா நடக்கலை. வாடகைத் தாயாய் ஆகும் வாய்ப்பு வந்துது. சுமக்கிறேன், வாழறேன்.! உங்களுக்கு அவமானமாய் இருந்தா…. பெத்தவங்களுக்கு சோறு போட முடியலை, காப்பாத்த வழி இல்லாம கடமைக்கு காப்பகத்துல விடறோம்ன்னு நெனைச்சி சாவுங்க.”

சூடாக திருப்பி அடித்தாள்.

அடியின் அதிர்ச்சி… சித்ரா அப்படியே சிலையாக நின்றாள். தலை தானாக கவிழ….”அ…அம்மா! அம்மா !” விம்மினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *