அமெரிக்காவில் கிச்சா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 142 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23

19

இந்த மில்லினியத்தில் சிவபெருமான் மீண்டும் ஒரு தபா திருவிளையாடல், அதுவும் அமெரிக்காவில் நிகழ்த்தும் பட்சத்தில், பாஸ்போர்ட் விசா இல்லாமலேயே திரிலோக சஞ்சாரம் செய்யும் நாரதரைப் பார்த்து ‘நாரதா, என் குழந்தைகள் பிள்ளையார், முருகன் இவ்விருவரில் யார் முதலில் வால்ட் டிஸ்னி லேண்டை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறார்களோ அவருக்குத்தான் நீ கொண்டு வந்த ஞானப்பழத்தைக் கொடுக்க வேண்டும்” என்று பகர்ந்திருந்தார்.

ஆனால் ஒன்று, இந்தப் போட்டியிலும் பழையபடி பிள்ளையார்தான் கெலித்திருப்பார். காரணம். வேழ முகத்தோனிடம்தானே வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ் வாகனமாக வேலை பார்க்கிறது. இந்த ஞானப்பழ விளையாட்டில் ‘டக்’ அடித்து விட்டோமே என்ற கோவத்தில் கொந்தளிக்கும் கந்தனுக்கு டொனால்டு டக்கைக் காட்டி குஷிப்படுத்திவிட்டு, கே.பி.சுந்தராம்பாள் அலையஸ் அவ்வையார், ‘பெரியது கேட்கும் தனி நெடுவேலோய். பெரிது பெரித, வால்ட் டிஸ்னிலேண்ட் பெரிது. அதனினும் பெரிது வால்ட் டிஸ்னியின் மனது’ என்று டிஸ்னி புகழ் பாடியிருப்பார். அந்த அளவுக்குப் பெரியதாயிருக்கிறது வால்ட் டிஸ்னி லேண்ட். டிஸ்னி லேண்டில் வேலைபார்க்கும் சோலையப்பன், அதைச் சுற்றிக்காட்ட எங்களை அழைத்துச் சென்றார். டிஸ்னி லேண்டில் வேலைபார்க்கும் ஊழியர்களை உறவினர்களாகப் பாவிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட தன் உயிலிலேயே எழுதிவைத்துவிட்டுப் போன வால்ட் டிஸ்னியை, சோலையப்பன் தான் வணங்கும் பழமுதிர் சோலையப்பனாகப் பாவித்து தான் பார்க்கமுடியாமல் போன அந்த ‘ரகசிய சிநேகிதனை’ப் பற்றி காதலாகிக் கசிந்துருகினார்.

குழந்தைகளுக்காக ஒரு கோகுலம் கட்டவேண்டும் என்ற ஆர்வத்தோடு வால்ட் டிஸ்னி மும்முரமாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நேரத்தில், முந்திரிக்கொட்டை போல ஒரு ஃபைனான்ஸ் அட்வைஸர், “சார், உங்கள் திட்டத்தை செயலாக்க இத்தனை மில்லியன் டாலர்கள் செலவாகும்” என்று கடமையாக கணக்கு காட்டி டிஸ்னியைப் புரிந்து கொள்ளாமல் தப்புக்கணக்கு போட்டுவிட்டாராம். வந்தகோபத்தில் வால்ட் டிஸ்னி ஆயிரம் வோல்ட் டிஸ்னியாக மாறி “என்ன ஓய், அல்பமாட்டம் பேசறீர். நான் பாலர் உலகம் பத்தி பேசறப்போ நீர் டாலர் கலகம் பண்றீரே” என்று பொரிந்து தள்ள, ஃபைனான்ஸ் அட்வைஸருக்கு பயத்தில் சப்தநாடியும் அடங்கிவிட்டாதாம்.

சாதாரண மவுசுக்கு (எலிக்கு) சர்வதேச லெவலில் மவுசு அளித்து, இன்று நாம் காஷுவலாகப் பேசும் கிராஃபிக்ஸ், அனிமேஷன் போன்ற உத்திகளுக்குப் பிள்ளையார் சுழிபோட்ட வால்ட் டிஸ்னியை வணங்கி அந்த சிசுக்களின் சரணாலயத்தில் நுழைந்தோம்.

ஆகாசத்துக்கும் பூமிக்கும் சுழலும் ஜெயண்ட் வீலில் நான் ‘வீல் வீல்’ என்று பயத்தில் கத்தியபடி உட்கார்ந்திருந்தேன். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஏ.ஆர்.எஸ். கூடுதல் பயத்தில் ‘வீல் வீல் வீல்’ என்று கத்திக்கொண்டிருந்தான். திருவல்லிக்கேணியில் தன் வீட்டு ஊஞ்சலில் ஏறி, ரோட்டை க்ராஸ் செய்து எதிர்வீட்டுத் திண்ணையில் வம்பளக்கும் எச்சுமிப் பாட்டியோடு பேசிவிட்டுத் திரும்பி வரும் அளவுக்கு அசுரத்தனமாக ஆடிப் பழக்கமுள்ள கிச்சா, பஞ்சுமிட்டாயைச் சப்பிச் சாப்பிட்டபடி சகஜமாக இருந்தான்.

சுழலும் ஜெயண்ட் வீலில் உச்சியில் இருந்த கிச்சா, கீழே இருந்த எங்களிடம் “டேய், இங்கேந்து கீழே பாத்தா பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுரம் தெரியறதுடா” என்றான். அதுவரை பயத்தில் ஜெயண்ட் வீலை விட்டே கீழே இறங்க இருந்த நானும் ஏ.ஆர்.எஸ்.ஸும், கோயில் கோபுரம் தெரிவதாக கிச்சா சொல்வது நிஜம்தானா அல்லது பாரதி தன் பாட்டில் சொன்ன ‘காட்சிப் பிழை’யா என்பதைத் தெரிந்துகொள்ள அச்சம் தவிர்த்து அடுத்த ரவுண்ட் போனோம்.

சுழலும் சக்கரத்தின் உச்சியில் இருந்த நாங்கள் பைனாகுலரில் கீழே பார்த்தபோது கிச்சா சொன்னது போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுரம் சின்னதாக அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரிந்து மறைந்தது. அடுத்த சுற்றில் ‘ஐஸ் ஹவுஸ்’ தெரிந்தது. ஆச்சரியத்தில் நாங்கள் அச்சத்தை மறந்து தொடர்ந்து சுற்ற, சேப்பாக் கிரிக்கெட் மைதானம், உழைப்பாளர் சிலை, மெரீனா பீச் என்று ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொன்றாகத் தெரிய ஆரம்பித்து, இறுதிச் சுற்றில் என் தலை சுற்றுவது போல் நானும் கிச்சாவும் சேர்ந்து அண்ணா சமாதிக்கு அருகில் இருப்பது தெரிந்தது.

பிறகுதான் தெரிந்தது கிச்சாவின் சில்மிஷம். நாங்கள் உச்சியிலிருந்து பைனாகுலரில் பார்க்கும்போது கீழே இருந்த தடிராஸ்கல் கிச்சா தன்னிடமிருந்த திருவல்லிக்கேணி போட்டோ ஆல்பத்தை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி எங்களுக்கு ஒரு இல்யூஷனை உண்டாக்கி ஏமாற்றியிருக்கிறான்.

டிஸ்னி லேண்டைச் சேர்ந்த ‘எப்காட்’ என்ற தீம் பார்க்கில் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பிரும்மாண்ட தயாரிப்பான ‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தில் வந்த அட்டகாசமான ஸ்டண்ட் காட்சிகளை அதே செட்டைப் போட்டு மீண்டும் ஒரு தடவை நமக்காக நடித்துக் காட்டினார்கள். கதாநாயகன் ஹாரிஸன் ஃபோர்டுக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் ஆசாமி கதைப்படி புதையலை எடுக்க ப்ளைவுட் செட் மலையில் ஏறும்போது அங்கிருந்த ஆக்ட்டிங் டைரக்டர் “ஸ்டார்ட்” என்றதும், பூமி பிளத்தல், எரிமலை ஜ்வாலை கக்குதல், ஹீரோவை நோக்கி மகாபலிபுரம் பீமன் பாறை சைஸில் இருக்கும் ஒரு பிரும்மாண்டமான கல் உருண்டோடி வருதல் போன்ற, நாம் திரையில் பார்த்த நிழல்களை நிஜமாக்கிக் காட்டினார்கள்.

“நடிப்பதற்கு விருப்பம் உள்ளவர்கள் கையைத் தூக்கலாம்” என்று அந்த ஆக்ட்டிங் டைரக்டர் ஆடியன்ஸைப் பார்த்துக் கேட்டபோது, சொறிந்துகொள்ள கையைத் தூக்கி பொடுகுத் தலையன் கிச்சாவை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் அவனுக்கு அரேபிய ஷேக் காஸ்ட்யூம் போட்டுவிட்டார்கள்.

அவர்கள் சொல்லிக்கொடுத்த ஆங்கில டயலாக்கை தமிழில்கூட திருப்பிச்சொல்ல முடியாமல் திணறியபடி ஷேக்கு வேஷத்தில் பேக்கு போல முழித்துக்கொண்டிருந்த கிச்சா, ஆடியன்ஸ் எதிரில் ஏற்பட்ட அவமானத்தால் ஆவேசமானான்.

தன்னை டயலாக் சொல்லும்படி பலாத்காரப்படுத்திய அந்த ஆக்ட்டிங் டைரக்டரின் சொக்காயைக் கொத்தாகப் பிடித்த கிச்சா, “வரி, வட்டி, கிஸ்தி, டயலாக். ம். யாரைப் பார்த்துக் கேட்கிறாய் டயலாக். எவனைப் பார்த்துக் கேட்கிறாய் டயலாக். நீ என்ன எங்களுடன் ரிகர்சலுக்கு வந்தாயா..? டயலாக் டப்பா அடித்தாயா? இல்லை அங்கு தட்டுத் தடுமாறும் எம் குழு நடிகர்களுக்கு ப்ராம்ப்ட் செய்தாயா? அல்லது நீ என்ன மாதுவா? இல்லை சீனுவா? மானங்கெட்டவனே. இதை என் பாட்டி எச்சுமி கேட்டிருக்க வேண்டும். உன் செம்பட்டை தலை தூசு தும்பட்டையாகியிருக்கும்” என்று கட்டபொம்மன் டயலாக்கை சிச்சுவேஷனுக்கு ஏற்ப மாற்றி கர்ஜிக்க, அரங்கத்தில் மயான அமைதி நிலவியது.

‘இண்டியானா ஜோன்ஸ்’ ஸ்டண்ட் ஆசாமிகள் கிச்சாவைப் பந்தாடப் போகிறார்கள் என்ற பயத்தில் சந்தோஷமாக நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்த ஆக்ட்டிங் டைரக்டர் லேசாக கைதட்ட ஆரம்பிக்க, அந்த கைதட்டல் காட்டுத்தீ போல வேகமாகப் பரவ, ஆடியன்ஸும் சேர்ந்துகொண்டு கிச்சாவின் உணர்ச்சிபூர்மான நடிப்புக்குப் பாராட்டாக கும்மியடித்து கைதட்டினார்கள். அப்போது அந்தக் காட்சியில் கதாநாயகியாக நடித்த ‘ஸாரா’ என்ற உபநடிகை கிச்சாவின் கன்னத்தில் தாசில்தார் முத்திரை வேகத்தில் ‘கிஸ்’ கொடுக்க, கிச்சா கற்பிழந்த கதாநாயகி போல கூசிக் குறுகினான்.

‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தின் ஹீரோ ஹாரிஸன் ஃபோர்டுக்கு பதிலாக கிச்சா நடித்திருந்தால் நிச்சயம் ஆஸ்கர் கிடைத்திருக்கக் கூடும் என்று அந்த ஆக்ட்டிங் டைரக்டர் ஆடியன்ஸைப் பார்த்து பப்ளிக்காக கிச்சாவை ரிச்சாகப் பாராட்டிப்பேசினார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிடம் கிச்சாவை சிபாரிசு செய்வதாகக் கூறிய அந்த ஆக்ட்டிங் டைரக்டர், தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தார்.

அந்த விசிட்டிங் கார்டை சுருட்டி குறுகுறுக்கும் தன் காதைக் குடைந்தபடி எங்களுடன் டிஸ்னி லேண்டை சுற்றிப் பார்த்தான் கிச்சா.

அடுத்ததா, சோலையப்பன் அழைத்துப் போன ஓர் இடத்தில், மேடையில் பத்து கத்திகள், ஐந்தாறு பந்துகள், நான்கு தொப்பிகள் இப்படி பல அயிட்டங்களை ஒரே சமயத்தில் தொடர்ச்சியாகக் கீழே விழாமல், கை தவறாமல் தூக்கிப் போட்டு பிடித்துக் காட்டி கின்னஸ் சாதனை படைத்துக் கொண்டிருந்தான், ஒரு மெக்ஸிகன்.

‘இண்டியானா ஜோன்ஸ்’ தெனாவட்டில் இருந்த கிச்சா, சோலையப்பனிடம், “இதெல்லாம் என்ன சார் புடலங்காய் கின்னஸ் சாதனை. நான் அஞ்சு வயசு வரை செஞ்ச சின்ன வயசு சாதனைகளை சொல்ல ஆரம்பிச்சா கின்னஸ் மாதிரி ‘சின்னஸ்’னு ஒரு புக் போட வேண்டியிருக்கும்” என்று கூறியவன், தனது பாலகாண்ட பிரதாபங்களைப் பட்டியலிட்டான்.

தவழ்தல், தத்தித் தத்தி நடத்தல் போன்ற தேவையில்லாத சமாசாரங்களை ஓரங்கட்டிவிட்டு ஒரேடிய ஏழாவது மாதத்திலேயே உத்தரத்தில் கட்டிய தூளியிலிருந்து எழுந்து அதைப் பிடித்தபடி ‘டார்ஜான்’ கணக்கில் ஆடி, மேஜைக்குத் தாவி நாற்காலி வழியாக தரைக்குக் குதித்து சமையல் ரூமுக்குப் போய் “பாட்டி, பால் ரெடியா?” என்று கேட்டதாகக் கூற, பதிலுக்கு சோலையப்பன், “சும்மா கதை வுடாதப்பா.. அந்த ஆள் மாதிரி செய்யமுடியுமா?” என்று சவால் விட்டார்.

ரோஷமோ ரோஷமான கிச்சா சவாலை ஏற்று மேடையில் கையில் கத்தியோடு இருந்த அந்த மெக்ஸிகனை நோக்கித் தாவினான்.

20

டிஸ்னி லேண்டில் மேடையில் கத்தியைத் தூக்கிப் போட்டு வித்தை செய்து கின்னஸ் சாதனை செய்துகொண்டிருந்த மெக்ஸிகனை நோக்கித் தாவிய கிச்சாவைப் பார்த்து நாங்கள் திகைத்து நின்றோம். அந்த மெக்ஸிகன் அடுத்த சாதனையாக ஒரே சமயத்தில் பத்து பேர் கத்தியால் தாக்க, அதை ஒரே கத்தியால் தடுத்து சண்டை போட ஆரம்பித்தான்.

அந்த சமயத்தில் கிச்சா, மெக்ஸிகன் வீரனிடம், “கத்தி சண்டை போடறியே, உன்னால் கத்தி இல்லாத கத்தி சண்டை போடமுடியுமா?” என்று சவால்விட, அதை சோலையப்பன் மொழிபெயர்த்துச் சொல்ல, அந்த மெக்ஸிகன் பேய்முழி முழித்தான்.

அமெரிக்காவில் இருந்து திருவல்லிக்கேணிக்கே கேட்கும் அளவுக்கு தொண்டை கிழிய மெட்ராஸ் பாஷையில் உரக்கக் கத்தி, சண்டை போட்ட கிச்சாவின் ‘கத்தி – உரக்க கத்தி’ சிலேடையைப் புரிந்துகொள்ள முடியாமல் முழித்த மெக்ஸிகனிடம் “முட்டாள், ஆங்கிலத்துல Sword கத்தி. அதுல வர்ற S-ஐ எடுத்துட்டா Word. அதாவது வார்த்தை, வார்த்தையால உரக்கப் பேசி சண்டை போட்டா அதான் கத்தி சண்டை” என்று கோவையாக உள உளறினான்.

கிச்சாவின் பன்மொழிப் புலமையை சோலையப்பன் அந்த மெக்ஸிகனுக்கு மொழிபெயர்க்க, சிலிர்த்துப்போன அவன், கிச்சாவுக்குத் தன் வாளை பரிசாக அளித்து ‘மெக்ஸிகன் கொண்டான்’ என்ற பட்டத்தையும் அளித்தான்.

குஷியாகிப்போன கிச்சா, அந்த மெக்ஸிகன் அதுவரை கத்தி, தொப்பி, பந்துகளைப் போட்டு செய்த சாகஸங்களை ரசித்துக்கொண்டிருந்த ஆடியன்ஸுக்கு, தனக்குத் தெரிந்த அல்ப சாதனைகளைச் செய்துகாட்டி அவர்களை அசர வைத்தான்.

முதலாவதாக வெத்தலை சீவல் புகையிலை போட்டு, டெண்டுல்கரின் சிக்ஸர் உசரத்துக்கு வானளாவ துப்பி அது கீழே விழுவதற்குள் வாயால் கேட்ச் பிடித்து, முதல் ரோவில் கைதட்டிய அமெரிக்கர் ஒருவரின் நெற்றியை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுத்தான். துளியூண்டு வி.எஸ்.பி. சாறு அங்கு போய் அவர் நெற்றியில் குங்குமப் பொட்டாக அமர்ந்தது. நாங்கள் டிஸ்னி லேண்டை விட்டு வரும்வரை அந்த அமெரிக்கர், கிச்சா அளித்த பன்னீர்ப் புகையிலை குங்குமப் பொட்டை என்னமோ கோயில் குங்குமப் பிரசாதம் போல அழியாமல் பாதுகாத்தார்.

பிறகு, பிச்சப்பனின் மனைவி எங்களுக்குக் கொடுத்த தோசைகளை ஆடியன்ஸுக்கு காட்டினான் கிச்சா. “திஸ் ஈஸ் சவுத் இண்டியன் ஆம்லெட் வித் அவுட் எக்” என்று கூறிவிட்டு, மெக்ஸிகன் கத்தி, தொப்பி வீசியது போல, அங்கு போட்ட மியூஸிக்குக்கு ஏற்ப அந்த ஐம்பது தோசைகளை வீசினான். அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தோசைகளை கபளீகரம் செய்தும் கைதட்டல் வாங்கினான்.

அடுத்த அயிட்டமாக பையிலிருந்து வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்ட கிச்சா, அதைவிடாமல் மடித்து டப்பா கட்டு கட்டி, அவிழ்த்து – மறுபடி மடித்துக் கட்டி என்று ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக செய்துகாட்டினான்.

கிச்சாவின் வேட்டி லூட்டியை கண் இமைக்காமல் ஒரு மணி நேரம் ரசித்த ஆடியன்ஸ், களைப்பில் ஒரு கணம் கண்ணை மூட, அதற்குள் கிச்சா அந்த பத்தாறு வேட்டியை ஜீன்ஸ் போல இரண்டு காலையும் ஒட்டிய பஞ்சகச்சமாக மாற்றி கட்டிக் கொண்டான். இடுப்புக்குக் கீழே முட்டிவரை சொக்காய் தொங்கி மறைத்ததால் ‘வேட்டி எப்படி வெள்ளை பேண்டாக மாறியது..?’ என்று எக்கச்சக்க ஆச்சரியத்தில் கிச்சாவின் பஞ்சகச்சத்தைப் பார்த்து அவர்கள் பேந்தப் பேந்த முழித்தார்கள்.

கிச்சாவின் வேண்டுகோளுக்கு இணங்க பாத்ரூம் வாசலில் கூடிய ஆடியன்ஸுக்கு, தான் போட்டுக் கொண்டிருந்த சொக்காய், பனியன், பேண்ட் துளிகூட நனையாமல் அங்கிருந்த ஷவரில் தலைக்கு ட்டும் குளித்துக் காண்பித்து அவர்களை ஆனந்தத்தில் நனைய வைத்தான்.

அடுத்து, கால்பிடிப்பு பிய்ந்துபோன சிங்கப்பூர் செருப்பை போட்டுக்கொண்டு செருப்பு நழுவாமல் அதிவேகமாக நடந்து காட்டி கலக்கினான்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்த மேடையில் பத்மாசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய ஆரம்பித்த கிச்சாவின் நாசித் துவாரங்கள் நயாகரா சைஸுக்கு விரிந்து நார்மல் சைஸுக்கு சுருங்குவதை வியப்போடு பார்த்த அவர்கள், தங்களையும் அறியாமல் மூக்கின் மேல் விரல் வைத்து பிராணாயாம போஸ் கொடுத்தார்கள்.

பத்மாசனத்தைத் தொடர்ந்து வஜ்ராசனம், ஹாலாசனம், சுஹாசனம், கமலஹாசனம், சாருஹாசனம், சந்திரஹாசனம் என்று தனக்குத் தெரிந்த ஆசனங்களையெல்லாம் கிச்சா செய்துகாட்ட, அந்த அப்பாவி அமெரிக்க ஆடியன்ஸ் சின்ன பசங்களைப் போல ஜோராகக் கைதட்டி விசிலடிக்க ஆரம்பித்தார்கள். விசில் சத்தத்தால் விறுவிறுப்பான கிச்சா, உடம்பை ஒரேயடியாக வளைத்து, உள்ளங்காலை உள்நாக்கால் தொடும் உச்சகட்ட எச்சபாதனாசத்தைச் செய்துகாட்டிவிட்டு, அதே போஸில் இருந்தபடி காஷுவலாக கால்விரலை ஆலிலை கண்ணன் போல வாயில் வைத்து பிகிலடித்துக் காட்டி அவர்களைப் பிரமிக்க வைத்தான்.

வலது கையில் மீதி இருந்த ஒரு தோசையைப் பிடித்தபடி இடது கையால் இல்லாத மீசையை முறுக்கியபடி போஸ் கொடுத்த கிச்சாவை டிஸ்னியின் ஆஸ்தான ஓவியர் கான்வாஸில் வரைந்தார்.

சமீபத்தில் சோலையப்பனிடம் இருந்து வந்த ஈமெயிலில் டிஸ்னி லேண்டில் மிக்கி மவுஸ், டொனால்டு டக் சிலைகளுக்கு அருகே சரிசமமாக கிச்சாவுக்கு சிலை வைத்து அதன் கீழே ‘மச்சி கிச்சா ஃப்ரம் மெட்ராஸ்..” என்று பொறித்திருப்பதாக எழுதியிருந்தார்.

டிஸ்னி லேண்டை சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து ரெஸ்டாரண்டில் சாப்பிடும்போது ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தோம். தான் கேட்ட எதையோ வாங்கித் தராத அமெரிக்க அப்பாவிடம் கோபித்துக்கொண்டு ஒரு துஷ்ட ரெட்டைவால் ரெங்குடு, தன் கையில் கிடைத்த தட்டு, டம்ளர், கோகோ கோலா பாட்டில்களை பேட்டை ரவுடிபோல விசிறியடித்துவிட்டு, நாராசமாக அலறியபடி தரையில் புரண்டு கொண்டிருந்தான்.

குழந்தை அடம்பிடிப்பதில் என்ன பெரிய புடலங்காய் வித்தியாசமான காட்சி என்று நீங்கள் கேட்கலாம். வித்தியாசம் குழந்தையிடம் இல்லை. அந்தக் குழந்தையின் அமெரிக்க தோப்பனார், என்னவோ கைகேயியிடம் வரம் கொடுத்து மாட்டிக்கொண்ட தசரதர் கணக்கில் பரிதாபமாக, “ப்ளீஸ், சமத்தா இருடா கண்ணா” என்று அவன் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தார்.

நான் சோலையப்பனிடம், “என்ன சார் இது. இவன்லாம் ஒரு அப்பனா? அழுது ஆகாத்தியம் பண்ற குழந்தை காதைப் புடிச்சுத் திருகிக் கன்னத்துல நல்லா அறையறதை விட்டுட்டு, மடையனாட்டம் கெஞ்சிண்டிருக்கானே” என்று கேட்க, சோலையப்பன் “தாராளமா அடிக்கலாம். ஆனா அடிச்ச விஷயத்தை குழந்தையோ, இல்லை வேற யாராவதோ போலீஸுக்கு போட்டுக் குடுத்துட்டா. அப்புறம் அடிச்ச அப்பா ஜெயில்ல குழந்தை மாதிரி ஒன், டூ, த்ரீன்னு சொல்லிண்டே கம்பி எண்ணணும்..” என்றார்.

பத்து மாதம் சுமந்து பெத்த குழந்தையாக இருந்தாலும், அதை அடிக்கும் உரிமை அமெரிக்காவில் பெற்றோர்களுக்குக் கிடையாதாம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு அரசாங்கமே குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கிறது. இதைச் சொன்ன சோலையப்பன், கூடவே ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியையும் சொன்னார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்க் குழந்தை விஷமம் செய்ததாம். பொறுத்துப் பொறுத்து அலுத்துப்போன அந்தக் குழந்தையின் தந்தை அதன் கன்னத்தில் லேசாக, அதுவும் செல்லமாகத் தட்டிவிட்டாராம். உடனே அந்தப் பயல் போன் செய்து போலீஸை வரவழைத்து அப்பாவைப் பற்றி மழலையில் எஃப்.ஐ.ஆர். ரேஞ்சில் கம்ப்ளெயிண்ட் கொடுக்க, அதனால் அப்பாவுக்கு டாலரில் அபராதமும் ஒரு நாள் ஜெயில் வாசமும் கிடைத்ததாம்.

ஜெயிலிலிருந்து ரிலீஸான அப்பா, முதல் காரியமாக இந்தியாவுக்கு இரண்டு டிக்கெட் எடுத்து, குழந்தையோடு சென்னை வந்தாராம். கஸ்டம்ஸ் தாண்டிவந்த கையோடு, லக்கேஜைகூட கலெக்ட் செய்துகொள்ளாமல், தன் மகனை ஆசைதீர சாத்து சாத்தென்று சாத்திவிட்டு, “அங்க போலீஸுக்கு ரிப்போர்ட் பண்ணியே. இப்ப என்னடா பண்ணுவ. இது இந்தியா. என் இஷ்டப்படி உன்னை அடிப்பேன், கிள்ளுவேன், கீறுவேன், பிறாண்டுவேன்” என்று கத்திவிட்டு, ஆத்திரம் தணிந்ததும் அடுத்த ஃப்ளைட் பிடித்து குழந்தையோடு அமெரிக்கா போனாராம்!

இந்த விஷயத்தை சோலையப்பன் எங்களுக்குச் சொல்லி முடித்த பின்னும் வெகுநேரத்துக்கு டிஸ்னி லேண்ட் ரெஸ்டாரண்டில் தன் தந்தை எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அந்த அமெரிக்கக் குழந்தை விடாமல் அழுதுபுரண்டு அமர்க்களம் செய்து கொண்டு இருந்தது. அப்போது அதை வேடிக்கை பார்க்க அங்கே வந்த கிச்சாவைப் பார்த்ததும், குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்திக்கொண்டது. அமெரிக்க அப்பா ஆச்சரியமாக கிச்சாவைப் பார்க்க, “அப்பா, பூச்சாண்டி” என்று தன்னை மறந்து தமிழில் சொல்லிவிட்டு அவரை இழுத்துக்கொண்டு தலைதெறிக்க அந்த இடத்தை விட்டே ஓடியது குழந்தை!

21

ஆர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவுக்கு விமானத்தில் வந்த நாங்கள், அங்கிருந்து உடனே புறப்பட்டு அடுத்ததாக நாடகம் போடப் போகும் நார்த் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ரேலே (Raliegh) என்ற இடத்துக்கு க்ரேஹவுண்ட் பஸ்ஸில் பயணமானோம்.

பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர், திடீரென்று ஒரு காட்டுப் பகுதியில் பஸ்ஸை நிறுத்திவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கி அவசரமாகப் போனார். ‘புதரான இடத்தை நோக்கிப் போகிறாரே. ஒரு வேளை ஓட்டுநருக்கு வயிறு ‘பர்கர்’ சாப்பிட்டு ‘கர்புர்’ ஆகிவிட்டதோ?’ என்று விசனத்தோடு நாங்கள் பார்த்தபோது, அந்தப் புதரிலிருந்து வெளியே வந்த ஓர் ஆமை, க்ரேஹவுண்ட் பஸ் மாதிரியே நிதானத்தோடு ரோட்டை கிராஸ் செய்ய ஆரம்பித்தது. அந்த ஆமைக்கு அனுசரணையாக பஸ் டிரைவர் அதன் கூடவே ரோட்டில் தவழ்ந்துசென்று அது பத்திரமாக எதிர்ப்பக்கப் புதருக்குள் நுழையும்வரை அதனோடு துணைக்கு பாதுகாப்பாகச் சென்றார்.

ஆமைக்கு ஒத்தாசை செய்த அந்த ஓட்டுநரைப் பார்த்தபோது எனக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல்தான் நினைவுக்கு வந்தார். பஸ் டிரைவரின் ஜீவகாருண்யத்தைப் பாராட்டிவிட்டு அவர் பெயரைக் கேட்டபோது சிறுகதை முடிவில் வரும் ‘பன்ச்’ போல, “மை நேம் ஈஸ் பாரி” என்றார்.

அப்போது நம்ம ஊர் ஹைவேஸில் அராஜகமாக அடித்துப்போட்ட பிராணி போல பஸ்ஸில் தூங்கிக் கொண்டிருந்த கிச்சா, அரைகுறையாக விழித்துக் கொண்டு, ரோட்டை கிராஸ் செய்யும் அந்தப் பிரும்மாண்டமான ஆமையைப் பார்தான்.

பஸ் டிரைவரிடம் கிச்சா, “அது என்ன?” என்று கேட்க, டிரைவர், “டார்டாய்ஸ்” என்று கூறினார். உடனே கிச்சாவுக்கு டார்டாய்ஸ் கொசுவத்தி ஞாபகத்துக்கு வந்துவிட்டது. ‘என்ன கண்றாவிடா இது. அமெரிக்காவுல கொசுகூட பறக்கமுடியாத அளவுக்கு இவ்வளவு பெரிசாவா இருக்கும்” என்று கூற, நான் ஆமைக்கு ஆங்கிலத்தில் டார்டாய்ஸ் என்று கூறி விளங்க வைத்தேன்.

உடனே கிச்சா தன் ஹேண்ட்பேக்கை திறந்து அதிலிருந்து நாமகட்டி, ஸ்ரீசூர்ணம் முதலியவற்றை எடுத்து கோயில் மதிலில் வரைந்திருக்கும் சைஸுக்கு பக்திசிரத்தையாக நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டு “கூர்மாவதாரஸ்ய” என்று ஆரம்பித்து, சுலோகம் சொல்லிக்கொண்டே பஸ்ஸை விட்டிறங்கி ஆமையை நோக்கி ஓடினான்.

கிராஸ் செய்யும் ஆமையை நகரவிடாமல் அதன்முன் சாஷ்டாங்கமாக விழுந்து, “ஆமையே, உன்னை அரி (பெருமாள்) என்று அறியாமல் இருந்துவிட்ட என் அறியாமையை மன்னிச்சுடு” என்று கேவிக்கேவி பக்தியில் அழ ஆரம்பித்தான்.

இதைப்பார்த்து மெய்சிலிர்த்துப்போன அந்த டிரைவர், என்னிடம் “நான் ஆமையை ஆமையாகத்தான் பார்த்தேன். ஆனா இவரோ தெய்வமாகப் பார்க்கிறார். யார் இந்த ஜீவகாருண்ய சம்ரட்ஷண காருண்ய புருஷர்?” என்று கேட்டார். ஏற்கெனவே முயல்-ஆமை ரேஸ்போல கிச்சாவிடம் தோற்றுக்கொண்டிருக்கும் எனக்கு டிரைவர் இப்படிக் கேட்டதும் ‘பொறா ஆமை பொங்கியது.

ரேலேவுக்குச் சென்றதும் முதல் காரியமாக அந்த டிரைவர் அருகிலிருந்த ரெஸ்டாரெண்ட்டில், ஆமைக் கறி திணித்த சாண்ட்விச்சை “ஸ்வாஹா” செய்ததைப் பார்த்து, “என்ன ஸ்வாமி இது?” என்று நான் கேட்க, அவர் “ஓய், இது ஹை புரொடீன் டயட்” என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து கண்சிமிட்டினார்.

என்னை வரவேற்க ரேலே பேருந்துநிலையத்தில் காத்திருந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சடகோபன் ஒரு பரம சாத்வீகமான வைணவர். எனக்கு மாலைபோட வந்த சடகோபன், நெற்றியில் கட் அவுட் வைத்ததுபோல நாமம் இட்டுக்கொண்டு “கூர்மாவதாரஸ்ய” சுலோகத்தை முணுமுணுத்தபடி வந்த கிச்சாவைப் பார்த்தார். கிச்சாவுக்கு அந்த ஸ்லோகத்தில் முதல் வார்த்தைதான் தெரியும், மற்றபடி ‘ட்யூனில்’ தான் சமாளிப்பான் என்று தெரியாத சடகோபன், கிச்சாவை கிருஷ்ண சைதன்யரைப் பார்ப்பதுபோலப் பார்த்தார். அப்போது கிச்சாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகியது. அதற்குக் காரணம் ‘மெட்ராஸ்- ஐ’ என்பது அடுத்த ஊருக்குப் போன பிற்பாடுதான் எங்களுக்கே புரிந்தது. எனக்கு தெரிந்து அமெரிக்காவில் மெட்ராஸ்-ஐ வரவழைத்துக்கொண்ட முதல் ஆசாமி கிச்சாவாகத்தான் இருக்கும்.

சடகோபன் தன்னைப்போல ஒரு ‘வைஷ்ணவ ஜனதோ’ என்பதை க்ஷண நேரத்தில் புரிந்துகொண்ட கிச்சா “சார், நம்மாழ்வாருக்கு பூர்வாசிரமத்துல சடகோபன்னுதான் பேரு, கம்பரே ‘சடகோபர் அந்தாதி’ எழுதியிருக்கார்” என்று நாசுக்காக சொல்ல, சிலிர்த்துப் போன சடகோபன், எனக்காகக் கொண்டு வந்த மாலையை கிச்சாவின் கழுத்தில் போட்டு “நின்னோடு இருவரானோம்” பாவத்தில் அவனைக் கட்டித் தழுவினார்.

சடகோபன் வீட்டில் தங்கிய எங்களுக்கெல்லாம் ராஜ மரியாதை என்றால், கிச்சாவுக்கு ராஜரிஷி மரியாதை. வள்ளுவர்-வாசுகி போல வாழும் சடகோபனும் அவர் துணைவியார் ஜெயந்தியும் கிச்சாவுக்கு தனி ரூம், மடி சமையல் என்று ஜீயர் அந்தஸ்து அளித்தார்கள். இதனால் உச்சி குளிர்ந்துபோன கிச்சா, “நான் திருவல்லிக்கேணியில் ரொம்ப ஆசார அனுஷ்டானத்தோட இருப்பேன். அஃப்கோர்ஸ் அமெரிக்காவுல தெல்லாம் எதிர்பார்க்க முடியாது” என்று பிகு பண்ணிக்கொள்ள, அது அவனுக்கே அவஸ்தையாக முடிந்தது.

சடகோபனும் ஜெயந்தியும் நாங்கள் அங்கு தங்கிய மூன்று நாள்களும் உலர்ந்த நார்த்தங்காய் போல குளிரில் சுருண்டு படுத்திருக்கும் கிச்சாவை விடியற்காலையில் எழுப்பி, பச்சைத் தண்ணீரில் குளிக்கச் சொல்லி, கொலைப்பட்டினியாக பெருமாளுக்கு ஆராதனை செய்யச் சொன்னார்கள். ஆராதனை முடிந்ததும் காபிக்குப் பதிலாக துளசி தீர்த்தமும், சாம்பார், ரசம், மோர் சாப்பாட்டுக்குப் பதிலாக அவல், பொரிமாவு, பச்சையாக அகத்திக்கீரை என்ற மெனுவை அவர்களே முடிவு செய்ய, கிச்சா மூன்றே நாளில் கிழிந்த பாய் ஆனான்.

திருமதி சடகோபனோடு நாங்கள் பர்ச்சேஸ் செய்ய ‘மால்’ என்று அழைக்கப்படும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்பினோம். அப்போது “கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் என்ற நம்மாழ்வார் வரிகளுக்கு உங்க வியாக்கியானம் என்ன?” என்று சடகோபன் கேட்ட கேள்விக்குப் பதில்சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டிருந்த கிச்சா, நாங்கள் மாலுக்குப் புறப்படுவதைப் பார்த்து, “சார், மாலுக்குப் போயிட்டு வந்து வியாக்கியானம் சொல்றேனே” என்று கூறி தப்பிக்கப் பார்த்தான். அப்போது கிச்சாவைப் பார்த்து “சார், அங்க வந்து நீங்க என்ன பர்ச்சேஸ் பண்ணப் போறீங்க. உங்களுக்கு வேண்டியது நாமகட்டி, ஸ்ரீசூர்ணம். இது ரெண்டும் ‘மால்’ல கிடைக்காது” என்று அவனைத் தடுத்தாள் ஜெயந்தி. தொடர்ந்து, “சார், உங்க ‘மால்’ திருமால். அதைப்பத்தி அவரோட (சடகோபன்) பேசிண்டிருங்கோ. நாங்க போயிட்டு வந்துடறோம்” என்று கூறி கிச்சாவை அசடு வழிய வைத்தாள். இப்படியாக கிச்சா பொய்யாக வளர்த்துக்கொண்ட ‘இமேஜ்’ ரேலேயில் ‘டேமேஜ்’ ஆனது.

ரேலேயில் மாது ப்ளஸ் டூ நாடகம் நடத்தி முடித்து வீடு வந்த எங்களை எச்சுமிப் பாட்டி அனுப்பிய ஈமெயில் வரவேற்றது. என் பிறந்த நாளுக்காக திருவல்லிக்கேணியில் ஒரு கோயில் விடாமல் அர்ச்சனை செய்து அங்கு கொடுத்த விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சகாப்பு போன்ற பிரசாதங்களை பேப்பரில் தடவி அதை போட்டோ எடுத்து ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் அட்டாச்மெண்ட்டாக நுழைத்து எச்சுமிப் பாட்டி அனுப்பியிருந்தாள். தலைப்பில் ‘லவ்-பாட்டி’ என்று எழுதியிருந்தாள். அந்த ‘லவ்-பாட்டி ஈமெயில் ‘லவ்- பக்’ வைரஸ் வேகத்தில் ரேலேவில் உள்ள அத்தனை கம்ப்யூட்டர்களையும் பாதித்தது என்று சமீபத்தில் எனக்கு வந்த ஈமெயிலில் சடகோபன் தெரிவித்திருந்தார்.

– தொடரும்…

– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *