அமெரிக்காவில் கிச்சா
கதையாசிரியர்: கிரேஸி மோகன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 37
(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
16

சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடருவதற்கு முன் எங்கள் குழுவின் புகைப்பட நிபுணனாக தன்னைப் பாவித்துக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.எஸ். பற்றி சில வார்த்தைகள்.
எங்களது அமெரிக்க விஜயத்தைத் தனது பழங்கால பெருங்காய டப்பா கேமராவால் போட்டோ எடுத்து அல்பமாக ஸாரி, ஆல்பமாகப் போட்டது எங்கள் குழுவைச் சேர்ந்த கேமரா சிற்பி ஏ.ஆர்.எஸ்! இவனுக்கு கேமரா சிற்பி என்ற பட்டத்தை நாங்கள் நிந்தாஸ்துதியாக (தூய தமிழில் சொல்லப்போனால் ‘நக்கலாக’) கொடுத்த காரணம், கேமராவை ‘க்ளிக்’ செய்யும்போது பதட்டத்தில் ஏ.ஆர்.எஸ்.ஸின் கை பூகம்பம்போல நடுங்கும். அதனால் போட்டோவில் உள்ள எல்லோர் முகத்திலும் சிற்பி உளியால் செதுக்கியது போல பள்ளம் விழுந்திருக்கும்.
இதுதவிர, இன்றுவரை புரியாத புதிர் என்னவென்றால், ஏ.ஆர்.எஸ். எடுத்த போட்டோக்களில் அவன் எங்களில் யாரை எடுத்தானோ அவர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் – ஒளிந்துகொண்டிருந்தால்கூட எப்படியோ விழுந்துவிடுவார்கள். அதேபோல் ஏ.ஆர்.எஸ். எடுத்த போட்டோக்களில் ஏ.ஆர்.எஸ்.ஸும் இருப்பான். அதுவும் கையில் கேமராவோடு எங்களை போட்டோ எடுக்கும் போஸில் எங்களோடு சேர்ந்து போட்டோவில் விழுந்திருப்பான்.
தன்னை போட்டோ எடுக்க ஃபோகஸ் செய்துகொண்டு இருக்கும் ஏ.ஆர்.எஸ்.ஸுக்கு, கையில் டார்ச் ஏந்திய லிபர்டி சிலைக்குக் கீழே கையில் எவரெடி டார்ச் ஏந்தியபடி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான் கிச்சா. அப்போது, தாய்ப்பசுவை நோக்கிப் பாசத்தோடு ஓடிவரும் கன்றுக்குட்டியைப் போல, கொரியன் ஏர்வேஸில் தன்னோடு சகபிரயாணியான ஜப்பானிய டூரிஸ்ட் சச்சு மாட்ஸியோ குச்சாமி தன்னை நோக்கி கோலிகுண்டைப் போல உருண்டு வருவதைப் பார்த்தான்.
கிச்சாவை ஏ.ஆர்.எஸ். ஃபோகஸ் செய்ய, கிச்சா சச்சு மாட்ஸியோ குச்சாமி கழுத்தில் தொங்கும் லேட்டஸ்ட் மாடல் காஸ்ட்லி கேமராவை கண்ணில் ஜொள்ளு கொட்ட ஃபோகஸ் செய்து பார்த்தான். என்ன ரீல் விட்டு அந்த கேமராவை சுட்டுக் கொள்ளலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த கிச்சாவைப் பார்த்து அந்த மட ஏமாந்தசோணகிரி சச்சு மாட்ஸியோ குச்சாமி, லிபர்டி சிலையைக் காட்டி அதன் சரித்திரப் பின்னணியை விளக்குமாறு வேண்டி கிச்சாவின் வலையில் தானாகவே விழுந்தார்.
என்னுடன் இரண்டு மூன்று தடவை சினிமா கதை டிஸ்கஷனுக்கு வந்திருப்பதால் பார்த்ததை உல்டா அடித்து நேட்டிவிடியோடு கூறும் சாமர்த்தியம் கிச்சாவுக்கு ஓரளவு உண்டு. தீப்பந்தத்தோடு நிற்கும் லிபர்டி சிலையைப் பார்த்ததும் கிச்சாவுக்கு உல்டாவாக மெரீனா பீச்சில் கையில் கால் சிலம்போடு இருந்த கண்ணகி சிலை கண்முன் வந்தது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை அமெரிக்க மண்வாசனைக்கு ஏற்ப மாற்றி ‘மிஸ்டர் சச்சு மாட்ஸியோ குச்சாமி, லிபர்டி ஈஸ் தி நேம் ஆஃப் தி லேடி’ என்றவன், கோவலனுக்கும் மாதவிக்கும் என்ன பெயர் வைப்பது என்று சிறிது யோசித்தான். சென்னை மவுண்ட் ரோடு தியேட்டர்கள் ஞாபகத்துக்கு வர, “லிபர்டி ஒரு பணக்காரனைக் கல்யாணம் செய்துகொண்டாள். அவன் பெயர் காஸினோ (கோவலன்). துரதிர்ஷ்டவ வசமாக ஒரு நாட்டியப் பெண்மணி மீது காதல்வயப்பட்டான் காஸினோ. அவள் பெயர் கெயிட்டி (மாதவி)” என்று ஆரம்பித்து, பாண்டிய மன்னனை பிரான்ஸ் மன்னனாக்கி அவன் காஸினோவை (கோவலனை) அறியாமல் கொன்றதாகக் கூறி, அதனால் வெகுண்டெழுந்த லிபர்டி (கண்ணகி) கையில் உள்ள தீப்பந்தத்தால் பிரான்ஸை எரித்ததாக முடித்தான்.
இதைக் கேட்டு, மெய்சிலிர்த்துப் போய் அதனால் தாற்காலிகமாக ஓர் இஞ்ச் உயர்ந்த அந்த ஜப்பான்காரர், தன் பாராட்டைத் தெரிவிக்க கழுத்தில் தொங்கிய கேமராவை கிச்சா கழுத்தில் மாலையாகப் போட்டார்.
லிபர்டி சிலையைப் பார்த்துவிட்டு நியூ யார்க்கில் நாடகங்களுக்குப் பெயர்போன பிராட்வே ஷோ பார்க்க அவசர அவசரமாக ஓடினோம். நாங்கள் அன்று பார்த்தது அமெரிக்காவின் பிரபல நாடக ஆசிரியர் எழுதி, அவரைவிட பிரபலமான நடிகர்கள் நடித்த ஒரு நகைச்சுவை நாடகம்.
நாடகக் காட்சிகளில் பனிபெய்வது, மின்னலடிப்பது இடிஇடித்து மழை பெய்வது போன்ற பிரும்மாண்டங்களை ஓரங்கட்டிவிட்டு, கதை-வசனத்தையும் நடிப்பையும் மட்டும் பார்த்தால், கிட்டத்தட்ட அந்த நாடகமும் ஒரு ஹெல்த்தியான துணுக்குத் தோரணம்தான். மற்றபடி, நமக்கும் அவர்களுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. என்ன, நம்ம ஊர் நாடகக்காரர்களுக்கு பாவம் ‘விரலுக்கேத்த வீக்கம் என்றால் அவர்கள் நாடகத்தில் ‘டாலருக்கேத்த டாம்பீகம்’ தெரிகிறது. அவ்வளவுதான்.
துணியைப் போட்டு தாண்டி சத்தியம் செய்கிறேன். நம்ம நாடகாசிரியர் ‘மெரீனா’ தன் பெயரை ‘மியாமி’ என்று மாற்றிக் கொண்டு ‘தனிக்குடித்தனம்‘ நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வேண்டாம் அப்படியே தமிழில் போட்டு, அதில் பூர்ணம் விஸ்வநாதன் நடித்து பிராட்வேயில் மேடையேற்றினால் பூர்ணகும்பம் வைத்து அமெரிக்க ரசிகர்களே கொண்டாடுவார்கள். அமெரிக்காவில் நாடகம் போடுபவர்கள் வாங்கும் சம்பளத்தை ஆர்.எஸ்.மனோகருக்கு தந்திருந்தால் நாடகத்துக்காக நோபல் பரிசே வாங்கியிருப்பார் நம்ம நாடகக் காவலர்.
அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பதை நான் அக்கரைப் பச்சை அறையில் (க்ரீன் ரூமில்) புரிந்து கொண்டேன். நாடகம் முடிந்ததும் நாங்கள் க்ரீன் ரூமுக்குச் சென்று, நடிகர்கள் ஒரு சிலரைச் சந்தித்து வலுக்கட்டாயமாக எனது நாடகங்களைப் பற்றி அவர்களுக்குத் தோராயமாகக் கூறினேன். “உங்கள் நாடகக் கதை வசன அணுகுமுறையைக் கேட்கும்போது எங்களுக்குப் பிரபல நாடக ஆசிரியர் ‘நீல் ஸைமன்’தான் ஞாபகத்துக்கு வருகிறார்” என்று இக்கரைப் பச்சையான என் மீது அக்கறை காட்டியவர்கள், “நீல் ஸைமனுக்கு சொந்தமாக ஒரு தீவே இருக்கிறது, உங்களுக்கு?” என்று கேட்டார்கள். ‘மழைக் காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கும் சமயத்தில்தான் தீவுக்குச் சொந்தக்காரராகும் வாய்ப்பு எனக்கு உண்டு’ என்ற என் வயிற்றெரிச்சலை நான் அவர்களுக்குச் சொல்லவில்லை.
நம்மைப் போலவே ‘நாடகத்தில் நகைச்சுவை மட்டும் போதாது. மெஸேஜும் தேவை’ என்று அந்த ஊர் விமரிசகர்களால் தூஷிக்கப்படும் அவர்கள், ஆதங்கத்தோடு என்னிடம் “உங்கள் நாடகத்தில் நீங்கள் என்ன மெஸேஜ் தருகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதுவரை சும்மா இருந்த கிச்சா, “மெஸேஜ் எல்லாம் எங்க ஊர்ல போஸ்ட்மேன்தான் தருவான்” என்று ஆரம்பித்து “என்ன சார் புடலங்காய் மெஸேஜ். குடும்பக் கஷ்டத்தால அவனவன் மனசுல வலியோட நாடகம் பார்க்க வரான் சார். அவனுக்கு மெஸேஜைவிட வலியைப் போக்கற நகைச்சுவை மசாஜ்தான் சார் தேவை” என்று முடித்தான்.
இந்த பதிலால் புல்லரித்துப்போன அவர்கள் கிச்சாவிடம், “ஆர் யூ எ ரைட்டர் லைக் ஹிம்?” என்று என்னைக் காட்டி கேட்டார்கள். எனது நாடகங்களை ரிகர்சலுக்காக ஒன் ப்ளஸ் டூ காப்பி எடுக்கும் கிச்சா, “நோ, நோ. ஐ அம் தி காப்பி ரைட்டர்” என்று அவர்களிடம் கூற, எனது நாடகங்களின் பூரண உலக உரிமையை காப்பிரைட் ஆக்ட்படி வாங்கி வைத்திருக்கும் பணக்கார பப்ளிஷர்தான் கிச்சா என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு எம்.ஜி.எம். புரொட்யூசரைப் பார்ப்பதுபோல கிச்சாவை பிரமிப்போடு பார்த்தார்கள்.
நடுநிசி ஆகிவிட்டதால் வெங்கட் எங்களை சப்வே வழியாக எதிர்சாரிக்குச் சென்று காத்திருக்கும்படி கூறிவிட்டு, தியேட்டர் பேஸ்மெண்டில் பார்க் செய்த காரை எடுக்க ஓடினான்.
எனக்கும், வாசுவுக்கும், ஏ.ஆர்.எஸ்.ஸுக்கும் அந்த மயான அமைதி சற்று கிலேசமாக இருந்தது. எங்களுடன் இருந்த கிச்சா வழக்கம் போல அசட்டுத் துணிச்சலில் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள உரத்த குரலில், “வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு” என்று பாடி எங்களை மேலும் பயமுறுத்தினான். அப்போது தீபாவளி லேகியத்தால் செய்தது போல இரண்டு ஆஜானுபாகுவான கறுப்பர்கள் எங்கள் எதிரே வந்து வழிமறித்தார்கள். அமெரிக்காவில் மக்கிங் (Mugging) என்று சொல்லப்படும் வழிப்பறிக் கொள்ளையைப் பற்றி ஏற்கெனவே வெங்கட் சொன்னது என் நினைவுக்கு வந்தது. எதிராளியைக் கத்தியால் குத்திவிட்டு கையிலுள்ள டாலரைப் பிடுங்கிக் கொண்டுபோய்விடுவார்களாம். நம்மிடம் டாலர் இல்லாவிட்டால் “ஏண்டா டாலர் இல்லாம வெளில வர்ற. வெக்கமாயில்லையா உனக்கு” என்று நமது கஞ்சத்தனத்தைக் கத்தியால் குத்திக்காட்டிவிட்டுப் போவார்களாம்.
“கமான் மேன், கமான், க்விக், கிவ் அஸ் டாலர்ஸ்” என்று கட்டபொம்மன் ரேஞ்ச் கத்தியைக் காட்டி அவர்கள் எங்களை அவசரப்படுத்தினார்கள். எங்களிடம் டாலர் இல்லை. நான், ஏ.ஆர்.எஸ்., வாசு மூவருமே கத்திக்குத்துக்கு ரெடியானோம். ஆனால், கிச்சா உடனே பளிச்சென்று தனது கோர்ட் சர்ட் பட்டனை கழட்டி, “சார், நீங்களே பார்த்துக்குங்க. என்கிட்டே நாலு டாலர்தான் இருக்கு” என்று ஆங்கிலத்தில் சொல்ல, அவர்கள் லேசாக குழம்பினார்கள். இதுதான் சாக்கென்று கிச்சா தன் கழுத்தைக் காட்டி, “பாருங்க, இது வெங்கடாசலபதி டாலர். இது ருக்மணி தாயார் டாலர்” என்று ஆரம்பித்தான். அவர்கள் கிச்சாவின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்பட, கிச்சா திடீரென்று முகத்தை மகா கோரமாக வைத்துக்கொண்டு பேஸ் வாய்ஸில் “தீவ்ஸ் சார். திஸ் ஈஸ் எ பவர்ஃபுல் டாலர். காத்து, கருப்பு அண்டாம இருக்க இதை நான் போட்டிருக்கேன்” என்று கிட்டத்தட்ட ஒரு ஹாரர் கதை கேட்கும் சுவாரஸ்யத்துக்கு அவர்களைக் கொண்டுபோனான். பிறகு, “தீவ்ஸ் சார், திஸ் டாலர். மலபார் மேஜிக்மேன் (மலையாள மாந்திரீகர்) ஆலப்புழை அச்சப்பன் கொடுத்தது, ரொம்ப ஆபத்தான டாலர். ஈஃப் யூ டச் திஸ் டாலர். முட்டை முட்டையா யூ வில் வாமிட்” என்றான்.
என்ன என்று புரியாவிட்டாலும் கிச்சா ஏதோ ஒரு தீயசக்தி என்று நினைத்து இருவருமே மிரண்டு போனார்கள். வேறுவழியின்றி கத்திகளை கிச்சா காலடியில் வைத்துவிட்டு பொதுமன்னிப்பு வழங்குமாறு கேட்டுவிட்டு பாதம் பிடரியில் . பட ஓடினார்கள். சப்வே விட்டு வெளியே வந்த அவர்கள், அங்கு எங்களுக்காக காத்திருந்த வெங்கட்டிடம் “டோண்ட் கோ இன்சைட் தி சப்வே. ஈவில் மேன் ஃப்ரம் இண்டியா ஈஸ் தேர்” என்று எச்சரித்துவிட்டு ஓடியது இன்னும் வேடிக்கை!
அன்று ‘செயின்ட் ஃப்ரம் இண்டியா’ என்று சி.என்.என்.னில் பாராட்டப்பட்ட கிச்சா, இன்று ‘ஈவில் மேன் ஃப்ரம் இண்டியா’ என்று சப்வேயில் தூற்றப்பட்டான். இப்படி வையகமே கிச்சாவை வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும் நிலையை எண்ணி எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
17
எங்கள் நிகழ்ச்சி நிரலில் அடுத்த இடமான ஆர்லாண்டோவுக்கு பிளேன் பிடிக்க நியூ ஜெர்ஸியிலிருந்து நியூ யார்க் ஏர்போர்ட் சென்றோம். ஏர்போர்ட்டில் சி.என்.என். புகழ் கிச்சாவை வழியனுப்ப மிஸ்டர் அண்ட் மிஸஸ். மெர்ஸன், ஆர்லிங்டன், பென் என்று பாதி நியூ ஜெர்ஸியே திரண்டு வந்திருந்தது. எல்லோரும் கிச்சாவுக்கு பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் ரொப்பிய ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழ ஜூஸ் சிரப்புகளை அன்பளிப்பாகத் தந்தார்கள்.
கிச்சா எங்களை தெனாவட்டாகப் பார்த்தான்.
“என்னமோ நீங்கள்ளாம் இன்ஜினீயரிங்குக்கு, டாக்டருக்கு, வக்கீலுக்கு படிச்சுட்டதா அல்டிப்பீங்களே, இப்ப பாத்தீங்களா” என்று சஸ்பென்ஸ் வைத்தவன், தனக்குக் கிடைத்த பழ ஜூஸ் சிரப்பு பாட்டில்களைக் காண்பித்து “இப்ப புரிஞ்சுக்கோங்கடா, கற்றோருக்கு மட்டும் இல்லை. கல்லாத எனக்கும் சென்றவிடம் எல்லாம் சிரப்புத்தான்” என்று சொல்லி பழமொழியில் வரும் சிறப்பை சிரப்பாக்கினான்.
சின்ன ‘ர’ வுக்கும் பெரிய ‘ற’வுக்கும்கூட வித்தியாசம் தெரியாத இந்த அடிமுட்டாள் அல்பி கிச்சா, தனக்கு அடிக்கும் வாழ்வை நினைத்து சின்ன ‘ர’வில் பெருமைப்பட்டுக் கொள்ள, அதைப் பார்த்து நான் பெரிய ‘ற’வில் பொறாமைப்பட்டேன்.
என் பொறுமையைச் சோதிப்பது போல அப்போது சி.என்.என். நிருபி எலிஸா ஓடிவந்து கிச்சாவின் கையைப் பிடித்து ஹரியானா பம்பர் லாட்டரி லெவலில் குலுக்கியபடி, “மிஸ்டர் கிச்சா, நீங்கள் நாடகம் போட அட்லாண்டா போவதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து மறக்காமல் அட்லாண்டாவில் உள்ள எங்கள் சி.என்.என்.ஹெட் குவார்ட்டர்ஸுக்கு நீங்கள் விஸிட் செய்யவேண்டும்” என்று மன்றாடிவிட்டு, கிச்சாவிடம் ‘சி.என்.என்.’ என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்ட விசிட்டிங் பாஸை திணித்தாள்.
கிச்சா எங்களைக் காட்டி, எலிஸாவிடம், “தோ பாருங்க மேடம், எனக்கு மட்டும் பாஸ் குடுத்தா போதுமா? அவங்களுக்கு?” என்று கேட்க, எலிஸா, கிச்சாவிடம் “சார், இந்த பாஸ்ல பன்னிரண்டு பேருக்கு அனுமதி எடு. ஆனா குழுவோட பாஸ் (தலைவர்) என்ற முறைல இந்த பாஸை உங்ககிட்ட தந்தேன்” என்றாள். கிச்சா என்னை ஓரங்கட்டினான். “மோகன் ஒண்ணு கவனிச்சியா, கனமா பெரிய ‘பா’ போட்டா ‘பாஸ்’ (Boss) அதாவது, தலைவர். சன்னமா சின்ன ‘பா’ போட்டா ‘பாஸ்’ (Pass) அதாவது, அனுமதிச் சீட்டு” என்று காஷுவலாகக் கூறினான்.
எனக்கென்னமோ நான் சற்று முன்பு சின்ன ‘ர’ பெரிய ‘ற’ வித்தியாசம் தெரியாத முட்டாள் என்று இவனை மனசுக்குள் கேலி செய்ததற்கு பதிலடி கொடுத்ததுபோல பட்டது. ஒருவேளை நாம் மனசுக்குள் யோசிப்பதைப் புரிந்துகொள்ளும் இ.எஸ்.பி. சக்தி கிச்சாவுக்கு உண்டோ என்ற சந்தேகத்தோடு நான் அவனைப் பார்க்க, செயின்ட் கிச்சா, “தோ பாரும்மா, எனக்கு இ.எஸ்.பி.லாம் தெரியாது.. எனக்குத் தெரிஞ்சது வி.எஸ்.பி.தான் (வெத்தலை, சீவல், புகையிலை)” என்று எலிஸாவிடம் கூறி மறுபடியும் என் மனசுக்குள் நான் ரகசியமாக நினைத்ததற்கு பதிலடி கொடுத்தான். நான் கிச்சாவை சித்த புருஷனைப் பார்ப்பது போலப் பார்த்து, இந்த பாழாய்ப் போன கிச்சா “புதிரா? புனிதமா?” என்று குழம்பினேன்.
பிளேன் டேக் ஆஃபின்போது ஜன்னல் வழியாகத் தெரிந்த லிபர்டி சிலையைப் பார்த்து கிச்சா கையை ஆட்ட, சினிமா கிராஃபிக்ஸில் வருவது போல பதிலுக்கு லிபர்டி சிலை தனது உள்ளங்கையை உதட்டில் வைத்து அழுத்தி எடுத்து “குட்பை கிச்சா” என்று சொல்லி அவனுக்கு ஃப்ளையிங் கிஸ் அளித்தது எனக்கு ஏற்பட்ட பிரமையா அல்லது நிஜமா என்பது இன்றுவரை புரியவில்லை.
என்னை வரவேற்க ஆர்லாண்டோவில் கார்லண்டுடன் காத்திருந்தார்கள் ‘டாம்பா (Tampa)’ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பெத்தாச்சி பிச்சப்பன், ரவிநாராயணன், ஷண்முகம் ஆகியோர்.
பிச்சப்பன் தான் கொண்டுவந்த மாலையை எனக்குப் போடும் சமயத்தில், அதுவரை எனக்கும் பிச்சப்பனுக்கும் நடுவே கீழே அமர்ந்தபடி காபரே டான்ஸர் உடை போல அடிக்கடி அவிழ்ந்துகொண்டேயிருக்கும் தனது ஷூ லேஸை முடிச்சுப் போட்டுக்கொண்டிருந்த கிச்சா, தடாலென்று எழுந்திருக்க, கிச்சா கழுத்தில் மாலை விழுந்தது.
பிச்சப்பன் எங்கள் குழுவைச் சேர்ந்த சீனுவின் சொந்தத் தம்பி. இதைத் தவிர, பிச்சப்பனை பால்யத்திலிருந்தே எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும். இது எதுவும் தெரியாத கிச்சா, மாலை கிடைத்த சந்தோஷத்தில் “ஐ அம் கிச்சா, இது மோகன், இது மாது, இது (சீனுவைக் காட்டி) யார்னு சொல்லுங்க பாக்கலாம். லாரல்-ஹார்டி, கவுண்டமணி-செந்தில் மாதிரி மாதுவும் இவரும் டி.வி.யில, டிராமால எல்லாம் ஜோடியா வருவாங்க. ஒரு க்ளு வேணா தரேன். இவர் பேர் ‘சீல ஆரம்பிச்சு ‘னு’ல முடியும். நடுவுல ஒண்ணுமே வராது” என்று கூறி, ஸ்தம்பித்து நின்ற பிச்சப்பனுக்கு அவரது சொந்த அண்ணனையே அறிமுகம் செய்துவைக்க ஆரம்பித்தான்.
பிச்சப்பனைக் காப்பாற்ற நான் பாய்ந்து கிச்சாவை மாலையோடு இழுத்து, “கிச்சா, இவர் பேரு பிச்சப்பன். நம்ம சீனுவோட தம்பி” என்று சொல்ல, கிச்சா, பிச்சப்பனிடம் “ஸாரி சார், ரொம்ப ஸாரி. நீங்க சீனுவோட தம்பியா? எனக்குத் தெரியாது” என்றவன் தொடர்ந்து, “தம்பின்னா, உங்களுக்கு மூத்தவரா, இல்லை இளையவரா?” என்று தனது ரிலே சொதப்பலைத் தொடர்ந்தான்.
ஒரு வருடம் கழித்துப் பார்க்கும் தம்பியுடன் பாசத்தோடு பேசவிடாமல் கழுத்தறுக்கும் கிச்சாவை சீனு நாரோடு பிடித்து “கிச்சா, பிச்சப்பன் என் கூடப் பொறந்த தம்பி. சரியா?” என்று சொன்னான். கிச்சா அப்படியும் விடவில்லை.
“சரியில்லை, கூடவே பொறந்தா எப்படி தம்பியாக முடியும்? ‘ட்வின்ஸ்’னு சொல்லு” என்று அடம்பிடிக்க, எங்கே இந்த விளையாட்டு தொடர்ந்தால் ஏர்போர்ட்டை மூடிவிடுவார்களோ என்ற பயத்தில் ரவிநாராயணன் “இத்துடன் ன் சபை கலைந்தது” என்ற தொனியில் “ஷல் வி கோ?” என்று நாசுக்காக சொல்ல, நாங்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து, நாடகம் நடக்கவிருக்கும் டாம்பா என்ற ஊரை நோக்கி காரில் சென்றோம்.
‘மீசை ஆனாலும் மனைவி’ நாடகத்தின் கடைசிக் காட்சியில் சீனு டாக்டராக வந்து மாதுவிடம் ‘கங்கிராஜுலேஷன்ஸ் மாது, நீங்க அப்பாவாகப் போறீங்க’ என்ற டயலாக்கைச் சொல்லுவான். நடிப்பில் ஆர்வம் உள்ள பிச்சப்பனை சீனுவுக்குப் பதிலாக அந்த டாக்டர் ரோலில் வரச் சொன்னோம். மேலே சொன்ன டயலாக்கை நூறு தடவை ரிகர்சல் செய்துவிட்டு டென்ஷனோடு நாடக மேடையில் நுழைந்த பிச்சப்பனிடம், அந்தக் காட்சியில் சேட் சோபாலாலாக நின்றுகொண்டிருந்த கிச்சா ரகசியமாக, “சீனுவுக்கு நீங்க தம்பி. ஓகே-யா?” என்று தன்னுடைய குழப்பத்தைப் போக்கிக்கொள்ள கேட்டுவைத்தான். குழம்பிப் போன பிச்சப்பன், மாதுவிடம் “மாது, நீங்க சீனுவுக்கு அப்பாவாகப் போறீங்க” என்று டயலாக்கை பாவம், மாற்றிச் சொல்லிவிட்டார்.
நாடகம் முடிந்த அன்று இரவு டாம்பா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த தப்ராஜ் வீட்டில் எங்களுக்கு டின்னர். தப்ராஜின் துணைவியார் திருமதி எட்னா பிரமாதமாக சமைத்திருந்தார். வழக்கம்போல கிச்சா திருமதி எட்னாவிடம் “மிஸஸ் ஃபுட்னா” என்று ஆரம்பிக்க, “நோ, நோ என் பேர் ஃபுட்னா இல்லை. எட்னா” என்று அவர் திருத்த, உடனே கிச்சா சுதாரித்துக்கொண்டு “தெரியும், சாப்பாடு அதாவது ஃபுட் ரொம்ப பிரமாதமா இருந்ததால எட்னாங்கற உங்க பேரை சிலேடையா ஃபுட்னானு சொன்னேன்” என்று கூறி சமாளித்து அவரைப் புகழ, திருமதி எட்னா கிச்சா தட்டில் சுடச்சுட அடை அவியலைப் போட, அன்று கிச்சா காட்டில் அடை அவியல் மழை.
18
ஆர்லேன்டோ வாசம் முடிந்து அட்லாண்டா வந்து சேர்ந்தோம். இரண்டு நாள்களுக்கு முன்பு டாம்பா பிச்சப்பனிடம் இருந்து எனக்கு ஈமெயில் வந்தது. அதில் பிச்சப்பன் எங்களைப் பற்றி போனால் போகிறது என்று ஓர் ஓரமாக விசாரித்துவிட்டு, கிச்சாவைப் புகழ்ந்து ஒரு பிரபந்தமே பாடியிருந்தார். ஈமெயிலின் இறுதியில் டாம்பா தமிழ்ச் சங்கம் சார்பாக கிரிக்கெட் தீர்க்கதரிசி கிச்சாவுக்கு ‘மூதறிஞர் கிச்சாஜி’ என்ற பட்டம் அளிப்பதாகக் கூறியிருந்தார்.
நடந்தது இதுதான்.
பிச்சப்பன் வீட்டில் தங்கிய இரண்டு நாள்களில், முதல் நாள் அருகில் உள்ள ஃப்ளோரிடா பீச்சுக்கு போவதாக முடிவு செய்தோம். கிரிக்கெட் அபிமானிகளான நாங்கள் பிச்சப்பன் மகன்கள் லக்ஷமணும் சுப்புவும் வைத்திருந்த கிரிக்கெட் பேட், பந்தை எடுத்துக் கொண்டு பீச்சுக்குப் புறப்பட்டோம்.
கோலி, கில்லிதாண்டு, பம்பரம், காத்தாடி போன்ற குடிசைத் தொழில் விளையாட்டுகளில் வெறியனான தில்லகேணி கிச்சாவுக்கு, கிரிக்கெட் சுத்தமாகத் தெரியாது. அந்த ஆத்திரத்தில் பிச்சப்பனை சாட்சியாக வைத்து “இந்த பாழாப் போன கிரிக்கெட்டுக்கு கெட்ட பேர் வரலைன்னா ‘கிச்சா’ங்கற என் பேரை ‘சாச்கி” னு மாத்திக்கறேன்.. என்ன பெட்..?” என்று அன்றே கிரிக்கெட் தனது அடுப்புக் கரி நாக்கால் சபித்தான்.
கிச்சாவின் வாய்முகூர்த்தம். ஸாரி, வாய்எமகண்டம் இன்று பலித்துவிட்டது. இப்போது கிரிக்கெட்டில் பேட்டிங்கைவிட கிச்சா சொன்ன பெட்டிங்தான் பிரபலமாக உள்ளது.
பிச்சப்பன், கிச்சாவை ஆதரவாக அணைத்து “கிச்சா, அவங்க மெஜாரிட்டியா இருக்காங்களே, விட்டுக் கொடுத்திடுங்க. டேக் இட் ஈஸி!” என்றார். “டேக் இட் ஈஸியா எடுத்துக்க நான் என்ன ஊர்வசியா?” என்று உளறியவன், தொடர்ந்து “என்ன சார் புடலங்காய் மெஜாரிட்டி. ‘கிரிக்கெட் விளையாட வரியா கிச்சா?’னு என்னைக் கேட்டாங்களா. என்னைக் கேக்காம மேட்ச் ஃபிக்ஸிங் பண்ண இவங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?” என்று இன்று கெட்ட வார்த்தையாகக் கருதப்படும் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ என்ற வாசகத்தை அன்றே தனது ஊத்த வாயால் உதிர்த்தான் கிச்சா.
அதுவரை ஆத்திரத்தில் இருந்த கிச்சா திடீரென்று அறிவுஜீவியாக மாறி “மிஸ்டர் பிச்சப்பன், ‘பதினோரு முட்டாள்கள் விளையாடறாங்க. அதை பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறாங்க’னு அப்பவே இங்கிலாந்துல நசுருதீன் ஷா சொல்லிட்டார்” என்று உளற, “முட்டாளே, அது நசுருதீன் ஷா இல்லை. பெர்னாட்ஷா” என்று நயம்பட உரைத்துவிட்டு நக்கலாகச் சிரித்தோம். எங்களது இந்த உசுப்பலால் உணர்ச்சி வசப்பட்ட கிச்சா, “பெர்னாட்ஷா என்னடா பெர்னாட்ஷா. நான் இப்ப சொல்றேன் ஒரு புதுமொழி. கேட்டுக்குங்க.. பதினோராயிரம் பேரை முட்டாளாக்கறதுக்காகவே பதினோரு பேரு விளையாடறதுதான் கிரிக்கெட். இது பலிக்கலைன்னா ‘சாச்கி’ னு மாத்தி வெச்சுண்ட என் பேரை பழையபடி ‘கிச்சா’னு பழையபடி வெச்சுக்கறேன். போறுமா” என்று சூளுரைத்தான்.
மெஜாரிட்டி பலத்தால் ஃப்ளோரிடா பீச்சில் அன்று நாங்கள் கிரிக்கெட் விளையாடினோம். கிரிக்கெட் துவேஷிகளும் அதனால் அதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட ‘பேஸ்-பால்’ விசுவாசிகளுமா அமெரிக்கர்கள் பீச்சில் எங்களை தேசத் துரோகிகளைப் பார்ப்பது போல பார்த்தார்கள். பீச் ஓரத்தில் சிமெண்ட் தரையில் பிச்சப்பன் மகன்களுக்கு கிச்சா “அலேக் நிரஞ்சன்” என்று ஆவேசமாக கூறி ஆக்கர் குத்து விட்டு பம்பரம் விட்டுக் காட்டினான். ‘அபீட்’ என்று கிச்சா சொன்னதும் அந்த பம்பரம் எஜமான விஸ்வாசத்தோடு துள்ளிக் குதித்து கிச்சாவின் உள்ளங்கைக்கு தாவும் அதிசயத்தை வேடிக்கை பார்க்க பீச்சில் இருந்த பிகினிகளும் பர்முடாஸ்களும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.
தனது பம்பரத்தால் ‘பத்தாங் குத்து பாறாங்கல்’ என்று சொல்லி சாக்பீஸால் போட்ட வட்டத்துக்குள் இருந்த பத்து பம்பரங்களை கிச்சா சிதற அடிக்க, எந்த கலர் பம்பரம் பாதியாக உடையும், எந்த கலர் பம்பரம் வெகு தூரம் உருளும் என்றெல்லாம் தங்களுக்குள் பெட்டிங் கட்டி அந்த அமெரிக்கர்கள் கிச்சாவின் பம்பர விளையாட்டை கிரிக்கெட் ஆக்கினார்கள்.
இது போதாதென்று கிச்சா அங்கு மாசக்கணக்கில் மல்லாக்கப் படுத்தபடி சன் பாத் எடுத்துக்கொண்டிருந்த ஒரு பிரும்மாண்ட மான அமெரிக்க ஆசாமியின் வயிற்றில் ‘சின்ன கவுண்டர்’ ஸ்டைலில் பம்பரம் விட்டு கிச்சுகிச்சு மூட்ட, நாணத்தில் அவர் நாராசமாக ஊளையிட ஆரம்பித்தார். இதனால் குஷியான சிலர் வரிசையாக படுத்துக்கொண்டு தங்கள் வயிற்றிலும் பம்பரத்தை வார்க்கும்படி கிச்சாவிடம் வேண்டி மன்றாட, ராம பாணம் வேகத்தில் கிச்சா விட்ட பம்பரம், ஒரே வீச்சில் ஏழு வயிற்றையும் துளைத்து சுழன்றுவிட்டு பழையபடி கிச்சாவின் கைக்கே திரும்பியது.
நமது சித்திரை மாச வெயிலுக்கு ஒப்பான டாம்பா சீதோஷ்ணம் தாங்காமல் கிச்சா கழற்றிவைத்த அவனது வெள்ளை சொக்காயில் அவர்கள் பாராட்டுதலாக டாலர்களை வீசி எறிய, கிச்சா ‘டாலர் மேலே, டாலர் வந்து கொட்டுகிற நேரம் இது’ என்று பாடி எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டான்.
அமெரிக்கக் கும்பலின் பாராட்டால் உச்சிகுளிர்ந்து, பம்பரத்துக்கு அடுத்தபடியாக டாம்பா நாளிதழ் ஒன்றைக் கிழித்து பாணா காத்தாடி செய்து, ஒரே இழுப்பில் டாம்பா தொலைத் தொடர்பு சாட்டிலைட்டை டீல் போடும் உசரத்துக்கு அந்தக் காத்தாடியை ஏற்றிக் காட்ட, அமெரிக்கர்கள் புல்லரித்தார்கள். ஸாரி, மணல் அரித்தார்கள்.
அடுத்து, ஐந்நூறுக்கு எழுநூறு சதுர அளவில் போர்டிகோ, பால்கனி, பெட்ரூம் வித் அட்டாச்டு பாத்ரூமோடு கிச்சா பீச் மணலில் ஒரு வீட்டை அதுவும் வாஸ்து சாஸ்திரப் பிரகாரம் கட்டி அவர்களை மெய்சிலிர்க்க வைத்தான். கிச்சா கட்டிய அந்த மணல் வீடு இன்னும் கலையாமல் இருப்பதாகவும், அதில் ஓரிரு அமெரிக்கர்கள் குடியிருப்பதாகவும், கிச்சா கடைசியாக விட்ட பம்பரம் இன்னும் அணையா தீபமாக சுழன்றுகொண்டு இருப்பதாகவும் பிச்சப்பன் எனக்கு அடித்த ஈமெயில் பின்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சன் பாத் எடுத்துக்கொண்டிருக்கும் பெண்களிடம் கிச்சா தயிரின் மகத்துவத்தைக் கூறி தயிரைப் பூசிக்கொண்டு பீச் மணலில் படுத்தால் சருமத்தில் மெருகு ஏறும் என்று ரீல் விட, அந்த மடமாதர்களும் இதை நம்பி கிச்சாவுக்கு டாலர் டிப்ஸ் அளித்து விட்டு யோகர்ட்டை (Yogart) பூசிக்கொண்டு கர்டு பாத் (Curd Bath) எடுக்க ஆரம்பித்தார்கள். இப்படியாக கிச்சாவின் அதிர்ஷ்ட அலை ஃப்ளோரிடா பீச்சிலும் வீசி வீசி அடித்தது.
இரண்டாம் நாள் ஃப்ளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி லேண்ட்டை பார்க்கப் போனோம். அங்கு வால்ட் டிஸ்னி வம்சத்தினரின் இடது கையாக இருக்கும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சோலையப்பன் (வலது கை இன்னமும் விடாமல் சுட்டிகளின் சந்தோஷத்துக்காக மிக்கி மவுஸ், டொனால்ட் டக்குகளை அலுக்காமல் உருவாக்கிக்கொண்டிருக்கிறது) எங்களுக்கு டிஸ்னி லேண்டை சுற்றிக்காட்டியதோடு சுவைபட விளக்கவும் செய்தார்.
“மிஸ் இனிது, அவள் கிஸ் இனிது என்பர் – வால்ட் டிஸ்னி லேண்ட் காணாதவர்” என்று நாங்கள் கோரஸாக குரல் கொடுத்துப் பாடும் அளவுக்கு டிஸ்னி லேண்ட் சூப்பராக இருந்தது. குழந்தைகளுக்கான டிஸ்னி லேண்டில் கிழக் குழந்தையான கிச்சா துள்ளி விளையாடினான்.
– தொடரும்…
– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.
![]() |
கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
வளர்கவி
June 6, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 6, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 6, 2026
