அப்பாவின் மீசை




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மணியடித்துப் பள்ளிக்கூடம் விட்டானபோதிலும், அறுத்துவிட்ட கன்றுக்குட்டி மாதிரி வீட்டுக்கு ஓட, அன்று அவனுக்கு மனமில்லை. புத்தகப் பையைத் தோளில் தொங்க விட்டுக்கொண்டு, கொஞ்சம் யோசனையாகவேதான் நடந்தான்.

காலையில் வீட்டைவிட்டு வரும்போது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை. எப்படி ஆரம்பித்ததென்றே சரி யாய்த் தெரியவில்லை.
அவனாகத் தனியே உட்கார்ந்துகொண்டு, காகிதத்தில் கத்திக் கப்பல் செய்துகொண்டிருந்தான்— இல்லை, செய்ய முயன்று கொண்டிருந்தான்.
மத்துப் போட்டுக் கடையும்போது மோர் சுழல்வது போல், கொஞ்சநேரமாகவே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் ஏதோ பொருமிக்கொண்டிருந்தது. இன்னதுதான் என்று சரியாய்த் தெரியாமல் வார்த்தை தடித்துக்கொண்டே போயிற்று. அப்பாவின் குரல் சற்று உரத்திருந்தது; அம்மா வின் குரலோ, அறுத்தது தெரியாமல் ரத்தம் துளிக்கும் கத்தி யின் கூர்மைபோல், நயத்திருந்தது.
திடீரென்று நாற்காலியை முரட்டுத்தனமாய்ப் பின்புறம் தள்ளிக்கொண்டு எழுந்து, தோள் கடையில் குறுகிய கழுத் துடன், அம்மாவை நோக்கி அப்பா வீச்சுநடை போட்டுக் கொண்டு வந்தபோதுதான், கனவு கண்டு விழித்தவன்போல், அவனுக்குச் சுற்றுப்புற விவகாரங்களின் நினைவு வந்தது.
அம்மா ஏதோ துணியின்மேல் தலையைக் கவிழ்ந்து கொண்டு தைத்த வண்ணம், பாணங்களை விட்டுக்கொண்டிருந்தாள்: அப்பா தன்னை நோக்கி வருவதைப் பார்க்கையிலேதான், அவளுடைய கண்கள் பெரிதும் பெரிசாயின; பயத்தினால் விழிவெள்ளைகள் கிறுகிறுவென்று சுழன்றன “எல்லையை மீறி ஏதோ வார்த்தையைக் கொட்டிவிட்டோம்” என்று, அவளுக்கே அப்போதுதான் புலனாயிற்று. அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும், அவள் உடலெல்லாம் வெலவெலத்துத் துணி மாதிரியாகிவிட்டது. முன் மயிர் நெற்றியில் சரிய, கடற்கரையோரத்தில் வளர்ந்த சவுக்குப் புதர்போல் அடர்ந்த புருவத்தினடியில் இயற்கையிலேயே மஞ்சள் பூத்த மேட்டுவிழிகள் பளபளக்க. மூக்குநுனியும் அதனடியில் புது மீசையும் துடிதுடிக்க, அப்பா பல்லைக் கடித்துக்கொண்டு, நேரே பட்டாளத்து லாரி மாதிரி அம்மா வை நோக்கி வந்தாள்
“இல்லை, வேண்டாம்! வேண்டாம்! ஐயோ!…” என்று கத்தக்கூட நேரமில்லை; குரல் தொண்டையில் உறைந்து போயிற்று.
அப்பா நேரே வந்து அம்மாவின் முதுகில் ஓங்கி ஓர் அறை அறைந்தார்.
‘கிறீச்!’ என்று ஓர் அலறல் போட்டு, அம்மா சுவர் ஓரமாய்க் குப்புற விழுந்தாள்.
“அம்மா… அம்மா!” என்று கூக்குரலிட்டுக்கொண்டு, இவன் போய் அவள்மேல் விழுந்தான். அப்பா ஒருமுறை இவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துவிட்டு, வழியில் கிடந்த தையல் சட்டத்தையும், ஒன்றிரண்டு பாத்திரங்களையும் உதைத்துத் தள்ளிவிட்டு, வாசற் கதவைப் படாரென்று சாத்திக்கொண்டு, வெளியே போய்விட்டார்.
அம்மா மெல்ல எழுந்திருந்தாள்.
அம்மாவைப் பார்க்கச் சஹிக்கவில்லை. தலை மயிரும் துணியும் அலங்கோலமாய்ப் போயிருந்தன. வலது கையில் ஒரு வளையல் உடைந்து, இசைகேடாய் மணிக்கட்டில் கீறி, ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அம்மா வாயைத் திறந்து அழவேயில்லை. ‘பொய்’க் கன்றுக்குட்டியை மடியில் முட்ட விட்டுத் தெருவில் பால் கறக்கும் பால்காரனின் பசுவைப் போல், அம்மாவின் கண்களில் கண்ணீர் தாரை தரையாய் வடிந்துகொண்டிருந்தது. அவள் இரண்டொரு தடவை முன்றானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ஆனால், கண்ணீர் நிற்கவில்லை. அது துளித்துக்கொண்டே யிருந்தது; கணகணவென்று நெருப்பு மாதிரி கொதித்தது அந்தக் கண்ணீர். அம்மா அப்புறம் அதைத் துடைப்பதையும் நிறுத்திவிட்டாள்; தன்னிச்சையாய் அது வழிந்துகொண்டே யிருந்தது. அதோடு அவள் எழுந்திருந்து, வளையல் துணுக்கையெல்லாம் சீராய்ப் பொறுக்கி வாசலில் எறிந்து விட்டு. இவனுக்குத் தலையை வாரி, பொட்டிட்டு, சொக் காயும் நிஜாரும் போட்டுவிட்டு, புத்தகப் பையைத் தோளில் மாட்டிவிட்டு, இவனைப் பள்ளிக்கூடம் போகத் தயார் செய்துவிட்டு, அவள் மாத்திரம் சமையல் உள்ளுக்குள் போய் முன்றானையை விரித்துக் குப்புறப் படுத்துவிட்டாள்.
சமையல் உள் வாசல்படிக்கு அந்தப் பக்கம் ஒரு காலும் இந்தப் பக்கம் ஒரு காலுமாய், இவன் தயங்கித் தயங்கி நின்றான். அவளைத் தேற்ற ஆயிரம் யோசனைகள், இவனது உள்ளத்தில் எழுந்தன. ஆனால், வெட்கமும் வார்த்தைகளும் வந்து தொண்டையை அடைத்தன. அம்மாவை இப்படி விட்டுப் போக, அவனுக்கு மனம் வரவில்லை.
“போடா! பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுத்து…”
லஜ்ஜையினால் முகம் சிவக்க, குனிந்த தலையுடன் அவன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான்.
இப்போது வீட்டுக்குத் திரும்பவேண்டும்.
அவன் வீட்டில் சண்டை நடக்கிறதே என்ற கவலை கொஞ்சங்கூட இல்லாமல், தெருவில் ஜனநடமாட்டம் வழக்கம்போல் நிறைந்துதான் இருந்தது. தெருவிலே, பெரிய வர்களும் ஆண்களும் வாலிபப் பெண்களும், பேசிக்கொண்டும் சிரித்து இடித்துக்கொண்டும் சென்றார்கள். மோட்டாரும் வண்டிகளும் பறந்தன. ஒரு ஜட்கா வண்டிக்காரன், தன் வண்டி ஓடிக்கொண்டேயிருக்கையில், சாட்டைக் கழியைச் சக்கரத்தின் பட்டைகளுக்கிடையில் கொடுத்து, கடகட என்று சத்தம் உண்டுபண்ணி, குதிரையை ஜோராய் விரட்டி னான். அவனுங்கூடத் தமாஷாய்த்தான் இருந்தான்.
பெரிய கூடைபோல் ஒரு முண்டாசு கட்டி, கிறுதா மீசையை ஷோக்காய் முறுக்கிவிட்டிருந்தான் அந்த ஜட்கா வண்டிக்காரன்.
ஜட்கா வண்டிக்காரனின் மீசையைப் பார்த்ததும், இவனுக்கு அப்பாவின் மீசை நினைவு வந்தது: உடனே சண்டையின் ஞாபகமும் கூடவே வந்தது; முகம் மறுபடியும் தொங்க ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால், வீட்டில் சண்டை வந்ததே அப்பாவின் மீசையால்தான். நடந்ததெல் லாம் இப்போதுதான் இவனுக்குச் சரியாய் ஞாபகம் வந்தது. இவன் காகிதக் கப்பல் செய்வதில் முனைந்திருந்த போதிலும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நடந்த தர்க்கத்தை, இவனது உள்நினைவின் ஒருபாகம், இவன் மனதிலே பதிவு செய்து கொண்டிருந்திருக்கிறது.
ஆம். இப்போதுதான் எல்லாம் ஞாபகம் வருகிறது,
அப்பா சலூனுக்குப் போய் மயிர் வெட்டிக்கொண்டு, புதிதாய் மீசை வைத்துக்கொண்டு வந்தார். மெல்லியதாய், பென்சிலால் கோடு கிழித்தாற்போல், ஒரு துளிர் மீசை. அப்பா கண்ணாடிக்கெதிரில் உட்கார்ந்துகொண்டு, அதைத் தொட்டுத் தொட்டு, நுனியை முள்ளாய் முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். அப்பா படும் சிரமத்தைப் பார்க்க இவனுக்கே வேடிக்கையாயிருந்தது. இவன் பெரியவனாய்ப் போனால், இவனுக்குக்கூட மீசை வைத்துக்கொள்ளத்தான் இஷ்டம். இப்போதேகூட வைத்துக்கொள்ள இஷ்டம்தான்; ஆனால், ரோமம் முளைக்கமாட்டேனென்கிறதே!
என்றாலும், அம்மாவுக்கு அது வேடிக்கையாயில்லை னோ தெரியவில்லை. என்னவோ மொணமொண என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
”பால்காரச் சின்னான் மாதிரி – விறகுவெட்டி வேலன் மாதிரி. பிராம்மணாளாய் லட்சணமாய் இருக்கப்படாதோ போயும் போயும் புத்தி இப்படியா போகணும்! முகத்திலே கொடூரம் வழியறது. என்று அம்மா என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
அப்பா சிரித்துக்கொண்டு, இதையெல்லாம் விளையாட் டாய் எடுத்துக்கொண்டு மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால், அம்மா படிப்படியாய்த் தைரியமாய் மீறிக்கொண்டே வந்து அப்புறம் “கள்ளப் பார்ட்டு மாதிரியிருக்கு; இந்த ராட்சஸ முழிக்கும் மீசைக்கும் சகிக்கவில்லை – பட்டாணித் துலுக்கன் மாதிரியிருக்கு. என்று புதுப்புது மாதிரிகளையெல்லாம் அடுக்க ஆரம்பித் ததும், அப்பாவுக்குச் சிரிப்பு எல்லாம் பறந்துபோய், கண் களில் சிவப்பு நரம்புகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அப்புறம் என்ன? அவ்வளவுதான்- அம்மாவின் முதுகிலே ‘பளீர்’ என்று அறைதான்!
“அரே தம்பி – இவ்வளவு பெரிய பிளாட்பாரம் கட்டி விட்டிருக்காங்களே – அது போதல்லையா உனக்கு? ஏன்? மோட்டாரில் விழுந்து சாவணும்னு இஷ்டமா? மாட்டிக் கொண்டால்,ஆள் ‘அட்ரெஸ்’ இல்லாமல் போயிடுவையே! பொறுக்கறத்துக்கு எலும்புகூட அகப்பாடதே – ஏண்டா தம்பி, உன் உடம்பிலே எலும்பு இருக்குதா? பம்பிளீஸ் நார்த்தம் பழம் மாதிரியிருக்கையே!-‘”
இவ்வாறு, கோபிப்பதுபோல் அபிநயித்துக் கொண்டு, இவனை ஒரு போலீஸ்காரன் அலக்காய்த் தூக்கி, பிளாட் பாரத்தில் ஏற்றிவிட்டு, கன்னத்தைச் சலுகையாய் நிமிண்டி அனுப்பினான்.
ஆமாம், இனிமேல் ‘அட்ரெஸ்’ ஒன்றை ஒரு சீட்டில் எழுதி ஜேபிக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். அது துண்டுக் காகிதமாயிருந்தால், கீழே விழுந்தாலும் விழுந்து விடும். ஒரு குண்டூசியைக் கொண்டு மெடல் மாதிரி அதைச் சொருகிக்கொள்ள வேண்டும். வாத்தியாரைக் கேட்டால், கொடுப்பார். கொடுப்பாரா? “ஏன்? என்னத்துக்கு?” என்று தான் கேட்பார்.
“நான் செத்துப் போனால், என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா? அதற்குத்தான்” என்று சொல்ல வேண்டும்.
சாவைப் பற்றிய எண்ணம் அவனது சிந்தனைத் தெடாரில் புகுந்ததும், யோசனைகள் இன்னமும் ரொம்பச் சுவாரஸ்யமாகி விட்டன. சாவதானமாய்ச் சிந்தனையில் மூழ்கிய வண்ணம், குனிந்த தலையும் தளர்ந்த நடையுமாய் நடக்கலானான். நடையின் தழதழப்பில், கொழு கொழுப் பான அவனுடைய கன்னத்துச் சதை அதிர்ந்தது.
என்னவோ செத்துப்போவது, என்று கேள்விப்பட்டிருந் தானேயொழிய, செத்துப்போனவர்களைப் பார்த்த ஞாபக இல்லை. செத்துப்போனால் பேச்சு மூச்சு இருக்காது. செத்துப்போனவர்கள் திரும்பவும் எழுந்திருக்கமாட்டார்கள் என்று கேள்வி.
ஆனால், இப்போது சட்டென்று, பல நாளைக்கு முன் ஒன்று நடந்ததே, அது ஞாபகம் வந்தது.
இது மாதிரிதான், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில், கோயில் குளம் – சுற்றி இரும்புக் கிராதி போட்டிருந்தது; அதுகூட இதோ வந்து விட்டது — அதன் ஒரு துறையின் படிக்கட்டில் ஏகப்பட்ட பேர் ஒன்றாய்க் கூடி நின்றுகொண்டு, நீரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்துக்கொண்டு, வார்த்தை புரியாமல் இறைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
என்ன கப்பலா? திமிங்கிலமா?
அந்தக் கூட்டத்திலே இவனும் இடித்துப் புகுந்து கொண்டு, ஒருவனுடைய முழங்கையடியில் அரைக்கண நேரம் தெரிந்த சந்து வழியாய், திணறிக்கொண்டு ஒற்றைக் கண்ணைச் சாய்த்த வண்ணம். உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றான்.
பாசிப்பச்சையேறிய தண்ணீரில் ஒரு வெள்ளை வேஷ்டிக் கொப்புளம் (உள்ளே காற்றுப் புகுந்துகொண்டதால் உண்டான கொப்புளம்) மிதந்து கொண்டிருந்தது. பூ! இவ்வளவுதானா? இதுக்கா இத்தனை அமக்களம்! இதை விடப் பெரிய கொப்புளம் இவனால்கூடப் பண்ணமுடியுமே! இன்னும் கொஞ்சம் கழுத்திலே சுளுக்கேற, தலையை நீட்டிப் வார்த்தான். வேஷ்டிக் கொப்புளத்தை ஒட்டினாற்போல் ஒரு கைமுஷ்டியும் தென்பட்டது. நெருக்கிக்கொண்டு பார்த் தான். கனத்த மயிர் தெரிந்தது.
இன்னமும் சரியாய்ப் பார்ப்பதற்குள். இடுப்பு மரத்து விட்டது.
“அட பாவமே! சின்னப் பையன் மாதிரியிருக்குதே!…”
“படி சறுக்கியிருக்குமப்பா!…”
“படிதான் சறுக்கித்தோ… வீட்டிலே கோவம் பண்ணிக் கிட்டு வந்து விழுந்துட்டானோ?…”
“இந்தக் காலத்துப் பசங்களை என்னன்னு சொல்றது! பிறக்கிறபோதே, சாவுக்குக்கூடப் பயப்படமாட்டேன்றாங்க. நெஞ்சு அவ்வளவு துணிஞ்சுபோச்சு…”
“ஐயையோ…”
அந்த வீறல் அங்கே இருந்த அத்தனைபேர் உள்ளத்தையும் உடலையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. ஏன் உலுக்காது? பெற்ற பிள்ளையை இரண்டு நாள் இரவும் பகலுமாய்த் தேடித் தேடி அலைந்து ஏற்கெனவே உள்ளம் நைந்திருக்கும் தாய், இப்போது திடீரென்று அவனைப் பிரேதமாய்க் காணுகையில், படீரென்று உடையும் அவளுடைய இதயத்தின் விரிசலினின்று வெளிப்படும். வீறவல்லவா அது? தாயுள்ளத்தின் பிரளயமல்லவா அது!
அந்த வீறலைக் கேட்டுப் பயந்து அங்கேயிருந்து வீட் டுக்கு ஓடிவந்த ஓட்டத்தில் இவனுக்கு ஏற்பட்ட படபடப்பு அடங்கவே, அரைமணி நேரமாயிற்று. சாவைப் பற்றி அவனுக்கு அவ்வளவுதான் தெரியும்.
திடீரென்று ஒரு பயங்கரமான எண்ணம் அவன் மனதில் பிறந்தது. பிடரி சில்லிட்டது நடையையும் மறந்து, சற்று நேரம் அப்படியே நின்றான்.
அம்மா அப்படிக் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருந்தாளே .. அப்படியே செத்துப்போயிருந்தால்…?
ஜனங்கள் எப்படி எப்படியோ செத்துப்போகிறார்களே! அம்மா அப்படிக் கவிழ்ந்து படுத்தே செத்துப்போயிருந்தால்…!
மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். இப்போது கொஞ்சம் வேகமாகவே நடந்தான்; கொஞ்சம் பீதியோடு தான்.
இவன் உள்ளே போவான். பின்னாலேயே இவனுடைய அப்பா. ஆபிஸிலிருந்து வந்து நுழைவார். இவன் காப்பி குடிப்பதற்காக, நேரே சமையல் கட்டிலே புகுவான். தான் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புகையில், அம்மா எப்படிப் படுத்துக்கொண்டிருந்தாளோ அப்படியே இப்போதும் கிடப்பாள்; இரு கைகளுக்கும் இடையில் கவிழ்ந்த முகத் துடன்தான் கிடப்பாள்.
“அம்மா! அம்மா!”
இவன் ‘அம்மா-அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டோ அம்மாவை மெல்லப் புரட்டி நிமிர்த்துவான்.
புரட்டி என்ன பிரயோசனம்? வெறுமையே உடல்தா துவளும்; அன்று ஒருநாள் ஓட்டலிலிருந்து அப்பா வாங்கிக் கொண்டு வந்தாரே அல்வாத்துண்டு, அந்த மாதிரி தளதள என்று துவளும்.
அம்மாவின் உடம்பு ரொம்பவும் மிருது; இது அவனுக்குத் தெரியும். அன்றைக்கு ஒரு தடவை இவனுக்கு வாயில் நுழை பாத பெயருடன் உயர்ந்த ரகமான ஒரு காய்ச்சல் அடித்ததே. அப்போது இவனை மார்மேலும் தோள் மேலும் மடிமேலும் போட்டுக்கொண்டு, சீராட்டினவர் யார்? அம்மாதானே? இனிமேல் சீராட்ட ஒருவரும் கிடையாது.
அப்பா உள்ளே வருவார்.
“என்னடா?…”
அவன் கண்களிலிருந்து சிந்தும் அலட்சியம் வெறுப்பு இந்த இரண்டும் சேர்ந்த தீயிலே, அப்பா ஏன் இன்னமும் எரிந்து போகவில்லை? இனிமேல் இவனுக்கு அம்மா இல்லை; அம்மாவைக் கொன்றதால், அப்பாவும் இல்லை.
இவன் நிர்க்கதியான குழந்தையாகிவிடுவான். அப்படியே எழுந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு வீட்டுக்கு வெளியே போய்விடுவான்.
எங்கே? அதுதான் தெரியவில்லை. எங்கே? எங்கேயாவது போகிறது. தாயும் தகப்பனுமில்லாத குழந்தைக்குச் சாதம் போட, எத்தனைபேர் காத்திருக்கமாட்டார்கள்?
ஆனால், அவன் உலகத்தை வெறுத்துவிடுவான். ‘அப்படியென்றால் என்ன?’ என்று மனதுக்குள்ளே ஒரு குட்டிக் குரங்கு கேட்டது. அது என்னவோ! ஆனால், அவன் உலகத்தை வெறுத்துவிடுவான். அம்மா சொன்னாளே துருவன் கதை, அதுமாதிரி – பிரகலாதன் கதைகூட, அம்மா சொல்லியிருக்கிறாள்: ‘இரணியாய நமஹ… துருவனாகி விடலாமா? பிரகலாதனாகலாமா? துருவனாவதுதான் மேல். துருவனானால் நட்சத்திரமாகிவிடலாம்; மேலே போய் “மினுக்கு மினுக்”கென்று மினுக்கலாம்.
ஆனால், அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், எல்லாம் பெரிய ஏமாற்றமாயிருந்தது. அம்மா சமையலறையில் செத்துக்கிடக்கவில்லை; கூடத்தில் பீரோக் கண்ணாடி யெதிரில் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு தலை வாரிக் கொண்டிருந்தாள். அம்மாதான் ஏகமாய் ‘மினுக்’கிக் கொண்டிருந்தாள்.
சோப்புப் போட்டுக் கழுவி வெளேரென்றிருந்த முகத்தில் லேசாய்ப் பவுடர் பூசி, நெற்றியில் பச்சைக் கலர் குங்குமப் பொட்டு வைத்திருந்தாள்.
இதுவரையில் அவன் பார்த்திராத அவ்வளவு எண் ணெய்ப் பளபளப்பு வடியும் வெண்பட்டும் ஜாக்கெட்டும் அவள் அணிந்திருந்தாள். மார்பிலே புடவைமீது ஒரு ‘புரூச்’ – புத்தப் புதிசு; கல்லிழைத்தது; ஒளிவீசும் தங்க ‘புரூச் – அணிந்திருந்தாள். அப்பா புதிசாய் வாங்கிக் கொண்டுவந்து தந்திருப்பார். பக்கத்து அறையிலிருந்து அப்பா கூடத்துக்கு வந்தார். அப்பாகூட ஜோராய் டிரஸ்” பண்ணிக்கொண்டிருந்தார்.
“நேரமாயிடுத்து-இவனுக்குச் சாதத்தைப் போட்டுத் தூங்கப் பண்ணு.”
“கூடக் கூட்டிக்கொண்டு போவோமே!” என்று சிரித்துக்கொண்டே அம்மா சொன்னாள். அவளிடம் கோபத்தையே காணோம்.
“ஆமாம், கூட ஒரு நாய்க்குட்டியிருந்தால் அதையும் கூட்டிண்டுவா… இது அங்கே போனால், தூங்கி வழியும் திரும்பி வருகிறபோது, எவ்வளவு நாழியாகிறதோ என்னவோ! …பஸ் அகப்படுகிறதோ இல்லையோ! நடந்து வருகிறோமோ என்னமோ! சுருக்கத் தூங்கப்பண்ணு.”
அம்மா இவனுக்குச் சாதம் போட்டாள்.
“சமத்தாப் படுத்துண்டு தூங்குடா, கண்ணு. முனியம்மாளைத் துணைக்கு வந்து படுத்துக்கச் சொல்றேன்… நாங்களெல்லாம் பத்து மணிக்கு வந்துடுவோம்.”
இவன் வாயைத் திறந்து, ஒரு வார்த்தை பேசவில்லை. கட்டிலில் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டான். அவனுக்குப் பயங்கரமான ஆத்திரமும் அசூயையும் உண்டாயின. அந்த உள்ள எழுச்சியில் வயிற்றைக் குமட்டி வாந்திகூட எடுத்துவிடுவானோ என்று தோன்றியது. பல்லைக் கடித்துக் கொண்டு, கண்ணை இறுக மூடிக்கொண்டான். இப்போது தனக்கு அப்பாமேல் அதிகக் கரிப்பா, அல்லது அம்மாவின் மேல்தான் அதிகக் கரிப்பா என்று அவனுக்கே புரியவில்லை.
அம்மாவும் அப்பாவும் புறப்பட்டுவிட்டார்கள். “போய் வறோம். சமத்தாயிரு” என்று மறுபடியும் ஒரு தடவை விடைபெற்றாள் அம்மா. இவன் கவிழ்ந்து படுத்தபடியே, “உம்” என்று முனகி, கடைக்கண்ணால் பார்த்தான். அம்மா முன்னே, அப்பா பின்னே நடந்தார்கள். அப்பா மீண்டும் ஒருமுறை இவனைத் திரும்பிப் பார்த்தார். அடேடே! இத்தனை நேரமும் இவன் கவனிக்கவேயில்லை. அப்பாவின் முகத்திலே புதிதாய் முளைத்திருந்ததே அந்தத் துளிர் மீசை, அது…அதை இப்போது காணோம்!
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.