அந்த நிமிடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 174 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

அந்த நிலாக்காலம் இரவிலும் உலகம் மெல்லிய நிலா வெளிச்சத்தில் விழித்தே இருந்தது. ஹற்றமரேன் ஹொட்டலின் உணவகம் பரபரப்பாகக் காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக உணவகம் நிரம்பி வழிந்தது. மெல்லிய பியானோ இசையை இசைத்தபடி பியானோ வல்லுநர் தன்னுடைய கரங்களையும் தலையையும் அசைத்தபடி உணவருந்திக் கொண்டிருந்தோருக்கு மெல்லிய இனிமையான இசையை வழங்கிக் கொண்டிருந்தார். ஒரு ஓரமாக கடலலையின் இரம்மியத்தை இரசித்தபடி சித்ராவும் வினித்தும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கடலலையின் சங்கீதமும், பியானோ இசையில் இரம்மியமும் கலந்த ஒரு இசையின் இரசனையுடன் உணவு இருவருக்கும் உள் நுழைந்து கொண்டிருந்தது.

இருவரும் திருமணம் செய்து 5 வருடங்கள் கடந்து விட்டன. வினித் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி புரிகின்றான். இத்தனை வருடங்களும் தனக்குக் கிடைக்கின்ற வெளியூர்ப் பயணங்களை ஏதோ காரணங்களைச் சொல்லித் தவிர்த்து வந்தான். சித்ராவும் வினித்தும் 5 வருடங்கள் காதலித்து இருமனங்களும் ஒத்துப் போகவே இருவருக்கும் இடையில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்பதை முற்று முழுதாக நம்பிய பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள்.

சித்ரா ஒரு பாடசாலையில் ஆசிரியையாகப் பணி புரிகின்றாள். மாணவர்களிடம் அவள் காட்டுகின்ற தாயன்பு ஆசிரியை என்பதையும் மீறி அவளிடம் தீராக் காதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. பிரேமம் மலையாளப் படத்தின் நாயகி மலர் ரீச்சர் போல சித்ராவும் இளமையும் அழகும் மிக்கவள். வாழ்க்கையில் 30 வருடங்களையே கடத்தியிருந்தவளுக்கு மாணவர்கள் நண்பர்கள் போல இருந்தார்கள். அவளை வலம் வருவதும், அவளுடைய கட்டுப்பாடுகளை மீறாமல் நடந்து கொள்வதுமாக இருந்தார்கள்.

காலையில் இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பினால், மதியம் தாண்டி முதலில் வீட்டுக்குள் நுழைவது சித்ராவே. வீட்டுக்கு வந்தவுடன் வேலை முடிந்து களைப்புடன் வரும் வினித்துக்கு ஏதாவது சிற்றுண்டி தயாரித்து விடுவாள். இரவுணவை ஏதாவது உணவகத்தில் முடிப்பார்கள். இல்லையென்றால், இருவரும் இணைந்தே வீட்டில் சமைத்து உண்பார்கள்.

காதலுக்கும், அன்புக்கும், விட்டுக் கொடுப்புக்கும், தியாகத்துக்கும் எந்தவித குறையும் இருவருக்கிடையிலும் இருந்ததில்லை. ஆனால், இருவருக்கும் மனத்துக்குள் பெரிய பாறாங்கல்லாக அழுத்தும் கவலை தமக்கென்று ஒரு வாரிசு இல்லையே என்னும் குறையே.

படித்த அறிவு மட்டுமல்லாமல் பகுத்தறிவும் கொண்ட இருவரும் தமக்குரிய பரிசோதனை எல்லாம் பார்த்து விட்டார்கள். இருவருக்கும் எந்தவிதக் குறையும் இல்லையென்று வைத்தியர்கள் சொல்லிவிட்டார்கள். குழந்தை வீட்டில் விளையாட வேண்டும், இருவரையும் பிரதிபலித்துக் காட்டும் வாரிசுகள் தமக்கும் கிடைக்க வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசை இருவருக்கும் உள்ளத்துக்குள் எல்லை மீறி இருந்தது.

தம்மாலான முயற்சிகள் எல்லாம் எடுத்து விட்டார்கள். ஆனால் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பெற்றால்தான் பிள்ளையா? என்று நினைத்த போது இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் என்று காலங்கள் தான் கடந்தது. வினித்தின் முகத்தில் ஏமாற்றத்தை நீக்க வேண்டும் என்று சித்ரா வேண்டாத கடவுள் இல்லை. சித்ராவின் மனத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்று நாளும் பொழுதும் கவலையிலே காலத்தைக் கடத்தினான் வினித்.

குழந்தை என்பது தம்பதியர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஓர் அடையாளம். இவர்கள் ஒரு பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று இயற்கை தீர்மானிக்க வேண்டும். இந்தப் பெற்றோரே இந்தப் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று பிரபஞ்சம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படியில்லையென்றால், அந்த பாக்கியம் இந்தத் தம்பதியினருக்கு இல்லையென்று வேறு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும். ஆனால், வினித்துக்கு இன்னும் தனக்கென்று ஒரு பிள்ளை சித்ரா மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்று வெள்ளக்கிழமை இரவுணவு உணவகத்தில் உண்பதற்காகவே ஹற்றமரேன் ஹொட்டலுக்கு இருவரும் வந்திருந்தார்கள். உணவுண்டு முடித்து உரையாடிக் கொண்டிருக்கும் சமயம் சர்வர் ஏதாவது குடிப்பதற்கு வேண்டுமா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் வேறு வாடிக்கையாளர்களை இருத்தி விடும் துடிப்பு அவனுக்கு இருந்தது. இவர்கள் இருக்கும் நேரம் முழுவதும் ஏதாவது வாங்கிக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏதாவது பின் உணவாக இனிப்பு உணவு வாங்கிச் சாப்பிட வேண்டும். இருக்கும் இடத்திற்கு வருமானத்தை எதிர்பார்த்தே உணவகத்தார் எலி போல முகர்ந்து கொண்டிருப்பார்கள்.

கடற்காற்றில் எல்லை கடக்கும் சித்ராவின் கூந்தலை வருடியபடி இருந்த வினித் திடீரென்று சித்ராவின் கைகளைப் பற்றினான்.

ஏதோ ஒரு செய்தியைத் தன்னிடம் கூறுவதற்கு எத்தனிக்கின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சித்ரா

”என்ன மெற்றர் வினித்? என்றாள்.

”சித்ரா! நீ இந்த முறை இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். திங்கட்கிழமை வேலை விடயமாக நான் ஜெர்மனி போக வேண்டியிருக்கிறது. இந்தத் தடவை என்னால், மறுப்புச் சொல்ல முடியாமல் போனது. 6 மாதங்களே நான் அங்கு பணிபுரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. 6 மாதங்கள் முடிந்ததும் ஓடி வந்து விடுவேன். இந்தப் பயணம் எனக்கு நல்லது என்றுதான் நினைக்கிறேன் சித்ரா. அங்குபோய் ஒரு தடவை என்னை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று நினைக்கிறேன். சிலவேளை ஏதாவது நல்ல மருத்துவ வசதி கிடைத்தால் எங்களுடைய குறை தீர்ந்துவிடும். இறுதியாக முயற்சி செய்து பார்ப்போமே” என்றான்.

சித்ராவுக்கும் இது சரியென்றே பட்டது. ஒருநாளும் வினித்தைப் பிரிந்தறியாத சித்ராக்கு நிச்சயமாக அவனைப் பிரிந்திருக்கும் காலங்கள் பெரிய கவலையாகவே இருக்கும். வாழ்க்கையில் எல்லாமே பழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமே என்பதை அவள் விளங்காதவள் இல்லையே. ஆனாலும்,

”ஜெர்மனியில் மருத்துவக் காப்புறுதி செலுத்தாதவர்களுக்கு மருத்துவச் செலவு அதிகம் என்று சொல்லுகின்றார்களே. ஒரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேனே!” என்றாள்.

”சித்ரா! பணமெல்லாம் இரண்டாம்பட்சம், முதல் பிள்ளை. அதுதான் முக்கியம். நீ இங்கு ஆறு மாதங்கள் வாழப் போதிய பணவசதி உன்னிடம் இருக்கிறது. கடைசி முயற்சியாகச் செய்து பார்ப்போம்” என்றான்.

பாடசாலைப் பணிகளும் மாணவர்களின் உதவியுமே மணிக்கூட்டுக் கம்பிகளை அவளையறியாமலே துரிதமாக ஓடச் செய்யும். அதனால், தனிமை பெரிய தாக்கமாக இருக்காது என்பது அவளுக்குத் தெரிந்ததே.

”பயணம் நல்ல நோக்கமாக இருந்தாலும் பிரிவு என்பது பெரிய தாக்கம் தானே வினித். உங்களைத் தவிர எங்களுடைய வாரிசு எனக்கு முக்கியமா? என்ற கேள்வி என்னுடைய மனத்துக்குள் புகுந்து வெகு நாளாகி விட்டது வினித். ஜெர்மனிப் பயணம் சிலவேளை எனக்கும் உங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியைத் தந்துவிட்டால் என்ன செய்வது?’’ என்று இயல்பாகவே எதற்கும் சந்தேகித்துத் தெளியும் சித்ரா வினித்திடம் வினவினாள்.

”சித்ரா தொடங்கிட்டியா? இந்த சந்தேகப் புத்தி உன்னை விட்டுப் போகாதே. உன்னைத் தவிர இந்த உலகத்திலே எந்த ரம்பையும் என்னைக் கவர முடியாது. நான் தானே ஆறு மாதத்தில் திரும்பி வந்துவிடுவேன். அங்கு நிற்கப் போகின்றேன் என்றால் கூட நிற்க முடியுமா? நான் வேலையில் கவனம் செலுத்துவேனா? உன்னுடைய சந்தேகத்துக்கு எல்லாம் கவனம் செலுத்துவேனா? இந்த ஒருதடவை இறுதியாக என்னுடைய விருப்பத்துக்கு விடேன்” என்றான்.

எதனையும் எடுத்தெறிந்து பேசாது. ஆறுதலாக எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் இயல்பான குணம் கொண்டவன் வினித்.

நல்லது நடந்தால் இருவருக்கும் மகிழ்ச்சியே என்று நினைத்த சித்ரா சம்மதித்தாள். வீட்டுக்குப் போகும் வரை ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தாள். எங்கே? எப்படி? என்று கேள்விகளின் வடிவங்கள் மாறி மாறி வந்தன. வினித்தும் சிரித்தபடி கோபப்படாமல் விடைகளை அடுக்கினான். ஜெர்மனி டுசெல்டோஃபில் வினித்துடைய நண்பன் இருக்கின்றான். அவன் வினித் ஜெர்மனியில் தங்குவதற்கும் மருத்துவரைச் சந்திப்பதற்கும் உரிய வசதிகளைச் செய்து வைப்பதாகக் கூறியுள்ளான்.

திங்கட்கிழமை காலை கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு ஒரு வாடகைச் சிற்றூந்தில் வினித் சென்றான். அவனை வழியனுப்பிவிட்டு சித்ராவும் பாடசாலைக்குச் சென்று விட்டாள். அன்றைய தினம் 6 மணிக்கு விமானம் புறப்படும் நேரம் என்ற காரணத்தினால், 3 மணிக்கு விமானநிலையத்தில் நிற்க வேண்டும். அதனால், 2 மணிக்கு வினித் புறப்பட்டாக வேண்டும் என்று அதிகாலை எழுந்து அவனை அனுப்பிவிட்டு உறங்கிய சித்ராவுக்கு ஒழுங்கான நித்திரை இல்லை. அதனால், பாடசாலையில் இருந்து வந்தவுடன் தூங்கிப் போனாள்.

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அவர்களுடைய வீட்டில் விருந்தினருக்காக ஒரு அறையை வைத்திருந்தார்கள். அதில் திருகோணமலையில் இருந்து சித்ராவின் பெற்றோரும், யாழ்ப்பாணத்திலிருந்து வினித்தின் பெற்றோரும், உறவினர்களும் வந்தால் தங்குவார்கள். நீர்கொழும்பு விஜயரெத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலேயே சித்ரா ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றாள். மாணவர்கள் அடிக்கடி இவளைப் பார்க்க வருவதும், அவளுக்கு வேண்டிய பொருட்களைக் கொள்வனவு செய்வதும், அவள் பக்குவத்தில் உருவாகிய உணவுகளைச் சுவைப்பதும் என்று மாணவப் பட்டாளமே அவளுக்காக இருக்கும். 11, 12 ஆம் வகுப்புக்கள் படிக்கின்ற மாணவர்கள் என்பதால் சித்ராவை விட 10,12 வயதுகள் வித்தியாசமே அவர்களுக்கும் இவளுக்கும் இடையில் இருந்ததன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை கைத்தொலைபேசி அலறல் தட்டி எழுப்பியது. மறுமுனையில் அவளுடைய அக்காவே பேசினாள்.

”சித்ரா வினித் போயிற்றாரா? எத்தனை மணிக்கு ஜெர்மனியில் ப்லைட் லேண்ட் ஆகுது?

”அக்கா. நான் நித்திரை. அவர் துபாயில் ரான்சிற் என்றபடியால் பின்னேரம்தான் போய்ச் சேர்வார்”

சித்ராவின் அக்கா, அவர்கள் குடும்பத்தில் முதல் பிள்ளையாகப் பிறந்தவள். சித்ரா பிறந்த போது அவளைப் பாசத்தோடு வளர்த்த பொறுப்பு அவளிடமே இருந்தது. தன்னுடைய பிள்ளையைப் போல கண்ணும் கருத்துமாக வளர்த்த அவள், சித்ராவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பாள்.

”சித்ரா வினித் வரும்வரை நீ தனியா வீட்டில் நிற்காதே. செந்திலனை அனுப்புகிறன் அவன் வினித் வரும்வரை உன்னோட நிற்கட்டும். இன்டைக்குப் பின்னேரம் வருவான். நான் அவனிட்ட சொல்லிப் போட்டேன். அவனக் கவனமாப் பார்” என்றாள் சித்ராவின் அக்கா.

”சரி அக்கா. இப்ப என்னைப் படுக்க விடு” என்று கூறியபடி தலையணையை முகத்திலே மூடியபடி மீண்டும் படுத்துவிட்டாள்.

சுகமாக வினித் ஜெர்மனியைச் சென்றடைந்து விட்டான். அவனுடைய நண்பன் ராஜன் விமான நிலையத்துக்கு வந்து அவனை அழைத்துச் சென்றான். கைகால்கள் இரத்த ஓட்டமில்லாது மஞ்சள் நிறமாகி விறைத்துப் போனது. மாரிகாலத்துக்கு அணியும் காலணியை அணியாத காரணத்தால், வாத்துப் போல நடந்து வந்து சிற்றுந்துக்குள் ஏறினான். கால்கள் தரையில் படுவதையே அவனால் உணர முடியவில்லை. விறைத்துப் போய் இருந்தது. ஏறிய பின்தான் மூச்சு விட்டான்.

”என்ன மச்சான் சரியான வெக்கையா இருக்கா?

”ஓம் சூரியன் 40 டிகிரியில எறிக்குது. எனக்கு வாயில வருது. எப்பிடிடா இந்த நாட்டில எல்லாம் வாழுறீங்க. மனிசனக் கொல்லுற குளிரா இருக்கு. அதுக்கு நம்ம நாடுதான் இருக்கு. சும்மா காத்தோட்டமா ஒரு சாறனக் கட்டினா ஹாயாக இருக்கலாம்”

கலகலவென்று சிரித்த ராஜனிடம்

”சித்ராக்கு வந்து இறங்கின விடயத்தைச் சொல்ல வேண்டும். ஒருக்கா உன்ர ரெலிபோனில சொல்லிட்டு வெளிக்கிடுவமே. உன்ர நம்பரத்தான் அவளுக்குக் கொடுத்திட்டு வந்தனான்” என்றான்.

ராஜனுடைய தொலைபேசியைப் பெற்று சித்ராக்கு அழைப்பு விடுத்தான். வினித் தொலைபேசி அழைப்பு சித்ராவை நித்திரையால் எழுப்பியது. விமானத்தின் வேகமும் காலத்தின் வேகமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. வந்திறங்கிய விடயத்தைச் சொல்லிவிட்டு தான் சிம் கார்ட் போட்ட பின்னர் நம்பர் தருவதாகவும், ஏதாவது அவசியம் என்றால், ராஜன் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கும் படியும் கூறிவிட்டு ராஜனுடைய வீடு நோக்கிச் சென்றான்.

வீதியோரமெங்கும் வெண்பஞ்சுகள் குவிந்து கிடந்தன. ஊசியிலைக் காடுகளின் அழகுக்கு அழகு செய்ய வெண்பூக்களை வானம் பொழிந்து கொண்டிருந்தது. பட்ட மரங்களே வீதியெங்கும் பரவலாகக் காணப்பட்டன.

”மச்சான். என்னடா இது இங்கிலீஸ் படத்தில பார்க்கிறது போல பேய் வீடுகள் போல இந்த வீடுகளைச் சுற்றிப் பட்ட மரங்கள். இந்த நாடுகளுக்கு இதுதான் செழிப்பா” என்று கேட்டான்.

”அழகே, அழகே இதுவும் அழகே. விடிஞ்ச பிறகு பாரு. எப்பிடி இருக்கும் என்று” என்று சொல்லியபடி பயணம் தொடர்ந்தான்.

படுக்கையில் கிடந்தபடி ஆறு மாதங்கள் என்றால், அரை வருடம். பூமி எத்தனை முறை சுழலவேண்டும். கணக்குப் போட்டாள். ஏன் மனிதன் இவ்வாறு வேலை பார்க்க வேண்டும். உடுக்கவும், உண்ணவும், படுக்கவும் வசதி இருந்தால் போதும்தானே. யாருமில்லாத ஒரு கிராமத்தில் ஒரு சின்ன வீடு எடுத்து உற்றார், உறவினர்கள் காணாத இடத்தில் நானும் வினித்தும் வாழ்ந்தால் போதும் அல்லவா. ”கல்யாணம் கட்டி ஐந்து வருஷங்களாச்சு. வயிற்றில் ஒரு புழு, பூச்சி இல்லையா?” என்று எங்களுடைய வாழ்க்கையில் மூக்கு நுழைக்க உறவுக்காரர்கள் இருக்க மாட்டார்கள். சுதந்திரமாகக் காற்றில் பறக்கும் சருகுகள் போல மனம் போன போக்கில் போகலாம் அல்லவா! எதிர்காலக் கனவுகளும் வேண்டாம். பிள்ளைகளுக்கு என்று மாய்ந்து மாய்ந்து உழைக்கவும் வேண்டாம். இரண்டு பேரும் எதற்கு இந்த ஓட்டம் ஓட வேண்டும்” என்று நினைத்தவளாய். உடனே ராஜனுக்கு அழைப்பு விடுத்தாள்.

”சித்ராதான் பேசு” என்று தொலைபேசியை ராஜன் கொடுத்தான்.

”இன்னும் நாங்கள் போய்ச் சேரவில்லை. என்ன விஷயம்?” என்றான்.

”எதுக்கு வினித். 6 மாதங்கள்? கெதியா வாங்கள். எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்” என்றாள்.

வினித் சிரிப்பை அடக்கமுடியாது சத்தமாகச் சிரித்தான். ”இதெல்லாம் விளையாட்டா சித்ரா. நாளைக்கு வேலைக்குப் போனாயென்டால் சரியாகப் போய்விடும். சும்மா ஒன்றும் யோசிக்க வேண்டாம். பயமென்றால், மாமியக் கூப்பிட்டு வைத்துக் கொள்ளேன். நான் நம்பர் அனுப்பின பிறகு கோல் பண்ணு. ராஜனக் கரைச்சல் கொடுக்காதே. சரியா” என்றான்

”ஒன்றும் வேண்டாம். நான் வைக்கிறன்” என்று கோபத்துடன் தொலைபேசியை நிறுத்தவும் வாசல் அழைப்புமணி அடிக்கவும் சரியாக இருந்தது.

எழுந்து போய்ப் பார்த்தாள். அக்கா மகன் செந்திலன்தான் பயணப் பொதியோடு நின்றான்.

அவனைப் பாரத்தவுடன் திகைத்துப் போனாள். நீண்ட காலம் தொலைபேசியில் மட்டுமே பேசியவனை இன்று தான் பார்க்கின்றாள். நல்ல வாட்ட சாட்டமாக ஜிம் செய்து முறுக்கேற்றிய உடலுடன் சாருஹாசனைப் போலக் கட்டுமஸ்தாகக் காட்சியளித்தான். முறுகேறிய அவனுடலைப் பார்த்தால் வயதுப் பெண்கள் வாய் பிளந்து நிற்பார்கள். அப்படியே சித்ராவும் வாயைப் பிளந்தபடி அவனைப் பார்த்துவிட்டு

”இப்பத்தான் சித்தியப் பார்க்க மனம் வந்ததா? அக்கா சொல்லாட்டி இன்டைக்கும் வந்திருக்க மாட்டாய். நீ பெரிய மகாராசன் என்ன? சொல்லியபடி

தன்னுடைய மகன் எவ்வளவு அழகாக இருக்கின்றான் என்று மனத்துக்குள் நினைத்தாள்.

அவனை உள்ளே அழைத்து அறைக்குள்ளே உடுப்புப்பையை வைத்து விட்டு வரும்படிச் சொன்னாள்.

செந்திலன் அம்மா செல்லம் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவன். தகவல் தொலைநுட்பக் கம்பனி ஒன்றில் வேலைக்காகப் படித்துக் கொண்டிருந்தான்.

முதல்நாள் அவித்த புட்டும் கறியும் இருந்தபடியால் சமைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மாசிச் சம்பல் போட்டால், நன்றாக இருக்கும் என்று நினைத்தவளாய். செந்திலனுக்கு தேநீர் போட்டுக் கொடுத்தாள்.

”செந்திலன் நாளைக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டுமா? இங்கே இருந்து போக உனக்கு கஷ்டம் இல்லையாடா? என்று கேட்டாள்.

”இல்ல சித்தி. ஆறு மாதம் தானே. அந்த வீட்ட விட்டிற்று வந்தேன். வாடகை கட்டத் தேவையில்ல. பிறகு பார்த்து வேற வீடு எடுப்பம். அம்மாதான் சொன்னா சித்திக்கு சித்தப்பா வரும்வரை ஒத்தாசையாக இருக்கும்படி” என்றான்.

அவனுடைய தலையைக் கோதியபடி ”என்னடா பத்தையாட்டம் மயிர வளர்த்து வச்சிருக்கிறாய்? இத வெட்டக்கிட்ட மாட்டியா? நாளைக்குக் காசு தாறன் முதல்ல இந்த பத்தைய வெட்டிப் போட்டு வா? அதுசரி காலையில எத்தனை மணிக்கு உனக்கு பஸ்சுக்குப் போக வேணும்?”

”ஆறு மணிக்கு கொழும்பு பஸ் எடுக்க வேணும் சித்தி. நீங்க எழும்பத் தேவையில்ல. நான் காலைச் சாப்பாடு ஏதாவது எடுத்திட்டுப் போவன். மத்தியானம் அங்க கெட்டினில சாப்பிடுவன். பிறகு 5 மணிக்கெல்லாம் வந்திடுவன்” என்றான்.

”நான் 5 மணிக்கு எழும்பிடுவன். பார்ப்பம். போய்க் குளிச்சிட்டு வா” என்றாள்.

இருவரும் உணவருந்தினார்கள். பலதும் பத்தும் பேசியபடி உறங்கப் போனார்கள். உடைமாற்றி அவள் உறங்கியபின் செந்திலன் கதவைத் தட்டினான்.

”சித்தி பால் காய்ச்சினேன். உங்களுக்கும் எடுத்து வந்திருக்கிறேன். குடித்துவிட்டுப் படுங்கள்”

எழுந்து போய்ப் பால்க் கிண்ணத்தை வாங்கிவிட்டு ”பரவாயில்லையே அக்கா உன்ன நல்லாத்தான் வளர்த்திருக்கிறா. நீ மட்டும் குடிக்காமல் சித்திக்கும் கொண்டு வந்து தருகின்றாய். இதெல்லாம் நீ செய்ய வேணுமா? உனக்கு இரவில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால், நாளையில் இருந்து நானே உனக்குக் காய்ச்சித் தாரன்” என்றாள்.

”சித்தி உங்களையும்தான் அம்மா நல்லா வளர்த்திருக்கிறா. நான் தான் உங்களுக்குப் பால் காய்ச்சி எடுத்து வருவேன். அது என்னுடைய வேலை” என்றான்.

”சரிடா போ… போ.. போய்ப்படு” என்று பாலைக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டாள்.

அடுத்த நாள் பாடசாலைக்குச் சென்ற சித்ரா எதையோ பறி கொடுத்தது போல இருப்பதைக் கண்ட அவளுடைய சிநேகிதி ஆசிரியை

”என்ன இன்றைக்கு ஆயிரக் கணக்கில பறி கொடுத்தவளைப் போல மூஞ்சியை வைத்திருக்கிறாய்? உனக்கு என்ன நடந்தது? என்று கேட்டாள்.

”அது வினித் ஜெர்மனி போனதில் இருந்து உடம்பெல்லாம் சோர்ந்து சோர்ந்து போகுது. நான் நினைக்கிறன். நான் வாழல்லை ரீச்சர். அவன்தான் என்னை வாழ வைச்சிருக்கிறான். ஒரு பிள்ளை இருந்திருந்தால், இந்தப் பிணைப்பு குறைந்திருக்கும் என்று நினைக்கிறன். ரொம்பவே முடியாமல் இருக்கு” என்றாள்.

”அம்மாக்கு கைவளை கழறப் போகுதோ. பசலை நோய் வந்து விட்டதோ” என்று கேலியாகப் பேசிவிட்டு

”வினித் ஜெர்மனி போன விசயம் நீ எனக்குச் சொன்னியா? அதுதான் இரண்டு பேருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லையென்றுதானே சொன்னார்கள். எதுக்கு அவதிப்படுகிறீர்கள். 10 வருஷத்துக்குப் பிறகும் பிள்ளை பிறந்திருக்கு. பொறுத்துப் பாருங்களேன்”

”அது வேலைக்காகப் போறான். அதோட ரீற்மன்ட் செய்து பார்ப்போம் என்று சொன்னான்” என்று கூறினாள்.

எது தடுத்தாலும் வாழ்க்கை நகரத்தானே வேண்டும். ஓடுகின்ற கப்பலுக்குள் ஏறி இருந்துவிட்டால், கரை சேரும் வரை பயணம் செய்யத்தான் வேண்டும். அலுத்து விட்டது என்று நினைத்த போது இறங்க முடியுமா? கடல் காற்றுக்கும் கடலலைக்கும் ஈடு கொடுத்தேயாக வேண்டும்.

சித்ரா எந்தவித கடினமும் இல்லாமல் காலத்தைக் கடத்தினாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர செந்திலன் இருக்கின்றான். வீட்டு வேலைகள் அனைத்துக்கும் கைகொடுத்து உதவுகின்றான். கை நீட்டி வேலை சொன்னால், செய்வதற்கு மாணவர்கள் இருக்கின்றார்கள். பேச்சுத் துணைக்கு நண்பிகள் இருக்கின்றார்கள். வார இறுதி நாளில் செந்திலன் வீட்டில் நிற்பதனால், நீர்கொழும்புக் கடற்கரைக்கு காலாற நடந்து செல்வார்கள். செந்திலனும் மனம் திறந்து தன்னுடைய காதலியைப் பற்றி சித்ராவிடம் வாயாரப் புகழ்வான். அவன் காதலுக்குச் சித்தியாகக் கண்டிப்பு இல்லாமல் நண்பி போல கேட்டுக் கொண்டிருப்பாள்.

வினித்துக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையென்று ஜெர்மனி மருத்துவம் உறுதியாகச் சொல்லிவிட்டது. சித்ராவும் அவன் வரும் நாளைக் காத்துக் கொண்டிருந்தாள்.

அன்று வழமை போல இரவுணவைக் கடற்கரை அருகில் இருந்த ஒரு உணவகத்தில் இருவரும் உண்டு விட்டுக் கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அவளுடைய மாணவர்கள் இருவர் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அலைகள் வழமைக்கு மாறாக ஆக்ரோசமாகக் கரையில் வந்து அடித்துக் கொண்டிருந்தன. கடற்காற்று சித்ராவை விழுத்தி விழுத்தி வேடிக்கை பார்த்தது.

”சித்தி இன்றைக்கு கடற்கரையில நிற்பது நல்லதில்ல. எல்லாரும் எழும்பிப் போறாங்கள். நாங்களும் போறதுதான் நல்லது. மழை வேற தூறுகிறது” என்று கூறிய செந்திலன், சித்ராவை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். மாணவர்களும் விடை பெற்றனர்.

வீடு வந்தபின் பாலைக் குடித்துவிட்டுப் படுத்து விட்டாள். அதிகாலை அவளால் முடியவில்லை. சத்தியும், வயிற்று வலியும் தாங்க முடியவில்லை. உணவகத்து உணவின் ஒவ்வாமையாகத்தான இருக்கும் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். ஆனால், குடலுக்குள் ஒரு பூகம்பமே நடந்தது. விரல்களால் அழுத்தி அழுத்திப் பார்த்தாள். பிரண்டு பிரண்டு படுத்தாள். சுடு தண்ணீர்ப் பையை வயிற்றில் வைத்துப் படுத்துப் பார்த்தாள். முடியவில்லை. காலை 5 மணி செந்திலன் நிறுவகம் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

”செந்திலன்..” என்று கத்தினாள்.

ஓடி வந்த செந்திலன் சித்தியினுடைய நிலைமையைப் பார்த்துப் பயந்து போய்விட்டான். உடனடியாக வாடகை வாகனத்துக்கு அழைப்பு விடுத்து சித்ராவை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துவிட்டான்.

அம்மா என்னைச் சித்தியுடன் நிற்கச் சொன்னது நல்லதாகப் போய்விட்டது என்று செந்திலனும், அக்கா எவ்வளவு அக்கறையுள்ளவர் என்று சித்ராவும் நினைத்தார்கள்.

உடனடியாக வழமையாக அவள் போகும் மருத்துவமனைக்கே போனார்கள். செந்திலன் தாய்க்கு அறிவித்து விட்டு வெளியே காத்துக் கொண்டு நின்றான்.

”என்ன கன்றாவியச் சாப்பிட்டேனோ? என்று அவதிப்பட்டுக் கொண்டு சித்ரா நின்றாள். மருத்துவமனைத் தாதிகளெல்லாம் தேவதைகள் போல அவள் கண்களுக்குத் தெரிந்தனர். ”நான் சாகப் போகிறேனோ” என்று மனத்துக்குள் ஒரு சந்தேகம் வந்தது. வினித்துக்கு அறிவிப்போமா? சீச்சீ அவன் பயந்து விடுவான். அவன் வராமல் நான் செத்துவிடுவேனோ” இப்படிப் பலவாறாக அவளுடைய எண்ண ஓட்டம் தடம்புரண்டது.

அவளுடைய உடலைப் பரிசோதித்த மருத்துவர், உணவு நஞ்சேறியிருக்கின்றது என்பது உறுதியானது. ஆனால், சில சிக்கல்களும் இருப்பதனால், மேலும் பல பரிசோனைகள் நடந்தன. அவளுக்கு நோ தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அன்று பிற்பகல் சித்ராவின் உடல்நிலை சீரானது. மருத்துவர் அவளை அழைத்தார். வழமையாக வருகின்ற மருத்துவமனை என்ற காரணத்தால், மருத்துவருக்கு அவளுடைய மருத்துவ வரலாறு நன்றாகவே தெரிந்திருந்தது.

”சித்ரா வினித் வரவில்லையா? என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடன் சித்ரா நன்றாகவே பயந்து போனாள்.

” ஏன் டொக்டர் ஏதவது பிரச்சினையா? அவர் ஜெர்மனி போய்ட்டார்” என்றாள்

”சீச்சீ அப்படி ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லியபடி நான் இரத்தம் எல்லாம் பரிசோதனை செய்து பார்த்துவிட்டேன். நீங்கள் இரவு சாப்பிட்ட சாப்பாட்டிலே தான் ஏதோ பிரச்சினை இருந்திருக்கிறது. அது உடம்புக்குள்ளே நஞ்சாகியிருக்கிறது. நாங்கள் மருந்து தந்துவிட்டோம். நீங்கள் சத்தி எடுத்தபடியால் நல்லதாகப் போய்விட்டது. உங்களுக்கு குளுக்கோஸ் ஏற்றியிருக்கிறோம். பயப்பிட ஒன்றுமில்ல. ஆனால்…” என்று கூறிப் பக்கத்தில் இருந்த கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொம்மையைக் காட்டினார்.

ஆச்சரியத்துடன் மருத்துவரைப் பார்த்த சித்ராவிடம்

”நீங்கள் அம்மாவாகப் போகின்றீர்கள். இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. உங்களுடைய இரத்தப் பரிசோதனையைப் பார்த்த போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதையும் பார்த்துவிடுவோமே என்று பெண் மருத்துவருக்கு அனுப்பி வைத்தேன். என்னிடம் வரும்போதெல்லாம் என்னிடம் இதுபற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அதனால், இந்த முயற்சியை எடுத்தேன். இரத்தப் பரிசோதனையும், கரு சுமக்கின்றீர்கள் என்று உறுதியாகச் சொல்லி விட்டது. கொங்குரஜூலேசன்” என்று கைகளை நீட்டினார்.

மண்டைக்குள் பாறாங்கல்லால் ஓங்கி அடிப்பது போன்று இருந்தது. பதிலுக்குக் கைகளை நீட்டிக் கைகுலுக்கு விட்டு நடைப்பிணமானாள். குழந்தை வயிற்றுக்குள் வளர்கிறது என்று மகிழ்வதா? தன்னுடைய வினித் வரப் போகின்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று பயப்படுவதா? குழந்தை வயிற்றில் தங்கி 2 மாதங்களே வினித் சென்று 6 மாதங்கள். இது எப்படி நடந்தது?

வெளியே வந்த போது செந்திலன்,

”என்ன சித்தி ஓகே யா? ரெக்சியக் கூப்பிடட்டா” என்றான். அவனை முகங்கொடுத்துப் பார்க்காது. அவனிடம் எதுவுமே பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். வீடு போகும் வரை எதுவுமே செந்திலனுடன் பேசவில்லை.

அறைக்குள்ளே போய்க் கட்டிலில் விழுந்தாள். சத்தி எடுத்துத் தொண்டை புண்ணாகிவிட்டது. வயிற்று வலியால் வயிறு புண்ணாகி விட்டது. இது எப்படி நடந்தது? யார் காரணம்? என்னையறியாமல் இது எப்படி நடந்திருக்கும்? இந்த வீட்டுக்குள் என்னையறியாமல் யாரும் வருவதில்லையே. இவன்தானே இரவில் எனக்குப் பால் கொண்டு வந்து தருவான். பாலுக்குள் எதையாவது போட்டு மயங்க வைத்து என்னை அனுபவித்திருப்பானோ? இவனைப் பிள்ளை போலத்தானே வைத்திருந்தேன். இப்படிச் செய்து போட்டானே. படுபாவி என்று மனத்துக்குள் இருந்த ஆத்திரம் தீயாகப் பற்றியது.

அந்த நேரம் தாயிடம் கேட்டு சித்ராவுக்குக் கஞ்சி காய்ச்சி எடுத்து வந்தான் செந்திலன். அவனுக்கு அவளை நினைக்கப் பயமாக இருந்தது. தன்னைப் பார்க்கும் போதெல்லாம் சித்ராவின் கண்களில் கோபக்கனல் தெறிப்பதைப் பார்த்தவனுக்கு இதை எப்படிக் கொடுப்பது என்ற பயம் இருந்தது.

பயத்துடன் அதைக் கொண்டு வந்து அவளின் பக்கத்தில் வைத்தான். அதைக் கண்ட சித்ரா அப்படியே கைகளால் அந்தக் கஞ்சிக் கிண்ணத்தை வீசி எறிந்தாள். அறை முழுவதும் கஞ்சி தெறித்துப் பறந்தது.

பயந்து நடுங்கிய படி தண்ணீர்த் துடைப்பத்தை எடுத்து வந்து துடைத்தான்.

”வெளியே போ…..” என்று கத்தினாள்.

அப்படியே கட்டிலில் இருந்தவள், சிறிது நேரத்தில் கண்களைத் துடைத்தபடி எழுந்து யன்னல் கம்பிகளினூடாக வெளியே விறைத்துப் பார்த்தபடி நின்றாள். மனத்துக்குள் போராட்டம். வெளியுலகமோ மௌனமாக அமைதியாக இருந்தது. அப்போது பின்புறமாக அவளை இரு கரங்கள் கட்டியணைத்தன. படாரென்று திரும்பித் தன்னுடைய கரங்களால் ஓங்கி அறைந்தாள்.

”ஐயோ..” என்று பின்புறம் நின்ற வினித் கத்தினான்.

வினித்தைக் கண்டவள் சத்தமாக அழுதபடி அவனுடைய நெஞ்சுக்குள் புகுந்தாள்.

”சரி சரி என்ன நடந்தது? நான்தான் வந்துவிட்டேனே. சித்ராம்மா கூல்.. கூல். உன்னட்டச் சொல்லாமல் செப்பிரஸ் ஆக வரவேண்டும் என்றதற்கு இந்தத் தண்டனையா? என்று அவளை அணைத்தபடி கட்டிலில் இருக்க வைத்தான்.

அழுது தீர்த்த சித்ரா நடந்தவற்றை வினித்திடம் விளக்கினாள். ஆச்சரியமடைந்த வினித்தும்

”சரி நாளைக்கு டொக்டரிட்டப் போவம். நீ ஒன்றும் யோசிக்காதே. உனக்கு நான் இருக்கிறேன்” என்று சித்ராவைச் சமாதானப்படுத்திவிட்டுக் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் அப்படியே போட்ட படிக் கிடக்கப் படுத்துவிட்டான்.

அடுத்தநாள் காலையில் எழுந்து செந்திலன் சித்தப்பாவுடனும் பேசாமல் கல்வி நிறுவகத்துக்குச் சென்று விட்டான். வினித்தும் சித்ராவும் பாணை பட்டர், ஜேம் பூசி உண்டு விட்டு அமைதியாக மருத்துவமனை போனார்கள். வினித் திரும்பி வந்த மகிழ்ச்சியோ, வயிற்றில் பிள்ளை வளருகின்ற மகிழ்ச்சியோ எதுவும் இல்லாமல் இருவரும் மௌனமாக அழைப்பு வரும்வரை மருத்துவமனையிலே இருந்தார்கள்.

ஒரு நிமிடத்தில் மனத்திலே இருக்கின்ற அத்தனை மகிழ்ச்சியையும் சூறாவளி அடித்துத் தூக்கிக் கொண்டு போனது போல இருந்தது. இதுதான் வாழ்க்கை. அடுத்த

நிமிடம் என்ன நடக்கப் போகின்றது என்று யாருக்கும் தெரிவதில்லை. திருப்பங்களைத் திருப்பிப் போடுவதுதான் இந்தப் பிரபஞ்ச நியதி.

இப்போது மருத்துவர் முன்னே இருவரும். இருவரையும் கண்டவுடன் மருத்துவர் கைகுலுக்கி கொங்குரஜூலேசன் தான் முதலில் சொன்னார். எதுவுமே சொல்லாத வினித் கையிலிருந்த மருத்துவக் கோப்புக்களை மருத்துவரிடம் நீட்டினான்.

”பிளீஸ் டொக்டர்… நீங்கள் இவற்றை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்யுங்கள்” என்றான்.

முகத்தில் சந்தேகத்தை வரவழைத்த மருத்துவரும் வெளியே இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு அதனை வாங்கிப் பார்த்தார். வேறு யாரிடமோ அதனை அனுப்பினார். சிறிது நேரத்தின் பின் இருவரையும் அழைத்தார்.

”ஐ ஏம் சோ சொரி வினித். இங்கேதான் ஏதோ தப்பு நடந்து விட்டது. இது வேறு யாருடையதோ பிளட் ரிப்போர்ட் விபரம். மாறி சித்ராவினுடைய ரிப்போர்ட்டில் பதிந்து விட்டார்கள். இதற்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.

‘’செய்வதைச் செய்து விட்டு என்ன மன்னிப்பு டொக்டர். உங்களையெல்லாம் நம்பி எப்படி எங்களுடைய உடம்பைக் காட்டுவது. டொக்டர்ஸ் கடவுள் போல இருக்க வேண்டும் டொக்டர். இது நோயாளிகளுடைய வாழ்க்கை. ஒரு நிமிடத்தில் சித்ராவின் மனத்தை நோகடித்துப் போட்டீர்கள். அந்த நிமிடம் அவளுடைய மனம் எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கும் தெரியுமா? ஆறு மாதங்களின் பின் நேற்றுத்தான் ஜெர்மனியில் இருந்து நான் வந்தேன். நீங்கள் எத்தனை பேருடைய நம்பிக்கையைப் பாழாக்கிப் போட்டீர்கள். நல்ல வேளை சத்திரசிகிச்சை என்று உடம்பைக் கூறு போட்டுவிட்டு மன்னிப்புக் கேட்கவில்லை. மன்னிப்பு என்ற வார்த்தை சொல்லி விட்டால் போதுமா டொக்டர், நடந்தது நடந்ததுதான் ” என்று கூறியடி சித்ராவை அணைத்துக் கொண்டு வெளியேறினான் வினித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *