அந்த ஏழு நாட்கள்
கதையாசிரியர்: முனைவர் வெங்கடேஷ் கணபதி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 937
பாலக்காட்டு மாதவன் – மீண்டும் ஒரு முறை

அந்த ஏழு நாட்கள் படத்தைப் பத்து தடவைக்கு மேல் பார்த்தாலும் அலுக்காத படம். பாக்கியராஜ் திரைக்கதை மன்னன் என்பதை நிரூபித்த படம். ‘ ஏடா கோபி’ என்று காஜா ஷரீப்ஐ கடிந்து கொள்வதாகட்டும் வசந்தி மேல் தனக்கும் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது என்பதை நாசூக்காக உணர்த்துவதில் ஆகட்டும் நடிப்பில் பாக்யராஜுக்கு நிகர் அவரே.
பாக்கியராஜ் குளிக்கச் செல்வார் . குளியல் அறைக்குத் தாழ்ப்பாள் கிடையாது என்று அவர் கோபியிடம் காவல் காக்க கூற கோபி சவ ஊர்வலத்தில் டப்பாங்குத்து பாட்டிற்கு ஆடப்போய்விட அம்பிகா குளியல் அறைக்குள் நுழைய ….
முத்தம் கொடுத்தால் தான் கீழே போவேன் என்று அடம் பிடிக்கும் அம்பிகா, வேறு வழி இல்லாமல் அதை நிறைவேற்றும் பாலக்காட்டு மாதவன்…
வயிற்றில் ஈரத்துணியைக்கட்டி பசியைப்போக்க முயற்சிக்கும் காதலன் ..அதற்காக இரங்கும் காதலி என்று “அந்த ஏழு நாட்கள் ” படம் காலத்திற்கும் மறக்க முடியாத காவியம் என்றால் மறுப்பதற்கு இல்லை.
ஒருவரின் காதலி இன்னொருவரின் மனைவி ஆகலாம் – ஆனால் ஒருவரின் மனைவி இன்னொருவருக்கு மனைவியாக முடியாது என்ற அந்தக்களைமாக்ஸ் காட்சியைத் தான் மறக்க முடியுமா…
ராஜேஷ் …டாக்டர் ஆனந்த் ஆக மிதமான நடிப்பு. தனது மகள் அம்பிகாவுடன் தான் படுத்துக்கொள்வேன் என்று அடம் பிடிக்கும் போது மகளை அதட்டி அடிக்கும் போது அம்பிகா அவரைக்கேள்வி கேட்கும் போது – “நாளைக்கு நீ போன பிறகு இவளை யார் சமாதானப்படுத்துவது ?’ என்று எதிர்க்கேள்வி கேட்கும் போதும் ராஜேஷ் நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். அவரது அருமையான நடிப்பு காலத்திற்கும் நினைவில் நிற்கும்.
இப்போது நிகழ் காலத்திற்கு வருவோமா?
பல வருடங்கள் ஓடிவிட்டன . டாக்டர் ஆனந்தின் மகள் திருமணம் ஆகி லண்டனில் செட்டில் ஆகி விட்டாள். டாக்டர் ஆனந்திற்கும் வசந்திக்கும் பிறந்த மகன் இப்போது சென்னையில் ஐ ஐ டியில் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறான்.
அப்போது டாக்டர் ஆனந்திற்கு பாலக்காட்டில் ஒரு திருமணத்திற்கான அழைப்பு வருகிறது. அவரது கல்லூரி நண்பன் மகள் திருமணம். வசந்தியும் டாக்டரும் காரில் கிளம்புகிறார்கள்.
திருமணம் முடிந்து அவர்கள் மதிய உணவை அருந்த அமர்கையில் தெரிந்த குரல் மாதிரி கேட்க வசந்தி நிமிர்ந்து பார்க்க அதிர்ச்சி. அங்கே பாலக்காட்டு மாதவன். அப்போது தான் டாக்டரும் கவனிக்கிறார் . அந்த திருமணத்திற்குச் சாப்பாடு வழங்கும் கேட்டரிங் பொறுப்பை “மாதவன் கேட்டரிங் செர்விஸ்” எடுத்துக்கொண்டு இருக்கிறது என்று பேனர் ஒன்று தொங்கிக்கொண்டிருக்க …
பாலக்காட்டு மாதவன் அவர்களைப் பார்த்து ஓடோடி வருகிறார் ….
“டாக்டர் சார் , வசந்தி சவுக்யமா ” என்று அவர் சகஜமாக விசாரிக்க …
நெகிழ்ந்து போகிறார்கள் டாக்டர் தம்பதி.
“ஏடா கோபி இங்கே வரு …யார் பாரு ..பால் பாயசம் கொண்டு வா “
அட..கோபி …இவர்களைப்பார்த்ததும் ஓடோடி வருகிறான் .
“அக்கா எப்படி அக்கா இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன் …நீ எப்படி இருக்க ? கல்யாணம் ஆயிடுச்சா ” என்று வசந்தி வினவ
“அக்கா, கல்யாணம் ஆயிடுச்சு .இரண்டு பசங்க ..ஒரு பொண்ணு ..ஒரு பையன் ” என்ற கோபியின் முகத்தில் லஜ்ஜை …
“வாங்க சாரே…அங்கே உட்காருவோம்” என்று மாதவன் அழைக்க கையை அலம்பிக்கொண்டு ஆனந்தும் வசந்தியும் ஹாலின் முகப்பில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர மாதவனின் ஆணையின் படி வெற்றிலை பாக்கு வருகிறது .
“மாதவன் சார் … என்னாச்சு உங்க இசைப்பயணம்?”
“சாரே ..அது கதைக்கு உதவாது என்று புரிந்து கொண்டேன். சென்னையை விட்டு பாலக்காடு வந்து இந்த கேட்டரிங் தொழிலைத் தொடங்கி …என் கூடப்பிறந்த தம்பிகள் தங்கைகள் எல்லோருக்கும் கல்யாணம் முடிச்சு இப்போ நிம்மதியாக இருக்கேன் “
வசந்தி அப்போது தான் கவனிக்கிறாள். மாதவனின் முகத்தில் வயதின் அயர்ச்சி தெரிகிறது. தலை முடியும் கழிந்து லேசாக முன் வழுக்கை. “ஐந்து வருடம் முன்னே தாயாரும் மரிச்சு ப் போய் ” மாதவனின் குரல் சற்றே கம்முகிறது.
வசந்தி கேட்கவில்லை..ஆனால் டாக்டர் ஆனந்த் கேட்டு விடுகிறார் – “என்ன மாதவன் சார் , உங்க வீட்டிற்கு கூப்பிட மாட்டீங்களா ..உங்க மனைவியைப் பார்க்க வேண்டாமா “
“மனைவியா ..சாரே..அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லா …”
“ஏன்?”
“எப்போவோ ஒரு பொண்ணை ஸ்னேஹிச்சு . வேறு எந்தப்பெண் மேலும் ஆர்வம் வந்திட்டில்லா”
அங்கே மௌனம் நிலவுகிறது. வசந்தியின் தலை தாழ்ந்தே இருக்கிறது.
அப்போது கோபி மூச்சிரைக்க வருகிறான்
“இந்தாங்க மாஸ்டர் …”
அவன் கையில் ஒரு அருமையான குத்து விளக்கு . இன்னொரு கையில் குருவாயூர் கோவில் யானை கேசவனின் படம் அடங்கிய சுவரில் தொங்க விடும் ஒரு அலங்காரப்பாய்.
“என்னங்க மாதவன் …எதற்கு இதெல்லாம்?”
“சாரே நான் உங்களுக்கு திருமண பரிசு ஒன்றும் கொடுத்திட்ட்டில்லா..நீங்கள் தயை பண்ணி இதை வாங்கிக்கொள்ள வேண்டும் ” என்ற பாலக்காடு மாதவனின் முகத்தில் வெகுளித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.
“சாரே , உங்களுக்கு எத்தனை குட்டிகள்?” மாதவன் கேட்க
“என் பொண்ணு திருமணம் முடிந்து லண்டனில் இருக்கிறாள். வஸந்தி அவளை நன்றாகப்பார்த்துக்கொண்டாள். எங்கள் மகன் ஐ ஐ டி யில் படிக்கிறான். என் மகன் பெயர் தெரியுமா ?” என்று டாக்டர் ஆனந்த் நிறுத்த , அவரைக்கேள்விக்குறியுடன் பார்க்கிறான் மாதவன்.
“என்ன பேரு சாரே ?”
“மாதவன் “.
மாதவன் முகம் நெகிழ்ந்து போகிறது.
“சாரே இதான் எனது கார்டு ..இங்கே தான் பக்கத்தில் என் வீடு .நீங்கள் அவசியம் வர வேண்டும்'” கார்டில் மாதவனின் வீட்டின் பெயர் – வசந்தி இல்லம்.
” எனக்கு நாளைக்கு ஒரு அறுவை சிகிச்சை இருக்கு. நாங்க உடனே கிளம்பியாகணும் மாதவன். அடுத்த முறை பாலக்காடு வரும் போது நிச்சயமா வருவோம் “
“சாரே நீங்கள் குருவாயூர் கேசவன் படம் வீட்டில் மாட்டி வையுங்கள். அது வல்ல நல்லது . அறியோ ” என்ற மாதவனின் முகத்தை ப்பார்க்கும் வசந்தி முதல் முறையாக வாயைத் திறக்கிறாள்.
“உடம்பைப்பார்த்துக்கோங்க “
காரில் சென்னை நோக்கிச் செல்கையில் வசந்தியின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டு நிற்க அதை உணர்ந்தவராக டாக்டர் ஆனந்த் மனைவியின் கரங்களைப் பற்றிக்கொள்ள அந்த மவுனத்திலும் ஆயிரம் உணர்ச்சிகள்
தொடர்புள்ள சிறுகதைகள்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
எஸ்.மதுரகவி
June 6, 2026
ஜின்னின் மணம்
நீல பத்மநாபன்
June 6, 2026
சட்டென்று மாறும் மனநிலை
முத்தமிழ்ப்பித்தன்
June 6, 2026