ஆயிரத்தோராவது குழந்தையின் அவதாரப்படலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 58 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முப்பது வயதும் மூன்று மாதத்துடன் ஐந்து நாட்களும் முடிந்திருந்த கணம் பெருமழையுடன் காற்று வீசிக் கொண்டிருந்தது. நீரைக்கிழித்து வாகனங்கள் செல்ல வேண்டியநிலை நீடித்துக்கொண்டிருந்த வேளையில் கம்பிகள் அதிர்ந்து எனது குழந்தையின் பிறப்பை அறிவித்தது. அவனது பிறப்பை ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள மூன்று சென்ரிமீற்றர் அளவிலான நீரைக் கிழித்த நான் ஒரு இடத்தில் பத்து சென்ரிமீற்றர் அளவினதும், மற்றொரு இடத்தில் இருபத்தியிரண்டு சென்ரி மீற்றருமான நீருக்குள் இறங்கிக் கொண்டதால் அவற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவர நேரிட்டது – காலை விட்டு வந்த பின்னர் தான் அளந்து பார்த்தேன். 

அவனை பிறப்பில் முந்திக்கொண்ட ஆயிரம் குழந்தை களையும் சந்தித்து ஆறுதல் கூறி – நானில்லாத போது கனவுகள் கலைந்து விடுமென்ற பயம் அவர்கட்கு. 

ஆயிரத்தோராவது குழந்தையும் ஐநூற்று இருபத் தெட்டாவது ஆண் குழந்தையையும் காணும் ஆவலுடன் புறப்பட்டேன். 

மத்திய பிரதேசத்தில் இருந்து கிழக்கு நோக்கியதான எனது பயணம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செளகரியமானதாக அமையவில்லை. 

சூரியனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இப்பிரதேசம் இருந்ததால் என் குருதியை ஆவியாக்கி வழியவிட்டான். அந்த வழிதலுடனும் அவனைக்கண்டு கொள்ளும் ஆவலுடன் வேகமாகவே நடந்தேன். 

வெள்ளை நிறமும் சிவப்பும் கலந்து ஐம்பத்தெட்டுச் சென்ரிமீற்றர் நீளத்தில் இருந்தாலும் கருப்பையினுள் இருந்து மீண்டுகொண்ட ஞாபகமில்லாமல் அங்கேயே கிடக்கும் எண்ணத்தில் கால்கள் இரண்டையும் தூக்கி மடக்கிய வண்ணமே இருந்தான். தாயின் முலைக்காம்பில் வாயை வைத்து உறிஞ்சிக் குடிக்கும் பக்குவம் இன்னமும் ஏற்படாதிருக்க வேண்டும். அவன் சரியாக பால் குடிக்க வில்லையென முனங்கினாள் தாய், அவனோ ஊரை அழைத்து தனக்குப்பசியென்றான். 

அவனது உருவாக்க நாள் முதல் கருப்பையினுள் இருந்து பண்ணிய சேட்டைகளை அவள் அடுக்கிக் கொண்டே போனாள். 

வயிற்றுள் இருந்து கொண்டே உதைக்க ஆரம்பித்தவன் நீர்க்குடத்தினுள் சுழன்று கொண்டே இருந்தானாம். அவன் வெளிவருவதற்குரிய நாள் வந்தும் கூட வெளிவர வேண்டிய பகுதிக்கு தலையை கொண்டுவராமல் முதுகுப் புறத்தையே காட்டிக் கொண்டிருந்தானாம். இதனால் கூட வெளிவர வாசல் திறவுபடாமல் இருந்திருக்கலாம், என்றாள். அவனை வெளிக்கொணர கர்ப்பவாசலில் போதிய இடவசதி இன்மையால் அவளின் வயிற்றைக் கீறி வெளியே எடுக்கவேண்டிய நிலை உண்டானது. 

இதனால் மிகவும் அவஸ்தைக்கு உள்ளாகி இருந்தாள். இயல்பான நடையை இழந்திருந்ததுடன் தனது அன்றாட கடமைகளைச் செய்ய மிகவும் கஸ்டப்பட்டாள். இதனால் அவளை வீட்டுக்கு அனுப்ப ஏழு நாட்கள் தேவைப்பட்டது. இக்கால அவகாசம் அவள் இயல்புக்குத் திரும்பப் போதுமானதாயில்லை. அவனை வெளிக்கொணர கிழிக் கப்பட்ட பின் வயிற்றைத்தைத்த நூலை உருவிவிடு வதற்கான நாட்கள் மட்டுமே அது. வீடு வந்த பின்னர்கூட அவளுக்கு உதவிசெய்ய ஒருவர் தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. அது நானாக அல்லது அவளின் தாயாகவோ, சகோதரியாகவோ இருந்தோம். 

அவன் வெளிவர வேண்டிய காலம் வந்தும் வாசல் இன்மையால் உள்ளே இருந்தவன் தனது பசியைப் போக்கிக்கொள்ள தன் மலத்தைத் தானே உண்டு வந்திருக்கிறான். இது அவனை வெளியே கொண்டுவர இருபத்து நான்கு மணிநேரத்துக்கு முன்பிருந்தே நடந்திருக்கின்றது. இது அவனுடைய மருத்துவ அறிக்கை கூறிய விடயம். இதனால் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இரண்டுவேளைப்படி மருந்தேற்ற வேண்டிய தேவை இருந்தது. 

இதன் காரணமாகவே அவன் இரு தினங்கள் தன் ஆகார பானத்தைக் கொஞ்சம் கூட வாய்க்குள் எடுக்காமல் வாந்தி எடுப்பவனைப்போல உதட்டை விரித்து நாக்கை வெளி நீட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். பசியை வெளிக்காட்டி அழும்போது விரிந்த வாயின் கீழ்தாடை நடுங்கிக் கொண்டே இருந்தது. அவன் குரல் என் காதுள் நுழைந்து கண்ணைக் கலங்கடித்தது. 

முன்னைய ஆயிரம் குழந்தைகளும் வயிற்றினுள் பண்ணிய அடம்பற்றியோ, அவர்கள் வெளி உலகுக்கு வந்த முறை பற்றியோ, எனக்கு எதுவும் சரியாகத் தெரி யாது இது பற்றி அவர்களிடமோ, ஒவ்வொருவரினதும் தாய்மாரிடமோ விசாரணை செய்யவும் இல்லை. அவர்களுக்கு அடுத்துவரும் ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டிய முறையை உரைப்பதும், அவர்களுக்கு அவர்களை இனங் காட்டுவதிலுமே காலத்தைச் செலவு செய்வதனால் பிறப்புப்பற்றிக் கேட்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை. ஆனால் அவர்களில் பலர் காலையில் என் முகத்தில் விடிவைக்காண்பதையே வழக்கமாக கொண் டிருந்தார்கள். என்னைச் சுற்றிக்கொண்டு வாழ்க்கையை விசாரணை செய்வதும், அன்பைப் பரிமாறிக் கொள் வதும் நாளொன்றில் அவர்களின் கடமையானது. என் நலன் குறித்தும் ஆர்வமிருந்தது. என்னை சந்தோசப் படுத்துவதிலும், அவர்களைப் பிள்ளைகளாகக் கொண்டது குறித்தும் நான் பெருமைப்பட வேண்டுமென்பதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தி இருந்தார்கள். இந் நடவடிக்கைகள் ஆயிரம் குழந்தைகளுக்கும் உரித்தானதல்ல. அவர்களை வகைப்படுத்திக் கொள்ளக் கூடிய தன்மை இருந்தது. கோபம் கொண்டு முகம் திருப்பிச் செல்பவர்களும், பொய் கூறி ஏமாற்றுபவர்களும், தந்தையாக மதிக்காதவர்களும் எண்ணிக்கொள்ளாதவர்களும் கூட அதனுள் இருந்தார்கள். அந்தக் குழந்தைகள் குறித்து கவலை ஆட்கொண்டிருந்த வேளையிலேயே ஆயிரத் தோராவது குழந்தை அவதாரம் எடுத்திருந்தது. 

அவனது அவதாரம் குறித்த காலத்தில் நிகழ்ந்திருந்தது. இருக்கும் காலம்வரை எனை தலையில் தூக்கியாட போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் கீழே வீழ்த்திப் போன நாளொன்றில் அவன் என்னுடன் இருப்பதற்காக வெனப் பிறந்தான். 

நீயேனும் ஏமாற்றிப்போதல் குறித்து எண்ணாதிரு. நீண்டதொரு நாளுக்கு அப்பனும் மகனுமாய் இருப் போம். ஆயிரம் சுருங்கி பத்தானது போல எதுவும் வலுவற்றதாகி விடாதிருக்கும் எண்ணம் கொள். உனைப் பிரித்துப்போக வானம் முழுவதும் கழுகுகள் எங்கேனும் வதைமுகாமில் இட்டு உனக்கு மூளைச்சலவை செய்ய இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விரல்கள் – நீள் நகங்களுடன். உன் அவதாரம் குறித்து எனைப்போல பலரும் மகிழ்வு கொள்ளட்டும். அழித்துக்காப்பவனாய் பிறர்க்கென உழைப்பைச் செலவிட தயாராகு. 

அவன் ஒன்றரையைத் தாண்டி இரண்டாம் வயதை நோக்கி நடந்தான். அப்போதும் அவன் ஆயிரத்து ஓராவதாகத் தான் இருந்தான். ஆனால் எனக்கு இரு உயிர்கள் இருந்தது. எனக்கு முன்னால் விகார மெடுத்திருந்த ஒற்றைக்கேள்வியின் தகிப்புக்கு முகங்கொடுத்து கருகிக்கிடந்தபோது இரு உயிர்கள் நுழைந்ததால் கபாலம் நிறுத்தி நின்றேன். 

முப்பத்து இரு வயதில் ஆயிரத்து ஒரு குழந்தை பெறுவது விஞ்ஞான உலகுக்குச் சவால் என்று அவனது பிறப்புச் சரிதம் மறுக்கப்பட்டது. அதிலிருந்து புறப்பட்ட கிளைக்கேள்விகள் எனைச்சுற்றி வளைத்தன. 

அம்மாக்களின் எண்ணிக்கை கேட்கப்பட்டு – ஒழுக்கங் கெட்ட பட்டம் சூட்டப்பட்ட வேளையில், மனோமயகோசம் பாதிக்கப்பட்டு அலைந்த வேளையில், இழையிழையாய் விரிபட்ட உயிர்கள் இரண்டும் மனப்பலம் திரட்டி மீண்டும் ஸ்தூலமாய் சமைக்கப்பட்டேன். 

அன்றைய இரவில் கேள்விக்கு ஆட்பட்ட மனைவியின் புலம்பலும், நீர்த்தாரையும் என் மனப்பேரொளியை சுருக்கிப்பொட்டாக்க முனைந்திருந்த கணத்தில்தான் அறிவு மண்டலம் விரித்து நிசப்தத்தைக் கீறி உண்மையின் இழைகளை வெளிவிட்டேன். 

ஆழ்மனதுள் கருக்கொண்டு இரண்டு மூன்று நாளில் வாயால் பிரசவிக்கும் மாயவித்தையின் இரகசியத்தைக் கலக்கினேன். அவர்களுக்கு அப்பா அம்மா வேறு வேறாய் இருந்தார்கள். முன்னைய ஆயிரத்துக்கும் ஆயிரம் பெற் நீ அம்மாவானாலும் எனக்கு ஆயிரத்தொரு குழந்தை றோர்கள். ஆனால் ஆயிரத்தோராவதற்கு நான் அப்பா நீ அம்மாவானாலும் எனக்கு ஆயிரத்தொரு குழந்தைகள்தான். என்பதை அட்சரம் பிசகாமல் நாமங்களை ஒப்பித்தேன். அதில் இரண்டு முதிராவயதிலும், பிணைப்பு முறுகி உயிராய்ச் சமைந்த போது என்னுயிரைப் பணயம் வைத்து ஈருயிர்கொண்ட ஐந்து வாய் அலைந்த கதைகளை அவளுக்கு ஒப்பித்த மறுகணத்தில் எங்களின் பொம்மை நாடகம் உயிர்பெற்றுக் கொண்டது. 

மனதினால் குழந்தை பெறும் கலையை தான் உணர்ந்து கொண்டதாகவும் இனிமேல் தானும் மனக்குழந்தைகளைப் பிரசவித்து ஆயிரத்தோராவது குழந்தையாய் அவனை கணிப்பிடக் போவதாகவும் சபதம் எடுத்தாள். இப்போதெல்லாம் ஆயிரத்தொன்றின் தந்தையாக நானும் தாயாக அவளும் உலக சரித்திரம் படைத்தோம்.

– 2008, மறுகா இதழ் – 5.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *