அது வேறு ஜாதி




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதல் தேதியன்று சாயந்திரம். ராமையன் மளிகைக் கடை வாசலில் பர்ஸைத் திறந்து, “கணக்கு என்ன ஆகியிருக்கிறது பார்’ என்றேன்.

“உட்காருங்க, முதலாளி!” என்று ராமையன் கடை ஓரமாகத் தெருவில் ஒரு முக்காலியைப் போட்டான். அவன் தான் முதலாளி. நான் என்றும் வெறும் குமாஸ்தா. இருந்தாலும், ‘முதலாளி’ என்று அவன் என்னைத் தமாஷாகக் கூப்பிடுவதில் எனக்கு உள்ளூரப் பெருமை.
இரண்டு மூன்று மாதங்களாக என் வரவும் செலவும் குழந்தை கிறுக்கியது போல் ஒரு முனையோடு துருத்திக் கொண்டு நின்றது. இந்த மாதம் எப்படியும் சரிகட்டி, அடுத்த மாதத்திலிருந்து சுபிட்சத்துக்கு அஸ்திவாரம் போடுவதென்று ஒரு திட்டம், ஆசை. ராமையன் கணக்கு நோட்டைப் புரட்டிப் பார்த்து, “எண்பத்தேழு ரூபாய் எட்டே முக்காலணா, முதலாளி!” என்றான்.
“எண்பத்தி…?” எனக்கு வார்த்தையே வரவில்லை, திகைப்பில்.
‘ஏழு ரூபாய் எட்டே முக்காலாணா” என்று ராமையன் தயங்காமல் பூர்த்தி செய்தான்.
தலை கிர்கிர்ரென்று சுற்றியது எனக்கு. மிஞ்சி மிஞ்சிப் போனால் நாற்பத்தைந்து ரூபாய் ஆகியிருக்கும் என்பது என் எண்ணம். சம்பளம் நூற்றிருபது ரூபாயில், இவனுக்கே எண்பத்தெட்டு ரூபாயா! அப்புறம், மற்றப் பாக்கிக்காரர்களை எல்லாம் என்ன செய்வது!
“என்ன ராமையா? நம்ம கணக்குத்தானா அது? வேறே எவனதையாவது பார்த்து…”
“நீங்களே பார்த்துக்குங்க!” என்று அட்டையை நீட்டினான். சிவப்பு மசியில் தனியாக இன்னார், இன்ன விலாசம் என்று எழுதியிருந்தது.
என்னுடைய வறுமையை ஒரு கடைக்காரனிடம் காட் டிக் கொண்டு நிற்பானேன்? ”ஐம்பது ரூபாய் வரவு வைத்துக்கொள்” என்று புத்தம் புது நோட்டுக்களை நீட்டினேன்.
மகா ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்து, “பூமா! பூமா!” என்று கத்தினேன்.
”என்ன விஷயம்!” என்று தணிவாகவே கேட்டாள் பூமா. மாதத்தில் இந்த ஒரு நாள் மாலை, எனக்கு என்னென்ன விதங்களில் எல்லாம் கோபம் வரும் என்பது அவளுக்குத் தலைகீழ்ப் பாடம்.
“ராமையன் கடையிலே கணக்கு என்ன ஆகியிருக்கிறது, தெரியுமா? எண்பத்தேழு ரூபாய்! எண்பத்தேழு ரூபாய் எட்டே முக்காலணா! குடும்பம் உருப்பட்டு வாழ்ந்தாற்போல்தான், போ!”
பூமாவும் அவ்வளவு தொகையை எதிர்பார்க்கவில்லை. “எண்பத்தேழு ரூபாயா!” என்று ஆச்சரியப்பட்டாள்.
“நீயும் என்னோடு சேர்ந்து கூவினால் சரியாய்ப் போச்சா? எப்படி இவ்வளவு ஏறிற்று! அதைச் சொல்!”
“என்னைக் கேட்டால்? நீங்கள்தான் தினசரி ஆபீசிலிருந்து வரும்போது பிஸ்கட்டும், ஹேர் ஆயிலுமாய் வாங்கிக் கொண்டு வருகிறீர்கள்!”
இது வாஸ்தவமான வாதமாகையால் என்னால் எதிர்க்க முடியவில்லை. ”அதென்னமோ எனக்குத் தெரியாது. இந்த மாதத்தோடு அங்கே கணக்கு வைத்துக்கொள்வதை நிறுத்தி விட வேண்டியது. ஆமாம்!” என்றேன்.
“நான் ஆறு மாசமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். காலணா உப்பிலிருந்து அவன் கடையிலே கொள்ளை விலைதான். டி.யூ.சி.எஸ்.ஸில் ரவை பவுண்டு ஏழணா என்றால் அவன் கடையிலே பத்தணா, சோப்பு கட்டி ஊரெல்லாம்…”
”சரி, சரி. நிறுத்து!” என்று அதட்டினேன். “நாளையிலிருந்து தலைபோனாலும் அவன் கடையிலே கணக்கில் வாங்குவதில்லை. கையிலே ரொக்கத்தைக் கொடுத்து வாங்கு. பணம் இருந்தால் வாங்குவோம். இல்லையானால் பட்டினி கிடப்போம்!'”
“ரொக்கம் கொடுத்து அவன்கிட்ட வாங்குவானேன், எங்கே மலிவோ அங்கே வாங்கிவிட்டுப் போகிறோம்!” என்றாள் பூமா.
“என்னத்தையோ செய். ரொம்ப அக்கிரமமாய்ப் போய் விட்டது. இரண்டே பேர் நாம். மாதத்துக்கு எண்பத்தேழு ரூபாய்க்கு மளிகையா! சே, சே, சே!” என்று அலுத்தபடி சட்டையைக் கழற்றினேன்.
”கடைசியில் அவனுக்குக் கொடுத்தீர்களோ இல்லையோ?” என்று பூமா கேட்டாள்.
“கொடுத்தேன், கொடுத்தேன். ஐம்பது ரூபாய், பாக்கி அடுத்த மாதம் தான் தரவேண்டும்.”
அந்த மாதம் பூரா ராமையன் கடைப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை நாங்கள். கடனோ கைமாற்றோ வாங்கிப் பூமாவிடம் தந்தேன். அவள் சொஸைட்டியிலோ, வேறு கடையிலோ சாமான்கள் வாங்கிக் கொண்டாள்.
பதினைந்தாம் தேதி வாக்கில், “இத்தனை நாளைக்கு எவ்வளவு ஆயிற்று என்று நினைக்கிறீர்கள்! அரிசி, காப்பிப் பொடி எல்லாம் சேர்த்தே எட்டரை ரூபாய்தான்! மாதத்துக்கு என்ன ஆனாலும் இருபது இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் போகாது. ராமையன் கடையிலே அறுபது எழுபது என்று ஆகிக்கொண்டிருந்ததே? இப்போது பார்த்தீர்களா?” என்றாள் பூமா.
ரொம்பப் பெருமையாயிருந்தது. பிழைக்கிற வழியைக் கற்றுக்கொண்டு விட்டோம் என்ற பெருமிதத்தில் பூரித்துப் போனோம் இரண்டு பேரும். செலவு இப்படிச் சிக்கனப்ப டச் சிக்கனப்பட, ராமையன் கடையைப் பார்க்கும்போதே கோபம் கோபமாய் வந்தது. ‘எத்தனை நாளாய் நம்மைச் சுரண்டிக் கொழுத்து வந்திருக்கிறான் அயோக்கியன்!’ என்று பல்லைக் கடித்துக்கொண்டே அவன் கடையைக் கடப்பேன்.
இந்த வைராக்கியத்தை – இல்லை, பிழைக்கிற வழியை கற்றுக்கொண்ட பிறகு சும்மாயிருக்க முடிகிறதா? நாலு பேருக்குத் தர்மோபதேசம் கூடப் பண்ணத் தொடங்கினேன்.
ஒரு நாள் என் காரியாலய நண்பர் குமாரசாமி, ரிக்ஷா நிறையச் சாமான்களை ஏற்றிக் கொண்டு ராமையன் கடையி லிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். சிறிது தூரம் வரை அவனுடன் சேர்ந்தே போக வேண்டியிருந்தது.
“இங்கே உனக்குக் கணக்கா?” என்று கேட்டேன் கடையைத் தாண்டியதும்.
“கணக்குத்தான் வைத்துக் கொண்டிருந்தேன். எக்கச்சக்கமாய் ஏறிற்று, திணறிப்போனேன். இப்போதெல்லாம் கையிலே காசு கொடுத்து வாங்கிப் போகிறேன்” என்றான் குமாரசாமி.
“அட பைத்தியக்காரா!” என்று சிரித்தேன். “கையிலே காசைக் கொடுத்து இங்கே வாங்குவானேன்? ஒரே கொள்ளை விலையாச்சே!”
“அப்படியா?”
“நிஜமாய்த்தான். நானும் இப்போது பணம் கொடுத்துத்தான் சாமான் வாங்குகிறேன். ஆனால் வேறு கடையில்!”
“நானும் அப்படித்தான் பண்ண வேண்டும்” என்று கூறி விட்டு பிரிந்து சென்றான் குமாரசாமி.
வீட்டுக்குப் போகிறவரையில் மனம் அரித்தது. ராமை யனுடன் இரண்டு வருஷப் பழக்கம். நான் திருவல்லிக்கேணிக்குக் குடி வரவே அவன்தான் காரணம். ஒரு பரஸ்பர நண்பர் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு நல்ல இடம் பிடித்துத் தர வேண்டுமென்று சொன்னேன் ராமையனிடம். ஒரே வாரத்தில் அருமையான வீடு பிடித்துத் தந்தான். இன்றளவும் நான் குடியிருப்பது அங்கேதான். மழைக் காலத்தில் சில இடங்களில் ஒழுகுகிறது என்று வீட்டுக்காரரிடம் சொன்னேன். அவர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. பூமா ராமையனிடம் சொன்னாள். ராமையன் வீட்டுக்காரரிடம் சொன்னான். மறு நாளே ரிப்பேராகிவிட்டது. ஓரோர் மாதம் நூறு ரூபாய் வரையில் கூடக் கணக்கு ஏறியிருக்கும். கொடுக்காமலே இருப்பேன். வாய்திறந்து கேட்கமாட்டான் ராமையன்.
இப்படிப்பட்டவனுடைய சினேகிதத்தை நான் முறித்துக் கொண்டு விட்டேன். அத்தோடு நிற்காமல், மற்றவர்களிடமும் சொல்லி அவன் பிழைப்பில் மண்ணைப் போடுவது நியாயமா?
மனம் அரித்தது. அதற்காக என்ன பண்ணுவது? இப்படிக் கொள்ளை விலை வைத்து விற்காமல் இருந்தால் உறவு கொள்ளலாம். நாமும் பிழைக்க வேண்டாம்?
அடுத்த மாதச் சம்பளம் வந்தது. ராமையன் கடைப் பாக்கி முப்பத்தேழு ரூபாய் சொச்சத்தைக் கொடுக்க முடிய வில்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று மற்றப் பாக்கிகளைத் தீர்த்தேன்.
ஒரு வாரம் சென்றது.
ராமையன் கடை வழியாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். “ஸார்!” என்று கைதட்டிக் கூப்பிட் டான் ராமையன்.
“சரி, பாக்கிக்குத்தான்” என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்றேன்.
“என்ன முதலாளி, கடைப் பக்கம் உங்களையும் காணோம், அம்மாளையும் காணோம்! பையனைக் கேட்டேன். ‘இப்போ அவங்க இங்கே வாங்கறதேயில்லை’ என்றான். என்ன சேதி?” என்று ராமையன் கேட்டான்.
அவன் கடையில் வாங்காதது குறித்து அவன் கவலைப்படுவது எனக்குக் கர்வத்தைத் தந்தது. “ஒன்றுமில்லை… கணக்கு வைத்துக் கொண்டால் ரொம்ப அதிகமாகிறது. கையிலே பணம் கொடுத்து வாங்குவது என்று தீர்மானம்” என்றேன்.
“நம்ம கடைக்குப் பணம் கொடுத்து வாங்கக் கூட வர வில்லையே?”
நான் விழித்தேன். “ஊம்… வந்து… ஊரிலிருந்து என் அம்மா வந்திருக்கிறாள், வருகிறபோது அரிசி,பருப்பு, புளி வகையறா சகலமும் கொண்டு வந்திருக்கிறாள்” என்றேன்.
”என்னமோ செய்யுங்க. நீங்களெல்லாம் வாடிக்கையை விட்டீங்கன்னா நான் பிழைக்கிறது எப்படி?” என்று பெரு மூச்சு விட்டான் ராமையன். வியாபாரம் நொடித்துப் போய், வெகு தீனமாய்க் கெஞ்சுகிறவன் போலக் குரல் தொனித் தது. நிஜமாகவே, ரொம்பக் கஷ்டப்படுகிறானோ?…
“வரட்டுமா?” என்றேன்.
“செய்யுங்க” என்றான்.
என் உள்ளம் நெகிழ்ந்தது. முப்பத்தேழு ரூபாய் சொச்சத்தைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லையே இவன்!
“என்ன அது, புது டின்! பிஸ்கெட்டா?” என்று வினவினேன்.
“இல்லிங்க. பெப்பர்மிண்ட், சாக்கலேட், ஒண்ணரை ரூபாய். டேய் பையா! அந்த டின்னை எடு ஐயாவுக்கு!” என்றான் ராமையன்.
அடுத்த முதல் தேதி வந்தது. சம்பளப் பணத்தைப் பூமாவிடம் கொடுத்தேன். பீரோவில் வைக்கும் முன்னால் வழக்கம்போல் எண்ணிப் பார்த்தாள். “எழுபது ரூபாய் குறைகிறதே!” என்றாள்.
“ராமையன் கடைக்குக் தீர்த்தேன்” என்றேன்.
“முப்பத்தேழு ரூபாய்தானே பாக்கி இருந்தது?” என்று பூமா கேட்காதது ஆச்சரியமாயிருந்தது.
இன்னொரு வகையிலும் ஆச்சரியம்; அதை வாய் விட்டே சொன்னேன். “நாற்பது ரூபாய் எப்படி ஆயிற்று என்று தெரியவில்லை. ஏதோ, பிஸ்கெட், சோப்பு என்று தான் வாங்கினேன்…”
”ஏன்? நானும் நடுநடுவிலே வாங்கியிருக்கிறேனோ இல்லையோ?” என்றாள் பூமா.
எனக்கு மூச்சு நின்றது. “நீயுமா?”
“இப்படித் தட்டினால் முட்டினால் கொஞ்சம் காப்பிப் பொடி, என்ணெய் வாங்கினேன். ஒரு நாள் அந்தப் பக்கம் போனபோது, கூப்பிட்டு ரொம்ப வருத்தப்பட்டான் தன் கடையிலே வாங்குவதேயில்லை என்று…” என்றாள் பூமா.
”பாவம், ரொம்ப நல்லவன்!” என்றேன்.
“விலை கொஞ்சம் முன்னே பின்னேயிருந் தாலும், சாமான் கண்ணில் ஒத்திக்கொள்கிறாற்போல் இருக்குமே?”
நான் கடகடவென்று சிரித்தேன். “பூமா! பிழைக்கத் தெரிந்தவர்கள் என்பது தனி ஜாதி. அது பிறப்பிலேயே வருவது. ஜாதிவிட்டு ஜாதி மாற நமக்கெல்லாம் வராது!”
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.