அசலை விட வட்டிக்கு மதிப்பு அதிகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 184 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

தாத்தா மெதுவாக மாடிப்படிகளில் இறங்கி, கைப்பிடி உதவியுடன் நிதானமாக, படியின் அடியில் இருக்கும் மோட்டர் சுவிட்ச் -ஐ ஆன் பன்னினார். அவரது மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டார்.

பிறகு, அதே கவனத்துடன், மாடிக்கு சென்று, அன்றைய தினசரி செய்தித்தாளை, முதல் பக்கத்திலிருந்து நிதானமாக படித்தார். இன்னமும் இந்த டொனால்டு டிரம்ப் அடங்க மாட்டேங்குறான், என்று சொல்லிக்கொண்டு, இரான் மீது தொடர் குண்டு வீச்சு முதல், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அழுதது வரை, அங்குலம் அங்குலமாக படித்து முடித்து, அதை அழகாக மடித்து வைத்தார்.

அதே சமயம், பாட்டி, ஒரு டபரா செட்டில் அருமையான காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள். அதை நன்றாக, இரண்டு முறை ஆத்தி விட்டு, சொட்டு சொட்டாக, மிடறு மிடராக, ரசித்து ருசித்து குடித்தார்.

பிறகு, கடிகாரத்தை பார்த்தார். சரியாக 28 நிமிடங்கள் ஆகி இருந்தது. அவர் மறுபடியும், அதே நிதானத்துடன், மாடிப்படிகளில் இறங்கி,மோட்டர் சுவிட்ச் -ஐ நிறுத்தி விட்டு, வெளியில் வந்து, தண்ணீர் குழாயில் தண்ணீர் வருகிறதா என்று திருகிப் பார்த்தார். வரவில்லை.

மேலே இருந்தபடி, பாட்டி சொன்னாள், தொட்டிக்கு போகும் வால்வை திறந்து வைத்து விட்டு வாங்க, தண்ணி வந்தா, நேரா தொட்டிக்கு போகும். நீங்கள் திரும்ப ஒரு முறை இறங்க வேண்டாம், என்றாள்.

இல்லை. தண்ணி லேட்டா வருதுன்னா, எங்கேயோ வேலை செஞ்சிருப்பானுங்க, முதலில் அழுக்கு தண்ணி வரும். ரெண்டு வாளி புடிச்சு செடிக்கு ஊத்திட்டு, அப்புறம் தொட்டியில் விடலாம், என்று சொன்னார்.

இவர் எப்பதான் சொல்றத கேக்க போறார். ஒரு நாளைக்கு, எத்தனை முறை ஏறி இறங்கி, மூச்சு இறைக்க, கால் வலிக்க, ஏன்? என்று பாட்டி அங்கலாய்த்தாள்.

அப்போது, தெருவில், அவரது நண்பர் ஒருவர் வந்தார்.

என்ன சார். மோட்டார் போட்டு நிறுத்தியாச்சா? இன்னிக்கு தண்ணி இன்னும் விடலையா? அப்புறம், நான் கொஞ்ச நேரம் பொறுத்து வர்றேன். ரேஷன் கடைக்கு போயிட்டு வந்துடலாம் என்றார் நண்பர்.

சரி வாங்க போகலாம் என்று சொன்னார், தாத்தா.

அதற்கிடையில், தண்ணீர் குழாயில், காற்று வரும் சத்தம் கேட்டது. தண்ணீர் வரும் பின்னே , காற்று வரும் முன்னே, என்று சர்..புர் ..என்று சத்தத்துடன் காற்றும் தண்ணீரும் வந்தது.

தாத்தா சொன்னபடியே, சேறும் மண்ணும் கலந்த தண்ணீர் முதலில் வந்தது, பிறகு தெளிவான தண்ணீர் வந்தது.

அப்போது, அங்கே வந்த மாநகராட்சி ஊழியர், தொட்டிக்கு மருந்து ஊத்தலாமா சார், என்று கேட்டுக்கொண்டே வந்தார். தொட்டியின் மூடியை திறந்த அவர், உங்க வீட்டு தொட்டி மட்டும் தான் சார் சுத்தமா இருக்கு. அடிப்பகுதி தெளிவா தெரியுது. என்று ஒரு வெள்ளை நிற மருந்தை ஊற்றினார்.

அவருக்கு தாத்தா ஒரு இருபது ரூபாய் கொடுத்தார். நன்றி தெரிவித்த மாநகராட்சி ஊழியர், ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டு, சென்றார்.

தண்ணீர் தொட்டியில் விழ துவங்கியது.

மீண்டும் படியேறி வந்த தாத்தா, அவரது கைபேசியை எடுத்தார். அது, பட்டன் கைபேசி. அதில் பேச மட்டுமே முடியும். நவீன வசதிகள் எதுவும் இருக்காது.

அதிலிருந்து தனது பேத்திக்கு ஒரு கால் செய்தார். மறுமுனையில் பேசிய அவரது பேத்தி, தாத்தா, நாங்க வருகின்ற வெள்ளிக்கிழமை புறப்பட்டு அங்கு வர்றோம். அம்மா அப்பா எல்லாம் வர்றோம். ஒரு வாரம் தங்குவோம். தம்பியும் வர்றான், என்று சொன்னாள். இதைக்கேட்ட தாத்தா மகிழ்ச்சியில் துள்ளினார்.

பாட்டியிடம் சென்று விஷயத்தை சொல்லிவிட்டு, நாளைக்கு அவர்களுக்கு என்னவெல்லாம் வாங்கி வர வேண்டும் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார்.

பேரப்பிள்ளைகள் வருவதால் தான் உங்களுக்கு மகிழ்ச்சியா?

நம்ம மகனும் மருமகளும் வருவதில் இல்லையா? என்று கேட்டாள் பாட்டி.

ஏன் இல்லை. மகிழ்ச்சி தான்.

பேரக்குழந்தைகள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான் என்றார் தாத்தா.

அவ்வாறே, அந்த வெள்ளிக்கிழமையும் வந்தது. புறப்பட்டுட்டீங்களா? காலையில் எத்தனை மணிக்கு வண்டி வருது. நான் டிரைவர் சொல்லியிருக்கேன். நம்ம காரிலேயே, ஸ்டேஷன் வந்துர்றேன், என்றார் தாத்தா.

பேரன் கேட்டான். ஏன் தாத்தா, நீங்க மட்டும் தான் வருவீங்களா?

இல்லடா பேராண்டி, பாட்டியும் தான் வருவாங்க.. என்றார் தாத்தா.

மறுநாள் காலை, பிள்ளை, மருமகள், பேரன், பேத்தியை அழைக்க ரயில்வே ஸ்டேஷன் போய் விட்டார்கள்.

எந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்று பார்த்து விட்டு, இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருந்தார். அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து தாத்தாவின் தவிப்பை ரசித்துக் கொண்டே இருந்தார் பாட்டி.

ஒரு வழியாக ரயில் வரும் அறிவிப்பு வந்தது.

ஒரு சிவப்பு சட்டை போட்ட போர்ட்டர் ஒருவரிடம் இவர்கள் வரும் பேட்டி எங்கு வரும் என்று கேட்டார் தாத்தா.

ஐயா, கொஞ்ச தூரம் போகனும். நான் வேனும்னா, அவங்க லக்ககேஜ் இறக்க உதவி செய்யட்டுமா? கொடுக்குறத குடுங்க என்றார்.

சரி. வாங்க என்று அழைத்துக் கொண்டார். சரியாக, வண்டி நின்றதும், பெட்டியில் இருந்து சாமான்களை இறக்கி, தலையில் இரண்டு, தோளில் இரண்டு, கையில் ஒன்று என்று எடுத்துக் கொண்டார் போர்ட்டர்.

சிரமப்பட வேண்டாம் தம்பி. ஒன்று இரண்டை எங்களிடம் கொடு என்றார் தாத்தா. பரவாயில்ல ஐயா, இது எங்க தொழில் தான். உங்க வண்டி எங்க நிக்குது என்று வேகமாக சென்றார் போர்ட்டர்.

நல்லபடியாக வண்டியில் ஏற்றிவிட்ட பின், தாத்தா போர்ட்டருக்கு 200 ரூபாய்கள் கொடுத்தார்.

நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார் போர்ட்டர்.

பாட்டி சொன்னார், 100 ரூபா கொடுத்தா போதாதா? கர்ண பிரபு தான், என்றாள்.

எவ்வளவு சுமை, பாவம், அவன் நம்ம பேரப்பிள்ளைங்க பேர சொல்லி டிபன் சாப்பிடுவான் என்றார் தாத்தா.

ஏன். தாத்தா. ஒருத்தருக்கு, சாப்பாடு போடுறதுனால, என்ன லாபம் நமக்கு, என்று கேட்டான் பேரன்.

நம்ம மனுஷ பிறவிக்கே, போதும்னு சொல்ற ஒரு விஷயம் சாப்பாடு ஒன்னு தாண்டா கண்ணா. அதுனால, பசித்த வயிறுக்கு சாப்பாடு போடுறது நமக்கு மட்டுமல்லாமல், நம்ம சந்ததிக்கே புண்ணியம் சேர்க்கும் என்றார் தாத்தா.

சந்ததி அப்படின்னா என்னா தாத்தா, என்று கேட்டாள் பேத்தி.

நான்-பாட்டி, அப்புறம் அம்மா – அப்பா அப்புறம் நீயும், தம்பியும் இப்படி நம்ம குடும்பம் வாழையடி வாழையா தழைக்கிறது தான் சந்ததி, என்றார் தாத்தா.

தாத்தா, வாழையடி வாழை..ன்னா, என்னா? என்று கேட்டான் பேரன்.

நம்ம வீட்டு தோட்டத்தில் இருக்குற வாழை மரத்தின் பக்கவாட்டில், சிறிய வாழைக் கன்றுகள் இருப்பதை பாத்து இருக்கீங்க தானே, அதை தான், ஒரு வாழை குலை போட்டு பலன் கொடுத்தவுடன், அடுத்த கன்றுகள் வளர்ந்து, தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும் இல்லையா? இதைத்தான் வாழையடி வாழை என்று சொல்றோம், என்றார் தாத்தா.

இவ்வாறு, பேரன் – பேத்தி இருவரும், தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் தாத்தா.

இதைக் கவனித்துக் கொண்டு வந்த மருமகள், நம்ம பிள்ளைகளா, இவ்வளவு கேள்விகள் கேக்குறாங்க, அதுக்கும் மாமா சளிக்காம பதில் சொல்றாங்க, என்று கேட்டாள்.

அதற்கு, அவள் கணவன் சொன்னான். பெரும்பாலும், குழந்தைகளுக்கு, பெற்றோர்களை விட அவர்களின் மீது பாசம் காட்டும் தாத்தா-பாட்டிக்குக் கிடைக்கும் மரியாதை மிகவும் அதிகம்.

அதே போல், தாத்தா, பாட்டிகள், எந்தக் கண்டிப்பும் இன்றி பேரப் பிள்ளைகளிடம் அன்பை மட்டுமே கொட்டுவார்கள், இதைத்தான், அசலை விட வட்டிக்கு மதிப்பு அதிகம் என்று சொல்வார்கள்.

அதாவது. தாய், தந்தை (அசல்) பிள்ளைகளை நல்வழிப்படுத்த கண்டிப்புடன் இருப்பார்கள். ஆனால் தாத்தா, பாட்டி (வட்டி) எந்தக் கண்டிப்பும் இன்றி பிள்ளைகளிடம் அன்பை மட்டுமே கொட்டுவார்கள்.

இதனால் வீட்டில் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் “அசலை விட வட்டி இனிமையானது” என்று தாத்தா-பாட்டியைத் தேடிச் செல்வார்கள்.

இதற்குள், அவர்கள் வீடும் வந்தது, அசலும், வட்டியும் வீட்டிற்குள் சென்றது. மகிழ்ச்சி இரட்டிப்பானது. நீங்களும் உங்கள் வீட்டு அசல் மற்றும் வட்டியை தேடி மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *