அகல் விளக்கு
கதையாசிரியர்: மு.வரதராசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 139
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
அத்தியாயம் – 19

நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். ‘ஏதாவது ஒரு கட்டு ஏற்படுத்தி விட்டால் சரியாய்ப் போகும்’ என்று அந்தத் தேநீர்க் கடையின் இளைஞன் சொன்னது என் நினைவுக்கு வந்தது.
ஆவணி மூன்றாம் நாளிலேயே என் கையில் திருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது, “சந்திரன் – வள்ளி” என்று மணமக்களின் பெயரைப் படித்தவுடனே என் உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது. சந்திரனைக் கல்லூரிக்கு அனுப்பியதற்கு மாறாக, அப்போதே ஒரு திருமணம் செய்து மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இவ்வளவு தொல்லையும் இருந்திருக்காது என்று கிண்டலாகப் பேசினான் மாலன். “நான் சொல்வதற்காக வருத்தபடாதே, யாருக்கு என்ன பசி என்று அறிந்து உணவு இடவேண்டும். தன் மகனுக்குக் கல்விப் பசியை விடக் காமப் பசி மிகுதி என்று அவனுடைய தந்தை அப்போது தெரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொண்டாரே, அது போதும்” என்றான்.
“சந்திரனுக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்கிறாயா?” என்றேன்.
“நான் அப்படிச் சொல்லவில்லை, அதுவும் உண்டு ஆனால், அதைவிடப் பெண்ணுறவு தேடுவதில் ஆர்வம் மிகுதி என்று சொன்னேன்” என்றான் மாலன்.
பேச முடியாமல் அடங்கினேன்.
“சென்ற ஆண்டில் வேலூரிலிருந்து வந்த பேராசிரியர் அருளப்பர் ஒரு கூட்டத்தில் சொன்னது நினைவு இருக்கிறதா? அருமையான கருத்து” என்றான்.
“எது என்று எனக்கு நினைவு வரவில்லை. மறந்து விட்டேன், சொல்” என்று கேட்டேன்.
“காக்கையின் குஞ்சாக இருந்தாலும், கழுகின் குஞ்சாக இருந்தாலும் கூட்டில் வளர வேண்டிய காலம் வரையில் கூட்டிலேயே வளர வேண்டும். அந்தக் காலத்தில் வளர்ந்த பறவைகளைப் பார்த்துப் பின்பற்றக் கூடாது. மரக்கிளைகளையோ வானத்தையோ எண்ணி ஏங்கினால் வளர்ச்சிக்கு இடையூறு ஆகும் என்று அழகாகச் சொன்னாரே?”
“ஆமாம் மாணவர்களாக இருப்பவர்கள் கல்விக்கு உரிய பருவத்தில் மற்றவற்றில் ஈடுபடாமல் படிப்பது நல்லது என்று பேசினார்.”
“அது உயர்ந்த கருத்து அல்லவா,”
“உயர்ந்த கருத்துத்தான். ஆனால் அப்படிக் கல்வி ஒன்றையே நாடி அடங்கியிருந்தால் பொது அறிவு வளராமல் போகுமே.”
“கற்று முடிந்த பிறகு பொது அறிவு தானாக வருமே. இப்போது அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் பலருடைய வாழ்க்கையை எடுத்துப் பார். அவர்கள் படித்து முடித்த பிறகுதான் இந்தத் துறைக்கு வந்தவர்கள். அதற்கு முன் படிப்போடு அடங்கியிருந்தவர்கள் தான்.”
“ஆமாம், செய்வன திருந்தச் செய்ய வேண்டும். படிக்கும் போது படிப்பில் செம்மையாக இருந்தால்தான், பிறகு கொள்ளைக்காரன் ஆனாலும் அதையும் செம்மையாகச் செய்ய முடியும். இதிலேயே அரைகுறை என்றால், எதிலும் அரை குறையாகத்தான் முடியும்.”
“குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க் குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது.”
இதைக் கேட்டதும், சந்திரனுடைய வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. என் மனம் சந்திரனுக்காக உருகியது.
சந்திரனுடைய திருமண நாளன்று எனக்குக் கல்லூரியில் கால் ஆண்டுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. ஆகையால் எப்படித் திருமணத்துக்குப் போவது என்று திகைத்தேன். மாலனை அறிவுரை கேட்பது போல் கேட்டேன்.
“கூட்டைவிட்டு வெளியே வருவது என்றால், பெண்ணுறவு தேடி அலைவதற்கு மட்டும் சொன்னது அல்ல. பொதுவாக எந்த வேறு வேலைக்கும் பொருந்தும். திருமணம் குடும்பக் கடமை. அதை உன் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளட்டும், நீ போக வேண்டியதில்லை” என்றான்.
“நண்பன் அல்லவா? அவனுடைய வாழ்வில் ஒரு சிறந்த நாள்.”
“இருக்கட்டும். நீ அன்றைக்கு இங்கிருந்தே அவனுக்காக நன்மை எண்ணு. நீ இங்கிருந்தால், உன் தேர்வும் எழுதலாம், அவனுக்குத் தீமை இல்லை. நீ போனால், உனக்குத் தீமை, அவனுக்கு ஒரு பயனும் இல்லை. இரண்டில் எது சிறந்தது? பற்றில்லாமல் நடுநிலையாக எண்ணிப்பார்” என்றான்.
தராசில் இரண்டு தட்டுகளில் வைத்து எடைபோட்டுக் காட்டுவது போல் இருந்தது. போவதில்லை என்று ஒருவாறு முடிவு செய்தேன்.
ஆனால், மாலன் என் அறையை விட்டுப் போன பிறகு, மனம் ஊசாலாடத் தொடங்கியது. போகாவிட்டால் சந்திரன் என்ன நினைப்பான், சாமண்ணா என்ன நினைப்பார் என்று வருந்தியது. போவதால், என்னுடைய காலமும் முயற்சியும் அவை போலவே ஓரளவு அவனுடைய காலமும் முயற்சியும் வீணாவது தவிர வேறு பயன் இல்லேயே; போகாமல் இருந்தால், காலமும் முயற்சியும் தேர்வுக்குப் பயன்படுமே என்றும் எண்ணினேன். திருமண அழைப்பு மட்டும் அனுப்பினானே தவிர, சந்திரன் தனிப்பட்ட ஒரு கடிதம் எழுதவில்லையே, நீலகிரியிலிருந்து வந்தபிறகு ஒரு வரியும் எழுதவில்லையே என்று சிறிது வருந்தினேன். ஒரு வேலையும் இல்லாத அவன் சிறிது நேரம் செலவிட்டு ஒரு கடிதம் எழுதவில்லையானால், அவனுக்காக நான் ஏன் காலத்தையும் முயற்சியையும் வீணாக்க வேண்டும்? ஊருக்குக் கடிதம் எழுதினால் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் போய்ப் பார்த்து வரட்டும் என்று அமைதியானேன்.
அடுத்த வாரம் ஊரிலிருந்து கடிதம் வந்தது. அதில் அவர்களுக்குத் திருமண அழைப்பே வரவில்லை என்றும், யாரும் திருமணத்துக்குப் போகவில்லை என்றும் குறித்திருந்தார்கள். எனக்கு அது வியப்பாக இருந்தது. சந்திரன் மறந்திருக்கலாம்; புறக்கணித்திருக்கலாம்; அது அவனுக்கு இயற்கை. சாமண்ணா எப்படி மறந்தார் என்று வருந்தினேன். மனைவியை இழந்த அவர் பலவகையிலும் மனம் நொந்தவராக இருப்பதால், எத்தனை கடமைகளை நேரில் கவனிக்க முடியும் என்று எண்ணி ஆறுதல் பெற்றேன்.
அடுத்த ஆவணி தொடக்கத்தில் மாலன் என்னுடைய அறைக்கு வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்து, திடீரென்று “எனக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது; ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது” என்றான்.
எனக்கு வியப்பாக இருந்தது. “என்ன அவசரம்? இன்னும் ஆறு மாதம் பொறுத்தால், பி.ஏ. தேர்வு எழுதி முடித்து விடலாமே. அதற்குள் ஏன்? கூட்டில் வளரவேண்டிய காலத்திற்கு முன்பே வெளியே தலை நீட்டலாமா?” என்றேன்.
என்னுடைய குத்தலை உணர்ந்துகொண்ட மாலன் “இது குஞ்சு தானாகவே வெளியே போய்க் கெடுவது அல்ல. தாய்க் குருவி பொறுப்போடு பார்த்துக் கொண்டு தன் குஞ்சை வெளியே அழைத்துப் போவது இது” என்றான்.
“எப்படியும் கெடுதல்தானே? இறக்கை நன்றாக முளைத்து வரவேண்டிய பருவம் அல்லவா,”
“முதல் கடிதத்திற்கு வேண்டா என்றுதான் எழுதினேன். ஆனால் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான சோதிடர் இந்த ஆவணியில் முகூர்த்தப் பொருத்தம் இருப்பதாகவும், குருதசை பலமாக இருப்பதாகவும், இன்னும் நான்கு வாரத்தில் திருமணம் கூடிவிடும் என்றும் தெற்குத் திசையில் அல்லது தென்மேற்குத் திசையில் பெண் வீடு அமையும் என்றும், ராசிநாதனை எடுத்துப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றும் சொல்லியிருக்கிறாராம்” என்றான்.
எனக்குத் தோன்றிய சிரிப்பை அடக்கிக்கொண்டே “இன்னும் என்ன எழுதியிருக்கிறார்கள்?” என்றேன்.
“ஒரு நல்ல குடும்பத்தில் பெண் பார்த்திருக்கிறார்களாம். கொஞ்சம் தென்மேற்கே உள்ள ஊராம். லக்கினாதிபதி அந்த இடத்தில்தான் பலமாகப் பார்க்கிறானாம். பெண்ணுக்கு மாங்கல்ய பாக்கியம் இருக்கிறதாம். ஆனால் கேதுவின் பார்வை எட்டில் இருப்பதால், இல்வாழ்க்கையில் கொஞ்சம் கசப்பும் இருக்குமாம். நாகபூசை செய்தால் சரியாகிவிடுமாம்” என்றான்.
என்னால் முன் போல் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன்.
“நீ இப்போது இப்படித்தான் சிரிப்பாய். உனக்கு ஒரு காலம் வரும். அப்போது நம்புவாய். அதற்கு ஒரு கிரகம் வந்து அமையும்” என்றான்.
“நீயே முக்கால் சோதிடனாக இருக்கிறாயே” என்று சொல்லிச் சிரித்தேன்.
“என் தகப்பனார்க்கு நன்றாகத் தெரியும். அவர்க்குச் சில நாட்களில் சளி பிடிக்கும். உடனே கிரக பலன் பார்ப்பார். அவர் சொல்வது சரியாக இருக்கும். புதனுடைய பார்வை இருந்தாலோ என்னவோ சொல்வார். சூடான உணவுப் பொருள்களையே சாப்பிட்டாலும் உடம்பில் சீதளம் ஏற்படுமாம். சில கிரகத்துக்கு, எவ்வளவு சீதளமான பொருள் சாப்பிட்டாலும் உடம்பு சூடாகிவிடுமாம். அதில் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.”
“எவ்வளவு இருந்தும் என்ன பயன்? இறக்கை நன்றாக வளர்வதற்கு முன்னமே குஞ்சு கூட்டைவிட்டு வெளியே வரப்போகிறதே.”
“அது நம் கையிலா இருக்கிறது? கிரக பலனை யார் என்ன செய்ய முடியும்,”
“இதே காரணத்தை சந்திரனுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? அவன் கெட்டது கிரக பலனால் என்று சொல்லாமல், அவனையே பழிக்கிறாயே! உனக்கு ஒரு காரணம், அவனுக்கு ஒரு காரணமா?”
மாலன் சிறிது தடுமாறினான்.
“போகட்டும். எண்ணிப்பார். இன்னும் ஆறுமாதம் கடத்தினால் உனக்கும் நல்லது; குடும்பத்துக்கும் நல்லது. வீட்டுக்கு எழுது. உன் நிலையில் நான் இருந்தால், முடி வேண்டா என்று துணிந்த இளங்கோவடிகள் போல், எனக்கு இப்போது திருமணம் வேண்டா என்று பிடிவாதம் செய்வேன். சந்திரன் வழி தெரியாமல் இருளில் இடறி விழுகிறான்; நீயோ பட்டப்பகலில் நேர்வழி தெரிந்தும் ஆசை மிகுதியால் குறுக்கு வழியில் நடக்கிறாய்” என்றேன்.
அறைக்குள் நுழைந்தபோது அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, போகும் போது இல்லை. அவன் வருந்தினாலும் உண்மையைச் சொன்னதே நல்லது என எண்ணினேன்.
மறுநாள் பெருங்காஞ்சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரன்தான் எழுதினானோ என்று பார்த்தால், அவனுடைய கையெழுத்தே இல்லை. அவனுடைய தந்தையார் சாமண்ணா எழுதியிருந்தார். பிள்ளை வீட்டார் வந்து கற்பகத்தைக் கேட்பதாகவும், பிள்ளை எங்கள் கல்லூரியில் படிப்பதால் குணம் முதலியவை அறிந்து தெரிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தார். என் மனம் திகைப்பு அடைந்தது, அடுத்த வரியில் பிள்ளை பி.ஏ. படிப்பதாகவும் பெயர் மாலன் என்பதாகவும் குறித்திருந்ததைப் படித்தவுடன் என் அறிவும் மனமும் நிலைகொள்ளாமல் புரண்டன. நான் கனவிலும் கருதாத தீமை நெருங்கிவிட்டது போலவும் யாரோ மறைந்திருந்து என்னை வதைப்பது போலவும் உணர்ந்தேன். மாலன்மேல் எனக்கு வெறுப்புத் தோன்றியது. அடுத்த விநாடியில் கற்பகத்தின் மேல் சினம் எழுந்தது. சந்திரனை நன்றி கெட்டவன் என்று நொந்தேன். வெறுப்பும் சினமும் மாறித் துயரமும் கண்ணீரும் ஆயின. அறைக்குள் இருக்கவும் மனம் கொள்ளவில்லை. அறையை விட்டு வெளியே செல்லவும் முடியவில்லை மனம் படாதபாடுபட்டது. கடிதத்தைக் கிழித்து எறியலாம் என்று எடுத்தேன். கொஞ்சம் பொறுமையுடன் முற்றிலும் படித்து முடிக்க முயன்றேன். “திருமணத்தைப் பற்றி இப்போது எண்ணியிருக்கமாட்டேன். ஆனால், என்ன செய்வது? என் அக்கா – சந்திரனுடைய அத்தையும் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். உலகத்தில் நான் தனியாக நிற்கிறேன். என் ஆவியும் எந்த நிமிசத்தில் பிரியுமோ அறியேன். சந்திரனுடைய போக்கும் செயலும் எனக்கு வாழ்க்கையில் வெறுப்பையே உண்டாக்கிவிட்டன. ஆகவே, நானும் கண்ணை மூடிக் கொள்வதற்கு முன்னே அந்த ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து விட்டால், சிவனே என்று மூச்சை விட்டு விடுவேன்” என்று கடைசிப் பகுதியைப் படித்ததும் மனம் கலங்கினேன். நல்ல பண்பும் உண்மை அன்பும் உடைய அந்த அத்தையின் வாழ்வும் முடிந்து விட்டதா என்று வருந்தினேன்.
சிறிது நேரத்தில் என்னைப் பிடித்துக் குலுக்கிய அந்த பேய் விட்டு நீங்கியது. என் நிலைமை எனக்கே விளங்கியது. மாலன்மேல் ஒரு குற்றமும் சொல்ல முடியாது. என் மனம் கற்பகத்தை விரும்புவது அவனுக்கு எப்படித் தெரியும்? தான் மணக்கப்போகும் பெண் அந்த கற்பகம்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. அவன் முழுப் பொறுப்பையும் கிரக பலனிடத்தில் ஒப்படைத்து விட்டிருக்கும்போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? கற்பகத்தின் மேலும் சினம் கொள்வதில் பயன் இல்லை. அவளைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்வதாகச் சொல்ல முடியாது. பெண்ணைக் கேட்ட பிறகு திருமணப் பேச்சைப் பேசுவது என்ற நாகரிக நிலை இன்னும் பெரும்பாலான குடும்பங்களில் வரவில்லையே. சந்திரன் தான் என்ன செய்வான்? அவன் குடிகாரனுடைய மனநிலையில் இருக்கிறான். குடிகாரனுக்குத் தன் வழியே தெரியாதபோது, பிறருக்கு எப்படி வழிகாட்ட முடியும்? நான் இதுவரையில் என் விருப்பத்தை ஒருவரிடமும் புலப்படுத்தவில்லையே. இனி மேலாவது புலப்படுத்த முடியுமா? அது மாலனுக்குக் குறுக்கே நிற்கும் முயற்சியாக இருக்கிறதே.
அன்று வகுப்புக்கு போகவில்லை. கல்லூரிக்குப் போகும் நேரத்தில் மாலன் வந்து அழைத்தான். “நீ முன்னே போ. நான் சிறிது நேரம் கழித்து வருவேன்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டேன். எங்கேனும் ஒரு பூங்காவுக்குச் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழலாம் என்று எழுந்தேன். செனாய் நகரில் திரு.வி.க. பூங்காவுக்குச் சென்று ஒரு மூலையில் உட்கார்ந்தேன் திரும்பத் திரும்ப முன்போலவே வெறுப்பும் சினமும் குழப்பமும் ஆறுதலும் மாறி மாறி வந்தன. என்னுடைய கலக்கம் எனக்கே பைத்தியக்காரத் தன்மையாகப் புலப்பட்டது. மாலையில் கடற்கரைக்குச் சென்றேன். நெடுந்தொலைவில் யாரும் நெருங்காத இடத்தில் ஒரு மூலையில் தனியே உட்கார்ந்தேன்; சோர்ந்து படுத்தேன். கிழவனும் கிழவியுமாய் இருவர் அந்தப் பக்கமாக வந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே வந்து தொலையவேண்டும் என்று வெறுப்போடு எண்ணினேன். வந்தவர்கள் இருவரும் ஒருபுறம் உட்கார்ந்து பழைய குடும்பக் கதையைப் பேசத் தொடங்கினார்கள். இன்னும் யாராவது வந்து சேர்ந்தால் அப்புறம் எழுந்து போகலாம். அது வரையில் இங்கேயே இருக்கலாம் என்று படுத்திருந்தேன். பேசிக் கொண்டிருந்த கிழவன் ஒரு கனைப்புக் கனைத்து, “சேச்சே! சுத்தப் பைத்தியங்கள்! எவ்வளவு பெரிய உலகம்! எத்தனை பிள்ளைகள் எத்தனை பெண்கள் பிறந்தது பிறந்தபடியே இருக்கிறார்கள்! இவனுக்கு என்று ஒரு பெண் கிடைக்க மாட்டாளா?” என்றான். கிழவி உடனே, “இந்த உலகத்தில் பெண் பஞ்சமும் இல்லை, ஆண் பஞ்சமும் இல்லை” என்றாள்.
எழுந்து உட்கார்ந்தேன். கன்னத்தில் அறைந்து என்னை நோக்கியே சொன்ன சொற்கள் போல் இருந்தன.
இமாவதியின் திருமண அழைப்பு வந்த அன்று சந்திரன் பட்ட துயரம் நினைவுக்கு வந்தது. அன்று அவனுக்கு எவ்வளவு அறிவுரை சொன்ன நான், இன்று அவனைப் போலவே கலங்குகிறேனே என்று எண்ணிப் பார்த்தேன். எந்தத் துன்பமும் அவரவர்களுக்கு வந்து பட்டால்தான் தெரிகிறது. ஆனால், சந்திரன் முயற்சி செய்தான். கிட்டாததற்கு ஏங்கி அழிந்தான். நான் முயற்சியே செய்யவில்லை. கிட்டக்கூடியதற்கும் முயற்சி செய்யத் திறன் இல்லாமல் வாடுகின்றேன். சந்திரன் அளவு கடந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து அல்லலுற்றான். நான் அளவோடு எதிர்பார்ப்பதற்கும் தயங்கித் தோல்வியுறுகிறேன். நல்ல உலகம் இது! வாதம் குறைந்தால் பித்தம், பித்தம் இறைந்தால் சிலேத்துமம் என்று நோயாளிகள் துன்பப்படுவது போலவே உள்ளது! மன நோயிலும் மிகுந்தாலும் குறைந்தாலும் ஒவ்வொரு வகைத் துன்பம் ஏற்படுகிறதே! காதல் முயற்சியில் இறங்கினால் ஒரு வகை ஏமாற்றம்! இறங்காமலே இருந்தால் இன்னொரு வகை ஏமாற்றம்! ஆனால், சந்திரன் துடுப்புகளை எறிந்துவிட்டு மரக்கலத்தையும் உடைத்துவிட்டுக் கடலில் குதித்தான். நான் துடுப்புகளை ஏந்தியபடியே, மரக்கலத்தில் நின்றபடியே வீசும் புயலின் கொடுமையைப் பார்த்துக் கலங்கி நிற்கிறேன். இவ்வாறு பற்பல எண்ணிக்கொண்டிருந்து விடுதிக்குத் திரும்பினேன்.
அன்று இரவு நல்ல உறக்கமும் இல்லை. சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதுவதா, இல்லையா, என்ன எழுதுவது, மாலனுக்காக விட்டுக்கொடுத்துக் கற்பகத்தை மறந்து விடுவதா, மாலனைப் பற்றிக் கவலைப்படாமல் கற்பகத்தைப் பெற முயற்சி செய்வதா, அப்படியானால் குருவிக்குஞ்சு இறக்கை வளர்வதற்கு முன்னமே கூட்டைவிட்டு வெளியே வந்த கதை ஆகுமோ என்று வேறு வகை எண்ணங்களில் சிக்குண்டு தடுமாறினேன்.
விடியற்காலையில் அயர்ந்து உறங்கிவிட்டேன். பொழுது விடிந்ததும் யாரோ எழுப்பும் குரல் கேட்டுச் சன்னல் வழியாகப் பார்த்தேன். மாலன் நின்றுகொண்டிருந்தான். “நேற்றெல்லாம் காணோம். இரவு நேரம் கழித்து வந்தாய்; முன்னேரத்திலேயே படிக்காமல் விளக்கணைத்துத் தூங்கி விட்டாய். என்ன காரணம்? உனக்கும் ஏதாவது காதல் நோய் முற்றிவிட்டதா, சந்திரனைப் போல-?” என்றான்.
“சந்திரன்தான் உன் மைத்துனன் ஆகப்போகிறானே” என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன். பிறகு வருந்தினேன்.
“என்ன உளறுகிறாய்? எனக்குத் தங்கையும் இல்லை; அவனுக்குப் பெண் கொடுக்கப்போவதும் இல்லை.”
“நீ அவனுக்குக் கொடுக்காவிட்டால் அவன் உனக்குக் கொடுக்கப் போகிறான்.”
மாலன் திகைத்து நின்றான். மூக்கின் அருகே சுட்டு விரலை மடித்து வைத்து என்னவோ எண்ணினான். “உனக்கு ஏதாவது கடிதம் வந்ததா?”
“ஆமாம், பிறகு சொல்வேன்” என்றேன்.
“சொல், சொல்” என்று என்னைத் துளைக்கத் தொடங்கினான். மேசை மேல் இங்கும் அங்கும் தேடினான். “எங்கே கடிதம்? உண்மையைச் சொல்” என்றான்.
சாமண்ணாவின் கடிதம் பற்றிச் சொன்னேன். அமைதியாய்க் கேட்டான்.
“பெண் நல்ல பெண்தானா? நீ பார்த்திருப்பாயே? குணம் எப்படி?” என்றான்.
“அதைப் பற்றி என்னை ஏன் கேட்கிறாய்? உங்கள் வீட்டுச் சோதிடரைக் கேள்” என்றேன். பிறகு அவன் வற்புறுத்தவே, நல்ல அழகு என்றும், நல்ல பண்பு என்றும் அவன் மகிழுமாறு சொன்னேன். அவனுடைய முகத்தில் மலர்ச்சி கண்டபோது, என் உள்ளம் நொந்தது; தாங்க முடியாத ஒரு வகை வேதனை, என் உள்ளத்தில் இருந்தது; அதனை வெளிக்காட்டாமல் நொந்து வாடினேன்.
காலைக் கடன்களை முடித்தேன். உணவுக் கூடத்துக்குப் போய்ச் சிற்றுண்டி உண்டு திரும்பிவந்து என் நாற்காலியில் உட்கார்ந்தபோது, என் மனப்புயல் இருந்த இடம் தெரியாமல் அமைதி நிலவக் கண்டேன். என் துடுப்புகள் உதவியாக இருந்தன; மரக்கலமும் பயன்பட்டது. கடமைகளில் மனம் சென்றது, துடுப்புகளை எறியாமல் உதறாமல் பொறுமையோடு இருந்தது நன்மை ஆயிற்று.
மாலையில் வகுப்பிலிருந்து திரும்பி வந்ததும் சாமண்ணாவுக்குச் சுருக்கமாகக் கடிதம் எழுதினேன். மாலன் மூன்று ஆண்டுகளாகப் பழக்கமானவன் என்றும், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்றும், எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற ஆசை உடையவன் என்றும், ஆனால், பலவகை மூட நம்பிக்கைகள் உடையவன் என்றும் சோதிடத்தில் பற்று மிகுந்தவன் என்றும் எழுதினேன்.
கடிதம் எழுதி முடித்த பிறகு ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து ஒரு நிலையில் நின்றது.
அத்தியாயம் – 20
மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்.
தேர்வு முடிந்ததும் நேரே ஊர்க்குச் சென்றேன். அங்கே நான் கண்ட முதல் காட்சி, எங்கள் வீட்டுத் தோட்டம் ஒரு சிறு பள்ளிக்கூடமாய் மாறியிருந்ததுதான். தென்னை ஓலைகளால் ஒரு சிறு தாழ்வாரம் இறக்கியிருந்தது, தரை நன்றாக மெழகியிருந்தது. இருபது பனந்தடுக்குகள் பரப்பப்பட்டுச் சிறுவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே வெள்ளையாடை உடுத்து அன்புருவாகப் பாக்கியம் உட்கார்ந்து சில சிறுமியர்க்குக் கணக்குக் கற்பித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
“எத்தனை நாளாக இப்படி ஆசிரியர் ஆக மாறிவிட்டீர்கள் அக்கா?” என்று வியப்போடு கேட்டேன்.
“போன ஆண்டு எல்லாம் பாத்திரம் தேய்த்து வேலை செய்து வயிறு வளர்த்தேன். முருக்கிலை ஆலிலை தைத்து வயிறு வளர்த்தேன். அவற்றால் ஒன்றும் குறைவு இல்லை. அப்போது ஓய்வு நேரங்களில் சிறுவர்க்குக் கதையும் கணக்கும் சொல்லிப் பார்த்தேன். அதில் தனி மகிழ்ச்சி இருந்தது. ஏன் அதையே தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணினேன். முதலில் இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். நம் வீட்டு நடையில் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தேன். இப்போது இருப்பத்திரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். அம்மாவை இடம் கேட்டேன். கையில் இருந்த பணத்தைப் போட்டுத் தென்னங்கீற்று வாங்கி இப்படிச் செய்தேன்” என்றார்.
“நல்லதுதான்” என்றேன்.
“என்ன செய்வது தம்பி! கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியும் வேண்டும் என்று தம்பி ஆசைப்பட்டான். அப்பா செய்து போட்டது. தனக்கு வேண்டும் என்று கேட்டான். கொடுத்துவிட்டேன். கொடுத்திருக்கக் கூடாது என்று நம் அம்மா கண்டித்தார்கள். போகட்டும் என்று கொடுத்து விட்டேன். இனிமேல் என் சொத்து அன்பும் அறிவும் தான்.”
உள்ளம் உருகி நின்றேன்.
“என்னைப் பற்றிக் கவலைப்படாதே, தம்பி, உடம்பில் பலம் இருக்கிறவரையில் உழைத்துச் சாப்பாடு தேடிக் கொள்வேன். அதற்குப் பிறகு நீங்கள் இருக்கிறீர்கள்” என்றார்.
அந்தக் குரலில் துயரம் இருந்தது என்று சொல்வதற்கில்லை. நம்பிக்கை இருந்ததாகத் தெரிந்தது.
என் தங்கை மணிமேகலை அந்த ஆண்டில் பத்தாவது வகுப்பிலும், தம்பி பொய்யாமொழி ஏழாவது வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய படிப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக, அவர்களின் அலமாரிகளை ஆராய்ந்தேன். என்ன என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று பார்த்தேன். மணிமேகலையின் அலமாரியில் திரு.வி.க. நூல்களும் காந்தியடிகளின் நூல்களும் விவேகானந்தரின் நூல்களும் பல இருந்தது கண்டேன்.
தங்கையை அழைத்து, “நீ பத்தாவது படிக்கிற பெண், இந்தப் பொதுப் புத்தகங்களைப் படித்துக் காலம் போக்கிக் கொண்டிருக்கலாமா? இவ்வளவு புத்தகங்கள் வாங்கக் காசு ஏது?” என்று சிறிது கடுமையாகக் கேட்டேன்.
“எல்லாம் பாக்கியம் அக்காவின் புத்தகங்கள். மாதம் மூன்று ரூபாய் சேர்த்து ஏதாவது புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறார். நூல் நிலையத்திலிருந்து சிலவற்றை எடுத்த வரச் சொன்னார். அவற்றையும் படிக்கிறார். அக்காவுக்கு இடம் இல்லாததால் இங்கே அலமாரியில் ஒரு பக்கத்தில் வைத்திருக்கிறார்” என்றாள்.
“சரி. போ. அக்கறையாகப் படி” என்று சொல்லி அனுப்பி விட்டேன்.
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா நெருங்கி வந்து, “பாக்கியம் முன்போல் இல்லை அப்பா! நீங்கள் படிப்பதைவிட மிகுதியாகப் படிக்கிறாள். அவளுடைய ஒரு வயிற்றுக்காகத் தனியே சமைக்க வேண்டா என்று தடுத்து நம் வீட்டிலேயே சாப்பிடுமாறு சொன்னேன். சும்மா அல்ல, சாப்பாட்டுக்கு இரண்டு பங்காக வேலை செய்கிறாள். ஒரு நொடி சும்மா இருப்பதில்லை. குடும்ப வேலையில் முக்கால் பங்கு அவளே செய்கிறாள். எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறாள். மற்ற நேரத்தில் மாலையில் இப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். பகல் எல்லாம் படிக்கிறாள். இலை தைக்கிறாள். கிடைக்கிற காசைப் புத்தகம் வாங்குவதற்கும் பத்திரிகை வாங்குவதற்கும் செலவழிக்கிறாள்” என்றார்.
“இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நூல் நிலையமே ஏற்பட்டு விடும்போல் இருக்கிறதே” என்றேன்.
“வீண் வேலை, வீண் பேச்சு ஒன்றும் இல்லை. அவளுடைய காலம் நல்ல வழியில் கழிகிறது” என்றார் அம்மா.
என் உள்ளம் மகிழ்ந்தது.
மறுபடியும் அம்மா, “இந்த புத்தகங்கள் எல்லாம் மணிமேகலையும் பொய்யாமொழியும் விடுமுறையில் படிப்பதற்காக இங்கே அலமாரியில் இருக்கட்டும் என்கிறாள் புத்தகம் எல்லாம் அவர்களுடைய சொத்தாம்.”
உழைக்கும் பழக்கமும் தொண்டு மனமும் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பதை அந்த அம்மையாரின் வாழ்க்கை தெளிவாக்கியது.
திருமணத்துக்கு வருமாறு அம்மாவை அழைத்தேன். இசைந்தார். மறுநாள் மாலை பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டோம். வீட்டுக்குள் நுழைந்ததும் கற்பகத்தைக் கண்டு அம்மா சிறிது வருந்தினார். “உன் திருமணத்தைப் பார்க்க அம்மாவும் இல்லையே, அத்தையும் இல்லையே” என்று கற்பகத்திடம் கூறினார். மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு வந்தபோது, துயரத்தை ஏன் நினைவூட்ட வேண்டும் என்று எண்ணி அம்மாவின் பேச்சை மாற்றினேன். கற்பகம் என்னைத் தலைநிமிர்ந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தேன். அவள் என் பக்கமே திரும்பவில்லை. தன் கண் கலக்கத்தை மறைப்பதற்காக அவ்வாறு இருந்தாள் என்று எண்ணி அப்பால் வந்தேன்.
சாமண்ணாவும் சந்திரனும் அன்போடு வரவேற்றார்கள். சாமண்ணாவின் குரலிலும் பார்வையிலும் தளர்ச்சி இருந்தது. கவலை முதுமையை விரைந்து கொண்டு வருதலை உணர்ந்தேன். சந்திரனுடைய முகத்தை நன்கு கவனித்தேன். அவன் முன்னைவிட மிகுதியாகப் பேசினான். ஆனாலும் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது இருந்த உள்ளக் கலப்பு இல்லை. ரயில் பயணத்தின்போது அன்பு இல்லாமலே ஓயாமலே பேசுகின்றவர்கள் இல்லையா? அந்தப் போக்கில் இருந்தது, சந்திரனுடைய பேச்சு. வேலைக்காரர்களைப் பற்றியும் விலைவாசியைப் பற்றியும் பிள்ளை வீட்டுக்காரரின் மந்தமான போக்கைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான். சாமண்ணா ஒருமுறை என்னைத் தனியே அழைத்துச் சென்று, “பிள்ளை எப்படி? நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார். கடிதத்தில் எழுதிய கருத்துக்களையே திரும்பச் சொன்னேன். மகிழ்ந்தார். பிறகு சந்திரனைப் பற்றிச் சில குறிப்புகள் சொன்னார். “திருந்துவான் என்று பார்த்தேன். திருந்துவதாகத் தெரியவில்லை. குடும்பத்திற்குப் பிள்ளை என்று இருக்கிறான். அவ்வளவே தவிர நல்ல பெயர் எடுப்பதாகத் தெரியவில்லை. பொருளிலும் கருத்து இல்லை. வரவு செலவு பார்த்து வாழக் கற்றுக் கொள்ளவில்லை. கேட்டால் உதறிவிட்டுப் போய் விடுவானோ என்று பயமாக இருக்கிறது. அவனுக்கு வந்த மனைவியோ தங்கம். உரிமை கொடுக்கத் தெரியாதவர்கள், அதிகாரிகளாய் உயர்வோடு நடப்பார்கள்; அது முடியாதபோது அடிமைகளாய்ப் பணிந்து நடப்பார்கள் என்று அறிஞர் ஒருவர் சொன்னது பொருத்தம்தான்.”
என்னிடமே உரிமையோடு அன்பாகப் பழக முடியாதவனாக இருக்கிறானே. அன்பும் உரிமையும் இருந்தால், எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவானே, நீலகிரியிலிருந்து இவனை அழைத்து வந்தபிறகு இன்றுதானே பார்க்கிறேன்! அன்பாகப் பழக வேண்டும் என்ற ஆர்வமும் நன்றியுணர்ச்சியும் இருந்தால், விடுமுறையிலாவது வாலாசாவுக்கு வந்திருக்கக் கூடாதா? திருமணம் ஆனபிறகு மனைவியோடு வெளியூர்க்குப் போகவேண்டிய காரணத்தை முன்னிட்டாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா என்று திண்ணை மேல் உட்கார்ந்தபடி பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.
“யார்? வேலுவா?” என்று அப்போது ஆசிரியர் வந்தார். “எங்கே வராமல் நின்றுவிடப் போகிறாயோ என்று எண்ணினேன். வந்தது நல்லது. வரப்போக இருந்தால் தான் அன்பும் உறவும் வளரும்” என்றார்.
“தொடர்பும் பழக்கமும் இல்லாதிருந்தாலும் உண்மையான நட்பு நீடிக்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறாரே” என்றேன்.
“உயர்ந்த மக்கள் சிலருக்கு அது உண்மையாக இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர்களுக்குத் தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டால் நட்புக் குறைந்து போகிறது. இளமையில் என்னோடு பழகிய நண்பர்கள் எங்கோ இருக்கிறார்கள். மறந்தே போய்விட்டேனே?” என்றார்.
அப்போது அந்தப் பக்கமாக நீலநிறப் பட்டுச் சேலை உடுத்திச் சென்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன்.
“அது யார் தெரியுமா?” என்றார் ஆசிரியர்.
“தெரியாதே”
“சந்திரன் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையா? இவள்தான் அவனுடைய மனைவி”
“அறிமுகம் செய்யவில்லை, ஒன்றும் இல்லை. அந்த அன்பான வழக்கங்களை அவன் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை.”
“என்ன செய்வது? அவன் போக்கே ஒரு மாதிரி.”
“நல்ல பெண்தானே?”
“ஒரு குற்றமும் சொல்ல முடியவில்லை. சந்திரனுடைய அம்மா இருந்திருந்தால் மருமகளைக் கண்ணில் ஒத்திக் கொள்வாள். ஊரெல்லாம் புகழ்ந்து பெருமைப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பெண். ஆனால், அவன் ஒருவன் மட்டும் பழிக்கிறான், சிறுமைப் படுத்துகிறான். அது ஒரு புராணம். உஸ் – அதோ அவன் வருகிறான்.”
பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், “இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை” என்று பேசத் தொடங்கினார்.
வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். “மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து வீட்டுக்குள் நுழைந்தாள். அப்போதாவது அவன் அறிமுகப்படுத்துவான் என்று எதிர்பார்த்தேன். அவன் அதைப் பற்றியே சிந்தித்தவனாகத் தெரியவில்லை.
ஒரு முறை வீட்டினுள் எட்டிப் பார்த்தபோது அம்மாவும் சந்திரனுடைய மனைவியும் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கற்பகம் தன் அண்ணியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணினேன்.
பிள்ளை வீட்டுக்காரர் வருதல், நலுங்கு வைத்தல் முதலியவை முறைப்படி நடந்தன. சந்திரன் மனைவி எல்லா வேலைகளிலும் முன்நின்று பொறுப்புடன் செய்ததும் உணவு பரிமாறியபோது அக்கறையோடு கவனித்ததும் போற்றத்தக்கவாறு இருந்தன. குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் என்று ஆசிரியர் சொன்னது பொருத்தமாக இருந்தது.
மாசன் என்ற பழைய வேலைக்காரன் எங்கோ வெளியே போயிருந்து வந்தான். என்னைக் கண்டதும் பரிவுடன் பேசினான். அம்மாவும் வந்திருப்பதாகச் சொன்னவுடன் உள்ளே தேடிச் சென்று பேசிவிட்டு வந்தான். பழைய ஆட்களில் தோட்டக்காரன் சொக்கான் ஒருவன்தான் வரவில்லை.
மணமகன் மாலன் நலுங்கு முடிந்ததும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் என்னைத் தன் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
மறுநாள் காலையில் எழுந்து தென்னந்தோப்பின் பக்கமாகச் சென்றபோது சொக்கானைக் கண்டேன். “என்ன சொக்கான்! எப்படி இருக்கிறாய்” என்று கேட்டேன்.
“நல்லபடி இருக்கிறேன் அய்யா! நீங்கள் எங்கள் ஊர்க்கு வருவதே இல்லையே? மறந்துவிட்டீர்களா?” என்றான். “நீந்தக் கற்றுக் கொண்டீர்களே, நன்றாக நீந்துகிறீர்களா?” என்று கேட்டான்.
அவனுடைய வயது, கண் பார்வை, பசி முதலியவை பற்றி நானும் கேட்டேன். “ஒன்றும் குறைவு இல்லை” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, “ஆனால்” என்று நீட்டி அமைதியானான்.
“பிறகு என்ன குறை?” என்று கேட்டேன்.
“பெரிய பண்ணைக்காரருக்கு பிறகு பண்ணை எப்படியோ என்றுதான் கவலையாக இருக்குது” என்றான்.
“சின்னவர் சந்திரன் இருக்கிறாரே” என்றேன்.
வாயைச் சப்பி ஒலித்து, “ஒன்றும் பயன் இல்லைங்க. படித்தும் பயன் இல்லாதவராய்ப் போய்விட்டார். குழந்தை போல் ஒரு பெண்டாட்டி வந்திருக்குது. அதையும் கவனிக்காமல் ஊர் மேய்கிறார். கண்டபடி எல்லாம் திரிகிறார். சொல்ல நாக்குக் கூசுது. நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். பொலி எருது போல் திரிந்தவர்கள் பலபேரைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு வாழ்வா? சே!” என்றான்.
“அப்படியா?” என்றேன்.
“இன்றைக்குக் காசு இருக்குது. உடம்பில் வலு இருக்குது என்று ஆடலாம். நாளைக்குக் காலணாவுக்கு மதிக்க மாட்டார்கள்” என்றான்.
அவனுடைய பேச்சில் சந்திரனுக்காக வருந்துவது இல்லாமல், ஆத்திரம் கலந்து பேசுவதை உணர்ந்தேன். பிறகு மாசனிடம் பேசிய போது தான் காரணம் தெரிந்தது. தோட்டக்காரனுடைய பெண்ணோடு உறவுகொண்டு அவள் கணவனோடு வாழாதபடி சந்திரன் கெடுத்துவிட்டான் என்பதை அவன் சொன்னான். அதைக் கேட்டபோது என் உள்ளமும் கொதித்தது.
“பெரியவர்க்காகப் பார்க்கிறேன். இல்லையானால் ஒரு நாளும் இந்த வீட்டில் வேலை செய்யமாட்டேன். சின்னவர் அவ்வளவு கெட்டுவிட்டார்” என்றான் மாசன்.
திருமணம் சடங்குகளோடு நடந்தது. பந்தலுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து நான் கற்பகத்தின் முகத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் ஒரு மூலையில் பழைய கலக்கம் தலையெடுத்தது. உடனே அதை அகற்றி, நண்பன் மகிழட்டும், அதுவே என் கடமை என்று உறுதி பூண்டேன். மாலனுக்கு என் உள்ளத்தில் நிகழ்ந்தது இன்னது என்று தெரியாது. அவன் அடிக்கடி என்னைக் கண்டு புன்முறுவல் பூத்தான். ஆனால், அதற்கு முன் கண்டபோதெல்லாம் மகிழ்ந்த கற்பகத்தின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி இல்லை. அவளுடைய உள்ளத்தில் என்னைப் பற்றிய ஏக்கம் இருக்குமோ என்று ஐயுற்றேன். அப்படித் தெரிந்திருந்தால் திருமணத்துக்கு வராமலே இருந்திருக்கலாமே என்றும் எண்ணினேன். எனக்குப் பழங்கதையாய்ப் போன அந்த விருப்பம் அவளுக்கும் பழங்கதையாய்ப் போயிருக்க வேண்டுமே என்று எண்ணினேன்.
திருமணம் முடிந்து, விருந்தும் முடிந்து அன்று மாலை விடைபெற்றுப் பிரிந்தபோதாவது கற்பகம் பேசுவாளா என்று பார்த்தேன். அவள் இருந்த இடத்திற்கே சென்று அவளெதிரே நின்றேன். அவளுடைய முகத்தில் கண்ட வெறுப்புணர்ச்சி என் தவறுதலை எனக்கு எடுத்துக்காட்டுவதுபோல் இருந்தது. ஒரு வினாடி என் முகத்தைப் பார்த்தாளே தவிர, என்னோடு பேசவும் இல்லை புன்முறுவல் கொள்ளவும் இல்லை. “போய் வரட்டுமா?” என்று நான் சொன்னபோது தலையை மட்டும் அசைத்தாள்.
மாலன் அன்பாக விடை கொடுத்தான். என் உள்ளத்தில் கற்பகம் ஏற்படுத்திய புண் அவனுடைய அன்பாலும் ஆறவில்லை. அதனால் ஆறாப் புண்ணுடன் திருமண வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சாமண்ணா சிறிது தொலைவு நடந்து வந்து வழி விட்டார்.
சந்திரன் இன்னும் சிறிது தொலைவு நடந்து வந்தான். அம்மா அவனைப் பார்த்து, “தங்கையின் திருமணமும் முடிந்தது, அப்பா மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். அவருக்குக் கவலை வைக்காதே, இனிமேல் குடும்பம் உன் பொறுப்பு. நீ நல்லபடி பார்த்துக்கொள்ளணும். உனக்கு நல்ல மனைவியும் வாய்த்திருக்கிறாள். அக்கறையான பெண், அடக்கமான பெண். பார்த்தால் பசிதீரும் என்பார்களே அப்படி இருக்கிறாள். நல்லபடி வைத்துக்கொண்டு சுகமாக வாழணும். அவ்வளவுதான்” என்று அறிவுரையும் வாழ்த்துரையும் கலந்து கூறினார்.
சந்திரனுடைய முகத்தில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. சொன்னால் சொல்லிப் போகட்டும் என்பதுபோல் கேட்டுக் கொண்டு வந்தான். அவனுடைய முகத்தை நேற்றும் இன்றும் கவனித்த நான், என் உள்ளத்தில் உணர்ந்ததைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். “உன் மூக்கில் முன்பு இல்லாத மினுமினுப்பு இருக்கிறது. காதின் ஓரமும் மாசு படிந்தாற்போல் கொஞ்சம் கறுப்பாக இருக்கிறது. தடிப்பாகவும் தெரிகிறது. தோலில் நோய் வந்தால் உடனே கவனிக்க வேண்டும். எதற்கும் ஒரு மருத்துவரிடத்தில் காட்டிக் கேள். அசட்டையாக இருந்து விடாதே” என்றேன்.
அவன் தன் இடக்கையால் காதைத் துடைத்தபடியே “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்றான்.
“எதற்கும் ஒருமுறை போய்ப் பார்த்து வருவது நல்லது” என்று சொல்லி விடைபெற்றேன்.
அம்மாவும் நானும் நடக்க, மாசன் எங்களுக்குத் துணையாக ஏரிக்கரை வரைக்கும் வந்தான். வழியில் முன்பு கண்ட குடிசை வந்ததும், அந்தக் கிழக் காதலர் இருவரையும் நினைத்துக் கொண்டேன். “மாசா! அந்தக் கிழவனும் கிழவியும் இன்னும் இங்கே இருக்கிறார்களா?” என்றேன்.
“இருக்கிறார்கள். அப்படியே இருக்கிறார்கள்?” என்றான் மாசன். அம்மா முன்னே போகட்டும் என்று இருந்து, நான் மட்டும் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன்.
“யார் அது?” என்றாள் கிழவி.
“கலியாணத்துக்கு வந்தவன். சந்திரனோடு கூடப் படித்தவன்” என்றேன்.
“முன்னெல்லாம் வருமே, அந்தப் பிள்ளையா?” என்றான் கிழவன்.
“ஆமாம்” என்றேன்.
“மொட்டையம்மா இறந்து போச்சே அப்பா! நல்ல பிறப்பு அது. அது பிறந்த வீட்டில் ஒரு கழுதை வந்து பிறந்திருக்கிறதே.”
கிழவி குறுக்கிட்டு, “பேசாமல் இரு நமக்கு என்ன? யாராவது எந்தக் கதியாவது போகட்டும்” என்று கணவனைத் தடுத்தாள்.
“மெய்தான். பகலில் பக்கம் பார்த்துப் பேசு என்று சொல்லியிருக்கிறார்கள். சின்ன பெண்கள் வெளியே போனால் நாய்போல் திரிகிறானாமே! பெரிய வீட்டுப் பிள்ளை மரியாதையாக நடக்க வேண்டாவா? சேச்சே” என்றான் கிழவன்.
இது போதும் என்று அங்கிருந்து புறப்பட்டேன். ஏரிக்கரையை அணுகி பஸ் நிற்கும் இடத்தில் காத்திருந்தோம். வேலத்து மலைச்சரிவைக் கண்டதும் தாழை ஓடை நினைவுக்கு வந்தது. ஊர்ப்பக்கம் திரும்பியபோது, பழைய அரளிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன். மலரும் அரும்பும் இல்லாமல், ஒன்றும் உதவாத இலைகளோடு அந்தச் செடி நின்று கொண்டிருந்தது. அதன் கீழே துளசிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன், இருந்தது. ஆனால், ஓர் இலையும் இல்லை. குச்சிகள் இருந்தன. அவைகளும் உலர்ந்திருந்தன.
அத்தியாயம் – 21
பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். “நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்” என்றேன்.
“உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?” என்றான்.
“உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு.”
“கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் சொல்வது?”
“ஒன்று. நம் உழைப்பிலேயே ஏதாவது குறை இருப்பதாகக் கருதவேண்டும். அல்லது, உலகம் ஏமாற்றிவிட்டதாகக் கருதவேண்டும்.”
இப்படிப் பேசிக்கொண்டே புத்தகம், படுக்கை முதலியவைகளைக் கட்டி ஒழுங்கு செய்தேன். விடுதியை விட்டுப் புறப்பட்டபோது வருத்தமாக இருந்தது. அடுத்த ஆண்டில் எம்.ஏ. வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம் இருந்தபோதிலும், வேண்டா என்று தந்தையார் தடுத்து நிறுத்திவிட்டால், இனி விடுதி வாழ்க்கை ஏது என்று வருந்தினேன். உள்ளத்தில் விடுதிக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டேன். வழக்கம்போல் மாலனும் நானும் ஒன்றாகவே பயணம் செய்தோம். அரக்கோணத்தில் அவன் பிரிந்தான். பிரிந்தபோது, “நம்முடைய மாணவ வாழ்க்கை இன்றோடு முடிந்தது” என்றான். “ஆனாலும் நாம் என்றும் நண்பர்களாக இருக்கவேண்டும்” என்று சொல்லி விடைபெற்றேன்.
படிப்பு முடிந்ததும் விடுதலையுணர்ச்சி ஏற்படும் என்று அதற்குமுன் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு மாறாக, அதுவரையில் இருந்த உரிமை வாழ்வு குறைவது போல் உணர்ந்தேன். வீட்டில் தங்கையின் திருமணம் பற்றிய பேச்சு மிகுந்திருந்தது. அதைப்பற்றிப் பேசியபோது தாயின் முகத்தில் கவலை இருந்தது. தந்தையின் முகத்தில் என்றும் இருந்த கவலை அப்போது மிகுதியாகத் தோன்றியது. சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்களாம். பிள்ளை எம்.ஏ. படித்த பிள்ளையாம். ஒரு வீடு சென்னையில் வாங்கி எழுதி வைத்து கையில் ஐயாயிரம் கொடுத்து, திருமணச் செலவும் செய்ய வேண்டுமாம். குடும்பத்தையே விற்றாலும் அவ்வளவு செலவு செய்யமுடியாது என்று தந்தையார் வருந்தி அனுப்பிவிட்டாராம். வேலூரிலிருந்து இன்னொரு குடும்பத்தார் வந்தார்கள். பிள்ளை பி.ஏ. படித்தவனாம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்துத் திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்றார்களாம், அதுவும் முடியாது என்று தந்தையார் மறுத்துவிட்டாராம். சேலத்திலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து, பணம் கேட்காமல் பெண் கேட்டார்களாம். பிள்ளை இண்டர் படித்தவராம். ஆனாலும், முதல் மனைவி இறந்து இது இரண்டாம் திருமணமாக இருப்பதால் தாய் விருப்பம் இல்லாமல் மறுத்துவிட்டாராம்.
கடைசியில் பத்தாவது படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவரின் குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்கள். பணம் ஒன்றும் தேவையில்லை என்றும், எளிய முறையில் திருமணம் செய்து வைத்தால் போதும் என்றும் கூறினார்கள். பெண்ணும் பத்தாவது படித்தவள் அல்லவா என்று அம்மா கொஞ்சம் தயங்கினார். “பையனை நான்கு ஆண்டுகள் விடுதியில் சேர்த்துக் கல்லூரியில் படிக்க வைத்ததற்கே எவ்வளவோ செலவு ஆயிற்று. சின்ன மளிகைக் கடையில் எவ்வளவுதான் நான் ஒருவன் சம்பாதிக்க முடியும்? பி.ஏ., எம்.ஏ., பார்த்துப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கொடுக்க என்னால் முடியாது. நீங்கள் எப்படியாவது போங்கள்” என்று அப்பா தம் உள்ளத்தின் குமுறலை எடுத்துரைத்த போது அம்மா பேசாமல் இசைந்துவிட்டார்.
படித்த மாப்பிள்ளை வீட்டாரின் இரக்கமற்ற பண வேட்டையையும் பெண்ணைப் பெற்ற பெற்றோரின் மனவேதனையையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் குடும்பத்திலேயே இந்த அனுபவத்துக்கு ஆளானபோது, உலகப் போக்கை மிக மிக வெறுத்தேன். படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு; அறிவுக்கு அழகு; அன்புக்கு அழகு என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன். சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக்கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூறமுடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவிக்கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும். இவ்வாறு எண்ணிக் கொதித்த என் மனத்தில் கோயில்களும் பணத்துக்குத் தக்கவாறு மூர்த்தியின் பெருமையும், பணம் கொடுப்பவர்களின் பெருமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு அங்கே தரப்படும் சலுகைகளும் சிறப்புகளும், மடங்களிலும் மற்ற அறநிலையங்களிலும் பணத்துக்கு வரவேற்பு அமைந்துள்ள சிறப்பும் பெருமையும் ஆகிய எல்லாம் நினைவுக்கு வந்தன.
எப்படியோ என் தங்கை மணிமேகலையை ஏழை ஆசிரியர் ஒருவர்க்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முடிவு ஆயிற்று. அடுத்து, என் பேச்சு வந்தது. இனிமேல் படிக்க வைக்க முடியாது என்பதை அப்பா தெளிவாக்கி விட்டார். முன்பின் தெரியாத குடும்பத்துப் பெண்ணைக் கொண்டுவந்து மருமகளாகக் கொண்டால், இந்த ஏழைக் குடும்பம் என்ன ஆகுமோ, தெரிந்த வீட்டில் வேலூரில் உள்ள பெண்ணே நமக்குப் போதும் என்ற கருத்தையும் தெரிவித்தார். அம்மா ஒன்றும் கூறாமல் அமைதி ஆனார். நானே அம்மாவிடம் என் தயக்கத்தைச் சொன்னேன். “அத்தை மகள் என்பது ஒன்றுதான் குறை; பெண்ணைப் பொறுத்த வரையில் வேறு குறை இல்லை. மற்ற எல்லாப் பொருத்தமும் இருந்து ஒரு குறை இருந்தால் இருந்து போகட்டும்” என்றார். “வாய் துடுக்கு அல்லவா அம்மா?” என்றேன். “சின்ன வயதில் அப்படி இருந்தாள். இப்போது இல்லை. தவிர, நாம் புது உறவு தேடிப்போனால், அங்கே அந்தப் பெண்ணைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? இயற்கையாகவே வாய் துடுக்காக இருந்தாலும் முதலில் அடக்கமாகப் பழகுவாளே, அப்போது ஏமாறுவோம் அல்லவா,” என்றார். வேறு வழி இல்லைபோல் தோன்றியது. “தேர்வு முடிவு தெரியட்டுமே” என்றேன். “அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இரண்டு திருமணமும் ஒன்றாக நடந்தால் செலவு குறையும்” என்றார்.
கல்லூரியில் படித்த காலத்தில், அது ஓர் அறை என்றும், படித்து முடித்த பிறகு புகும் உலகம் திறந்தவெளி என்றும் கற்பனை செய்து கொண்டிருந்தேன். தங்கையின் திருமணப் பேச்சும் என் திருமணப் பேச்சும் அவற்றை ஒட்டிய சிக்கல்களும் எனக்கு உண்மையை உணர்த்தின. நான் இதுவரையில் இருந்ததுதான் திறந்தவெளி என்றும், இப்போது புகும் வாழ்க்கைதான் புழுக்கம் மிகுந்த அறை என்றும் உணர்ந்தேன்.
என் கவலையையும் சோர்வையும் பாக்கிய அம்மையார் உணர்ந்து கொண்டார். “கயற்கண்ணியைவிட நல்ல பெண்ணாக, தெரிந்த பெண்ணாக, இருந்தால் சொல், நானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லி ஏற்பாடு செய்வேன்” என்றார்.
சொல்லத் தெரியாமல் விழித்தேன்.
“தங்கையைப் பற்றி நீ கவலைப்பட்டுப் பயன் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொன்னாரே” என்றார்.
திருக்குறளை மேற்கோளாகச் சொன்னவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. அந்த அம்மையாரின் படிப்பு திரு.வி.க நூல்களிலிருந்து திருவள்ளுவர் வரையில் போய் விட்டதே என்று வியந்தேன். ஏதாவது மறுமொழி சொல்லியாக வேண்டுமே என்று, “இன்னும் கொஞ்ச காலம் பொறுக்கலாமே” என்றேன்.
“பொறுப்பதால் பயன் இல்லையே; தங்கைக்கு வயது பதினெட்டு ஆகிவிட்டது. இனிமேல் பொறுத்தால் மட்டும் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைப்பானா? வயது ஆக ஆக மாப்பிள்ளை வருவது குறையும். படிப்பும் பணமும் இருந்தால், அல்லது பணம் மட்டும் இருந்தாலும் சரி, முப்பது வயது வரையில் பொறுத்திருக்கலாம். வாழ்க்கையில் செல்வாக்கு இருந்தால், அதற்கு மேலும் பொறுத்திருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் பொறுத்திருப்பதால் பயன் இல்லையே.”
“தங்கைக்கு அல்ல, எனக்குச் சொல்கிறேன்.”
“உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள் என்று பழங்காலத்தில் சில குடும்பங்களுக்குள்ளேயே திரும்ப திரும்பப் பெண் கொண்டதற்கும் இந்தப் பொருளாதாரக் கவலைதான் காரணம் என்று எண்ணுகிறேன். இந்த கவலை தீரும் வரையில் உலக சமுதாய வாழ்க்கையில் நல்ல மாறுதல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.”
அந்த அம்மையாரின் இந்தப் பேச்சு எனக்கு மேலும் வியப்பை உண்டாக்கியது. வார இதழ்களையும் மாத இதழ்களையும் வாங்கித் தவறாமல் படித்து வருகிறார் என்று முன்னமே அம்மா சொல்லக் கேள்விப்பட்டேன். அப்படிப் படிப்பதால் இவ்வளவு தெளிவாக அறிவு வளர்ந்திருந்ததை உணர்ந்தேன்.
மறுபடியும் பழைய கேள்வியையே கேட்டார். “கயற்கண்ணியைவிடப் பழக்கமான பெண்ணாக நல்ல பெண்ணாக இருந்தால் சொல்” என்றார்.
பேசியும் பயன் இல்லை, பேசாமலிருந்தும் பயன் இல்லை என்று உணர்ந்தேன்.
திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. அரிசி முதல் சர்க்கரை வரையில் எல்லாப் பொருள்களும் வந்து சேர்ந்தன. உறுதிப்படுத்தும் சடங்குகள் இரண்டும் நடந்தன. அழைப்புகள் இங்கும் அங்கும் பறந்தன. அந்த வேலைகளில் நானும் கலந்து கொண்டேன். ஆற்றின் சுழற்சியில் நானும் சிக்கிக் கொண்டேன். சுழல் கடந்தும், ஆற்றின் போக்கிலேயே ஓடினேன். சந்திரனுக்கும் மாலனுக்கும் அழைப்புகள் அனுப்பிக் குடும்பத்தோடு வருமாறு தனிக் கடிதங்களும் எழுதியிருந்தேன்.
மாலன் மட்டும் திருமணத்திற்கு முந்திய நாளே வந்திருந்தான். கற்பகம் நிறைந்த கர்ப்பமாக இருந்ததால் வரமுடியவில்லை என்று சொன்னான்.
“உன் மைத்துனன் சந்திரன் வருவானா?” என்று கேட்டேன்.
“எனக்கு நம்பிக்கை இல்லை”
“ஏன் அப்படி?”
“அவன் எங்கும் போவதில்லை. உள்ளூரிலேயே எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறான். என்னோடும் நெருங்கிப் பேசுவதில்லை. பழகுவதையே வெறுஞ் சடங்காக வைத்துக்கொண்டிருக்கிறான்.”
“காரணம் என்ன?”
“நான் சொன்னால் நீ ஒப்புக்கொள்ளமாட்டாய். குற்றமுள்ள நெஞ்சு வெளியே வந்து பழகப் பயப்படுகிறது.”
“ஆடும் மாடும் மனிதனை நெருங்கிப் பழகுவது போல், பாம்பும் புலியும் பழகுமா? தங்கள் இனத்தோடு பழகுவதும் இல்லையே. நானும் நீயும் குற்றம் இல்லாதவர்கள். ஆடுமாடுகள் போல் கூடி வாழ்ந்து பழகுகிறோம்.”
“கட்டாயம் வருவான் என்று நம்புகிறேன். உனக்கு எழுதியது போல் கடிதமும் எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்” என்று சொல்லி மாலனிடம் எங்கள் இளமை நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.
சந்திரன் அத்தையோடும் வேலைக்காரப் பையனோடும் முதல் முதலில் ஒரு வண்டியில் வந்து இறங்கியது. நான்காம் வீட்டில் குடியிருந்தது, அப்போது சந்திரன் அழகாகவும் அறிவாகவும் இருந்த நிலை, என் காற்றாடியை வேப்பமரத்தில் மாட்டி அறுத்தது, அதனால், நட்பு ஏற்பட்டது, பள்ளிக்கூடத்துக்குச் சேர்ந்து போய்ச் சேர்ந்து வந்தது, நாங்கள் உட்கார்ந்து பேசிய திண்ணைகள், விளையாடிய இடங்கள், பார்த்த வேடிக்கைகள், படித்த அறைகள் எல்லாவற்றையும் மாலனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் காலையில் திருமண நேரத்திலும் சந்திரனை எதிர்பார்த்தேன். அப்போதும் வரவில்லை. சாமண்ணா ஒரு மூலையில் வந்து உட்கார்ந்திருந்ததை நானும் கவனிக்கவில்லை, மாலனும் சொல்லவில்லை. திருமணம் முடிந்த பிறகு அவர் என்னை நோக்கி எழுந்து வந்தார்.
“எப்போது வந்தீர்கள்?” என்றேன்.
திருமணம் தொடங்கியபோது வந்ததாகக் கூறினார், ஆசிரியரும் வந்திருந்ததைக் காட்டினார்.
“சந்திரன் வரவில்லையா? மனைவியோடு வருமாறு எழுதியிருந்தேன்.”
“தெரியும். மருமகளுக்கு இங்கே வர வேண்டும் என்று ஆசைதான். நான் அழைத்துக் கொண்டு வந்தாலும் அவள் மேல் கோபம் கொள்வான். அவனாகவும் புறப்படவில்லை. கடைசியில், யாரும் போகாவிட்டால் நன்றாக இருக்காதே என்று நான் வந்தேன்.”
“அம்மாவும் எதிர்பார்த்தார். சந்திரனுடைய மனைவி வருவாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.”
“அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதற்கு வெட்கப்படுகிறான். அவள் ஒரு பட்டிக்காட்டு மிருகமாம். அப்படிச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.”
“இவன்தான் பட்டிக்காட்டு மிருகம்” என்றேன். என் உள்ளத்தில் தோன்றியதை அப்போது சொல்லாமலே இருந்திருக்கலாம். வெறுப்பு மேலீட்டால் சொல்லி விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை உற்றுப் பார்த்தார்கள்.
“எப்படியோ போகட்டும். நீயும் உன் மனைவியும் இன்று போலவே என்றும் பளிச்சென்றிருங்கள். நல்ல வழியில் நடந்து நல்ல பெயர் எடுக்கணும்” என்று எங்களை வாழ்த்தினார் சாமண்ணா.
நான் தனியே இருந்தபோது மாலன் வந்து, “கேட்டு வந்தவள் தான்” என்று குறும்பாகச் சிரித்தான்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்” என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினேன்.
“கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் நல்ல அழகும் அறிவின் களையும் இருக்கின்றன. எல்லா வகையிலும் உனக்கு ஏற்ற மனைவிதான்” என்றான்.
“உன்னுடைய மனைவியை விடவா?” என்றேன்.
“அவள் ஒருவகை, உன் மனைவி ஒரு வகை. அவளை ஏன் ஒப்பிடுகிறாய்” என்றான்.
ஒப்பிட்ட காரணம் என் உள்ளத்துக்கு தெரியும் அவனுக்குத் தெரியாது என்று எண்ணினேன். ஆனால், அவனுடைய சிரிப்பில் குறும்பு மிகுதியாக இருக்கவே, ஐயுற்றேன். “ஏன் அப்படிச் சிரிக்கிறாய்?” என்றேன்.
“நீ கற்பகத்தை மணந்துகொள்ள எண்ணியிருந்தாயா?” என்று கேட்டு முன்னிலும் மிகுதியாகச் சிரித்தான்.
“இளமையில் திருமணத்திற்கு, முன்பு பார்க்கிற பெண்ணை எல்லாம் மணந்து கொள்ளலாமா? என்று மனம் தேர்ந்தெடுப்பது இயற்கைதானே?”
“அப்படியானால் கற்பகத்தை நீ விரும்பவில்லையா?”
“விரும்பினேன். ஆனால், உனக்காக விட்டுக் கொடுத்தேன்” என்று அவனை இரண்டு கைகளாலும் பற்றிக் குலுக்கினேன். “உனக்கு யார் சொன்னது?” என்றேன்.
“வேறு யார் சொல்ல முடியும்? அவள்தான். உன்னுடைய கடிதம் பார்த்த பிறகுதான் என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாளாம். அதுவரையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தாளாம்.”
“எந்தக் கடிதம்?”
“என்னைப் பற்றி நற்சான்று ஒன்று எழுதி அனுப்பினாயாமே. அந்த நற்சான்றின் பேரில்தான் எனக்குப் பெண் கொடுத்தார்களாம்.”
“இவ்வளவுமா நினைவில் வைத்துக் கொண்டிருந்து சொன்னாள்.”
“இந்தச் செய்திகளை வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாதே. நீதான் வேண்டுமென்றே என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்தாய். நான் விடுவேனா? உன் திருமண நாளன்றே இதைச் சொல்லி உன்னைத் திகைக்க வைத்தேன்” என்று என் கைகளை இறுகப் பற்றி அழுத்தினான்.
கற்பகத்தின் பெருந்தன்மையும் பேரன்பையும் நினைந்து என் உள்ளம் உருகியது.
மறுபடியும் அவனே, “நீ பெற்ற பரிசு – உன் மனைவி – எந்த வகையிலும் குறைவான பரிசு அல்ல. வாழ்க பல்லாண்டு” என்று சொல்லி மகிழ்ந்தான்.
திருமணத்திற்கு மூன்றாம் நாள் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தன. அதுவரையில் மாலனை வீட்டிலே தங்கியிருந்து மகிழுமாறு வேண்டிக்கொண்டேன்.
“தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நான் இங்கே இருக்கக்கூடாது. அதனால்தான் போகவேண்டும் என்கிறேன்” என்றான்.
“ஏன்?”
“நீ நன்றாக எழுதியிருக்கிறாய். நல்ல வெற்றிச் செய்தி வரும். எனக்கு அப்படி இருக்காது. நான் இங்கே இருந்தால் எனக்காக நீ வருந்துவாய் அல்லவா? உன் மகிழ்ச்சி, வருத்தம் கலக்காத மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தான் போகிறேன்” என்று விடைபெற்றான்.
அவன் எதிர்பார்த்ததுபோலவே முடிவுகள் வந்தன. அவன் முதல் இரு பகுதியிலும் தேறி மூன்றாம் பகுதியில் தவறிவிட்டான். நான் முதல் பகுதியில் மூன்றாம் வகுப்பாகவும் இரண்டாம் பகுதியில் இரண்டாம் வகுப்பாகவும் மூன்றாம் பகுதியாகிய கணக்கில் முதல் வகுப்பாகவும் தேறி இருந்தேன். அப்பா உள்ளத்துள் ஏற்பட்ட மகிழ்ச்சியை எல்லாம் அடக்கிக் கொண்டு, வேண்டுமென்றே, “முதல் பகுதியிலும் ஏன் முதல் வகுப்பில் தேறவில்லை?” என்று கேட்டார், ஆங்கிலம் தாய்மொழி அல்ல என்றும் தாய் மொழியில் தருவதில்லை என்றும் சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.
– தொடரும்…
– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.
நன்றி: https://www.projectmadurai.org/
![]() |
மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உதவிக்கரம்
என்.ஸ்ரீதரன்
August 1, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
August 1, 2026
