கொட்டில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 4,107 
 

அப்புவின் கண்கள் அந்தக் கொட்டில் இருந்த இடத்தில் நிலைத்திருந்தன. முன்பு அது இருந்த இடத்தில் மண்மேடு. சுடலைப் பிட்டி போல……

அப்பு என அழைக்கப்படும் அப்புத்துரை அறுபத்தைந்து வயதைதக் கடந்தவர். தமக்குச் சீதனமாக வந்த வீட்டின் முன்னால் தமது இருபத்தைந்தாவது வயதில் அந்தக் கொட்டிலைச் சிற்றாள் ஒருவரின் உதவியுடன் தமது கையாலேயே போட்டவர் அவர்.

இயல்பாகவே வலுவான உடல்…. தோட்டத்தைக் கொத்திக் கொத்தி வைரம் பாய்ந்த கைகள் . எதையும் சாதிக்கத்துடிக்கும் இளமை வேகம்.

அப்பு தாமே தனித்து மரங்களைத் தூக்கிக் கூரைபோட்ட போது அவரது இளம் மனைவி கமலம் கிலியுடன் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் அவர் மனக் கண்ணில் நிழல் ஆடுகிறது.

செவ்வக வடிவில் அமைந்த ஒற்றை கூரைக் கொட்டில் அது. அதனைச் சுற்றி மண்ணால் அரைச்சுவர் எழுப்பி வாசலின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான திண்ணை போட்டிருந்தார் . திண்ணையின் முகப்பில் சங்குகள் இரண்டைப் பதித்து அழகு செய்தார்.

தலைசிறந்த தச்சன் ,மேசன்களுக்கேஉரிய தொழில் திறனும் ஒரு கலைஞனுக்கே உரிய செய் நேர்த்தியும் அழகும் அக்கொட்டிலில் மிளிர்ந்தன. வஞ்சகமில்லாத கூலியாளின் வியர்வை சிந்தும் உழைப்பு அக்கொட்டிலின் ஒவ்வோர் அணுவிலும் தெறித்தது..

மொத்தத்தில் அப்புவின் அழகுக் கனவின் உயர்ந்த வடிவமாகவே கொட்டில் காட்சி தந்தது.

அந்தக் கொட்டிலிலே அப்புவின் பெரும் பொழுது கழிந்தது. அதிகாலையில் எழுந்து தோட்ட வேலைகளை முடித்து வந்தவுடன்கொட்டிலில் அமர்ந்துகொள்வார். கமலம் அங்கேயே காலைச் சாப்பாட்டைக் கொண்டுவந்துவிடுவாள்.பத்து மணியளவில் சுருட்டுச் சுற்றும் இரண்டு பிள்ளைகள் வருவார்கள். அவர்களோடு இணைந்து தாமும் சுருட்டுச் சுற்றுவார். இந்த வேலை பிற்பகல் இரண்டு மணிவரை தொடரும். அதற்குப் பின் மதியச் சாப்பாடும் கமலத்தால் அவ்விடத்துக்கே கொண்டுவரப்படும் .

அப்புவுக்குச் சைவ போசனம் கமலத்துக்கு மச்சமில்லாவிட்டல் சாப்படு இறங்காது. அதனால் இரண்டு சமையல் செய்யும் அவஸ்தை அவளுக்கு. கணவன் முகம் சுழிக்காமலும் ஆசாரம் தவறாமலும் சாப்பிடக் கொட்டில் வசதியாகப் போயிற்று.

நான்கு மணியளவில் அப்புவின் நண்பர்கள் வருவார்கள் .தேநீர்க் கடை விரிக்கப்படும். வம்பர்மாசபை ஆரம்பமாகும். உலகத்து வம்புகள் கொட்டிலின் மூலை முடுக்குகள் எங்கும் எதிரொலிக்கும். அப்புவும் அவர் நண்பர்களும் விடுகின்ற சுருட்டின் புகை கொட்டிலைச் சூழ்ந்து மூட்டம் போடும்.

வெளியில் சென்றுவரும் அப்புவுடன் இரவு வேளைகளில் நிலா வெளிச்சத்தில் கொட்டிலில் இருந்து கதைப்பது கமலத்துக்கு இன்பமாகவே இருந்தது. இரவுச் சாப்பாட்டில் மச்சம் சேர்க்கும் வழக்கம் கமலத்துக்கு இல்லை. கொட்டிலிலேயே இருவரதும் உணவு முடிந்து விடும் . நேரம் பத்தைத் தொடும்போதே கொட்டிலைவிட்டு இருவரும் நகர்வார்கள்.

விடிந்ததும் அப்புவின் முதல் தரிசனம் அந்தக்கொட்டில்தான்.

“எப்போதோ பிரிஞ்சு போன பிள்ளையைக் கனகாலத்துக்குப் பிறகு கண்டதுபோல் வாஞ்சையோட பார்க்கிறியள்…”என்ற மனைவியின் கேலி அவரை அர்த்தபுஸ்டியுடன் புன்னகைக்க வைக்கும்.

அப்புவின் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். கமலத்துக்கு இயலவில்லை வாதப்பிடிப்பு.. முதுமையின் சாயல்கள் அவள்மீது படியத்தொடங்கிவிட்டன.குனிந்து வளைந்து வேலைசெய்ய முடிவதில்லை. இப்போது கொட்டிலைப் பராமரிக்கும் பொறுப்பு மூத்தமகள் ரமணியை வந்தடைந்தது.

வெள்ளிக்கிழமைதோறும் கொட்டிலைச் சானகத்தால் மெழுகுவதென்பது முதுகை ஒடிக்கும் வேலைதான். ஆனால் பஞ்சி அலுப்பென்று மெழுகாமல் விடமுடியாது. அப்பு ரௌத்திர தாண்டவம் ஆடுவார். தானே சானகத்தை எடுத்துக் கொண்டு மெழுகப் புறப்பட்டுவிடுவார்.

காலம் உருண்டோடியது. அப்புவின் ஐந்து குழந்தைகள் நடைபயில உதவிய கொட்டிலின் மண்சுவர் இன்று அயலவர்களின் குழந்தைகள் நடை பயில உதவுகிறது.

குழந்தைகளின் ஆட்டபாட்டமும் மழலையும் கொட்டிலை நிறைக்கும் வேளைகளில் இனம்புரியாத இன்பத்தில் திழைப்பார் அப்பு.

ரமணி பொறுமைசாலி …ஒ லெவலுக்குப் பின் ஆரவம் இல்லாததால் படிப்பை நிறுத்திவிட்டாள். அப்புவிம் மூத்த பிள்ளைதான் அந்தக் கொட்டில் என்பது அவளுக்குத் தெரியும்.

“அப்பு உங்கட மூத்தபிள்ளையிண்ட கால் முறிஞ்சிருக்கு….சரி பாருங்கோ..”என்றவகையில் அவளே முறிவு ..ஒடிவுகளைச் சுட்டிக்காட்டி நகைப்பதுண்டு.

ஆனால் ரமணியின் திருமணத்துக்குப் பின் யார் மெழுகுவதென்பதில் பிரச்சினை தொடங்கையது.

கடைக்குட்டி சாந்தி… நவநாகரிக—மேட்டிமைக்காரி .எதிர்காலத்தில் தனக்குச் சீதனமாகப் போகும் வீட்டின் பிரமாண்டமும் அழகும் அவளுக்கு பெருமிதத்தை அளித்தன. அந்த வீட்டுக்குக் கண்ணூறு போல …வீட்டு முற்றத்தில் அந்தக் கொட்டில்…அதில் அவளுக்கு அருவருப்பும் வெறுப்பும்….பனையோலையால் வேயப்பட்ட கோட்டிலைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள்முகம் பலகோணங்களாவது வழக்கமாயிருந்தது.

இதனால் சாந்தி கொட்டிலைப் மெழுகத் தீர்மானமாக மறுத்துவிட்டாள். ஒருநாள் “உங்ளுக்குக் கொட்டில் வேணுமிண்டா இதைப் பிடுங்கிக்கொண்டு போய் அடிவளவுக்க போடுங்கோ….” என்று முகத்தில் அடித்ததுபோலக் கூறினாள்.

ஓம் பிள்ளை , இண்டைக்குக் கொட்டில் பழசெண்டு மூலையில் போடச் சொல்லுவியள். நாளைக்கு நானும் கொம்மாவும் பழசுகள் எண்டு எங்களையும் மூலைக்குள் தள்ளிப் போடுவியள். என்று விரத்தியுடன் பதில் சொன்ன அப்பு அன்றுமுதல் தாமே கொட்டில் தரையை மெழுகத் தொடங்கிவிட்டார்.அந்த வேளகளில் அவருக்கு ஒரு குழந்தையைப் பரிசிப்பது போன்ற இன்பம் கிட்டியது.

அப்புவின் பிடிவாதத்துக்கு ஒருபடி மேலேயே சாந்தியின் பிடிவாதம் இருந்தது. அப்புவின் இச்செயல் அவளது மனதை இளகவைப்பதற்குப் பதில் வைரிக்கவே செய்தது. கொட்டில் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

அவள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அவளது தோழிகள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார்கள். அவர்களது பார்வை நவநாகரிகத்துக்கு ஒவ்வாத கொட்டிலின் மீது ஏளனத்துடன் சென்று படிவது வழக்கம்…அப்பார்வையின் இலக்குப் பலவேளைகளில் சாய்மனைக் கதிரையில் வெற்றிலை போட்டுக் குதப்பிக் கொண்டிருக்கும் அந்தக் காலத்து அப்புவை நோக்கியும் திரும்புவதுண்டு.

அவ்வேளைகளில் சாந்தி வேதனையுடன் பெருமூச்சு விடுவாள்…..

கொட்டிலைப் பிடுங்குமாறு அப்புவை நச்சரிப்பதும் ஆனால்…..

சுருட்டுச் சற்ற வேறு கொட்டில் போட வேணுமே , அது சில ஆயிரங்களை விழுங்கிவிடுமே என்று கூறி அப்பு மறுப்பதும் நாள் தவறாத நிகழ்வுகளாயின. ஆனால் பொம்மரும் செல்களும் வீடுகளை நொருக்கத் தொடங்கிய பின்பு கொட்டில் பற்றித் தனது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தச் சாந்தியால் முடியவில்லை.

காலத்தின் கோலம் வலிகாம மக்கள் இடம்பெயர்ந்து தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் தஞ்சம்புக நேர்ந்தபோது அவ்வாறு வந்தவர்கள் பலருக்கு அப்புவின் வீடு அடைக்கலம் அளிக்கத் தவறவில்லை.

சாந்தியின் பல்கலைக்கழகத் தோழி சுமதி தன் பெற்றோர் உடன் பிறப்புக்களோடு சாந்தியின் வீட்டைத் தேடிவந்தபோது, வீடு நிரம்பியிருந்தது. அப்புவின் கொட்டிலையே அவளுக்கு வழங்க வேண்டியதாயிற்று.

அப்பு தமது பெரிய வீட்டிலே யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த அறுபதுபேர்களில் ஒருவரானார்.சாமி அறைமட்டுமே அவர் குடும்பத்துக்கென்றாயிற்று.

காற்றோட்டமான கொட்டில் இல்லாமல் சனப்புழுக்கத்திலும் காற்று அதிகம் புகாத அறையின் வெக்கையிலும் அப்பு வெந்துபோனது உண்மைதான். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாகத் தம் உயிரோடு கலந்த கொட்டில், ஓர் உயிர்ப் பொருளாகவே எண்ணிப் பழகிய கொட்டில் ஒரு குடும்பத்துக்கு வாழ்விடமானதில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

ஆனால் அக்கொட்டில் குமர்ப் பிள்ளைகளோடு கூடிய சுமதி குடும்பத்துக்கு வசதியானதா என்பதில் அவருக்குச் சந்தேகம். கல் வீட்டில் தனியறைகளில் வாழ்ந்து பழகிய சுமதிக்கும் அவள் சகோதரிகளுக்கும் சாக்குகளாலும் ஓலைத்தட்டிகளாலும் மறைக்கப்பட்ட தனியறை அமைப்பில்லாத அக் கொட்டில் வசதிக் குறைவாவே இருக்கும் என்பது அவர் கணிப்பு.

சுமதியின் குடும்பம் கொட்டிலில் சில அசௌகரியங்கள் இருந்தாலும் காற்றுத்தேவதையின் பூரண கிருபையால் மகிழ்ச்சியாகவே இருந்தது.

“ஏன் பிள்ளை சுமதி! உங்களுக்கு உந்தக் கொட்டில் வசதிக் குறைவாகவே இருக்கும் . வேற வசதிசெய்து தரவும் முடியேல்ல” அப்பு வின் ஆதங்கம்.

“இல்லை அப்பு இந்தக் கொட்டில் பெரிய மாளிகை மாதிரிக் கிடக்கு. உங்கட உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்கமாட்டம்.”

இவை சுமதியின் மன ஆழத்தில் இருந்து வந்த உண்மையான வார்த்தைகள்.

அவை அவர் வருத்தத்தை ஆற்றி ஒரு வகை திருதியைத் தந்தன.

இடம் பெயர்ந்தவர்கள் ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். அப்புவின் கொட்டில் உட்பட வீடே வெறிச்சோடிவிட்டது. ஆனால் வெகு விரைவிலேயே அந்த வெறுமையிலிருந்து அப்பு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பழையபடி அவர் வாழ்க்கை கொட்டிலில் பூத்துக் குலுங்கியது.

புதிய மரங்கள் போட்டு கூரை வேய்ந்து கொட்டிலை மேலும் செம்மைப்படுத்தினார். தமது கொட்டில் பிள்ளையின் குமரிப்பருவப் பொலிவைக் கண்டுகளிக்கும் பூரிப்பு அவருக்கு.

ஆனால் சாந்தியின் நச்சரிப்பும் தாக்குதல்களும் மீண்டும் புதிய கோணத்தில் தொடங்கிய பொழுது…..

சாந்திக்கு மாப்பிள்ளை பார்க்கச் சாதகக் கட்டை எடுத்தபோதுதான் ,சாந்தியின் காதல் விவகாரம் அப்புவுக்குத் தெரியவந்தது. அப்பு அவள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவளோடு படித்த குமரனுக்கு அவளை கட்டிக்கொடுப்பதாகத் தீர்மானமாயிற்று….அப்பு தாமிருந்த வீட்டைச் சீதனமாகக் கொடுத்தபோதும் …மாப்பிள்ளை வீட்டார் காசாகப் பத்துலட்டசமும் டொனேசனாக ஐந்து லட்டசமும் கேட்ட போது அப்பு திணறித்தான் போய்விட்டார். வெளிநாட்டில் உள்ள அவரது ஆண்பிள்ளைகள் மூவரும் கை கொடுத்ததால் விசயம் ஒரு மாதிரி ஒப்பேறியது. …

அன்று குமரன் சாந்தியைப் பார்க்கவந்தான்…அவனது பார்வை கொட்டிலில் அருவருப்பாய்ப் படிந்தது. கொட்டிலில் வெற்றிலை பாக்கைக் குதப்பிக்கொண்டிருந்த அப்புவின் முகத்திலும் அந்த அருவருப்பின் எச்சில் படாமலில்லை.

குமரன் நல்ல டீசன்ரான ஃபமிலியில வந்தவர். அவற்றை அப்பா என்சினியர்…அம்மா ரீச்சர்…அவயின்ற வீடு கச்சேரி நல்லூர் றோட்டில் இருக்கு…வாடகை வீடுதான் .ஆனாலும் நல்ல பாஃசனான வீடு” என்று அன்றே பூர்வாங்கத் திட்டத்தோடு சாந்தி அப்புவினருகில் வந்தாள்.

“அதுக்கென்ன?” அப்புவின் கேள்விக்கு நாகபாம்பாய் சீறினாள் சாந்தி.

“இந்த வீட்டுக்கு முன்னாலை அசிங்கமான இந்தக் கொட்டில் வேண்டாமாம் . கலியாணத்துக்கு முன்னால பிடுங்கிப்போடுங்கோ.”

“பிடுங்காட்டில்”

“கலியாணம் நடக்காது…கருமாதிதான் நடக்கும்.”

சாந்தியின் நெஞ்சில் ஒடுங்கியிருந்த அக்கினிக் குஞ்சு வார்த்தகளாய்ப் பரந்து அப்புவைச் சுட்டது.

அப்பு மௌனித்தார்….அந்த மௌனம் அவரின் தோல்விக்கும் ,சரணாகதிக்கும் அறிகுறி…

வேட்டியை இழுத்து மடித்துக் கட்டிக் கொண்டு வாயிலிருந்த சுருட்டை ஒரு ஓரமாக வீசி எறிந்தார்.தோளில் இருந்த துண்டை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டார்.சிற்றாளின் உதவியோடு போட்ட கொட்டிலை தனியாகப் பிரித்துப் போடத் தொடங்கினார்.

அவரிடம் இதுவரைகாணாத ஒரு வேகமும் விரத்தியும் சேர்ந்தே கிடந்தது. சுட்டெரிக்கும் வெய்யிலை கூட அவரால் உணரமுடியவில்லை. கொட்டிலின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்துப் போடுகையில் அவரது ஒவ்வொரு உறுப்புபையும் பிடுங்கி எடுப்பதுபோன்ற வேதனையில் துடித்தார்.

உழுதுவிட்ட நிலம்போலக் கிடந்த அப்புவின் முகத்தில் ஆழமான கண்களிலிருந்து அடிக்கடி நீர் ததும்புவதும் பின் அந்தக் கரடு முரடான முகத்தைவிட்டு கீழே விழுவதற்குமுன் அங்கேயே வற்றுவதுமாக …முழுத் துன்பத்தையும் தன்னுள்ளே விழுங்கிமுடித்தார் -அப்பு

வளைகள் , தூண்கள் சலாகைகள் ஒவ்வொன்றுமாய்த் தமது நெஞ்சில் விழுந்து பெருங்காயத்தை உண்டாக்குவதாய் உணர்ந்தார்.

ஆனால்…

சாந்தியின் முகத்தில் வெற்றிக் களிப்பு…என்றுமில்லாத பிரகாசம்.

அவள் நான்கைந்து சாடிகளில் பூச்செடிகளைக் கொண்டுவந்து கொட்டில் இருந்த இடத்தில் ஒழுங்காக வைத்தாள்.

அப் பூச் செடிகளின் நடுநாயகமாக கள்ளிச்செடி ஒன்று ஒரு பூச்சாடியில் கம்பீரமாய் வீற்றிருந்தது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *