உடன் பிறந்தவளானவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 5,165 
 

கண் முன்னால் தன் தகப்பனை கற்பனையில் கொண்டு வந்து கண்டபடி பேச ஆரம்பித்தான் தனபால், இன்னதுதான் என்றில்லை, வாயில் வர்க்கூடாத வார்த்தை எல்லாம் பேசினான். கூட இருந்த மகேஸ்வரி “யோவ் போதும்யா” பாவம்யா அவங்க என்னா பண்ணுவாங்க, நீ நாதாறியா போனதுக்கு அவங்களை குத்தம் சொல்லிட்டு இருக்கற” இல்லே மகேஷ், எங்கப்பன் அப்பவே என்னை நாலு சாத்து சாத்தி வீட்டுல இருடான்னு சொல்லியிருந்தா நான் இப்படி ஆயிருக்க மாட்டேன்னுல்ல.

மகேஸ்வரி அப்புறம் எப்படி ஆயிருப்பியாமா? யோவ் இப்ப நீ பெரிய டைரக்டர்,நான் வெளியில வந்தா உன் பக்கம் கூட வர முடியாது. இதுவெல்லாம் நீ சம்பாரிச்சது தானயா, உங்கப்பன் உன்னை தண்ணி தெளிச்சு விட்டதுனால தான் நீ இந்தளவுக்கு வைராக்கியமா வளர்ந்திருக்க ! சொன்னவளை கொஞ்ச நேரம் வெறித்து பார்த்த தனபால் பெரிய டைரக்டர் இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல, என்னோட சந்தோசம் எல்லாமே போச்சே..மறுபடியும் ஒரு பிலாக்கணத்தை ஆரம்பிக்கவும் மகேஸ்வரி அங்கிருந்த பாட்டில்களை அனைத்தையும் கொண்டு போய் ஒரு கூடையில் கொட்டினாள். இனி மூன்று மணி நேரமாவது தூங்குவான், அதன் பின் எழுந்தானென்றால் குளியறைக்குள் போய் ஒரு குளியல், அதன் பின் ரெடியாகி வெளியே வந்தானென்றால் அப்படி உளறியவன் இவனா என்று ஆச்சர்யப்படுவார்கள்.

இன்றைய திரை உலகில் இவனும் ஒரு பேர் சொல்லும் டைரக்டர். அவன் வெளியிட்ட மூன்று படங்களும் அவனுக்கு மிகப்பெரிய பேரை பெற்றுக்கொடுத்து விட்டன.ஆனாலும் இந்த இடத்தை அடைய அவன் பட்ட துயரங்கள் அவனை ஒவ்வொரு வார இறுதி நாளன்றும் மகேஸ்வரியை தேடி ஓடி வர செய்கினறன. வந்தவன் அவன் சார்ந்த உலகில் உள்ளவர்களை நல்ல போதை ஏற்றிக்கொண்டு திட்டி தீர்ப்பான், அதன் பின் அவன் அப்பா அம்மாவை ஒரு பாட்டாம் திட்டி தீர்ப்பான். பின் அப்படியே படுத்து உறங்கிவிட்டு மாலை கிளம்பினான்,என்றால் அந்த வாரம் முழுவதும் அடுத்த படத்துக்கான டிஸ்கஸ்சன்,லோகேசன், என்று மிகவும் பரபரப்பாகிவிடுவான். மகேஸ்வரிக்கு மாதமானால் தேவையான தொகை அவள் கைக்குபோய் விடும்.

மகேஸ்வரிக்கு மிகவும் சங்கடமாய் இருந்தாலும், வேறு வழியில்லை. அவள் வாழ்க்கை இவனை விட கொடுமையானது. ஒரு கால கட்டத்தில் இருவருமே அவரவர் ஊர்களிலிருந்து சினிமா உலகத்துக்குள் பிரவேசிக்க பல வித கனவுகளுடன் வந்தவர்கள்தான். அந்த சென்னை மாநகரத்துக்குள் ஐந்து வருடங்கள் படாத பாடு எல்லாம் பட்டு, இவனால்

எழ முடிந்து விட்டது, ஆனால் மகேஸ்வரியால் இந்த ஐந்து வருட போராட்ட வாழ்க்கை,அதன் காரணமாக அவள் உடல் நிலை சுத்தமாக படுத்து விட்டது. அந்த ஐந்து வருடங்களில் அவளால் நான்கைந்து படங்களில் கூட்டத்தில் நடனாமாடும் ஒருத்தியாகத்தான் வர முடிந்தது அதற்குள் அவளுக்கு சினிமா உலகம் என்பது எப்படிப்பட்டது என்பது அக்கு வேறு ஆணி வேறாக புரிந்து விட்டது.

ஆனாலும் அவள் செய்த புண்ணியம், சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலத்தில் அவளது அறைக்கு பக்கத்தில் சினிமா வாய்ப்பு தேடி வந்த நான்கைந்து பேர்களில் ஒருவனாக தனபால் வந்தது, இப்பொழுது அவளுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டிருக்கிறது.அந்த அறையில் நான்கைந்து பேர்கள் சினிமா உலகை கைப்பற்ற கனவு கண்டு கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் காலை எழுந்து கிளம்பினார்கள் என்றால் அறைக்கு வந்து சேரும்போது பட்டினியால் குலையுயிரும், குற்றுயிருமாய் வந்து சேர்வார்கள். அப்பொழுது மகேஸ்வரிதான் சினிமா வாய்ப்பு தருவதாக சென்ற இடத்தில் மற்ற வேலைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் தரும் பணத்தில் இவர்களுக்கும் சேர்த்து வடித்து வைப்பாள்.

தனபாலுடன் இருந்தவர்கள் ஒரு கட்டத்தில், வறுமை தாங்காமல், அல்லது சினிமா வாய்ப்பு இனி கிடைக்காது என்று தெரிந்து ஒவ்வொருவராக ஊர் போய் சேர்ந்து விட்டனர். இவன் மட்டும் கடைசி வரை போராடி எப்படியோ ஒரு இயக்குநரிடம் உதவியாளனாக சேர்ந்து அவரிடம் நான்கு வருடங்கள் பாடுபட்டு,ஒரு தயாரிப்பாளரை பிடித்து வாய்ப்பு பெற்று இயக்குநர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டான்.அவன் வெற்றி மேல் வெற்றி பெற்றாலும்

இந்த உலகம் அவனை ஒரு காலத்தில் மண்ணில் போட்டு மிதித்த்தை மறக்கமுடியாமல் மகேஸ்வரியிடம் வந்து தஞ்சம் புகுவான். மகேஸ்வரிதான் நீ இப்பொழுது பெரிய இயக்குநர் இப்படி என் வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது என்று சொன்னவுடன் அவள் மேல் கோபம் கொண்டு கண்டபடி பேசிவிட்டு போய் விட்டான். அதன் பின் அவனே ஒரு வாரம் கழித்து அவளை நல்ல ஒரு வீட்டை பிடித்து அங்கு குடி போக வைத்தான்.

வாரம் ஒரு முறை அவளை தேடி வந்து விடுவான். வேறு எந்த தவறான எண்ணங்களும் இல்லாமல் அவளை ஒரு கடவுளாக கருதி அவள் முன் அந்த வாரம் நடந்த, அவன் மனதை பாதித்த விசயங்கள் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டு கிளம்பி விடுவான். இது நான்கு வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் வாடிக்கை. இதற்கிடையில் அவனுக்கு பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்து விட்டனர், அவனது உறவினர்கள்.

அவளை கூப்பிடவும் இல்லை, அவளும் நாகரிகம் கருதி அதனை பற்றி அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.அவன் மனைவிக்கும் இந்த விசயங்கள் தெரியும் என்று அரசல் புரசலாக அவளிடம் சொல்லியிருந்தான். இவளே ஒரு முறை இனிமேல் இப்படி எல்லாம் வரக்கூடாது என்று சொல்லும்போதுதான் இதனையும் சொன்னான்.மகேஸ்வரியை பொறுத்தவரை அவள் ஒரு யோக மனப்பான்மையில்தான் இருந்தாள். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதோ சிறு சிறு வேலைகள் செய்து பிழைத்துக்கொள்ளலாம், அவனை இனிமேல் தொல்லை கொடுக்க கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைப்பாள். அதனை அவனிடம் சொல்லவும் செய்வாள், அவன் அதெல்லாம் எனக்கு தெரியும் மகேஸ் நீ பேசாமல் இரு என்று அவள் வாயை அடைத்து விடுவான்.

ஒரு நாள் அவள் தலை மீது இடி விழுந்தது போல் அந்த செய்தி வந்தது. ‘தனபால் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது,திடீரென்று மயங்கி விழுந்தவனை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்ப்பதற்குள் இறந்து விட்டான்”.

இவள் செய்தி கேட்டு அதிர்ந்து போனாள். பின் மனதை தேற்றிக்கொண்டு அவன் வசித்துக்கொண்டிருக்கும் இடத்தை அடைந்த பொழுது திரை உலகம் மட்டுமில்லாமல் நண்பர்கள் கூட்டமும் குழுமி இருந்தது. இவள் அங்கு சென்றால் வேறு ஏதாவது பேச்சு வரலாம் என்று நினைத்தவள் அந்த வீட்டு ஓரமாய் நின்று அவன் உடல் ஊர்வலமாய் எடுத்து செல்வதை வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.அதன் பின் தன் உயிரே பிரிந்தது போல தளர் நடை நடந்து தன் இடத்துக்கு திரும்பினாள்.

தனபால் இறந்து ஒரு வாரம் ஒடியிருக்கும்.”அவன் போன பின்னால் இனி இந்த வாழ்வு நமக்கெதற்கு” என்று நினைத்து, இங்கிருந்து செல்ல அவளது உடைமைகள் என்று இருந்ததை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவள், கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள்.எதிரில் தனபாலின் மனைவி தன் மூன்று வயது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.இவளுக்கு ஒரு நிமிடம் திகைப்பாக இருந்தாலும் சமாளித்து கொண்டு வாம்மா, என்று அழைத்தாள். எதுவும் பேசாமல் உள்ளே வந்த அந்த பெண் ‘எங்கே பயணம் கிளம்பிட்டமாதிரி இருக்கு? குரலில் ஏளனமா? இல்லை அக்கறையா? புரியாமல் சில நிமிடங்கள் யோசித்த மகேஸ்வரி நான் வேற எங்கியாவது போயிடலாமுன்னு இருக்கேன் குரலில் வருத்தத்தை காட்டக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தாலும் அந்த நடுக்கம் காண்பித்து கொடுத்து விடுகிறது.

எங்கியாவதுன்னா? மீண்டும் அந்த கேள்வி அவளை அவஸ்தக்குள்ளாக்கியது. விடாப்பிடியாக இந்த ஊரே வேண்டாம், கண் காணாத இடத்துல போயி ஏதாவது வேலை செஞ்சு பிழைச்சுக்கலாமுன்னு இருக்கேன், பதிலை மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னாள்.அதுதான் எங்கேன்னு கேட்டேன்? பதில் சொல்ல இயலாமல் வந்தவள் முகத்தை பார்த்தாள்.

ஒரு காகித்த்தை எடுத்து நீட்டினாள், இதை படிச்சு பாருங்க, அவள் கைகள் நடுங்க வாங்கி படித்து பார்த்தாள். இவள் குடியிருக்கும் வீடு அவள் பெயருக்கே எழுதியிருந்தது.இவள் பட்டென அந்த கடித கற்றையை அந்த பெண்ணின் கையிலேயே திணித்து வேண்டாம்மா இருக்கற வரைக்கும் காப்பாத்துனாம்மா, அது போதும், என்னை பொருத்தவரைக்கும் அவன் என் கூட பொறக்காதவன், சொல்லி ஆற்றாமையால் அழுக ஆரம்பித்தாள்

இதுதான் அவரும் சொன்னாரு. நான் அங்க போயி என் மனசுக்குள்ள இருக்கற கோபம், ஆத்தாமை, இதெல்லாம் அவகிட்ட போய் கொட்டிட்டு வந்துட்டா என் டென்சன் எல்லாம் போயிடுதும்மா, அதுக்கப்புறம் என் மனைவி,, என் குழந்தை அப்படீங்கற உலகத்துக்குள்ள வந்துட்டா பாதுகாப்பாயிடுது. எனக்குன்னு ஏதாவது ஆயிடுச்சுன்னா அந்த பொண்ணுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு. இந்த பத்திரத்தை கூட என்னைய கூட்டிட்டு போய் என் முன்னாடிதான் எழுத சொன்னாரு. தயவு செஞ்சு இதை வாங்கி வச்சுகிங்க. சொன்னவளிடம் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டவள், அப்படீன்னா நான் ஒண்ணு சொல்வேன் தப்பா நினைச்சுக்க கூடாது. என்னடா இவளெல்லாம் இப்படி கேக்கறாளே அப்படீன்னு நினைச்சுக்ககூடாது. சொன்னவளை கூர்ந்து பார்த்தாள் தனபாலனின் மனைவி.

உன் புருசன் எந்த வருத்தம் கோபம் இருந்தாலும் எங்கிட்ட வந்து கொட்டுவான். நான் கேக்கறது உனக்கு ஏதாச்சும் வருத்தம் கோபம் எதுன்னாளும் என்னைத்தேடி வருவியா? உன் உடன் பிறந்தவ ஒருத்தி இங்கிருக்கா, அப்படீங்கற நினைப்புல!.

எனக்கு உங்களை விட்டா யாரு இருக்கா? சொன்னவளை இழுத்து அணைத்துக்கொண்டாள் மகேஸ்வரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *