வேல்மாறல்
கதையாசிரியர்: அம்பாள் ஆர்.முத்துமணி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 276
(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டீக்கடை கோபால் கொடூரமானவன். கொஞ்சமும் மனதில் இரக்கமில்லாமல் கிளாசில் இருந்த கொதிக்கும் வெந்நீரை அவள்மேல் ஊற்றினான். அவள் அலறினாலேயொழிய ஏதும் பேச நாதியற்றவளாய் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
“ஏம்பா அவா என்ன கேட்டா? ஒரு டீ கொடுங்கண்ணேனு தான கேட்டா. காசில்லேனா முடியாதுனு சொல்லிட்டுப்போ. அதுக்கு ஏன் இப்படி செய்யிற” பீடியை இழுத்தபடி அந்தப் பெரியவர் மனம் நோந்தார்.” அவளே புத்திசுவாதீனமில்லாத புள்ள. தெருக்காட்டில சுத்திட்டு அலையிது. வஞ்சன இல்லாம யாராவது கொடுக்கிறத வாங்கி சாப்பிட்டுக்கிட்டு கிடக்கா,”
“அது சரி.. இப்படி ஓசி கொடுத்துக்கிட்டிருந்தா கடைய இழுத்து மூட வேண்டியதுதான்.”
இப்படி கோபால் பேசுவதாலேயே கறார் கோபாலுனு அவனுக்கு ஒரு பெயரே உண்டு.
வள்ளி எந்த ஊரோ யார் பெத்த பிள்ளையோ அது பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாது. ஆனால் சில மாதங்களாக ஊருக்குள் சுற்றித்திரிகிறாள். யாராவது கொடுக்கும் மிச்சத்தைச் சாப்பிட்டுக் கொண்டு முருகன் கோயில்லேயே தான் கிடப்பாள். இருபத்தைந்து வயதிற்குமேல் இருக்காது. கருத்ததேகமும், வற்றிய உடலுமாய் அவலட்சணமாய் இருப்பாள். ஏதோ ஒரு பெருந்துயரம் அவள் பருவத்தின் வனப்பை பறித்திருக்கிறது. எப்போதும் நெற்றியில் நிறைய திருநீரும் குங்குமம் பூசிக்கொண்டு கழுத்தில் யாரோ குப்பையில் போட்ட பூச்சரத்தை எடுத்து மாலையாய் போட்டுக் கொள்வாள். எதற்கோ தெரியாது நீளமான ஒரு குச்சி அவள் கையில் எப்போதும் இருக்கும்.
மாலை நேரம் தெப்பக்குளத்தின் கிழக்குப் படித்துறையில் அரசமரத்தடியின்கீழ் அவளைப் பார்க்கலாம். கும்பிட்ட கையோடு, மேற்குத் திசைப்படியை அணைத்து நிற்கும் புங்கை மரத்தை நோக்கி நின்று கொண்டு, கணீர் என்று முருகன் பாமாலையைப் பாடி வேல்மாறல் பாராயணமும் செய்வாள். அதிசுத்தமாக இவற்றையெல்லாம் யாரிடம் கற்றாளோ என்று எண்ணத் தோன்றும். அவள் பக்தி பரவசமாய் உச்சதிசையில் பாடும்போது அந்தப் படித்துறையில் வீணே பொழுதைக் கழிப்பவர்கள்கூட சுதாரித்து உட்கார்ந்து கொள்வார்கள். அந்திசாயும் அந்த வேளையில் குருவிகளும் காக்கைகளும் இரைந்து கொண்டு சடசடவென அரசமரத்தின் கிளைகளுக்குள் தஞ்சம் புகும். தலையசைக்கும் இலைகளின் ஊடே சாய்ந்து வரும் மாலை வெளிச்சம் ஒளிக்கற்றைகளை வீசி விடை பெற்றுக் கொண்டிருக்கும். சில நிமிடங்களில் வானத்து வண்ணத்தை சாம்பல் தூவி இருள் கவ்விக் கொள்ளும் வேளையில் வள்ளியும் மறைந்து போவாள். அவளை இருள் மிரட்டியிருக்க வேண்டும். வாழ்வில் இருளுக்குள் நடந்த துர்சம்பவம் ஒன்று அவளுக்குள் சுழற்று கொண்டிருக்கலாம்.
“ஏன்டா இப்படி மூச்சிறைக்க வர்ற..” சைக்கிளை தடதடவென்று வேகமாக மரத்தில் சாய்த்திவிட்டு வரும் குமாரைப் பார்த்து அம்மா மரகதம் கேட்டாள். “அம்மா நா இன்னிக்கி வள்ளிய பாத்தேமா தெப்பத்து படிமேல நின்னுக்கிட்டு சத்தம் போட்டு முருகன் பாட்ட படிச்சிக்கிட்டு இருந்தா. “ரகத்திற்கு இவனுக்கு ஏன் இப்படி,” அவளே ஒரு கிறுக்கி. அப்படி என்னத்தபெருசா அவ பாடிறப்போறா.
“ஸ்கூல் விட்டா நேர வீட்டுக்கு வந்திரணும் தம்பி.. தெப்பத்து வரப்பிலல்லாம் நின்னு பாக்கக்கூடாது. அது ஆபத்து” என்று கண்டித்தாள். நீங்க வேணாலும் வள்ளி பாடுறத ஒரு தடவ கேளுங்கனு குமார் சொல்வதை மரகதம் எளிதில் உதாசீனப்படுத்த முடியவில்லை.
இன்ஸ்பெக்டர் சுப்பையா போனை எடுத்து சார் என்ன விசயம் சொல்லுங்கவென்று பேச ஆரம்பித்தார். ரத்னா டீலக்ஸ் ஹோட்டல் முதலாளி ரத்தனசாமி போனின் மறுமுனையில் “சார், இந்த பைத்தியம் வள்ளியோட ரொம்ப இம்சையா இருக்கு. ஹோட்டல் வாசல்ல நின்னு பாட்டுப்படிக்கிறேனு சாப்பிட வர்றவங்கிட்ட காசு கேட்டுத் தொந்தரவு பண்ணுறா அதனால சாப்பிட வர்ற கஸ்டமர்கள் பயப்படுகிறாங்க. ரொம்ப தொல்லையா இருக்கு ஏதாவது பண்ணுங்க சார்.” “சரி சார், ஏட்டு யாரையாவது அனுப்பி என்னென்னு கேட்கிறேன்” என்று போனைத் துண்டித்த இன்ஸ்பெக்டர், பொட்டபுள்ளய என்ன செய்ய. அதுவும் பைத்தியமா திரியிறவள எப்படி டீல் பண்றதுனு மனசுக்குள் குழம்பிக் கொண்டிருந்தார்.
ஏட்டய்யா அவளை அழைத்து வந்ததும், இன்ஸ்பெக்டர் சுப்பையா ஸ்டேசனில் அவளை உட்காரவைத்து எதை எதையோ கேட்டுப் பார்த்தார். ஆனால் அவள் எதற்கும் சரியாய் பதில்சொல்லவில்லை. இன்ஸ்பெக்டர் கேட்கும் கேள்விக்கெல்லாம் “முருகா சரணம் முருகா சரணம்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். சுப்பையாவிற்கு அவளோடு போராட மனமில்லை. எதையும் நினைவில் இல்லாது இருக்கும் அவளைத் துன்புறுத்துவதாக உணர்ந்தார். “ஏட்டய்யா இவா சரிப்பட மாட்டா… பாவம் எங்கயாவது கோயில்கிட்ட கொண்டு போயி விட்டுடுங்க” என்றார் சுப்பையா.
அவளோடு தெருவில் நடக்க ஆரம்பித்த ஏட்டையாவிடம் சார் எனக்கு ஒரு காபி தண்ணி வாங்கிக் கொடுங்களேனு கேட்டாள். ஏட்டையாவும் போகும் வழியில் வடையும் காபியும் வாங்கிக் கொடுத்து விட்டு கோயில் வாசலில் போய் விட்டுவிட்டு வந்தார். இப்படி பல தடவை நடந்திருக்கிறது.
மற்றொரு பக்கம், வள்ளியை வீம்புக்கென்றே சீண்டிப் பார்த்து சந்தோசப்பட்ட வெட்டிப்பசங்கள் கூட்டம் ஒன்று இருந்தது. அன்றொருநாள் அவள் சிக்கிக் கொண்டாள். ஒரு வீணானவன் ஒளிந்திருந்து அவள்மீது கல்லை எறிந்து வம்பிழுத்தான். வள்ளி பதிலுக்குக் கையிலிருந்த குச்சியை அவன் மீது வீசினாள். இதைப் பார்த்த மூன்று நான்கு பேர் அவளை கல்லால் அடித்து விரட்டினர். அப்போது யாரோ கொடுத்து அவள் மடியில் முடிந்து வைத்திருந்த மிஞ்சிய தின்பண்டங்களில் சில தெருவில் சிதறி ஓடின. நல்லவேளை அந்த நேரம் சைக்கிளில் வந்த ஒரு நபர்” ஒரு பைத்தியத்துகிட்ட போய் உங்க வீறாப்ப காமிக்கிறீங்களேடா… சண்டாளங்களா, நீங்க விளங்க மாட்டீங்கடா….’ என்று ஆத்திரப்பட்டு சைக்கிளை விட்டு இறங்கி அவர்களை அடித்து விரட்டினார். வீசிய கற்களின் சிராய்ப்பு அவள் உடலெங்கும் தடம் பதித்திருந்தது. அவள் தெருவில் சிந்தியவற்றைப் பொறுக்கி எடுத்து மறுபடியும் மடியில் போட்டுக் கொண்டு கோயில் வாசலில் சென்று உட்கார்ந்தாள். கல்லடி பட்ட சிராய்ப்பு அவளைத் துன்புறுத்தியது. எரிச்சல் தாங்காது எச்சிலை எடுத்து அதில் அப்பிக் கொண்டாள். பசியோடிருந்த அவள், மடியைத்தடவி அதில் கிடந்த புழுதி படிந்த பண்டங்களை எடுத்து ஊதிவிட்டு வாயில் போட்டுக் கொண்டாள். இதையெல்லாம் பார்த்து அவளைக் கேட்பார் யாரும் இல்லை. பைத்தியத்திடம் இரக்கப்படுவதுமே குற்றமாய் நினைக்கிறதோ சமூகம் என்று தோன்றுகிறது.
வள்ளிக்கு, ரத்னா டீலக்ஸ் ஹோட்டலை மறக்க முடியவில்லை போலும். கொஞ்ச நாட்கள் கழித்து, மீண்டும் ஒரு நாள் ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு உரக்க முருகன் பாடல்களைப் படித்து சாப்பிட வருபவர்களிடம்காசு கேட்டுக் கொண்டிருந்தாள். மறுபடியும் வந்து விட்டாளே என்று இதைப் பார்த்துக்கொண்டு கல்லா பெட்டியில் உட்கார்ந்திருந்த ரத்தினம் டென்ஷனாகிவிட்டார். அவளை விரட்டுவதிலேயே இருந்தார். அப்போது சாப்பிட்டு விட்டு பில்லுக்குப் பணம் கொடுக்க வந்த ஒரு பெரியவர், ரத்தினசாமியிடம் “கொஞ்சம் பொறுமையா இருங்க. இந்தப் பிள்ளயோட கதைய கேட்டீங்கன்னா நீங்க இப்படி நடக்கமாட்டீங்க.. நா மீசலூர்க்காரன். அவா பிறந்து வளந்தது எல்லாம் எங்க சீமையில்தான். அப்பனும் ஆத்தாலும் கடன் தொல்ல தாங்காம தூக்குல தொங்கி செத்துப்போயிருச்சிங்க. அதுக்குப் பின்னால நாதியில்லாம சாவ நேர்ல பாத்த அதிர்ச்சியிலேயே இவா பைத்தியம் பிடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டா. சொந்த பந்தமல்லாம் கூட இவளுக்கு உதவல. கண்டபக்கமெல்லாம் சுத்தி இங்க வந்துட்டானு சொன்னாங்க. நாகூட இன்னிக்குத்தா இவள ரொம்ப நாளைக்கு அப்புறம பாக்குறேன். எப்ப பாத்தாலும் முருகா சரணமுனு சொல்லிக்கிட்டு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்ததால அவள எல்லாருமா வள்ளினு கூப்பிட ஆரம்பிச்சாட்டாங்க. வடிவுக்கரசிங்கிற அவ பெயரே யாருக்கும் தெரியாம போச்சி….என்னத்த சொல்ல அவா விதி..ம்ம்ம்” இப்படி ஆதங்கப்பட்டு சொல்லிய அந்தப் பெரியவர் படியிறங்கிப் போய் கொண்டிருந்தார். இத்தனனயும் கேட்டுக் கொண்டிருந்த ரத்தினசாமியின் மனம் கசிந்தது. கல்லாவிலிருந்த படியே டேய் இங்க வானு ஒரு சர்வரைக் கூப்பிட்டார். வள்ளியைக் கையைக் காண்பித்து இவா எப்ப வந்து நின்னாலும் இவளுக்கு நாலு இட்லிய கட்டி சட்னி சாம்பாரோட பார்சல் கொடுத்திரு என்று சொல்லிவிட்டு, பார்சல் வந்தவுடன் அவரே வள்ளியைக் கூப்பிட்டு அதைக் கொடுத்து அனுப்பினார். கும்பிடு போட்டு வாங்கிக் கொண்ட வள்ளி தெருவிற்குள் ஓடி மறைந்தாள்.
அன்றைக்கு குமார் மாலையில் பள்ளிக்கூடத்தில் விளையாடி விட்டு வரும்போதே இருட்டத் தொடங்கிவிட்டது. அவன் தெப்பத்து வீதியில் சைக்கிளில் வந்தபோது, கைவண்டிகளைத் தெரு ஓரத்தில் வரிசையாக கூலியாட்கள் நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த தெரு முனையில் இருந்த அடிக் குழாயில் பெண்கள் சிலர் அடித்து அடித்து தங்கள் குடங்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தனர். வீதிகளில் ஓரக் கடைகளும், கட்டிடங்களும் அடிக்கி வைத்தாற்போன்று அணி வகுத்தன. இன்னும் சொல்லப்போனால், அவை ஊரின் வணிக நாகரிகத்தை அடையாளமாய் தாங்கி நின்றன.
தெப்பக் குளத்தின் கீழ்படியில் நின்று கொண்டு யாரோ ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். பள்ளி விட்டு வந்த சில சிறுவர்கள் குளத்துத் தண்ணீர் தவழ்ந்து வரும் படியில் நின்று கால்களை நனைப்பதும் வந்து வந்து கால்களை முத்தமிட்டுச் செல்லும் சிறிய மீன்களோடு விளையாடுவதுமாய் இருந்தனர். சப்தமின்றி ஒரு உரையாடல் அங்கு பதிவாகிக் கொண்டிருந்தது.
ஒரு சிறுவன் மட்டும் தன் காற்சட்டைப் பையிலிருந்து உடைந்த ஓடு ஒன்றை எடுத்து குளத்துத் தண்ணீரில் வீசி தவளைத்தட்டு விளையாடினான். அது அழகாகத் தண்ணீர் வீதியில் தாவித் தாவி மான்கள் போல் துள்ளியபோது, சிதறிய தண்ணீர் துளிகளுக்குள் மங்கிய மாலை வெயிலின் ரேகைகள் படிந்தன. குளம் பூமிக்குள் புதைந்து தண்ணீர் நிரம்பிய குடுவை போல் காட்சியளித்தது. குளமும் நீரும் குளத்து மீன்களும் அதற்குள் சங்கமித்து ஒரே குடும்பமாய் வாழ்கின்றன போலும். குளத்தில் குளிப்பதும் கை கால்களைக் கழுவுவதும் கூடாது. “கண்டிப்பாக மீன் பிடிக்கக்கூடாது” என்ற அறிவிப்புகள் அத்தனையும் நிறைவேற்றப்படாத சட்டமாகத்தான் இருந்தன.
வள்ளி நெற்றியில் திருநீறு குங்குமத்தோடு, மேற்கு நோக்கிப் படிகளில் நின்று வழக்கம் போல் பாட ஆரம்பித்தாள். அவள் பாடுவதை வேடிக்கை பார்க்கவே ஒரு கூட்டம் காத்திருந்தது. வீதியின் வழியே கனத்த அவள் குரலின் அதிர்வுகள் சிற்றலை போல் மிதந்து வந்தன. குமார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அவன் கூடவே வந்த பாலன் உன் அம்மா திட்டுவார்கள், சீக்கிரம் வா போகலாம் என்று சொல்லிக் கொண்டே அவன் சட்டையைப் பிடித்து இழுப்பதும் பதிலுக்கு குமார் அவன் கையைத் தட்டி விடுவதுமாய் இருந்தான். அவன் பார்வை வள்ளி மீதே குவிந்திருந்தது. தலைமுதல் கால்வரை அழுக்கைச் சுமந்திருக்கும் அவள், அத்தனை சுத்தமாய் வடித்தெடுத்த தேன் போன்ற குரலோடு சஞ்சரித்தாள். ஊர் அடங்கி எங்கும் இருளின் ஆவேசம் கவ்விக் கொள்ளும் நேரம், கூட்டுக்குள் அடையவரும் காக்கை குருவிகளின் ரீங்காரம் பின்னிசையாய் அவள் குரலுக்கு சுதிசேர்த்தன.
பாலன் குமாரிடம் அங்க பாரு அதுதான் அவளோட சொத்துனு அரசமரத்தின்கீழ் ஒரு அகன்ற பொந்தைக் காண்பித்தான். அதற்குள் முடிந்துபோட்ட அழுக்கடைந்த துணிப்பை ஒன்று கிடந்தது .
வள்ளி பாடுவதை நிறுத்திவிட்டு குமாரைப் பார்த்துப் பக்கத்தில் வாவென்று கையசைத்தாள். பாலன் “போகாத, அவா உன்ன தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவா என்றான். குமார் அவனைப் பொருட்படுத்தாது அவளிடம் சென்றான்.
அவன் பக்கத்தில் நெருங்கியவுடன், அவள் தன் இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப்பையிலிருந்து மூன்று விரல்களால் திருநீறை எடுத்து “முருகா சரணம் முருகா சரணம்” என்று சொல்லிக் கொண்டே குமாரின் நெற்றியில் பூசிவிட்டாள்.
அவள் விரல்கள் அவன் நெற்றியில் பட்டபோது, அந்த விநாடிகளில் அவன் உடல் சிலிர்த்தது போல் உணர்ந்தான். அப்படியே படியில் உட்கார்ந்து கொண்டான்.
அதன் பின், அவள் வேல்மாறல் பாராயணமும் ஆரம்பித்தாள். இதைப்பார்த்து அங்கே நின்று கொண்டிருந்த கைவண்டி இழுக்கும் கூலியாட்கள் அவள் கொடுக்கும் திருநீறை வாங்கிக் கொண்டனர். இது தெரிந்து குழாயடியில் நின்றிருந்த பெண்களில் சிலரும் தயங்கித் தயங்கி வள்ளியை நோக்கி வந்தனர்.
அவளிடம் வந்து திருநீறை வாங்கிக் கொண்ட ஒருத்தி இவா பைத்தியம்தானா இல்லை நடிக்கிறாளா என்றாள்.
மற்றொருத்தி அப்படி பேசாதே, சாமி குத்தமாயிரும். அந்த முருகனே நேர்ல வந்த மாதிரில இருக்கு … அவர்களுக்குள் இப்படி பேசிக் கொண்டே, குடத்தின் விளிம்புவரை ததும்பிய தண்ணீர் துவலைகளை லேசாய் தட்டி விட்டு, இடுப்பில் ஏற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர். அதில் ஒருத்தி வெளிச்சம் போட்ட தன் மடியை முந்தானையால் சுற்றி மூடிக்கொண்டிருந்தாள். இதை வேடிக்கை பார்க்கவே எதிர் டீக்கடை பெஞ்சில் சில வெட்டி மனிதர்கள் காத்துக்கிடந்தனர்.
கருகருவென இருட்டிக் கொண்டிருந்தது. வள்ளி படியேறி தெருவழியே நடக்க ஆரம்பித்தாள். பாலன் போதும் வாடா போகலாம் என்று குமாரைக் கூப்பிட்டான். குமார் எதுவும் பேச முடியாது பித்தேறியன் போல் சைக்கிளை எடுத்துக் கிளம்பியதைப் பார்த்த பாலன் அவனைப் பின் தொடர்ந்தான்.
குமார் பல நாட்கள் அவள் பாடுவதை நின்று கேட்பதும் பிறகு திருநீறைப் பூசிக் கொள்வதுமாய் இருந்தான். மரகதம் உனக்கு எதுக்குடா இந்தக் கிறுக்கி சாவகாசம். ஸ்கூல் விட்ட உடனே வீட்டுக்கு வர வேண்டியதுதானனு பலதடவை சொல்லிப்பார்த்தாள். தெப்பக்குளத்தின் வரப்பிலும், படியிலும் குமார் நிற்பதுமே ஆபத்தானது என்று பயந்திருந்தாள். “அந்த லூசு ஒருநாளு திருநீற பூசி உன்ன தண்ணிக்குள்ள தள்ளிவிடப் போகுது. அப்ப என்ன செய்வ? பேசாம இருட்டுறதுக்குள்ள வீடுபோய் சேரு.” நண்பன் பாலனும் எச்சரித்துக் கொண்டிருந்தான்.
குமார் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அன்று வள்ளி படியில் உட்கார்ந்து கொண்டு இங்க வா உட்காரு. பயப்புடாத தம்பினு சொல்லிவிட்டு அவனிடம் பேனாவையும் நோட்டுப் புத்தகத்தையும் வாங்கி ஏதேதோ எழுத ஆரம்பித்தாள். மூன்று நான்கு பக்கத்திற்கு எழுதிவிட்டு, குமாரிடம் “இத தினமும் படி முருகா… நல்லா படிப்பு வரும் முருகா” என்று சொல்லி திருநீறை நெற்றியில் பூசிவிட்டாள்.
குமார் வீட்டிற்கு வந்தவுடன் இதைப் பார்த்த மரகதம் திகைத்துப் போனாள். இரண்டு பக்கத்திற்கு கந்தசஷ்டி, பிறகு இரண்டு பக்கம் வேல் மாறலில் சில வரிகள். நேர்த்தியும் ஒழுங்கும் மரகதத்திற்கு அதை ஒதுக்கிவிட மனமில்லை. எத்தனை அழகான எழுத்துக்கள். கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருந்தது. ‘அதக் கொடு, பூஜையில் சாமிக்கு பக்கத்தில் வைப்போம்’ என்று சொல்லி அந்தப் பக்கங்களைக் பக்குவமாகக் கிழித்து முருகன் படத்திற்குக் கீழ் மடித்து வைத்தாள். வள்ளி புறத்தே சிதைந்திருந்தாலும், அவளின் அகத்தின் இருப்பு தெளிந்தே இருப்பதை மரகதத்தால் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் அது எப்படி என்ற வினா அவள் மனதைப் பிறாண்டியது.
அதற்கும் ஒரு நேரம் வந்தது.
ஒருநாள் மரகதம் முருகன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு பிரஹாரத்தைத் தாண்டிக் கீழே இறங்கிவந்து கொண்டிருந்தாள். அப்போது வாசலில் நின்று வள்ளி ஓங்கிய குரலால் முருகன் பாமாலை பாடிக் கொண்டிருந்தாள் அவளைக் கடந்து சென்ற சில பெண்கள் ஏதோ பார்க்கக்கூடாததைப் பார்த்து விட்டதுபோல் முகம் சுழித்தபடி சென்றனர். ஒன்றிரண்டு பேர் அவள் பாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். குமார் சொன்னது சரிதான், பைத்தியம் என்று நினைத்த இவள் எத்தனை சுத்தமாகப் பாடுகிறாள் என்று மரகதம் வியந்து நின்றாள்.. அது சமயம் கோயில் பட்டர்களில் ஒருவர் “என்னமா பைத்தியம் இப்படி பாடுதுனு நினைக்கிறீங்களா… இவள பெத்தவன், இவளோட தாத்தா இப்படி எல்லோருமே கோயில்லயே கிடையா கிடந்தவங்க. கோயில் முழுசயுமே கூட்டிப் பெருக்குறது, குப்பைய அள்ளிப் போடுறது, குடத்துல தண்ணிய மோந்து வந்து தாழ்வாரத்தக் கழுவுறது, பிறகு கழுவறைய சுத்தப்படுத்துறது இப்படி அத்தனையும் செஞ்சாங்க. இவளோடு அய்யன் மீசலூர் முருகன் கோயில் கொடிக்கம்பத்துக்குப் பக்கத்துல நின்னு சுதி தப்பாம முருகனோடு பக்தி பாட்டெல்லாம் படிச்சிக்கிட்டு இருந்தாரு. பாவாட சட்ட காலத்திலேயே நேரம் கிடைக்கும்போது இவளும் சேந்தே படிச்சி பழக்கப்பட்டுட்டா. பைத்தியமுனு நினைச்சாலும் அந்த ஞானம் இவளுக்குள்ள நல்லா பதிஞ் சிருச்சி. அதான் இந்தப் புள்ள இப்படி கணீர்னு பாடுது.”
மரகதம் அவளை வெறித்துப் பார்த்தபடி கையிலிருந்த காசை அவள் கையில் கொடுத்துவிட்டு வந்தாள். ஏதோ பல காலமாய் பரிச்சையமான ஒரு உணர்வு. வீட்டிற்குத் திரும்பிய பிறகும் கூட அவளுடைய மனம் மீண்டும் அவளைக் கோவில் வாசலுக்கே இழுத்துச் சென்றது. அகண்டு விரிந்த அவள் கண்களும் கூர்மையான அந்தப் பார்வையும் இன்னும் அவள் மனத்திரையை வி அகல மறுத்தன.
மாலை மயங்கிக் கொண்டிருந்தது. குமார் தன் தோளிலிருந்த பையை படியில் வைத்தான். பிறகு அப்படியே உட்கார்ந்து கொண்டான். வள்ளி வருவாள் என்று காத்திருந்தான். அவள் வரவில்லை. உனக்குப் பாட்டெல்லாம் எழுதிக் கொடுத்திருக்கிறாள், அவளைப் பார்க்கும் போது இதை சாப்பிடக் கொடு என்று அம்மா மரகதம் அவன் புத்தகப்பையில் வைத்து விட்ட முருக்கும் அதிரசமும் அப்படியேயிருந்தன. ஏமாற்றம்தான், வள்ளியைக் காணவில்லை. வீட்டிற்குத் திரும்பிய குமார் போகும் வழி நெடுவே எங்காவது வள்ளி நிற்கிறாளா என்று பார்த்தவண்ணமே சென்றான்.
அன்றோடு இரண்டு நாட்களாகி விட்டன. வள்ளியைத் தேடுவாரில்லை. அங்கே நின்றிந்ருந்த ஒரு மனிதர் நேற்று கூட அவளைக் கோயிலில் பார்த்தேனே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்த பிறகு அம்மா மரகதம் தானும் கோயிலில் பார்த்ததை குமாரிடம் சொன்னாள். நீ அதையே நினைத்து மனதைக் குழம்பிக் கொள்ளாதே என்ற மரகதம், ஊரைச் சுற்றிச் சுற்றி வரும் பைத்தியம் எங்கேயாவது கிடப்பாள். அவளுக்கென்ன வீடா வாசலா. அவள நம்மால தேட முடியாது நீ படிக்கிற வேலயபாரு. இந்த வருஷம் நீ எட்டாம் வகுப்பு பரீட்சை எழுதப் போறத மறந்துறாத.
வள்ளியை இன்று எப்படியும் பார்த்துவிடலாம் என்ற ஆர்வத்தோடு குமார் சைக்கிளை மிதித்தான். தூரத்தில் அவன் கிழக்கு தெப்ப வீதியில் வரும்போது அங்கு நிறைய கூட்டமாய் ஜனங்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஒரு போலீஸ் ஜீப்பும் நின்று கொண்டிருந்தது. என்ன அசம்பாவிதம். குமாரின் மனம் படபடத்தது. சைக்கிளிலிருந்த படியே எட்டிப் பார்த்தான். ஏதுவும் தெரியவில்லை. அவன் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு வந்த போது தெப்பத்து வரப்பிலும் படிகளிலும் நின்று கொண்டிருந்த கூட்டத்தை இரண்டு போலீஸ்காரர்கள் விரட்டிக் கொண்டு இருந்தனர்.
குமார் எல்லோருக்குள்ளும் நுழைந்து, நின்று கொண்டிருந்தவர்களை விலக்கி விட்டு பார்த்தான். தெப்பத்தின் கீழ்ப்படியில் அலங்கோலமாக வள்ளி கிடந்தாள். செத்து மிதந்தபோது யாரோ பார்த்து அதன் பிறகு அவளைப் பிணமாய் கரையில் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் இவள் இரவில்தான் உள்ளே விழுந்து தற்கொலை செய்திருக்கிறாள். பகலில் நடந்திருந்தால் இவளை காப்பாத்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவள் உடல் முழுவதும் ஈ மொய்த்துக் கொண்டிருந்தன. சேலை விலகி அரை நிர்வாணமாய் கிடந்தாள். வாடிய பூமாலை ஒன்று அவள் கழுத்தைச் சுற்றிக் கிடந்தது. எப்போதுமே தனக்குத் துணையாய் வைத்திருந்த அந்தக் குச்சி இன்னும் அவள் பிடியில் சிக்கியவாறு கைகளிலேயே இருந்து கொண்டிருந்தது. உயிர் இழந்து பிணமாய்க் கிடந்த இந்தக் கோலத்தைப் பார்த்த குமாரின் மனதிற்குள் படபடப்பும் பீதியும் இணைந்தன.
ஆச்சப்பாவின் சாவைப் பார்த்த பிறகு இன்றுதான் குமார் வள்ளியின் வடிவில் ஒரு பிணத்தைப் பார்க்கிறான். கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு துணியைக் கொண்டு வந்து உடலோடு வள்ளியின் முகத்தையும் சேர்த்து மூடிவிட்டார். அதற்குப் பிறகு கூட்டம் கலைந்தது.
வீட்டிற்கு வந்த குமார் யாரோடும் பேசாமலேயே இருந்தான். சொல்லத் தெரியாத அவன் மனதின் வலி வள்ளியோடு இருந்த சில கண நேரங்களை நினைத்துப் பார்த்தது. மரகதம் மட்டும் அவன் நகர்வை அறிந்து கொண்டிருந்தாள். மரகதத்திற்கும் குமாருக்கும் மட்டுமே தெரிந்த இந்த வள்ளியோடு இணைந்த நாட்கள் கதையாக மனதோடு கரைந்துவிட்டது. மரகதம் இன்றுகூட வள்ளி எழுதிக் கொடுத்த அந்த முருகனின் பாடல்களின் சில வரிகளையாவது தினமும் பூஜையின் போது படிக்காமல் இருக்கமாட்டாள். வள்ளியை அவள் எழுத்துக்கள் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன.
அன்று இரவு கண்களை மூடியும் குமார் துயில் கொள்ள முடியாதவனாய் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளியின் உருவம் மீண்டும் மீண்டும் அவன் மனத்திரையில் வந்து தொல்லை கொடுத்தது. பின்னிரவில் அவன் கண்கள் அசந்து சொருகியபோது, வீட்டின் முன்வாசலில் வந்து வள்ளி நிற்பது போன்றதொரு வடிவம் வந்து மறைந்தது. திடுக்கிட்டு எழுந்த அவனைப் பீதியும் பயமும் பீடித்திருந்தன. திகிலூட்டும் திரைப்படக் காட்சி போல் மிதந்து வரும் மங்கலான புகை மூட்டத்தில் அவன் மூழ்கியிருந்தான்.
அவன் மீண்டும் அம்மா மரகதத்தை இறுகக் கட்டிக்கொண்டு தூங்கிப் போனான்.
– காலச்சித்திரங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 2025, மழைமான் பதிப்பகம், சென்னை.
![]() |
விருதையில் 'அம்பாள்' என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர். தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சலுகை
எஸ்.மதுரகவி
May 22, 2026
ஞாபக கிடங்கு
பே.செல்வ கணேஷ்
May 22, 2026
கருத்துக் கணிப்புகள்
முத்தமிழ்ப்பித்தன்
May 22, 2026
