வெள்ளைத் தோல் வீரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 408 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது நான் தங்கி இருக்கின்ற வீட்டின் வரைபடம். நீங்கள் என்னுடன் வர நேரும் வேளைகளில் முன்னெப்போதோ வந்தவர் போல இயல்பாய் திரிந்து கொள்ள இது உதவியளிக்கும். தங்கி இருக்கின்ற வீடு என்பதிலிருந்து இன்னொருவருடன் தேவையின் பொருட்டுத் தங்கி இருக்கின்றேன் எனவோ, ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கின்றேன் என்றோ, எண்ணி விட்டிருந்தால் அது உங்களின் சிந்தனையில் ஏற்பட்ட கோளாறாய் எண்ணப்பட்டுவிடும். எனது சகோதரனுடன் தங்கி இருந்தது. அதற்காக வீடு அவனுடைய.து என அர்த்தப்படுத்திக்கொண்டு விட வேண்டாம். ஒரு வீட்டை வாங்கி விடக்கூடியளவு சேமிப்பை அவனோ, அவனுடையதும், என்னுடையதுமான தந்தை மேற்கொள்ளவில்லை. என்னிடம் சேமிப்பென்பது நிகழ்ந்துவிடக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடவில்லை. அதற்கான அவசியம் உணரப்படும் போதெல்லாம் எடுக்கும் முடிவு உறங்கி எழுந்து முகம் கழுவும்போது கரைந்து போய்விடும். 

இந்த வீட்டிற்கு மாதத்துக்கென மதிப்பிடப்பட்டதொகை அவன் ஊதியத்திலிருந்து கழிக்கப்பட்டு விடுவதால் வாடகைக்கு இருக்கின்றான் எனக் கூறிக்கொள்ள முடியும். ஆனாலும் எனது இருப்பு முறை பற்றி தெளிவுபடுத்த முடியாது. 

காலையில் பிரதான வாசலூடு பரவிக் கொள்ளும் ஒளிக்கதிர்கள், எனது அறைக்குள் நுழையா வண்ணம் அறைக்கதவு மற்றொரு திசை பார்த்ததாக இருக்கும் இதனால் நீண்ட நேரம் தூங்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கும் பகலைத் தாண்டிய மாலையில்தான் ஒளி யன்னலூடு உள்நுழையும். 

நீங்கள் குறிக்கப்பட்ட என்னறைக்குள் வந்து சுதந்திரமாய் இருந்தாலும் தாராளமாய் நடமாடக் கூடியளவில் அறையினுள் இடவசதி போதுமானதாயிருக்காது. மேசை ஒன்றும், புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அலுமாரிகள் மூன்றும், உடைகள் அடுக்கப்பட்டுள்ள அலுமாரி ஒன்றும், கட்டில் ஒன்றுமாக அறை நிறைந்திருக்கும். மேசையில் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். நீங்கள் ஒரு வாசிப்பாளராக இருந்தால் இவைகள் உங்களுக்கு எவ்விதத்திலும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் அமைதியைப் பேணும். புத்தகத்துள் மூழ்கிப்போக அறை சாந்திகாப்பதுடன், அதை ஊக்கப்படுத்தி அறிவை வளர்க்கும் படி கூறும் வாசகங்கள் படங்களுடன் ஆங்காங்கு சுவரில் தொங்கும். 

என்னைத் தேடி வரும் நீங்கள் நான் இல்லாத போது கூட அறையை நூலகம் போல பாவித்துக் கொள்ள முடியும் – இதற்கு, முன்னெப்போதாவது என்னுடன் வருகை தந்திருப்பது அவசியம். 

இந்தப் புத்தகங்கள் தான் என்னை நிறைய வழிப்படுத்தி இருந்தது என்பதையும், குழப்பத்துள் ஆழ்த்தியது என்பதையும் நீங்கள் நம்பிக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படலாம். அப்பாவின் கண்டிப்புடனும், பாடசாலை விடுதியின் இறுக்கத்துடனும் சிறு வயது முதல் இருக்க நேர்ந்ததால், இருக்கும் இடத்துக்கும், பழகும் நபருக்கும் ஏற்றாற் போல் என்னை வளைத்துக் கொள்ள முடிந்திருந்தது -உளவியலாளரின் கருத்துப்படி – இதை விட நான் பிறந்திருந்த தேதிக்குரிய எண்ணும் இதைத்தான் வலியுறுத்துகின்றதாம். 

இந்த அறையில் என்னுடன் வந்து தங்கியிருந்த நண்பர்களைக் கணக்கிட்டு விரல்களுள் அடக்கி விடலாம். வீடு நோக்கிய எனது வருகையே மிகக் குறைவாகவே இருந்தது. அத்தனை பளு என்மேல் இருந்தது என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன். வேலைக்காலம் குறைவாக இருந்தாலும் அத்தளத்தில் நின்று செயற்படவும், சிந்திக்கவும் அதிகமிருந்தாலும், அடுத்த 

நாளைய வரவை இலகுபடுத்தவுமாக வீட்டுக்கும் வேலைத்தளத்துக்குமான தூரம் அதிகமாக இருந்தது. – அங்கு தங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். 

இப்படியாக திடீர் விஜயம் செய்யும் நாட்களில் மேசைமீது புதிதாக சில புத்தகங்கள் முளைத்திருக்கும். 

அன்று என் விஜயம் வீடு நோக்கி நிகழ்ந்தது. மேசை மீது சில புத்தகங்கள் கிடந்தன. மண் வாசனை அறையினுள் நிறைந்திருந்தது. யாரோ ஆக்கிரமிப்பாளர்கள் என் தேசத்துள் நுழைந்துவிட்ட உணர்வு மேசை மீது கிடந்த புத்தகங்களுள் ஒன்றுதான் அதை உண்டுபண்ணியது. அது என்னை “பாட்டி வடை சுட்ட” காலத்துக்கு கொண்டு செல்வதாகவோ, தன்னுள் இழுத்து என்னை அமிழ்த்தி விடுவதாகவோ பட்டது. கூர்ந்து நோக்குகின்றேன். 

புத்தகத்திலிருந்து வெள்ளைத் தோல் வீரர்கள் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆயுதம் உடலுடன் பிணைக்கப்பட்டே இருந்தது. இதற்காகவே பிறந்திருக்கலாம் என ஊகிக்க இடமும், அவகாசமும் இருந்தது. என்னைக் கண்டு எவ்வித எச்சரிக்கையும் அடையாமல் வழியைத் திருப்பி போய்க்கொண்டே இருந்தார்கள். இந்த நடவடிக்கை குறித்து எந்த அபிப்பிராயத்தையும் சொல்லிக் கொள்ள முடியாமல் எனது வாய் அடைத்துப்போய் இருந்தது. 

அவர்களுக்கு மிகப்பெரிய வல்லமை இருந்தது. மிகுந்த பலமும், எதையும் தாங்கிக் கொள்ளக்கூடியவகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான பயிற்சியானது எதையும் தன்கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாலேயே முடியும். எங்கள் சிந்தனைகளைக் களவாடிக் கொண்டுபோய் மூடநம்பிக்கையாக்கி விடக்கூடிய வல்லமை அவர்களிடம் இருந்ததை நான் கண்டேன். 

“நீ நினைத்துக்கொள்வது போல எதுவுமே இங்கு நடக்கவில்லை. நாம் எச்சரிக்கையுடன் இருக்கும் போது அவ்வாறானதொன்று நிகழ்ந்து விடக்கூடியதாக ஏற்பட்டு விடாது.” அண்ணனின் கூற்றிலும் உண்மை இருக்கலாம். 

“உனக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. ஒரு காலகட்டத்தில் இவைகள் அடக்கப்பட்டிருந்தன. அப்போது இவைகளை விட மிகப் பெரும் சக்தி இருந்தது. அதனால், அப்போது இருந்த ஆதங்கத்தை அதிகாரமாக்க முனைந்து கொண்டிருக்கின்றன. வெள்ளைத் தோல் வீரர்களால் எமது புத்தகங்கள் அனைத்தும் அழிபடப்போகின்றன.” 

எச்சரிக்கை உணர்வுடன் அவற்றை அகற்றவும், கூட்டத்தோடு அழிக்கவுமாக என் அறையினுள் அவைகளின் இருப்பிடத்தை அறியும் முயற்சியில் இறங்கி இருந்தேன். இதற்கெல்லாம் முன்னோடியாக என் நிலைப்பாட்டினை அவைகளுக்கு தெளிவு படுத்தினேன். 

“எனக்கு உங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அதுதான் சரியென்றால் செய்துவிடுவேன்.” – “நீ புரியாத மனிதன் என்பதை விடவும் எனக்கு அடங்க மறுக்கின்றாய் என்பதுதான் முக்கியமானது. உனை அழிக்கும்வரை ஓயப் போவதில்லை.” 

அதன் கூற்று எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. அவற்றை நசித்துவிடக் கண்கள் சிவப்பாயின. 

என்னறைக்குள் அத்துமீறி நுழைந்த வெள்ளைத் தோலாலான வீரர்கள் பற்றி எல்லோரும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்கள். எனை பலவீனப்படுத்துவதில் அவை தீவிரம் காட்டுகின்றனவாம். அவைகளை அழித்துவிடச் சொன்னார்கள். ஆனால் யாரும் துணைக்கு வரவில்லை. பகல் முழுவதுமாகப் போராடி கொஞ்சங் கொஞ்சமாய் அகற்றினேன். புத்தக அலுமாரியினுள் இருப்பிடம் அமைத்து தங்கியிருந்த கூட்டை உடைத்து வெளியில் அள்ளிப்போடும் வேளையில் இருட்டிவிட்டது. காலைக் கீழே வைக்கவே அருவருப்பாக இருந்தது. அவற்றை அழிக்கத்தக்க மருந்து இருப்பின் தூவிவிட்டு மறுநாள் துப்பரவு பண்ணி இருக்கலாம். அது இல்லை என்பது அவற்றுக்கும் தெரிந்ததால் தான் பயமின்றித் திரிந்தன. மிக நல்ல புத்தகங்கள் என என்னால் மதிக்கப்பட்டவற்றைக் கூட துளைத்துக்கொண்டு முன்னேறி இருந்தன. என்பதை அலுமாரியைத் திறக்கும்போது அறிந்து கொள்ள முடிந்தது. 

அழித்து விடக்கூடிய உபாயம் வேண்டி கனவுகளுள் நுழைய, தலைவரை போர்த்தியிருப்பினும் மின்மினி போலவும், நுளம்புகள் போலவும் ஒளி விட்டு விட்டும். சத்தம் எழுப்பியும் குழப்பிக் கொண்டிருந்தன. அவற்றின் வெள்ளையுடல்கள் இருட்டிலும் தெரிந்ததால் அவைகள் தான் கனவுகளைக் கலைக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. பல்லைக் கடித்துச் சகித்துக் கொண்டுதான் நித்திரையுள் அமிழ்ந்து போனேன். 

கால்களை அசைக்க முடியாமல் இருந்தது. கட்டி இருக்கக்கூடிய மாதிரி இல்லை. உயிருடன் வைத்து கல்லறை கட்டப்பட்டது போல; அப்படித்தான் நடந்திருந்தது. கால்களின் மேலால் புற்றைக் கட்டிக்கொண்டிருந்தன. அது மண்போல தெரிந்தாலும் அதைவிடவும் இறுக்கமாக இருந்தது. அதன் கட்டுமானப் பணிகள் முழங்கால் வரை வந்திருந்தது. முற்றாக மூடிவிட வேண்டிய எண்ணத்துடன் வீரர்கள் மும்முரமாக மண்ணை உமிழ்நீருடன் கலந்து துப்பி ஒட்டிக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். கட்டில் முழுவதும் அவர்களின் ஆக்கிரமிப்பாகவே இருந்தது. மற்றைய புறம் இரு கைகளையும் அடக்கிவிடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மணிக்கட்டைத் தாண்டி அவைகளின் வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது. கைகளையும், கால்களையும் நீட்டிக்கொள்ள வழியின்றி திணறிக் கொண்டிருந்தேன். அவைகளிடமிருந்து இவ்வாறானதொரு நடவடிக்கையை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவைகளுக்கான வழிநடத்தல் சரியாகவே இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். 

மார்பின் மயிர்களூடு நுழைந்து வந்த ஒரு சிப்பாய் எச்சிலைத் துப்பி விட்டுக் கத்தினான். “உன் விருப்பப்படி – நீ நடந்து திரிய முடியாது. உன் கால்களை மடக்கி என்னிடம் மண்டியிடு, எங்களை வல்லவர்களாக உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமானால் உனது அங்கங்களை விடுவிக்க எங்களால் முடியும். இவை மட்டுந்தான் எங்கள் திட்டத்துள் அடங்குகின்றது என நினைத்துக் கொள்ளலாம். 

அதையும் தாண்டி இன்னமும் உள்ளன. ஒரு போதும் உனைக் கொல்லப் போவதில்லை. எமது வீரர்கள் காதுள் நுழைந்து, மூக்கினால் வெளியே வருவர் அப்போது உன் மூளை சிதைக்கப்பட்டிருக்கும். இவற்றிலிருந்து விடுபடுதல் என்பது உன்கனவாக மட்டுமே இருக்கும். மறந்து விடாதே – மண்டியிடுதலை” 

அதைக் கொன்று வீசிவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர எதுவும் எழவில்லை. வாயால் காற்றை இழுத்துத் தள்ளினேன். வீசுப்பட்ட அது, காலைக் கட்டும் பணியாட்களுடன் கலந்து போனது. 

வேறு 

“மீட்பர்களே! ஓடி வாருங்கள் தெய்வங்களே – ஒவ்வொரு பெயராக அழைத்து -இறங்கி வாருங்கள்!” இன்னமும் பல பெயர்களைச் சொல்லி கட்டிலில் கிடந்த வண்ணம் அரற்றிய போதுதான், நான் யன்னலில் எட்டிப்பார்த்தேன். அவனை விட யாரும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் பாதி மூடப்பட்ட நிலையில், அவனின் சகோதரன் பற்றி எதுவும் தெரியாது. – கேட்கவும் இல்லை – வெள்ளைத் தோல் வீரர்கள் அவனைச் சூழ நகர்ந்து கொண்டு இருந்தார்கள். அவற்றை எதிர் கொள்ளக்கூடிய தைரியம் என்னிடம் இல்லாத்தனால் இதையும் சேர்த்துக்கொள்ளக் கூறினான். 

இப்போதும் நீங்கள் வரலாம் – வரைபடம் உங்கள் வசம் இருப்பது ஞாபகம் இருக்கும் – முழு எச்சரிக்கையும் பாதுகாப்பும் உங்களிடம் இருத்தல் வேண்டும். என்பதைப் புரிந்திருப்பீர்கள். – வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க கூடிய தையரியமும் கூட – 

முடிந்தால் என்னைக் காப்பாற்றும் எண்ணம் இருக்கட்டும். 

– சித்திரை 2003.

– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *