மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 156
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணன் தன் தொழில் காரணமாக அமெரிக்காவில் ஏறக்குறைய பத்தாண்டுகள் இருந்துவிட்டு சிங்கப்பூர் திரும்பினான். தன் பால்ய நண்பன் ரகுவுக்குப் போன் செய்தான். கண்ணன் ரகுவையும் அவன் மனைவி மக்களையும் காண விரும்புவதாகக் கூறினான்.
ரகு, “தாராளமாக வா” என்று சொன்னான்.
கண்ணன், “ஞாயிற்றுக்கிழமை மாலை வருவதாகச் சொல்லி” தொலைபேசியை வைத்தான்.
குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை, ஒரு வாடகை உந்து வண்டியில் கண்ணன் தன் நண்பன் ரகுவின் வீட்டிற்குச் சென்றான். ரகுவும் தன் நண்பனின் வருகைக்காக வாயிலிலேயே காத்துக் கொண்டிருந்தான்.
”அமெரிக்காவிற்குப் போயும் ஆளு அப்படியேதான் இருக்கிறாய். இளைக்கவுமில்லை. பெருக்கவுமில்லையே” என்றான் ரகு.
சிங்கப்பூரிலேயே இருக்கின்ற நீ இளைத்து இருக்கிறாயே ஏன்? உன் மனைவி மைதிலி ஒழுங்கா உன்னைக் கவனித்துக் கொள்ளவில்லையா?” என்று சிரித்தவாறு கண்ணன் கேட்டான்.
நீ முதலில் உள்ளே வந்து உட்கார். ‘அம்மா! இங்கே வந்து பாருங்க, யார் வந்திருக்கிறது?” என்று ரகு தன் அம்மாவைக் கூப்பிட்டான்.
“யார் வந்திருக்கிறது?” என்று கேட்டவாறே அறையிலிருந்து வெளியே வந்தார் ரகுவின் தாய்.
“கண்ணன் வந்திருக்கிறேன்! என்னம்மா சௌக்கியமா இருக்கிறீங்களா?” என்று கேட்டான் கண்ணன்.
”கண்ணனா? அடேயப்பா உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படியப்பா இருக்கிறே?”
“குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வாங்கம்மா” என்றான் ரகு.
அங்கே, ரகுவின் மனைவி இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
“நான் கேட்கிறேன் என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதே. உன் மனைவி எங்கே?” என்றான் கண்ணன்.
“இருக்கிறாள்” என்றான் ரகு.
“எங்கே?”
“அவள் தாய் வீட்டில்.”
“நான் வருவதைப் பற்றி சொன்னாயா?
“இல்லை.”
“ஏன்?”
“அவள் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாள்.”
“நீ என்ன சொல்கிறாய்?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டான் கண்ணன்.
“உண்மைதான். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.”
“என்னால் நம்பவே முடியவில்லை ரகு. நீங்கள் இருவரும் காதலித்து. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுதானே திருமணம் செய்து கொண்டீர்கள். அதுவும் மரணம் நம்மைப் பிரிக்கும் வரை சேர்ந்தே இருப்போம் என்று மணமேடையில் சங்கல்பம் செய்துகொண்ட நீங்கள் பிரிந்து விட்டீர்களே! என்ன காரணம்!”
“எங்க வாழ்க்கை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றுதான் நான் எண்ணியிருந்தேன். என்னை விட்டுவிட்டு அவள் என்றுமே தனியாக உணவு உண்டதில்லை. தனிக்குடித்தனம் போவோம் என்றாள். அதற்கும் நான் சம்மதித்தேன். அளவுக்கு அதிகமான ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்தாள். அதுவும் கடனுக்கு. விரலுக்கு ஏற்று வீக்கம் போன்று வாழ்வோம். எதிர் காலத்திற்கு நாம் இப்போதே சேமிக்க வேண்டும். வீண் செலவு செய்யாமல், முதலீடுகளில் பணத்தைப் போட்டு வைப்போம் என்றேன். நீங்கள் சொல்வது போல், இருக்க வேண்டுமானால், நானும் வேலைக்குப் போகிறேன் என்றாள். நானும் அதற்கு சம்மதித்தேன். அவளுடைய வேலையில் அவள் முன்னேற்றம் அடைய அவளுக்கு உதவினேன். அவள் இன்று ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பொறுப்பதிகாரியாக இருக்கிறாள். நானும் இன்று வங்கியின் ஒரு கிளைக்கு மேனேஜராக இருக்கிறேன். ஆனால் கால ஓட்டத்தில் நாங்கள் இருவரும், வேலை வேலை என்று உழைத்து களைத்து வீடு திரும்பியதால் எங்களால் மனம் விட்டு பேசிக்கொள்ள முடியவில்லை. வெளியே அல்லது நல்லது கெட்டதற்குக் கூட சென்று வர நேரமில்லை.
வெளியில் போராடி விட்டு, உடலும் மனமும் சோர்ந்து போய் வந்ததால் எங்களுடைய தாம்பத்திய வாழ்வுச்செடி தழைக்க தண்ணீர் விட முடியவில்லை.
அவள் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒருமுறை அவள் தன்னுடன் வேலை செய்தவனோடு வெளியூர் சென்றாள். தன்னுடைய சிநேகிதம் பற்றி என்னிடம் சொன்னா. நான் யார் கூடவாவது உறவு வைச்சுக்கலாம்னு? கேட்டா. நான் திகைத்துப் போய்விட்டேன். என் தலையில் சம்மட்டியால் அடித்தது மாதிரி இருந்தது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குடும்ப மானம் காற்றில் பறந்துவிடக் கூடாது என்று எண்ணினேன். அதனால் அவளை வேலையை விட்டு நிற்குமாறு சொன்னேன். அதற்கு அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அவளே என்னை விட்டு பிரிய எனக்கு நோட்டிஸ் அனுப்பினாள்” என்றான் ரகு.
ரகு சொன்ன செய்தியைக் கேட்ட கண்ணன் மௌனமாக இருந்தான். ஆணும் பெண்ணும் உழைக்கத் தொடங்கியதால் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை எண்ணிப் பார்த்தான். புதிய தலைமுறை பெண்கள் துணிச்சலானவர்களாகவும் தீர்க்கமாக முடிவெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்களை அடித்து வதைத்த காலம் மலையேறிவிட்டது. மேல் நாட்டுப் பெண்கள் போல் கை நீட்டினால் சட்டத்தின் உதவியை நாடிச் செல்லவும் துணிந்துவிட்டார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஒரு பக்கத்து கதையை மட்டும் கேட்டுவிட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்று எண்ணிய கண்ணன் ரகுவிடம் இருந்து விடைபெற்றான்.
மைதிலியையும் அவன் பார்த்துப் பேச நினைத்தான். மைதிலி கண்ணனுக்குத் தெரியாதவள் அல்ல. அவர்கள் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். தன்னுடன் ஆண் குழந்தைகள் யாரும் பிறக்காததால், மைதிலி கண்ணனை அண்ணா என்றே அழைப்பாள். அந்த அண்ணன் தங்கை மைதிலியைக் காணச் சென்றான்.
கண்ணனைப் பார்த்ததும் மைதிலி கதறி அழவில்லை. அன்போடு வரவேற்று உபசரிப்பு செய்தாள்.
கண்ணன் நேரிடையாகவே. மைதிலியிடம் கணவனைப் பிரிந்ததற்குரிய விளக்கத்தைக் கேட்டான். அதற்கு அவள் அமைதியாகவே பதில் கூறினாள்.
“அண்ணா! நானும் படித்தவள்தான். நாட்டையும் உலகையும் அறிந்தவள்தான். என் திருமணத்திற்கு முன் என் பெற்றோர் என்னை வேலைக்குப் போகவிடவில்லை. திருமணத்திற்குப் பின் தான் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டி அவரிடம் அனுமதி கேட்டேன். அவரும் சம்மதம் தந்தார். இருவரும் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வேலைகளைச் செய்ய வேண்டியதுதானே முறை? அதை விடுத்து. நான்தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்பார். வீட்டிற்கு நேரத்தோடு வரமாட்டார். விருந்துகளுக்கு அவர் மட்டும் போவார். அப்படி தப்பித்தவறி என்னை அழைத்துக் கொண்டு போனால், அங்கு வரும் ஆடவர்களிடம் பேசக் கூடாது என்பார். நான் தனிமையில் வீட்டில் இருந்து துன்பப்படுவேன். அடிக்கடி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவார். விருந்து வைக்க வேண்டும் என்பார். குடிப்பார்கள். சூதாடுவார்கள். அவருக்காக நான் தூங்காமல் விடிய விடிய விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். சில வேளைகளில் அவர் என்னை அடிக்கவும் செய்வார்.
அவரைப் போல நானும் போல நானும் சம்பாதிக்கிறேன். எனக்கு அவருடைய பணம் தேவையில்லை. அவரின் பாதுகாப்பையும் நெருக்கத்தையும் தான் எதிர்பார்த்தேன். ஆனால் அவரால் அதைத் தர முடியவில்லை. அதனால்தான் கணவன் இல்லாமலேயே சந்தோஷமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்” என்றாள் மைதிலி.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் ஒரு பெருமூச்சு விட்டான்.
“உங்கள் இருவருடைய கருத்துக்களும் நீங்கள் இருவரும் ஒருவரை மற்றவர் அனுசரித்துப் போகாமல், நீ பெரிதா நான் பெரிதா? என்ற எண்ணத்தில், உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டுவிட்டீர்கள் என்பதைத்தான் எனக்கு உணர்த்துகின்றன.
நீ இல்லாமல் அவனும் அவன் இல்லாமல் நீயும் சந்தோஷமாக இருப்பதாகக் கூறுவது பொய். வெளியில் தான் அப்படி காட்டிக் கொள்கிறீர்கள். உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது எனக்குப் புரிகிறது.
வெள்ளம் தலைக்கு மேல் போன பிறகு என்ன செய்ய முடியும்? என்று எண்ணாதீர்கள். அந்த வெள்ளத்தை நீங்கள் நினைத்தால் கடந்து வந்துவிட முடியும். அதாவது ரகு சொல்வது போல், நீ உனது வேலையை விட்டுவிட்டு, ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக, வீட்டிலிருந்து அவனுக்கு வேண்டியதைச் செய்து வர வழி உண்டு. அப்படி நீ செய்தால், அவனும் ஒழுங்கான முறையில் நடந்து கொள்வான் என்று நம்புகின்றேன். மரணத்திற்குப் பின் தான் நம்மிடையே பிரிவு என்று உறுதி எடுத்துக் கொண்ட நீங்கள் பாதியிலேயே பிரிந்திருப்பது நல்லதா என்று எண்ணிப்பார்” என்று சொல்லிவிட்டு கண்ணன் புறப்பட்டான்.
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
புயலில் சிக்கிய பூக்கள்..!
காரை ஆடலரசன்
September 12, 2026
