கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 705 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பனே, பிள்ளையாரே, காலிரண்டும் சரியான வலி வலிக்குது. ஒரு மருந்துக்கும் கேட்குதில்லை. எல்லாரும் பத்திரிகை பார்த்திட்டினம் போலை. சும்மா மேசையிலை கிடக்கு. இப்பிடி காலை வசதியாய் நீட்டிக்கொண்டு முன் படிக்கட்டிலை இருந்து அதைப் பார்ப்பம். 

எழுத்துகளும் தெளிவாய்த் தெரியுதில்லை. கண்ணாடியை ஒருக்கால் துடைச்சுப் போட்டு போட்டுக் கொண்டு பார்ப்பம். முந்தி சேலை கட்டேக்கை தலைப்புச் சேலையாலை துடைக்கிறது வசதி. இப்ப சட்டை போடுறதாலை கரையைத் தூக்கித் துடைக்க வேணும். சேலை கட்டுறதே உடம்புக்கு ஒரு பாரம் எண்ட நிலைக்கு வந்திட்டன். அதுதான் சட்டை போடத் தொடங்கீட்டன். 

ஆ…. கண்ணாடியைத் துடைத்த பிறகு கொஞ்சம் தெளிவாய்க் கிடக்கு. எனக்கு எல்லாச் செய்திகளையும் வாசிக்க விருப்பந்தான். ஆனால் கண் இடங்கொடுக்காது. வாசிக்கக்கூடியதாய் இருந்த காலத்திலை நேரங் கிடைக்காது. இப்ப அதிகம் வேலையள் செய்யமுடியேல்லை. ‘சிவனே’ எண்டு சும்மா இருக்கிறன். இப்ப நேரங் கிடந்தும் வாசிக்க கண் தெரியேல்லை. ஏதோ மேலாலை பார்க்கிறதுதான். 

எனக்கு பொழுது போகவெண்டு ஒரு ரேடியோ வாங்கித் தந்திருக்கினம். ஒரு மாதிரி எல்லாச் செய்தியளும் கேட்பன். பெரும்பாலும் அதுகள்தான் பத்திரிகையிலும் இருக்குது. 

இதிலை வாற அறிவித்தல்களை முக்கியமாய் மரண அறிவித்தல்களைப் பார்க்கிறது என்னுடைய வழக்கம். தெரிஞ்ச ஆரைப் பற்றியாவது இருக்கோ எண்டதைத்தான் பார்ப்பன். நானென்ன மரணச் சடங்கிற்குப் போகப் போறனே? அதொண்டும் இல்லை. என்னாலை போகேலாது. 

மனோகரி மச்சாளுடைய சா வீட்டுக்குப் போய் வந்து அந்தி சாயுற நேரம் தலையில தண்ணி ஊற்றினது. இல்லையில்லை, தண்ணியில்லை, வெந்நீர்தான். என்ரை மருமகள் பானுஜா வெந்நீர் வைச்சுத் தந்தவள். இருந்துமென்ன? இரவு உடம்பெல்லாம் வலி. கை காலை முறிச்ச மாதிரி வேதனை. பிறகு காய்ச்சலும் வந்து பட்டபாடு. பத்துநாள் படுக்கை. 

ஆனாலும் பத்திரிகையில வருகிற அறிஞ்ச தெரிஞ்சவையின்ரை மரண அறிவித்தல்களைப் பார்க்கிறதிலை எனக்கு ஒரு ஆர்வம். இதுக்கு என்ன காரணமெண்டு தெரியேல்லை. 

தெரிஞ்ச ஒருத்தர் போனதெண்டு அறிகிறதோடை அவர் இப்ப எங்கை இருக்கிறார்? பிள்ளைகள் எத்தினை? கலியாணம் கட்டீட்டினமோ? பேரப்பிள்ளையள் இருக்கினமோ? எண்டெல்லாம் அறியலாம். 

ஆ…. இதென்ன புவனேஸ்வரி கணநாதன் எண்டொரு மரண அறிவித்தல் வந்திருக்கு? எங்கட புவனேஸோ? பார்ப்பம். 

‘மூளாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி கணநாதன் வட்டுக்கோட்டையில் காலமானார்.’ 

அவளேதான். எங்கடை வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளித்தான் அவளின்ரை வீடு. நாங்கள் இரண்டு பேரும் அரிவரி தொடக்கம் ஒண்டாய்த்தான் படிச்சனாங்கள். ஓம். அந்தக் காலத்திலை முன்பள்ளி எல்லாம் கிடையாது. நேரை பள்ளிக்கூடத்திலைதான் போய்ச் சேருவம். போனவுடனை படிக்கிற வகுப்பை அரிவரி எண்டு சொல்லுறது. 

அவளும் நானும் ஒட்டெண்டால் ஒட்டு. விடிஞ்சால் பொழுதுபட்டால் ஒண்டாய்த் திரிவம். ஒண்டில் அவள் எங்கடை வீட்டிலை நிற்பாள். அல்லது நான் அவளின்ரை வீட்டிலை நிற்பன். 

பொம்பிளையளின்ரை வாழ்க்கையிலை பெரிசாகிறது, கலியாணங் கட்டுறது எல்லாம் ஒவ்வொரு திருப்பமாய் போகுது. 

முதலிலை அவள்தான் பெரிசானாள். அதுக்குப் பிறகு எங்கடை வீட்டை அவள் வாறது குறைஞ்சுது. பிறகு நான். ஆனால் பள்ளிக்கூடத்திலை ஒண்டாய்த்தான் திரிவம். 

எனக்கு முதலிலை கலியாணம் நடந்தது. இவர் கொழும்பிலை வேலை. நான் கொழும்புக்குப் போகேல்லை. வீட்டிலைதான் இருந்தனான். இவர் சனி, ஞாயிறு. லீவுகள் எண்டு வந்து போவார். அப்ப கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ரெயின் ஓடினது. வசதியைப் பொறுத்து வெள்ளி இரவு அல்லது சனி காலமை வருவார். ஞாயிறு பின்னேரம் அல்லது திங்கள் காலமை திரும்பிப் போவார். 

புவனேஸ் கலியாணம் முடிய அவர், அது தான் கணநாதன் மட்டக்களப்பிலே வேலையெண்டு அங்கேயே போயிட்டாள். இடையிடையே தாய்வீட்டுக்கு வந்தால் சந்திப்பம். பிள்ளை குட்டியளோடை சிலவேளை சந்திக்க ஏலாமலும் போகும். சந்திச்சாலும் ஆற அமர இருந்து கதைக்க எங்கை நேரம்? 

எனக்கு ஐஞ்சு பிள்ளையள். ஒண்டரை அல்லது இரண்டு வயசு இடைவெளியிலை பிறந்தவை. சின்னப்பிள்ளையளாயிருக்கேக்கை என்ன பாடுபடுத்தினவை தெரியுமே? 

புவனேஸுக்கும் அப்பிடித்தான். இப்ப தான் அவளுக்கு எத்தினை பிள்ளையள்? என்ன செய்யினம்? எண்ட யோசனை வருகுது. இந்த மரண அறிவித்தலிலை கிடக்கும் பார்ப்பம். 

அன்னார் காலஞ்சென்ற கணநாதனின் ஓய்வுபெற்ற அதிகாரி, கமநல சேவைகள் திணைக்களம்) அன்பு மனைவியும், 

ஓ… அவரும் முதலே போய்ச் சேர்ந்திட்டாரே. என்ரை மனிசனும் சீமான். நேரத்தோடை கண்ணை மூடிட்டுது. என்னைப் போலைதான் அவளும் தனியக் கிடந்து அல்லாடியிருக்கிறாள். பாவம்! சரி. பிள்ளையளைப் பற்றிக் கிடக்குமெல்லோ. 

காலஞ்சென்ற பொன்னையா, தங்கம் ஆகியோரின் மகளும், காலஞ்சென்ற குமரையா, முத்துப்பிள்ளை ஆகியோரின் மருமகளும், குருபரன் (கனடா), நித்தியகுமாரி (ஜேர்மனி), சண்முகப்பிரியன் (ஜேர்மனி), காஞ்சனா (கனடா), சுலோசனா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

இப்ப மரண அறிவித்தல்களெல்லாம் இப்பிடித்தான். பிள்ளையள் இருக்கிற நாடுகளின்ரை பெயர்களைப் போட்டுத்தான் வருகுது. முந்தின காலத்திலை அவை என்னென்ன வேலை எண்டுதான் போடுவினம். இப்ப எல்லாப் பிள்ளையளும் வெளிநாடுகளிலை தானே. அவை செய்யிற வேலையளும் தெரியாது. எனக்கும் மூத்த இரண்டு மகன்மாரும் வெளியிலை. இளையவை மூண்டு பேரும் இங்கை. இங்கையெண்டால் ஒரு மகள் வவுனியாவிலை. மற்ற இரண்டும் யாழ்ப்பாணத்திலை. 

புவனேஸின்ரை கடைசி மகள் கொழும்பிலை இருக்கிறாள் போல. மற்றவை வெளிநாடுகளிலை. எல்லாரும் கலியாணம் கட்டியிருப்பினமோ? என்ரை பிள்ளையள் எல்லாம் சடங்கு முடிச்சிட்டுதுகள். அறிவித்தலை பார்ப்பம். 

சத்தியா (கனடா), சுந்தரேசன் (ஜேர்மனி), சித்திரா (ஜேர்மனி), கணேசகுமார் (கனடா), சத்தியதேவன் (கனடா) ஆகியோரின் மாமியாரும், 

அங்காலை பேரப்பிள்ளையள், ஒரு பூட்டப்பிள்ளையின்ரை பேரும் போட்டிருக்கு. எல்லாரும் கட்டி பிள்ளைகளுமிருக்கு. இளையவளின்ரை புருஷனும் கனடாவிலை போல கிடக்கு. மகள் மட்டும் கொழும்பிலை ஏன் நிக்கிறாள்? கனடா விசா கஷ்டந்தான். அல்லது வேறு ஏதும் காரணமோ? 

ஆருக்கு உதெல்லாம் தெரியும்? நாங்கள் சந்திச்சே எவ்வளவு காலம்! நாங்கள் கிட்டின சொந்தமெண்டில்லை. வீடுகள் கிட்ட. ஆனால் இரண்டு பேருக்குமே அந்த வீடுகள் சீதனமாயோ வேறு விதமாயோ கிடைக்கேல்லை. நாட்டு நிலைமையளாலை வீடுகளும் வேறை ஆட்களுக்குப் போயிட்டுது. 

முந்தி வீடுகளுக்குப் போவம். ஊர்க்காரர், உறவுக்காரரின்ரை கலியாண வீடு, செத்தவீடெண்டு போற இடங்களிலை சந்திச்சம். வயது போகப்போக பிள்ளையள் இதுகளுக்குப் போகத் தொடங்க ஒருதரையொருதர் எங்கை காணுறது? 

இவளை மட்டுமே? இருந்து யோசிச்சுப் பார்த்தால் நல்லாய்ப் பழகின எத்தினையோ பேரைப் பற்றி பிறகு தெரியாமல் போனதைவிட, இப்பிடி ஊர்க்காரர் உறவுக்காரரைப் பற்றியே ஒண்டும் தெரியாமல் போறது பெரிய கவலைதான். 

அந்த நாட்களிலை வேலையள் வீட்டுச்சுமையளுக்கை ஒருதரையும் நினைச்சுப் பார்க்க நேரமில்லாமலிருந்தது. இப்ப இதுகளை நினைச்சுப் பார்க்கிறதுதான் வேலையாய்ப் போச்சுது. ம்…. 

இதுவே ஒரு பெரிய கவலையாய்க் கிடக்குது. ஒவ்வொருதரோடை எப்பிடிப் பழகினம்! அவை எங்களோடை எவ்வளவு அன்பாயிருந்தினம். எவ்வளவு உதவியள் செய்தினம். அவையைப் பிரியேக்கை எவ்வளவு கவலைப் பட்டம். முதலிலை இடைக்கிடை கடிதமாவது போடுவம். பிறகு மெல்ல மெல்ல விட்டு, எல்லாம் மறந்து… இதுதான் வாழ்க்கை. 

புவனேஸுக்கு இடைக்கிடை கடிதமெழுதி வந்தனான். இவள் மட்டக்களப்பாலை ஹற்றனுக்கு போயிருந்தவள். ஒரு வருசத்துக்கு மேலை கடிதம் போடாமையிருந்தாள். பிறகு குழந்தை பிறந்ததாலை கடிதமெழுத நேரமில்லாமல் போச்செண்டு ஒரு கடிதம் போட்டாள். நானும் உடனுக்குடன் கடிதம் போடுறேல்லை. எல்லா வேலையளோடையும் நாட்செண்டுதான் கடிதம் எழுதுவன். 90ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டிலை பிரச்சினையள் கூடி கடிதப் போக்குவரத்தும் சரியாய் நடக்காமை தொடர்பே இல்லாமல் போச்சு. நாங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்தனாங்கள். அவள் எங்கையெண்டு தெரியாது. நிச்சயமாய் யாழ்ப்பாணத்திலை இல்லை. 

புவனேஸ் மற்றவை மாதிரியெண்டில்லை. நாங்கள் எவ்வளவு சினேகிதமாயிருந்தம். கட்டாயம் அவளின்ரை செத்த வீட்டுக்குப் போகவேணும். 

மகனுக்கோ மருமகளுக்கோ கூட்டிக்கொண்டு போக நேரமிருக்காது. வேலைக்குப் போறவை. அவை செத்தவீட்டை போறதெண்டால் வேலை நாளிலேயே மேலதிகாரியிட்டைச் சொல்லிப் போட்டு ஒருக்காப் போட்டு வந்திடுவினம். என்னைக் கூட்டிக் கொண்டு போறதெண்டால் அரைநாள் லீவும் போதாது. 

இப்ப செத்த வீட்டை போறதெண்டு கேட்டால் லீவெடுக்கிறது கஷ்டமெண்டுதான் சொல்லுவினம். எனக்கு அது மனசுக்குச் சங்கடமாயிருக்கும். அதுதான் நான் கேட்கப்போறேல்லை. எண்டாலும் புவனேஸின்ரை விசயத்திலை கேட்கத்தான் வேணும். 

புவனேஸைப் போய்ப் பார்க்காட்டால் மனம் ஆறாது. மருமகளிட்டைக் கேப்பம். அவள் பானுஜா நல்ல பிள்ளை. அவளின்ரை உத்தியோகம் அப்பிடி. கேட்க முதல் எப்ப செத்த வீடெண்டு பார்ப்பம். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

இப்பிடித்தான் போடுவினம். பிள்ளையள் ஒவ்வொரு திக்கிலை. எல்லாரும் வந்து சேர வேணுமே. இலங்கைக்கு வந்துசேரவேணுமே. இலங்கைக்கு வந்து சேர்ந்தாலும் பிறகு யாழ்ப்பாணம் வாறது பெரிய பாடாம். பாதுகாப்பு அனுமதியெண்ட ஒண்டு எடுக்க வேணுமாம். பிளேனிலை இடம் எடுக்கிறது அதைவிடக் கஷ்டமாம். இப்ப யாழ்ப்பாணத்துக்கு றோட்டாலை வரேலாது. ஒண்டில் பிளேனிலை அல்லது திருகோணமலைக்குப் போய் அங்கிருந்து கப்பலிலை வரவேணும். கப்பல் ஓடுமோ எண்டதே திருகோணமலைக்குப் போனாத்தான் தெரியும். அதாலை இப்பிடித் தேவைக்கு வாறவை பிளேனிலை தான் வாறது. 

எங்கடை வயிரமுத்து மாமவின்ரை மகள் செத்து ஒரு கிழமைக்குப் பிறகுதான் சவமெடுத்தவை. ஒரே ஒரு பெடிச்சி வெளியிலை. அந்த ஒரு பெட்டை வந்து சேர ஆறுநாள் செண்டுது. புவனேஸுக்கு ஒண்டு, இரண்டு, மூண்டு, நாலு, நாலு பிள்ளைகள் வெளியிலை. மருமக்கள், பேரப்பிள்ளையள் வராமல் தனிய பிள்ளையள் மட்டும் வந்தால்கூட எவ்வளவு நாள் செல்லுமோ? 

அதுக்கிடையில் ஒருக்கால் லீவெடுக்கச் சொல்லி மருமகளோடை போய் புவனேஸின்ரை சவத்திலையெண்டாலும் ஒருக்கால் முழிக்கவேணும். மனம் கிடந்து ஆத்துப் பறக்குது. 

மருமகள் குளிச்சிட்டு வாற மாதிரி சத்தம் கேட்குது. போய்ப் பார்ப்பம். டக்கெண்டு எழும்பவும் ஏலாது. இப்ப போய்ச் சொன்னால்தான் நாளைக்கு லீவெடுப்பா. 

“பிள்ளை, பிள்ளை;” 

“என்ன மாமி? என்ன வேணும்? தேத்தண்ணி ஏதும் போட்டுத் தரவோ?” 

“இல்லைப் பிள்ளை. இவள் புவனேஸ் செத்துப்போனாள் எண்டு பேப்பரிலை கிடக்குது.” 

“ஆர் புவனேஸ்?” 

“எங்கட ஊர், எட்டத்துச் சொந்தம்” 

“எட்டத்துச் சொந்தந்தானே. அடிக்கடி போய் செத்த வீடெண்டு கேட்டிட்டு போறது சரியில்லை. போன கிழமையும் தனுஜாவின்ரை மாமியின்ரை செத்த வீட்டுக்கு கேட்டிட்டு போனனான். சனி, ஞாயிறிலை போட்டு வருவம்.” 

“இல்லைப் பிள்ளை. புவனேஸ் என்னோடை நல்ல சினேகிதம் ஒருக்கால் நான் போகவேணும், நாளைக்கு லீவெடுத்தியளெண்டால் நல்லது.” 

“லீவோ?” 

ஒண்டும் சொல்லாமல் அறைக்குள்ள போட்டா. அவவுக்கும் வேலைக்குப் போற அவசரம். கந்தோரிலை போய் கேட்டுத்தானே லீவைப் பற்றியும் சொல்லமுடியும். பின்னேரம் வந்து சொல்லுவாதானே. நாள் போய் பத்திரிகையைப் பார்ப்போம். 

“அம்மா, ஆரம்மா செத்தது?” 

ஓ! இவ என்னோடை கதைக்காமல் மெல்ல இவனிட்டைச் சொல்லி விட்டிருக்கிறா. 

“புவனேஸெண்டு நீ சின்னப்பிள்ளையாய் இருக்கேக்கை மட்டக்களப்பிலையிருந்து வாறவ.” 

“எனக்கெண்டால் ஞாபகமில்லை. தூரத்துச் சொந்தமெண்டு சொல்லுறியள். வரத்துப் போக்கும் இல்லாதவ. நீங்கள் போட்டு வந்து கஷ்டப்படவெல்லே போறியள்.” 

“சின்னன் தொடங்கி ஒண்டாய் விளையாடி, ஒண்டாய் படிச்சனாங்களடா. அவ்வளவு ஒட்டு. கலியாணங் கட்டி ஒவ்வொரு திசையிலை போயிட்டம்.” 

“நான் அரைநாளெண்டாலும் லீவெடுக்கப் பார்க்கிறன். மாமி போக ஆசைப்படுறா. நல்லாய்ப் பழகின சினேகிதமாம். எப்ப செத்தவீடு மாமி?” மருமகள் வேலைக்கு வெளிக்கிட்டபடி கேட்கிறா. 

“அது தெரியேல்லைப் பிள்ளை. பிள்ளையள் வெளியிலை. பிறகுதான் அறிவிப்பினமாம்.” 

“அப்ப செத்தவீடு உடனை நடக்காது. நாளைக்கு லீவு கிடைக்காட்டி நாளையிண்டைக்கு எடுக்கிறன். காலமைதான் போகவேணும். பின்னேரம் போறது உங்களுக்கு ஒத்தாது.” 

அவளும் பாவம். ஆத்துப்பறந்து வேலை செய்யிறாள். என்னை வலு பக்குவமாய்த்தான் பார்க்கிறவ. நானும் முடிஞ்சளவு அவவுக்கோ மகனுக்கோ கஷ்டம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுறது. கதைச்சுக் கதைச்சுக் கொண்டே வேலைக்கு வெளிக்கிட்டுப் போயிட்டா. கட்டாயம் லீவெடுக்கப் பார்ப்பா. நானும் புவனேஸெண்டதிலைதான் ஒருக்கால் போக ஆசைப்படுகிறன். அதுக்கும் கொடுப்பினை இருக்கோ என்னவோ? 

அண்டைக்குக் கண்டிருந்தா கதைச்சு அவளைப் பற்றி அறிஞ்சிருக்கலாம். அது ஒரு ஆறேழு மாதங்களுக்கு முந்தி எண்டு நினைக்கிறேன். புவனேஸை ஒருநாள் தூரத்திலை கண்டனான். 

கிளினிக்கிலை மருந்தெடுக்க யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு மருமகள் ஆட்டோவிலை கூட்டிக்கொண்டு போனவ, மருந்தெடுத்துப் போட்டு வந்து ஆட்டோவுக்காக நிண்டனாங்கள். அப்ப றோட்டுக்கு மற்றப் பக்கத்தாலை ஓராள் போனதைப் பார்த்தன். 

ஆஸ்பத்திரிக்கு முன் றோட்டு தெரியும்தானே. நல்ல அகலம். இந்தப் பக்கத்தாலை ஒரு பக்கம் வாகனங்கள் போறதெண்டால் அந்தப் பக்கதாலை மற்றப் பக்கம் போறது. போன ஆள் அசப்பில புவனேஸ் மாதிரி இருக்க, நான் வடிவாய் கவனிச்சுப் பார்த்தன். அது புவனேஸ்தான். பக்கத்திலை கூடப் போனது அவளின்ரை தங்கச்சி ராஜேஸ் போலை இருந்தது. 

“புவனேஸ்… புவனேஸ்…” எண்டு என்னை மறந்து கூப்பிட்டன். 

“என்ன மாமி? யாரைக் கூப்பிடுகிறியள்?” 

மருமகள் கேட்ட விதத்திலை நான் அப்பிடி றோட்டிலை நிண்டு கூப்பிட்டது அவவுக்குப் பிடிக்கேல்லைப்போலை இருந்தது. ஆட்டோவும் வந்து எங்களுக்கு முன்னாலை நிண்டு புவனேஸை மறைச்சுப் போட்டுது. 

“கெதியாய் ஏறுங்கோ” 

ஆட்டோ சாரதியின்ரை அவசரத்துக்கு என்னாலை அதிலை ஏற முடியேல்லை. மெல்ல ஏறி உள்ளே இருந்து மற்றப் பக்கம் பார்த்தன். புவனேஸும் தங்கச்சியும் ஒரு ஆட்டோவிலை ஏறிக்கொண்டிருந்தினம். 

இனி அவளைப் பார்க்க வேணுமெண்டு மருமகளிட்டைச் சொன்னாலும், அவள் ஏறின ஆட்டோ அதுக்கிடையிலை போயிடும். அதனாலை நான் ஒண்டும் பேசேல்லை. ஆனால் அதை நினைக்க கினைக்க ஒரே கவலையாயிருக்கும். 

ஒருக்கால் அவளைச் சந்திச்சுக் கதைக்க ஆசையாயிருக்கும். ஆனால் அவள் எங்கையிருக்கிறாள் எண்டு தெரியேல்லை. 

மற்றவையைப் போலையில்லை. புவனேஸ் நினைவு தெரிஞ்ச காலந் தொடக்கம் பழகினவள். நான் எவ்வளவோ ஆசைப்பட்டும் அவளைச் சந்திக்க முடியேல்லை. இப்ப அவள் போய்ச் சேர்ந்திட்டாள். 

இண்டு முழுக்க அவளின்ரை நினைவுகள்தான். அந்த நினைவுகளோடை நேரம் போட்டுது. மருமகள் கூட வேலையாலை வந்தாச்சு. லீவெடுத்தாவோ என்னவோ? 

“மாமி உங்கடை புவனேஸ் வீட்டுக்காரர் போன் நம்பர் ஏதாவது போட்டிருக்கினமோ?” 

பிள்ளை அதே நினைவாய் வேலையாலை வந்த உடனே கேட்கிறா. 

“நான் அதைக் கவனிக்கேல்லைப் பிள்ளை.” 

நான் பத்திரிகையைப் பார்ப்பமெண்டு எழும்ப பேத்தி மறிச்சாள். “சினேகிதியின்ரை மரண அறிவித்தல்தானே.” 

பேத்தியும் என்னிலை வலு வாரப்பாடு. எனக்கு ஒத்தாசையாய் வேலையள் செய்து தாறவள். 

“அம்மா, ஒரு நம்பரையும் காணேல்லை.” 

“எனக்கு நாளைக்கு லீவெடுக்கேலாதெண்டு சொல்லிப் போட்டினம். அதுதான் போன் நம்பரிருந்தால் எப்ப செத்த வீடெண்டு கேட்டுப் பார்க்கலாம். நம்பரில்லாதபடியால் நாளைக்குப் பத்திரிகையைத்தான் பார்க்கவேணும். நேற்றுத்தான் செத்தபடியால் நாளைக்கு நடக்கிறது ஐமிச்சம்.” 

“சரி பிள்ளை, நாளைக்குப் பார்ப்பம்.” 

“நாளைக்குச் செத்த வீடெண்டால் இவரையாவது லீவெடுக்கச் சொல்லுவம். எப்பிடியும் உங்களைக் கூட்டிக்கொண்டு போவம்.” 

எனக்கு மனதுக்குள்ளை ஒரே உறுத்தலாய்க் கிடக்குது. பிள்ளைகளைக் கஷ்டப்படுத்துறனோ? பேசாமல் செத்த வீட்டை போகாமல் விடுவமோ? 

அதுக்கும் மனங்கேட்காதாம். இப்ப விட்டால் இனியொரு நாளும் புவனேஸைப் பார்க்கேலாது. 

பழைய நினைவுகள் ஒவ்வொண்டாய் வந்து ஒரே கவலையாய்க் கிடந்தது. அந்தக் காலத்திலை செத்த வீடென்றால் ஒப்பாரி வைச்சு அழுவினம். மனசிலை வாறதெல்லாம் ஒப்பாரியாய் வெளியிலை வரும். பிறகும் அந்தியேட்டி வரை அந்தி, சந்தி இரண்டு நேரமும் அதே மாதிரி எல்லாம் சொல்லி ஒப்பாரி வைப்பினம். அதாலை கவலை வெளியிலை போயிடும். இப்ப நான் புவனேஸைப் பற்றி இங்கை யாரிட்டைச் சொல்லலாம்? அதுதான் மனசுக்குள்ளை உவ்வளவு வேதனை. 

காலைப் பத்திரிகையிலை அவளின்ரை மரண அறிவித்தல் இல்லை. அடுத்தநாள் மருமகளோடை ஆட்டோவிலை போய் விலாசத்தைச் சொல்லி, விசாரிச்சு விசாரிச்சுப் போய்ச் சேர்ந்தம். 

செத்த வீட்டு அறிகுறி ஒண்டையும் காணேல்லை. நாளாகுமெண்டாப் போலை தோரணம் ஒண்டும் கட்டேல்லையோ? 

வாசலிலை வாழையெண்டாலும் கட்டியிருக்கலாம். 

ஆட்டோவாலை இறங்கி உள்ளுக்குப் போனால் முத்தத்திலை கிடந்த கதிரைகளிலை இருக்கச் சொல்லிச்சினம். 

“ஆர், காந்திமதி அக்காவோ? நல்லாய் மாறிப்போனியள். ஆளை மட்டுக்கட்ட ஏலேல்லை.” இராஜேஸ் ஒருத்திதான் என்னை அடையாளங்காண இருந்தாள். 

“உங்களைக் கண்டுபிடிக்கவும் கஷ்டமாய்த்தான் கிடக்கு. அண்டைக்கொரு நாள் புவனேஸையும் உங்களையும் ஆஸ்பத்திரிக்கு முன்னாலை கண்டனான். நீங்கள் றோட்டுக்கு மற்றப் பக்கம் போய்க்கொண்டிருந்ததிலை ஆட்களை அடையாளங் கண்டுபிடிக்க கஷ்டமாய்ப் போச்சு. அதுக்கிடையிலை நீங்கள் ஆட்டோவிலை ஏறீட்டீங்கள்.” 

“நாங்கள் கவனிக்கேல்லை. கண்டிருந்தால் நிண்டிருப்பம். புவனேஸக்கா உங்களைப் பற்றி நெடுகக் கதைக்கிறவ. உங்களைக் காணவேணும் எண்டு சொல்லுறவ. நீங்கள் எங்கை இருக்கிறியள் எண்டு தெரியேல்லை. மூளாய்ப் பக்கமும் போறது குறைவு. வீடும் வித்துப் போட்டந்தானே.” 

“நாங்களும் அப்பிடித்தான். நான் கள்ளியங்காட்டிலை மகன் வீட்டிலை இருக்கிறன். அவன் முடிச்சது அங்கத்தையப் பிள்ளையை. இவதான் என்ரை மருமகள் பானுஜா. புவனேஸும் எங்கையிருக்கிறா எண்டு தெரியாததாலைதான் எனக்கும் சந்திக்கேலாமல் போட்டுது.” 

“இது என்ரை வீடு. பிள்ளையள் ஒருதரும் இங்கை இல்லைத்தானே. அவவுக்கு யாழ்ப்பாணத்தை விட்டுப் போக மனமில்லை. என்னோடை இருந்தவ.” 

“எனக்கு புவனேஸோடை கதைக்க கொடுப்பினை இல்லாமல் போச்சு. அவளைச் சந்திச்சே எவ்வளவோ காலம். நாங்கள் இப்பிடிப் பிரிவமெண்டு அந்தக் காலத்திலை நினைச்சிருப்பமே?” 

எனக்கு மேலே பேசமுடியாமல் கண்கலங்கி தொண்டையை அடைத்தது. 

“அக்கா இப்பிடிப் போவ எண்டு நாங்களும் நினைக்கேல்லை. நல்லாயிருந்தவ. சின்னச் சின்ன வருத்தங்கள், கை கால் உழைவு எண்டது போலை வருத்தங்களிலிருந்தது. காய்ச்சலெண்டு படுத்தவ” கண்ணீர் வடிய மூக்கை உறிஞ்சிக் கொண்டு இராஜேஸ் தொடர்ந்து சொன்னாள்.

“மருந்தெடுத்தும் ஐந்து நாளாய் காய்ச்சல் விடேல்லை. சாப்பிட விருப்பமில்லை. தண்ணிச் சாப்பாடுதான். சாக முதல்நாள் காலமை கனடாவிலை இருக்கிற பிள்ளையோடை போனிலை கதைச்சவ. மத்தியானம் ஜேர்மனியில் இருக்கிறவையோட கதைச்சவ. அடுத்தநாள் காலமை எழும்பேலாமல் போட்டுது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனம். அவையும் முடிஞ்சவரை ஏதேதோ செய்தினம். அந்திக்கிடையிலை ஆள் முடிஞ்சுது.” 

கேட்க கேட்க எனக்கு நெஞ்சுக்குள்ளை என்னவோ செய்திது. 

இராஜேஸ் கதைத்துக் கொண்டிருந்தாள். புவனேஸடிக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போறதாய்க் காணேல்லை. ஒருவேளை செத்தவீடு முடிஞ்சுதோ? கேட்பம். 

“எப்ப செத்தவீடு?” 

“நாளைக்குக் காலமை.” 

அப்பிடியெண்டா அதுக்கான ஆயத்தமொண்டையும் காணேல்லையே எண்டொரு கேள்வி மனசைக் குடையுது. பின்னேரம் செய்யக்கூடும். ஆனால் என்னை ஏன் கூட்டிக்கொண்டு போகேல்லை? இவையோட கதை பறையவே நான் வந்தனான்? அவளைப் பார்க்கவல்லோ? இருந்து கதைக்க நேரம் போகுது. பிள்ளையும் அரைநாள் லீவிலை வந்தவள். நேரையே கேட்பம். 

“புவனேஸை ஒருக்கால் பார்க்கவேணுமெண்டுதான் வந்தனான்.” 

“உங்களுக்கு விசயந் தெரியாதே? பிள்ளையள் எல்லாரும் யாழ்ப்பாணம் வாறது கஷ்டம். அதாலை கொழும்புக்கு பிரேதத்தைக் கொண்டுபோய்ச் செத்தவீடு நடத்திறது சுகமெண்டு அதுக்கான ஒழுங்குகள் செய்து காலமை பிளேனிலை அனுப்பிப் போட்டம். நாளைக்கு மரண அறிவித்தல் வரும்.” 

– ஜனவரி 2009, மல்லிகை.

– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *