மங்காத்தாவின் பார்வை
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 63
சாதம் நிறைந்த தட்டு “நங்” என்று அவன் முன்னால் வைக்கப்பட்டது. “இந்தா துன்னுட்டு சிவனேன்னு கிட”
அலுத்து சொல்லிவிட்டு குடிசையின் பின் பக்கமாக சென்றாள் மங்காத்தா.
சாலையில் நடமாடிக்கொண்டிருக்கும் கார், பஸ், மோட்டார் சைக்கிள் இவைகளை கை விரலை விரித்து எண்ணிக்கொண்டிருந்த சுப்பன் முதலில் தன் முன் விழுந்த தட்டை கவனிக்கவில்லை. சாலைகளின் பரபரப்பில் கவனமாய் இருந்தான்.
சற்று நேரத்தில் அதுவும் சலிப்பாகி விட தலையை திருப்பினான். தட்டில் சோறு காய்ந்து இருந்தது.
வெறுப்பாய் பார்த்தான். அம்மோவ், அம்மோவ்..கத்தலில் பின் புறம் விறகு செதுக்கி கொண்டிருந்த மங்காத்தா விறு விறுவென முன் புறம் வந்தாள்.
எலே மூதி ஏங் கூப்பாடு போட்டிகிட்டிருக்கே.
இன்னா சோறு போட்டு வச்சிருக்கே? காஞ்ச கருவாடு மாதிரி இருக்கு.
அட படுபாவி சோத்தை வச்சுட்டு இம்மா நேரம் கழிச்சு பார்த்தா அப்படியேவாடா இருக்கும், கூறு கெட்டவனே உனக்கு சோத்தை வச்சுட்டு நாலு கட்டு சுமை எடுத்துட்டேன். இவ்வளவு நேரம் என்னடா பண்ணிகிட்டிருந்தே?
அம்மாவின் கத்தல் இவனுக்கு உண்மையை சொன்னாலும், க்கும்..க்கும்..கணைத்து கோபத்தை காண்பித்தபடி காய்ந்த சோற்றை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டான்.
சாதம் காய்ந்திருந்தாலும் எண்ணெய் ஊற்றி தாளித்திருப்பாள் போலிருக்கிறது, நல்ல மணமாய் இருந்தது.
அம்மாவ்,அம்மாவ், சாப்பிட்டு கையை அப்படியே சட்டைப்பையில் துடைத்து கொண்டான்.
அயே..சட்டைய எல்லாம் நாசம் பண்ணிட்டே, இந்தாள இருக்கற தண்ணிய எடுத்து வாயை துடைச்சுக்க துப்பில்லாத பைய..
பாத்ரூம்..ஒற்றை விரலை தூக்கி காட்டினான்.
உனக்கு வேலை என்ன? சத்தமாய் முணங்கினாலும் குனிந்து அவனை தூக்கி இடுப்பில் வைத்தவள் நடக்க முடியாமல் தடுமாறி பக்கத்து புதரை நோக்கி சென்றாள்.
மறுபடியும் அவனை தூக்கி கொண்டு வந்து நார்கட்டிலில் உட்கார வைத்தாள். நீ இங்கனயே இரு, சும்மா சும்மா கீழே உட்கார்ந்துட்டு அம்மாவால உன்னை தூக்கிட்டு போக முடியலை ராசா..
போம்மா, சிணுங்கினாலும் அம்மாவின் முந்தானையை விட மனசில்லாமல் படுத்தபடி கிடந்தான்.
விடுடா அம்மாவுக்கு வேலை கிடக்கு, உன் அப்பன் வந்துடுவான், தம்பியும், தங்கச்சி பாப்பாவும் ஸ்கூலு விட்டு வந்துடுவாங்க அவங்களுக்கு பசிக்குமில்லை,
அவனை அப்படியே கிடத்தி விட்டு குடிசைக்குள் போய் அடுப்பின் முன் உட்கார்ந்தாள்.
இழவத்தவளுக்கு கேசு வெச்சு சமையல் பண்ண வழியில்லை, ரேசனுல சீமெண்னையாவது வாங்கியாந்து வச்சுக்கலாமுன்னு பார்த்தா அதுக்கும் வழிய காணோம். தனக்குள் முணங்கி கொண்டாள்.
ராசாத்தி அக்கா கேட்டது இன்னும் மனசில் உறுத்திக்கொண்டே இருந்தது.
என்னாடி உன் பையன் இனி நடக்கவே முடியாதா? ஒண்ணுக்கு, இரண்டுக்கு எல்லாமே நீதான் தூக்கிட்டு போகணுமா? டவுனுக்கு போயி டாக்டரை பார்க்கறதா சொல்லிகிட்டு இருந்தே. உன் கெட்ட காலமோ, உன் வூட்டுக்காரன் கெட்ட காலமோ பையனை முடமாக்கி படுக்க வச்சிடுச்சு.
மூத்தவனா பொறந்து பத்து வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தா காமராசு காமராசு, இம்புட்டு நல்லவனா இருக்க கூடாதுடா சாமி, அதுக்கு கடவுள் உனக்கு
கொடுத்த தண்டனை போதும்.. நினைக்க நினைக்க அவள் முன் எரிந்து கொண்டிருந்த நெருப்பை போலவே அவள் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.
விளையாட்டாய் இரண்டு வருடம் ஓடி விட்டது. காசு பணம் வச்சு, நாட்டமையா திரிஞ்சுகிட்டவன் குடும்பத்து குசும்பன் பண்ணுன வேலை என் பையனுக்கு எந்திரிச்சு நடமாடமுடியாதபடி பண்ணிடுச்சே.. மெல்ல மெல்ல அழுகை ஆலாபனையாய் ராகம் போட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
நான் பெத்த ராசா.. உன்னை ராசாவா வளர்த்தேனே..
என்னாடி பிலாக்கணமா பாடிகிட்டு இருக்கே, சொல்லியபடி மங்காத்தாவின் வீட்டுக்காரன் உள்ளே வந்தான்.
ஆமா பொழப்பத்தவன் கிடப்பு நாசமா போகும்னு சும்மாவா சொன்னாக, அந்த தறுதலை பையனுக்காக இவன கடவுள் இப்படி தண்டிச்சு, கிடக்கானே.
அதுக்கு என்னாடி இப்ப பண்ண முடியும்?
அந்த பைய அப்படியே கிடக்கட்டும்னு இருந்திருந்தானா, நம்ம பையனுக்கு இப்படி வந்திருக்குமா?
அதுக்காக இந்த கடவுள் இப்படி தண்டிச்சு போட்டானே, நம்மள மாதிரி ஏழைங்க என்ன பண்ணுவாங்க.
எனக்கு பசிக்குது, ஏதாவது செஞ்சிருக்கியா இல்லையா, அந்த மாணிக்கம் பய வரான்னான், சந்தைக்கு போயிட்டு வந்திடுதோம்.
பார்த்து இருய்யா, அந்தாளுக்கு, ஊரு முழுக்க வைப்பாட்டின்னு பேசிக்கறானுவ. ஏதோ குடியோட இருக்கியேன்னு அவன் கூட சேர்ந்து வேண்டாததை கத்துக்காதே அவங்கிட்ட சூதானமா இருந்து பழகு..
ஏண்டி அவனவன் எப்படி இருந்தா நமக்கென்ன, இரண்டு உருப்படிய நல்ல விலைக்கு வித்து தாறேன்னு கூட்டிட்டு போறான், பத்து பதினைஞ்சுக்கு உருப்படி போச்சுன்னா இந்த பயலை டவுனு டாக்டருகிட்ட காட்டலாமில்லை.
எங்காத்தா மகமாயி கண்ணை திறந்தா போதும், என் பையன் முன்ன மாதிரி ஓடி ஆடி நடக்கோனும், மகமாயி ஆத்தா உன்னைத்தாம்மா மலை மாதிரி நம்பியிருக்கேன்.
யாரும்மா வூட்டுல? ஏ மங்காத்தா மங்காத்தா..
பூமணி அக்கா கூப்பிடுது, இந்தா தட்டுல சோத்தை போட்டு குழமபை ஊத்தி நீ சாப்பிடு, நா போயி அந்தக்காவை பாத்திட்டு வாரேன்
வெளியே வந்தவள் பூமணி அக்காவுடன் அறிமுகமில்லாத பெண் ஒருத்தி நிற்பதை கண்டதும் தயங்கினாள்.
மங்காத்தா இவக டவுனுல இருந்து வந்திருக்காக, உன் பையனை பத்தி விசாரிக்க வந்திருக்காக, உன் பேரை சொல்லி கேட்டாக, அதான் இங்க இட்டாந்தேன்.
பையனை விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் பரபரப்பானாள், வாங்க, வாங்க குடிசைக்குள் அழைத்துக்கொண்டே ஏய்யா, ஏய்யா, தன் கணவனை வெளிய வாய்யா,
என்னாத்துக்கு கூவுறேம் சாப்பிட்ட கையோடு வெளியே வந்தவன், புதிய முகம் ஒன்று நிற்பதை பார்த்ததும் என்ன செய்வது ஒரு கணம் திகைத்தவன் சட்டென அங்கிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து கையை கழுவி தன் லுங்கியில் துடைத்து கொண்டான்.
வலது பக்க மூலையில் கயித்து கட்டிலில் படுத்திருந்த காமராசு கண்ணை விழித்து வந்தவர்களை பார்த்தபடி வந்த பெண்ணையே பார்த்து கொண்டிருந்தான்.
உள்ளே நுழைய போன அந்த பெண் வலது புறம் இவளையே பார்த்து கொண்டிருந்த காமராசுவை பார்த்தவுடன் உள்ளே போகும் முடிவை மாற்றிக்கொண்டு காமராசுவின் அருகில் போய் நின்று கொண்டாள்.
இந்த பையன் தானா? ஆமாங்க, சொல்லியபடி வேகமாக அவள் அருகில் வந்து நின்றாள் மங்காத்தா.
இந்த பயதானுங்க, அந்த பையனுக்காக இவன் இப்படி கிடக்கான்.
நான் வில்லேஜ் ஆபிசரா இருக்கேன், உங்க பையனை விசாரிக்க சொல்லி கலெக்டரு ஆபிசுல இருந்து சொல்லிவிட்டிருக்காங்க, என்ன நடந்துச்சு, ஏன் இப்படி ஆச்சு இந்த பையனுக்கு?
அதை ஏன் கேக்கற தாயி, புழப்பத்த பயலு ஒருத்தன் திருட்டு மாங்கா பறிக்க தோட்டத்துக்குள்ள புகுந்து மாட்டிகிட்டானாம், அந்த வழியா போன என்ற பையனை கூப்பிட்டு கொஞ்சம் இறக்கி விடு, இல்லைன்னா தோட்டத்துக்காரன் வந்தா எங்கப்பன் பேரு நாறிடும்னு சொல்லியிருப்பன் போலிருக்கு.
இந்த பைய நல்லா மரமேற பையந்தான், வேகமா மரமேறி அவனை இறக்கி விட்டிருக்கான், அந்த நாதாறி இறங்கனவன் அங்கிருந்து ஓடிப்போயிட்டான். இந்த பய இறங்க இறங்க தோட்டத்துக்காரன் ஒடி வந்துருக்கான், இவன் பயத்துல அங்கிருந்து குதிச்சிருக்கான்.
குதிக்கும்போது காலு வழுக்க அப்படியே மல்லாக்க விழுந்து கிடந்தான், அந்த தோட்டக்கார பையந்தான் இவனை தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஏற்பாடு பண்ணி கொடுத்தான். அவன் மனுசன் தாயி, அவந்தான் இவனுக இரண்டு பேரும் பேசிக்கறதையும், என்ர மகன் மரமேறி அவனை இறக்கினதையும் பார்த்திருக்கான்.
அவுகதான் கலெக்டரு ஆபிசுக்கு எங்க கஷ்டத்தை சொல்லி லெட்டர் கொடுக்க சொன்னாக.
இவள் சொல்வதை மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண், நீங்க சொன்னதை எல்லாம் கலெக்டரு ஆபிசுல சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்கறேன்.
சீக்கிரமா செய்யி தாயி, உனக்கு ரொம்ப புண்ணியமா போகும், கை எடுத்து கும்பிட்டு அழுதாள்.
இவள் அழுகையை பார்க்க கூடாது என்பதனாலோ என்னவோ அந்த பெண் வேகவேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
உங்க பையனுக்கு சின்ன சர்ஜரி செய்யணும்மா, செஞ்சா சரியாயிடும். பையனை மேலும் கீழும் புரட்டி படுக்க வைத்து கூட வந்திருந்த ஏழெட்டு மருத்துவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கி சொன்ன தலைமை மருத்துவர் திரும்பி இவளிடம் இந்த தகவலை சொன்னார்.
ஐயா எது வேணா செய்யுங்க ஐயா, என் புள்ளை எந்திரிச்சு நடந்தா போதும்.
இன்னும் இரண்டு நாள் பெட்டுல இருக்கட்டும், எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்துட்டு எப்ப சர்ஜரி பண்ணணும்னு சொல்றோம். டாக்டர் குழு அங்கிருந்து நகர்ந்தது.
ஏ மங்காத்தா நான் ஊருக்கு போறேன், நீ இவன் கூட இருந்து எல்லாத்தையும் முடிச்சுட்டு வா.
அவங்க ஸ்கோலுக்கு போறதுக்கு முன்னாடி சோத்தை ஆக்கி போட்டு அனுப்பு, புள்ளைங்க பசில வாடிடும், புரிஞ்சுதா? நீ பாட்டுக்கு எங்ஙனயாச்சும் குடிச்சு மயங்கி கிடக்காத,
சரி புள்ளை, நா வாறேன்.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடியிருக்க, விடியல் காலையில் டவுனில் இருந்து வந்து நின்ற பேருந்தை விட்டு தன் மகனை மெல்ல இறங்க வைத்து தாங்கி தாங்கி நடத்தி கூட்டி சென்றாள் மங்காத்தா.
அப்படி போகையிலேயே அக்கம் பக்கம் அவள் பார்த்த பார்வை “இனி என் பையன் இதே ஊரில நடந்து போவான் பாரு” என்பது போல இருந்தது. ஊரின் பார்வை கூட “அட எப்படியோ பையனை நடக்க வச்சுட்டாளே” என்பது போலத்தான் இருந்தது.
![]() |
பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டாவது கொள்ளி
மா.வீ.தியாகராசன்
September 15, 2026
ஊசலாடும் உறவு
இரா.துரைமாணிக்கம்
September 15, 2026
ஆட்டோ ஆனந்தி
இரா.கலைச்செல்வி
September 15, 2026
