பெயர் மாற்றம்
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 12
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை வெயில் கதகதப்பாக இருக்க அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோளாவில் கிராமம் சுறு சுறுப்பாக இருந்தது. கிராமத்தின் மத்தியில் இருந்தது மகாலிங்கம் மாஸ்டரின் வீடு.
மகாலிங்கம் மாஸ்டர் ஊரில் தலைமை ஆசிரியர். அதே நேரம் பல நிலபுலன்களுக்கு சொந்தக்காரர். வயல்காணிகள் ஏக்கர் கணக்கில் அவருக்கு பல இடங்களில் இருந்தன.
தனது காணிகளை உழுது விதைப்பதற்கு என்று அவர் சொந்தமாக உழவு இயந்திரம் வைத்திருக்கிறார். அதற்கு அடிக்கடி ஏதாவது ஒன்று நடந்துவிடும். நேற்று அவர் வயலில் விதைப்பு நடந்தது.அந்த நேரம் அதன் முன் சில்லின் அச்சு பழுதடைந்ததால் அதை திருத்தம் செய்ய ஆலையடிவேம்பு ஆறுமுகம் கராச்சில் ட்ரைவர் மாணிக்கம் கொண்டு கொடுத்திருந்தான்.
அது சரிசெய்யப்பட்டதா என்று பார்க்க மகாலிங்கம் புறப்பட்டார். தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆறுமுகம் கராச்சிக்கு செல்ல ஆயத்தமானார். அதற்குள் மனைவி காலைச் சாப்பாட்டுக்கு புட்டும். சம்பலும், முட்டை சொதியும் தயார் பண்ணிவிட்டு கணவரை கூப்பிட்டார்.
“என்னங்க சாப்பாடு தாயார் பண்ணிட்டேன் புட்டும் சொதியும். சம்பலும் இருக்கு வாங்க சாப்பிட்டுவிட்டு போங்க” என்றாள்
“இல்ல சரசு நான் வந்து சாப்பிடுறன். ஆறுமுகத்தின் கராச்சில் நம்மட மெசின் திருத்தக் கொடுத்திருக்கு அது முடிந்திருந்தால் வயலுக்கு விதைப்புக்கு அனுப்பவேண்டும். நேற்றைய குறை இருக்கிறது. இன்றைக்கு விதைப்பை முடிக்கவேண்டும். மாணிக்கமும் அங்கு வந்திருப்பான். அவனை அனுப்பிவிட்டு நான் மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போக வேண்டும். எல்லாம் சரியா இருந்தால் மாணிக்கத்தை வயலுக்கு அனுப்பி விட்டு நான் அக்கரைப்பற்று மீன் சந்தைக்கு சென்று மீன் வாங்கிட்டு வாறன் சரியா”
“சரிங்க சந்தையில் மறக்காமல் ஏதும் காய்கறிகளும், கீரையும் வாங்கிடுங்க அப்படியே பச்சை கொச்சிக்காய் அரைகிலோ வாங்கிடுங்க.”
“சரி சரி வாங்கிட்டு வாறன்” என்ற மகாலிங்கம் மாஸ்டர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
ஆறுமுகத்தின் மெசின் கராச்சில் எப்பொழுதும் ஒரே கூட்டமாக இருக்கும். உழவு இயந்திர திருத்தவேலைகளுக்காக பலரும் காலையிலே அங்கு கூடி விடுவார்கள். இன்று அப்படிதான் இருந்தது. மகாலிங்கம் மாஸ்டர் தனது மோட்டார் சைக்களை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு திரும்பினார். பக்கத்தில் அவரது ட்ரைவர் மாணிக்கம் நின்று கொண்டு இருந்தான்.
மாஸ்டர் பேசினார்.
“என்ன மாணிக்கம் நம்மட மெசின் வால்டிங் பண்ணி முடிஞ்சுதா?”
“இல்லைங்கையா அதுதான் பண்ணிட்டு இருக்கிறார் ஆறுமுகம் அண்ணா. நேற்று மத்தியானத்திற்கு மேல அவர் வேலை செய்யவில்லையாம். ஏதோ ஒரு அவசர அலுவலாக போகவேண்டி வந்துவிட்டதாம். இப்ப காலையில் வந்து நமது வேலைதான் முதலாவதாக பார்க்கிறார்.”
“அப்படியா என்ன அவசரவேலை. நமது அவரசம் ஆறுமுகத்திற்கு தெரிய மாட்டாது போல”
“ஆ… அவருக்கு தெரியும் நேற்று விதைப்பு குறையில் கிடக்கிறது என்று. ஆனால் ஏதோ தங்கட சொந்தத்துக்குள்ள ஒரு பிரச்சினையாம். அதுதான் நேற்று அரைத்தியாலத்தோட போய்ட்டாராம். உங்களிடமும் பேச வேண்டும் என்றார்.” என்று சொன்னான் மாணிக்கம்.
“அப்படியா மாணிக்கம் சரி. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்து விடும்தானே. வயலுக்குள்ள வெள்ளாமக்காரனும், வேலைக்கு இரண்டு பேரும் போய்ட்டாங்க நீ போனால் விதைப்பை தொடங்க வேண்டியதுதான்” என்று சொல்லும்போதே ஆறுமுகம் மாஸ்டரை கண்டுகொண்டான்.
“வாங்க ஐயா நான் குனிந்து கொண்டு வால்டிங் பண்ணியதால் நீங்க வந்ததை காணவில்லை. இன்னும் ஒரு கால்மணி நேரத்தில் முடிந்து விடும். நேற்று செய்ய முடியவில்லை. அது வந்து”
“பரவாயில்லை ஆறுமுகம் மாணிக்கம் சொன்னான். ஏதோ பிரச்சினை என்று.”
“ஆமாம் ஐயா ஒரு பிரச்சினையாக போயிற்று. அது பற்றி நான் வேலையை முடித்துவிட்டு பேசுறேன்” என்றான் ஆறுமுகம்.
“ஓம் கண்டிப்பாக பேசுவோம். முதலில் மாணிக்கத்தை வயலுக்கு அனுப்பிடுவோம்”
“சரி ஐயா இந்தா நான் முடிக்கிறேன்” என்ற ஆறுமுகம் வேலையை தொடர்ந்தான்.
வாடையால இருண்டு கொண்டு வருகிறது. மழைக்கான அறிகுறிகள் இருக்கும்போல. மழை பெய்தால் விதைப்பு சரியாக வராது. மகாலிங்கம் மாஸ்டரும் வானத்தை பார்க்க தவறவில்லை. மாணிக்கத்திடம் கேட்டார்.
“என்ன மாணிக்கம் மழை பெயும்போல இருக்கு.”
“இல்ல ஐயா காற்று இருக்குதல்ல. அது கலைச்சுப்போடும். நீங்க ஒன்றும் யோசியாதைங்கோ.
“மற்றது டீசலும் அடிக்கவேணும்”
“ஓம் ஓம் நான் அக்கரைப்பற்று மீன் சந்தைக்கு போயிட்டு முன்னால் இருக்கிற பெட்ரோல் நிலையத்திற்கு வாறன் நீ முடிஞ்சதும் அங்கே வந்து விடு டீசல் அடிசுக்கொண்டு போயிடலாம். சரி நான் முந்துறேன்” என்றவர் கிளம்பி அக்கரைப்பற்று சந்தைக்கு சென்றார்.
அக்கரைப்பற்று மீன் சந்தை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். தமிழர்களும். இஸ்லாமியர்களும் அதிகமாக வாழும் பிரதேசம் என்ற படியால் எப்பொழுதும் அதிக கூட்டம் இருக்கும். இன்றும் அதிக கூட்டம். தென்பகுதி கடற்கரை கரைவலை மீன். ஒலுவில் துறைமுக மீன். திருக்கோவில் பிரதேச கடல், களப்பு, ஆற்று மீன் என்று பலபக்கத்தாலும் மீன் வந்து சேரும் மீன் சந்தைதான் அக்கரைப்பற்று மீன் சந்தை.மகாலிங்கத்தாரை எல்லா மீன் வியாபாரிகளுக்கும் தெரியும். அவர் தலைமை ஆசிரியர் மட்டுமல்ல. சமூக ஆர்வலர். செயற்பாட்டாளர். பலமுறை இங்கு தமிழ்.
முஸ்லிம் முறுகல் நிலை ஏற்பட்டபோதெல்லாம் இவர் இருபக்க ஊர் தலைவர்களையும் ஒன்றிணைத்துப் பேசி பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க பாடு பட்டவர். அதனால் மகாலிங்கம் மாஸ்டரை அநேகம்பேருக்கு நன்றாக தெரியும். இவரை கண்டதும் பலரும் “வாங்க ஐயா, வாங்க மாஸ்டர்” என்று அழைத்தார்கள்.
அவரும் சிரித்தமுகத்துடன் எல்லோருக்கும் தலையாட்டிவிட்டு. முகைதீன் பக்கம் வந்தார். அங்கு நல்ல கருங்கண்ணி பாரை மீன் வெட்டிக்கொண்டு இருந்தார் மீன்காரர். அதை பார்த்ததும் மகாலிங்கத் தாருக்கு வாங்க வேண்டும் என்ற விருப்பம் வந்துவிட்டது. அத்தோடு வெட்டுமீன் என்றால் மனைவி சரசு மினக் கெடாமல் கெதியா சமைத்து விடுவாள் என்று எண்ணிக்கொண்டு முகைதீன் நானாவிடம் சொன்னார்
“என்ன முகைதீன் நல்ல மீனா”
“ஐயா அருமையானமீன். தூண்டில் மீன் இல்ல, இது கரைவலைக்குள் அகப்பட்டது நல்லா இருக்கும்.”
“அப்படியா எனக்கு இரண்டு கிலோ வெட்டி துண்டு போட்டு தா. அப்படியே அந்த கீரி மீனிலும் இரண்டு கிலோ போடு முகைதீன்” என்றார்.
முகைதீனும் அவர் கேட்டபடி எல்லாம் பக்காவாக செய்து பையில் போட்டுக்கொடுத்தான்.
“எவ்வளவு தரவேணும் காசு முகைதீன்”
“பாரைக்கு ஒரு ஆயிரத்தி எண்ணூறு. கீரிக்கு அறுநூறு மொத்தம் இரண்டாயிரத்தி நாநூறு”
“சரி இந்தா பணம் வாங்கிக்கொள் “என்று கொடுத்துவிட்டு மீன் சந்தையை விட்டு வெளியே வந்தார்.
முன்னுக்கு இருந்த காய்கறிகளில் கத்தரிக்காய், வெண்டிக்காய், தட்டை அவரை. என்று ஒவ்வொன்றிலும் ஒரு கிலோப்படி வாங்கிக் கொண்டு, சரசு சொன்ன பச்சை மிளகாயையும், கீரையும் வாங்கிக்கொண்டு எதிர்ப்பக்கம் சற்று தொலைவில் இருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றார். அங்கே மாணிக்கம் மெசினோடு நின்றுகொண்டு இருந்தான். அவனைக்கண்டதும் மகிழ்ச்சிப்பட்ட மகாலிங்க மாஸ்டர் அவனிடம் மெசினுக்கு டீசல் அடிக்க பணம் கொடுத்துவிட்டு சொன்னார்
“மாணிக்கம் நீ சொன்ன மாதிரி மழையும் பெய்யாது. விதைப்பை நல்லபடி விதைத்துப் போடலாம். நீ டீசல் நிரப்பிக்கொண்டு கிளம்பு. நான் போகும் வழியில் ஆறுமுகத்தின் கராச்சில் அவரின் கூலியை கொடுத்துவிட்டு, வீட்டுக்கு போய் இந்த சாமான்களை கொடுக்கவேண்டும். நேரத்திற்கு கொடுத்தால்தான் சமையல் நேரத்திற்கே முடியும். சரியோ. அப்ப நான் வரட்டே”
“சரி ஐயா நீங்க போங்க. நான் டீசல் அடித்து முடிய நேரே வயலுக்கு போகிறேன்.” என்றான். மகாலிங்கம் மாஸ்டர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு விட்டார்.
அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுர வளைவில் இடப்பக்கம் திரும்பி சாகாமம் வீதியால் ஆலையடிவேம்பு செல்லவேண்டும் அப்படி வந்துகொண்டு இருக்கும்போது எதிரே தென்பட்ட பத்திரிகை கடையில் வீரகேசரி பத்திரிகை ஒன்றும் வாங்கிவிட்டார். பின் தொடர்ந்து பயணித்து. ஆலையடிவேம்பு ஆறுமுகம் கராச்சில் நிறுத்தினார். அவரைக்கண்டதும் ஆறுமுகம் வேலையை போட்டு விட்டு வந்தான்.
“ஐயா வாங்க மெசின் வேலை முடிஞ்சு மாணிக்கம் அப்போதே போயிட்டான்”
“ஓம் ஆறுமுகம் மாணிக்கம் டீசல் நிரப்பிக்கொண்டு நேரே வயலுக்கு போயிடுவான் நான் பிந்தி மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு போகவேண்டும். உங்களது கூலி எவ்வளவு தரவேண்டும். சொன்னால் வீட்டுக்கு போய் கொண்டுவாரன்”
”ஐயா கூலி பிறகு எடுக்கலாம் ஐயா நான் உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும்”
“மாணிக்கம் சொன்னான் உனக்கு ஏதோ பிரச்சினையாம் அதுதான் நேற்று நீ வேலைசெயாமல் போனாயாம் என்ன பிரச்சினை ஆறுமுகம்”
“ஐயா எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. எங்க குடும்பத்திலதான் அதாவது எனது சொந்தக்கார பிள்ளையொன்று நேற்று மதம் மாறிவிட்டது. வீட்டில் ஒரே களேபரமாக போய்விட்டது.”
“என்ன மதம் மாறி விட்டதா? சும்மா பேச்சுக்கு சொன்னால் மதம் மாறியது என்ற அர்த்தமா?”
“இல்ல ஐயா அந்த பிள்ளை கோளாவில் ஒன்றை சேர்ந்த எனது ஒன்று விட்ட சகோதரியின் மகள். மகேஸ்வரி என்று பெயர். பத்தாம் வகுப்பு வரை படிசிட்டு இருத்தவ. குடும்பத்தில் உள்ள கஷ்டம் காரணமாக முஸ்லிம் கடை ஒன்றில் வேலைக்கு சென்றுவந்தா.”
“பல தமிழ் பெண் பிள்ளைகள் முஸ்லிம் கடைகளில் வேலை செய்வதாகவும் அவர்கள் பிழையான முறையில் வழி நடத்தப்படுகின்றார்கள் என்றும் அண்மைக்காலங்களில் பத்திரிகைகளில் செய்தி வருகின்றது ஆறுமுகம்”
“ஓம் ஐயா நீங்க சொல்றது சரிதான். இங்கிருந்து காத்தான்குடி வரை எமது பிள்ளைகள் சென்று வருகிறார்கள். இந்த மகேஸ்வரியும் அவர்களில் ஒருவள்.அவள் ஆறு மாசமாக அங்கு கடை வேலைக்கு போகிறாள். அவளின் நடவடிக்கை சரியில்லை என்று அவளின் அம்மாக்காரி எங்கட வீட்டில் வந்து சொல்லி இருக்கிறா”
“அப்படியா நடவடிக்கை சரியில்லை என்றால் என்ன மாதிரியான நடவடிக்கை”
“எனக்கு முழுசா தெரியாது ஐயா சாடைமாடையா கேட்டதில் அவள் கோவிலுக்கு போவதை நிறுத்திவிட்டாளாம். தலையில முஸ்லிம் பொண்ணுகள் மாதிரி மொக்காடு போட்டுக்கொண்டுதான் வெளியல போகும்போதும் வரும்போதும் வந்திருக்கிறாள்.”
“அப்படியென்றால் அவளுக்கு அவள் மதம்பற்றி யாரோ பிழையாக சொல்லி அவளை மூளை சலவை செய்து இருக்கிறார்கள். அல்லது பலர் மாற்று இனத்தவரை காதலித்து அவர்கள் விருப்பப்படி மதம் மாற தங்களை தயார் செய்வதுபோல இவளும் அப்படி ஏதும் சிக்கலில் விழுந்து இருக்கவேண்டும். சரி சொல்லு நேற்று என்ன நடந்தது?”
“நேற்று அவள் தனது பெயரையே மாற்றிவிட்டாளாம் ஐயா. மகேஸ்வரி என்ற பெயரை ஆயிஷாபேகம் என்று மாற்றி விட்டாளாம். இந்த பெயர் மாற்றத்தை தனது அடையாள அட்டை எண்களை சுட்டிக்காட்டி மகேஸ்வரி சிவராசா என்ற நான் இனி ஆயிசாபேகம் சிவராசா என்று அழைக்கப்படுவேன் என்று பத்திரிகைக்கு கொடுத்திருக்கிறாளாம். இன்றைய பேப்பரில் வருமாம்.” என்றான் ஆறுமுகம்
“பொறு ஆறுமுகம் என்னிடம் வீரகேசரி இருக்கிறது வரும்போது வாங்கி வந்தேன்”
“தினகரன் பேப்பருக்கு கொடுத்ததாக சொன்னார்கள்”
ஆறுமுகம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மகாலிங்கம் மாஸ்டர் வீரகேசரியை எடுத்து பிரட்டிப் பக்கம் பக்கமாக பார்த்தார். என்ன ஆச்சரியம் எட்டாம் பக்கத்தில் கட்டம் கட்டி பெயர் மாற்றம் என்ற தலைப்பில் ஒரு செய்தி.
“ஆறுமுகம் இந்தா இந்த பேப்பரிலும் வந்திருகிறது பெயர் மாற்றம் என்ற செய்தி. இதுதானா என்று பார் ” என்று ஆறுமுகத்திடம் அந்த செய்தியை காட்டினார்.
“ஐயா இதுதான் இந்தா இருக்கே மகேஸ்வரி சிவராசா ஆகிய நான் இனி ஆயிஷாபேகம் சிவராசா என்று அழைக்கப்படுவேன் என்று இது என்ன கொடுமை ஐயா. இப்படியே நமது மக்கள் மதம் மாறிக்கொண்டு வந்தால் கடைசியில் இது எங்க கொண்டுபோய் விடப் போகிறது ஐயா” “ஆறுமுகம் இதுபற்றி மிகப் பெரிய அளவில் தமிழர்கள் சிந்திக்கவேண்டும். ஊர்த் தலைவர்கள், கல்வியாளர்கள். சமூக செயற்பாட்டாளர்கள். பொது மக்கள் ஒன்று கூடி இது பற்றி பேசி கருத்துப் பரிமாறி, இந்த மாற்றத்திற்கான மையப்புள்ளி எங்கே இருந்து தொடங்குகிறது என்பதை அறியவேண்டும். மற்றது தமிழ் பெண் பிள்ளைகள் மாற்று இனத்தாரின் கடைகளில் பணிக்கு செல்வதை நிறுத்தி அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புக்கு வழி செய்ய, அரசு மூலமாகவோ அல்லது அரச சார்பற்ற அமைப்புகள் மூலமாகவோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீட்டில் ஏதும் கைத்தொழில்கள் செய்ய ஆவன செய்வதாலேயோதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நான் நினைகின்றேன். ஆனால் இதுபற்றி நாம் பலருடனும் பேசவேண்டும். முக்கியமாக நமது நாடாளுமன்ற உறுப்பின ருடனும் இதுபற்றி பேசி அவர் கருத்தையும் உள்வாங்கி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவரும் இந்த மதம் மாறும் நடவடிக்கை பற்றி கவலையுடன் பேசி இருக்கிறார். பாராளுமன்றிலும் இதுபற்றி சுட்டிக் காட்டி இருக்கிறார். அதனால் எல்லோரும் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் ஒழுங்கு செய்து இதுபற்றி கண்டிப்பாக பேசுவோம். நான் வயல் விதைப்பு முடிந்தவுடன் எமது பிரதேச மக்களை ஒன்றிணைத்து, ஒரு பெரிய விழிப்புணர்வு கூட்டம் ஒழுங்கு செய்ய பார்க்கிறேன்.”
“ஓம் ஐயா இதுபற்றித்தான் நான் உங்களிடம் பேசவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள் அப்படியே செய்வோம் ஐயா. நானும் என் நண்பர்களும் மக்களிடம் இது பற்றி சொல்லி உங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்றோம்.” என்றான் ஆறுமுகம்.
“கண்டிப்பாக செய்வோம் இதுபற்றி நான் பலருடனும் பேசிவிட்டு ஒழுங்கு செய்கின்றேன். அப்ப நான் வரட்டா, மாணிக்கம் வயலுக்கு போய்கொண்டு இருப்பான். நான் சாப்பாடு கொண்டுபோகவேண்டும். நான் போயிற்று வந்து உன்னை சந்திகின்றேன் சரியா” என்ற மகாலிங்கம்.
மாஸ்டர் தனது மோட்டார் சைக்கிளில் கோளாவில் விரைந்தார்.
அவரது மனசில் அந்த பத்திரிகை செய்தி பெயர் மாற்றம் என்ற தலைப்பில் வந்து போய்க்கொண்டே இருந்தது.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கொட்டு மேளம்
தி.ஜானகிராமன்
September 12, 2026
பிடிவாதம்
இரா.கலைச்செல்வி
September 9, 2026
புத்தகம் சுமக்க வேண்டிய கைகள்
எஸ்.மதுரகவி
September 9, 2026
