கொத்து ரொட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 10 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி கணவன் சுந்தரத்திற்கு முட்டைக்கோப்பி அடித்து கொடுத்துஅம்பாறைக்கு வேலைக்கு அனுப்பி விட்டு மீண்டும் படுக்கையில் வந்து விழுந்த பரிமளாவுக்கு தூக்கம் வரவில்லை. படுக்கையில் பிரண்டு பிரண்டு படுத்தாள். கல்முனை உடையார் வீதியில் மாசிலாமணி அவர்களின் வீடு இருக்கிறது. 

அவர் கொந்துராத்துக்காரர். அரசாங்க வேலைகளையும் கொந்துராத்துக்கு எடுத்து செய்பவர். அவரின் ஒரே மகள்தான் பரிமளா. கார்மேல் பற்றிமா கல்லூரியில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தவளை. மேலே படிக்க வைக்காமல் தனது அக்கா மகன் சுந்தரத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சிறப்பாக கல்யாணம் கட்டிக்கொடுத்து வீட்டோடு வைத்துகொண்டார். சுந்தரம் மாமனாரின் வேலைத்தலங்களுக்கு சென்று மேற்பார்வை பார்ப்பதோடு அம்பாறை கச்சேரியிலும் கிளார்க்காக பணி புரிகின்றார். 

வழமையாக காலை ஏழரை மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் சுந்தரம் இன்று ஐந்துமணிக்கே தனது மோட்டார் வண்டியில் புறப்பட்டு விட்டார் காரணம் இறக்காமத்தில் ஒரு பாலம் கட்டும் வேலை நடைபெறுகின்றது மாமனாரின் கொந்தராத்து வேலை. இன்னும் இரண்டு நாளில் அதை முடித்து கொடுக்க வேண்டி இருந்ததால் வேலையாட்களையும், மேசன் மார்களையும் கொஞ்சம் தட்டிக்கொடுத்து வேலையைத் துரிதப்படுத்திவிட்டு அப்படியே கச்சேரிக்கு போய்விடலாம் என்றுதா சுந்தரம் நேரத்தோடு புறப்பட்டு விட்டார். 

பரிமளாவுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் குழந்தை இல்லை. அவளோடு கல்யாணம் கட்டிய சிலர் குழந்தைகள் பெற்று விட்டார்கள். அவர்களை குழந்தைகளோடு பார்க்கும் போதெல்லாம் பரிமளவுக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும். அதைவிட கஷ்டம் அவளின் சொந்தங்கள் அடிக்கடி கேட்கும் “என்ன பரிமளா ஒன்றும் விசேசம் இல்லையா” என்று கேட்பதுதான். 

அவளும் கோவிலுக்கு நேர்த்தி வைக்கிறாள். தவறாமல் வெள்ளிக் கிழமை தோறும் அம்பலத்தடி கோவில், முருகன் கோவில்,தரவைப் பிள்ளையார் கோவில் என்று போய் வருகிறாள். தெய்வங்கள் ஒன்றும் கண்ணைத் திறந்ததாக காணோம். வீட்டில் அம்மா மட்டும் மகளுக்கு தைரியம் ஊட்டி வந்தாள். எப்படி என்றால் தனக்கும் பிந்தித்தானே நீ பிறந்தாய். அதனால் கவலைப்படவேண்டாம் எல்லாம் நல்லபடி நடக்கும் என்று. அப்படி மகளுக்கு அவர் அம்மா என்றவகையில் தைரியம் ஊட்டினாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. இனி ஊரவரும் அரசல்புரசலாக கேட்பதால் அவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டி இருந்தது. இப்படிதான் ஒருநாள் கல்யாண வீடு ஒன்றில் ஒருத்தி கேட்டாள் “என்ன அக்கா, பரிமளா உண்டாகி இருக்கிறாளா இல்லை அவளும் வெளிநாட்டில் இருக்கும் நம்மவர் போல மூன்று நாலு வருஷம் கழிச்சி பெறப்போறாளோ” என்று. அதுவும் பரிமளாவின் அம்மாவுக்கு கவலை அளித்தது. அப்படி இருந்தாலும் பரவாயில்லையே. மகள் தனக்கு குழந்தை வேண்டும் இதுவரை கிடைக்கவில்லையே என்று சொல்வதால் அவள் சொன்ன மாதிரி தள்ளிப்போடும் விசயமாக இது இல்லை. ஏதோ கடவுள் விட்டபடி நடக்கட்டும். 

மாசிலாமணியருக்கும் ஒரு பேரப்பிள்ளை இருந்தால் நல்லது என்று படும். வீட்டில் ஒரு கலகலப்பு இல்லாமல் இருக்கிறது. குழந்தை ஒன்று இருந்தால் அதோடு சற்று பொழுதுபோகும் என்று எண்ணுவதுண்டு. சுந்தரம் நல்ல ஆண் மகன் அவனில் எந்த குறையும் இல்லை. என்று பார்ப்பவர்கள் சொல்வார்கள். 

கடின உழைப்பாளி. பரிமளாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள வேண்டும் என்று நினைப்பான். அவளுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பு வதில்லை, கலையில் ஒரு தேநீர். அல்லது கோப்பி குடித்து விட்டு போனால், கச்சேரி கண்டீனில் காலைச் சாப்பாடு முடித்துவிடுவான். மதியானாம் அங்கு பக்கத்தில் இருக்கும் புகாரி கொட்டலில் பிரியாணி, அல்லது கறி சோறு சாப்பிடுவான் வரும்போது தனக்கும் பரிமளாவுக்கும் இரவுச் சாப்பாட்டுக்கு கொத்துரொட்டி வாங்கி வருவது வழக்கம். வீட்டில் இடியப்பம், புட்டு இருந்தாலும் இவர்கள் கொத்து ரொட்டி சாப்பிட்டு விடுவார்கள். அப்படி இருவரும் கொத்து ரொட்டி பிரியர்கள். 

பரிமளா இன்னும் தூக்கம் வராமல் படுத்துக்கொண்டு இருந்தாள். நேற்று அவள் சிநேகிதி காரைதீவிலிருந்து போன் பண்ணி இருந்தாள். அங்கு கண்ணகி அம்மன் கோவிலில் அவளது பூசையும், பொங்கலும் இருக்கு முடிந்தால் வா பரிமளா என்று. அது நினைவுக்கு வந்தது. உடனே இன்று கண்ணகி அம்மன் கோவிலுக்கு போவோம் என்று முடிவெடுத்துவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள். 

காலை ஆறுமணி ஆகிவிட்டது. பரிமளாவின் அம்மா எழுந்து வாசல் கூட்டும் சத்தம் கேட்டது. பரிமளா வெளியே வந்தாள். “என்ன புள்ள எழும்பிட்டயா. கொஞ்சம் படுத்து இருக்கலாமே. இண்டைக்கு நாலுமணிக்கே எழும்பிட்டாய்” 

“ஓம் அம்மா படுத்துக் கிடந்தேன் நித்திரை வரவில்லை.நேற்று காரைதீவிலி ருந்து துளசி போன் பண்ணி இன்று அவளின் பொங்கலும் பூசையும் இருக்கிறதாம். வரச் சொன்னாள். அதுதான் போகலாம் என்று இருக்கிறேன்”

“சரி பின்ன போயிட்டு வாவன். முழுகிற்று வா சாப்பாடு செய்து வைக்கிறேன்”

“இல்லம்மா நான் சாப்பிடாமல் போய். அங்கேயே பூசை முடிய பொங்கல் சாப்பிடுகின்றேன். நீங்கள் அப்பாவுக்கு சாப்பாடு செய்து கொடுங்கள்.”

“அப்பாவும் வெளிக்கிட்டு இறக்காமம் வேலைத்தளத்திற்கு போய்விட்டார். சுந்தரம் பொடியனும் போய் பார்த்துவிட்டு போனாலும் இவரும் இருந்தால்தான் வேலை நடக்குமாம். அதுதான் அவரும் போய்விட்டார்.”

“அப்பா இல்லாவிட்டால் நீங்களும் வாங்கோவன் காரைதீவுக்கு”

“இல்ல புள்ள. நான் வரயில்ல. சின்னத்தங்கம் வாறன் என்று சொன்னவள். அரிசியை இரவு ஊற போட்டுவிட்டேன் அவளைக் கொண்டு மா இடிக்கிற வேலை இருக்கு நீ போயிட்டு வா புள்ள” 

“சரி அம்மா நான் முழுகி வெளிக்கிடுறன். இவன் கந்தசாமியின் ஓட்டோவுக்கு சொல்லி விடுங்கோ”என்றவள் குளியல் அறைக்குள் சென்று கொண்டாள். 

காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. இது பிரதானவீதிக்கு அருகில் அமைந்து இருக்கிறது. வைகாசி பொங்கல்,குளுர்த்தி இங்கு விசேச உற்சவமாக இருக்கும். பரிமளா பத்துமணிக்கே வந்துவிட்டாள். பரிமளாவைக் கண்டதும் அவள் சிநேகிதி துளசி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். 

“பரிமளா வாவா. எனக்கு சந்தோசமாக இருக்குடி நீ வந்தது.” 

“ஓமடி எனக்கும்தான். உன்னைப் பார்த்தும் நாளாயிட்டு அத்தோடு அம்மனையும் கும்பிட்டுவிட்டு உனது பூசை. பொங்கலில் கலந்து கொண்டு போகலாம் என்று வந்தேன். எப்படி இருக்கிறாய் குழந்தைகள் எல்லாம் நல்லா இருகிறாங்களா” 

“ஆ நல்லா இருக்கிறேன். குழந்தைகள் அதோ இருக்கிறாங்க. அவங்க அப்பா செல்லம். இருவரும் எப்பவும் இவரு பின்னாலே திரிவாங்க” “எனக்கு ஒரு வருஷம் முன்னால் கல்யாணம் கட்டினாய். இரண்டு குழந்தைகள்.” 

“ஆமா ஒன்று ஆண், மற்றது பெண். போதும் இவர்களை வளர்த்தெடுத்தாலே போதும் இனி வேணாம்” 

“ஏண்டி அப்படி சொல்லுறாய். கடவுள் தாறதை வேண்டாம் என்று சொல்லுவாயாக்கும்” 

“கடவுள் தாறாரா. என்னடி சொல்லுறாய்.” 

“அப்படிதானே சொல்லுவாங்க.” 

“போடி பைத்தியக்காரி கடவுள் தாரார் என்று பெத்துகிட்டா அவ்வளவுதான் பிள்ளைபெறும் மெசின் ஆகிடுவோம். எல்லாம் கொன்றோலில் இருக்கணும். இனி கொன்றோல்தான்” 

“சரி, எனக்கும் ஒன்று கிடைக்கட்டும் நானும் கொன்றோல் பண்ணி விடுவேன்” 

பரிமளா அப்படி சொன்னாலும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ கஷ்டமாக இருந்தது. நண்பிக்காக அப்படி சொல்லி வைத்தாள். பேசிக் கொண்டே இருவரும் கோவில் மண்டபத்திற்குள் வந்து எல்லோரையும் சந்தித்துவிட்டு பொங்கல் வேலைகளில் ஈடுபட்டார்கள். பரிமளாவும் உதவி பண்ணினாள். அம்மனுக்கு பன்னிரண்டு மணி பூசை மிக சிறப்பாக நடைபெற்றது. பரிமளாவும் கோவிலை சுற்றிவந்து அம்மனை வணங்கி வேண்டி நின்றாள்.பூசை முடிந்து பூசாரியார் பிரசாதம் கொடுக்கும்போது பரிமளாவுக்கு வெள்ளைப்பூ கிடைத்தது. அவள் அதுதான் கிடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள் போல.முகத்தில் பரம திருப்தி. அதை தனக்குள்ளே வைத்துக்கொண்டாள்.எல்லோரும் அமர்ந்து பொங்கல் சாப்பிடும்போது துளசியும், பரிமளாவும் பேசிக்கொண்டார்கள். “நேற்று அம்பாறையில் நடந்த புதினம் தெரியுமா பரிமளா” 

“இல்லையே துளசி என்ன புதினம்” 

“அது பெரிய விசயமா போச்சி. முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்றை சிங்களவர்கள் அடித்து உடைத்து இருக்கிறார்கள்” 

“அதுதான் முதலும் தம்புள்ள, பக்கமும் உடைத்தார்களே”

“அது வேறு. இது வேறு பரிமளா. இது அங்குள்ள ஒரு முஸ்லிம் ஹொட்டலில் கொத்து ரொட்டி சாப்பிடப்போன ஒரு சிங்களவர் கொத்து றொட்டிக்குள் ஏதோ குளிசை மாதிரி துண்டு துண்டாக கிடக்க அதை பார்த்து பெரிய ரகளை பண்ணிவிட்டாராம்.” 

“எப்படி. என்ன பண்ணினாராம்” 

“அடேய் கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டு தாரீங்களா? உங்கட எல்லாக் கடைகளிலும் இந்த மாத்திரை போட்டுத்தான் கொத்து ரொட்டி கொடுக்குறீங்க என்ன என்று சொல்லி ஹொட்டல் காரரை போட்டு அடித்து இருக்கிறார். நீ போட்டாயா? போட்டாயா? என்று அவனை அடிக்க அவனும் ஓம் என்று சொல்லிப்போட்டான். இது இணையத்தில் இருந்தது நான் பார்த்தேன். நேற்று பக்கத்தில் இருந்த பள்ளி வாசலை அடித்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்” 

“அதெப்படி துளசி கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டு கொடுப்பானுகள். ஏன் அப்படி கொடுக்க வேண்டும்.” 

“முஸ்லிம் ஆட்களுக்கு இல்லை. மற்ற இனத்தவர்களுக்கு கொடுக்கும்போது இந்த மாத்திரையை போட்டுக் கொடுத்தால் கருத்தரிக்காமல் விடும். இனம் விருத்தி அடையாது. தங்கட இனம் விருத்தி அடைந்தால் போதும் என்று நினைக்கிறாங்களாம்” 

“அடப் பாவிகளா இதை கண்டு பிடித்தது சிங்கள ஆட்களா?”

“ஆமாண்டி ஒரு சிங்களவர் சாப்பிடும்போது வெள்ளை வெள்ளை கட்டியா கிடந்திருக்கு அது கருத்தடை மாத்திரை என்று சொல்லித்தான் அவர் சண்டைபோட்டுவிட்டு அடுத்தநாள் பள்ளி வாசலை பலர் சேர்ந்து உடைத்திருக்கிறார்கள். இது இப்போது நாடுதழுவி பெரிய பிரச்சினையாகி விட்டது” 

துளசி சொல்ல சொல்ல பரிமளாவுக்கு தலையே சுற்றுவதுபோல் இருந்தது. நினைத்தாலே நெஞ்சு வெடிக்கும் அளவிற்கு போகிறது. ஒருகணம் நினைத்துக்கொண்டாள். இரவில் சுந்தரம் அம்பாறையில் கொத்து ரொட்டி வாங்கி வந்தால் இருவரும் விரும்பி சாப்பிடுவதையும், சில வேளை பிரியாணியும் வாங்கி சாப்பிடுவதையும் நினைத்தால் அவளுக்கு பகீர் என்றது. 

“இன்னும் என்னனென்ன புதினங்கள் நடக்க இருக்கிறதோ யாருக்கு தெரியும். இல்லையா பரிமளா” 

“ஆ, என்ன துளசி. என்ன சொன்னாய்” 

“எங்கடி இருக்கிறாய். இங்கதானா இல்ல அம்பாறைக்கு போய் விட்டாயா” என்றாள் துளசி நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் அம்பாரைக்கு தான் போயிட்டேன் துளசி என்று மனசுக்குள் நினைத்தபடி 

“இல்லை யோசித்துக்கொண்டு இருக்கிறேன் இப்படியெல்லாம் நடக்குமா? என்று” 

“நடந்திருக்கே பிறகு என்ன” 

“சரி துளசி நான் கிளம்பப் போறேன். முழுகிற்று வெயிலில் வந்தேனா தலையிடியும் லேசா இருக்கு உன்னை பார்த்து, பேசியது அம்மனை தரிசனம் பண்ணியதெல்லாம் சந்தோசம். நான் போயிட்டு வாறன்” என்று சொன்ன பரிமளா புறப்பட ஆயத்தம் ஆனாள். 

“கொஞ்சம் நில்லு பரிமளா இதோ வந்திட்டேன் என்ற துளசி கோவிலுக்குள் சென்று ஒரு பார்சல கொண்டு வந்து கொடுத்து இதில் பிரசாதம் இருக்கு அம்மாவிடம் கொடுத்து விடு” 

“சரிடி கொடுக்கிறேன்” என்று வாங்கிக்கொண்டு புறப்பட்டாள். 

வீட்டுக்கு வந்ததும் பேசாமல் போய் படுத்துவிட்டாள். அவளின் மனசுக்குள் பல கேள்விகள். எழுந்த வண்ணம் இருந்தன. பல நாட்கள் அம்பாறையில் இருந்து இவர் கொத்து ரொட்டி வாங்கி வந்து நன்றாக சாப்பிட்டு இருக்கிறேனே. அதைவிட இருந்திருந்து முஸ்லிம் ஹொட்டலில் பிரியாணியும் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேனே கடவுளே. நான் கருத்தரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? கொத்துரொட்டிக்குள் வெள்ளை வெள்ளையாக கிடந்தது முட்டை என்று நினைத்துதானே சாப்பிட்டேன். வாய்க்கு ருசியாக இருக்கு என்று இந்த மூன்று வருடமும் நிறைய சாப்பிட்டு இருக்கிறேனே. கடவுளே இப்படி எனக்கு ஆகிவிட்டதே என்று அவளின் மனசு பலவற்றையும் நினைத்தது. உடனே சுந்தரத்திற்கு போன் போட்டாள். 

“ஹலோ நான்தான் பேசுறேன்” 

“சொல்லு பரிமளா எப்படி இருக்கிறாய்.” 

“இருக்கிறன் நீங்க கொஞ்சம் சீக்கிரமாக வர முடியுமா” 

“ஏன் வேலைமுடிய ஐந்து மணியாகும். முடிந்ததும் வந்துவிடுவேன். என்ன சாப்பிட்டாய் வரும்போது ஏதும் சாப்பிட வாங்கி வரட்டா” “ஐயோ நீங்க வாங்கினது போதும் ஒன்றும் இனி வாங்கவேண்டாம். நான் விரதம். இன்று கண்ணகி அம்மன் கோவிலுக்கும் போய் வந்தேன்” “அப்படியா. நல்லது சரி நான் வந்துடுறன் சரியா’ 

“கெதியா வாங்க” என்று வைத்து விட்டாள். 

பரிமளாவால் நம்பவே முடியவில்லை. துளசி சொன்ன கதையை அவளால் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. தனது வயிற்றில் ஒரு குழந்தை தங்காமல் இருந்தமைக்கு இந்தகொத்து ரொட்டிதான் காரணமோ என்று அவள் கலங்கினாள். அவளுக்கு துக்கம் தொண்டையை அடையக் தன்னை அறியாமல் தூங்கி விட்டாள். தாய் சத்தம் போட்டாள். “புள்ள பரிமளா மாலையாகி விட்டது.மாலைக்குள்ள படுக்கக் கூடாது. எழுந்து வா புள்ள. முகத்தைக் கழுவிட்டு வா தேத்தண்ணி போடுறன்” 

அம்மா அவளை கூப்பிட்டு எழுப்பும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பரிமளா எழும்பி குளியலறை சென்று முகம் கழுவி சாமியறையில் சாமி கும்பிட்டு வெளியே வந்தாள். அம்மா, மா அரித்துக்கொண்டு இருந்தா. பரிமளாவை கண்டதும் சொன்னார். 

“மேசையில தேத்தண்ணி வைச்சிருக்கிறேன் எடுத்துக் குடி புள்ள” 

“சரி அம்மா குடிக்கிறேன். கோவில் பிரசாதம் துளசி தந்துவிட்டவள் எடுத்து சாப்பிடீங்களா” 

“எடுத்தேன். நல்லா இருந்தது. பால்புக்கை.” 

“அப்பாவுக்கும், சுந்தரம் பொடியனுக்கும் கொஞ்சம் வைத்திருக்கிறேன்”

“அவர்கள் வந்து சாப்பிடட்டும்.” 

“இரவுக்கு என்ன சாப்பாடு புள்ள. அவரு ஏதும் வாங்கி வருவாரோ ரொட்டி கிட்டி” 

“இல்ல இல்லை ஒரு சாமானும் இனி வாங்கிறதில்லை. போதும் வெளியில் வாங்கி சாப்பிட்டது” 

“வீட்டில் எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் நீங்க ரெண்டுபேரும் கடைச் சாப்பாடுதானே சாப்பிடுவீங்க. அந்த சாப்பாட்டில் அப்படி என்னதான் இருக்கோ நான் அறியேன்” அம்மா அலுத்துக்கொண்டாள். 

பரிமளாவின் மனசு சொல்லுது. 

“அது அறியாமல்தானே நான் சாப்பிட்டுவிட்டு இன்று வயிற்றில் ஒரு பூச்சி புழு இல்லாமல் இருக்கிறேன்” 

“அம்மா இனி எந்தக் கடையிலும் சாப்பாடு வாங்கி சாப்பிடுறது இல்லை. இனி வீட்டு சாப்பாடுதான். நானும் வந்து எனக்கு பிடித்தமாதிரி சமைக்கிறேன்.”

“இதைத்தானே உனக்கு எப்பவோ இருந்து சொல்லுறன். சரி நல்லது. இரவைக்கு இடியப்பம் அவித்து ஒரு பால் சொதியும் வைத்து, சம்பலும் போடுவோம் ” 

“சரி அம்மா. உங்கட விருப்பம் என்னவோ அப்படியே செய்யுங்கள்” என்று சொன்ன பரிமளா. வெளியே சென்று மாமரத்துக்கு கீழே இருந்த கதிரையில் இருக்க போகும்போது, சுந்தரம் தனது காரில் வந்து விட்டான். அவனுக்கு கேற்றை திறந்து விட்டு அவன் காரை பாக் பண்ணி வெளியில் வந்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொண்டு கண்கலங்கி நின்றாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செல்லம், என்ன நடந்தது. என்று அணைத்துக் கொண்டு மெதுவாக தங்கள் அறைக்குள் கொண்டு சென்று கட்டிலில் இருத்திவிட்டு கேட்டான். 

“என்ன நடந்தது. சொல்லு பரிமளா. ஏன் கண் கலங்கிறாய் யாரும் ஏதும் சொன்னாங்களா” 

இப்போ பரிமளா விக்கி விக்கி அழத்தொடங்கினாள். சுந்தரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளின் தலையை கோதிக்கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி கொண்டான். பின் உடை மாற்றி, குளித்து விட்டு வர. பரிமளா டீ போட்டு வந்து கொடுத்தாள். வாங்கிக் கொண்டான் சுந்தரம். அவள் இப்போ அமைதியாக அமர்ந்து இருந்தாள். கண்கள் சிவந்துபோய் இருந்தன. இப்போது கேட்டான் சுந்தரம். என்ன நடந்தது என்று, பரிமளா. காரைதீவு சிநேகிதி துளசி சொன்ன விடயங்களை சொன்னாள். அதற்கு சுந்தரம் பதில் சொன்னான். 

“பரிமளா இது எனக்கு தெரியும். இந்த பிரச்சினை நடந்தது அநேகமா எல்லோருக்கும் தெரியும். நான் நீ கேள்வி பட்டிருப்பாய் என்று நினைத்தேன்” 

“எப்படி எனக்கு தெரியும் நான் என்ன வெளியில் செல்கிறேனா”

“இல்லை பரிமளா யாரும் சொல்லி இருக்கலாம்னு இருந்திட்டேன்”

“எல்லாம் போச்சி நாசமா போன கொத்து ரொட்டியை சாப்பிட்டு எனக்கு குழந்தை இல்லாமல் போச்சே.” 

“பரிமளா அப்படி ஒன்றும் இல்லையம்மா. அது வீணான வதந்தி. கொத்து ரொட்டிக்குள் எப்படி கருத்தடை மாத்திரை போட்டு செய்வது”

“உங்களுக்கு தெரியாதா அதற்குள் வெள்ளை வெள்ளையா கட்டிகள் கிடந்ததாம். துளசி சொன்னாள்” 

“அது மா கட்டிகள் பரிமளா. இப்போ அதை கண்டு பிடித்து விட்டார்கள்.”

“அந்த ஹொட்டல் காரனும் ஒதுக்கொண்டானாமே. தான் மாத்திரை போட்டதென்று. அவள் இணையத்தில் பார்த்தாளாம்” 

“அவன் அடிக்கு பயத்தில் சொல்லிப் போட்டான். இதெல்லாம் நடக்க சாத்தியமில்லை. நீ ஒன்றும் கவலைப்படாதே பரிமளா. எல்லாம் நல்ல படியாக நடக்கும்.” என்று எவ்வளவு சொல்லியும் பரிமளா கேட்க வில்லை. அம்பாறை கொத்து ரொட்டிதான் தனக்கு பிள்ளை தங்காமல் போனதற்கு காரணம் என்று பிடிவாதமாக சொல்லி, சுந்தரத்தின் எந்த நியாயத்தையும் ஏற்க மறுத்துவிட்டாள். இரவு எட்டுமணிக்கு வீட்டில் இடியப்பம் சம்பல். சொதியோடு சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்தார்கள் பின்னர் தூங்கப் போனார்கள். தான் என்ன சொன்னாலும் பரிமளா நம்பிறமாதிரி இல்லை. அவளின் மனதில் இந்த கொத்து ரொட்டி விஷயம், விஷம் மாதிரி ஏறிவிட்டது. இவளை நாளைக்கு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்று டாக்டர் முரளியிடம் ஒரு கவுன்சிலிங் செய்ய வேண்டும் என்ற நினைத்த சுந்தரம் தூங்கிப் போனான். 

கல்முனை ஆதாரா வைத்தியசாலை எப்பொழுதும் கூட்டமாக இருக்கும். சுந்தரம் பரிமளாவை அழைத்துக்கொண்டு டாக்டர் முரளியின் கபினுக்கு சென்றான். அவர் வார்ட் ரவுண்ட் போனதாக நர்ஸ் சொன்னா. வெய்ட் பண்ணுகிறோம் என்று இருந்தார்கள்.அரைமணி நேரம் கழித்து டாக்டர் வந்தார். டாக்டர் முரளிக்கு சுந்தரம், பரிமளாவை நன்கு தெரியும். கண்டதும் நலம் விசாரித்தார். 

“வாங்க மிஸ்டர் சுந்தரம் எப்படி நலமா இருக்கிறீங்களா?” 

”இருக்கிறோம் டாக்டர். உங்களை சந்தித்து ஒரு பத்து நிமிஷம் பேசலாம் என்று வந்தோம்.” 

“வாங்க வாங்க உள்ளே வாங்க” என்று தனது அறைக்குள் அழைத்தார். இருவரும் சென்றதும், சுந்தரம் டாக்டருக்கு எல்லாம் எடுத்து சொன்னான். டாக்டர் பேசினார். 

“இங்கே பாருங்க இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டு கொடுப்பது முற்றிலும் சாத்தியமில்லாத விடயம். இது வேறு உள் நோக்கத்துக்காக கட்டி விடப்பட்ட கதை. அல்லது திட்டமிட்டு இப்படி வதந்தி பரப்பி இதை சாக்காக வைத்து முஸ்லிம் பள்ளிவாசலை அம்பாறையில் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். விஞ்ஞான ரீதியாகவும் இது சாத்தியப்படாது. உங்க மனைவி குழம்பிப் போய் இருக்கிறார். அவர் இப்போ தைரியமாக இருக்கவேண்டும் சுந்தரம்.” 

“டாக்டர் என்ன சொல்லுறீங்க” 

“ஆமா, சுந்தரம் கடந்தவாரம் உங்க மனைவி யூரின் டெஸ்ட் பண்ண கொடுத்திருந்தா. இல்லையா மிசிஸ் சுந்தரம்” 

“ஓம் கொடுத்திருந்தேன் சேர்.” 

“அதை டெஸ்ட் பண்ணி ரிசல்ட் வந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் சுந்தரம் நீங்க அப்பா ஆகப்போறீங்க” 

“டாக்டர் உண்மையாகவா நான் அப்பா ஆகப்போறேனா. பரிமளா தாயாகப் போறாங்களா?” சந்தோஷத்தில் குதித்தான் சுந்தரம். 

“கண்டிப்பாக பொசிடிவ் ரிசல்ட். நீங்க தாயாக போறீங்க மிசிஸ் சுந்தரம். எவ்வளவு காலம் இல்லையா? எல்லாதிற்கும் ஒரு நேரம் இருக்கு. நவ் இட்ஸ் யுவர் டைம் ” என்று டாக்டர் முரளியும் சந்தோசப்பட்டார். 

பரிமளாவுக்கு கண்களில் நீர் நிறைந்தது. அது அழுகையா அல்லது சந்தோஷ கண்ணீரா என்று அவளுக்கு தெரியவில்லை. அது என்ன வென்றாலும் இருந்துவிட்டுப்போகட்டும். இந்த இனிப்பான செய்தியை சொன்ன டாக்டர் ஒரு எச்சரிக்கைச் செய்தியையும் சொன்னார்.

“மிசிஸ் சுந்தரம் நீங்க நீண்ட காலத்திற்கு பின் கன்சீவ் ஆகி இருக்கிறீங்க. கவனமாக இருக்கவேண்டும் அதிர்ச்சியடையக் கூடாது. இமோசனல் ஆகக் கூடாது. எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருங்கள். நல்ல விட்டமின் உள்ள சாப்பாடு சாப்பிடுங்கள். கொத்து ரொட்டியும் சாப்பிடலாம். அது உங்களுக்கு பிடித்தமான உணவல்லவா” என்ற டாக்டர் முரளி சிரிக்க சுந்தரமும் பரிமளாவும் சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள். 

இருவரும் டாக்டரிடமிருந்து விடைபெற்று வெளியே வரும்போது பரிமளா தன் அடிவயிறை தொட்டுக்கொண்டு சுந்தரத்தோடு மெதுவாக கைபிடித்து நடந்தாள். நேற்று காரைதீவு அம்மன் கோவிலில் அவள் நினைத்தபடி வெள்ளை பூ கிடைத்ததை நினைத்துக்கொண்டாள். தானும் இனி தாயாகிவிடுவேன் என்ற தைரியம் அவளுக்குள் ஏற்பட்டு விட்டது.

– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.

கோவிலூர் செல்வராஜன் கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *