பாவம்! தனியாக நின்றான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 65 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உன் மகன் என்னதான் சொல்கிறான்?” என்று சுகுமார் தன் மனைவி பார்வதியைப் பார்த்துக் கேட்டான்.

“அவன் செந்தாமரையைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்கிறான்” என்று பார்வதி தயக்கத்துடன் கூறினார்.

“ஏன்?”

“அவன், அவனுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறானாம்.”

“என் தங்கைக்கு நான் கொடுத்த வாக்குறுதி என்னாவது? செந்தாமரை பிறந்த அன்றே, அதுதான் உன் மருமகள் என்று உன்னிடம் சொன்னேன் அல்லவா? அதை நீ மறந்துவிட்டாயா?” என்று கோபமாக மனைவியைப் பார்த்து கேட்டார் சுகுமார்.

“நான் மறக்கவில்லை…. விருப்பம் இல்லாதவனைக் கட்டாயத்தாலி கட்டச் சொல்வது சரியா?” நீங்களே சொல்லுங்க.

“இப்போ விருப்பம் இருக்கா இல்லையா? இல்லையா? என்பது முக்கியமல்ல. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியம்.’

“இவன்தான் உன் கணவன் என்று சொல்லிச் சொல்லி, அந்தப் பெண்ணும் இவனையே தன் மனதில் நினைத்துக் கொண்டு இருக்குது, அந்தப் பெண்ணை ஏமாற்றுவது சரியா? பெண்ணான உனக்கு ஒரு பெண்ணின் நிலைமை என்ன என்று புரியாதா? மனதிலே ஒருத்தனை நினைத்த ஒரு பெண் எப்படி மற்றொருவனை மணந்து கொள்ள முடியும்?” என்றார் சுகுமார்.

மகன் பக்கம் பேசுவதா? கணவர் பக்கம் பேசுவதா? என்று புரியாமல் தடுமாறிக் கொண்டு நின்றார் பார்வதி.

“நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்க. நான் சொல்கிறபடி என் தங்கை மகள் செந்தாமரையைத் திருமணம் செய்து கொண்டு, இருக்கிறதாக இருந்தால் இந்த வீட்டிலே இருக்கச் சொல்லு. இல்லை அவனை வீட்டை விட்டுப் போய்விடச் சொல்லு. நான் என் மகன் செத்துவிட்டான் என்று தலைமூழ்கிவிடுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியில் போனார் சுகுமார்.

பார்வதி அப்படியே மயங்கி சோபாவில் சாய்ந்தார். அப்போது உள்ளே நுழைந்த மாறன், “அம்மா! என்று அலறிக் கொண்டே அவரிடம் ஓடினான். தாய்க்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்தான். கண்விழித்த அம்மாவைப் பார்த்து, “என்னம்மா நடந்தது என்று பரிவுடன் கேட்டான்.

பார்வதி நடந்ததைக் கூறினார்.

மாறன் மெளனமாக நின்றான்.

“என்னப்பா மாறன் சும்மா இருக்கிறாய்? இதற்கு என்னதான் முடிவு?”

“எனக்கு விவரம் தெரியாத போது சொன்னச் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்று அப்பா துடிக்கும்போது, ஒரு பெண்ணுடன் பழகியவன் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மட்டும் எப்படி காப்பாற்றாமல் இருக்க முடியும்? திருமணம் என்பது சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது அல்ல. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். இருமணம் ஒத்தால் தான் திருமணம் என்பது அப்பாவுக்குத் தெரியாதா? நான் இதற்கு விரைவில் ஒரு சரியான முடிவு எடுக்கிறேன். நீங்க கவலைப்படாமல் இருங்க அம்மா.”

மறுநாள். தன் காதலி மங்கையைப் பார்த்து, தன்னுடைய வீட்டிலுள்ள நிலைமையைப் பற்றி கூறினான், மாறன்.

எல்லாவற்றையும் கேட்ட மங்கை எதுவும் பேசாமல் இருந்தாள்.

“என்ன பேசாமல், இருக்கிறாய் மங்கை?”

“நான் என்ன சொல்ல வேணும்னு நினைக்கிறீங்க?”

“நான் குழப்பத்துடன் இருக்கிறேன். நீ ஏதாவது ஆலோசனைக் கூறுவாய் என்று தான் உன்னிடம் சொன்னேன்.”

”நான் ஆரம்பத்திலேயே, உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராதுன்னு சொன்னேன். நீங்க திருமணம் நடந்தால் உனக்கும் எனக்கும் தான் திருமணம் என்றீங்க. இப்போ, என்னிடம் ஆலோசனை கேட்றீங்க. நான் என்ன சொல்ல முடியும்? அல்லது என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீங்க?”

“என் அப்பா என்ன செய்தாலும் செய்யட்டும். நம் இருவருக்கும் அடுத்த வாரம் பதிவு திருமணம். நீ தயாராக இரு.”

“அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீங்க. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரியாகிவிடக் கூடாது. கொஞ்சம் பொறுத்திருந்து செய்வோம். உங்க அப்பாவின் மனம் மாறினாலும் மாறலாம். அப்பா-அம்மாவுடைய ஆசியுடன் நடைபெறுவதுதான் நல்ல மணம் என்று நினைக்கிறேன்.

“என் அப்பாவைப் பற்றி எனக்குத் தான் தெரியும். அவர், தான் பிடித்த முயலுக்கு மூன்று தான் கால் என்று வாதாடக் கூடியவர். இருந்தாலும் உன் விருப்பப்படி கொஞ்ச நாட்களுக்குக் காத்திருப்போம்” என்றான் மாறன்.

“நீங்கள் ஆத்திரப்படாமல் கொஞ்சம் அமைதியாக இருங்கள். கண்ணாடியில் கல்பட்டாலும் கல்லில் கண்ணாடி பட்டாலும் சேதம் கண்ணாடிக்குத்தான். அதுமாதிரி. உங்க அப்பாவின் மனம் புண்படும்படி நீங்க நடந்து கொண்டாலும், உங்க மனம் புண்படும்படி உங்க அப்பா நடந்து கொண்டாலும் சேதம் நமக்குத்தான்” என்றாள் மங்கை.

“நான் விரைவில் ஒரு முடிவோடு வருகிறேன். எந்த முடிவோடு வந்தாலும் அதற்கு ஏற்றாற்போல நடந்து கொள்ள தயாராக நீ இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு மாறன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்று மாலை சுகுமார் வீட்டிற்குச் செந்தாமரை வந்தாள். அவள், தன் மாமவைப் பார்த்து,

“என்னை மணந்து கொள்ள விருப்பம் இல்லாத அத்தனை, நீங்க கட்டாயப்படுத்த வேண்டாம் மாமா” என்றாள்.

“நீ என்னம்மா புரியாமல் பேசுறே?” அவன் தான் புரியாத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.

இன்னும் இரண்டொரு நாளில் சரியாகிவிடுவான் என்று சொன்னார் சுகுமார்.

“இல்லை மாமா! கட்டாயத்திற்காக அவர் என் கழுத்தில் கட்டும் தாலி, எனக்குச் சுருக்குக் கயிறு மாதிரிதான். அந்தச் சுருக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கி இறுக்கி நான் சாக விரும்பலே.”

“அவன்தான் உன் கணவன் என்று மனத்திரையிலே வரைந்திருக்கின்ற அவன் உருவத்தை உன்னால் அழித்துவிட முடியுமா?” சொல்லு முடியுமா?”

செந்தாமரைத் தேம்பி தேம்பி அழுதாள்.

“முடியாது மரமா. ஆனால் முயற்சி செய்கிறேன். முடியாவிட்டால் அவரின் நினைவிலேயே என் காலத்தைக் கழித்துவிடுகிறேன்’

“நல்லா இருக்கே நீ சொல்றது. உனக்கு உரிமையான பொருளை யாருக்கோ தூக்கிக் கொடுக்கிறேன் என்கிறாயே!”

“நாம் வாங்க நினைத்த பொருளை வேறு ஒருவரும் வாங்க நினைக்கிறார். ஆனால் கடையில் அந்தப் பொருள் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அப்போது கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால், “நீங்களே, யார் வாங்குவது என்று ஒரு முடிவுக்கு வாங்க என்பார். நற்பண்புடையவர் அதனை மற்றவருக்கு விட்டுக் கொடுப்பார். அந்த நற்பண்பாளரைப்போல நான் விட்டக் கொடுக்றேன்.

“ஏன் அந்தப் பெண் உனக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது.”

“அந்தப் பெண் விட்டுக் கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆனால் அத்தான் என்னை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லையே!”

“ஏற்றுக்கொள்வான்! ஏற்றுக்கொள்வான்!”

“எப்படி?”

“அதற்கான வழி எனக்குத் தெரியும்.” நான் ஒரு நல்ல முடிவோடு வருகிறேன். நீ எதற்கும் கவலைபடாமல் இரு” என்று சொல்லியபடியே வெளியேறினார் சுகுமார்.

அவர் சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டு நின்றாள் செந்தாமரை.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தார் சுகுமார்.

“கதவை லேசாகத் திறந்து கொண்டு. நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டாள் மங்கை.

“இங்கே மங்கை என்பது யார்?”

“நான்தான்”

“ஓ! அந்தப் பெண் நீதானா?”

“எந்தப் பெண்?”

“என் மகன் மாறனை மயக்கிய பெண்.”

வந்திருப்பவர் மாறனின் அப்பா என்பதைப் புரிந்து கொண்ட மங்கை என்ன செய்வது! எப்படிப் பேசுவது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

“நான் உன்னிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்.”

“கதவைத் திறந்து, உள்ளே வாங்க” என்றாள் மங்கை. உள்ளே சென்ற சுகுமாரைப் பார்த்து, “உட்காருங்க. இதோ வர்றேன்” என்று சொல்லியவாறு சமையல் அறைக்குள் சென்றாள். சிறிது நேரத்தில் கையில் காப்பி கோப்பையுடன் திரும்பினாள்.

“உன் வீட்டில் பெரியவங்க யாருமில்லையா?’

”இருக்கிறாங்க. அம்மா. அவங்க கோயிலுக்குப் போய் இருக்கிறாங்க. திரும்புகிற நேரம்தான், வந்திடுவாங்க.”

“அவங்க வருகிறபடி வரட்டும். நான் உன்னிடம் ஓர் உதவி கேட்டு வந்திருக்கேன்.”

“நான் மிகவும் சின்னவள். நான் என்ன உதவி செய்திடப் போறேன். இருந்தாலும் கேளுங்க. என்னால் முடிந்த உதவியாக இருந்தால் தாராளமாகச் செய்றேன்.

“என் மகனை மறந்துவிடு” எனக்காக அல்ல. என் தங்கையின் மகளுக்காக. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து தன் அத்தான்தான் தன் கணவன் என்னு எண்ணி எண்ணி அவனுடைய உருவத்தைத் தன் மனத்திரையில் ஓவியமாக வரைந்து வைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் அவளுக்காக நீ உன் காதலை மறந்துவிட வேண்டும்” என்றார் சுகுமார்.

என்ன பேசுவது என்று புரியாமல் என்று புரியாமல் மங்கை நின்று கொண்டிருந்தாள்.

ஓரீராண்டு ஆண்டுகள் பழகிய உன்னால் அவனை மறக்க முடியாவிட்டால், பல ஆண்டுகளாக அவனையே நினைத்து நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணால் மட்டும் எப்படி மறக்க முடியும்?” அந்தப் பேதைப் பெண் தன் அத்தானின் நல்வாழ்வைக் கருதி, தன்னையே அழித்துக் கொள்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். அந்தப் பெண்ணை உன்னுடன் பிறந்த சகோதரியாக நினைத்துக் கொள். கல்யாணப் பரிசு படம் பார்த்து இருக்கிறாயா? தன் சகோதரிக்காகத் தன் காதலையே விட்டுக் கொடுத்தாளே அதேபோல் நீயும் விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்றார் சுகுமார்.

“இதற்குமேல் நீங்கள் எதுவும் பேச வேண்டாம். நான் உங்க மகனின் வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்கமாட்டேன். என்னை நம்புங்க.”

“உன் வாக்கை தேவவாக்காக எண்ணிக் கொண்டு போறேன்.”

கதவைச் சாத்திவிட்டு, ஓடிப்போய் படுக்கையில் விழுந்து அழுதாள் மங்கை.

அழைப்பு மணி ஒலிக்கவே அம்மா வந்திருப்பாங்க என்று நினைத்து கண்களைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். அங்கே மாறன் நின்று கொண்டிருந்தான்.

“தயவு செய்து இங்கே இனிமேல் வராதீங்க. போய்விடுங்க” என்று அழுது கொண்டே கதவைச் சாத்தினாள்.

கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான் மாறன். ‘உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?” நம்முடைய திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, உன்னிடம் விவரத்தைச் சொல்ல வந்திருக்கேன். நெய் உருகும்போது தாழி உடைந்த கதையாக அல்லவா இருக்கிறது உன் செயல்.”

“தயவு செய்து என்னை மறந்துவிடுங்க. உங்க அத்தை மகளை மணந்து கொண்டு சந்தோஷமாக இருங்க” என்றாள் மங்கை.

“உன்னிடம் ஆலோசனை கேட்க இங்கு வரலே. நீ என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா இல்லையா?” உடனே முடிவைச் சொல்”

“நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றாள் மங்கை.

“பளார் என்று ஓர் அறை விழுந்தது மங்கையின் கன்னத்தில்” அப்படியே அவள் கீழே சாய்ந்தாள்.

“உன்னை நம்பி என் அப்பா. அம்மா, அத்தை மகள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு வந்த எனக்கு நீ காட்டும் நன்றியா இது? உன்னை நம்பி வந்த எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். ஒன்றை மட்டும் கேட்டுக் கொள். என் அப்பா இங்கே வந்து உன்னிடம் சொன்னதற்காக, என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாய். ஆனால் நீ உயிருடன் இருக்கும் வரை, நான் வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இது சத்தியம்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வெளியேறினான் மாறன்.

நேராக தன் அத்தை வீட்டுக்குப் போனான். அங்கே செந்தாமரை இருந்தாள். மாறனைப் பார்க்கவே அவள் பயந்தாள். அவ்வளவு கோபமாக இருந்தான் மாறன்.

“ஏய்! உன் கிட்ட எப்போதாவது, நான் உன்னைத் திருமணம் செய்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறேனா?. இந்த ஊரிலே என்னை விட்டா வேறு ஆம்பிளையே கிடைக்கமாட்டானா? ஏண்டி என் வாழ்க்கையிலே விளையாடுகிறாய்?’ என்று கோபமாகக் கேட்டான்.

செந்தாமரை பயத்தால் உடல் நடுநடுங்க நின்றாள்.

“எனக்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ள கொஞ்சம் கூட விருப்பமில்லை. அப்படி நீயும் என் அப்பனும் சேர்ந்து, என்னைக் கட்டாயத் தாலி கட்டச் சொன்னீங்க. தாலி கட்டிய மறுகணமே நான் தூக்கிலே தொங்கிடுவேன். பிறகு நீ தாலி இல்லாத முண்டமாகத்தான் நிற்பே. உனக்கு அது தேவையா? என்பதை நீதான் முடிவு செய்து கொள்ள வேணும்” என்று தொடர்ந்து சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் நீர் அருவியாகக் கொட்ட நின்ற இடத்திலேயே சிலை மாதிரி நின்று கொண்டிருந்தாள் செந்தாமரை.

அன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. படுக்கையில் படுத்துப் புரண்டுக் கொண்டிருந்தாள். அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

“வாழ்ந்தால் உங்களோடுதான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என்னைப் பார்த்து கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டுவிட்டார். என்னை வாழ வைக்க விரும்பாத அவர். என் வாழ்க்கையைக் கெடுப்பதற்காகத் தன்னுடைய உயிரையே விட்டுவிடுவதாகச் சொல்லிவிட்டாரே. இனிமேலும் அவருடன் வாழ விரும்புவது பெண்மைக்கே இழுக்கு. அவர் இல்லாமலே இந்த உலகில் வாழ்ந்து காட்டுகிறேன்’ என்ற தனக்குள்ளேயே ஒரு முடிவு எடுத்துக் கொண்டாள்.

“இனிமேல் என்னைப் பற்றியோ என் திருமணணத்தைப் பற்றியோ யாரும் எதுவும் பேசக்கூடாது” என்று தன் தாயிடம் கூறினாள் செந்தாமரை.

மாறன் கொடுத்த அறையால் மயங்கி விழுந்த மங்கை அப்படியே கிடந்தாள். வீடு திரும்பிய அவளுடைய தாய் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மங்கையைப் பரிசோதனை செய்த டாக்டர், அவரிடம் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடிய செய்தியைச் சொன்னார்.

மங்கைக்கு இரத்தப் புற்று நோய் இருப்பதாகவும் அவளால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியாது என்றும் கூறினார். அதனைக் கேட்ட மங்கையின் தாயார் தன் தலையில் இடி விழுந்துவிட்டதே என்று சொல்லி கதறி அழுதார். ஆனால் மங்கை மட்டும் மகிழ்ச்சியுடன் இருந்தாள். தான் உயிரோடு இருக்கும் வரையில் மாறன் செந்தாமரையை மணக்க மாட்டேன் என்று கூறினார் அல்லவா? இனிமேல் நிச்சயம் செந்தாமரையை மணந்து கொள்வார் என்று எண்ணி தான் அவள் மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் இச்செய்தியை அறிந்து கொள்ள மாறன் ஊரில் இல்லை. அவன் தன் திருமணப் பிரச்சனையால் மன உளைச்சலுக்குள்ளாகியதால் கொஞ்ச நாட்களுக்கு வெளியூர் சென்றுவர எண்ணிப் போய்விட்டான். அவன் ஊர் திரும்புவதற்கு முன்பே மங்கை இந்த உலகை விட்டுப் போய்விட்டாள்.

ஊர் திரும்பிய மாறன் செய்தியை அறிந்து பித்துப் பிடித்தவன் மாதிரி ஆகிவிட்டான். அன்று அவனை அடைய இருவர் போட்டியிட்டனர். ஆனால் இன்று, அவன் யாரும் இல்லாத அனாதையாக, பாவம்! தனியாக நிற்கிறான்.

– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம் இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *