நூலகத்தில் அம்மம்மா
கதையாசிரியர்: அபிநந்தினி மோகன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 12,753

“தட்… தட்…”
“யாரோ வருகிறார்கள்”…
“யாரோ வருகிறார்கள்”…
புத்தகங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் மிக மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டு இருந்தன.
அதைக்கேட்டு அலமாரியிலிருந்து ஆவலுடன் எட்டிப் பார்த்தது அங்கிருந்த ஒரு பழைய நினைவுக் குறிப்பு புத்தகம்.
“அவள் இளம்பிறையா?”
“ஆமாம், அது இளம்பிறை தான். அவள் தான் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறாள். நூலகத்திற்குத் தான் வந்து கொண்டிருக்கிறாள்”. அவளின் படியேறும் அடியின் ஒலி அந்த நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கு அத்துப்படி.
மெல்ல கதவு திறந்தது. முழு நிலவில் சிரிப்போடு முகம் காட்டினாள் இளம்பிறை.
அந்த புத்தகம் திறந்து அவளை அணைத்துக் கொண்டது. இளம்பிறையும் அந்த இனிய புத்தகத்தைக் கட்டிக் கொண்ட போது, அது மிக்க மகிழ்ச்சியுடன் உனக்காகத்தான் நான் காத்திருந்தேன் இளம்பிறை என்று காதருகே கிசுகிசுத்தது.
முழு நிலவாய் சிரித்த இளம்பிறை அடுத்தடுத்த அழகிய பக்கத்தைப் படிக்க ஆயத்தமானாள். அது அவள் அம்மா மீதான அம்மம்மாவின் அழகிய அன்பு. அவளை உணர்ந்த நாள் முதலாய் தொடங்கியது. தற்போது நான்காம் மாதத்தின் அழகிய பதிவு.
என் அழகு பட்டாம்பூச்சியே!
வயிற்றுக்குள் எந்தப் பக்கம் இருக்கிறாய் நீ!
சிறகடிக்கும் போதெல்லாம்..
சிலிர்த்துத்தான் போகிறேன் என் சின்னஞ்சிறு ஓவியமே!
கருப்பு வெள்ளை திரையிலும்
கண்களை கவரும் என் காவியமே!
என் கருப்பைக்குள் வந்துதிக்க அந்த
கண்ணன் தான் வந்தானோ!
நின் இருப்பை அடிக்கடி உணர்த்திவிடு….
இதமாய் இருக்கிறது எனக்கு..
இனியவனோ!
இனியவளோ!
இதயம் நிறைக்க
இறங்கி அந்த கிருஷ்ணன் தான் வந்தானோ!
மழைக்கு குடையாய்..
பசி நேரத்து உணவாய்..
என் மென்மையான சிறகே!
கண்ணனோ!!! கண்ணம்மாவோ!
காத்திருக்கிறேன் நீ ‘அம்மா”
என்று இசைப்பதைக் கேட்க…
“எவ்வளவு அன்பு!” என இளம்பிறையின் கண்கள் காதலால் கசிந்தது. இளம்பிறை இங்கே வா! எங்கிருக்கிறாயடா செல்லம்? அழைத்தது அந்த அழகிய பட்டாம்பூச்சி தான்.
“வர்றேன் மா” என்றவாறே அவள் அவள் அம்மம்மாவை முத்தமிட்டு விட்டு ஓடிச் சென்று அம்மாவைக் கழுத்தைக் கட்டிக் கொண்டே “லவ் யூ மா” என்றாள்.
அந்த பழைய நினைவுக் குறிப்பு புத்தகம் புன்னகைத்துக் கொண்டே மீண்டும் அவளுக்காக காத்திருக்க தொடங்கியது…
தொடர்புள்ள சிறுகதைகள்
வரப்பு பூக்கள்
பிரேமா நரசிம்மன்
July 20, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 20, 2026
ஏடிஎம் மகள்
தரணி யோகேஸ்வரன்
July 20, 2026