ஏவிவிடப்பட்ட கொலையாளி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 313 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2008ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

16. விரல்களும், காதுகளும்

மூன்றாம் நாளில் ஒளி மங்கிக் கொண்டிருந்த பொழுதில் என நினைக்கிறேன். தொண்டர்கள் அதிகமாக செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். மரங்களிலும் புதருக் குள் சிக்குண்டும், வாவி ஓரங்களிலும் கிடந்த பிணங் களையும் – இடிபாட்டுக்குள் மாட்டி இருந்தவற்றையும், மீட்டுக் கொண்டிருந்தார்கள். அதன்போது காயப்படும் அவர்களுக்கு உடனடியாக மருந்து கட்டிவிட அவர்களிடம் முதலுதவிப் பெட்டிகள் இருந்தன. தொற்று நோய் ஏற்பட்டு விடலாம் என்ற பயம் எல்லோரிடமும் இருந்தது. 

மார்பின் இடது புறத்தில் இரத்தக் கறைகளுடன் வேக மாக வந்து கொண்டிருந்த இருவரைக் கண்டு கொண்ட தொண்டர்கள் காயங்களுக்கான மருந்தை வழங்க அவர் களை அழைத்த போது இன்னமும் பயம் கொண்டவர்களாய் ஓட்டமெடுத்தார்கள். எல்லோருக்கும் அவசரம் தலைக்கு மேல் இருந்தது. முக்காலுக்கு அதிகமான பங்கினர் வேகமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்கள். இரத்தக் கறையுடன் ஓடுபவர்களிடம் ஆபத்துக்கான அவசரத்தைக் கண்ட தொண்டர்கள் தொடர்ந்த போது முன்னே ஓடிக் கொண்டிருந்த இருவரில் ஒருவனிடமிருந்து விரலொன்று கீழே விழுந்தது. அதை எடுத்த ஒரு தொண்டன் விரல் விழுந்ததை ஏனையவர்களுக்கும் சத்தமிட்டான். வேகத் தைக் கூட்டி இடைவெளியைக் குறைத்துக் கொண்டு எதிர்த் திசையில் வந்தவர்களுக்குச் சைகை காட்டி இருவரையும் வளைத்துக் கொண்டார்கள். 

அனைவரது கால்களிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டவர்கள் தங்கள் வீடு விழுந்து பொருட்களெல்லாம் போய்க் குழந்தைகளுடன் சாப்பாட்டுக்குச் சிரமப்படுவதாக வும், அதனால்தான் இப்படியானதொரு களவில் ஈடுபட்டதாக வும், இதற்கு அருகில் இருந்தவன்தான் யோசனை சொன்ன தாகவும் ஒருவன் கூறியபோது, இருவரும் அடித்துக் கொண்டார்கள். 

தான் இன்று மட்டும்தான் வந்ததாகவும் நேற்றைய இரவில்தான் மற்றவன் தனது இப்படியான திருட்டு முறையை விபரித்ததாகவும் அவனது பதினொரு வயதும், ஆறு வயதுமான இரு பெண் பிள்ளைகளுக்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டான். அதற்காகத்தான் இதற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறினான். 

தாயை இழந்தவர்கள் தவித்துக் கொண்டிருப்பார்கள். இருட்டும் வேளையில் தான் எப்படியும் அங்கு சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கவலை பன்மடங்காகி விடும் என்று மன்றாடிக் கொண்டே மேற்சட்டை, காற்சட்டைப் பைகளில் இருந்த விரல்களையும், காதுகளையும் அள்ளி வெளியில் போட்டான். 

சிறியதும், பெரியதுமான எட்டு விரல்களும் நான்கு, ஐந்து வயதுக்குரிய காதுகள் மூன்று உட்பட பதினொரு நிறக் கற்கள் பதித்த மோதிரங்களும், பல வடிவமுடைய காதணி களும், தங்கத்தால் அணியப்பட்டிருந்தன. கூட்டத்தில் நின்ற ஒருத்தன் மற்றையவனின் பைகளுள் இருந்தவற் றையும் வெளியே அள்ளிப்போடப் பணித்தான். உணர் வற்ற நிலையில் எதையுமே கேட்க முடியாமல் பதினொரு காதுகளும், பத்து விரல்களும் விறைத்துப் போய்க் கிடந்தன. இரண்டு கைச் சங்கிலிகளும் கூட. 

முன்னையவனிடம் இருந்த சோடிகள் இவனிடமிருந் தன. மொத்தமாக பதினொரு பேரின் இருபத்திரண்டு காது களும் கிடந்தன. ஆளுக்கொரு காதாக வெட்டி எடுத்திருக் கிறார்கள், ஒன்று, இரண்டில் தான் இரத்தம் கசிந்திருந்தது. அதுவும் பெரிதாக இல்லை. மற்றையவைகள் எல்லாம் வெள்ளையாகவே சதைப் பிண்டமாகக் கிடந்தன. 

இருவரைச் சுற்றியும் கூட்டம் அதிகமாகி விட்டிருந்தது. சிலர் மூக்குகளைப் பொத்திக் கொண்டு நின்றார்கள். சிலர் அவர்களை அடித்தார்கள், பாவிகள் – கொள்ளைக்காரர்கள், இரக்கமில்லாதவர்கள் போன்ற வார்த்தைகள் எல்லார் வாய்களிலும் இருந்து வந்தது. யாருமே மௌனமாய் இருந்ததாய்த் தெரியவில்லை. காதுகளும், விரல்களும் அவர்களுக்குக் கோபத்தை தந்தன. 

மீட்புப் பணிக்காக ஓடித் திரிந்த வாகனம் ஒன்று இருவரையும் ஏற்றிக் கொண்டு சென்று, விசாரணைக்காகக் கையளித்த போது அங்கும் முன்னம் பேசியவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தானாம். 

ஒரு பிணத்தில் நகைகள் இருப்பதைக் கண்டால் அந்த உடலின் பாலுக்கும், வயதுக்கும், ஏற்றதான ஒரு உறவு முறையைக் கூறிக் கட்டியணைத்து அழுது இருவருமாகத் தூக்கிச் சென்று மறைவான இடத்தில் வைத்து நகையைக் கழற்றிக் கொள்ள அவகாசம் போதாமல் போகும் என்ப தாலும், நிறைய பகுதியை வெட்டி விடுவார்களாம். அதற் காக கூரிய விரித்து மடக்கக்கூடிய கத்திகளை வைத்திருந் தார்களாம். காலை ஏழு மணி தொடக்கம் அதுதான் இருவரது வேலையாக இருந்ததாயும் கூறினான். 

ஆனால் மற்றையவன் நேற்றுத் தொடக்கம் இதைத் தான் வேலையாகக் கொண்டு நிறைய நகைகளைச் சேர்த்து விட்டதாகவும் நேற்று மட்டும் பத்து பவுனுக்கு அதிகமான நகைகளை சேகரித்து விட்டதன் ஆசையைக் காட்டியே இன்று என்னைக் கூட்டி வந்தான். 

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கூட்டத்தில் ஒருவன் கூறியதாக எனக்கு ஞாபகத்துள் எட்டியது. 

17. உங்கள் கதை

இவை மாதிரியே பாவப்பட்டதும், சோகப்பட்டதுமான கதைகள் நிறையவே இருந்தன. ஊர் முழுவதும் அவைகள் உலாவி வந்ததும், ஊர்களையும், நாடுகளையும் அவை நிரப்பி சர்வதேசமயமான சோகத்தை உண்டு பண்ணியதும் உங்களுக்குத் தெரியும். அதில் உங்களின் கதையும் ஒன்றாக, அல்லது காதுகளில் பட்டு மனதைக் கரைத்த கதையாக இருக்கலாம். 

இப்போது நீங்கள் அதை எங்களுக்குக் கூறலாம். மிகுந்த கவலையுடனும், கவனத்துடனும் அதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். 

18. கடலைச் சபித்தல் 

அன்று எட்டாம் நாள் 

கடல் – வெளி நேர் கோட்டுத்தளப் பிரிப்பில் கிரணங்கள் பெருக்கெடுத்த வேளையில் கூட்டம் கொஞ்சம் கொஞ்ச மாகச் சேர்ந்து கொள்ளத் தொடங்கியது. 

தூவப்பட்டிருந்த மலர்கள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு அந்தரித்தன. அவை கடலுக்கானதாக ஒரு போதும் இராது. உப்பு நீரில் மூச்சைக் கரைத்து உருவிழந்து போனவர்களுக்குத்தான். 

உன் நீர் நாக்குகளை நீட்டி இழுத்தெடுத்து ஊறப் போட்டு சதைப் பிண்டத்தைச் சப்புக் கொட்டியவள் நீ. பிரபஞ்சத்தின் பாதிக்கு மேலாய் நின்று எங்கும் பரந்திருக் கும் அகங்காரம். லட்சத்துக்கு மேலாய் வாழ வைப்பதால் லட்சங்களை அழிக்க அதிகாரங்கள் கையளிக்கப் படாது — பாதகனே – வற்றி சுருங்கிப் புள்ளியாயப் போகையில் என் நாவுக்கு சுவையூட்டி மலக்குழிக்குள் போவாய். 

பெண்களைச் சுகித்துப் புசிக்க, குழந்தைகள் உடல் புக, குடும்பம் கலைக்க இத்தனை வேட்கை கொண்டனையே! பாசத்தைக் கொஞ்சமேனும் நுகர முடியுமா, அல்லது நுகர்ந்து தான் இருக்கின்றாயா? கனவுகளைத் தின்னும் கைங்கரியம் தெரிந்து, உப்பிட்டுச் சுவையூட்டி நக்கி வாழ்வைச் சூன்யப்படுத்திப் போன உன்னில் கருவாடு மட்டும் மிதக்கும். 

அம்மா அப்பா தாத்தா பாட்டி
சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா 
அக்கா அண்ணா தம்பி தங்கை 
நண்பி நண்பன் காதலன் காதலி 
மனைவி கணவன் மகன் மகள் 
மாமா மாமி மச்சான் மச்சாள் 
அண்ணி அத்தான் பேரன் பேத்தி 

ஒருவரை அல்லது பலரைத் தின்றதற்காய்ச் சபிக்கப் பட்டுக் கொண்டே இருந்தது. 

தகிக்கும் ஒளிப் புலத்தைக் கடலில் மேய விட்டு ஆவி யாக்கிப் பரப்பி விட கண் சிவந்த பலர் கடலை வெறித்த வண்ணம். மணற்பருக்கைகளால் கடலை நிரப்பிச் சுருக்கி நிலப் பரப்பைக் கூட்டி விட இரு கைகளாலும் மணலை கிளறி எறிந்து கொண்டு கைகளில் அள்ளி கடலில் வீசியும், சிறுபிள்ளை விளையாட்டில் பலர் மூழ்கி இருந்தார்கள். அவர்கள் அவர்களாய் இராமல் மரித்துப் போன உறவு களுள் மூழ்கி இருந்தார்கள் – தங்கள் எண்ணப்படி யாருமே செயற்பட்டுக் கொள்ளவில்லை. 

லட்சம் முகங்களைப் புதைத்துச் சலனமற்று, இயல்பாய் ஆண் பெண்ணை நுரை தள்ளி விளையாட விட்டு, சயனித் திருந்த கடலில் காறி உழிந்த நுரையும் கரையேறி வந்தது போனது. வருவதும் போவதுமாய் அலைந்து கடல் மேலேயே கிடந்தது. அது வெட்கமில்லாக் கடல். 

பருக்கைகளுள் விழுந்து – திரண்டு ஓடிக் கொண்டிருந்த கண் வடித்த உப்பு நீரும் கடலால் உறிஞ்சப்பட்டது. 

எதுவுமே தனக்கில்லையென்பதாய் விரிந்து கிடந்த கடல் பிண்டங்களையும், பூக்களையும், தேங்காய்ப்பாதி – பழம் – அரிசி – வாழையிலை என எல்லாவற்றையும் சுமந்த வண்ணம் – மூடப்படும், சுருங்கிவிடும், புள்ளியாய்ப் போகும் எச்சில் சுமக்கும் கண்ணீர் விடும் சாபத்துடன் இறந்து போன ஆத்மாக்களைத் தேடிக் கொண்டு சென்றது. 

அன்றைய நாள் முடிவுறப் போகும் கடைசிக் கணம் வரை கடல் கலங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 

கிரணங்கள் உள்ளிழுக்கப்பட்டு வேறு தேசம் தேடி சூரியன் ஓடும் வரை தங்கள் உறவுகளைத் திருப்பித் தரும்படி அடம் பிடித்தவர்களும், சனத்துக்கு மோட்சம் வேண்டிப் பிரார்த்தித்தவர்களும் நினைவுகளுள் ஆழ்ந்து தொலைத்தவர்களும், தங்கள் தங்கள் காட்சிப் படிமங்களை நேரிடையாகக் கடலுக்குக் காட்டி இரங்க வேண்டினார்கள். 

19. நுரைக் கடிதம்

மன் 
னிப்பீர், 
உங்கள் கரு
த்துக்களைப் 
போலோ, 
எண்ணங் 
களைப் போலோ, 
……
நான் குற்றவாளியாய் 
இல்லை 
உங்கள் 
தேசத்துள் நான் 
ஏவி விடப்பட்டேன். 
…..
ஆதாரங்கள் 
இன்றி அலைய, 
விட எந்தக் கணமும் 
நான் எண்ணியிருக்க
வில்லை. 
…..
முழுவதுமாய் 
எனை அடக்கிக் 
கொள்ள முனைந்தும்
பயனற்றுப் போனது 
……
உங்கள் உறவுகளுடன்
நானும் தொலைந்து போனேன்.
இயல்பு, அழகு குலைந்து 
போனேன், எனக்குள் 
எனை அடக்காமை 
பற்றிய வெட்கத்
தில் தலை குனி
ந்து கொண்டே
இருக்கிறேன். 

உடலங்களை 
படிமங்க 
ளாக்கி 
ஆழ் 
பகு
தி 
யில் 
அடக்கி 
க் கொண்டே 
நொந்து 
வாழ்கிறேன். 
…..
அன்றைய 
அதி 
காலைப் பகு 
தியில் உங்களைப் 
போலவே ஆழ் துயிலில் 
இருந்து கொண்டிருக்கையில் 
படுக்கையின் 
கீழிருந்த தட்டுகள் விலகி
நான் 

ள்
ளி
ளி
ழுக்கப் 
பட்ட கணத்திலேயே வெளி 
யே தள்ளி விடப்பட்டு 
எனது இடத்தைப் பிடித்து 

ஒன்றுக் கொன்று மேலாக ஏறிக் கொண்டன 
அந்த 
…..
அதிர்வு 
பேரதிர்வு 
அ 
து தான், 
அங்கிருந்து எனைத் துரத்தியது. 

ங்களை நோக்கி ஏவி விட்டது. 
கொலையாளி 
ஆக்கியது 

முழு………வ…தும் கறு
ப்பாக்கப்பட்ட நான் உங் 
கள் வீடு 
களை உடைத்தேன் 
…..
உங்
….
….
கள்
…..
….
நிழ 
லைக் கூட நனைக்காத நான்……. 
……
…..
நீங்கள் – அல் 
லது உறவுகள் அமிழ்கையில் 
மே 
லே
தூக்கித் தள்ளி மிதக்கப்
பண்ணினேன் – மரங் 
களை அண்மித்துப் 
பிடித்துக்
கொள் 
…..
ளச் சொன்னேன் 
இது விநோ- 
தமாய் 
நட 
ந்தது 
…..
க 
ண 
ப் 
பொ 
ழுதில்
எல் 
லாமும் 
நட
ந்து 
முடி 
ந்தது. நானே
ஓய்ந்து 
அமரும் போது 
மனது 
வலி கொண்டு துடித்துப் போனேன். 
மன் 
னி 
ப்பீர்! 

போற்றுவார்
போற்ற 
ட்டும் மணல் வாரி
தூற்றுவார் 
தூற்றட்டு 
ம் 

மறுநாள் காலையில் காலைக் கடன் முடிக்க, சுற்றி அலைய என எதற்கோ கடலின் பக்கம் சென்றிருந்தவன் நுரைகளால் செதுக்கப்பட்டு மீற்றர் கணக்கில் நீண்டு கிடந்த எழுத்துக் கோர்வையைப் படித்து விட்டுக் காற்றில் கலந்து விட்டான். 

சுழன்றடித்த காற்றுக் கூட்டம் சேர்ந்து விநோதங் காட்டி கருத்துப்பகிர்வு செய்து ஓயும்போது காலடிகளும், அதிலிருந்து தெறித்து வீழ்ந்த பருக்கைகளும் நுரை குடித்துக் கடலில் குளித்து மயங்கிக் கிடந்தன. காற்று எந்தச் சலனமுமின்றி வெறுமையாக அலைந்து திரிந்தது. நிர்வாணமாக. 

20. முதலை மாநாடு

முரட்டுத்தனமான நாட்கள் கணங்களாலும், நிமிடங் களாலும் நிரப்பப்பட்டுக் கூட்டங்களாலும் மாநாடுகளாலும் உருவாகிக் கொண்டே இருந்தன. 

காற்றைக் கிழித்து வந்திறங்கிய அலுமினியப் பறவை களில் இருந்து இறங்கிய அன்னிய தேசத்து வெண்ணிற மனிதர்களால் தக்கன பிழைத்து வாழ்வதற்காக கூட்டப் பட்டன. இரகசியம் நிறைந்த பெட்டகங்கள் அவர்களுக்குக் கையளிக்கப்பட்டன. அதைத் திறப்பதற்கும், பேணலுக்கு மான அறிவுறுத்தல் அடங்கிய வழிகாட்டல் நூல்களும், வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. 

கடல் கொண்டு வந்த பொருட்களை வீட்டுள் நிரப்பும் கைங்கரியமும் முதலைகளுக்குப் போதிக்கப்பட்டன. பாம்புகள் கூட்டிய மாநாட்டுக்குப் பின் பெருந்தொகையினர் சேர்ந்து கொண்டு கலங்கடித்தது முதலை மாநாட்டில் தான். 

எல்லோரும் ஒன்றாயே கூட்டமாக இருக்கையில் உணவு களுக்காக ஒருவரை ஒருவர் நாங்களே மாறி மாறிக் கிழித் துக் கொள்ள நேரும். அத்தோடு ஆபத்தின் முன் கிழிபட்ட முகத்தை ஒழித்துக் கொள்ளலும், தப்பித்தலும் சிக்கலை அளிக்கும். சிறு கூட்டமாகி வெவ்வேறு பகுதிகளை ஆளுமை செய்வது பற்றிய குழுவாக்கலும் நடந்து கொண்டிருந்தன. 

கூர்மையற்றதாகத் தென்படும் பற்களும், கலங்கிய கண்களும் நெகிழும் மனமும், சாந்த முகமும் அவசிய மாகத் தேவைப்பட்ட ஆயுதங்களெனவும் கண்களைத் திறந்து கொண்டு மிதந்து நகரும் பழக்கமும் பயிற்றப் பட்டன. 

முதலைகளெல்லாம் பதுங்கி தங்கள் நிழலை தாங்களே தின்று ஊருக்குள் நகரத் தொடங்கின. 

இது எழுதி முடிக்கையில் வயிறும், கன்னமும் பருத்து, இறக்கை முளைத்துப் பறந்து திரிந்த முதலைகள் மட்டுந் தான் தென்பட்டன. 

பிற்குறிப்பு:- 

(இரகசியம் பேண்க)

இப்போது குழந்தை முதலைகள்கூட பிறக்கும் போதே இறக்கையுடன் பிறக்கின்றன. 

முதலையாய்ப் பிறக்க வரம் வேண்டி எட்டாயிரத்து முந் நூற்று நாற்பத்து நால்வர் நுனி விரலில் நின்று தவம் புரிந்து கொண்டிருந்தனர். 

அவைகளுக்கே சகல தலைமைப் பதவிகளையும் ஒப்படைப்பதென ஆலோசனை நடத்தப்பட்டது. 

இவ்வாறே ஊர் பேசிக் கொண்டது. 

(முற்றும்)

– ஏவிவிடப்பட்ட கொலையாளி, முதற் பதிப்பு: டிசம்பர் 2008, சிறுகுநுனி பதிப்பகம், கொழும்பு, ஸ்ரீலங்கா.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *