தாச்சிச் சட்டி
கதையாசிரியர்: புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 258
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நடுவிலம்மான் எங்கள் வளவில் இருந்த காலகட்டங்களில் தான் பெத்தாத்தை மூத்த தம்பி வாத்தியார் வீட்டு முடக்கடியில் குடியிருந்தா என ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின்பும் இவ்வளவு ஞாபகத்துடன் நான் அடித்துச் சொல்வதற்கு ஒரு காரண்ம் உண்டு. “பெத்தாத்தை வளவுக்குப் போய் பத்து வடை வாங்கிக் கொண்டு வாடா, சப்பித்தின்பம்” என நல்ல ‘மூட்’டில் இருக்கும் சமயங்களில் பத்துச் சத நாணயத்தை என் கைகளில் நடுவிலம்மான் திணித்து அனுப்பிய அந்த நாட்களை இலகுவில் மறந்துவிட முடியுமா, என்ன?
பெத்தாத்தை சுடும் தட்டை வடைக்கு அப்படி ஒரு கிராக்கி இருந்தது. ரவுணில் தேநீர்க்கடை வைத்திருப்பவர்கள்கூட, அரக்கப் பரக்க இரண்டரை மைல் தூரம் சைக்கிள் ஓடி வந்து முடக்கடி இலந்தை மரத்தின்கீழ் ‘ஸ்ராண்ட்’ போட்டுச் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு வடைக்கு ‘ஓடர்’ கொடுத்துவிட்டுச் செல்வார்கள். குருநாகல், மகோ போன்ற இடங்களில் சுருட்டுக் கடை வைத்திருந்த எங்களூர்க்காரர்களும் சுருட்டுக் கொட்டிலிலிருந்து கோடாச் சுருட்டினை எடுத்துச் செல்லும் லொறிகளில் கூடவே, பெட்டி பெட்டியாகத் தட்டை வடையையும் பெத்தாத்தை வளவிலிருந்து ஏற்றிச் செல்வார்கள்.
வடைக்கு அடைமொழியாக ஊரின் பெயரினைக் கூறுமளவிற்குத் தட்டை வடைக்கு எங்களூர் மிகவும் பிரசித்தமானது. அதைப் பதமாகத் சுடுவதற்கான சூட்சுமத்தை எங்களூர்க்காரர்கள் தான் கொண்டிருந்தார்கள். அதிலும், பெத்தாத்தை சுடும் ஒவ்வொரு வடையும் வட்டாரி வைத்து வெட்டியது போல், வட்ட வடிவாய் வரும். உப்பு, உறைப்பு எல்லாம் சொல்லி வைத்தது போல் இருக்கும். இத்தனைக்கும் வடை சுடும்போது, ஒரு துண்டை முறித்து வாயில் வைத்து ஒரு நாளும் மனுசி பதம் பார்ப்பது கிடையாது. “ஒரு வடையைத் தன்னும் கருகவிடாது பொன்னிறத்தில் மொருமொருப்பாக எப்படித்தான் சுட்டுத் தள்ளுதோ?” என என் ஆத்தைகூட, ஒரு நாள் அம்மாவுக்குச் சொல்லி அங்கலாய்த்தது என் நினைவிற்கு வருகிறது.
பெத்தாத்தை ஆத்தையின் ஒன்றுவிட்ட அக்காவாகவோ அல்லது நெருங்கிய உறவினராகவோ தான் இருப்பா என நாள் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். பத்தாங் கட்டையில் இருந்து பிழைப்பிற்காக அவர்கள் எங்களூருக்கு வந்தவர்கள் என அம்மா சொல்லித்தான், ஒருநாள் எனக்குத் தெரிய வந்தது. பெத்தாத்தையின்ரை உண்மைப் பெயர் நாச்சிப்பிள்ளையாம். சிறுமியாக இருந்தபோது, பெற்றோர் ‘பெத்தாத்தை’ எனச் செல்லமாக அழைக்க, அதுவே நிரந்தரப் பெயராகிவிட்டதாம். மூத்ததம்பி வாத்தியார் வீட்டு முடக்கில் சாவித்திரி வீட்டுக்குக் கிழக்குப் புறமாக இலந்தை மரத்தோடு செல்லும் நீண்ட குச்சொழுங்கையின் முடிவில் வரும் காணியில், பெத்தாத்தையின் குடிசை இருந்தது. இரண்டு அறைகள், முன்னுக்கு ஒரு மால் கொண்ட பனையோலையால் வேயப்பட்ட மண் குடிசை அது. பிற்புறமாக ஒத்தாப்பு இறக்கி, அதை அடுப்படி ஆக்கி இருந்தார்கள். பெத்தாத்தை தன் கைவித்தையைக் காட்டும் கூடம் அதுதான்.
பெத்தாத்தை வளவுக்கு வடக்கே ஒரு பற்றைக் காணி, ஆமணக்கும், பாவட்டையும், கத்தாளையுமாகப் புதர் மண்டிக் கிடந்தது. அந்தப் பற்றைக்குள் உடும்பு நிறைய இருந்தது. உடும்பு அடிப்பதில் ஊரை வென்ற வடலிடத்திடல் வீரனை அந்தக் காணியில் தான் அடிக்கடி காண்பதாக ரவிச்சந்திரன் சொல்வான். அதற்குள் சென்று வருவதற்காகப் பெத்தாத்தை வளவு வேலியில் ஒரு கண்டாயமும் இருந்தது.
முடக்கிற்குத் தெற்குப் புறமாகச் சலவைத் தொழிலாளர்கள் சிலர் குடியிருந்தார்கள். அவர்கள் குடிசைகளுக்கு வண்டி வைத்தால் போல் செல்லும் ஒழுங்கை, பள்ளிக்கூடத்தை ஊடறுத்தபடியே பிள்ளையார் கோவிலடியில் சென்று முடிவடைகிறது. பத்து லோட்டுக்கு ஏற்றக்கூடிய குருமணல் அத்தெருவில் குவிந்து கிடக்கும். ரவுணிலிருந்து கோயிலடிப் பக்கமாகச் சைக்கிளில் வருபவர்கள் வாசிகசாலையோடு ஒட்டியிருக்கும் சுருட்டுக் கொட்டிலைத் தாண்டியதும், சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டிக் கொண்டுதான் பெத்தாத்தை வளவிற்கு வரவேண்டி இருந்தது.
பெத்தாத்தையின் புருஷன் இளவயதிலேயே காணாமல் போய்விட்டதாகவே ஊரில் ஒருகதை இருந்தது. அவர் மேசன் பார்ட்டி ஒன்றில் ‘முட்டாளாக’ வேலை செய்தவராம். “அந்தாளுக்கு ஏதோ ஒரு நல்ல பெயர். இப்ப எனக்கு நினைவுக்கு வருதில்லை” என அம்மா சொல்வா. வேலை முடிய தினமும் குடித்துவிட்டு. உலாஞ்சி உலாஞ்சி வீட்டுக்கு வந்து உள்ள சட்டி பானைகள் எல்லாவற்றையும் ஓடாக்கி விடுவாராம். அவர் இரவில் போடும் சத்தம் எங்கள் வீட்டையும் தாண்டி நறுவிலி வைரவர் கோவிலடி மட்டும் கேட்குமாம்.
இப்படித்தான் வேலைக்கென்று சொல்லி விட்டு ஒருநாள் கருக்கலோடு போனவர் தான், நடுச்சாமம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை கைக்குழந்தையோடு பெத்தாத்தை மேசன் வளவில் சென்று விசாரித்தபோது தான், சில நாட்களாக அவர் வேலைக்கே செல்வதில்லை என்ற விடயம் தெரியவந்தது. ‘மை போட்டுப் பார் பெத்தாத்தை, ஆள் எங்கை எண்டு தெரிய வரும்” என்று அயலவர்கள் அங்கலாய்க்கவே, பெத்தாத்தையும் மூண்டாங் கட்டை முனியப்பச் சாத்திரியாரிடம் சென்று மை போட்டுப் பார்த்தா. “கிழக்குப் பக்கத்தாலை சில தடயங்கள் வரும். அவை உண்மையை உணர்த்தும்” என, எண்ணி இருவரிகள் மட்டுமே சாத்திரியார் சொன்னார்.
சாத்திரியார் சொல்லி எட்டாவது நாள், அவர் கடைசியாகக் காணப்பட்ட போது, உடுத்திருந்த நாலுமுழ வேட்டியும் தோளில் போட்டிருந்த துவாய்த் துண்டும் கடற்கரையை அண்மித்த சவுக்கங் காட்டில் கிடந்ததாகச் செம்மறி ஆடு மேய்க்கச் சென்ற சிலர் விதானையாரிடம் வந்து சொன்னதாகவும், வேட்டியில் இருந்த சலவைக் குறியைக் கொண்டே, அது பெத்தாத்தையின் புருஷனது வேட்டிதான் என உறுதிப்படுத்தியதாகவும், செய்தி அறிந்து பெத்தாத்தை நெஞ்சு நெஞ்சாக இடித்துக் குளறி அழுததாகவும், அயலவர்கள் ஆறுதல் சொல்லி மனமாற வைத்ததாகவும், அதன் பின்னரே அவ வடை சுட்டு விற்கும் வியாபாரத்தில் ஈடுபட ஆரம் பித்ததாகவும் ஊரில் கதைத்துக் கொள்வார்கள். ஆனால், இவற்றையெல்லாம் விரிவாகவும், விஸ்தாரமாகவும் எனக்குச் சொன்னது ஆதவன் அண்ணாதான். இப்பேர்ப்பட்ட கதைகளை சுவைப்படச் சொல்வதில் அவர் மகா விண்ணன். சின்னமணி கூடத் தோற்றுப்போய் விடுவார்.
சுட்ட வடைகளை விற்றுத் தருமாறு முதன் முதலில் பள்ளிக்கூடத்துக்கு முன்னால் கூப்பன் கடை வைத்திருக்கும் ஆறுமுகப்பாவைத் தான் பெத்தாத்தை கேட்டாவாம். “இது விக்குமோ எணை? எதுக்கும் வைச்சிட்டுப் போ. வித்தால்…. பிறகு காசு தாறன்” என்று சொல்லியபடி, ஐமிச்சத்தில் தான் ஆறுமுகப்பா வடையை வாங்கிக் கடையில் வைத்தாராம். எல்லோருமே அதிசயிக்கும்படி விற்கக் கொடுத்த வடை மறுநாளே விற்றுத் தீரவே, ஆறுமுகப்பா பெத்தாத்தையின் வளவுக்கே ஆளனுப்பி, வடைகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தாராம்.
கூப்பன் எடுக்க வருபவர்களுக்கும், சுருட்டுத் தொழிலாளர்களுக்கும் பெத்தாத்தையின் வடை பற்றி ஆறுமுகப்பா வியந்து சொல்லியிருக்கிறார். அதன் விளைவால் பெத்தாத்தையின் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
“என்ரை பிள்ளையின்ரை கிரக பலன் தான் வேலை செய்யத் தொடங்கி இருக்கு. அந்தப் பிள்ளையை வறுமை தெரியாமல் வளர்க்கோணும்” எனக் கூறிப் பெத்தாத்தை மகள் சாரதாவை ரவுண் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பித்தான் படிப்பித்தாவாம். சாரதா எஸ்.எஸ். ஸி இரண்டு தரம் எடுத்துப் பார்த்தாள். அவ்வளவு வாய்க்கவில்லை. பின்னர் தாய்க்கு உதவியாக வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
சாரதா அக்கா கறுத்தக் கொழும்பான் மாம்பழ நிறத்தில் ஆலடிக் கூப்பன் கடை மனேஜரைப் போல, வலு இலட்சணமாக இருப்பா. எங்களது பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புப் படிக்கிற அக்காமாரைப் போல, எப்போதும் நீட்டுப் பாவாடை சட்டையே அணிந்திருப்பா. அவவுக்கு ரவிச்சந்திரனை விட என்னைத்தான் கூடப் பிடிக்கும். ஆறுமுகப்பா கடையில் ஏதாவது வாங்க வேண்டும் என்றால், என்னிடம் தான் கேட்பா. சாமான்கள் வாங்கிக் கொடுத்தால், முடிவில் ஐந்து சதத்துக்கு தோடம்பழ மிட்டாய் அல்லது ஐந்து வடை நிச்சயம் என்பதால், சாரதா அக்கா கடைக்குப் போக வரச் சொல்லிக் கேட்டால் என்ன வேலை இருந்தாலும் நான் ஓடி ஓடிச் செய்து தந்துவிடுவேன்.
பெத்தாத்தையை எங்கள் ஆத்தையின் சகோதரி என நான் நினைத்திருந்ததற்கு அவர்களிடையே இருந்த உருவ ஒற்றுமைக்கு மேலாக, அந்நியோன்னியமும் ஒரு காரணமாக இருந்தது. ஒருவருக்கொருவர் ‘என்னடி ஆத்தை’ எனச் சொல்லித்தான் கதைப்பார்கள். எங்கள் வீட்டிலிருந்து பெத்தாத்தை வளவு நாலைந்து வீடு தள்ளியிருந்தாலும், அத்தனை வீடுகளையும் தாண்டி எல்லாத் தேவைகளுக்கும் எங்களிடமே வருவா. தான் எங்காவது செல்ல நேர்ந்தால், சாரதா அக்காவுக்குத் துணையாக வந்து நிற்கும்படி என்னையோ அல்லது அக்காவையேர்தான் கேட்பா.
பெத்தாத்தை தினமும் பின்னேரம் நாலு மணிக்கு வடை சுடும் தனது வேலையை ஆரம்பித்துவிடுவா. எங்கள் வீட்டில் குளித்து விட்டு வந்து ‘சிவசிவ’ என்றவாறே நெற்றி நிறைய விபூதி பூசி வலு ஆசாரத்துடன் தான் அடுப்படிக்குள் நுழைவா. என்னையும் ரவிச்சந்திரனையும் அக்காவையும் தவிர. வேறெந்தக் கொம்பனையும் பெத்தாத்தை அடுப்படிக்குள் அனுமதிப்பதில்லை. சாரதா அக்காவைக்கூட, மாதத்திற்கு நாலைந்து நாட்கள் அடுப்படிக்குள் வர விடமாட்டா. அதற்கான காரணம் அப்போது எனக்குப் புரியாதேயிருந்தது.
வேலிப் பூவரசில் இலைகளை ஆய்ந்து வந்து குஞ்சட்டிக்குள் போட்டு நீரில் நன்றாகக் கழுவி, வடையைத் தப்பி மூன்று நான்கு சுளகுகளில் முதலில் அடுக்கி வைப்பா. என்ன மந்திரம் சொல்லி வடையை வட்டமாகத் தப்புகிறா? என ஒட்டில் குந்தியிருந்து கொண்டே இமை வெட்டாது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த இரகசியத்தை இறுதிவரை என்னால் மட்டுமல்ல, எங்களூரில் எவராலுமே அறிய முடியாதிருந்தது.
சுளகில் அடுக்கி வைத்த, தப்பிய வடைகளைக் கொதிக்கும் எண்ணெய்த் தாச்சிக்குள் ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவா. மடங்காமல், சுருளாமல் ஒவ்வொன்றும்’உஸ்’ ஒலியெழுப்பியவாறே சட்டிக்குள் வீழ்ந்து வேகும். வடை சுடும் நேரங்களில் வளவுக்கு எவர் வந்தாலும் பெத்தாத்தை அவர்களைக் கணக்கிலும் எடுக்கமாட்டா. தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பா.
பெத்தாத்தை வீட்டிலிருக்கும் அந்த இரும்புத் தாச்சியைப் போல, நான் வேறெங்குமே பார்த்ததில்லை. அவ்வளவு பெரியதாச்சி. தட்டைவடை சுட ஆரம்பித்த நாட்களில் மாயவன் கோயில் திருவிழாவில் தேடி அலைந்து வாங்கிய சட்டியாம் அது. “இருபது வருஷமா என்னோடை மாயுது. மாயவன் எனக்குத் தந்த சொத்து இது” என அடிக்கடி கூறிக் கொள்வா. எக்காரணம் கொண்டும் எவருக்கும் அதை இரவல் கொடுக்கமாட்டா. ஒருமுறை எனது ஆத்தைகூட, ஏதோ ஒரு தேவைக்கு அதைக் கேட்டபோதுளூ ‘எடி ஆத்தை, அதை மட்டுமே கேட்காதை. வெறென்னெண்டாலும் கேள் தாறன்!” என்று முகத்துக்கு நேரேயே மறுத்துவிட்டா.
கொதிக்கும் தாச்சியில் வெந்த வடைகளை அகப்பையால் கோலி அள்ளிப்புட்டுக்குழல் பானைக்கு மேல் தவமியற்றும் நீத்துப்பெட்டிக்குள் போட்டுச் சிறிது நேரம் எண்ணெய் வடிவ விடுவா. உலர்ந்த வடைகளை மூடுபெட்டி மூடல் ஒன்றிற்கு மாற்றுவா. வேலை முடிந்ததும் மூடலின் முக்கால் பங்கிற்கு நிரம்பியிருக்கும் வடைகளைப் பெரிய மெலிபன் ரின் ஒன்றிற்குள் போட்டு, அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பெட்டகத்துள் கொண்டுபோய் வைத்துவிடுவா.
சனிக்கிழமைகளில் தாச்சிக்கு விடுமுறை. ஆனால், பெத்தாத்தை அன்றும் சில்லைக் கால்களில் பூட்டியதைப் போன்றே காணப்படுவா. சுட்ட வடைகளைப் பன்னம்போட்ட பெரிய கைப்பெட்டி ஒன்றினுள் நிரப்பி. மேல் சுளகு வைத்து மூடிக்கட்டி ரவுண் சந்தைக்கு எடுத்துச் செல்வா. காலை எட்டுமணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவா. பிரதான வீதி வழியே பயணிக்காது குச்சொழுங்கைக்குள்ளால் சென்று, பஸ் டிப்போவடியில் மிதந்து, இரண்டரைக் கட்டை தூரத்தையும் கால் நடையாகவே சென்று வருவா. “உந்த இழவு விழுவாங்களின்ரை தட்டி வானிலை போனால் பெட்டியைத் தூக்கிப் பின்னுக்குப் போட்டுடுவான்கள். வடையெல்லாம் சில்லவல்லமாக உடைஞ்சு போகும். அதைவிட, அறுபது பாகைக் கிணத்தடித் தெருவாலை நாலு கவடு வைச்சன் எண்டால் ‘டக்’கெண்டு போயிடுவேன்” எனச் சொல்லிக் கொள்வா. கொடுக்கல் வாங்கல்கள் முடிந்து உளுந்து மாவு என வடைச் சரக்குகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவ வளவு வந்து சேர பொழுது மத்தியானமாகி விடும்.
அன்றும் ஒரு சனிக்கிழமை.
“பெத்தாத்தை சந்தைக்குப் போட்டா. தோசை சுட்டுத் தாறன். எழும்பிச் சாப்பிடடுட்டு ஓடிப் போய்ச் சாரதா அக்காவோடை துணைக்கு நில்” என, அம்மா என்னைத் துயிலெழும்பிச் சொன்னா.
முதல் நாள் இரவிரவாகப் பிள்ளையார் கோவில் வடக்கு வீதியில் சின்னமணி குழுவினரின் சத்தியவான் சாவித்திரி கூத்துப் பார்த்துவிட்டு வந்து படுத்ததில், உடம்பு ஒரே அசதியாக இருந்தது. எழும்பப் பத்து மணிக்கு மேலாயிற்று.
நித்திரைப் பாயால் எழும்பி, அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து அம்மா சுட்டுத்தந்த ஆவி பறக்கும் தோசையைச் சம்பலுடன் உறைக்க உறைக்கத் தின்றுவிட்டுப் பெத்தாத்தை வீட்டுக்குச் சென்றேன். வளவுப் படலை உட்பக்கமாகத் தெண்டிக் கொழுவப்பட்டிருந்தது. காவோலை வேலிக்குள்ளால் கையை விட்டுக் கொழுக்கியை உயர்த்திப் படலையைத் திறந்தவாறே உள் நுழைந்தேன். வளவு வெறிச்சோடிக் கிடந்தது. “சாரதா அக்கா சாரதா அக்கா” எனச் சத்தமாக நாலைந்து தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தேன். வீட்டு அறைகள் பூட்டிக் கிடந்தன. கதவுகளிலும் திறப்பைக் காணோம். பூவரசம் சருகுகள் முற்றம் முழுவதுமாய்ப் பரவிக் கிடந்தன. “சாரதா அக்கா எங்கு சென்றிருப்பா?”
வளவின் பின்புறமாகச் சென்று பார்த்தேன். அடுப்படிப் படலையும் தெண்டிக் கிடந்தது. வளவுக்கு வடக்கே கண்டாயத்துக்கு அப்பால் பாவட்டம் பற்றைக்குள் ஏதோ சரசரத்துக் கெட்டது. அங்கு தனிமையில் நிற்க எனக்குப் பயம் பிடித்தது. விறுவிறுவென நேராக படலையைத் திறந்து கொண்டு குச்சொழுங்கைக்குள்ளால் மிதந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தேன். மூத்த தம்பி வாத்தியார் வீட்டு வண்டில் படலையடியில் சென்று கொண்டிருந்த போது, என் பெயரைச் சொல்லி யாரோ சத்தமாக அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். இலந்தை மரத்தடியில் சாரதா அக்கா. தலைமயிர் காற்றில் பறக்க நின்று கொண்டிருந்தா.
திரும்பிச் சாரதா அக்காவை அண்மித்தேன்.
அவவின் முகம் முத்துமுத்தாய் வியர்த்திருந்தது. கேசம் கலைந்திருந்தது. மேற்சட்டை கசங்கி உட்சட்டை நாடா அரையும் குறையுமாக வெளியில் தெரிந்தது. சட்டென்று பக்கவாட்டில் திரும்பியபோது தான் கவனித்தேன். பிற்பாவாடை முழுவதும் பிசங்கிக் கிடந்தது.
“எத்தினை தரம் கூப்பிட்டனான், அக்கா, எங்கை நிண்டனீங்கள்?”
“அறையைப் பூட்டிப்போட்டு உள்ளை சட்டை மாத்திக் கொண்டு நிண்டனானடா. அதுக்கிடையிலை நீ அவசரப்பட்டு வந்திட்டாய். நல்ல பிள்ளை எல்லே? தேத்தண்ணி போடச் சீனி வாங்கிக் கொண்டுவா. சந்தையாலை ஆத்தை வந்த உடனை காசு தாறாவாம் எண்டு சொல்லு” தனது மேற்சட்டையைக் கைகளால் இழுத்துச் சரி செய்தவாறே சாரதா அக்கா சொன்னா.
தலைய ஆட்டியவாறே ஆறுமுகப்பா கடையை நோக்கி ஓடினேன்.
“ஓடாமல் ஆறுதலாய்ப் போய்வா அப்பு. கவனம் சயிக்கிளுகள் வீச்சா வரும். பாத்துப்போ!” என்றவாறே சாரதா அக்கா குச்சொழுங்கை வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தா.
வாசிகசாலை, சுருட்டுக் கொட்டிலைத் தாண்டி ஆறுமகப்பா கடையை வந்தடைந்தேன்.
கடையடியில் ஆறுமகப்பாவைக் காணவில்லை. கதவுகள் யாவும் இழுத்து மூடப்பட்டிருந்தன.
பெரிய சங்கக்கடைக்கு அவர் கூப்பன் சாமான் எடுக்கக் கொண்டு செல்லும் ஒற்றை மாட்டு வண்டில் சுருட்டுக் கொட்டிலுக்கும் வாசிகசாலைக்கும் இடையில் நின்று கொண்டிருந்தது. அப்போ அவர் இங்கு தான் எங்காவது நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கடைக்குத் தெற்கே, கேணிப் பக்க வாயில் வழியாகப் பின்புறம் சென்றேன். அங்கே வெற்றிலையை மென்று கொண்டு நாம்பன் மாட்டுக்கு வைக்கோல் பரவிக் கொண்டிருந்தார்.
“என்னடா ஆறுமுகம்?” என்றார் என் ஐயாவின் பெயரைச் சொல்லித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். விடயத்தைச் சொன்னேன். “கொஞ்சம் பொறு” என்றார். அவர் வரும்வரை காத்திருந்து சீனியை வாங்கிக் கொண்டு முடக்கடியில் நான் வந்து கொண்டிருந்த போது, குச்சொழுங்கைக்குள்ளால் வேர்க்க விறுவிறுக்க வடலித்திடல் வீரன் நெஞ்சை நிமிர்த்தியவாறே வந்து கொண்டிருந்தான். “ஆணழகன்” என ரவிச்சந்திரன் அவனுக்கு அர்த்தத்துடன் தான் பட்டம் வைத்திருக்கின்றான் என நான் மனதிற்குள் நினைத்தவாறே,”ஏன் இண்டைக்கு உடும்பு பிடிபடல்லையோ?” என்று கேட்டேன்.
பதிலேதும் சொல்லாது உதட்டைப் பிதுக்கியவாறே இலந்தை மரத்தை உரசிக்கொண்டு வந்து தெருவில் இறங்கி அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் உதட்டைப் பிதுக்கியதன் அர்த்தம் புரியாது, விறுவிறுவென நடந்து சாரதா அக்காவின் வளவை அடைந்தேன்.
அடுப்படிக்குள் மண்டிச் சுழன்ற புகை வரிச்சு மட்டைக்குள்ளால் குபுகுபு என வெளியேறிக் கொண்டிருந்தது. சாரதா ஆக்கா திருகுபலகையில் குந்தியிருந்தவாறே முழங்காலில் நாடியை வைத்துக் கொண்டு சுவாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தா. முகம் வாடியிருந்தது.
“அக்கா…. அக்கா;; எனக் கூப்பிட்டேன்.
“எட நீ வந்திட்டியே……?;; என்றவாறே தேநீர் தயாரிக்க ஆயத்தமானா.
“அக்கா இண்டைக்கு வீரனுக்கு உடும்பு பிடிபடவில்லையோ?” வழமையாக நானமரும் ஒட்டில் குந்தியபடியே கேட்டேன்.
எதுவுமே பேசாது சொண்டைப் பிதுக்கியபடியே மூடலைத் திறந்து நாலைந்து வடையை என்னிடம் நீட்டினா.
வடையை வாங்கி முறித்து வாயில் போட்டேன்.
“என்னடி பிள்ளை நீ இண்டைக்கு முத்தங்கித்தம் கூட்டேல்லையே? ஒரே சருகும் கஞ்சலுமாகக் கிடக்குது” என்றவாறே படலையைத் திறந்தபடியே சந்தையிலிருந்து களைத்துப்போய் வந்து கொண்டிருந்தா, பெத்தாத்தை.
சாரதா அக்கா தந்த தேநீரைக் குடித்துவிட்டு, மிகுதி வடையைக் காற்சட்டைப் பொக்கெற்றுக்குள் போட்டுக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தேன்.
அன்று முழுவதும் மனது மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அது எதற்கு என்பது தெளிவாகவில்லை.
மூன்றோ அல்லது நான்கோ கிழமைகளின் பின்னர் அன்றும் ஒரு சனிக்கிழமை. அது சரியாக நினைவிருக்கிறது….
வறட்சியான காற்று வீசிக் கொண்டிருந்த அதிகாலை நேரம். காலைக் கடன்களை முடித்த பின்னர், எங்கள் வீட்டு முன் விறாந்தைப் படிகளில் இருந்தவாறே தேவாரம் ஒன்றினை நான் மனனம் பண்ணிக்கொண்டிருந்தேன்.
வீட்டுக் கேற்றடியில் நின்றவாறே “பாறுபதி….. பாறுபதி” என அவசர அவசரமாக அம்மாவை யாரோ அழைத்தது கேட்டது. விறாந்தை விளிம்படிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். ஆதவன் அண்ணாவின் தாயார் தங்கம்மா மாமியின் தலை கேற்றிற்கு வெளியே தெரிந்தது. அழைத்த குரல் கேட்டு அடுப்படிக்குள் அரிசிப் புட்டு அவிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்மா. புட்டவிப்பதை இடைநடுவில் நிறுத்திவிட்டு கேற் பக்கமாக ஓடிச் சென்றா.
“எடியே பாறுபதி உனக்குச் சங்கதி தெரியுமோ?” என்று தங்கம்மா மாமி கேட்பது மட்டும் என் காதுகளில் தெளிவாக விழுந்தது. அதைத் தொடர்ந்து தணிந்த குரலில் இருவரும் ஏதோ குசுகுசுத்துக் கொண்டு நின்றார்கள். றேடியோ சிலோன் செய்திகளில் டட்லி சேனநாயக்காவின் பெயர் அடிக்கடி வருவது போல, அவர்களது பேச்சில் பெத்தாத்தை, சாரதா அக்கா ஆகியோரின் பெயர்கள் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
“அப்பவே நான் பெத்தாத்தைக்கு ஆயிரந் தரஞ் சொல்லியிருப்பன், அந்தக் கண்டறியாத கண்டாயத்தை அடைக்கச்சொல்லி!” என் அம்மா சத்தமாகச் சொல்லிக்கொண்டு அடுப்படிக்குள் சென்று கொண்டிருந்தா. அடுப்பில் அவிந்த புட்டைப் பானையுடன் இறக்கித் திருகணையில் வைத்து கரப்பால் மூடிவிட்டு, மீண்டும் வெளியில் வந்தா.
“உதிலை பெத்தாத்தை வளவடிக்குப் போட்டோடி வாறன். படிச்சுக் கொண்டிரு.” என்று எனக்குக் கூறிவிட்டுப் பாதுகாப்பு உத்தியோகத்தர் போல கேற்றடியில் காவல் நின்ற தங்கம்மா மாமியுடன் தெருவில் இறங்கி, இருவருமாகப் பெத்தாத்தை வீட்டுப் பக்கம் சென்றார்கள்.
அவர்கள் சென்று பத்து நிமிடங்களும் ஆகியிருக்காது. நறுவிலிக்கு அப்பால் புதுவீட்டில் இருக்கும் ஆத்தையும் தலைதெறிக்க ஓடிவந்து,”அம்மா எங்கே” என்று கேட்டா. “பெத்தாத்தை வளவுக்கு…” என நான் கூறி முடிக்க முன்னரே, “அதுக்கிடையிலை போட்டாளோ…?” என்று வெடுக்கெனக் கூறியவாறே வந்த வேகத்தை இருமடங்காக்கிப் பெத்தாத்தை வீட்டுப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தா.
பெத்தாத்தை வளவிலை என்ன பிரச்சினையாக இருக்கும்? இந்த நேரமெண்டு பாத்து அண்ணனும் அக்காவும் பாடஞ்சொல்லிவிக்கப் போட்டினம். இவன் ரவிச்சந்திரனும் விளையாட வாறதுக்கு நேரங்கிடக்கு… ஆரைக் கேட்கலாம்? எனச் சிந்தித்தவாறே “எதற்கும் பெத்தாத்தை வளவுப் பக்கம் சென்று பாத்தால் என்ன?” என்றெண்ணியவனாகக் கேற்றைக் கயிற்றால் கட்டிவிட்டுத் தெருவில் இறங்கி, நடக்க ஆரம்பித்தேன்.
மூத்ததம்பி வாத்தியார், சாவித்திரி ஆகியோர் வளவுகளைக் கடந்து முடக்கடியில் சென்றபோது, பெத்தாத்தை வளவுப் பக்கமாகத் தலைக் கறுப்புகள் தெரிந்தன. இலந்தை மரத்துக்குக் கீழ் நின்றவாறே எங்கள் வீட்டுக்குச் சலவை செய்யும் செல்லனும், எங்கள் வீட்டுக்கு முன்னாலிருக்கும் புசபதியும் ஏதோ கதைத்துக்கொண்டு நின்றார்கள்.
தங்கம்மா மாமி தவித்து விழுந்து குச்சொழுங்கைக்குள்ளால் வந்து கொண்டிருந்தா. “பாவம் பெத்தாத்தை காலம் பறயிலையிருந்து ஒரு தண்ணிவென்னியில்லாமல் கிடக்குது…. அதுான் உதிலைஆறுமகப்பாவட்டை ஒரு பழச் சோடா வாங்கிக் கொணந்து குடுக்கலாமெண்டு போறன்” என பசுபதிக்கு கூறியவாறே. என்னருகே வந்தா.
“ஏன் மோனை இதிலை நீ நிக்கிறாய்? பெத்தாத்தை வீட்டை நீ போகக்கூடாது. மிலாந்திக் கொண்டு நில்லாமல், உங்கடை வளவுக்கை போய் இரு. கொஞ்சத்தையாலை கொம்மா வந்திடுவள்.” என்று கூறியவாறே, குருமணலுள் கால்கள் புதைய ஆறுமகப்பா கடையடிப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தா.
அரைமனத்துடன் ஒவ்வொரு, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வீடு நோக்கி நடந்தேன்.
எங்கள் வளவுக் கேற்றடிக்கு வந்தபோது, கேற் நான் கட்டியபடியே இன்னும் இருந்தது.
‘அண்ணனும் அக்காவும் இன்னும் படிப்பாலை வரேலைப் போலை கிடக்கு…’ இண்டைக்கெண்டு அறுந்த வாத்தியார் இன்னும் படிப்பிச்சுப் படிப்பிச்சுக் கொண்டு நிற்கிறார்.
வாசல் வெளிக் குந்தில் இருந்தேன்.
முன்னால் பசுபதி வீட்டு நாய் ‘வள் வள்’ என்று ஆதவன் அண்ணா வீட்டுப் பக்கமாகப் பார்த்துக் குரைத்துக் கொண்டு நின்றது. ‘உந்த நாய்க்கென்ன விசர் பிடிச்சுப் போச்சுதோ?’
மூத்ததம்பி வாத்தியார் வீட்டுப் பக்கமாகப் பச்சைச் சேலை அசைவது தெரிந்தது. அம்மாதான் வந்து கொண்டிருந்தா. அம்மாவை நோக்கி ஓடிச் சென்றேன்.
“என்னம்மா பிரச்சினை, எல்லாரும் ஓடித் திரியிறியள்?;”
“…………”
“அம்மா கேக்கிறன் பேசாமல் வாறாய். பெத்தாத்தைக்கு என்னம்மா?”
“பெத்தாத்தைக்கு ஒண்டுமில்லை…… சாரதா…”
“சாரதா அக்காவுக்கு என்னம்மா?”
“நேற்று ராத்திரியிலையிருந்து அவளைக் காணேலையாம்.”
“ஏன்…. எங்கை போட்டா?”
“…………”
“அம்மா சாரதா அக்கா எங்கை போனவவாம்?”
“அது… அதுதான்…. தெரியேல்லை…. நீ வா சாப்பிடு.. கொண்ணனும் கொக்காவும் இன்னும் பாடஞ் சொல்லிவிச்சுக்கொண்டு வரேலையே?” என்று கேட்டவாறே. கேற்றில் நான் போட்ட கட்டை அவிழ்த்து உள் நுழைந்தா அம்மா.
பசுபதி வீட்டு நாய் இன்னமும் குரைத்துக்கொண்டு நின்றது.
‘ஏன் இந்த அம்மா உம்மாண்டி மாதிரி ஒண்டுஞ் சொல்லாமல் போறா….? சாரதா அக்கா ஏன் காணாமல் போய்விட்டா….? அவவும் தேப்பனைப் போல சவுக்கங் காட்டுப் பக்கமாக… கடவுளே அப்பிடி எதுவும் அவவுக்கு நடக்கக் கூடாது…’ நறுவிலி வைரவர் இருக்கும் திசையை நோக்கி மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்.
இது நடந்து அடுத்தடுத்த நாள் அன்று திங்கட்கிழமை. நான் பள்ளிக்கூடம் சென்றபோது எனது வகுப்பில் பரமேசையும் சாவித்திரியையும் தவிர, வேறெவரையும் காணவில்லை. மேசை மீது எல்லோரினது புத்தகப் பைகளும் அனாதைகளாய்க் கிடந்தன. ‘பொடியங்கள் எல்லாரும் பின்னுக்கு வகுப்பறைகள் கூட்டப் போயிருப்பாங்கள் போலை’ என்று எண்ணியவாறே புத்தகப் பையினை வைப்பதற்காக என் மேசையருகே சென்றேன்.
அப்போது, என் மேசைக்கு நேர் முன்னாலிருக்கும் பரமேசுக்குப் பக்கத்திலிருந்தவாறே சாவித்திரி சொல்லிக் கொண்டிருந்தாள். “எடியே ராமுழுக்கப் படிக்கேலாமல் போச்சுதடி. எங்கடை வீட்டுக்குப் பின்னாலை இருக்கிற வீட்டில் ஒரே சத்தமும் சச்சரவுமடி. அந்த வீட்டு அக்காவை இரண்டு நாளாகக் காணேலை எண்டு வடை சுட்டு விக்கிற அந்தப் பெத்தாத்தைக் கிழவி ஒரே ஒப்பாரியடி. அது போதாதெண்டு, உன்ரை அருமந்தப் பெட்டை செய்த வேலைக்கு இனி நீ வடை சுட்டு வித்தாலும் ஊருக்குள்ளை ஒரு சனமும் வேண்டமாட்டினம். மரியாதையா ரண்டொரு நாளிலை என்ரை காணியை விட்டு வெளிக்கிடு. இல்லாட்டி வீட்டோடை கொழுத்திப் போடுவன் எண்டு அந்தக் காணிக்குச் சொந்தக்காறன் வந்து கத்து கத்தெண்டு கத்தி… ஒரே பிரச்சினையடி”
அதற்குள் காஞ்சனாவும் வடலித்திடல் விமலாவும் வகுப்பிற்குள் நுழையவே சாவித்திரி அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட்டாள்.
அச்சமயம் வாசலில் கூடி நின்ற பெண்பிள்ளைகளை விலக்கிக் கொண்டு அவசர அவசரமாக உள் நுழைந்த ரவிச்சந்திரன் புத்தகப் பையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக என் காதுக்குள் குசுகுசுத்தான். “டேய் ஆணழகனை ரண்டு மூண்டு நாளாகக் காணேலையாம். ஊருக்குள்ளை ஏதேதோ எல்லாம் கதைக்கினம்.”
சொல்லிவிட்டு ரவிச்சந்திரன் சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சொன்னான். “இனி உடும்புகளுக்கு வலு கொண்டாட்டம் தான்.”
எனக்கு அப்போதுதான் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டிற்று. அவன் சொல்லி வாய்மூடத் தலைமை வாத்தியாரின் அறையிலிருந்து முதலாம் மணி அடித்துக் கொண்டிருந்தது.
அப்போது ஐயர் வீட்டு விமலா எழும்பி தலைமை வாத்தியாரின் அறைப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தாள்… தேவாரம் சொல்வதற்காக.
அன்று பள்ளிக்கூடம் முடிந்து நான் வீட்டிற்குச் சென்றபோது, முன் விறாந்தையில் நாங்கள் படிக்கும் மேசைக்கருகில் பெரிய தாச்சி ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. ‘இது பெத்தாத்தையின்ர தாச்சியெல்லோ?’ என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, அடுப்படிக்குள் இருந்து வந்த அம்மா சொன்னா…
“பெத்தாத்தை இண்டைக்கு காலமை ஒன்பது மணி வசுவிலை தங்கடை ஊருக்குப் போட்டா. இனி இஞ்சை வரமாட்டா. இந்தத் தாச்சியை ஆத்தையிட்டைக் குடுக்கச் சொல்லித் தந்திட்டுப் போறா. அதோடை உனக்கும் கொஞ்சம் வடை தந்திட்டுப் போறா.”
பொங்கி வந்த அழுகை என் தொண்டைக் குழியில் வந்து தடுக்கிக் கொண்டு நின்றது.
– ஜூன் 2009, மல்லிகை.
– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.
![]() |
புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 29, 2026
சூடா இருக்க வேண்டிய மனசு
கல்பனா ராஜகோபால்
June 29, 2026
அகந்தை வெறி!
மா.சித்திவினாயகம்
June 26, 2026
