கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 254 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழவருக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. வயிறு நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. பழக்கப்பட்ட பசிக் களை தான் எனினும், இன்று தாங்க முடியாமலிருந்தது. மரம் ஒன்றில் சாய்ந்தபடி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றார். 

கடந்த ஆறேழு மாதங்களாகத் தொடங்கிய வாரோட்டம் இடம் மாறி இடம் பெயர்ந்து, இன்று இங்கு வந்து முடிவடைந்திருக்கிறது…. முடிவடைந்து விட்டதாக முற்று முழுதாகக் கூறி விடவும் முடியாது. இந்த இடப்பெயர்வும் அவலமும் முன்னர் பத்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த போதே ஆரம்பித்து விட்டாலும், வன்னிக்கு வந்தபின் கடந்த சில வருடங்களாக ஒரு நீண்ட இடைவேளை தான் கிடைத்தது. ஆனால், வட்டியும் குட்டியுமாகச் சேர்ந்து நாலாம் கட்டப் போரில் நரகத்தையே தரிசிக்க வைத்து விட்டது. ஷெல் விரட்ட விரட்ட எல்லோரும் வீடிழந்து, பொருளிழந்து, உறவுகளை இழந்து, காயம் பட்டு அங்கவீனர்களாகி உயிரைக் கையில் பிடித்தபடி எத்தனையோ இடப்பெயர்வுகள். 

இத்தனைக்கு இடையிலும், கிழவர் தாக்குப் பிடித்து உயிரோடு வவுனியா முகாம் வரை வந்து சேர்ந்தது அதிசயம் தான்! இளமையிலே ராஜபோக வாழ்வில் உண்ட உணவும் அதிர்ஷ்டமும் தான் கிழவரைக் காப்பாற்றியிருக்கிறது. இந்த இடைக்காலத்தில் எத்தனையோ வயோதிபர்கள் பசி பட்டினியாலும் சிகிச்சை பெற வாய்ப்பின்றி நோய் நொடியினாலும் சன்னங்கள் துளைத்தும் இறந்து விட்டார்கள். இன்றைய பயணத்தின்போது கூட, ஒரு வயோதிபரும், ஒரு குழந்தையும் பசியில் இறந்து விட்டனர். 

இறுதிக் கட்டத்தில் உக்கிரப் போர் மத்தியில் அவர்கள் இடம்பெயர்ந்த கதையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. வழி வழியே சன்னம் பட்டும், உடல் கருகியும் எத்தனை எத்தனை பேர் இறந்து விட்டார்கள்! காயம் பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்த உறவுகள் துடிதுடிக்க, எத்தனையோ பேர் எதுவும் செய்ய முடியாது அப்படி அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தார்கள். 

கிழவருக்குப் பசியும் தாகமுமாக இருந்தது. பஸ்ஸில் ஏறிய போது குடித்த ஒரு குளிர்பானம் மட்டும் தான் இன்றைய ஆகாரம். அதுவும் எத்தனை நாட்களுக்குப் பின்னர்….? எரிக்கும் வெயிலின் வெக்கையில் நா வரண்டது. ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு மிடறு தண்ணீருக்குமாய் தவித்தார். 

“தம்பியவை…. கொஞ்சம் தண்ணி தாங்கோ மேனை…” கிழவரின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்தது. யாருக்கும் கேட்கவில்லையோ? அல்லது கேட்டும் கொடுக்க முடியவில்லையோ? தண்ணீர் கிடைக்கவில்லை. தொலைவிலே வாகனத்தில் சாப்பாட்டுப் பார்சலும் தண்ணீரும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எனினும், அங்கு நெருக்கடியாக மக்கள் தவம் கிடந்து இடிபட்டு நசிபட்டு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். எழும்பி நிற்கவே முடியாத களைப்பும் பசியுமாக இருந்த கிழவரால், அங்கு போய் நெரிபட்டு உணவு, நீர் பெறமுடியுமா  என்ன? 

யாராவது உதவுவார்களா? என அங்கலாய்ப்புடன் சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரக்கமுள்ள ஒரு பிறவியாவது அருகே வரமாட்டார் என அவரது மனம் ஏங்கியது. எனினும், எவரின் உதவியும் கிடைக்கவில்லை. 

மயக்கமும் ஆழ்நினைவுமாகக் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த கிழவரின் மனதில் பழைய வாழ்வின் நினைவு ஊர்வலம் தரிசனமாகிறது. 

கடந்த ஒரு தசாப்த வன்னி வாழ்வுக்கு முன்னரான யாழ்ப்பாணக் குடாநாட்டு வாழ்வில் கிழவர் எவ்வளவு சீரும் சிறப்புமாக வாழ்ந்தவர்… 

வீடென்ன, வளவென்ன, தோட்டம் துரவென்ன, வயலென்ன, மாட்டுப் பட்டி என்ன…. பனங்காணி என்ன ஓ…. என்ன குறை இருந்தது? வீடு நிறைந்த மா, பலா, தென்னை, கறிமுருங்கை…. ம்… அது ஒரு பொற்காலம்! 

அவரது விடே ஒரு அன்னதான சத்திரம் போல் தான்! ஊரில் அவரை எல்லோரும் பெரியவர் என்று தான் மதிப்போடு அழைப்பார்கள். அதிலும், போர் சூழல் ஆரம்பமான காலத்திற்கு முந்தைய நாட்கள்…. 

என்றுமே உணவுக்கோ, நீராகாரத்திற்கோ குறைவில்லை. வந்து போகும் அனைவருக்கும் தாக சாந்தியாவது கிடைக்கும். உள்ளே, வெளியே என்ற பேதங்கள் இருந்தாலும் கொடுப்பதில் குறைவே இல்லை! மோர் அல்லது எலுமிச்சம் பழத் தண்ணியாவது குடித்துவிட்டுத் தான் போவார்கள். சாப்பாட்டு நேரத்தில் வந்து விட்டால், கை நனைக்காமல் யாரும் போகமாட்டார்கள். சோறு கறிக்குப் பஞ்சமேயில்லை. பெரியவரின் மனைவியிடம் அட்சய பாத்திரம் இருக்கிறதோ, என்னவோ? எனப் பேசிக் கொள்வார்கள். 

சொந்தக்காரர்கள், அயலவர்கள், வெளியூர்க்காரர்கள் யாராக இருந்தாலும் பசியாறித்தான் போவார்கள். குறைந்த பட்சம் குலை தள்ளியிருக்கும் செவ்விளனியில் ஒன்றாவது கிடைக்கும். 

காணியில் வேலை செய்யவும் வீட்டு வேலை செய்யவும் வெளி வேலை செய்யவும் எடுபிடிகளாக எத்தனையோ பேர்! பாரபட்சங்கள், பாகுபாடுகள், பாரம்பரியமாக வந்த வேறுபாடுகள் இருந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த காலம். 

கொடுத்து வாழ்ந்த அந்தக் கால வாழ்வில் பெரியவரின் வீட்டுக்கு, வெளியிலிருந்து அரிசி வாங்கியதாக இல்லை. எல்லாம் அவரது வயல் நெல்லுத் தான். தோட்ட மரக்கறி தான்! பயிரிட்ட வெங்காயம், மிளகாய்தான்! 

அவரது வீட்டில் அடிக்கடி அன்னதானம் நடக்கும். பெற்றோர், பாட்டன்மார்களின் திவசம் வருடா வருடம் தப்பாமல் கொடுப்பார். வருடா வருடம் கதிர்காமம் போய் வந்தால், கதிர்காமப் பூஜை என்று அன்னதானம் கொடுபடும். பொருளாதார நிலையில் பின்தங்கிய உறவினர் எல்லாம் ஒன்றுகூடி முதல் நாள் இரவிலிருந்தே சமையல் அடுக்குகள் தொடங்கிவிடும். அதிகாலையில் சமையல் வேலைகள் தொடங்கினால், மதியம்வரை தொடரும். பெரிய கிடாரங்களில் சோறு, கறி என வெளியில் தற்காலிகத் தட்டி கட்டிச் சமையல் நடைபெறும். 

மதியம் உறவுகளுக்கு மட்டுமன்றி, அயலட்டையில் உள்ள குடிமைகளுக்கும் ஏழைகளுக்கும்கூட பெரு விருந்துதான். குறைந்தது ஒரு மூட்டை அரிசிச்சோறு! பிராமணர் பாடும் கொண்டாட்டம் தான். அரிசி, மரக்கறி, தானப் பொருட்கள் தட்சணை எதற்குமே குறைவில்லை. 

அந்த நாட்களில் குறைந்தது மூன்று நாலு பந்தியாவது சபை இருந்தெழும்பும். குடிமைக் குடும்பங்களுக்குப் பின்னர் மூடல் சட்டிகளில் சோறு வழங்கப்படும். அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டு போய் தத்தமது வீடுகளில் சாப்பிடுவார்கள். 

கொடுத்து உண்ட கை, இன்று ஒரு பிடி சோறுக்காக ஏங்கித் தவிக்கிறது. கிழவர் நெடுமூச்செறிகிறார். 

கிழவர் கண் விழித்துப் பார்க்கிறார். இடிபட்டுச் சென்று ஒரு சோற்றுப் பார்சலை வாங்கி வந்த தாய் ஒருத்தி, தனது பிள்ளைகளுக்குச் சோற்றைப் பிசைந்து ஊட்டுவதைப் பார்க்கக் கிழவருக்கு நா ஊறியது. இரண்டு மூன்று நாட்கள் பட்டினி இருந்திருக்கவேண்டும். குழந்தைகள் வதவத என்று உண்டன. இடையே தாயும் ஒரு பிடி உண்டாள். 

கிழவரின் அதிர்ஷ்டமோ என்னவோ? கிழவரை நோக்கி ஒரு இளம் மனிதன் நடந்து வந்தான். 

“ஐயா, ஏதாவது சாப்பிட்டீங்களா?” 

அன்பான அவனது கேள்வியில் அவரது உள்ளம் குளிர்ந்தது. 

“இல்லை ராசா…” பழைய மிடுக்கு இல்லாத பதில். 

“இருங்கோ ஐயா… பார்சல் ஒண்டு வாங்கி வாறன்….” 

“தண்ணியும் வேணும் ராசா…” 

தெரியாத இளைஞனாயினும் அன்போடு வந்தவனிடம், உரிமையோடு கிழவரால் கேட்க முடிந்தது. 

இளைஞன் கெட்டித்தனமாகச் சிறிது நேரத்தில் சோற்றுப் பார்சலுடன் வந்தான். கிழவரின் முகம் மலர்ந்தது. பார்சலை நன்றியோடு பெற்றுப் பிரித்தார். சிறிதளவு சோறு, மட்டமான கறிகள், இருந்தாலும் அந்த நேரப் பசிக்குக் கடவுளைக் கண்டது போலிருந்தது. 

ஒரு பிடி உண்டதும் விக்கல் எடுத்தது. 

“தண்ணிப் போத்தல் கிடைக்கயில்லை…. ஆரிடமாவது இருந்தால் வாங்கி வாறன்… என்னைத் தெரியுதோ ஐயா….?” சிரித்தபடி கேட்டு விட்டு, தண்ணீர் தேடிச் சென்றான். 

கிழவர் அவனை நினைவுக்குக் கொண்டு வரப் பார்த்தார். முடியவில்லை. ஊரிலோ அல்லது வன்னியிலோ சந்தித்திருக்கக்கூடும். எங்கேயோ பார்த்த முகச் சாடையாக இருந்தது. 

அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இளைஞன் தண்ணீருடன் வந்தான். தண்ணீரை வாங்கி மடமட என்று குடித்தார். உடலெங்கும் தேனாறு பாய்வது போலிருந்தது. 

“ராசா….. உன்னை நினைவுக்குக் கொண்டு வரமுடியேல்லை…. நீ ஆர் எண்டு ஞாபகம் வருகுதில்லை….” 

“உங்கட ஊர்தான் ஐயா……’ 

“எங்கட ஊர் எண்டா யாழ்ப்பாணமோ?” 

“ஓம்…….. கரவெட்டி தான் ஐயா……..’ 

“உன்ர பேர் என்ன ராசா?…… ஆற்றை மேன்…..?” 

“சின்னவியின்ர மகன்….. உங்கட மூத்தவரோட படிச்சனான்.” 

“ஓ…. சுகந்தனோட படிச்சனி….. தியாகன் தானே?” ஏதோ மனதில் நெருடலாய் ஒரு முள் தைக்கிறது. 

கிழவரின் மனதில் மீண்டும் நினைவுகளின் ஊர்வலம். நெஞ்சின் அலைகளில் கண்களின் நீர். 

காணியில் மாமரங்கள் நிறைய உண்டு. வகைக்கு ஒன்றாக, அம்பலவி, விலாட்டு, பாண்டி, கிளிமூக்கன் என இருந்தாலும் நாலைந்து கறுத்தக் கொழும்பான் மாமரங்களும் இருந்தன. மாம்பழக் காலம் தொடங்கிவிட்டால் கிளிக்கும், அணிலுக்கும் மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கொண்டாட்டம் தான். வரும் எல்லோருக்கும் மாம்பழம் கொடுத்து அனுப்புவார். 

மாங்காய் முற்றியவுடன் மரத்திலேறிப் பழம் பறிப்பதில் தியாகன் வலு விண்ணன். உச்சக்கிளை வரை குரங்கு போல் தாவி ஏறிப் பழம் பறிப்பான். 

தியாகனும் பெரியவரின் மகன் சுகந்தனும் ஒரே வகுப்பில் படித்தார்கள். பேதங்களை மீறி அவர்களிடையே நல்ல நட்பு இருந்தது. இது பெரியவரின் உறவினர்களுக்குப் பிடிப்பதில்லை. 

ஒரு தடவை பெரியவரின் வீட்டில் திவசம் நடந்தது. சுகந்தன் சாப்பிடும்போது தனது நண்பன் தியாகனையும் அருகே அமர வைத்தான். பந்தியில் சலசலப்பு. 

“எழும்படா நாயே?….. முளை விடக்கு முந்தி அவ்வளவாய்ப் போச்சோ?……. சமபந்திக்கு வெளிகிட்டிட்டினம்….. இனிச் சம்மந்தம் பேசியும் வருவினம்…..” ஒருவர் தியாகனைக் கொறகொற என்று இழுத்து அடிக்க, மற்றவர்களும் திட்டித் தீர்த்தனர். சுகந்தனால் எதுவும் செய்யமுடியவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றான். 

இதற்கிடையில் சத்தம் கேட்டு வந்த பெரியவர், ”சின்னப் பொடியனுக்கு விளங்குமோ….? அடியாதையுங்கோ…. சுகந்தன் கூப்பிட்டதால் வந்திருக்கிறான்…….” என்று அவனை விடுவித்தார். 

“ஓடு வீட்டுக்கு….” 

தியாகனை விரட்டிய பின்னும் சின்னவிக்கும் உறவினர்களுக்கும் திட்டு விழுந்தது. கோபமும் அவமானமுமாகச் சின்னவியும் உறவினர்களும் சோறு கறி வாங்காமல் வெறும் மூடல் பெட்டிகளுடன் திரும்பினார்கள். 

அதற்குப் பின்னர் அவர்கள் ஒருபோதும் பெரியவர் வீட்டிற்கோ அவரது உறவினர்களான இதர வேளாளர்கள் வீட்டிற்கோ திவசச் சோற்றுக்குப் போவதில்லை. 

போரும் இடப்பெயர்வுமாய் மூன்று தசாப்தங்கள் கடந்த பின், இதோ அகதி முகாமில் தியாகனைப் பெரியவர் காண்கிறார். 

இந்த இடைப்பட்ட காலத்தில் பெரியவரின் நாற்சார் வீடு விமானக் குண்டில் சிதைந்து, சின்ன மகனையும் மனைவியையும் பறி கொடுத்து, இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து, அங்கு சுகந்தன் போராளியாகி அவனும் வீர மரணமடைந்து போக, மகளும் புலம்பெயர்ந்து போய்விட, பெரியவரும் தனித்துப் போய் இப்போது, கிழவராகிவிட்டார். 

எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட பெரியவருக்கு இன்று தியாகன் அன்னமிடுகிறான். 

கிழவரின் கண்கள் கலங்கின. 

“ஐயா…. பின்னேரம் கூடாரம் தருவாங்கள். உங்களுக்கும் ஒரு படங்கு வாங்கிப் பக்கத்திலேயே அடிக்கிறன்.” 

கிழவர் நெகிழ்ந்து போனார். 

“தம்பி…. நான் தனியன்…… எனக்கேன் தனிக் கூடாரம்? உன்னோடயே தங்கிறன் ராசா…. ம்….. அது சரி உன்ர குடும்பம் பிள்ளை குட்டியள் எங்கே ராசா……?” 

தியாகன் கண் கலங்கினான். 

– மல்லிகை, ஜூன் 2009.

– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *