சின்னையா ராஜையா
கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 88

சுரேஷ், ரமேஷ், கணேஷ் மூன்று பேரும் இணை பிரியா நண்பர்கள். இதற்கு காரணம் ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே வகுப்பு.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மூவரும் எப்போதும் விளையாடும் ஆலமரத்தடிக்கு வந்தார்கள். இன்னும் சில சிறுவர்களும் அங்கு வந்திருக்க, ஒரு மணி நேரம் ஓடிப்பிடித்து நன்றாக விளையாடி விட்டு, மற்றவரெல்லாம் சென்றுவிட சுரேஷ் பேச ஆரம்பித்தான்.
“சீக்கிரமா விளையாடி முடிச்சிட்டோம். இப்ப என்ன பண்ணலாம்”
“காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் போயிட்டு வரலாமா?”
“டே, என்னடா சொல்ற நம்ம கிராமம் இருக்கறது அடர்ந்த காட்டுக்குப் பக்கத்துல. இங்கேயே அப்பப்ப பயங்கரமான மிருகமெல்லாம் வந்து சுத்திட்டு, ஆடு, மாடு, நாய்னு இழுத்துட்டுப் போயிடும். ஏன்டா வேண்டாத விபரீதம்?”
“டே, ரொம்ப ஜாலியா இருக்குன்டா. கைல பெரிய குச்சி எதுனா எடுத்துக்கலாம். காத கூர்மையா வச்சுக்கலாம். எதாவது சத்தம் கேட்டுச்சுனா, பெரிய மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கலாம். கொஞ்சம் தூரம் தான், கொஞ்ச நேரத்துல திரும்பிடலாம். என்னடா சொல்ற சுரேஷ்?”
“டே, கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் மனசுக்குள்ள பயமா இருக்கே!”
“கணேஷ், சும்மா கொஞ்ச தூரம் தான். போயிட்டு உடனே வந்திடலாம். வாடா”
“சரி ரமேஷ், இவ்வளவு கெஞ்சிக் கேக்கற. வரேன். சுரேஷ் நீயும் வரத்தானே!”
“ரெண்டு பேரும் ரெடியாயிட்டீங்க. நான் மட்டும் வரமாட்டேனு சொல்லவா போறேன். நானும் ரெடி. ஆனா ஒன்னு, நாம இப்படி காட்டுக்குள்ள போயிட்ட வர்ற விஷயம், வீட்டுல யாருக்கும் தெரியக்கூடாது. சரியா?”
“ம் ம் சரி”, என்று கூறிவிட்டு கொஞ்சம் பெரிய குச்சியை ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டு, காட்டுக்குள் செல்லத் தயாராயினர்.
முதல் நானூறு ஐநூறு அடி வரைக்கும் ஊரிலுள்ள அனைவருமே அடிக்கடி சென்று வருவது தான். அதுவரை மூவரும் மிகவும் சந்தோசமாகச் சென்றனர். அதன் பின் காடு இவர்களை பயமுறுத்த ஆரம்பித்தது.
மெல்ல மெல்ல அடி மேல் அடி வைத்து சென்றவர்களுக்கு, ‘நங்’ ‘நங்’ என ஒரு சத்தம், இடிபோல் கேட்க ஆரம்பித்தது. மூவருக்கு வேர்த்து ஊத்த ஆரம்பித்தது. ஒருவர் கைகளை ஒருவர் நன்றாகப் பிடித்துக்கொண்டு, ஒரு பெரிய மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.
நொடிகள் நகர நகர அந்த ‘நங்’ ‘நங்’ சத்தம் அவர்களது மரத்தினை நோக்கியே வருவதாகப் பட்டது. பயத்தில் இவர்கள் மூவருக்கும் வாய் உலர்ந்து போனது. எதாவது பேசலாம் என்றாலும் குரல் வெளியே வரவில்லை.
‘நங்’ ‘நங்’ சத்தம் மெல்ல வந்து இவர்கள் ஒளிந்திருந்த மரத்தின் அந்தப்பக்கம் நின்றது. மூவரும் மூச்சுவிடும் சத்தம் கூட கேட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர்.
அப்போது அவர்களுக்கு பேச்சுக்குரல் கேட்டது.
“மூன்று மனிதர்கள் நம்ம காட்டுக்குல நுழைஞ்சதா தகவல் வந்ததும் ஏன் சிங்கராஜா பதறினார்?”
“இங்கே இருக்கும் பல பேருக்கு பல நாளா எந்த உணவும் கிடைக்கல. எல்லோரும் கொலப்பசில இருக்கறாங்க. அந்த மூன்று மனிதர்களும் பசியில இருக்கற யாருக்கிட்டயாவது மாட்டினாங்கனா, அவ்வளவு தான் அப்படியே கடிச்சு சாப்பிட்டுருவாங்க. அவங்க பசிக்காக சாப்பிட்டாலும், மனுசன சாப்பிட்டா தப்புத்தானே! அப்பறம் அத வச்சே தேவையில்லாத பிரச்சனைகள் காட்டுக்கு வரும். அதனால அந்த மூனு பேரையும் எப்படியாவது கண்டுபிடிச்சு, காட்டுக்குள்ள இருந்து சீக்கிரமா திருப்பி அனுப்பறது அவங்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது”
“சரி வா இந்தப்பக்கம் போய் தேடுவோம்”, எனக்கூறி அந்தக் குரல்களும் அமைதியாக மெல்ல எட்டிப்பார்த்தான் சுரேஷ்.
ரெண்டு பெரிய யானைகள் நடந்து போய்க் கொண்டிருந்தன.
“என்னடா இது வம்பா போச்சு. வாங்கடா மெதுவா திரும்பி ஓடிப் போயிடலாம். சரி எப்படீடா நமக்கு யானை பேசுனதெல்லாம் கேட்டுச்சு?”
“அதானே! புரியலையே!”, எனச்சொன்ன ரமேஷ் கணேஷை கிள்ளிப்பார்த்தான்.
“டே ஏன்டா இப்ப கிள்ற?”
“இல்ல இது கனவா நினைவானு பார்க்க நினைச்சேன். நினைவு தான்”
“சரி, இங்க நடந்த எதையும் யாருகிட்டவும் சொல்ல வேண்டாம். வாங்க வீட்டுக்குப் போயிடலாம்”, இவர்கள் திரும்பிப் போனதை, மெல்ல திரும்பி பார்த்து உறுதி செய்து கொண்டன யானைகளின் நான்கு கண்கள்.
“ஏன் சின்னையா, அவங்கள் இப்படி பயமுறுத்தின?”
“நான் அவங்கள பயமுறுத்தல, காப்பாத்தி இருக்கேன்”
“எப்படி ஏன் அதையும் சொல்லு?”
“ராஜையா, அந்த மூனு பேரும் நான் சின்ன வயசா இருக்கும் போது, அவங்க ஊரு பக்கத்துல ஒரு மோசமான புதர்ல மாட்டிக்கிட்டப்ப, என்னைக் காப்பாத்தினாங்க. அப்போ அவங்களுக்கு உதவி செய்யறது தானே முறை. அவங்க வர்றதை முன்னாடியே பார்த்துட்டுதான், வேணும்னே பார்க்காத மாதிரி மரத்துக்கு பின்னாடி நின்னு, உன்னோட உதவியாலேயும் நல்லா பேசி அவங்கள வீட்டுக்கு போக வச்சிட்டோம்”
“இருந்தாலும் பாவம் அவங்க. ரொம்ப பயந்திட்டாங்க”, என்று பேசிய படியே தங்கள் இடத்திற்கு வந்தடைந்தன சின்னையா யானையும், ராஜையா யானையும்.
தொடர்புள்ள சிறுகதைகள்
வேந்தர்க்கு வேண்டும் குணம்
வளர்கவி
July 5, 2026
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026