கிணறு
கதையாசிரியர்: ஜே.எம்.சாலி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 98
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கிசுகிசுப்பு.
“கரைச்ச சந்தன நிறத்திலே கண்ணுக்குப் பாந்தமா சிலையாட்டம் உலாவிக்கிட்டிருக்கிறாளே ஆயிஷாக்குட்டி, அவளுக்காகத்தான் இதெல்லாம்.”
ஜிலுஜிலுவென்று பல மாதிரி வருணிப்பு! ஆனால், எதி ரொலி பலமாக இருந்தது. மும்தாஜுக்குப் புகைச்சல். “முந்திரிமேட்டிலே கிணறு வெட்டுறீங்களே, இதுக்குத் தானா?” – மும்தாஜ் கணவனைக் கேட்டாள்.
மூசா பதில் சொல்லவில்லை.
“வாயை மூடிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? ஒண்ணுக்கும் உதவாத மேட்டுக் கரம்பையிலே கிணறு வெட்டுறதா சொல்லிக்கிட்டு அங்கேயே பொழுதுக்கும் உக்காந்திருக்கிறீங்களே, எதுக்காக? எல்லாம் இப்ப புரிஞ்சுபோச்சு….”
மும்தாஜ், கணவனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. அன்று மத்தியானம் வரை வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷாவை அழைத்தாள்.
“நீ வேற இடம் பார்த்துக்கலாம்.. இப்பவே இங்கேருந்து நீ போகலாம்.” – ஆயிஷாவிடம், மும்தாஜ் பாய்ந்தது செவியில் மோதியது. மும்தாஜின் தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது.
தண்ணீர்க் குடத்துடன் குனிந்த தலை நிமிராமல் இவர்களின் வீட்டுக்கும் முந்திரிமேட்டுக்குமிடையே நடந்து போகும் ஆயிஷாவை அதற்குப் பிறகு பார்க்க முடியவில்லை.
நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது. நம்பாமலும் இருக்க முடியவில்லை. முந்திரிமேட்டு விஷயத்தில் ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டவள் அவள். நூற்றுக்கு நூறு மும்தாஜின் பேச்சைத் தட்டாதவன் கிணறு வெட்டுவதில் மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை.
மேட்டுப்பாங்கான அந்த இடத்தில் விளைச்சல் கிடையாது. தண்ணீர் வசதி இல்லை. இவர்களின் வீட்டிலிருந்து அரை மைல் தூரம் இருக்கும். முந்திரிமேடு என்று யாரோ வைத்த பெயர் நிலைத்து விட்டது. பெயருக்கு ஒன்றிரண்டு முந்திரி மரங்கள் மட்டும் அங்கே உண்டு. மூசாவின் புஞ்சையை அடுத்த புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசைக் காலனி உருவா கிப் பல வருஷம் ஆகிவிட்டது. நாற்பது குடும்பங்கள் இருக் கும். எல்லோருமே தொழிலாளிகள். தொழில்-குடைரிப்பேர், லாடம் கட்டுவது, ஈயம் பூசுவது, முடி எடுப்பது, கொடிக் கால் வேலை பார்ப்பது இத்யாதி. முந்திரிமேட்டுப் பெண் களுக்கு கிராமத்தில் வீட்டு வேலைகள். வேலை முடிந்து திரும் பும் போது தலையிலோ இடுப்பிலோ தண்ணீர்க் குடம் இருக் கும். அங்கிருந்துதான் இங்கே குடிதண்ணீர் வரவேண்டும்.
சின்னப் பெண்ணாக இருந்தபோது மும்தாஜிடம் வேலைக்குச் சேர்ந்தவள் ஆயிஷா. அவளுடைய வளர்ச்சியை இருவருமே பார்த்து வந்திருக்கிறார்கள்.
“ஆயிஷா இங்கே வந்து சேர்ந்ப்போ என் இடுப்பு உயரத்துக்குக்கூட இல்லே. சமைஞ்ச பிறகு எப்படி மாறிட்டா பார்த்தீங்களா? என் உயரத்துக்கு வந்திருக்கா… சீக்கிரமே கலியாணம் பண்ணி வைக்கச் சொல்லுவாபோல இருக்கு…”
மூசாவிடம் விவரித்து, பல முறை மூக்கின் மேல் விரலை வைத்திருக்கிறாள் மும்தாஜ். ஆயிஷாவின் வளர்ச்சி அப்படித்தான் இருந்தது.
‘‘ஆயிஷாவைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” – இடையிடையே மும்தாஜ் கேட்பாள்.
“நீ என்ன நிளைக்கிறியோ அதுதான் என்னோட கருத்து… எனக்குன்னு ஒரு தனி நினைப்பு ஏது முமு?”
“வயசுக்கு வந்த பொண்ணு தினமும் தண்ணிக் குடத்தை எடுத்துக்கிட்டு போறது என்னமோ போல இருக்கு. நல்லவங்க கெட்டவங்க அத்தினி பேர் கண்ணும் அவமேலேதான் படியுது. நினைச்சா எனக்கே கூச்சமா இருக்கு..”
“என்ன செய்யச் சொல்றே? வீட்டோட வச்சுக்கப் போறியா?”
“ஆயிஷா மாதிரி இன்னொருத்தி கிடைக்கிறது அபூர்வம். அதான் யோசிக்கிறேன்.”
“யோசிக்கிறத்துக்கு என்ன இருக்கு? அது அது நேரம் வர்றப்ப நடக்கும்” என்றான் மூசா.
இப்பொழுது நேரம் வந்துவிட்டதா என்ன? அதுவும் அவள் நெஞ்சிலேயே நெருப்பை மூட்டுகிற மாதிரி.
மும்தாஜின் எண்ண ஓட்டம் இப்படி இருந்தது.
எதிர்பார்த்ததற்கு மேலாகவே செலவாகிக் கொண்டிருந்தது. முந்திரிமேடு மாதிரி ஒரு புஞ்சைக் கரட்டில் கிணறு தோண்டுவதற்கு இதற்கு மேலும் ஆகலாம். செலவைப் பற்றி மூசா கவலைப்படவில்லை. பலன் கிடைக்க வேண்டும்…
அடி நீரோட்டமாக மனசில் ஓர் அச்சம் மட்டும் இருக்கிறது. மனைவியைப் பற்றிய பீதி அது.
எந்தத் துணிச்சல்லே ஆயிரம் ஆயிரமா கொண்டுகிட்டுப் போய்க் கிணத்திலே கொட்டுறீங்க? – அவள் எப்பொழுதோ கேட்டிருப்பாள். கேட்கக் கூடியவள். இன்னும் கேட்கவில்லை. கேட்காமல், விடமாட்டாள். கேட்க முடியாதபடி. ஓர் அடைப்பு; தடை, அதை விலக்கிவிட்டு விசாரணை நடத்தவே தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. ஆமாம், அப்படி நடக்கலாம்.
அந்த சமயத்தில் மும்தாஜ் எப்படி வெடித்துக் குமுறுவாள் என்பதை அவனால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, எப்பொழுதுமே அவள் குரலும், கரமும் வீட்டில் ஓங்கியிருக்கும். மூசாவுக்குப் பதினைந்து வருஷ அனுபவம்.
“மும்தாஜ் ரொம்ப அழகான பெண். ரோஜாப்பூ மாதிரி… அவளைக் கட்டிக்க எத்தனையோ பேர் போட்டி போடறாங்க. ஆனா, உனக்கு மும்தாஜைக் கொடுக்க விரும்புறாங்க.. நீ படிச்ச பிள்ளைங்கிறதுதான் காரணமாம்…” – அம்மா ஒரு நாள் சொன்னாள்.
மூசாவுக்கு அது தெரியும். மும்தாஜையும் தெரியும். உள்ளூரில் கல்யாணம் பண்ணிக் கொள்வதானால் அவள் ஒருத்தி என்பது மூசாவின் தான் தனக்குப் பொருத்தமானவள் கணிப்பு. இவன் பட்டதாரி. அவள் பண வசதியுள்ள அழகி. பொருத்தமான ஜோடி என்று பார்க்கிறவர்கள் பூரிக்கிற மாதிரிதான் அவனும் அவளும்.
மும்தாஜ் ஒரு ரோஜாப்பூ என்று அம்மா சொன்னது அனுபவித்து பொருத்தம்! ஆரம்பத்திலேயே எத்தனை உணர்ந்தான் மூசா. முகமும் இதழும், மேனியும் ரோஜா தான். கண்களில் அதீதமான ஒரு கவர்ச்சி கிடைக்க முடியாத செல்வ சுகம் மும்தாஜின் உருவில் தனக்குக் கிடைத்திருப்பதாக அவன் பூரித்துப் போனான். ‘மூசாவின் இரண்டெழுத்துப் படிப்புக்கு எவ்வளவு பெரிய லாட்டரி அடிச் சிருக்கு’ என்று சிலர் வாயைப் பிளந்தார்கள்.
மும்தாஜை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்க்கக் கொஞ்ச காலம்வரை மூசா கூசினான். கவர்ச்சியும் மிடுக்கும் அப்படி… “கூச்சம் தெளியனுமின்னா நாம நாலு இடங்களுக்குப் பயணம் போயிட்டு வரணும். என்ன சொல்றீங்க?”
“உன் இஷ்டம், முமு!”
“அப்ப ரெண்டு பேருமா எங்கேயாச்சும் போயிட்டு வருவோமா?”
“அம்மாகிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு…” – அவன் இழுத்தான்.
இளம் மனைவி சிரித்தாள்.
மருமகள் விருப்பத்துக்கு அங்கீகாரம் அளித்து மகனை நிமிர்த்திவிட்டாள் தாய்.
“அம்மா மேலே ரொம்ப பக்தி இல்லையா, உங்களுக்கு? அடக்கமின்னா இப்புடி ஒரு அடக்கமா அம்மாகிட்டே!” என்று மும்தாஜ் சிரித்தாளே, அது அவன் மனசில் பசுமை யாக இருக்கிறது. ‘நீங்கள் எனக்குத்தான் அடக்கம்’ என்று சொல்கிற மாதிரி அல்லவா சிரித்தாள்!
வருடத்திற்கு இரண்டு முறை சுசுவாசப் பயணம் போக வேண்டும். அது மும்தாஜின் நிரந்தர ஆணை. செலவுக்கு ஆயிரமும் இரண்டாயிரமுமாக எடுத்துக் கொடுப்பாள். தட்ட முடியாது. மகன் தவித்த சமயங்களில், ‘முமு ஒரு ரோஜாப்பூ. அது வாடக் கூடாது மகனே!’ என்று தட்டிக் கொடுப்பாள் அம்மா.
‘ரோஜாப்பூ என்று நீ அன்றைக்கே சொன்னது எத்தனை பெரிய உண்மை! இந்தப் பூவைச் சுற்றி முள்ளும் இருக்கிறது. அது தைக்கிறதே, என்ன செய்யட்டும் அம்மா?’ – இப்படி எதுவும் கேட்க முடியாதபடி மூசா வாயடைத்துப் போயிருக்கிறான்.
வயது முதிர்ச்சியினால் மூசாவின் அம்மா அடிக்கடி பாயில் விழுந்து கொண்டிருந்தாள்.
“இந்தவிசை நாம் கொஞ்சம் தொலை தூரமான இடத்துக்குப் பிரயாணம் செய்திட்டு வரணும்…” – பயணத்திட்டத்தை மனைவி விவரித்தபோது
“இப்ப நாம் கிளம்பிப் போறது நல்லதில்லே முமு. அம்மா படுத்த படுக்கையா இருக்கிறாங்களே?”
“சொல்லுவீங்களே. நான் ஆசைப்பட்டுடக் கூடாது! தான் அங்கே இங்கே போகணுமின்னா உங்க தாய்ப் பாசம் குறுக்கே வந்திடுது, இல்லையா?”
“இது மாதிரி நேரத்திலே தாயின் பக்கத்திலே பிள்ளை இல்லேன்னா…”
கணவனின் பேச்சு அவளைச் சமாதனப் படுத்தவில்லை.
”மூசா, அது சின்னஞ்சிறுசு.. எனக் கென்னப்பா, நான் பழுத்த இலை..காம்பு இத்து ஒரு நாள் விளுந்திட வேண்டியவ, இல்லையா? மும்தாஜை, அது ஆசைப்படுற இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போ…” அவர்களின் உல்லாசப் பயணத்திற்குக் கொடி காட்டினாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாய்,
“உங்க அம்மாவை ஒண்ணும் தனியா விட்டுட்டுப் போக வேணாம். ஆயிஷா குட்டியைப் பக்கத்திலே வச்சிட்டுத் தான் போறோம். அந்தக் குட்டி இவங்களைக் கவனிச்சிக்கும்…”
ஆமாம். முந்திரிமேட்டு ஆயிஷாதான் அந்தத் தாயின் பக்கத்தில் இருந்தாள், உயிர் பிரியும் நேரத்தில்கூட.
கிணறு வெட்டியாகி விட்டது.
சிலர் சிரித்தார்கள், ஒன்றுக்கும் உதவாத கரட்டில் கிணறு வெட்டுகிறானே என்று.
மும்தாஜும் முதலில் சிரித்தாள்:
“முந்திரிமேட்டில் கிணறு தோண்டி ரோஜாத் தோட்டம் போடப் போறீங்களாக்கும்!”.
“ரோஜா அங்கேயும் பூக்கலாம் முமு!”
“பூக்கும்.. பூக்கும்!” என்று இளப்பமாக, ஏளனமாகத் தலையாட்டினாள்.
இப்பொழுது அவள் முகம் கொடுத்துப் பேசுவது குறைந்து போயிருக்கிறது. தன் விருப்பத்திற்குப் புறம்பாக வேண்டாத இடத்தில் கிணறு வெட்டியிருக்கிறான் என்பது மட்டும் காரணமல்ல. ஆயிஷா என்ற வேலைக்காரப் பெண்ணுக்காக ஆசையோடு அந்தக் கிணறு தோண்டப்பட்டிருக்கிறது என்பதுதான் அடித்தளமோ?
“நீயா?” என்று நிமிர்ந்த மும்தாஜ், நிமிஷத்தில் சப் பாத்திப் பழமாகச் சிவந்தாள். எதிரே ஆயிஷா நின்றிருந்தாள்.
“உங்களைப் பார்க்காமெ இருக்க முடியலே!” -ஆயிஷா நெகிழ்ந்தாள்.
“என்னைப் பார்க்க வரலேடி நீ.. அவரைப் பார்க்கறதுக்கும் வீடு தேடி வர வேண்டியதில்லையே! முந்திரி மேட்டிலேயே முடக்கிப் போட்டுக்க வேண்டியதுதானே! அதுக்கு அனுமதி கேட்க வந்திருக்கிறீயோ? போ… முந்திரிமேடே கதின்னு கிடக்கிறவர் கிட்டேயே போ..” – மும்தாஜ் சொல்லவில்லை. சொல்ல வேண்டும் போல் உள்ளுக்குள் புழுக்கம்.
“இத்தினி வருஷமா இந்த வீட்டையே சுத்திச் சுத்தி வந்தேன். இப்ப கையும் காலும் ஒடிஞ்சாப் போல இருக்கு. இந்த வாசலை நான் மிதிக்கக் கூடாதுண்டு சொல்றபடிக்கு நான் என்ன குத்தம் செஞ்சிட்டேன். சொல்லுங்க.. சொல்லுங்க ?”
ஆயிஷா கண்ணீரைப் பிழிந்தாள். பார்ப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியேற்றிய இந்தச் சில வாரங்களில் அவள் உருமாறிப் போயிருக்கிறாள். கவலை அவளை உருக்கியிருக்கிறதோ?
“நம்பமாட்டேன். இது நிஜக் கண்ணீர் அல்ல. நீலிக் கண்ணீர்! போலிக் கண்ணீர்!”
“முந்திரிமேட்டிலே அவங்க வேகிற வெய்யில்லே நாள் பூரா உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்க மனசு கேக்கலை!”
‘கஷ்டமா இருந்தா உன் குச்சு வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போறதுதானே…’
அவளைக் கொத்திப் பிடுங்குகிற மாதிரி இப்படி ஒரு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பு. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் மும்தாஜ்.
“இவ்வளவு, கஷ்டப்பட்டு அண்ணன் கிணறு வெட்டுறாங்களே எதுக்குன்னு தெரியாமெ இருந்தது. இன்னிக்குத் தான் புரிஞ்சது. அதை அவங்களே கிணத்தடியிலே செதுக்கி வச்சிருக்காங்க!”
ஆயிஷா சொன்னதுதான் தாமதம். மும்தாஜ் துள்ளி நிமிர்ந்தாள். ‘அண்ணன் என்று முறை கொண்டாடுகிறாளே! ஏதோ காரணம் என்கிறாளே!’
”சொல்லு ஆயிஷா, சொல்லு..” என்றவாறு அணுகி வந்தாள் மும்தாஜ்.
வீட்டுக்குத் திரும்பிய கணவனின் எதிரே நின்றாள் மும்தாஜ். அவள் விசாரணை நடத்தப் போகிறாள் என்பது மூசாவுக்குப் புரிந்துவிட்டது.
”கிணறு வேலை முடிஞ்சிட்டது இல்லையா?”
“ஆமாம். மும்தாஜ். ஊத்துக் கண் திறந்து தண்ணி நல்லா வருது. சுத்துச் சுவரெல்லாம் கட்டியாச்சு!”
“காரணத்தை இதுவரைக்கும் என்கிட்டே சொல்லலை… அதை மூடி மறைச்சி…”
“முமு, நீ என்ன நினைப்பியோ.. என் மனசை அறுத்துக் கிட்டிருந்த குறையை இப்ப சொல்றேன். உன்னை அடையறதுக்கு முன்னாடி வரைக்கும் அம்மாதான் என் உலகம். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு நான் அம்மாவை சரியா கவனிக்கலேங்கிற குறை சதா என்னைக் குத்திக்கிட்டே இருந்தது. ஆனா, உன் பேச்சைத் தட்ட முடியாமெ நீ இழுத்த இழுப்புக் கெல்லாம் வந்தேன். அதனாலே அம்மா ஒரு அனாதை மாதிரி மரிச்சுப்போனாங்க!”
மும்தாஜ் வாய் திறக்கவில்லை.
“அந்திம காலத்திலே ஒரு தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்யத் தவறிட்டேன். அவங்களுக்காக நான் எவ்வளவோ தான தர்மம் செய்யக் கடமைப்பட்டவன், ஒருத்தர் இறந்த பிறகும் அவங்க பேர்லே தான தர்மம் செய்யலாம், இல்லையா?”
மும்தாஜ் கண் கொட்டவில்லை.
“இறந்து போன தாயாருக்குச் செய்யக்கூடிய மேலான தர்மம் எது’ன்னு நபிகள் நாயகத்தை ஸஃது என்பவர் கேட்டார். ‘தண்ணீர்’ என்று நாயகம் சொன்னாங்களாம். அவர் ஒரு கிணறு தோண்டி இது தன் அன்னையுடையது என்று எழுதி வைத்தாராம் பாசக் கிணறான என் அம்மாவுக்காகத்தான், தண்ணீர் வசதியில்லாத அந்த இடத்திலே நான் கிணறு வெட்டியிருக்றேன், முமு!” என்றான் அவன்.
மும்தாஜின் கண்கள் முதல் முறையாக இப்பொழுது கலங்கின.
– 1978, ஆனந்த விகடன்.
– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி.
![]() |
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீதிக்கு தண்டனை
நா.ரங்கராசன்
August 4, 2026
உண்மை சுடும்
என்.ஸ்ரீதரன்
August 4, 2026
அப்பாவின் நிழல்
எம்.பாலா முரளி
August 4, 2026
