காற்றில் கரைந்தாயே என் தேவதையே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2026
பார்வையிட்டோர்: 94 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3

நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாய்..நேர்த்தியாய் நடந்து முடிந்தது.அளவாய்த் திட்டமாயிருந்த மண்டபத் தில்  தினேஷ் பிரமாதமாய் நிச்சயதார்த்தவிழாவை நடத்தியதாக சுற்றமும் நட்பும் அவனைப் பாராட்டின.

நிகழ்ச்சிகள் வீடியோ கிராஃபர் வைத்து வீடியோ எடுக்கப்பட்டாலும் முருகு செல்ஃபோனில் ஃபோட்டோ எடுப்பதும்..வீடியோ எடுப்பதுமாய் தூள்கிளப்பினான்.

அடிகடி தினேஷிடம் வந்து வெள்ளந்தியாய் அண்ணி சூப்பர்ண்ணே..சூப்பர்ண்ணே என்று சொல்லிச் சொல்லிவிட்டுப்போனான்..

தினேஷின் நண்பர்களும்..

டேய் மச்சா..நெஜமாவே மச்சக்காரண்டா நீ..ஓ வருங்கால தேவத.

ம்..சூப்பர் என்பதுபோல் வலதுகை விரலிரண்டை மடக்கிக் காண்பித்தார்கள்.

மனதுக்குள் பொறாமை எழாமல் இருந்திருக்க முடியாது.

சந்தோஷத்தில் றெக்கை கட்டிப்பறந்தான் தினேஷ்.

நிச்சயதார்த்தமண்டபத்தில் தேவதையாய் அவ்வப்போது கண்களில்படும் நிலாவை வாரிவாரி மனதுக்குள் ரொப்பிக்கொண்டான். நாலு வார்த்தைபேசவேண்டும் போல் மனம் ஏங்கியது.

ஆனாலும் நிலா சின்னதாய் அவன்மீது பார்வையை வீசுவதும்..மேகத்தின் பின்னால் மறையும் நிலாவென தோழிகள் பின்னால் ஒளிந்து கொள்வதுமாய் ஆட்டம் காட்டினாள்.

இருக்கட்டும்..இருக்கட்டும்..

ஃப்ரெண்ட்ஸுங்க பின்னாடிபின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு ஆட்டமா காட்டுறீங்க..

கல்யாணம் ஆகட்டும்.. பாத்துக்குறேன்..வட்டியும் முதலுமா பேசித்தீத்துட மாட்டேன். சிறுபிள்ளை போல் சிந்தித்தான். தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.

நிச்சயம் முடிந்து.. மூன்று மாதங்கள் கழித்து திருமணத் திற்கான சுபநாள் தேதி குறிக்கப்பட்டது.

என்னடாது? ஒரு நாளுக்கு இருவத்திநாலு மணிநேரம்னு எவண்டா நிர்ணயிச்சான்?அவன நேர்லபாத்தே முடிஞ்சிடும் அவங்கத.. முழுசா மூணுமாசம்.. தொண்ணூறு நாளு.. அப்பறம் ஒரு பதினாலு நாளு..கடவுளே..

சரி.. ஃபோன்தா இருக்குல்ல..

அதுல நிலாப்பொண்ணு பேசினாதா என்னவா?

ரிங்கு வரும்போதெல்லாம் நிலாவாதா இருக்குமோன்னு ஆசஆசயா அவசரஅவசரமா ஃபோனப்பாத்தா..

வண்டி ஒக்கப்பண்ணி யாச்சா? எப்ப தருவீங்கனு கஸ்டமருகிட்டேந்தில்ல ஃபோனு வருது..கடுப்பாய் யிருக்கும் தினேஷ்க்கு.

மூன்று மாதத்தை அவஸ்தையோடு அனுபவித்து அனுப்பி வைத்தான் தினேஷ்.

நாளை கல்யாணம். முதல் நாள் மதியமே கல்யாண மண்டபத்துக்கு வந்தாகி விட்டது.

பெண் வீட்டார் மண்டபம் வந்தபோது கமலமும் மற்ற உறவினர்களும் அவர்களை வரவேற்க வாசலுக்குச் சென்றபோது தினேஷுக்கு உள்ளே இருப்புக் கொள்ள வில்லை. நாமும்னா போலாமா என்று தோன்றியது.வாசலை வாசலைப் பார்த்தான்.

அண்ணே..ரொம்ப பரபரப்பா தெரியிறீங்க?..விட்டா வாசல்லபோயி..எ வருங்கால அண்ணிய தூக்கிட்டு வந்துடுவீங்கபோல..கலாய்த்தான் முருகு.

டேய்..டேய்..நேரங்கெடச்சுச் சுனு  என்ன நல்லா வார்ர பாத்தியா..சிரித்தான் தினேஷ்.

காலை எட்டு டு ஒன்பது முகூர்த்தம்.

மாப்பிள்ளைக் கோலத்தில் மேடையில் அம்சமாய் அமர்ந்திருந்தான் தினேஷ்.

அய்யர் சொல்லும் வார்த்தைகளை கவனமாகக் கேட்டு சிரத்தையோடு தானும் சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்கள் அடிக்கடி நிலாவின் வருகையை எதிர்நோக்கி அங்குமிங்கும் பார்ப்பதை அவனால் தடுக்க முடிய வில்லை.

பொண்ண அழச்சுண்டு வாங்கோ..அய்யர் உரக்கக் குரல் கொடுத்தார்.

குபீரென்று மகிழ்சி அலை எழும்பி  நெஞ்சில் மோதியது தினேஷ்க்கு.

மணமேடையில் தினேஷ்க் குப் பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டாள் நிலா.. வெண்ணிலா.. 

மனம் பரபரத்துப்போனது.

பக்கத்துலதா நிலா ஒக்காந் திருக்காங்க..கொஞ்சம் கழுத்தத் திருப்பி சைடாதா பாரேன்.. மனம் தூண்டி விட்டது.

அதிகபட்ச ஆர்வத்தோடு லேசாய்க் கழுத்தைத் திருப்பி வெறும் அரையடி இடை வெளிவிட்டு பக்கதிலமர்ந்திருந்த நிலாவைப் பார்த்த கண்கள் மீள மறுத்து பிடிவாதம் பிடித்தது.

மேக்கப் இல்லாமலேயே ஐந்தரையடி தேவதையாய்த் தெரியும் நிலா..மணப்பெண் அலங்காரத்தில் மனதைக் கொள்ளையடித்தாள்.

தேணுண்ட வண்டாய் மயங்கியது தினேஷின் மனது.

அய்யிரே..சீக்கிரம் மந்திரத்த சொல்லி முடிங்க..தாலிய கட்டிடுறே..எ அவசரம் தெரியாம மந்திரம் சொல்லிக் கிட்டே இருக்கீங்க..என்று அய்யரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.

சிரித்துக்கொண்டான் மனதுக்குள்.

கெட்டிமேளம்..கேட்டிமேளம்..

வலது கையை உயர்த்தி ஆட்காட்டி  விரலை மேல்நோக்கி நீட்டி ஆட்டினார் அய்யர்.

கையில் மங்கலநாணை எடுத்துக் கண்மூடி.. நொடிநேரம் குலதெய்வத்தைப் ப்ரார்த்தித்து விட்டு நிலாவின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யக் கயிற்றைக் கட்டினான் தினேஷ்.

நாதஸ்வரத்தோடு சேர்ந்து அவனின் மனமும் ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தமே என்று பாடியது.

உலகத்திலேயே நான்தான்  “பெரும்பேறு பெற்றவன்” என்று கைகளை உயர்த்திக் கத்தத் தோன்றியது.

கழுத்தில்.. மஞ்சள் நிறம் மின்னும் புத்தம்புது தாலிக்கயிற்றோடு அழகின் மொத்த உருவமாய் அமர்ந்திருக்கும் மனைவி நிலாவைப் பெருமை பொங்கப்பார்த்தான் தினேஷ்.மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

கமலத்தின் மருமகளாய்.. தினேஷின் மனைவியாய் தினேஷின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் நிலா..வெண்ணிலா.

கமலத்தை அத்தை அத்தை யென்றாள்..ராஜியை அக்கா அக்கா என்றழைத்தாள்.. தினேஷை என்னங்க என்னங்க என்றழைத்து மயங்க வைத்தாள்.

நடந்தால் சப்தமெழுப்பும்.. அதிகமாய் முத்துக்கள் வைத்த கொலுசும்..கால் விரல்களில் அணிந்திருக் கும்.. தரையிலிடித்தால் சப்தம் தரும் மெட்டிகளும்.. கைகள் அசைந்நால் கலகலவென ஒலியெழுப்பும் கண்ணாடி வளையல் களுமாய் வளைய வந்தாள் நிலா.

அவளின் கண்ணசைவும்..

மெல்லிய சிரிப்பொலியும்..

வெட்கத்தில் சிவக்கும் கன்னச் சிவப்பும்..கிரங்க அடிக்கும் அழகும் தினேஷை தேனில் விழுந்த ஈ போலாக்கியது.

பூமியில் நடப்பதாகவே அவனுக்குத் தோன்ற வில்லை. வானில் புத்தம்புது மனைவி நிலாவோடு பறப்பதைப் போலவே தோன்றியது.

பத்துநாட்கள் போனதே தெரியவில்லை.

அக்கா தன்  கணவர் குழந்தைகளோடு ஊர் சென்றாகிவிட்டது.

இப்போது வீட்டில் கமலம்..தினேஷ்..நிலா மூவரும் மட்டுமே.

கமலமும் நிலாவும் மாமியார் மருமகளாய் இல்லாமல் தோழிகள் போல் ஆகி விட்டனர். அத்தனை ஒற்றுமை.

நிஜமாய்ச் சொல்ல வேண்டு மென்றால் தினேஷ்க்கு ஒர்க் ஷாப் செல்லவே பிடிக்க வில்லை. நிலாவை விட்டு நகரவே பிடித்தமில்லை.

நிலாதான் அவனை அன்பாய்க் கிண்டலடித்து அனுப்பி வைப்பாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

அம்மா..என்றான் தினேஷ்..

என்னா தினேஷு..

இன்னக்கி சினிமாக்குனா போலாமா? புதுப்படம் வந்திருக்கு..

ம்..போய்ட்டு வாங்களேன்..

போய்ட்டு வாங்களேவா?

அப்ப நீங்க?

நீங்களும் வாங்கத்த என்றாள் நிலா..

பக்கென்று சிரித்தாள் கமலம்.ரொம்ப நல்லாருக்கு..புதுஜோடி நீங்க ரெண்டு பேருமா சினிமாவுக்குப் போவீங்களா..சோத்துமூட்டையில பெருச்சாளிய வெச்சுக் கட்டினாப்ல என்னையும் சேத்து இழுத்துக்கிட்டுப் போவீங்களா?

நல்லாருக்கு நிலா..நீ என்னையும் கூப்புடறது.. மீண்டும் சிரித்தாள்..

ரெண்டுபேரும் போய்ட்டு வாங்க என்றாள்.

ஃபஸ்ட்டு ஷோ தானே?பரணிகாவுலதானே அந்தப்படம் ஓடுது?.

ஆமாம்மா என்றான் தினேஷ்.

மனைவிநிலாவோடு தனியாய்ப் படம்பார்க்கப் போகப்போவது மனதில் சந்தோஷத்தை உண்டாக்கியது.

நிலாவுக்கும் கணவனோடு முதன் முதலாய் சினிமாவுக்குப் போகப் போகிறோம் என்ற நினைப்பு மனதில் மகிழ்ச்சித் துள்ளலைத் தந்தது.

பரணிகா தியேட்டரு தூரக்கல்ல இருக்கு.. சீக்கிரமே கெளம்புங்க..என்றாள் கமலம். நாலர மணிக்கிலாம் கெளம்புனா சரியாருக்கும் என்றாள்.

நாலர மணிக்கேவா? வண்டீலதானே போவுறோம்? நடந்தா போகப்போவுறோம்..

சிரித்தான் தினேஷ்.

அதுக்கில்ல தினேஷு.. தியேட்டருக்குப்போகுற வழீலதானே காளியம்மங் கோவிலு இருக்கு?அப்டீதானே போறீங்க..கோவிலுக்குள்ள நொழஞ்சிட்டுப்போலா மேன்னுதா..

சரியத்த..போறவழியில அம்மங்கோயிலு இருக்கா? அப்ப போலாமே?

என்னங்க.. அத்த சொல்லுறாப்புல அம்மன பாத்துட்டுப் போலாம்ல..

அத்தையும் மருமவளும் சொல்லியாச்சு..அப்பறம் நா என்னத்த சொல்ல? சிரித்தான் தினேஷ்.

நிலா..நான்னா தலவாரி ஜட போட்டுவிடவா?

சரியத்த..

அடர்த்தியான கருங்கூந்தல்.

பின்னி முதுகில் நிறுத்திய தும் கரும்பாம்பென முதுகில் நெளிந்தது.

அருகே இருந்த மல்லிப்பூச் சரத்தை மருமகளின் தலையில் சூட்டினாள் கமலம்.

திரும்பு நிலாக்கண்ணு..

அத்த..சொல்லிக்கொண்டே திரும்பினாள் நிலா.

அழகு..கொள்ள அழகு எ மருமவ..இருகைகளாலும் மருமகளின் முகம்தடவி கைகளை தன் இரு கன்னங்களிலும் வைத்து விரல்களைச் சொடுக்கித் திருஷ்டிக் கழித்தாள் கமலம்.

கோவில் வாசல்ல அர்ச்சன தட்டு விக்கிற கடையிருக் கும்.அதுல ரெண்டு வெளக்கு வாங்கி அம்மங்கிட்ட வெளக்கேத்துங்க..தீப்பெட்டி மட்டும் எடுத்துட்டுப்போங்க..

தீப்பெட்டியும் தருவாங்க ளேம்மா கடையில..

அது மெழுகு தீக்குச்சி.. சின்னூண்டாதா இருக்கும். வெளக்க ஏத்துறதுக்குள்ள கிகிடுனு தீக்குச்சிமுழுசும் எரிஞ்சி வெரலச்சுட்டுடும். காத்துவேற வெளக்கு ஏத்துறதே ப்ரம்மப் பிரயத்தனம். வீட்டுலேந்து பெரிய ஹோம்லைட் தீப்பெட்டிய எடுத்துட்டுப் போங்க..குச்சி பெரிசாருக்கும்..நின்னு எரியும்.

சரிங்கத்த..

காளியம்மன் கோவில். சின்னக் கோவில்தான்.

கோவில் வாசலிலிருந்த கடையில் இரண்டு விளக்கு களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார்கள்.

அதிகக்கூட்டமில்லை.

என்னங்க வெளக்க ஏத்தவா?

ம்..ஏத்து நிலா..எங்கிட்டக் கேக்கணுமா?

விளக்குகளை ஏற்ற முயன்றாள் நிலா.

வெட்டலெளி என்பதால் காற்று சுழன்று அடித்தது.

சாமானியத்தில் விளக்கின் திரி பற்றிக்கொள்வேனா என்று அடம்பிடித்தது.

காற்றால் சட்சட்டென அணைந்துபோனது.

அத்த சொன்னதுசரிதாங்க..

அடிக்கிற காத்துல திரிநுனி பத்திக்கவே மாட்டேங்குது. தப்பி பத்திக்கிட்டாலும் தீபம் அணைஞ்சு போவுது. இதோட நாலு தீக்குச்சியப் பத்த வெச்சாச்சு..சிரித்தாள் நிலா.

விடு நிலா..நாம வெளக் கேத்த நெனச்சதும்.. முயன்றதும் ஆத்தாக்குத் தெரியும்..எரியாட்டி தப்பா நெனைக்கமாட்டா..தண்டனைலாம் தரமாட்டா..அம்மன கும்பிட்டுட்டு கிளம்பலாம் வா..

அருகருகே நெருங்கி நின்று அம்மனைக் கும்பிட்டார்கள்.

என்னங்க கிண்ணத்துல குங்குமம் இருக்கு பாருங்க..

அம்மன் பிரசாதம்.எடுத்து எனக்கு வெச்சுவிடுங்க.. என்றாள் நிலா.

கிண்ணத்திலிருந்த குங்குமத்தை எடுத்து ஆசையாய் நிலாவின் நெற்றியில் வைத்தான் தினேஷ்.

அப்பறம் வேற எதாவது என்றான்..

வேறயா? வேற ஒன்னுமில்ல..

வாங்க போலாம் என்றாள் நிலா சிரித்தவாறே.

நிலா நீட்டிய தீப்பெட்டியை வாங்கி பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

தியேட்டர்.முதன் முதலாய் மனைவியோடு அவனும் கணவனோடு அவளும் படம் பார்க்க அமர்ந்திருப்பது..இருவருக்குமே புது அனுபவம்.

படம் அதிகமாய்க் காதலைப் பேசும் படம்.பாட்டும் கூத்துமாய்..இளமையாய்.. இனிமையாய்..அதனாலேயே ரசித்துப்பார்த்தார்கள் இருவரும்.

படம் நல்லாருக்குல்ல நிலா..

க்கும்..ஆமாங்க..வெட்கத்தோடு சொன்னாள் நிலா.

படம் முடிந்து வெளியே வந்தாயிற்று.

வாட்சில் மணிபார்த்தான் தினேஷ்.வாட்சின் முட்கள் நேரம் ஒன்பது பதினைந்து என்று காட்டியது.

லேசாய்த் தூறல் விழுந்தது.

என்னங்க தூறுது.. மழவருமா?

வானத்தை அண்ணாந்து பார்த்தான் தினேஷ்.. மேகமெல்லாம் வேகமா ஓடுது.. மழல்லாம்வராது என்றான்.

கிளம்புவமா? என்றாள் நிலா.

ஹோட்டல்லன்னா சாப்புடுவமா நிலா என்றான்.

அவளின் சம்மதத்தை ஆவலாய் எதிர்பார்ப்பது போல் இருந்தது கேள்வியின் தொனி.

நிலாவுக்கு அது புரிந்தது.

அவளுக்கும் ஆசையாய்த் தான் இருந்தது.

ஆனாலும்.. அத்த வீட்டுல நமக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க.. அவங்களும் சாப்டிருக்கமாட்டாங்க.. பாவங்க அத்த என்றாள்.

நிலா.. அம்மாக்குனா ஃபோன் பண்ணிச் சொல்லிடுவோம்..

சரிங்க..

சொல்லியாயிற்று.

ஹோட்டலில் சாப்பிட்டார்கள்.

இவனுக்கு எவை சாப்பிடப் பிடிக்குமென்று அவளுக்கும்.. அவளுக்கு எவை பிடிக்குமென்று இவனுக்கும் தெரிந்து போயிற்று.

ஆனாலும் இவனுக்குப் பிடித்ததை அவளும் அவளுக்குப் பிடித்ததை இவனும் சாப்பிட்டுப் பழகுவதென தீர்மானிக்கப் பட்டது.

ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள்.

பீடா வேணுமா நிலா.. கடையிருக்கு..

அய்யய்யோ அதெல்லாம் வேண்டா..

பீடாதானே வேணுமான்னு கேட்டே..என்னமோ கஞ்சா வேணுமான்னு கேட்டாப்ல எம் பொண்டாட்டி அய்யய் யோன்னு இப்பிடி அலறுறா..சிரித்தான்.

அவனோடு சேர்ந்து அவளும் சிரித்தாள்.

இளம் ஜோடியின் சந்தோஷச் சிரிப்பைப் பார்த்து.. விளக்கில்லா இருட்டில் நின்று.. விதி சிரித்தது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *