பேசினால் தப்பா..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் தினபூமி
கதைப்பதிவு: September 3, 2026
பார்வையிட்டோர்: 95 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோமளா பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள், அவள் கேள்விப்பட்ட விஷயம் இன்னும் அழுகையைத் தந்து கொண்டிருந்தது. விம்மிக் கொண்டே தன் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது மகன் விஜய் ஓடி வந்து “எங்கேம்மா போகிறோம்?” என்றான். 

“நம்ம வீட்டுக்கு கண்ணா” என்றாள். 

“அதற்கு ஏன் அழுகிறாய்?”

“ஒண்ணுமில்லே. கண்ணுலே தூசி விழுந்திருச்சி. நீ போய் கேன்வாஸ் போடு”. 

“அப்பா வந்து கூப்பிட்டுக் கொண்டு போவாங்களா?” 

“இல்லேம்மா. நாமதான் போறோம்”. 

“சித்தி நம்மகூட வருவாங்களா?” 

“சித்தியாம் சித்தி. அந்தப் பாதகியினாலேதான் எனக்கு எல்லாமே வந்து விடிஞ்சிருக்கு. நீ போ”. 

“ஒரு வாரமா சித்தி எங்கே போனாங்க?’ 

ஏதோ கோபமாக சொல்ல வாயெடுத்த கோமளா தன் பிள்ளையிடம் எதையும் சொல்லி பிரயோஜனம் இல்லை. வீணாக அதன் மனதும் கக்ஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு, “தெரியலேப்பா, அம்மாவைத் தொந்தரவு பண்ணாமல் நீ போய் வேகமாய் கிளம்பு” என்றாள் கோமளா.

“சரிம்மா” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான்.

சூட்கேஸை மூடி வைத்து விட்டு முகம் கழுவிக் கொண்டு துணி மாற்றிக் கொண்டிருந்த போது, கோயிலிலிருந்து வந்த அம்மா ரஞ்சிதம் கேட்டாள். “என்ன, ஒரு வாரம் விஜய்க்கு லீவு. அதான் வந்தேன் என்றாய். உடனடியாக புறப்பட்டு விட்டாய்.” 

“உன் மகள் செய்திருக்கும் வேலையைப் பார்த்தாயா?” 

“நீ ரோஷிணியைப் பற்றியா சொல்கிறாய்!”

“ஆமா”. 

“நீதானே என் புருஷன் கணக்கு வாத்தியார். கடைசி செமஸ்டர் தேர்விலே நன்றாகப் படிக்க வேண்டுமென்றால் அத்தானிடம் வந்து கேள் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனாய்” என்றாள் ரஞ்சிதம். 

“அவள் செய்திருக்கும் காரியத்தை பார்த்தாயா?” 

“என்னடி சொல்கிறாய்? உன் வீட்டுக் கதையை நீ சொன்னால் தானே புரியும்?”. 

“நான் என் பிள்ளை மாதிரி நினைத்து அவளை என் வீட்டில் தங்க வைச்சேன்”. 

“ஆமாம். நான் கூட அவள் வயசுக்கு வந்த பொண்ணு. அவளை அனுப்பமாட்டேன்னு தான் சொன்னேன். நீதான் தங்கச்சி நல்லா படிச்சு பாஸானால் எப்படியாவது அவளை டாக்டருக்குப் படிக்க வைக்கலாம் என்று அடம்பிடித்தாய். இப்போது வந்து நின்று கொண்டு ரோஷிணியைப் பற்றி ஏதோதோ சொல்கிறாய்”. 

“என் தங்கை என்னைப் போலவேதான் நடந்து கொள்வாள். இப்படியா நடந்து கொள்வாள் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது!” 

“சும்மா எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறாய். அவள் அப்படி என்னதான் செய்தாள்?” 

“என் வீட்டுக்காரர் போன் பண்ணிச் சொன்னார். அவர் வீட்டுக்கு வரும்போது…” என்று அவள் சொல்வதற்குள் அப்பா வேதாச்சலம் உள்ளே வந்து “என்னம்மா எங்கே கிளம்பிவிட்டாய்?” என்று கேட்டார். 

“அது – வந்துப்பா. சாப்பாட்டிற்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. சீக்கிரம் வந்துவிடுன்னு சொன்னார். அதுதான் கிளம்பிவிட்டேன்” என்றாள் கோமளா.

“ஏண்டி பெத்த அப்பாகிட் டேயே பொய் சொல்கிறாய்” என்று கோபப்பட்டாள் அம்மா ரஞ்சிதம்.

“என்னம்மா என்ன விஷயம்?” என்று கேட்டார் அப்பா. 

“ஸாரிப்பா, உங்க பொண்ணு ரோஷிணி செய்த காரியத்தை சொல்ல நாக்கே கூசுது”. 

“என்னடி, நானும் வந்த நேரத்திலேயிருந்து கேட்டுக் கிட்டேயிருக்கிறேன், நீ என்ன பொடி வைத்துப் பேசிக்கிட்டிருக்கே அப்பவே சொன்னேன். இவள் வயசுக்கு வந்த பொண்ணு நீ பாட்டுக்கு உங்க வீட்டுக்காரர்கிட்டே வந்து கணக்குப் படிக்கச் சொன்னே. அவர் வேறே ஏதாவது கணக்குப் போட்டுட்டாரா? அல்லது இவதான் அத்தான் தானேன்னு கொஞ்சம் ஓவரா பழகிட்டாளா?” என்று கத்தினாள் அம்மா. 

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. இந்த மாதிரி விஷயத்திலே என் புருஷன் ராமனாக்கும்”.

“அப்புறம் என்னதான் நடந்திச்சு?” 

“அப்பா – அது – அது” என்று அவள் பேச ஆரம்பிப்பதற்குள் விஜய் வேகமாக ஓடி வந்து “அம்மா போகலாமா? ஆட்டோ வந்திருச்சு” என்றான். 

“போலாம்பா-இரு”. 

“நீ இன்றைக்கே எதுவா இருந்தாலும் ரோஷிணியை இங்கே அனுப்பி விட்டும்மா, நீ சொல்ல விருமபவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு என்ன விஷயம், பின்னாலே தெரிந்து விடும்” என்றார் அப்பா.

“அதென்ன பின்னாலே? நீ சொல்லிட்டுப் போடி. என் மனசு திக்குதிக்குனனு அடிச்சுக்குது” என்று கத்தினாள் ரஞ்சிதம்.

“விஜய் நீ போய் ஆட்டோவிலே போய் உட்காரு. வருகிறேன்” என்று பையனிடம் சொல்லிவிட்டு “அப்பா உங்களுக்கு நன்றாகவேத் தெரியும். எங்கள் வீட்டிற்கும் எதிர்த்த வீட்டுக்காரர்களுக்கும் ஏற்கனவே தண்ணீர் பைப் போட்ட பிரச்சினையில் தகராறு. அவர்களோடு எங்களுக்கு பேச்சே கிடையாது. 

இப்படியிருக்க, எதிர்த்த வீட்டுப் பையன்கிட்டே இவள் பேசறா. அத்தான் அவளிடம் திட்டி இப்படியெல்லாம செய்யலாமா? என்று கேட்டதற்கு ‘த்ரில்லாக இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறாள்” என்று கோபப்பட்டால் கோமளா. 

“என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன். போய் அவளை உடனே வீட்டிற்கு அனுப்பி வை” என்றார் அப்பா. 

அங்கே… இதுபற்றி எதுவும் தெரியாமல் அந்த எதிர்வீட்டு பையனிடம் இலங்கை அமைதி, மோனிகா செலஸ், டெண்டூல்கர், மாதவன் என சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தாள் ரோஷிணி.

– 2003,  தினபூமி – ஞாயிறுபூமி.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *