கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 131 
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

(1955ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாவது அங்கம் | மூன்றாவது அங்கம்

முதற் காட்சி

இடம்:- குமரபுரத்தில் ஏமாங்கதன் பாசறை.

இரவு. ஏமாங்கதனும் ஜெயபாலனும் உட்கார்ந்திருக்கின்றனர்.

ஏ. அப்பா,பாலாயனன் எழுதியிருக்கின்ற ஓலையைப்பார்த்தாயா?

ஜெ. பார்த்தேன்.

ஏ. இவ்வாறு நான் ஏதாவது படையெடுத்து வந்தால் பய முறுத்தும் பொருட்டே என் மனைவிமக்களை அவன் சிறையிலிட்டு வைத்தான் என்றெண்ணுகின்றேன். ஐயோ! சௌமாலினி சிறையில் பிரசவித்தாளாமே ஒரு ஆண்குழந்தையை! அவளுக்கோ அக்கதி வாய்க்கத் தகுந்தது! பாலசூரியன் எப்படி யிருக்கின்றானோ ?நான் அரண்மனைக்குச்சென்ற பொழுதும் என்னால் இவர் களைப்பார்க்க முடியாமற் போயிற்றே! சௌரிய குமாரன் இவர்களைக்கொல்வானாயின் பிறகு என்கதி என்னவாவது?

ஜெ. ஆகவே, உமதெண்ணமென்ன?

ஏ. நாம் இங்கிருந்து சைனியங்களுடன் புஷ்ப்புரியை நோக்கி ஓரடி எடுத்து வைத்தபோதிலும் என் மனைவி மக்களைக் கொல்வான் சந்தேகமில்லாமல் அச்சண்டாளன் சௌரியகுமாரன்! என்பிராணனிருக்குமளவும் அதற்கு நான் ஒருக் காலுமிசையேன். எனக்கு ராஜ்யமும் வேண் டாம் ஒன்றும் வேண்டாம். அவர்கள் சிறையிலிருந்த போதிலும் உயிரோடிருந்தாற் போதும். அப்பா, நாம் பழயபடி நமது காட்டிற்குப்போய் விடுவோம்.

ஜெ. அரசே, என்ன பயப்படுகின்றீர்! சௌரியகுமாரன் சும்மா பயமுறுத்துகின்றானே யொழிய வெறொன்று மில்லை. நாம் இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்குவதா?

ஏ. அப்பா அவனை நீ நன்றாயறிவாய். எனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அவன் என்பெண்டு பிள்ளைகளைக் கொல்லப்பின்வாங்குவானா?

ஜெ. ஆனால் உம்முடைய கைக்குழந்தையைக்கொன்று உம்மையும் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அத்துரோகியை சும்மாகவா விடப்போகின்றீர்? உம்முடைய பெண்டுபிள்ளைகளையும் சிறையிலிட்டிருக்கின்றான்!

ஏ. ஆமாம், நான் என்ன செய்வது? அவன்தான் சுகமாய் நாடாளட்டுமே? எப்படியாவது என் பெண்சாதி பிள்ளைகள் இறவாமலிருந்தாற் போதும்.

ஜெ. அரசே, அன்றைத்தினம் எப்படியாவது இவன் மீது பழிவாங்க வேண்டுமென்று கூறினீரே அது எப்படிப் போவது ?

ஏ. சொன்னேன் உண்மையே, அப்பொழுது இப்படியெல்லாம் வருமென்று எண்ணினேனா?

ஜெ. ஐயனே! ஒரு காரியத்தை மேற்கொண்டால் தந்தை, தாயார், பெண்டு, பிள்ளை எதையும் பார்க்கலாகாது. அப்படி எதையும் எவரையும் பாராது ஒருவன் ஒரு காரியத்தை மேற்கொள்ளுவானாயின் அக்காரியத்தில் எப்படியும் சித்தி பெறுவான். இவைகளை யெல்லாம் கருதவாரம்பித்தல் காரியம் கைகூடுமா?

ஏ. அப்பா, அது உன்னால் முடியும் என்னால் முடியாது! முடியாது!-

அந்தர்டப்பு வயத்தான் முதலிய கள்வர்கள் ஆண்வேடம் பூண்ட சுசங்கதையைப் பிடித்து வருகிறார்கள்.

ஜெ. அடே யார் இது?

அ. சாமி ! இவன் யாரோ தெரியலே, இங்கே வந்து ஒவ் வொரு கூடாரமா இருட்டிலே நுழைஞ்சி நுழைஞ்சி பாத்திக்கினு இருந்தான் நாங்கபோயி கபீல் இண்ணு புடிச்சிகினோம். கினு யார்டா இண்ணு கேட்டா, சும்மா அழரான்,தலைவிதி இண்றான் எது கேட்டாலும் தலைவிதி இண்றான். எங்கேயிருந்து வந்தேடா இண்ணா தலைவிதி இண்றான்.

சு. என்னமானா திண்ரத்துக்கு வச்சிகினு இருக்கிறையா இண்ணாக்கா, அதுக்குகூட தலைவிதி இண்றான் சாமி.

ஏ. யாரப்பா நீ? (சுசங்கதை ஏமாங்கதனைக்கண்டறிந்து கள்வர் கையினின்றும் திமிறிக்கொண்டு ஏமாங்கதன் காலில் வீழ்ந்து புலம்புகின்றாள்.)

சு. அண்ணா! அண்ணா! என்னை இவர்கள் கையினின்றும் காப்பாற்றும்!காப்பாற்றும் ! (தலையிலணிந்த முடிவிழ, நிஜரூபம் வெளியாகின்றது)

ஏ. ஆ! சுசங்கதா! இங்கெப்படி வந்தாய்! இதென்ன கோலம்?

அ. அடடே! என்னாடா ஒரு பொம்மனாட்டியை புடிச்சிகினு வந்தோமே?

வ. போ ! ஒதைதான் பொம்மனாட்டிங்களே நம்ப தொடக் கூடாது இண்ணு சாமி சொன்னாரே மறந்தூட்டையோ? அப்புறம் இவர்களைப் போகச் சொல்லும்.

சு. அண்ணா, சொல்லுகின்றேன்.

ஏ. அடே! வெளியே செல்லுங்கள் (கள்வர்களெல்லோரும் வெளியே போகின்றார்கள். ஜெயபாலன் ஒருபுறமாய்ப் போய் நிற்கின்றான்.)

ஏ. சுசங்கதா! இக்கோலத்துடன் ஏது நீ இங்கே வந்தது? என்ன சமாச்சாரம்?

சு. அண்ணா, சௌரியகுமாரன் என்னைக்கொல்லப் பார்த் தான்: அப்பாதக னிருக்கு மிடத்தில் இனியிருப்பது தவ றென்று கருதி இம்மாறுவேடம் பூண்டு தம்மைத்தேடிக் கொண்டு இங்குவந்தேன்! இவர்கள். கையிற்பட்டேன்.

ஏ. உன்னையா கொல்லப்பார்த்தான்?ஏன்?

சு.பிதா இறந்தபிறகு நான் உம்மை அழைத்துப் பட்டங் கட்ட வேண்டுமென்று அவனுடன் மன்றாடினேன். அப் பொழுது அவன் ஏதோ என்மீது சந்தேகங்கொண்டு என்னைக்கொல்லப் பிரயத்தனப் பட்டான்.

ஜெ. (ஒருபுறமாக) இதிற்பொய்யில்லை. முகத்திலேயே தெரிகின்றது.

ஏ. சுசங்கதா! சௌமாலினியும், பாலசூரியனும் எப்படி யிருக்கின்றார்கள்? குழந்தை என்னமாயிருக்கின்றது?

சு.அண்ணா! நான் என்ன சோல்லப்போகின்றேன்! என் நா எழவில்லையே! (தேம்பி அழுகிறாள்.)

ஏ. என்ன! பாபி கொன்றுவிட்டானோ?

சு. (அழுதுகொண்டே) இல்லை, பாலசூரியனுடைய இரண்டு கண்களையும் பறித்துவிட்டான்.

ஏ.பாலசூரியனுடைய கண்களையா! ஏன்?

சு. ஆம்! ஏனோ எனக்குத்தெரியாது!

ஏ. கண்ணே! பாலசூரியா பாலசூரியா! (தேம்பி அழுகிறான்; சுசங்கதை தேற்றுகின்றாள்; பிறகு சற்றுப்பொறுத்து எழுந்திருந்து ஜெயபாலனிடம் போகிறான்) அப்பா! என் தங்கை கூறிய தையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாயா நீ?

ஜெ. ஆம் கேட்டேன்

ஏ. (ஜெயபாலன் காலில் வீழ்கின்றான்)

ஜெ. ஐயனே! இதென்ன? எழுந்திரும்! எழுந்திரும்!

ஏ. அப்பா! நீ யாரென்று எனக்கு இன்னும் தெரியாது. ஆயினும் உன்னைப்போன்ற மதியுடையவர்கள் இவ்வுல கில் எவருமில்லை யென்று எதோ என்னை நினைக்கச்செய் கின்றது. அப்பா ! இக்காலத்தில் எனக்கு நீ உதவவேண் டும்; எப்படியாவது நான் பாலசூரியனைப் பார்க்கும்படி செய்யவேண்டும்! அப்பா ! இந்தவரம் எனக்கு அளி!

ஜெ. ஐயனே! இது எளிதான விஷயமன்றே!

ஏ. அப்பா! சௌமாலினியும் பாலசூரியதும் இன்னும் சௌரியகுமாரன் வசத்தி லிருப்பார்களாயின் சீக்கிரம் அவர்களைக் கொன்று விடுவான். ஆதலால் எப்படியா வது அவர்களை அச்சிறையினின்றும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோமாயின் பிறகு நாம் தைரியமாகப் புஷ்ப புரியின் மீது படை யெடுத்துச் செல்லலாம். அப்பா, இதற்கொரு மார்க்கமுமில்லையா?

ஜெ. அப்படியே செய்யலாம். ஆனால் இது கஷ்டமான விஷய மாயிற்றே.

ஏ. பெரிதன்று, எப்படியாயினும் கஷ்டப்பட்டுப் பார்ப்போம்.

ஜெ. (ஒருபுறமாய்) வேறுவழியில்லை- அரசே, பயப்படாதீர் அப்படியே பார்ப்போம். அரண்மனையில் எந்தச் சிறைச் சாலையில் இருக்கின்றார்கள்?

சு. மேற்குபுறத்தில் மூலையிலிருக்கின்றதே அதில்.

ஜெ. சரி!- நாயனார்! கோஸ்கி!

நாயனாரும் கோஸ்கியும் வருகிறார்கள்.

நா. ஐயனே! தாம் விசாரிக்கச்சொன்னதை விசாரித்தேன். ஒரு கஷ்டமுமில்லை ; புஷ்பபுரத்துக் கோட்டை மேலுக்கு மாத்திரம் மிகவும் காவலுடைய தாகத் தோற்றப் படு கின்றதே யொழிய வேறில்லை.

ஜெ. சந்தோஷம். இப்பொழுதே நீயும் இன்னும் ஏழுகள்வர் களுமாய்ப் புறப்பட்டு மாறு வேடம் பூண்டு புஷ்பபுரத் திற்குப்போய் மேற்குச் சிறைச்சாலையருகில் நாளைத்தினம் இரவு பனிரண்டு மணிக்குச் சித்தமாயிருக்க வேண்டும்; அச்சிறையினின்றும் மூவரைத் தப்புவிக்கவேண்டும்; அதற்குரிய சாமக்கிரியைகளை மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.

நா. அப்படியே, ஆனால் கும்பலாகப் போகவேண்டியிருக் கின்ற படியாலும் இந்தச்சாமான்களை யெல்லாம் எடுத் துச்செல்ல வேண்டியிருக்கின்ற படியாலும். முன்பு போலல்லாமல்; வேறுவேஷம் பூண்டு போகிறோம்.

கோ. ஆமாம்,நம்ப ஆயுதங்களே கொண்டுபோகத்தேவலே?

ஜெ. ஆம் கொண்டுபோகவேண்டும். என்ன செய்வததற்கு?

கோ. சாமி, நாங்கல்லாம் பாடகாள் வேஷம்போட்டுகினு போரோம். அது தான் சுலபம்.

ஜெ. அப்படியே செய்யுங்கள். கோஸ்கி உன்னிடம் நிரு ஒரு பத்தைத் தருகின்றேன், அதை மேல் விலாசப்படி புஷ்ப புரியிற் கொண்டுபோய்க் கொடுத்துவிடவேனும்.

கோ. அப்படியே தாரேன்சாமி. சீக்கிரம் எழுதித்தாங்க. சீக் கிரம் புறப்படணுமே!

ஜெ.இதோ வாருங்கள் ; ஏமாங்கதராஜனே, வாரும் தம்மு டைய தங்கையை அழைத்துக்கொண்டு. இனிநாம் ஒரு க்ஷணமும் தாமதம் செய்யலாகாது. (எல்லோரையும் அழைத்துச் செல்கின்றான்.)

காட்சி முடிகிறது.

இரண்டாவது காட்சி

இடம். சிறைச்சாலை.

மேல்மாடியில் சௌமாலினி பாலசூரியனைக் கட்டியணைத்து அழுதுகொண்டிருக்கிறாள். சேவகர் கீழே காவல் செய்கின்றனர்.

சௌ. கண்ணே! எப்படியடா மனந்துணிந்து அப்பாதகர் களுன் இரண்டு கண்களையும் காய்ச்சிய இரும்புச்சலா கையினால் குத்தினார்கள்? உன் எளிய முகத்தைப்பார்த் தால் யமனுக்கும் இரக்கம் வந்திருக்குமே! இப்பாதகர் களுக்கேன் இரக்கமில்லாமற் போயிற்று? என் கண்மணி யே! இப்பாவிகள் இரும்புச் சலாகையினால் உன் கண் களைக் குத்தியபொழுது உன்மனம் எப்படித் துடித் ததோ! நீ என்ன வருந்தினாயோ ! கண்ணே! அதை நினைத்தாலும் என் நெஞ்சம் பகீர் என்கிறதடா! உன் கண்களை யவிக்க தெய்வத்திற்கும் கண்ணற்றுப் போயதோ! அடா மகனே! என் வயிறு பற்றி எரிகின் றதே! இது அச்சண்டாளப்பாவி செளரிய குமாரனைச் சும்மாவிடுமென்று நினைக்கின்றாயோ? ஒருகாலும் விடாது! அவன் அடியோடு-

பா. அம்மா, அப்படி ஒன்றும் சொல்லாதீர். நமக்கு ஜன்மத் துரோகிகளாயிருந்த போதிலும் அவர்கள் நமக்கென்ன தீங்குகள் செய்தபோதிலும் நாம் அவர்களைப் பார்த்து இவ்வாறு கெட்டுப்போகின்றார்களே யென்று பரிதாபப் படவேண்டுமே யொழிய அவர்களைச் சபிக்கலாகாது. சுவாமியிருக்கிறார் எல்லோரையும் அவரவர்கள் துர்நடத் தைப்படி தண்டிக்க; நாம் ஏன் இவ்வேலையில் பிரவே சிக்க வேண்டும்?

சௌ.கண்ணே ! இவ்விஷயம் உன் பிதாவுக்குத் தெரிந்தால் தன்பிராணனை விடுவாரேயடா! தன்கண்கள் போன போதிலும் அவ்வளவு வருத்தப் படமாட்டாரே!

பா. அம்மா, என்கண்கள் போனதற்காக நானே இப் பொழுது வருத்தப்பட வில்லையே, நீங்களேன் வருத்தப் படவேண்டும்? எல்லாம் ஈசன் செயலென்று பொறுத்திரும்.

சௌ. ஆனால் உனக்குக் கண் குருடாயிற்றே என்று சிறிதும் வருத்தமில்லையா?

பா. முற்றிலும் இல்லை என்று கூறமுடியுமா? ஆயினும் இப் பொழுதெல்லாம் தணிந்துவிட்டது. இன்றைத்தினம் காலை உறக்கம் நீங்கி எழுந்திருக்க முயன்றபொழுது ஒே இருட்டாயிருந்தமையால், என்ன நாம் இன்னும் தூங்கு கின்றோமா என்று திடுக்கிட்டது என் மனதில்; உடனே நமது கண்கள் போனதினால் இனி நமக்குப் பகலும் நள்ளிருளும் ஒன்றுதான், என்று என் மனதில் தோற் றியவுடன், என்னால் அடக்கக் கூடாதபடி கண்ணீர் விட்டேன், அப்பொழுது சற்றுவியசனமாயிருந்தது இப் பொழுதெல்லாம் நீங்கிவிட்டது.

சௌ.கண்ணே! உன் மனோதிடத்தை நான் என்னென்றுரைப் பேன் ! நீ பதினைந்து வயது அறியாப்பாலகனாயினும் உன் புத்தியை நான் என்னென்று புகழ்வேன் ?

பா. அம்மா, என்னாலென்ன இருக்கின்றது! என் இருதய கமலத்தில் வீற்றிருக்கும் ஈசன் கருணையாகும் இது. சௌ.கண்ணே! நீ வழிபடும்படியான அந்த ஈசன் உன்னை ஏன் இவ்வழிக்குக் கொண்டு வந்தார்!

பா. அம்மா, அதை நான் முன்பே கூறினேனே ! அவருடைய திருவுள்ளத்தை குறித்து நாம் வினவலாகாது. நமக்கென்ன தெரியும்? எல்லாம் நம்முடைய நலத்துக்காகவே அவர் நம்மை இவ்வாறு தண்டிக்கின்றார். பிள்ளையைத் தகப்பன் அதன் நன்மைக்காகவோ கெடுதிக்காகவோ தண்டிக்கின்றான்? இந்த க்ஷணத்தில் நமக்குத் துன்பமாகத் தோற்றுவது முடிவில் நம்முடைய நலத்திற்காகவே இருக்கலாம். என் கண்கள் போனது என் நன்மைக்காகவே யென்று முடிவில் விளங்கலாம். சுவாமியின் எண்ணத்தையறிய யாவராலாகும்?

சௌ, கண்ணே! எனக்கு வேறொன்றும் வருத்தமில்லை. இந்தச் சிறைச்சாலையில் படும் துன்பத்தினால் ஒருவேளை இறப் பேனாயின் நான், பிறகு அந்தகனாகிய உன்கதி என்ன வாகும்? கண்ணே! உன்னைப்பற்றியே என் உயிரைக் கையிற்பிடித்துக் கொண்டிருக்கின்றேன், இல்லாவிட்டால் அப்பொழுதே உன்னை உன்னை அந்தகனாகக் கண்ட பொழுதே போயிருக்குமென்னுயிர்.

பா. அம்மா, எனக்காகத் தாம் வருந்தவேண்டாம். அம்மணி, சீக்கிரம் நமது துன்பங்களெல்லாம் நீங்கி ஈசனுடைய திருவடிபோய்ச் சேருவோம் என்று எனக்குத் தோற்று கின்றது.

சௌ. ஈசனே! அப்படியாவது எம்மை இத்துன்பத்தினின் றும் நீக்கி உம்மிடம் சேர்த்துக்கொள்ளும், சுவாமி! தாம் இன்னும் பராமுகமாயிருக்கலாகாது!

சே. (கீழே) அடே! நம்ப சேனைங்கள்ளா போச்சே என்ன சமாசாரம்?என்னமான தெரியுமா உனக்கு? ஒரு சமா சாரத்தையும் காணோமே! – அடே இது யாரடா இவங் கள்? யார் அது?

கள்வரெல்லோரும் மாறு வேடம் பூண்டு வருகிறார்கள்

நா. அப்பா! நாங்கள் பாடகாள்.

சே. என்ன? பாடகரா பாதகரா?

நா. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள். பக்கத் தூருக்குப் போகிறோம். இன்றைக்கு இரவு இங்கே படுத் துறங்கிவிட்டுப் போகிறோம்.

சே. ஆனா, இது சிறைச்சாலையாச்சே! இங்கே படுத்துக்க லாமா? ஆனாலும் ஒரு பாட்டுபாடுங்க நண்ணா இருந்தா படுத்துக் கிறத்துக்கு இடம்தாரேன்.

நா. இதோ பாடுகிறோம். (கள்வரெல்லோரும் உட்கார்ந்து ஒரு பாட்டு பாடுகிறார்கள்)

சே. நண்ணா இருக்குது! பாவம் படுத்துக்குங்கோ ! (கள்வெரெல் லோரும் படுத்து சிறிது பொழுதுக்குள் நித்திரை செய்பவர்கள் போல் பாசாங்குசெய்கிறார்கள்.)

சே. என்னடா ! இந்தபாடகருங்கோ மூக்காலே கூடப் பாட ராங்கோ! (திடீரென்று ஆராய்ச்சி மணி அரண்மனையில் அடிக் கின்றது). ஒரு ராணுவவீரன் விரைந்து வருகிறான்.

ரா. அடே! சேவகர்களே! பாலாயனர் எதிரிகளோடு சண்டை போடுவதை விட்டு அவர்கள் பட்சம் நம்முடைய சேனைக் ளுடன் சேர்ந்துவிட்டாராம்! மகாராஜா இதைக்கேள் விப் பட்டு மிகவும் கோபங்கொண்டு இங்கு பட்டணத்திலிருக் கும் சேவகர்களை யெல்லாம் சேர்க்கச்சொன்னார்.வாருங் கள் சீக்கிரம்! (சேவகர்களை அழைத்துக் கொண்டு விரைவிற் போகிறான். சற்று நேரம் பொறுத்து, சிறைச்சாலை எதிரிலுள்ள, ஒரு சுரங்கத்தின் வழியாக மூடியை மெல்லப் பெயர்த்துக்கொண்டு ஜெய பாலனும் ஏமாங்கதனும் வருகிறார்கள். ஜெயபாலன் மூன்று முறை கையை நொடிக்க கள்வரெல்லோரும் மெள்ள எழுந்திருக்கின்றார்கள்.)

ஜெ.மெல்லியகுரலாய்) அடே, எங்கே அந்த உடும்பு கட்டின கயிறு? ஒருகள்வன் அதைக்கொடுக்கின்றான். ஜெயபாலன் அதை வீசி எறிகின்றான் சிறைச்சாலையின்மீது)

அடே, ஏறுசப்தம்செய்யாதே!(ஒருகள்வன் ஏறிப்போய் லேணி ஒன்றைக்கட்டி அவ்விடமிருந்து கீழேவிடுகின்றான்.) அரசே, சீக்கிரம்போய் முதலில் உம்முடைய மனைவியை அழைத்துவாரும்; ஜாக்கிரதை சீக்கிரம். சப்தமே கூடாது.

(ஏமாங்கதன் நூலேணிபற்றி ஏறிச் செல்கிறான்.)

சௌ. (மேலிருந்து) பிராணநாதா! பிராணநாதா!-

ஜெ. சீக்கிரம்! சீக்கிரம்! சப்தம் வேண்டாம். (ஏமாங்கதன் சௌமாலினியை அழைத்து வருகிறான் நூலேணி வழியாக.) ஜெ. அரசே, எவ்வளவுநேரம்? காலமாய்விட்டதே! நீர் உம் முடைய மனைவியை அழைத்துக்கொண்டு சுரங்கத்தின் வழியாக முன்புபோம். நான் போய் பாலசூரியனை அழைத்து வருகின்றேன்.

சௌ. பிராணநாதா! பாலசூரியனையும் அழைத்துவாரும். அவனைவிட்டுவிட்டு நான் மாத்திரம் எப்படிப் போவேன்? அவன் அந்தகனாயிற்றே!

ஜெ. அரசே! நீர்போம், சீக்கிரம் நானழைத்து வருகின்றேன்! நேரமாய்விட்டது, யாராவது பார்த்துவிட்டால் பிறகு அபாயம்!-

சௌ. அவன் வந்தாலொழிய நான்போகமாட்டேன். அவனை விட்டுப் போக எனக்கெப்படி மனம் துணியும் ஐயா?

ஜெ. ஐயனே பெண்புத்தியை கேளாதீர் போம்! இறங்கும்! அதோ! (தாரையின் சப்தம் கேட்கின்றது) யாரோவருகிறார் கள்! இறங்கும் சீக்கிரம்! இறங்கும் (ஏமாங்கதன் சுரங்கத் தின் வாயிலில் குதிக்கிறான். செளமாலினி தன்கைக் குழந்தையை மார்போடணைத்துக்கொண்டு சுரங்கத்தில் இறங்கப்போகும்சமயத் தில், எதிர் மதில் சுவரினின்றும் ஒர் சேவகன் அம்பை எய்ய அவ் வம்பு குழந்தையை ஊடுருவிச் சௌமாலினியின் மார்பைத்துளைக் கின்றது. சௌமாலினி பிராணநாதா! என்று கூச்சலிட்டுக் கொண்டு ஏமாங்கதன் கரத்தில் வீழ்கின்றாள்.)

ஜெ. அடே! மண்ணைமூடிவிடுங்கள் இதன் பேரில்! நில்லாதீர்! தப்பித்துக்கொள்ளுங்கள்! (சுரங்கத்தில் குதித்து மூடிக் கொள்ளுகின்றான். கள்வர்கள் அதன்மேல் மண்ணை மூடிவிட்டு நான்குபுறமாய் ஓடிவிடுகின்றார்கள். அரண்மனையில் ஆராய்ச்சி மணி அடிக்கின்றது.)

சௌரியகுமாரன் சில சேவகர்களுடன் விரைந்தோடி வருகின்றான்.

சௌரி. அப்பொழுதே நினைத்தேன்! நினைத்தேன்! தப்பிப் போய் விட்டார்கள் போலிருக்கின்றது! அடே ! அங்கிருக் கும்படியான சேவகர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நான்குபுறமும் தேடச்சொல். எப்படியாவது கண்டுபிடித்துக்கொண்டு வரவேண்டும், இல்லாவிட் டால் நீங்களெல்லாம் இறக்கவேண்டியதுதான்! (சிலசேவ கர் போகிறார்கள்) சரி ! இந்த ஏணியின் வழியாக இறங்கிச் சென்றிருக்கவேண்டும்! (ஏணியின்மீது ஏறிப்போகின்றான்.)

பா. (மேலிருந்து) அப்பா! அப்பா!-

சௌரி. என்ன? அப்பா என்கிறான் பாலசூரியன்!– போன அவசரத்தில் இவனை இங்குவிட்டுவிட்டுப்போனாற் போலிருக்கின்றது? இன்னும் என்ன சொல்லுகிறான் கேட்போம்!

பா. அப்பா ! இத்தனை நேரம்பிடித்ததா தாயாரை அழைத் துக் கொண்டு போய் விட்டுத்திரும்ப? அப்பா, என்ன சப்தம் கேட்டதே?

சௌரி .ஓகோ! ஏமாங்கதனே வந்து அழைத்துக்கொண்டு போய்விட்டாற்போலிருக்கின்றது; (இறங்குகின்றான்)-சரி இனியென்ன இருக்கின்றது; நாம் செய்யவேண்டியது வேறான்றுமில்லை. அடே சேவகா! மேலே சென்று, பால சூரிய னிருக்கின்றான் அங்கு, அவனுடைய பிதாவிடம் அழைத்துக்கொண்டு போவதாகக்கூறி, இறக்கி அழைத் துக்கொண்டுபோய் இப்பொழுதே கொன்று அவனுடலை என் அறைக்குக் கொண்டு வாருங்கள்! சீக்கிரம்! தீர்ந் தது நம்முடைய வேலை! இனியென்ன இருக்கின்றது! (போகின்றான்)

ஒரு சேவகன்போய் பாலசூரியனை கீழே அழைத்துவருகிறான்.

பா. அப்பா? எங்கே என் அப்பா?

சே. அழைத்துக்கொண்டு போகின்றேன் வாரும்.

பா. அப்பா ? ஐயோ! அப்பா இருந்தால் ஏன் என்றிருப் பாரே! எனக்கு பயமாயிருக்கின்றது. நீங்கள் என்னை எங்கேயோ அழைத்துக்கொண்டு போகின் றீர்கள்!ஐயோ நான் அந்தகனானதைப்பற்றி இப்பொழுது தான் எனக்கு வருத்தமாயிருக்கின்றது, ஒன்றும் தோன்றவில்லையே! இப்பாபிகள் எனக்கேதோ தீங்குசெய்யவே அழைத்துக் கொண்டு போகின்றார்கள். ஈசனே எல்லாம் உனது திரு வருள். (சேவகர்களெல்லாம் பாலசூரியனை அழைத்துக்கொண்டு போகிறார்கள்.)

காட்சி முடிகிறது

மூன்றாங் காட்சி

இடம்: குமாரபுரம். ஏமாங்கதன் பாசறை.

சௌமாலினி படுக்கையின் மீது மரணாவஸ்தையிலிருக்கின்றாள் கால்மாட்டில் சுசங்கதை இறந்த கைக்குழந்தையை வைத்துக்கொண்டழுதுகொண்டிருக்கின்றாள். ஏமாங்கதன் தலையருகில் உட்கார்ந்திருக்கிறான். ஜெயபாலன் ஒருபுறமாய் நிற்கின்றான். நாயனார், வயத்தான், முதலிய கள்வர் வாயில் காத்து நிற்கின்றனர்.

சௌ. கண்ணே! பாலசூரியா? எங்கேபாலசூரியன்? ஏன் வரவில்லை முன்பே வருவான், என்று சொன்னீரே ? வருவான், இதோ வந்து விடுவான்.

சு. அம்மா, சற்றுப்பொறும் வருவான், விடுவான். சௌ. ஏன் பொய்பேசுகின்றீர் அவன் வரவேமாட்டான் எனக்குத் தெரியும்! [ஜெயபாலன் ஏமாங்கதனை மெல்ல சைகை செய்தழைக்கிறான்]

ஜெ. [ஒரு புறமாய் ஏமாங்கதனுக்கு] ஐயனே! வருத்தப்படாதீர்! இனி பிரயோஜனமில்லை! என்னாலியன்றவளவு பிரயத் தினப்பட்டு பார்த்தேன் மிஞ்சிவிட்டது! சீக்கிரம் உயிர் போகும் நேரமாய் விட்டது!

சு. அண்ணா! வாரும் இப்படி சீக்கிரம் வாரும்!

சௌ. பிராணநாதா! பிராணநாதா! [ஏமாங்கதன் சௌ மாலினியிடம் போகிறான்) என்ன நம்முடைய அரண் மனையில் சந்தடியற்றிருக்கின்றதே-பிராணநாதா! அந்த மட்டும் நாம் அனுபவித்த துன்பங்களெல்லாம் போய் இப்பொழுதாவது சுகமடைந்தோமே! பிராணநாதா! பாலசூரியனுக்கு விவாகஞ்செய்ய வேண்டிய காலமாய் விட்டது !- அவனுக்கு மகததேசத்து அரசன் பெண்ணை விவாகஞ்செய்வித்து, சீக்கிரம் பட்டம் கட்டி நாம் பார்க்கவேண்டாமா – இதோ! பாலசூரியன் பாலசூரியன்!- பாலசூரியா என் சொற்படி நட! சீக்கிரம் விவாகஞ் செய்து கொண்டு இந்நாட்டையாள்!-என் சொன்னது! கைக்குழந்தை இறந்தது என்று யார் இதோ பாலசூரியன் கையில் அது சிரித்துக் கொண்டிருக் கின்றதே ! பாலசூரியா! இப்படி கொடு அதை! – இந்த ஆற்றைக் கடந்தா நான் வரவேண்டும்?-நான் பயப் படவில்லை இதோ வருகின்றேன் பிராணநாதா ! நீரும் வாரும் சீக்கிரம் நான் முன்பு போகின்றேன் !-பால சூரியா! இதோ வந்து விட்டேன் !-அப்படித்தான் வழிகாட்டு !- கண்ணே !- [சௌமாலினி இறக்கின்றாள். எல்லோரும் கண்ணீர்விட்டுத் தேம்பி அழுகின்றார்கள்]

சு. [சிறிது பொறுத்து] கண்ணே! நீ உன் அன்னையுடன் உறங்கு.(இறந்த கைக்குழந்தையை முத்தமிட்டு சௌமாலினி யின் பிரேதத்தருகில் வைக்கின்றாள்]

ஜெ.சௌரியகுமாரா! இது உன் செயலன்றோ!

ஏ. ( சரேலென்று எழுந்திருந்து) அப்பா! நன்றாக ஞாபகப் படுத்தினாய்! இதோ நானொருசபதம் செய்கின்றேன்! என்னுடைய பெண்டு பிள்ளைகளை இக்கதிக்குக் கொண்டுவந்த சௌரியகுமாரனை நான் சீக்கிரம் பிண மாய்க்காணாவிட்டால் நான் ஒரு க்ஷத்திரியனல்ல ! (சௌமாலினியின் பிரேதத்தை முத்தமிட்டு] கண்ணே சௌ மாலினி! இந்த சபதத்தை நிறைவேற்றி நீ சொன்ன வண்ணம் நானும் சீக்கிரம் உன்னிடம் வந்து சேர்கிறேன் பயப்படாதே!

நா, ஐயனே ! இந்தக்ஷணம் எங்களுக்கு விடைகொடும் அக் கொடும் பாபியைக்கொன்று விட்டு வருகின்றோம்.எங் களுடைய வீரத்தைப்பாரும்! இப்படிப்பட்ட கொடும் பாபி இவ்வுலகத்தில் ஒருக்ஷணமும் இருக்கலாகாது இனி ! ஐயோ இதை யெல்லாம் நாங்கள் முன்பே அறியாமற் போனோமே!

வ. அந்த பாவியே சீக்கிரம் கொல்லாப்போனா நாங்கல்லாம் திருடரல்லசாமி! எங்க ஒடம்புலே ஒரு துளிரெத்தம் ருக்கிறவரைக்கும் அவனே சும்மா விடரமா சாமி! அவன் ஆம்பலையா ! பொம்மனாட்டிங்களெயெல்லாம் கொல்ரவேன்சாமி !

ஜெ. ஐயனே, இனிநாம் காலதாமசம் செய்யலாகாது சீக்கிரம் புஷ்பபுரிக்குப் புறப்படவேண்டும். பிரேதங்களைத்தக்க படி அடக்கம் செய்ய ஏற்பாடுசெய்யும்.

ஏ. ஆமாம்! நான்குபெயர் நான்கு மூலையில் பிடித்து இக்கட் டிலை அப்படியே எடுத்து வாருங்கள் சுசங்கதா! அம்மா! அழாதே! இனி என்ன இருக்கின்றது !- [பிரேதங்களை யெடுத்துக்கொண்டு ஜெயபாலன் தவிர மற்றெல்லோரும் போகிறார்கள்]

ஜெ. இக்காட்சி என்மனதையும் கலக்கிக் கண்ணீர்விடச் செய்தது! ஐயோ! இவைகளுக்கெல்லாம் ஆதிகாரணம் நானன்றோ? சிறுவயதில் என்னுடைய நிகரற்ற புத்தியை சத்விஷயங்கள் கற்பதில் உபயோகித்திருப் பேனாயின் இத் தீமைகளொன்றும் நேர்ந்திராவே! இத்தனை உயிர்களும் தப்பியிருக்குமே! இக்கோரவிஷயங்களின் தத்வத்தைக் கண்டறிவதில் என்புத்தியைச் செலுத்தியதினாலல்லவோ நானும் இக்கதிக்குவந்தேன்! இத்தனை பெயர் இறக்கவும் வழிதேடினேன். ஒரு குற்றம் எத்தனை குற்றங்களுக்குக் கர்த்தாவாயிருக்கின்றது! என்குருவின் வார்த்தைப்படி இதை அன்றுடன் விட்டிருப் பேனாயின்!- ஐயோ ! நான் சிறுவயதில் எண்ணியபடி என்கோரிக்கைகளெல் லாம் கைகூடி என்காதலியாகிய காந்திமதியை மணந்து, நிகரற்ற பதவியிலிருந்திருப்பேனே இப்பொழுது! காந்தி மதி! காந்திமதி! உன்மீது வீணில் சந்தேகம் கொண்டு உன்மனதைப் புண்ணாக்கிக் கொன்றவனும் நானே! நானே ! -சீ ! சீ! இப்படிப்பட்ட பாதகன் ஜன்மமினி யிருக்கலாகாதிவ்வுலகில்!- இவைகளையெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்துப் பயனென்ன? அப்பொழு திருக்கவேண்டும் அந்த புத்தி !- உம்! வந்தவழியா கின்றது!- இனிமேல் நடக்கவேண்டிய விஷயத்தைப் பற்றி யோசிக்கவேண்டும்-அடே! கோஸ்கி!

கோஸ்கி வருகிறான்

ஜெ. பாலாயனர் எங்கே? நான் அழைப்பதாக அழை.

கோ.சாமி, அவரைப்பற்றிதான் சொல்ல வந்துகினுஇருந் தேன் இங்கே ராணி அம்மாசெத்து பூட்டாங்க இண்ணு சொல்லப்போனோ, அவர் கூடாரத்திலே செத்து கிடந் தாரு, தூங்கராராங் காட்டியும் இண்ணு எழுப்பிப் பார்த்தோம் மின்னே! அப்புரம் செத்து பூட்டாரு இண்ணு தெரிஞ்சுது!

ஜெ. ஓகோ ! இன்றைக்கல்லவா முப்பாதாம் நாள்! சீ அதை மறந்தேன் நான். சரி அவன் வேலையும் தீர்ந்ததா? நான்காவதாயிற்று. ஆனால் நமக்கு இன்னும் ஒருநாள் தான் இருக்கின்றது ! ஓகோ ! சீக்கிரம் நமது பிரதிக் ஞையை முடிக்கும் விதத்தைத் தேடவேண்டும்! ஏமாங்கதன் நிருபமொன்றைக் கையிற் கொண்டு வருகிறான்.

ஏ. அப்பா ! இன்றைத்தினம் இரவு தகனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றேன்-அப்பா ! இந்நிருபத்தைப் பார்த்தாயா? இப்பொழுதுதான் சௌரியகுமாரனுக்குப் புத்திவந்தது! இந்தபுத்தி முன்பே தோன்றி யிருக்க லாகாதா?தான் எனக்குச்செய்த தெல்லாம் தவறென்றும், தம்பி என்பதைப்பற்றி அவைகளையெல்லாம் நான் மன்னிக்கவேண்டு மென்றுத்தான் வேண்டிக் கொள்ளுவதாகவும், இதற்கெல்லாம் பிரயாச்சித்தமாக பாலசூரியனை சிறையினின்றும் விடுவித்துத் தன்னு டைய பட்டத்தை அவனுக்குக் கட்டி விட்டதாகவும் தான் இனி தேசாந்திரியாகப் போவதாகவும் எழுதியிருக் கின்றான். கூடிய சீக்கிரத்தில் என்னையும் பட்டணத்திற்கு வந்து பாலசூரியனைக் கண்டு மகிழும்படி வேண்டியிருக் கின்றான்!-

ஜெ. ஐயனே! இதென்ன இது-

ஏ. முன்பே நினைத்தேன். அவன் எழுதியிருக்கின்ற வண்ணம் யரோ சேவகன் சௌமாலினியையும் என் கைக் குழந்தையையும் கொன்றிருக்கவேண்டுமேயொழிய அவன் அவ்வாறு உத்திரவு செய்திருக்கமாட்டான்.

ஜெ.ஆனால் இதெல்லாம் உண்மையென நம்புகின்றீரா என்ன ?

ஏ. இதிலென்ன பொய்யிருக்கப்போகின்றது?

ஜெ. ஆனால் இப்பொழுதென்ன செய்யவேண்டுமென்கிறீர்?

ஏ. சௌரியகுமாரன் கேட்டுக்கொள்ளுகின்றபடி சீக்கிரம் புஷ்பபுரிக்குச் செல்லுவோம்- சீ! என்னுடைய தம்பி தம்பிதான்! அவனிடம் கொஞ்சமாவது நன்மை யிரா மற்போகாதென்று எண்ணினேன்: அப்படியே யிருக் கின்றது!

ஜெ. அரசே,நான் சொல்வதைக்கேளும்; இதெல்லாம் பொய். இதுவும் நம்மைக் கெடுப்பதற்காக ஒரு சூழ்ச்சியே யொழிய வேறன்று; இதை நம்பாதீர்: சௌரிய குமாரன் என்னவோ.

ஏ. அப்பா ! இனி அவனைப்பற்றி ஒன்றும் விரோதமாகக் கூறாதே! அவன் என்னை மன்னிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளும் பொழுது அப்புறம் அவன் மீது துவேஷம் வைக்கலாமா நான் ?

ஜெ. ஐயனே வேண்டாம் இப்பொழுது சொன்னேன், இதை யொன்றும் நம்பாதீர் ! அவனை எங்கு கண்டீர் நீர்!

ஏ. உனக்கொன்றும் தெரியாதப்பா அவனைப்பற்றி !

ஜெ. இருக்கட்டும் – ஆனாற் சற்றுமுன்பாக உம்முடைய மனைவியின் பிரேதத்தினருகில் நின்று சபதம் செய்தீரே க்ஷத்திரியனாக விருந்து அது எப்படிப்போவது?

இரிச்சன் ஓடிவருகிறான்.

இ. சாமி ! சுசங்கதா தேவி திடீர் இண்ணி எங்களை யெல்லாம் மீறிகினுபோயி அந்தமலைச் செங்குத்துலேயிருந்து விழு ந்து செத்துப் பூட்டாங்க! நாங்க தடுக்கரத்துக்குள்ள விழுந்து செத்து பூட்டாங்க! நாங்க என்னா செய்யரது சாமி!

ஏ. ஆ! அப்படியா? எங்கே? எங்கே? (வெளியே ஓடுகிறான் இரிச்சனை இழுத்துக்கொண்டு.)

ஜெ. சீ! இதென்ன இது! ஒன்றின்மேல் ஒன்றாய் வந்து கொண்டிருக்கின்றது! பலாயனன் மீது சுசங்கதை காதல் கொண்டிருந்தாள் எனமுன்பே சந்தேகித்தேன். அவன் இறந்ததைக் கேட்கவே தானும் இறக்கத் துணிந்திருக்க வேண்டும். அதிருக்கட்டும் இந்தச்சங்கடத்தில் என் கதியை முற்றிலும் மறந்தேன்! இனிநான் காலதாமதம் செய்யமுடியாது. ஏமாங்கதன் மறுபடியும் திரும்புவான் போலிருக்கின்றது! இவனுடன் இனி பேசுவதிற் பய னில்லை. அவன் நம்மை சௌரியகுமாரனைக் கொல்ல விடான். பிறகு நம்முடைய பிரதிக்ஞை நாளை தவறினால் என்னவாவது! இனிநான் நேராகப் போய்ப் பார்க்க வேண்டியது தான்! ஏமாங்கதனால் இனி நமக்கு பிரயோ ஜனமில்லை. வருவதுவரட்டும், கடைசி முறை துணிய வேண்டியதுதான்! ஈசன் என்றொருவன் இருப்பானா யின் என்னை மன்னிப்பானாக! (போகிறான்)

காட்சி முடிகிறது.

நான்காவது காட்சி

இடம். புஷ்பபுரியின் எல்லை.

கொலைக்களத்துக்குப் போகும்வழி, பாலசூரியனை இரண்டு சேவகர்கள் கைப்பிடித்து அழைத்து வருகிறார்கள்.

பா. அப்பா, என்னைச் சற்று மெள்ள அழைத்துச் செல்லுங் கள், காலில் அதிகமாய்க்காயம் படுகின்றது! ஒன்றுந் தெரியவில்லை.

சு. உனக்கென்ன இருட்டா! குருடனுக்கு இருட்டும் வெளிச் சமும் எல்லாம் ஒன்றுதானே ! சீக்கிரம் சாகப்போகின்ற வனுக்கு காலில் காயம்பட்டால் கெட்டுப்போகின்றதா? வா சீக்கிரம்.

பா. ஆ! ஈசனே ! ஈசனே! அப்பொழுதே நினைத்தேன் ! இனி என்ன இருக்கின்றது? தந்தையும் போய் தாயும் போய் கண்ணும் போய் நான் இனி இவ்வுலகத்தில் இருந்தென்ன பயன் ! ஈசனே ! இனி நான் உமது திருவடிகளிற் சேர வேண்டியதே! சுவாமி! தம்முடைய திருவுள்ளம் இப்படி இருந்ததோ? என்னை அனாதையுமாக்கிக் கபோதியுமாக் கியதும் போதாதென்று இவ்வாறு இறக்கவும் திருவுளத் திலெண்ணினீரோ? தமது சித்தத்திற்கு மாறுஉளதோ? நான் என்ன சொல்லப் போகின்றேன்? இது உமக்குச் சரியானதாயின் எனக்கும் சந்தோஷமே – ஆயினும்! நான் இவ்வாறு தண்டிக்கப் படுவதற்கு என்ன குற்றஞ் செய்தேன்? தமது திருவுள்ள மறியநான் பிறந்தது முதல் ஒரு குற்றமும் செய்யவில்லை முன்சென்மத்திற் செய்த தீவினையின் பயனோ இப்பொழுது வந்து மூண் டது? ஆயினும் நாயேனுக்குத்தாம் மனமிரங்கி யிருக்க லாகாதா? என்னை ராஜகுமாரனாகப் பிறப்பித்து, நல்ல ஸ்திதியில் வைத்து, பிறகு திடீரென்று தந்தையை யிழக் கும்படிச் செய்ததுமன்றி, சிறைச்சாலையிலிட்டுப் பின் தாயையுமிழக்கச் செய்து, இரண்டு கண்களும் போக, அனாதையுமாக்கியதுமன்றி முடிவில் என்னை இப்பாதகர் கள் தூக்கிலிடவும் விதித்தீர்! என் மனஉறுதியைப் பரி சோதித்தற்பொருட்டோ? சுவாமி! இனி இன்னும் என்ன செய்யப்போகின்றீர்? ஐயனே! தமது திருவுள்ளத்தின் முன் நாயேன் எவ்வளவு ? உலகப்பற்றை ஏன் சிறிது வைத்திருக்கின்றாய், அதையும் விட்டு விடென்று என்னை இக்கோலங்காட்டினீரோ ? ஐயனே, என் தாய் என்கின்ற அந்தப்பற்றையும் விட்டேன். இனிஎன்னை நீர் ஆ கொள்ளேனென்றால் விடுவேனா? ஐயனே! நான் தளர்ந்தேன், என்னை இனித் தாங்குவது உம்முடைய கடமை. இனி எனக்கு இம்மானிடப் பிறவி வராவண்ணம் என்னைக்காப்பாற்றும்! ஈசனே! உமது திரு வடியைச் சிக்கெனப்பிடித்தேன். இனி என்னைக்கைவிட உம்மால் முடியாது. ஈசனே ! ஜகதீசா ! எல்லாமும் தருள்!—

சே. வா! வா! சீக்கிரம் நேரமாய்விட்டது. (அழைத்துப்போகின்றனர்);

(பாலசூரியன் தோத்திரப் பாடல்கள் பாடிக்கொண்டே போகிறான்.)

காட்சி முடிகிறது.

ஐந்தாவது காட்சி

இடம்.- புஷ்பபுரி அரண்மனையில் சௌரியகுமாரனுடைய அறை.

பாலசூரியனுடைய பிரேதம் ஒருபுறமாய் சிம்மாசனத்தில் உடகார்ந்திருப்பது போல் வைத்திருக்கின்றது; சௌரியகுமாரன் அதனருகில் நிற்கிறான்.

சௌரி. மற்றவைகளையெல்லாம் அணிந்து கொண்ட நீ இதையும் அணிந்துகொள்! [தன் கிரீடத்தை எடுத்து அதற் கணிகின்றான்) ஆம்! இப்பொழுது உன் தகப்பனுக்கு எழுதிய வண்ணம் உனக்கு முடிசூட்டிவிட்டேன்! இனி உன் தந்தை மனம்களிக்க உனக்கிஷ்ட மிருக்கு மளவும் இந்நாட்டை ஆண்டு கொண்டிரு இன்னும் நான் செய்யவேண்டியவேலை என்ன இருக் கின்றது? – ஒன்றுதான்![ஒருபுறமாயிருக்கும் மேஜையரு கிற்சென்று அதைத்திறந்து விஷம் வைத்திருக்கும் ஒரு குப்பியை எடுக்கிறான்)- ஆ! கடை சிமுறைப் பிதாவுக்காக இதை எடுத்த பொழுது, பிறகு எனக்கே இதை உபயோகப் படுத்த வேண்டிவருமென்று நான்கனவிலும் நினைக்க வில்லை! சீ! நான் இந்தக்கதிக்கு என்னமாகவந்தேன்? எனக்கென்ன தைரிய மில்லாமற்போயிற்றா?ஊக்கத்தில் குன்றினேனா? மனஉறுதி குறைந்ததா? ஒன்றுமில்லையே சீ! நான் எவ்வளவு மறக்க முயன்றாலும் இந்த பாலசூரியன் தன்வினைத் தன்னைச்சுடுமென்று கூறியது ஞாபகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றது. அதெல் லாமொன்று மில்லை. அண்ணனாயிற்றேயென்று முதலில் சற்றுயோசித்தேன், அதில் கெட்டது எல்லாம்!- இனி யோசித்துப் பயனென்ன ! ஜெயபாலன் நமக்குக் கொடுத்திருக்கிற மருந்து தான் இருக்கின்றதே இவ்வள வையும் ஒரேவிசையிற் குடித்து விடுவேனாயின் நான் க்ஷணநேரத்தில் இறப்பேன் ! ஆஹா! நான் என் கையாலேயே இறக்கவேண்டும் !-

ஜெயபாலன் திடிரென்று அறைக்குட் பிரவேசித்து, செளரிய குமாரன் கையிற் பிடித்திருக்கும் விஷக்குப்பியை உடைத்து விட்டு அவனிரு கரத்தையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளுகின்றான்;

ஜெ. இல்லை! இல்லை! என்கையால் இறக்கவேண்டும்! (கீழே வீழ்த்தி மார்பின்மீது காலைவைத்துக் கொண்டு ஆ! சௌரிய குமாரா! நான் இரண்டு வருடங்களுக்குமுன் செய்த சபதத்தை இப்பொழுது தான் நிறைவேற்றுகின்றேன் (கட்டாரியால் குத்துகின்றான்) அடா ! நேசத்துரோகி! நான் வேடிக்கைக்காகக் கொடுத்த விஷத்தைக் கொண்டு எத் தனைபெயரைக் கொன்றாய் நீ! கைம்மாறு பெற்றுக்கொள் இதோ! ஏமாங்கதன் கைக்குழந்தையைக் கொன்றதற் காக! இதோ! உன்னுடைய பிதாவைக் கொன்றதற்காக! இதோ! பாலாயனனைக் கொன்றதற்காக! இதோ! பால சூரியனைக்கொன்றதற்காக! இதோ ஏமாங்கதனைக் கொல்ல முயன்றதற்காக! கடைசியாக இதோ! நேச னென்றும் பாராமல் என்னுயிருக்கே உலைவைத்ததற் காக! (சௌரியகுமாரன் இறக்கின்றான்.)

ஏமாங்கதன் வேகமாய் வருகிறான்.

ஏ. ஆ! குலசேகரா! இதென்ன! சௌரியகுமாரனைக் கொன்று விட்டாயே!

ஜெ. குலசேகரன் கொல்லவில்லை! ஜெயபாலன் கொன்றான்!

ஏ. என்ன! ஜெயபாலனா?

ஜெ. அரசே! நான் உமக்கு அன்றைத்தினம் நீர் என்னை யார் என்று எல்லாம் கேட்டபொழுது ஒரு காலம் வரும் பிறகு கூறுகின்றேனென்று சொன்னேனல்லவா ? அக்காலம் வந்து விட்டது!- நான் தான் ஜெயபாலன்!

ஏ. நீயா ஜெயபாலன்?

ஜெ.ஆம், இந்த சௌரியகுமாரன் இவ்வளவு துர்க்கிர்த்தியங் களை யெல்லாம் செய்ய உதவியாயிருந்த விஷத்தை அவனுக்குக் கொடுத்த கொடும்பாவியாகிய ஜெயபாலன் நானே !

ஏ. அதிருக்கட்டும், ஆனால் சௌரியகுமாரனை நீ ஏன் கொன்றாய்?

ஜெ. சொல்லுகின்றேன் கேளும் ! இவன் இப்படிப்பட்டவ னென்றறியாது சிநேகத்தின் மீது நம்பி வேடிக்கையாக வ்விஷத்தை இவனுக்குக் கொடுத்து இதன் சூட்சு மத்தை யெல்லாம் வெளியிட்டேன். பிறகு மறுநாள் நண்பனென்றும் பாராமல் இவன் நான் அறியாதபடி பட்சணத்தில் இவ்விஷத்தைக் கலந்து எனக்கே கொடுத்து பரீட்சைபார்த்தான். உளவறியாது அதை உட்கொண்ட நான் உடனே மூர்ச்சையாகவே என் உடலை இறந்தேனெனக்கருதியோ என்னவோ அரண் மனையின் மேற்கு மூலையிலிருக்கும் கெவியில் போட்டு விட்டான். அங்கே மூர்ச்சை தெளிந்தெழுந்த என்மன நிலைமை என்னமா யிருக்கவேண்டுமென்று நீரே யோசித்துப்பாரும்! வெளியே செல்ல வழியறியாது திகைத்துக் கொண்டிருந்த நான் அக்கெவியின் கீழ் ஒரு சுரங்கமிருப் பது போலவும் அதன்வழியாக யாரோ ஒருவன் நடந்து வருவதுபோலவும் சப்தம் என் காதிற்படவே, நான் உற்றுக்கேட்டு, அச்சப்தம் செல்லுகிறவழியே நோக்கிச் சுவரிலுள்ள ஒரு மெல்லிய துவாரத்தின் வழியாக வெளியே பார்க்க, ஒன்றை ஒருவன் கைக்குழந்தை கையில் எடுத்துக்கொண்டு பூமியினின்றும் வெளியில் வரக்கண்டேன். அக்குழந்தையை அவன் அங்கு புதைத்துவிட்டு வந்தவழிச்சென்றான். நான் உடனே அக்கெவியின் கீழ் சுரங்க மொன்றிருக்க வேண்டுமென்று ஊகித்து, அதற்கு ஒரு வழி செய்து கொண்டு அதன் மூலமாகத் தப்பி வெளியே வந்தேன். பிறகு நீர் எனக்குச் சொல்லிய சொற்களால் அம்மனிதன் சௌரியகுமாரன் என்றும் அக்குழந்தை உம்முடையதென்றும் கண் டறிந்தேன்.அரசே, எனக்கிவ்வளவு துரோகம் செய்த வனுயிரை என்கையால் நான் வாங்குகிறேனென்று அன்று கெவியிலிருந்து வெளிப்பட்டவுடன் சபதம் செய்தேன்: அச்சபதத்தை இன்றே நிறைவேற்றினேன் !

ஏ. குலசேகரா! – ஜெய்பாலா! அதெல்லா மிருக்கட்டும் நீ நீ சபதம் செய்தாலெனக்கென்ன? என்னுடைய தம்பி எனக்கு எவ்வளவோ துரோகம் சைய்தபோதிலும் என்னை மன்னிப்பு கேட்டபின், என் தம்பி என் தம்பி தான்! அவனை நீ எப்படி கொல்லலாம்? உன் மீது நான் பழி வாங்குகின்றேன்.

(உடைவாளை எடுக்கிறான்)

ஜெ. அரசே! சற்றுப்பொறும். என்னைக்கொல்வதானா ால் கொல்லும்.நீர் கொன்றாலும் ஒன்று தான் கொல்லா விட்டாலும் ஒன்றுதான்; நான் எப்படியும் சீக்கிரம் இறக்கப்,போகிறேன்! அன்று சௌரிய குமாரன் எனக்குக் கொடுத்த விஷம் என்னைக் கொல்லும் காலம் வந்து விட்டது. இதுவரையில் எனது மகிமை யால் அதன் சேஷ்டைகளையெல்லாம் நான் அடக்கி வைத்திருந்தேன். இனி நான் இறக்கவேண்டியதுதான்; அதற்கு மாற்றில்லை! ஆயினும் நீர் இன்னும் உம்முடைய தம்பியை நம்புகின்றீரே! உமது பிள்ளைக்குப் பட்டங் கட்டியிருப்பதாக வல்லவோ எழுதியிருந்தான் ; அதோ போய்பாரும், பாலசூரியனைக்கொன்று பின்பு முடிதரித்து சிங்காதனத்தின்மீது வளர்த்தியிருக்கிறான்!

ஏ. ஆ! ஆ! அப்படியா (பாலசூரியன் பிரேதத்தைப் பார்க்கிறான்) கண்ணே ! பாலசூரியா! பாலசூரியா! இறந்தான் பாலசூரியன்! (அதன்மீது விழுகிறான்)

ஜெ. ஆ! இவ்வளவுக்கும் நானல்லவா காரணம்! நான் சௌ ரியகுமாரனது குணத்தை யறியாது அவனுக்கு அவ் விஷத்தைக் கொடுத்ததினாலல்லவோ இவ்வளவும் விளைந்தது! ஈசனே! ஈசனே!

ஏ. கண்ணே பாலசூரியா! நீயும் இறந்தாயோ! அப்பா! இனி நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்! கண்மணியே! உன் அன்னை இறந்தபொழுதே என் உயிர்போயிருக்கும், ஆயினும் நீ இருக்கிறாயே என்று நான் உயிர்தரித்து உன் பொருட்டே இவ்வளவு கஷ்டப்பட்டு நான் இங்கு வந் தேன். கண்ணே ! பாலசூரியா ! நீ இந்நாட்டுக் கரசனா யரசாள்வதைக் காணவந்த நான் உன்னைப் பிணமாய்க் கண்டபின் எவ்வாறுயிர் வாழ்வேன்! பாலசூரியா! இதோ நீ சென்ற இடத்திற்கு நானும் வருகிறேன்!

(தன்னைத்தானே குத்திக்கொண்டு மரிக்கிறான்.)

கள்வரெல்லோரும் ஒடிவந்து திகைத்து நிற்கின்றனர்.

ஜெ. இறந்ததே நலம்! – அப்பா! நான் வந்தவேலை முடிந்து விட்டது ! என் உயிர் – சதானந்த ராஜனி டம் இவ்வரசை ஒப்புவித்து நீங்களெல்லாரும் கள்வர் தொழிலைவிட்டு இந்நாட்டில் பிரஜைகளாய் சுகமாய் வாழ்ந்திருங்கள்! நான் போய் வருகிறேன் (இறக்கிறான்.)

காட்சி முடிகிறது.

நாடகம் முற்றியது.

– கள்வர் தலைவன், நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, ஐந்தாம் பதிப்பு: 1955, அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *