இவன் என் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 45 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னம்மா சாந்தி தயாராகிவிட்டாயா? விமானம் வர இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு” என்று குரல் கொடுத்தேன்.

“நான் தயாராகிவிட்டேன் மாமா” என்றாள் சாந்தி.

“கோபால் அந்த ரோஜா பூ மாலைகள் இரண்டையும் எடுத்து காரில் வை” என்று கூறிக் கொண்டே என் அறையை விட்டு வெளியில் வந்தேன். அதே நேரத்தில் சாந்தியும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையை உடுத்திக் கொண்டு அழகு பொம்மைபோல் வெளியில் வந்தாள்.

“என்ன புறப்படலாமா” என்றேன்.

“ஓ! நான் தயார் மாமா” என்றாள்.

இருவரும் காரில் ஏறி அமர்ந்தோம். கார் ஓட என் மனமும் ஓடியது. நான் என் இளங்கோவையும் இளமாறனையும் பார்த்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் எவ்வாறு இருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே சாந்தியும் அவர்கள் இருவரையுமோ அல்லது ஒருவரைப் பற்றியோ எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். என்பதை அவளின் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்.

“இறங்கு சாந்தி! விமான நிலையத்தை அடைந்துவிட்டோம்” என்றேன்.

”அப்படியா! நான் ஏதோ சிந்தனையில் இருந்துவிட்டேன்” என்றாள்.

அதுதான் தெரிகிறதே என்றேன், புன்முறுவலுடன். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் தரையிறங்கிவிட்டது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. நானும் சாந்தியும் கோபாலும் பயணிகள் வெளிவரும் பகுதியில் போய் நின்றோம்.

அதோ! அத்தான் என்றாள் சாந்தி எங்கே என்று கேட்டுக் கொண்டே நான் அவள் காட்டிய திசையைப் பார்த்தேன். ஆமாம் இளங்கோ தான். இளமாறன்…என்றேன்.

அவரும் பின்னால் வருகிறார் மாமா என்றாள் சாந்தி.

என்னைப் பார்த்துவிட்ட இளமாறன் கைகளை அசைத்தான். நானும் சாந்தியும் கைகளை அசைக்கும் பொழுது இளங்கோ எங்களைப் பார்த்துவிட்டு அவனும் கையை அசைத்தான்.

அப்பா என்று இளங்கோ வந்து அணைத்துக் கொண்டான். ஐயா! என்றான் இளமாறன்; கட்டிப் பிடித்தான், எப்படி இருக்கிறீங்க? என்று கேட்டார்கள்.

ஆனந்தத்தால் கண்ணில் நீர் வர நல்ல சுகமாக இருக்கேன். உங்க பயணம் நல்லமுறையில் இருந்ததா? என்றேன்.

சாந்தியைக் காட்டி, “இதோ பார் இது யார் என்று தெரிகிறதா” என்றேன்.

சாந்தி வெட்கத்தால் தலையைக் குனிந்து கொண்டாள் நம்ம சாந்தி தானே என்றான் இளங்கோ.

ஹலோ சாந்தி என்றான் இளமாறன். கோபாலிடம் இருந்த மாலையில் ஒன்றை வாங்கி நான் இளங்கோவின் கழுத்தில் போட்டேன்.

மற்றொன்றை சாந்தி வாங்கி இளமாறன் கழுத்தில் போடப் போனாள். ஆனால் இளமாறன் புன்னகையுடன் கையில் வாங்கிக் கொண்டான்.

வீடு வந்து சேர்ந்தோம். நீங்கள் இருவரும் முதலில் போய் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வாங்க என்றேன்.

சிறிது நேரத்தில் அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள். அதற்குள் சாந்தி சாப்பாட்டைத் தயாராக எடுத்து வைத்துவட்டாள். முதலில் சாப்பாடு, பிறகு மற்றவை என்று கூறிக்கொண்டே சாப்பாட்டு அறைக்குச் சென்றேன்.

உங்கள் இருவருக்காகச் சாந்தி தானே சமைத்துள்ளது என்றேன்.

சிரித்துக் கொண்டே அப்படின்னா! “இதை சாப்பிடலாமா அப்பா?” என்றான் இளங்கோ!

“சாந்தி இப்பொழுது நன்றாக சமைக்கும் சமையற்காரி ஆகிவிட்டாள்” என்றேன்.

“இது எப்பொழுதில் இருந்து ? நம் வீட்டு சமையற்காரியின் வேலை போய்விட்டதா” என்றான் இளங்கோ.

“அப்படி எல்லாம் இல்லை. சாந்தி நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்” என்றேன்.

“உணவு மிகவும் சுவையாக இருக்கிறது” என்றான் இளமாறன். “நம்முடைய உணவுகளைச் சாப்பிட்டு எவ்வளவு நாட்களாகிவிட்டன” என்றும் கூறினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தி.

ஏப்பத்துடன் எல்லோரும் கூடத்தில் வந்து அமர்ந்தோம். இளங்கோவும் இளமாறனும் இங்கிலாந்தைப் பற்றியும் அவர்கள் இருந்த இடத்தைப் பற்றியும் கூறினார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த புகைப்படத் தொகுப்புகளை எல்லாம் பார்த்துப் பரவசம் அடைந்தாள் சாந்தி.

மற்றவற்றைப் பிறகு பேசிக் கொள்வோம் உண்ட பிறகு தொண்டனுக்கும் ஓய்வு வேண்டும். அதனால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துகொள்வோம் என்றேன்.

அப்போ, நான் புறப்படுகிறேன் மாமா என்றாள் சாந்தி.

“ஏன் நீயும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொள்ளேன்” என்றான் இளங்கோ. “இல்லை அத்தான் நான் வீட்டுக்கு போயிட்டு அப்பா அம்மாவுடன் மீண்டும் வர்றேன்” என்றாள் சாந்தி.

“சரி! அப்படியே செய்!”

“நான் போய் வருகிறேன் மாமா. அத்தான்” என்றவள், தன் கண்களாலேயே இளமாறனிடம் விடைபெற்றாள். இளமாறன் புன்முறுவலுடன் தலையை அசைத்தான்.

வீட்டிற்குள் போன என்னை வாங்க அண்ணா! வாங்க அத்தான்! என்று என் தங்கை மரகதமும் மைத்துனர்

மணிவண்ணனும் வரவேற்றார்கள்.

வருகிறேன்! வருகிறேன்! என்று கூறிக்கொண்டே உட்கார்ந்தேன்.

என்ன அண்ணா இவ்வளவு தூரம்? கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே என்றாள் மரகதம்.

இளங்கோவும் இளமாறனும் டாக்டர் பட்டம் வாங்கி கொண்டு வந்திட்டாங்க.

அவர்கள் தங்களின் தொழிலைத் தொடங்கும் முன் திருமணத்தை நடத்திவிட்டலாம் என்று எண்ணுறேன். அது சம்பந்தமாகத்தான் உங்களுடன் கலந்து கொள்ள வந்தேன்.

நீங்கள் சொல்வதும் நல்ல யோசனைதான். இருந்தாலும் முதலில் தொழிலைத் தொடங்கட்டும். பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றான் மணிவண்ணன்.

தொழில் செய்துதான் வாழ வேண்டும் என்ற நிலை நமக்கில்லை. இருந்தாலும் புனிதமான அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று தான் படிக்க வைத்தேன். எனக்கோ வயதாகி கொண்டே போகுது. அதனால் காலத்தோடு திருமணத்தை முடித்துவிட்டால் பேரப்பிள்ளைகளுடன் சொச்ச காலத்தைக் கழித்து விடலாம் என்று எண்ணுறேன் என்றேன்.

இனிமேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை என்றார் மணிவண்ணன்.

ஒன்றுமில்லையா! நீங்க தானே ஒரு முடிவு சொல்ல வேணும் என்றேன்.

நானா! நான் என்ன சொல்ல வேணும் மணிவண்ணன்.

பெண்ணைப் பெற்றவர் நீங்கள். பெண் தருகிறீர்களா? இல்லையா? என்பதைக் கூற வேண்டியவர் நீங்க தானே.

பெண்ணை உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு பெண் கேட்டு வந்திருக்கிறீர்களே! அண்ணா என்றாள் மரகதம். பெண் என் வீட்டில் இருப்பதால் அப்படியே தங்க வைத்துக் கொள்ள முடியுமா? எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்குது அல்லவா? என்றேன்.

நீங்கள் முறையோடு நடந்து கொள்ள வேண்டும். எனவே கொஞ்ச நேரம் இருங்க. இதோ! நாங்கள் வருகிறோம் என்று கூறியவாறு மணிவண்ணனும் மரகதமும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்து, எங்களுக்கு விருப்பம்தான் என்றார்கள்.

சாந்தியிடம் கேட்டீர்களா? என்றேன். அவளிடம் என்ன கேட்க வேண்டியது இருக்குது. அவள் இதை வேண்டாம் என்றா சொல்வாள் என்றாள் மரகதம். இதோ சாந்தியின் சாதகம் எடுத்துக் கொண்டு போய்ச் சாதகப் பொருத்தம் பாருங்க என்று சாதகக் குறிப்பை நீட்டினார் மணிவண்ணன்.

ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டே அதை வாங்கிக் கொண்டேன்.

நான் புறப்படுகிறேன்! எனக்கு விடை கொடுங்க என்றவாறே புறப்பட்டேன்.

தங்கையும் மைத்துனரும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

சாதகப் பொருத்தம் பார்த்தபின் பத்திரிகையும் அடித்துவிட்டேன். அடித்த பத்திரிகையை எடுத்துக் கொண்டு தங்கையிடம் சென்றேன். அதைப் பார்த்த மரகதம் இது என்ன அண்ணா அநியாயம். உங்களைப் பெரிய மனிதன் என்று எண்ணியிருந்தேன்.

இப்படி நடந்து கொண்டு இருக்கிறீர்களே! இது உங்களுக்குக் கேவலமாக இல்லையா? என்று கூறிச் சத்தமிட்டாள்.

“இப்போ என்ன நடந்துவிட்டது ? ஏன் இப்படி ஆரவாரம் செய்கிறாய்?” என்று நிதானமாக கேட்டேன். என்ன நடந்து விட்டதா? என் மகளுக்கும் அந்த வேலைக்காரி மகனுக்குமா திருமணம் ? அவன் அப்பன் யார். அவன் அம்மா எப்படி பட்டவள்? அவன் எப்படி பிறந்தான்? அவன் குலம் என்ன கோத்திரம் என்ன? எங்கோயோ கிடந்தவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்க நீங்கள் யார்? என்று மீண்டும் சத்தமிட்டாள் மரகதம். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் உங்களைப் பற்றியும் அந்த வேலைக்காரியைப் பற்றியும் பலவாறு கதைகள் சொன்னார்கள். அதற்கு எல்லாம் என் அண்ணன் அப்படிப்பட்டவர் இல்லை. பிள்ளையைப் பெற்றவுடனேயே என் அண்ணி செத்துட்டாங்க. அப்போது என் அண்ணனை மறுமணம் செய்து கொள்ளுமாறு நானும் என் வீட்டுக்காரரும் எவ்வளவோ சொன்னோம். அதற்கு அவர் சம்மதிக்கவே இல்லை. எல்லாவற்றையும் நான் கொண்டு வந்திருக்கும் வேலைக்காரி பார்த்து கொள்வாள் என்று கூறியதாக அவர்களிடம் எல்லாம் கூறினேன். அவ்வளவு நம்பிக்கை எனக்கு உங்கள் மீது.

“அந்த வேலைக்காரியின் மகன் மீது இவர் என்ன இவ்வளவு அக்கறை காட்டுகிறார்? அவனை ஏன் இவ்வளவு தூரம் படிக்க வைக்க வேண்டும்” என்று என் கணவர் கூட கேட்டார்.

என் அண்ணனிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அவர் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு பார்க்கமாட்டார். அப்படி பார்த்திருந்தால் என்னை எதுவுமே இல்லாத உங்களுக்கு நான் விரும்பிய ஒரே காரணத்திற்காகக் கொடுத்திருக்க மாட்டார்.

உண்மையாக உழைக்கின்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் உடையவர். அதோடு நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல குணம் உடையவர். அதனால் தான் நன்றாகப் படித்த அந்த வேலைக்காரியின் மகனைப் படிக்க வைக்கிறார் என்று சமாதானம் கூறினேன். தீட்டியவளையே ஆழம் பார்க்கும் கத்தி போல் என்னையே ஆழம் பார்க்க வந்திட்டிங்க.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? அந்தப் பையன் என்ன தான் படித்து இருந்தாலும் நீங்கள் எப்படி அவனுக்கு என் பெண்ணைக் கட்ட வந்தீர்கள்? இதை என் கணவர் பார்த்தால் என்ன நினைப்பார்? உன் அண்ணன் நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார் பார்த்தாயா? என்று அல்லவா கேட்பார். என்றெல்லாம் தன் வாய்க்கு வந்தபடி கூறிக் கொண்டே போனாள்.

நீ இப்போ நிறுத்துகிறாயா? அல்லது நான் போகட்டுமா! என்றேன். மரகதம் நிறுத்தினாள். நான் என்ன பெரிய தவறு செய்து விட்டதாக என்னை இவ்வாறு எல்லாம் பேசுறாய்? என்றேன்.

சாதகத்தைக் கொடுத்தாய். இளங்கோ, இளமாறன் இருவர் சாதகத்தையும் எடுத்துக் கொண்டு போய் பார்த்தேன். சாந்திக்கும் இளங்கோவுக்கும் மணப்பொருத்தமில்லை. சாந்திக்கம்

இளமாறனுக்கும் பொருத்தம் இருந்தது. அப்பையனும் படித்தவன் தானே! அவனையும் என் பிள்ளை மாதிரி தானே வளர்த்து வருகிறேன். அதனால் இதற்கு எதுவும் மறுப்பு கூறமாட்டாய் என்று பத்திரிகையை அடித்து வந்துவிட்டேன் என்றேன்.

உங்கள் மகனுக்குப் பொருத்தமில்லை என்றால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியதுதானே! என்றாள் மரகதம்.

என்னைப் பொருத்தம் பார்க்கச் சொன்ன நீயும் உன் கணவனும் பொருத்தம் பார்த்தீங்களா? என்றேன். மரகதம் பேசாமல் இருந்தாள்.

நீ முதலில் சொன்னது போல், நான் உன் மகளுக்கும் என் மகனுக்கும் மணப்பொருத்தமில்லை. அதனால் நீ வேறு இடம் பார்த்துக் கொள் என்று சொல்ல வந்தேன். ஆனால் நீ இல்லை உன் மகள் சாந்தி இருந்தாள். என்னிடம் விவரம் கேட்டாள். நான் செய்தியைச் சொன்னேன். அதற்கு அவள் மாமா என்னை மன்னிச்சிடுங்க. என் மனதில் உள்ளதை உங்களிடம் சொல்லப் போறேன். சின்னப் பிள்ளையிலிருந்தே என்னை உங்கள் பிள்ளையாகவே வளர்த்தீர்கள்.

அதனால் ஒரு தகப்பனிடம் சொல்வது போல் உங்களிடம் கூறுகிறேன். நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது மட்டுமல்ல பருவமங்கையாக ஆன பிறகும் என் மனதில் என்றென்றும் இடம் பெற்றிருப்பவர் அத்தான் இளங்கோ இல்லை.

அந்த வேலைக்கார ஆயாள் மகன்தான். அவரும் என்னை விரும்புகிறார். என்றுதான் நினைக்கிறேன். அவர் நேரில் சொல்ல தைரியம் இல்லாமல் இருக்கிறார். அதோடு மட்டுமில்லை. மாமா திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்லுவார்கள். அதனால் தான் போலும் எனக்கும் அத்தானுக்கும் பொருத்தமில்லை. எனக்கும் அவருக்குமே பொருத்தமிருக்கிறது. ஆகையால் மனதால் ஒன்றிவிட்ட எங்களைப் பிரித்துவிட வேண்டாம். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் மாமா என்று அழுதாள். அதனால்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன் என்றேன்.

அவள் ஊர் உலகம் தெரியாதவள். அவள் சொல்வதை எல்லாம் கேட்டு நாம் நடக்க முடியுமா? அவளுக்கு நாம் தான் நல்ல புத்திமதிகளைச் சொல்ல வேண்டும் என்றாள் மரகதம்.

நல்லது கெட்டது தெரியாத அவளுக்கு ஏன் திருமணம் செய்ய நீ விரும்பினாய்? என்று கடுமையாகவே கேட்டேன்.. அவளுக்கு ஊர் தெரியுதோ உலகம் தெரியுதோ? அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அதற்கு நாம் மறுப்பு கூறி, அதற்கு அவர்கள் வேறுவிதமாக நடந்து கொண்டால் என்ன செய்வது என்றேன்.

நீங்க என்ன சொன்னாலும் நான் இதற்கு ஒருகாலும் சம்மதிக்கமாட்டேன் என்றாள் மரகதம்.

அந்தப் பையன் குலம் என்ன? கோத்திரம் என்ன? அவன் அப்பா யார்? என்ற விவரம் உனக்குத் தெரிந்துவிட்டால் சம்மதிப்பாயா என்றேன்.

அதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றாள் மரகதம்.

அந்த உண்மை எல்லாவற்றையும் உனக்காக மட்டும் அல்ல இந்த ஊருக்காகவும் ஏன் எனக்காகவும் சொல்லித்தான் ஆக வேண்டும். என் மனதில் இருந்து கொண்டு என்னை ஒவ்வொரு நாளும் கொன்று வரும் அந்த இரகசியத்தைச் சொல்லித்தான் ஆக வேண்டும். நீ உடனே இளங்கோவையும் இளமாறனையும் உன் மகள், கணவர் ஆகியோரையும் இங்கே கூப்பிடு என்றேன். சிறிது நேரத்தில் எல்லோரும் மரகதத்தின் வீட்டிற்கு வந்தார்கள்.

நான் உங்கள் எல்லோரிடமும் என்னை இதுநாள் வரையில் வாட்டி வதைத்த ஓர் உண்மையை இப்பொழுது சொல்லப் போறேன்.

இதோ! இருக்கிறானே இளமாறன். இவன் யார் இவன் அப்பன் யார். இவன் குலம் கோத்திரமென்ன? என்ற விவரத்தை நான் கூறப் போகிறேன்.

நான் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் வகுப்பில் படித்த பனிமலர் என்ற பெண்ணை நான் விரும்பினேன். இன்று பலர் வாலிபத்தில் செய்யும் குறும்பாக நான் அதை நினைக்கவில்லை. உண்மையாகவே விரும்பினேன். அப்பெண்ணும் என்னை மனமார விரும்பினாள். அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணுமல்ல. பரம ஏழையுமல்ல. அவளைக் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வதாக உறுதி சொன்னேன். எங்களின் படிப்பு முடிந்தது. என்னை விட அவள் சிறப்பான முறையில் தேர்ச்சி அடைந்தாள்.

ஒரு நாள் என் அப்பா திடீரென்று மயக்கமுற்று விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வைத்தியர்களின் அரிய முயற்சியால் அவர் உயிர் பெற்று எழுந்தார். ஆனால் அவரிடம் எந்தவிதமான அதிர்ச்சி தரும் செய்தியையும் சொல்லக் கூடாது என்று மருத்துவர் கூறிவிட்டார்.

இந்த நிலையில் அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார். என்னை அழைத்து, “மகனே நான் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கமாட்டேன். நான் கண்ணை மூடுவதற்குள் என் தங்கைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட வேணும். அப்பொழுதுதான் என் மனம் சாந்தி அடையும். என் தங்கையின் ஆசையும் நிறைவேறும்” என்றார்.

நான் பனிமலருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றி சொல்ல நினைத்தேன். அடுத்த கணம் தந்தையைக் கொன்ற தனயன் என்ற கெட்ட பெயர் எனக்கு வந்துவிடுமே என்று எண்ணி பேசாமல் இருந்துவிட்டேன். அன்றே நான் பனிமலரைப் போய் பார்த்து என் நிலையை எடுத்து கூறினேன். அவள் உடனே எல்லோரையும் போல் என்னை மோசம் செய்து விட்டாயே பாவி! என்று ஏசவில்லை. நீங்கள் உங்க அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதுதான் நல்லது என்றாள்.

அப்படி என்றால் உன் கதி என்றேன்.

என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் தனித்தே வாழ்ந்திட முடியும். ஆனால் என் மனதில் நிறைந்திருக்கும் உங்களை என்னுள்ளத்தில் இருந்து அகற்ற முடியாது. உங்களின் நினைவிலேயே என் காலத்தைக் கழித்துவிடுவேன் என்றாள்.

ஆனால் நானோ அவளைத் தனியாக விட்டுவிட விரும்பவில்லை. நான் உன்னைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறேன். காலம் வரும்பொழுது என் மனைவியிடம் சொல்லி உன்னை அழைத்து கொள்கிறேன் என்றேன். அதற்கு அவள் இலேசில் சம்மதிக்கவில்லை. நான் பல நாட்கள் அவளுக்கு விளக்கங்கள் பலவாறு சொல்லி தான் கடைசியில் ஒத்துக் கொண்டாள். பிறகு நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு அப்பாவின் விருப்பப்படி என் அத்தையின் மகள் அமுதாவைத் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நான் மனதில் அமைதி இல்லாமல் இருந்து வந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நான் பனிமலரைச் சென்று பார்த்து வந்தேன்.

அமுதா இளங்கோவைப் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பனிமலர் இளமாறனைப் பெற்றெடுத்தாள். எனக்கு இரண்டு மகன்கள் பிறந்ததை எண்ணி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஒருவனுக்கு இரு மனைவி இருக்கக் கூடாது என்று எண்ணிய கடவுள் என்னிடமிருந்து அமுதாவை எடுத்துக் கொண்டுவிட்டான்.

பிறந்த ஒரு மாத தாய் இல்லாக் குழந்தையை என்னால் எப்படி? வளர்க்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொண்டு பனிமலரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவளை மனைவியாக அழைத்து வராமல் உங்கள் எல்லோருக்கும் வேலைக்காரியாக அழைத்து வந்தேன். அந்த நேரத்தில் அவளைப் பற்றிய உண்மையை உங்கள் எல்லோரிடமும் கூற வந்தேன். ஆனால் அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. இளங்கோவை வளர்ப்பதில் தன்னையும் அறியாமல் ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால் மற்றவர்கள் தன் மீது குறை கூறுவார்கள் என்று சொல்லி உண்மையைக் கூற வேண்டாம் என்று என்னைத் தடுத்துவிட்டாள். நன்றாகப் படித்த அவள் என் குழந்தைகளுக்கு வேலைக்காரியாகவே இறுதி வரையில் இருந்துவிட்டு போய்விட்டாள்.

இப்பொழுது உங்கள் எல்லோருக்கும் இளமாறன் யார் என்று புரிந்திருக்கும். ஆம்! இளமாறன் என் மகன். இந்தச் சுந்தரத்தின் மகன். இவன் என் மகன் என்றேன். மகனே என ஆரத்தழுவி முத்தமிட்டேன். அப்பா என்று அணைத்து கொண்டான் இளமாறன்.

அண்ணா! என்று கட்டிப் பிடித்துக் கொண்டான் இளங்கோ.

அத்தான் என்று அன்போடு அழைத்தாள் சாந்தி.

இனி இந்தத் திருமணத்திற்குத் தடை இல்லையே? என்றேன். தங்கை மரகதம் மௌனமாக நின்றாள்.

– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம்2 இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *