கருப்புச் சிலைக் காமனைக் காய்ந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 22 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனோவதி நகரத்திற்கு வந்தார் பிரமதேவர். பதுமபீடத்தில் அமர்ந்தார். தனது தம்பி மன்மதனை நினைந்தார். மன்மதன் ஓடோடியும் வந்தார். மன்மதன் என்றால் மனத்தினின்று தோன்றியவன் என்பது பொருள். 

தம்பி! தேவர்கள் துயர் போக்க நீ விரைந்து சென்று சிவபெருமானுடைய மோனத் தவத்தை நீங்கச் செய். அண்ணா! உனது தம்பி அழிந்தே போகட்டும் என்று நினைக்கிறாயா? உலகில் எத்தனையோ முனிவர்களுடைய தவத்தையே நிலைகுலையச் செய்தவன். ஆனால் சிவபெருமானிடம் அது நடக்குமா? முப்புரங்களைத் தன்குறிப்பால் அழித்தவர். கண்ணைத் திறந்தால் நான் எதிர் நிற்க முடியுமா? 

தம்பி! நீ சொல்வதெல்லாம் சரிதான். சிவபெருமானின் மோனத் தவத்தைக் கலைப்பதால் தேவர்கள் எல்லோருடைய துன்பமும் நீங்குமானால் உன்னை அழித்தாயினும் நீ அதையும் செய்து தான் ஆக வேண்டும். 

அண்ணலே! எவ்வளவு கொடியோரானாலும் நம்மிடம் வந்துவிட்டால் உய்யும் வழியைச் சொல்லுவது பெரியோர்க்கழகு. ஆனால் அறிவிற் சிறந்த தங்களை நாடிவந்த என்னிடம் தங்களுக்குச் சிறிதும் கருணை இல்லையா? பங்காளியாகிய என்னைத் திரும்பிவராதபடி அனுப்பிவிட்டு நீங்களே தேவ லோகத்தைச் சமமாக ஆளலாம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறீர்களா? என்ன! நான் உலகத்தையெல்லாம் மயக்குவேன். என்னைப் பெற்ற தந்தை நாராயணரையும் பிருந்தையிடம் மையல் கொள்ள மயக்கியிருக்கிறேன். திலோத்தமையைக் கண்டு விரும்பும்படி உங்களையே மயக்கியிருக்கிறேன். இந்திரனை மயக்கி அகலிகை மீது ஆசை கொள்ளச்செய்தேன். அருணன் பெண்வடிவம் எடுத்தபோது சூரியனை அந்தப் பெண்மீது ஆசை கொள்ளச்செய்தேன். சந்திரனை தாரையின் பால் காதல் கொள்ளச் செய்து புதன் என்ற புதல்வன் தோன்றச் செய்தேன். பல முனிவர் களின் தவவலிமையை இமைப்பொழுதில் மயக்கி என்வசப் படுத்தினேன். 

“என் கணைக்குத் தப்பியவர்கள் மூவுலகிலும் யாரும் இல்லைத்தான். ஆனாலும் துறவிகளின் தலைவனான சிவபெருமானை எனது கணையால் மயக்க முடியாது. ஏன் முடியாது தெரியுமா? சிவபெருமானின் கையில் நெருப்பு. சிரித்துப் புரமெரித்த அவரது வாயில் நெருப்பு. கண்ணிலும் அக்கினி. அவரது திருமேனி அக்கினி வடிவம். தழலே உருவான சங்கரனை எதிர்த்து உயிருடன் திரும்ப முடியாது. அண்ணா, இந்தக் கரும்பு வில் சிவன் தந்தது. புஷ்பபாணம் அவன் தந்தது. தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதா? ஆகவே, இந்தக் காரியத்தில் மட்டும் ஏவாதீர்கள்” என்று பலவாறாகக் கூறினான் மன்மதன். 

மன்மதனின் நிலை கண்ட பிரமன் சிறிது வருந்தினான். தம்பீ! நீ சொன்னவையெல்லாம் உண்மை தான். சிவபெருமானை வெல்ல எவராலும் முடியாது. எனினும் அவரது நல்லருளால் என் காரியம் இனிது முடியும். நீ இப்போது எம்பெருமானை மயக்கச் செய்வதும் அவன் செயலே. 

தருக்குற்றுத் தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளுகின்ற தேவருக்கு முன்னே சிவபெருமான் ஒரு யட்ச வடிவங் கொண்டு நின்று, ஒரு துரும்பை வைத்தருளினார். அதனை, வாயு வருணன், இந்திரன் முதலிய அனைவராலும் அசைக்க முடியவில்லை. அதனால் அவன் அருளின்றி துரும்பும் அசையாது. எல்லாம் அவன் செயலே என்பதைக் காட்டியருளினார். ஆதலால் நம்மால் ஒன்று நிகழும் என்று எண்ணுவது நாணத்துக்கு இடமாகும். 

அருவாகவும் உருவாகவும் நின்ற சிவபெருமான் பாவையை ஆட்டுவதுபோல் எல்லா உயிர்களையும் உலகங்களையும் ஆட்டுவிக்கிறான். அப்பரமனுடைய அருளின்றி நம்மால் ஒன்றும் ஆகாது. மன்மதனே! இதனை இன்னும் நீ ஆராயவில்லையா? 

எந்த வகையினாலும் ஒருவன் ஒருவர்க்கு ஒரு உதவியைத் தன்னால் முடிந்ததனைத் தானே புரிதல் உத்தமம். சொன்ன பிறகு புரிதல் மத்திமம். சொல்லியும் பன்முறை மறுத்து தாமதித்துப் புரிதல் அதமம். 

மன்மதா! தேவர்களின் நன்மைக்காகத்தான் உன்னைப் போகச் சொல்கிறேன். நீ போய்ச் சிவபெருமானால் உயிரிழந்தால் அது தேவருக்காகச். செய்த பெரிய தியாகம் அல்லவா? துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவர்கள், உதவி செய் என்று வந்தால், அவர்களின் துயரைப் போக்காமல் தன்னுயிர் பெரிது என்று எண்ணியிருப்பது தருமமாகுமா? விருத்திராசுரனை வதைக்கும் பொருட்டு, ததீசி முனிவர் தம் முதுகெலும்பைத் தந்து உயிரிழந்த செய்தியை நீ கேட்டதில்லையா? பாற்கடலில் வடமுகாக்கினி போன்ற விஷம் வந்தபோது நம்மையெல்லாம் காப்பாற்றுவதற்காக நாராயணர் அந்த விஷத்தின் எதிரில் கணப்பொழுது நின்று தமது வெண்மையான திருமேனியைக் கருமையாக்கிக் கொண்டதை நீ அறிந்ததில்லையா? சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வருந்திக் கொண்டிருக் கிறோம். இத்துயரைப் போக்கக் குமரக்கடவுள் தோன்றுவார் என்று சிவபெருமான் கூறியிருக்கிறார். குமரக்கடவுள் அவதாரத்திற்காக நீ பஞ்சபாணங்களுடன் சிவபெருமானிடம் போகத்தான் வேண்டும்” என்று பிரமன் மீண்டும் மீண்டும் தூண்டிக் கூறினார். 

மன்மதன் மீண்டும் மீண்டும் மறுத்தான். பிரம்மனுக்கு ஆத்திரம் வந்தது. “மன்மதா நான் சொன்னபடி செய்தால் உயிர் பிழைப்பாய். செய்கிறாயா? சாபம் தரட்டுமா? “உனக்கு எது வேண்டும் சொல்” என்றார். 

மன்மதன் சிந்திததான். பிரம்மனால் அழிவதைவிடச் சிவபெருமானால் அழிந்தாலே உய்வதற்கு மார்க்கம் உண்டு என்ற முடிவுக்கு வந்தான். 

“நல்லது அண்ணா! போய்வருகிறேன்…. இல்லை….போகிறேன். ஆனால் திரும்பி வரமாட்டேன்” என்று கூறிப் புறப்பட்டான். 

மன்மதன் தன் அரண்மனைக்குச் சென்றான். நன்றாக அலங்காரஞ் செய்து கொண்டான். கரும்பும் அரும்பும் சுரும்புமே அவனது ஆயுதங்கள். தாழம்பூ அவனுக்கு உடை வாள் புஷ்பங்களில் தேன் உண்டு. புஷ்பங் கட்டுகிறவர்களின் கையில் அந்தத் தேன்பட்டுப் பட்டு நைப்பு ஏற்படும். அந்த நைப்புத் தன்மையை மாற்றச் சாம்பலைத் தொட்டுக் கொள்வார்கள். தாழம்பூவில் ஒருவிதமான மகரந்தச் சாம்பல் இருக்கிறது. அதனால்தான் புஷ்பபாணங்களை விடுகிற மன்மதன் அதனை உடைவாளாக வைத்திருக்கிறான். இந்த ஆயுதங்கள் அகிலாண்டம் முழுவதையும் அடிமைப்படுத்தக் கூடியவை. அவனுக்குக் குடை சந்திரன். சமுத்திரம் நல்ல முழவு. தேர் தென்றல். அந்தப் பரிவாரங்களுடன் புறப்பட்டான் மன்மதன். 

அவன் தேவர்களை மயக்கும்போது புஷ்பவில்லில் புஷ்பபாணம் விடுப்பான். மனிதர்களை மயக்கும்போது கரும்புவில்லில் புஷ்பபாணம் விடுப்பான். அசுரர்களிடம் போகும்போது இரும்புவில்லில் புஷ்பபாணம் விடுப்பான். மன்மதன் புறப்படுவதை ரதி பார்த்தாள். “சுவாமி எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். ‘சிவசிவ’ நீயும் அபசகுனத்தை உண்டாக்கினாயா? என் அண்ணாவின் பிடிவாதமான உத்தரவுப்படி சிவபெருமான் மீது போருக்குப் புறப்படுகிறேன்” என்று மன்மதன் கூறினான். ரதி துணுக்குற்றாள். “சுவாமி சிவபெருமான் மீது போருக்குப் போய் திரும்பி வந்தவர் உண்டா”? தாங்கள் தனித்துப் போக வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று புறப்பட்டாள் ரதி. 

ரதியும் மன்மதனும் தங்கள் பரிவாரங்களுடன் கயிலை மலைக்குச் சென்றனர். கயிலையைக் கண்டதும் மன்மதன் தேரை விட்டிறங்கினான். தன்னுடன் வந்த பரிவாரங்களை அங்கேயே விட்டுவிட்டு ரதிதேவியை அழைத்துக்கொண்டு வில்லும் அம்புமாய் கயிலைமலைமீது ஏறினான். கரும்புவில்லை வளைத்து மலர்க்கணையைப் பூட்டி அங்கிருந்த பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் விடுத்துக் காம இச்சை உண்டாக்க நினைத்தான். கீழக்கோபுர வாயிலில் இருந்த நந்தியெம்பெருமான் மன்மதனின் எண்ணத்தை அறிந்து ஆத்திரங் கொண்டார். உம்…ம்…என்று சினந்து ஊங்காரம் செய்தார். அந்த ஒலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள்மீது விலங்குகள் மீதும் செல்லாமல் ஆகாயத்திலேயே நின்றுவிட்டன. நந்திதேவர் முன் சென்று அவரது காலில் மன்மதன் விழுந்தான். 

காவல்காரரிடமே காதல் தெய்வத்தின் காரியம் இயலவில்லை என்றால் எஜமானனைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மன்மதன் “நடுங்கியவாறு நந்தியெம்பெருமானே தேவர்களின் துயர்துடைக்கும் பொருட்டு பிரம்மதேவர் உத்தரவுப்படி சிவபெருமானிடம் வந்திருக்கிறேன்” என்றான். அப்படியானால் மேலக்கோபுர வாயில் வழியாகப் போ” என்றார் நந்தி. 

மன்மதன் நந்திதேவரை வணங்கிவிடைபெற்றுக்கொண்டு மேலக்கோபுர வாயிலின் உள்ளே, தூங்குகிற புலியை எழுப்பும் மானைப்போல் சிவபெருமானிடம் சென்றான். நீறுபூத்த நெருப்புப் போல் இருக்கும் இறைவன் தென்திசை நோக்கி மோனத்திருக் கோணத்தில் அமர்ந்திருந்ததைக் கண்ட மன்மதன் நடுங்கினான். அவன் உடல் எல்லாம் வியர்த்தது. கையில் வைத்திருந்த வில் அம்புகளுடன் களைத்துக் கீழே விழுந்தான். ரதிதேவி மன்மதனைத்தன் கரத்தால் தாங்கி ஆறுதல் கூறித் தேற்றினாள். மன்மதன் களைப்பு நீங்கி எழுந்தான். ஈசனைக் கண்டவுடனேயே உயிரை இழந்தவன் போலாகிவிட்டேனே! இன்னுஞ் சிறிது நேரத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் வெந்து அழியப் போகிறேன். உரலில் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கைக்குப் பயந்தால் முடியுமா? விதியை யாராலும் வெல்ல முடியாது. இறைவன் திருவுள்ளம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்” என்று மன்மதன் தனது வில்லை வளைத்து நாணேற்றிக் கண்ணுதற் கடவுளை அணுகிறான். 

சிவபெருமான் மீது குறி வைத்து ஐந்து மலர்க்கணைகளை விடுத்தான் மன்மதன். அந்தக் கணைகள் எம்பெருமான் மீதுபட்டதும் நெற்றிக் கண்ணைச் சிறிதே திறந்து பார்த்தார். 

அவ்வளவுதான் வெல்ல வந்தவன் வெந்து போனான். பெருமானின் பார்வையிலிருந்து எழுந்த தீ மன்மதனின் உடலை எரித்தது. அதனால் உண்டாகிய புகை கயிலைமலை முழுவதையும் சூழ்ந்தது. மன்மதன் சாம்பலாகி விட்டான். 

ரதிதேவி துயர்க்கடலில் ஆழ்ந்தாள். அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் ஆறுபோல் ஓடிற்று. அவள் உடல் வியர்த்தது. ஆவி ஒடுங்கியது, “பிராணபதி, பிராணபதி” என்று கதறிக் கீழே விழுந்தாள். இதனை அப்பர் சுவாமிகள்:

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்பனாகில் எனக்கிட ரில்லையே 

என்று கூறியருளினார்.

– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *