தக்கன்தன் வேள்வியைச் சிதைத்தவர்
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 231
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரமதேவருடைய திருக்குமாரன் தட்சாபதி. தக்கன் தவத்தில் சிறந்து தலையாய வரங்கள் பல பெற்றவன். தான் சிவபெரு மானிலும் பெரியவனாக விளங்க வேண்டும். தன்னை எல்லோரும் வீழ்ந்து வணங்க வேண்டும். தனக்கே முதல் மரியாதை இருக்க வேண்டும் எனப் பெரிதும் விரும்பினான்.
உமாதேவியார் தமக்கு மகளாக வர வேண்டுமெனக் கடுந்தவஞ் செய்தான். பெருமான் அப்பேற்றையுங் கொடுத்தார். உமாதேவியார் சிவனை அடையக் கடுந் தபசு செய்தாள். தேவியின் தவத்திற்கிரங்கிய சிவபெருமான் அவரது தவத்தைப் பரிசோதித்துத் திருமணம் செய்து கொண்டு திருக்கயிலை சென்றுவிட்டார். தக்கனை அறியாமலே திருமணம் நிகழ்ந்துவிட்டது. இது தக்கனுக்கு மனத்தாபத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் மகளும் மருமகனும் தனக்குப் பெரும் மரியாதை செய்வார்கள் என்ற கருத்தில் திருக்கயிலை சென்றார் தக்கப் பிரஜாபதி. திருநந்திதேவர் தக்கனை உள்ளே நுழைவதற்கே மறுத்துவிட்டார். தக்கனுடைய மன எண்ணத்தைப் புரிந்து கொண்டவரான படியால் தக்கனை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை.
அதாவது, தக்கன் சென்றதும் மகளும் மருமகனும் எழுந்து வந்து வணங்க வேண்டும். தான் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அப்படி நடந்தால் தக்கன்தான் முழுமுதற் கடவுள். இந்த எண்ணத்தை அடிமனதிலே வைத்துக் கொண்டே தக்கன் உமாதேவியரைத் தனது மகளாக வருமாறு கேட்டான். எல்லாம் அறிந்த எம்பெருமான் இவற்றையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டே அவன் கேட்டதையெல்லாம் கொடுத்தார்.
ஒருமுறை பிரமதேவர் ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினார். சிவபெருமானிடம் சென்று யாகத்தில் வந்து அவிப்பாகம் பெற வேண்டுமென்று அழைத்தார். அதற்குச் சிவபெருமான் ‘நான் வரமுடியாது’ எனக்காக நந்தி வருவார் எனக் கூறினார்.
வேள்வி ஆரம்பமானது. தேவர்கள் எல்லோரும் வந்தனர். அவரவர் தகுதிக்கேற்ப ஆசனங்களிடப் பெற்றன. தக்கனும் தனது கூட்டத்தினருடன் வந்தான். அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவன் இருந்தான். கடைசியாக நந்திதேவர் வந்தார். சிவனுடைய இடத்தில் நந்திதேவர் அமர்ந்தார். நந்திதேவருக்கு எல்லாரும் எழுந்து மரியாதை செய்தார்கள்.
தக்கன் இதனை ஆட்சேபித்தான். நேரிலே வராத சிவனுக்கு மரியாதை செய்யக் கூடாது. சுடலையாடிக்கு பிச்சை ஏற்பவர்க்கு இங்கு என்ன வேலை என்று சிவனை நிந்தித்தான் தக்கன். கோபம் அடைந்த நந்திதேவர் சாபம் இட்டார். சிவனை நிந்தித்த இடத்தில் யாகம் நடைபெற்றால் அவர்களது தலை இற்று விழும். அதனால் யாகம் அத்துடன் நிறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் பின் நீண்ட காலமாக யாகம் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு முறை தக்கன் தேவர்களைப் பார்த்து ஏன் இப்பொழுது யாகம் செய்யப்படுவதில்லை என்று கேட்டான். தேவர்கள் நந்தி தேவருடைய சாபத்திற்குப் பயந்து எவரும் யாகம் செய்யவில்லை என்று கூறினர்.
உடனே தக்கன் தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும் அது செவ்வனே நிறைவேறினால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றிச் செய்யலாம் என்றும் கூறி யாகம் செய்யத் தலைப்பட்டான். சிவபெருமானுக்கு அவிப்பாகம் கொடுக்கப் போவதில்லை என்றும் கூறினான். சிவபெருமானைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்பு அனுப்பாவிடினும் தந்தையாருடைய யாகத்திற்குத்தான் செல்வேன் என்று உமாதேவியார் யாகத்திற்குச் சென்று மானபங்கம் அடைந்து வந்தார். தக்கன் சிவநிந்தனை செய்தபடியினால் வீரபத்திரரால் யாகம் அழிக்கப்பட்டது. அந்த யாகத்திற்கு உடந்தையாக இருந்த தேவர்கள் அத்தனைபேரும் தகுந்த தண்டனை அடைந்தனர். தக்கனுடைய தலை அறுபட்டு யாக குண்டலத்தில் விழுந்து எரிந்தது. பின்பு ஆட்டுத் தலை ஒன்று வைத்துப் பொருத்தப்பட்டது.
சிவனை நினையாது சிவநிந்தனை செய்து வாழ்ந்த தக்கனைப் ‘ போன்று நாமும் சிவனை நினையாது வாழ்ந்தால் நமக்கும் அந்த நிலையே ஏற்படும். எமது கடைசியான படுக்கை சுடலையில் விறகின் மேல் படுக்கும் படுக்கையாகும். இதனை அப்பர் முருட்டு மெத்தை என்கின்றார். முருடு என்றால் விறகு. அதாவது சுடுகாட்டு விறகின்மேல் படுக்கு முன்பு இறைவனை நாமசங்கீர்த்தனம் செய்யுங்கள் என்பது பொருள். பஞ்சப் புலன்களின் வழியிலே செல்லாமல் இறைவன் வழியிலே நடவுங்கள் என்று அப்பர் கூறுகின்றார். இப்போது தேவாரத்தைப் பார்ப்போம்:
முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் .ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026