சண்டேசுரர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 15 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழநாட்டிலே மண்ணியாற்றங்கரையிலே முருகப்பெருமான் எழுந்தருளிய சிறப்புடையது திருச்சேய்ஞலூர். இந்த ஊரில் அந்தணர்கள் குடும்பம் நெருங்கி இருந்தது. அவர்களுள் செல்வம் மிகுந்தவன் எச்சதத்தன். அவனுடைய அன்பு மனைவி பவித்திரை என்னும் பெயருடையவள். இருவரதும் இல்லறச் சிறப்பினால் விசாரசருமர் என்பவர் பிறந்தார். 

விசாரசருமர் கலைபயில் தெளிவும் கட்டுரைவன்மையும் உடைய வராய் விளங்கினார். அவருடைய நுண்ணுணர்வும் கலையும் அரனார் மலரவும் பற்றிலேயே சூழ்ந்தன. முக்கண்ணர் திருவடியன்பிலே முழுகித் திளைத்துக் களித்து நின்றார் அந்தக் கலைவாணர். 

ஒருநாள் அவர் தெருவழியே போகும்போது கன்றையீன்ற பசுவொன்று மேய்ப்போனைக் கொம்பால் முட்டிய காட்சியைக் கண்டார். மேய்ப்போன் அதனைத் தடி கொண்டு தாக்கினான். இதனைக் கண்ட அவர் உள்ளம் திடுக்கிட்டது. சினத்துடன் அவனைத் தடுத்தார். 

“பசுக்கள் எல்லா உயிர்களையும் விட மேம்பட்டவை. அவற்றின் பால் இறைவர் திருமுடியிலே ஆட்டப் பயன்பெறும். அதனிடமிருந்தே திருநீறு செய்வதற்கேற்ற சாணங்கிடைக்கிறது. அரனார் ஊர்வதும் ஆனேறுதான். மற்றும் இது மக்களுக்கு தன் பாலை ஊட்டும் பண்பை மறந்தார் உளரோ? இனி நீ இதனை மேய்க்க வேண்டாம். யானே மேய்ப்பேன்” என்றார். 

இடையன் இவர் மொழிக்கு மாற்றங் கூற அஞ்சி நீங்கிவிட்டான். அன்று முதல் இவரே குழந்தையைக் காக்கும் அன்னையைப் போலக் கோகிலங்களைக் காக்கத் தொடங்கினார். கோலுங் கயிறுங் கொண்டார். அவற்றைப் புல்லுள்ள புலங்களில் மேய்ப்பார். பால் சுரக்கும் நேரத்தில் அவற்றின் வீட்டிலே கொண்டு விடுவார். மண்ணியாற்றங்கரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் மேய்த்து இருட்டுமுன் சமிதையும் விறகும் தலைமேற் சுமந்து கொண்டு அவற்றை ஓட்டி வருவார். இவ்வாறு நாட்கள் பல கடந்தன. பசுநிரைகள் பாலை மிகவும் அதிகமாகக் கொடுத்தன. வளமும் அடைந்தன. எல்லோரும் மகிழ்ந்தனர். 

பசுக்கள் கன்றை மறந்தாலும் விசாரசருமரை மறப்பதில்லை. பசுக்கள் அவரருகிற் சென்று பால் பொழியத் தொடங்கின. இவற்றின் அன்பினாலுருகிற அந்தணச் சிறுவர் அப்பாலை வீணாக்காமல் அரனார் வழிபாட்டுக்குப் பயன்படுத்த நினைத்தார். 

மண்ணியாற்றின் ஒரு மணல் மேட்டிலே ஆத்தி மரத்தின் நிழலிலே, மணலால் லிங்கம் ஒன்றை அமைத்தார். பிறகு மணலிலேயே மதிலும் கோபுரமும் சுற்றுக்கோயிலும் அமைத்தார். அத்திமலர், நல்லதளிர்களை அர்ச்சனைக்காகச் சேர்த்தார். 

புதிய குடங்களை எடுத்து வந்து, பசுக்களினருகிலே சென்று, பசுவொன்றுக்கு ஒரு காம்பாகத் தொட்டுக் குடத்துள் நிறைத்தார். பசுக்கள் இவர் தொடுமுன் பால்சுரந்து மகிழ்வுடன் அளித்தன. அப்பாற் குடங்களைக் கொண்டு வந்து வைத்தார். பழம் பிறப்புணர்ச்சி தூண்ட, உடல் புழகமெழப் பாற்குடங்களை எடுத்து, அன்பினைக் கலந்து இறைவரை ஆட்டினார். இவ்வாறு பல நாட்கள் நடைபெற்றன. ஆனிரைகள் இங்கு நண்பகலிலே இறைவர் வழிபாட்டுக்குப் பாலளித்தாலும் சிறிதும் குறைவின்றி முன்போலவே வீட்டிற்கும் பாலளித்து வந்தன. 

இந்த வழிபாட்டின் நிலையை அறியாத அறிவிலி ஒருவன் அவ்வூர் அந்தணர்களுக்கு அறிவித்தான். அந்தணர்கள் எச்சதத்தனை வரவழைத்தனர். அவனும் வந்தான். 

“எச்சதத்தரே! இடையன் அறிவில்லாதவன் என்று கூறி, உங்கள் மகன் சிறுபையன் தான் பசுக்கூட்டத்தை மேய்க்கத் தொடங்கினான். பசுக்களும் நன்றாக மேய்ந்து பால் கொடுத்து வருகின்றன. இஃது உண்மையே எனினும் அவன் செய்யும் திருவிளையாடலை என் என்பது?” 

“என்ன செய்துவிட்டான்? கூறுங்கள் கண்டிக்கிறேன். உங்களுக்குச் செய்யும் பிழை எனக்குந்தானே!’ 

“பசுக்களின் பால் ஆகுதிக்குப் பயன்படும் என்று அறிவீர்கள்! அப்பாலையெல்லாம் மணலிலே கறந்தூற்றுகிறான். 

“என்ன? என்ன?” 

எச்சதத்தன் நடுங்கினான். 

“மண்ணியாற்றங்கரையிலே மணலில் இலிங்கம் பிடித்துவைத்து கறந்தூற்றுகிறான்.” 

அந்தணர்கள் உள்ளம் அக்கினிபோல் கொதித்தது. எச்சதத்தன் வணங்கி, “இதுவரையில் எனக்கிது தெரியாது. ஆகையாற் பெருமனஞ்செய்து பொறுக்க வேண்டும். இனிமேல் நிகழ்ந்தால் என்பிழையாகும்” என்று வேண்டிக் கொண்டான். 

மாலையில் ஆநிரையுடன் பிள்ளையார் வந்தார். அவரிடம் ஏதும் பேசாமல் இருந்தான். மறுநாள் காலையிலே மைந்தர் சென்றபின் தொடர்ந்தான். 

நடுப்பகல் வந்தது. ஆநிரைகள் மண்ணியாற்றங்கரையிலே அடைந்தன. எச்சதத்தன் பிள்ளையாருக்குத் தெரியாமல் ஒரு குரா மரத்திலேறி மறைந்து கொண்டான். பிள்ளையார் ஆற்றிலே முழுகினார். மணற்கோயிலாக்கி மணலில் லிங்கம் செய்து வைத்தார். மலர் கொய்து வந்தார். குடங்களிலே பால் கறந்தார். மற்றும் வேண்டியவற்றையுங் கொண்டு வந்து வைத்துக் கொண்டு வழிபடத்தொடங்கினார். 

ஐம்புலன்களும் ஒன்றி அன்பின் வழியிலே உள்ளம் ததும்பி நின்றது. அன்பு மேன்மேலும் பெருகியது. குடத்திலிருந்து பால் வழிகிறதோ, உள்ளத்திலிருந்து அன்பு வழிகிறதோ என எவரும் அறிய முடியாது. சுற்றிலுமிருந்த பொருள்கள் அவர் கண்களுக்கு மறைந்தன. இறைவர் வழிபாட்டிலேயே நிலைத்து நின்றது. அவர் பார்வையில் உலகப் பொருள்கள் மறைந்தன. உண்மைப் பொருள் மட்டும் தெரிந்தது! தம்மையே அறியார் எனலாம். 

எச்சதத்தன் இவ்வழிபாட்டைக் கண்டான். அவனுந் தன்னை மறந்தான. அவன் அகக்கண் மூடியிருந்தது. சினம் ஒன்றே உள்ளத்தை இடங்கொண்டெழுந்தது. குராவிலிருந்து குதித்தான். பிள்ளையாரிடம் ஓடினான். கையிலிருந்த பிரம்பினாலே மைந்தன் முதுகிலே அடித்தான். வைதான். ஆனால் அடியும் வசைமொழியும் அவருடைய உள்ளத்தைச் சிறிதும் தொடவில்லை. எனவே என்ன நடக்கிறதென்பதையே அறியாதவரானார். பெற்ற தந்தையும் பிள்ளையார் செயலின் பெருமையை அப்போதும் அறியனானான். அவன் சினம் மேலும் வளர்ந்தது. அந்தோ இழிசெயலாலே கடமையுணர்விலே நின்ற அவன் காலாலே திருமஞ்சனக்குடப்பாலை இடறினான். தாம் அமைத்துக் கொண்டிருக்கும் வழிபாட்டுப் பொருள்களிலேயே கருத்தூன்றி யிருந்த அவருக்கும் பாற்குடத்திற்கேதோ இடையூறு நேர்வது போலப் புலப்பட்டது. பக்கத்திற் கையை வைத்தார். கோல் மழுவாகக் கிடைத்தது. அதையெடுத்தெறிந்தார். சிவத்துரோகம் செய்தவனது இரு தாள்களையும் வெட்டி வீழ்த்தியது. எச்சதத்தன் வீழ்ந்தான். அந்த நிலையையும் அறியாத விசாரசருமர் இடையூறு நீங்கியது என்ற அவ்வளவே கருத்திற் புலப்பட மேலும் வழிபாட்டிலே ஈடுபட்டார். 

அப்போது வானவெளியிலே பேரொளி ஒன்று தோன்றியது. அதன் நடுவே விடைமேல் எம்பிராட்டியுடன் எம்மிறைவர் எழுந்தருளினார். கண்டார் அந்தணச் சிறுவர். கைகுவித்து விழுந்து வணங்கினார். இறைவர் அவரைக் கைகொடுத்தெடுத்தணைத்து உச்சிமோந்து மகிழ்ந்தார். 

“உன் தந்தையை எமக்காக வீழ்த்திவிட்டாய்! இன்று முதல் நாமே உனக்குத் தந்தை”. 

இறைவர் அருளிலே முழுகி அணைப்பிலே பயின்ற பிள்ளையார் திருமெய் சிவமயமாய்ப் பேரின்ப ஒளியாய் விளங்கியது. “நம் தொண்டர் தலைவன் நீ. 

“நாம் சூடுவனவும் உடுப்பனவும் உண்டகலமும் உனக்கினி உரியவை யாகும்படி சண்டீசப் பதம் அளித்தோம்” என இறைவர் திருவாய் மலர்ந்தருளினார். 

தம் திருமுடியிலிருந்த கொன்றைமாலையை எடுத்துப் பிள்ளையார்க்குத் தம் திருக்கையாலே சூட்டினார் இறைவர். உலகெங்கும் ஒரே ஆரவாரம்! ஒரேமலர் மழை! ஒரே களியாட்டம்! சண்டீசர் வாழ்க! சண்டீசர் வாழ்க! என்று எங்கும் பரவிய இனிமையான ஒலி! 

இதனை அப்பரடிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 

மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.

– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *