கடைசி குழந்தை!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 1,363
“டக்னு எந்திரிச்சு ஒடியா… வரிசைல நிக்கலைன்னா பொழுதானாலும் சாமி கும்பிட முடியாதுடி என்ற தங்கோ… ராசாத்தி…” கோவிலில் வரிசையில் நிற்பதால் கால் வலிக்கிறது என தரையில் அமர்ந்திருந்த மகன் வழி கொள்ளு பேத்தி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த சிறுமி கியாவை எழுபது வயதைக்கடந்த சுப்பு பாட்டி அழைத்தாள்.பாட்டி தமிழில் பேசியதை தனது செல்போனில் ரெக்கார்டு செய்தவள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேச வேண்டிய வார்த்தைகள் திரையில் வெளிப்பட அதைப்பார்த்து பேசினாள்.
“என்ற பேரு தங்கோ… ராசாத்தி…. இல்லைங்க. கியா… எப்பப்பாத்தாலும் ராசாத்தின்னு கூப்பிட்டீங்கன்னா அதுவே என்ற பேரா மாறிடும்” தமிழில் தடுமாறியபடி பேசிக்கொண்டே எழுந்து வந்தவள் பாட்டியின் கால்களைக்கட்டியபடி நின்றாள்.
“எங்க வயசுக்கு எங்க பழக்கம் அப்புடி. ராசாத்தின்னா மகாராணின்னு அர்த்தம். அதனால பெருமையா ஒசத்தி சொல்லோனும்னு நமக்கு மூத்தவங்க அப்படிச்சொன்னாங்க. காலங்காலமா அதுதான பழக்கம்” சொன்ன பாட்டி தனது சுருக்கு விழுந்த கைகளில் விரல்களைக்குவித்து கயாவின் கன்னத்தைப்பிடித்து தனது வாயில் வைத்து முத்தமிட்டதை ஆச்சயமாகப்பார்த்தாள் சிறுமி.
“மம்மி சுப்பு பாட்டி எம்மேல ரொம்ப பாசமா இருக்காங்களே… அவங்களுக்கு நாம ஏதாவது கொடுக்கனமா?” ஆங்கிலத்தில் தனது தாயிடம் கேட்டாள்.
“பாசத்துக்கு பாசந்தா அவங்க நம்ம கிட்ட எதிர்பார்க்கிறது. அவங்க பையனை அவங்க நல்லா வளத்ததால தான் உன்னோட அப்பாவுக்கே அப்பா கெடைச்சாங்க. அவங்களை நாம தான் பாதுகாக்கனம்” கேள்வி கேட்ட மகளான கியாவிடம் பதில் கூறினாள் தாய் குயா.
“அவங்க பேசறது எனக்கு புரிய மாட்டேங்குது. என்னைப்பார்த்து ஓடிவான்னு சொல்லறதுக்கு ஒடியான்னு சொல்லறாங்க. பக்கத்துல வந்த நாயை போன்னு சொல்லறதுக்கு ஒடி ன்னு சொல்லறாங்க. வா, போன்னு இப்ப சொல்லறது அவங்க காலத்துல இப்படியா பேசியிருப்பாங்க…?” தாய் சில சமயம் தமிழில் பேசுவதற்கு மாற்றாக இருந்ததால் கேட்டாள்.
“ஆமா. ஆதி காலத்துல சித்திரமா வரைஞ்சு…. ஓ உனக்கு சித்திரம்னா புரியாது. ஓவியமா வரைஞ்சு தங்களோட எண்ணங்களை வெளிப்படுத்தினவங்க அப்புறம் காலப்போக்குல பேசக்கத்துகிட்டாங்க. அப்புறம் குறியீடுகளை உருவாக்கினாங்க. எழுத்து வடிவுல அப்புறமா கொண்டு வந்திருக்காங்க. நாம போன வருசம் இந்தியா வந்தப்ப புதுக்கோட்டைல சித்தன்னவாசல் ஓவியம் பாத்தோமே…..”
“ஆமா…சூப்பரா இருந்துச்சு. பாறைல ஏறி மேல போனோமே…”
“அதெல்லாம் நம்ம முன்னோர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே தத்ரூபமா பெயிண்ட் இல்லாதப்ப வரைஞ்சது. காலப்போக்குல அழிஞ்சு போச்சு”
“எனக்கு ஓவியம்னா ரொம்ப புடிக்கும். நான் இப்ப நம் சுப்பு பாட்டிய வரையப்போறேன்” சொன்ன மகளை வாரி அணைத்துக்கொண்டாள் குயா. கனவு மகிழ்ச்சியைக்கொடுத்தாலும் கண் விழித்ததும் வருத்தமே மனதை ஆட்கொண்டது. தனது கைக்குட்டையால் கண்களைத்துடைத்துக்கொண்டாள்.
‘அனைத்தும் கனவில் கண்டு வாழும் நிலையாக தற்கால வாழ்க்கை முறை உள்ளது. மனித சமுதாயம் பணம், பணம் என நாகரீகம் எனும் பெயரில் இயல்பான வாழ்க்கை வாழாமல் மனம் போன போக்கில் வாழ்ந்ததின் விளைவு பெண்களுக்கு குழந்தை பிறப்பு என்பதே அரிதாகி விட்டது’ என யோசித்ததில் மீண்டும் கண்ணீர் வடிந்தது.
குயாவிற்கும் குழந்தை பிறக்கவில்லை. வரலாறுகளிலும், கதைகளிலும் படித்தே கடந்த கால மனித வாழ்வை அறிந்து கொண்டாள்.
ஒரு ரோபோட் குழந்தையை வாங்கியிருந்தாள். தன்னிடமும், தன் குடும்பத்தினரிடமும் தத்ரூபமாக அந்த ரோபோட் குழந்தை கனவில் கியா குழந்தை போலவே பேசியதைக்கண்டு வியந்து போனாலும் கனவில் கண்டதை நனவாக்கி மகிழ அக்குழந்தைக்கு கியா என பெயர் வைத்திருந்தாள்.
ரோபோட் குழந்தை தன்னுடன் இயல்பாக பேசியதைக்கேட்டு தனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என யோசித்ததால் மீண்டும் கண்ணீர் சிந்தினாள்.
“அந்தக்காலத்துல நல்லா பாடு பட்டாங்க, நல்லா சத்தா சோறு உண்டாங்க. பத்துக்குழந்தை கூட பெத்துப்போட்டாங்க. அப்புறம் வந்த நமக்கு முன்னவங்க எதையுமே தாமாக செய்யாம சோம்பேறித்தனத்தால சோறு முதல் பீரு வரைக்கும் ஆர்டர் போட்டு சாப்பிட்டாங்க. அப்புறம் குழந்தை பெத்துக்க முடியாதுன்னு வாடகைத்தாய் மூலமா பெத்தாங்க. அது கூட மனித குழந்தை சரி. இப்ப குழந்தையும் ஆர்டர் போட்டு ரோபோட் குழந்தையா வாங்கிக்கிற நெலமைக்கு நீங்க போயிட்டீங்க. இத்தோட மனித சமுதாயம் இந்த பூமில இல்லாம போகப்போகுது. ஆப்பிரிக்காவுல ஒரு பொண்ணு கருவா இருக்காங்களாமா. அது தான் இந்த உலகத்தோட கடைசி குழந்தையா இருக்கும்னு சொல்லறாங்க….” கவலையுடன் தமது ஆதங்கத்தைக்கொட்டினார் கி.பி. இரண்டாயிரத்து நூற்று இருபத்தாறாம் ஆண்டில் வாழும் குயாவின் தந்தை மிகு.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
