கசிந்துருகி கண்ணீர் மல்கி…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 730 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொலைபேசி அழைப்பின் ஓசை இப்போதெல்லாம் கனவில் கூட வந்து பயமுறுத்துகிறது. எந்த நேரத்தில் எத்தகைய செய்தியை கேட்க நேரிடுமோ என்ற பயம் நெஞ்சக் கூட்டைக் குளிராய் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தக் கலக்கமும் தவிப்பும் சமீப நாட்களாய் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

உலகம் முழுதும் பரந்து வாழும் உறவுகள் தொலைபேசி எடுத்து “எங்கட வீட்டாக்கள் பற்றி ஏதும் தகவல் தெரியுமா? ஆராவது கண்டவையாமா….” என்று தவிப்போடு கேட்கும்போது மனம் தாங்க முடியாத கவலையில் பாரமாய்ப் போகும். இன்றும் அதிகாலை அமைதியைக் கலைத்துக் கொண்டு ஐந்து மணிக்கே அலறிய தொலைபேசியை அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப்போய் எடுக்க கனடாவிலிருந்து கடைசித் தம்பி நகுலனின் குரல் கவலையோடு ஒலித்தது. 

“அண்ணை, ஏதாவது தகவல் தெரிஞ்சுதா. இங்க செய்தியளைக் கேட்கக் கேட்க ஒரே கலக்கமாய்க் கிடக்கு. ஆராவது பாரதியாட்களைக் கண்டவையாமா….” என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

“இல்லையடா, ஆரிட்ட விசாரிக்க ஏலும். அங்கயிருந்து ஒரு தொடர்பும் இல்லை.” 

“சிவநேசன் மாமாக்கும் ஏதும் தகவல் வரேலையாமா” 

“இல்லையாம். அவரும் யோசிச்சுக் கொண்டிருக்கிறார். வவுனியாவில் ஏதும் தகவல் அறிஞ்சால் பாலாண்ணை போன் பண்ணுவார்.” 

“என்னவோ ஒரே பயமாக்கிடக்கு, பாவம் அவள் குழந்தையளோட என்ன கஷ்டப்படுறாளோ… அங்கயிருந்து வாற படங்களைப் பார்க்க மூச்சே நிண்டிடும் போல கிடக்கு. தாங்கவே ஏலாதாம். அவ்வளவு பரிதாபம்.” 

“பாரதியவை விசுவமடுவில இருந்த வரைக்கும் தகவல் தெரிஞ்சுது. பிறகும் அங்கயிருந்து எழும்பிப் போய் உடையார்கட்டில் இருக்குதுகள் எண்டும் கதை வந்தது. பிறகு அதிலயிருந்தும் எங்க எழும்பி போச்சுதுகளோ தெரியேலை. ஒரு மாதமாய் ஒண்டும் தெரியேலையடா” எதிர் முனையில் மௌனம். எனக்குத் தெரியும். நகுலன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டோ நெஞ்சை நீவி மூச்சு எடுத்து விட்டுக் கொண்டோ நிற்பான். 

பாரதிமீது அவ்வளவு பாசம் அவனுக்கு. எல்லோருமாய் சேர்ந்து அவளை சில காலம் தனிமைப்படுத்தி விட்டோமே என்ற ஆறாத கவலையும் ஆதங்கமும் அவனுக்குத்தான் ஒருபடி அதிகம். 

“சரி அண்ணை. நான் பிறகு எடுக்கிறன். ஏதும் அறிஞ்சால் உடனும் சொல்லு” தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

என்னால் மறுபடி படுக்கமுடியவில்லை. தொலைபேசி அழைப்பின் ஓசையில் அப்பா விழித்திருப்பார். யார் பேசியிருக்கக்கூடும் என்று யோசித்தபடியே படுத்திருப்பார். பாரதி பற்றிய விசாரிப்புத் தான் நடைபெற்றிக்கும் என்றும் ஊகித்திருப்பார். 

அப்பாவின் மனசு இப்போது எவ்வளவு தூரம் நொறுங்கிப் போயிருக்கும் என்று புரிகிறது. 

கண்களின் உயிர்ப்பு காணாமல் போய் எட்டு வருஷமாகிறது. அந்த சந்தர்ப்பத்தில் சரியாய்ப்பட்டது இப்போது தவறாய்த் தெரிகிறது. செல்லமாய் உயிராய் வளர்த்த பெண்ணுக்கு கொடுத்த தண்டனை அதிகமோ என்று மனம் குறுகிப் போனது. அப்பா பாவம் இப்போது நினைத்தாலும் கூட பாரதியைப் பார்க்க முடியாது… பேசமுடியாது. 

இந்த எழுபத்திரண்டு வயதில் அப்பா அனுபவிக்கும் துன்பம் யாராலும் தீர்க்க முடியாது. என்றேனும் ஒரு நாள் பாரதியை அவள் கணவன் யோகேந்திரனை அவர்கள் குழந்தைகளை காணும் அந்த நிமிடத் துளிகளில் தான் அவரது நெஞ்சின் பாரம் தீர்ந்துபோகும். அந்த ஒரு நிமிடத்துளிக்காகத்தான் அவர் காத்துக் கொண்டிருக்கிறார். 

ஆறுமாதத்துக்கு முன்புவரை இருந்த அப்பா வேறு. தான் பாரதி மீதுள்ள பாசத்தையும் மீறிய கோபம் தான் அவர் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலங்களாக வன்னியில் நடைபெற்றுவரும் பிரச்சினைகளினால் அந்தக் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காணாமல் போய்விட மிஞ்சியிருப்பது பெற்ற மகளின் மீதுள்ள பாசமும் கண்ணுக்கெட்டாத தூத்தில் தவிக்க விட்டு விட்டோமே என்ற பச்சாதாபமும் தான். அந்த உணர்வுதான் அவரை உருக்கிக் கொண்டிருக்கிறது. 

வரவர நிலைமைகளும் மோசமாகிக் கொண்டேதான் வருகிறது. என்ன செய்கிறார்களோ என்ன சாப்பிடுகிறார்களோ என்ற கலக்கம்… ஒவ்வொரு எறிகணை வீச்சின் அதிர்வுக்கும் எப்படி பயந்து நடுங்குவார்கள் என்ற ஏக்கம்… கடவுளே…. சாப்பிட முடியாமல் நித்திரை கொள்ள முடியாமல், மனசு கலங்கிக் கொண்டேயிருக்கிறது. 

பாவம் அவளை இத்தனை வருட காலமாக நோகடித்தோமே… அப்பாவின் பிடிவாதத்தை உடைக்க முடியாமல் நாமும் ஒதுங்கி நின்றோமே என்று என் மீதே கோபம் வருகிறது. யோகேந்திரன் ஏழை என்பதும் அவ்வளவாக படிக்காத குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் இன்றைக்கு நினைக்கும்போது அவர்களை ஒதுக்கியதற்கு வலுவுள்ள காரணங்களாகத் தெரியவில்லை. ஆனால் அன்றைய சூழ்நிலையில் இவைதான் பெரிதாகப்பட்டது. மூன்று ஆண்பிள்ளைகளுக்கு ஒரே தங்கச்சி அவள். என்ன செல்லம்… என்ன பாசம்…. அதிக அளவு பாசம் வைத்ததால்தான் அவள் யோகேந்திரனுடன் தான் வாழப்போகிறேன் என்று போனபோது அத்தனை கோபம் வந்ததா? 

தொண்ணூற்றைந்து இடப்பெயர்வுக்குப் பின்னர் அப்போது நாங்கள் மல்லாவியில் இருந்தோம். நானும் ரஞ்சனும் பெரதேனியாவிலும் மொரட்டுவவிலும் படித்துக் கொண்டிருந்தோம். அம்மா, அப்பா, பாரதி, நகுலன் எல்லோரும் மல்லாவியில் இருந்தார்கள். அப்போதுதான் பாரதிக்கு யோகேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. அது எப்படி நடந்தது என்ற வியப்பு எனக்கு இன்று வரை தீராமலே இருக்கிறது. என்ன ஏதென்று அறிந்ததும் அப்பாவின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமற் போனது. 

எத்தனை பாசத்தைக் கொட்டினாரோ அத்தனை அளவு கோபத்தையும் அவள் மீது திருப்பிக் கொண்டார். எங்களுக்கு விஷயம் தெரிந்து நாங்கள் அங்கு போனபோது எல்லாமே கைமீறி போய்விட்டது. அப்பாவின் கோபத்துக்குப் பயந்து பாரதி யோகேந்திரனுடன் போய்விட்டாள். அவமானமும் கவலையும் சேர அப்பா இடிந்து போய்விட்டார். அதன் பிறகு அப்பா அம்மா நகுலன் எல்லோரும் கொழும்புக்கு வந்துவிட்டார்கள். சிலகாலம் பாரதி பற்றிய நினைவும் பேச்சும் எல்லோரையும் வலிக்க வைத்தது. படிப்பு முடிந்து நான் வேலை செய்ய ரஞ்சன் லண்டனுக்குப் போய்விட்டான். அடுத்தடுத்த வருஷங்களில் நகுலனும் கனடா போனான். உறவினர் மூலமோ சிவநேசன் சிவநேசன் மாமா மூலமோ பாரதி பற்றிய விபரங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியவரும். தன் உழைப்பு முயற்சியால் சொந்தமாய் கடைபோட்டு முன்னேறி வீடு வாசல் என்று ஓரளவு வசதியாய்த்தான் பாரதியை யோகேந்திரன் வைத்திருப்பதாய் அறியமுடிந்தது. 

ஏதோ பிரிந்து போனாலும் அவள் நன்றாக இருக்கட்டும் என்று மனது ஆறுதல்பட்டது. எங்களுக்கு கல்யாணங்கள் நடந்தபோதும் பாரதிக்கு அப்பா சொல்லவிடவில்லை. எங்களுக்கு மனசு நெருடிக் கொண்டிருந்தாலும் அப்பாவின் வார்த்தையை மீறமுடியாதவர்களாய் ஆனோம். அம்மாதான் சரியாய் அழுது கொண்டிருப்பா. 

சிவநேசன் மாமாவும் மாமியும் ஒரு மகளுடன் கொட்டாஞ்சேனையில் இருக்கிறார்கள். மற்ற இரண்டு மகள்மாரும் வன்னிக்குள் பாரதி வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். அம்மா இரண்டு வருஷம் முன் இறந்தபோது மாமாவின் மகள் மூலம் அறிந்து பாரதி மாதக்கணக்கில் அழுது கொண்டிருந்தாளாம். 

போன வருஷம் வன்னிக்குள் பிரச்சினை நடந்து கொண்டிருந்த நேரம் ஒரு ஞாயிறு மாலை கொட்டாஞ்சேனைக்கு மாமா வீட்டுக்குப் போயிருந்த போது தற்செயலாய் அந்த நேரம் என்று மாமாவுடன் தொலைபேசியில் பாரதி கதைக்க எடுத்தாள். அப்போது மாமா என்னையும் அவளுடன் கதைக்க வைத்தார். ஏழு வருஷங்களுக்குப் பிறகு பாரதியின் குரலைக் கேட்டதும் எனக்கு நெஞ்செல்லாம் அடைத்து விட்டது. 

“அண்ணை…” என்று சொல்லி ஒரு நிமிஷம் அழுதாள். 

“எப்படி இருக்கிறீர்கள்?” என்றாள். 

“நாங்கள் இருக்கிறம். நீங்கள் எல்லாரும் சுகமாய் இருக்கிறீங்களா?” கவலையுடன் கேட்டேன். ஐந்து நிமிடம் கதைத்தாள். கடைசியாய் “அப்பாக்கு இன்னும் என்னில இருக்கிற கோபம் போகேலையா…” என்று குரல் அடைக்கக் கேட்டாள். 

“பரவாயில்லை அண்ணை. எப்பவாவது ஒரு நாளைக்கு உங்களையெல்லாம் வந்து பாப்பன். அப்ப என்ர பிள்ளையளை அப்பாவுக்குக் காட்டுவன். மூத்தவன் சரியாய் அப்பா மாதிரித்தான். நல்ல நிறம் புருவத்தை உயர்த்திக்கொண்டு கதைக்கிற போதும் சிரிக்கிற போதும் அப்பான்ர நினைவுதான் வரும். பிள்ளையளை ஒருக்கா அப்பா பார்த்தாரெண்டால் அவற்ர கோபம் எல்லாம் போயிடும்.” அவளின் குரலில் நம்பிக்கை தெரிந்தது. 

“நீ கவலைப்படாத பாரதி. எல்லாம் சரியாகும். அங்கயும் ஒரே பிரச்சினையளாய் இருக்கு. கவனமாய் இருங்கோ.” அவளோடு கதைத்தது பெரிய சந்தோஷமாய் இருந்தது. ஒரு நாளைக்கு அவளை அப்பாவுடன் கதைக்க வைக்க வேண்டும் என்று நினைத்து அதைச் செயல்படுத்த முயற்சித்தபோது வன்னியில் நிலைமைகளும் மாற்றமடைந்துவிட்டன. 

அப்பாவுக்கும் என்னதான் வெளியே வீம்பாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவளைப்பற்றிய தவிப்பு இருக்கத்தான் செய்யும். ஆறேழு மாதங்களுக்கு முன் மல்லாவியிலிருந்து சனமெல்லாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பக்கமாய் போகிறார்கள் என்ற செய்தியை அறிந்த பின் தான் அப்பாவின் மன உடைவு வெளியே தெரியத் தொடங்கியது. ஆரம்பத்தில் மல்லாவியிலிருந்து வெளியேறும்போது வீட்டு மரம் சீற் எல்லாம் கழற்றி வீட்டுப் பாவனைப் பொருட்களையும் உழவுயந்திரப் பெட்டியில் ஏற்றிக் கொண்டு ஸ்கந்தபுரம் போய் இருந்தார்களாம். பிறகு அங்கும் இருக்க ஏலாத நிலை வர விசுவமடுவில் போய்த் தெரிந்தவர் காணியில் கொட்டில் போட்டு இருந்தார்களாம். பிறகு அங்கும் இருக்கமுடியாத இயலாதநிலை வர கொஞ்ச உடைமைகளுடன். ஓடிப்போய் உடையார்கட்டில் இருந்ததாகத்தான் கடைசியாய் ஒரு மாதம் முதல் அறிந்தோம். பிறகு அங்கும் இருக்க இயலாமல் எழும்பி வேறு எங்காவது போயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு இடம் விட்டும் நகரும்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைமைகளை இழந்து கடைசியாய் உயிரை மட்டுமே கொண்டு ஓடியிருப்பார்கள். 

பாரதியாட்களுடன் யோகேந்திரனின் தாய், தந்தையும் சேர்ந்து போயிருப்பதாகத்தான் சிவநேசன் மாமா சொல்லியிருந்தார். மாமாக்கும் ஒரு மாதமாய் அவர் பிள்ளைகளுடன் ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. அதனால் பாரதியாட்களும் எங்கு போனார்கள் எங்கு இருக்கிறார்கள் என்று ஒரு விபரமும் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் செய்திகளைக் கேட்கும்போது தலை விறைத்துப் போகிறது. இணையத்தளத்தில் தேடித் தேடி செய்தி பார்த்து காயப்பட்டவர்களினதும் இறந்தவர்களினதும் பெயர்களை வாசிக்கும் பதைபதைப்பு இருக்கிறதே…. அது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத வேதனை. 

பகல் இரவு என்று பதுங்கு குழிகளில் இருந்தால் சாப்பிட என்ன செய்வார்கள் என்ற நினைப்பில் ஒரு பிடி சாப்பாட்டைக்கூட சாப்பிட முடியவில்லை. பசியை குழந்தைகள் எப்படித் தாங்குங்கள்… அதிரும் சத்தங்களைக் கேட்டு எப்படி பயந்து பதறி நடுங்கிப் போகுங்கள்… 

அப்பா ஆடிப்போய் விட்டார். 

பாரதிக்கு தான் கொடுத்த தண்டனை அதிகமோ என்ற நினைவில் ஒடுங்கிப் போனார். அந்தக் குற்ற உணர்வுதான் அவர் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. எப்படியேனும் ஒரு தடவையாவது அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே விருப்பம் தான் அவரை இயங்க வைத்துக் கொண்டிருந்தது. அப்பா இருமும் சத்தம் கேட்டது. 

“இந்தாங்கோ மாமா, சுடச்சுட கொஞ்சம் கோப்பி குடியுங்கோ” 

சித்திராவின் குரல் கேட்டது. என்னால் தொடர்ந்து படுத்திருக்க முடியவில்லை. 

வெளியே விடிந்து கொண்டிருந்தது. கண்ணாடி யன்னல் வெளியே இயங்கத் தொடங்கிய காலை நேர கொழும்பு நகரம். 

ஒவ்வொரு நாளும் மனப்பாரத்துடன் விடியும் பொழுதுகள். 

அப்பாவின் அறையை எட்டிப் பார்த்தேன். 

கட்டிலில் அமர்ந்தபடியே மெல்ல மெல்ல கோப்பியை குடித்துக் கொண்டிருந்தார். 

அவரைப் பார்க்க கவலையாக இருந்தது. 

சோர்ந்த முகமும் நரைத்த முள்ளுத்தாடியுமாக அப்பாவின் மிடுக்கு கம்பீரம் எல்லாமே அவரை விட்டுப் போய்விட்டது. 

அப்பா எழுந்து ஷேர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். 

“தம்பி, நான் போய் பேப்பர் வாங்கிக் கொண்டு வாறன்.” 

கதவு திறந்து செருப்புப் போட்டுக் கொண்டு வெளியே போனார். 

ஒவ்வொரு நாளும் விடிந்ததும் விடியாததுமாக போய் பேப்பர் வாங்கி வந்து விடுவார். அதில் வரும் வன்னிச் செய்திகளை வரிவிடாமல் வாசிப்பார். இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் என்று வரும் பெயர்களைத் தேடித் தேடிப் பார்ப்பார். எத்தனையோ இழப்புகளின் விபரங்கள் வெளியே அறியப்படாமல் போக பத்திரிகையிலும் இணையத்தளத்திலும் வரும் பெயர் விபரங்கள் மிகவும் குறைவுதான். 

அதையும் தேடிப்படிக்கும் அவரது அந்த நேரப் பதற்றத்தை பார்ப்ப மனது வலிக்கும். பாரதியை அவள் குடும்பத்தோடு எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு என்று கடவுளை மன்றாடுவது தவிர வேறு ஒரு வழியும் தெரியவில்லை. அப்படி ஒரு சந்திப்புத்தான் அப்பாவின் மனதை ஆறவைக்கும். குற்ற உணர்ச்சியிலிருந்து அவரை விடுவிக்கும். மிகுதிக் காலங்களை அவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழவேண்டுமெனில் அது நடந்தே தீரவேண்டும். 

தேநீர் குடித்து விட்டு நான் குளிக்க என்று எழுந்திருக்க தொலைபேசி அழைத்தது. எடுத்து காதில் வைக்க மறுமுனையில் பதற்றமான சிவநேசன் மாமாவின் குரல். 

“வவுனியாக்கு வந்த ஆட்கள் சொன்னதெண்டு பாலா இப்ப போன் பண்ணினான். என்னெண்டு நான் சொல்லுறது தம்பி…” 

“ஏன் மாமா, என்ன விஷயம்…” 

பயத்தோடு கேட்டேன். 

“பாரதியாட்கள் இடம்பெயர்ந்து தேவிபுரத்தில போகேக்க அந்த இடத்தில ஷெல் விழுந்து அதுகள் எல்லாம்…’ 

குரல் தடுமாறியது. 

“அய்யோ…. என்ன மாமா சொல்லுறீங்கள், பாரதியாட்கள்….” 

“ஓம் தம்பி… எல்லாரும் அதிலயே …” 

“என்ர கடவுளே…” 

நெஞ்சு தொண்டை வரை வந்து அடைத்து உடம்பின் இரத்தமெல்லாம் தண்ணீராய் குளிர்ந்தது போலிருந்தது. 

“பாரதி யோகேந்திரன் பிள்ளைகள் யோகேந்திரன் தாய் தகப்பன் எல்லாரும் அம்பிட்டுப் போச்சினமாம். ஓடிப்போன சனங்கள் தான் நிண்டு பக்கத்திலேயே குழிவெட்டி எல்லாரையும் அடக்கம் செய்து போட்டுப் போனதுகளாம். அதில எங்கட கோபாலும் ஓராள். அவன்தான் வவுனியாவுக்கு வந்திருக்கிறானாம். பாலாவைத் தூரத்தில கண்டு கத்திக்கத்திச் சொல்லி அழுதவனாம். நடந்து ஒரு கிழமையாச்சுதாம்.” 

“கடவுளே… இது என்ன கொடுமை மாமா…” 

நான் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டேன். 

வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. 

“அய்யோ… இன்னும் கொஞ்சநேரத்தில அப்பா வந்து விடுவார். பேப்பர் வாங்கி பிரித்துப் பார்த்து பெயர்களைத் தேடி இல்லை என்று ஆகி ஒரு தற்காலிக நிம்மதியோடு வரப்போகிறார். அவரிடம் இந்தச் செய்தியை நான் எப்படி சொல்லப் போகிறேன்…” அவர் இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்… 

கண்முட்டி வழிய அப்படியே உறைந்துபோய் இருந்த என் காதுகளில் அப்பா வாசலில் செருப்பு கழற்றும் ஓசை அறைந்தது போலக் கேட்டது. 

– 15.03.2009, தினக்குரல்.

– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *