ஒளிப்பொட்டின் விரிவு
கதையாசிரியர்: திசேரா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 324
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரசியற் கூட்டத்துக்கெனவேயான தனியான அலங்கரிப்புடன் மேடை திகழ்கிறது. மெல்லிய பாடலுடனும், இசையுடனும் மேடை திறவுபட கையில் சோதியுடன் குனிந்து நிற்கின்றான் பாரதி.
வெற்றி கூறச் சொல்லியும், வெண்சங்கை ஊதச் சொல்லி, கற்றவரால் உலகு காப்பாற்றப்பட்டதாகவும், பற்றைய அரசர் பழிபடு படையுடன் இருந்து, சொற்றை நீதியைத் தொகுத்து வைத்திருப்பது பற்றியும். விடிவு நெருங்குவதாகவும் சொல்லிச் சிலையானான். அவன் உயிருடன் இருந்து இறப்பு நிகழும் வரை இப்படித்தான் விடிவு பற்றியே கதைத்தான்.
விடியல் ஒன்றிற்கான குறியீடாய் அச்சேதியை வைத்திருந்திருக்க வேண்டும். சபையின் பின்புறப் பகுதியில் இருந்து வந்தவர்களின் கூச்சல் காதைத் துளைத்தது. எங்கள் தலைவர்” – ‘தங்கத் தலைவர்”, ‘எங்கள் தலைவர்” – ‘சொந்தத் தலைவர்” தலைவரைக் கண்டு கொள்ள முடியா வண்ணம் சூழ்ந்து கொண்டு அழைத்து வந்தார்கள். கழுத்தில் மாலையுடனும், அவர்களுக்குரித்தான வெள்ளை உடையுடனும் வருவது – கூட்டத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பினூடு தெரிந்தது. நிறங்கள் எல்லாவற்றினதும் சேர்க்கைதான் வெண்மையாம். அதனுள் எல்லா நிறங்களும் மறைந்து இருக்குமாம். அதனால் வேண்டிய வேளைகளில் தன்னுள் உள்ள நிறங்களில் ஒன்றை அல்லது இரண்டு மூன்றையேனும் காட்ட முடிகின்றதாம். எப்போதோ எனக்குச் சொல்லப்பட்டிருந்தது – பிரதானமாகக் கத்திக்கொண்டு வந்த தொண்டனும், கூட்டத்தை நெருங்கிக் கொண்டு வந்த காப்பாளனும், கைகளிரண்டையும் இடது புறமாக உயர்த்தி வணங்கிக் கொண்டு வந்த தலைவனும் மேடையிலேற கத்திக் கொண்டு கூட்டத்தினர் கீழே குந்திக் கொண்டனர். தலைவனது கண். சோதியில் குத்தியது. அவர்களுக்கு எப்போதும் அது பிடிப்பதில்லை. அவனுக்குப் பின்னிருந்த கறுப்பு உருவம் (அவனுள் இருக்க வேண்டியது) அதையணைத்து விட்டுப் போனது. தலைவன் சிரித்துக் கொண்டு தன் கண்களுக்கு சக்திகள் அதிகம் என்றான். காவலனிடம், கூட்டத்துக்கு நோட்டமிட வந்தவன் போல முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்த ஒருவன் ‘இவர்களுக்கு வேறு வேலை இல்லை” – என்னையும் முறைத்துவிட்டு அமர்ந்தான்.
மனிதர்களுக்கு முகங்கள் அதிகரித்த காலம். தலைவனாக இனங் காணப்பட்டவர்களுக்கு கட்டாயமாகவே பல முகங்கள் இருந்தன. மக்களுக்கு, தனித்துவம் காக்க, சொந்தத் தேவை கருதி சாந்த கோப -ஞான – சத்திய – காம எனப் பல முகங்கள் இருந்து கொண்டோ. தோன்றிக் கொண்டோ. தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டோ இருக்கலாம். அதனால் எல்லாமுமாய் அவன் உருவாக்கப்பட்டிருந்தான். “உங்களுக்காய் எதுவும் செய்வேன். நான் என்றால் நீங்கள் – நீங்கள் என்றால் நான், உங்களுக்கு வருபவை எல்லாம் எனக்கும் வருபவை, உங்கள் குடிசைகளை மாளிகையாக்குவேன், வீடுகளை வெள்ளிப் பாத்திரங்களால் நிரப்புவேன், தங்கத் தட்டில் உணவருந்த வைப்பேன்.” அடுக்கிக் கொண்டே போனான் மக்களுக்குச் செய்ய முடியாதவைகளை. மக்களுக்கோ பூரிப்பு, ரொட்டித் துண்டுகள் தங்கத் தட்டில் இருந்தது. தண்ணீர் வெள்ளிக் கிண்ணத்தில் இருப்பதைக் கண்டு பெருமை கொண்டார்கள்.
ஆனால் ரொட்டி, மாவும் தேங்காயும் இல்லாத ரொட்டியாகவே இருப்பது கூடத் தெரியாமல் கை தட்டினார்கள். பின்பு வந்தமர்ந்து கொண்டவன் எழுந்து நின்றான். அவனது முகம் கோபத்தில் விகாரமடைந்திருந்தது. என்னவோ கத்தினான். அவனது சத்தம் என்னையும் தாண்டி பின்புறம் நீண்ட தூரத்துக்குப் பயணித்தது, “கைதட்டித் தட்டி, கோசம் போட்டு ஏமாந்து போனவர்கள் நாம். அதனால் உயர்ந்தவன் அவன்”, இன்னமும் சொல்லி மக்களைத் திட்டினான். அவன் சொல்லியவைகள் கேட்கக்கூடிய வார்த்தைப் பிரயோகத்தில் இருந்தாலும் எனக்கு நினைவில் நிற்கவில்லை. குழப்பக்காரனாகத் தோன்றியதால் எல்லோரும் முறைத்தார்கள். – குறிப்பாக மேடையில் நின்றவர்கள் – தலைவரை, இழிவு படுத்துவதாய் எண்ணி தொண்டன் பொங்கினான். ‘நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டியவர்கள் தான் நீங்கள்” அது எல்லோரையும் அடக்கும் வார்த்தையாக மட்டுமில்லாமல், தாழ்த்தி இழிவுபடுத்துவதாகவும் பட்டது. அந்தச் சலசலப்பை தன்னை நோக்கி ஈர்க்க வேண்டி தலைவன் “உங்களுக்குச் குறைகள் இருக்காது. உணவும், வீடும், தொழிலும், வழங்கப்பட்டாயின” – “அவ்வளவு தானா” – “அவ்வளவு தான் எங்கள் தேவையா” கூட்டத்தில் பலர் கதைக்கத் தொடங்கி இருந்தார்கள். ‘வேறென்ன இருக்கிறது” தலையைச் சாய்த்துக் கொண்டான் தலைவன். அவனது கேள்வி எல்லோரையும் எழுப்பி நிறுத்தியது. ‘தலை”நகருக்குச் சென்ற மகனைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.’ – ‘சிதைக்கப்பட்ட என் மகளுக்கு நியாயம் வேண்டும்.” மகனைக் காட்டிய இன்னொருத்தி ‘இவனின் தந்தை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எனத் தெரியவில்லை.” என்றாள். ‘என் கடை கொள்ளையிடப்பட்டது. வீடு எரிக்கப்பட்டது. நட்ட ஈடு ஏதுமில்லை.” மாறி, மாறிப் புலம்பினார்கள். நிம்மதியைத் தொலைத்துவிட்டுச் சோகத்துடன் வாழ்வதாய்த்தான் சொன்னார்கள். இப்படி நிறையவை பேசவும், எழுதவும் முடியாமல் கட்டிப் போடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
இதற்குரிய முடிவுகளைச் சொல்ல முடியுமா? என்றான் குழப்பக்காரன். ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்தவனுக்கு முகம் மாறியது. தலைவனை எதிர்த்ததாலாக இருக்கலாம். “நீ கதைப்பது பற்றியும், யாரிடம் என்பது பற்றியும் அறிவாயா? – புரிந்துதான் கதைக்கிறாயா?” – “கொள்ளைக்காரனிடம் என்பதும், நீங்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்பதும் கூட” கீழிருந்தவனுக்கு வாய் நீண்டு விட்டதாய், தொண்டன் கத்தினான். “நான் யாரெனக் காட்ட வேண்டுமா?” எனக் கைகளை மூடி இருந்த சட்டையின் கைகளை மடித்தது கண்டு கீழிருந்தோர் சத்தமிட்டனர். “ஏய்” கூட்டுச் சத்தம் அவனதை விட பல மடங்கு கூடியதாகவும் இருந்தது. ஒன்றுபட்டு விட்டதையும் காட்டியது. கோபத்தில் ஆடினார்கள். கூத்துமுறையை ஒத்திருந்த ஆட்டத்துடன், உரிமைகள் வேண்டுவதாயும், நினைத்ததைப் பேசிட வேண்டியது பற்றியும், கைகள் ஓங்கிடவும், நாட்டைச் சுற்றி வரவும், சுதந்திரமாய் எங்கும் திரிந்திடவும் வேண்டுமெனவும் பாடினார்கள்.
அடக்கப்பட்டிருந்தவர்கள் தீடீரென எழுந்து கொண்டார்கள் என்பதை விட, கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டதாகவும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவுமே பட்டது. அருகில் வெற்றிலையைக் குதப்பி காவியேறிய பற்களுடன் இருந்தவன் எனைத்தட்டி ‘ஏன் ஆடுகிறார்கள்” என்றான். அவனுக்கு பூரணத்துவமாய் விளக்கி முடிக்கவும், உடலியல் மொழிக்கூறுகளை எடுத்துரைக்க காலத்தின் போதாமையையும் உணர்ந்து கொண்டு கோபத்தில் ஆடுகிறார்கள்” என்றேன். மாண்புறும் மக்கள் வீறுடன் எழுந்ததாகவும், பகைமையை ஓட்டி சுதந்திரம் பெற்று வாழ்ந்திட எழுந்ததாகவும் தோன்றியது.
“அது ஒன்றும் கடைச்சரக்கல்ல எனவும், எல்லோருக்கும் கொடுக்கக் கூடியதுமல்ல, அதுவும் உங்களுக்கென கண்களை சிவப்பாக்கி. பல்லைக் கடித்து அசையாது நிற்க, பாரதி அசைவு கொண்டு என்று தணியும் இந்தச் சுதந்திரத்தாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம், என்றெம் இக் கை விலங்குகள் போகும். என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்” என்ற கவலையுடனே அசைவற்றுப் போனான்.
மக்கள் புலம்பத் தொடங்கினார்கள். தீராத கவலைகள் பற்றியும், சந்தோசித்து வாழக் கிடைக்காத வழி பற்றியும் புலம்பும் போது தான் ஒருவன் “ஆண்டான்கள் அழிபடும் போதும், அடிமைத்தளைகள் விடுபடும்போதும், சம உரிமை பெறப்பட்டு சந்தோசம் கிடைப்பதாய்ச் சொன்னான். அவன் சொல்லியது அவர்கட்குப் புரிந்தது. முகங்கள் முன்னை விடவும் அகன்றது. ‘நாங்கள் யாருக்கும் கீழானவர்களல்ல” கோஷித்து மேடையில் ஏறத் தொடங்கினார்கள். கீழே இறங்காவிட்டால் தலையைச் சுட்டுப் பொசுக்கி விடுவதான காவலின் எச்சரிப்பையும் மீறி “தலைகளுக்குப் பயந்தவர்களல்ல நாங்கள்” என ஏறினார்கள். ஒவ்வொருவராய் ஏறும் போது அவர்களது பாதங்கள் முகத்தில் வைக்கப்பட்டது போல தலைவனின் முகம் சுருங்கிக் கறுத்தது. “ஏய் அடிமைகளே” உரக்கக் கத்தினான். இயலாமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தம் பெருத்திருந்தது. பின்னுக்கு ஒழிந்திருந்த கருத்த உருவத்தின் உறுமல் பயங்கரத்தை உண்டாக்கியது. இன்னமும் சத்தமாய், கொழுப்பெடுத்து ஒற்றுமையில்லாமல் காட்டிக் கொடுப்பது பற்றியும் திட்டினான். “சாதிகளைக் காட்டி சங்கம் அமைத்தது நீ” “சாதிகளைக் காட்டி பிணங்களைக் குவித்ததும், உண்டியலுக்காய் கோயில்களை அமைத்ததும் நீங்கள் தான்” பொறுமினார்கள். இன்னொருவன் “உங்கள் சாதியினருக்கு மட்டும், இந்தாவென எல்லாவற்றையும் வாரி வழங்கி எங்களை ஏய்க்கின்றீர்கள்.” “இவைகளைக் கதைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. முதுகெலும்பு அற்றவர்களே, நீங்கள் வந்தேறு குடிகள். எங்களைச் சுற்றும் கொடிகள்” குறுக்கிட்டுக் கத்தினான் தொண்டன். கூட்டத்திலிருந்து முன்னே பாய்ந்தான் ஒருவன். – தொடக்கத்திலிருந்து இவனே தான் கதைத்திருந்தான். இங்கு நடப்பவையெல்லாம் நிஜமாய் இருந்தால் நாளை இவனைப் பார்க்க முடியாதே என்ற கவலை எனக்கிருந்தது, நரம்புகள் கூட புடைத்திருந்தது கைகளில் அதைத்தெளிவாகக் கண்டேன்.
“கொடிகள் படர்ந்து நிலத்தை மூடி விடுவதையும், திரண்டு மிடுக்காகும் அடம்பன் கொடியையும் உதாரணப்படுத்தினான். அவர்களால் திரள முடியாது. காட்டிக்கொடுத்து அழியக் கூடியவர்கள் தலைவன் சிரித்தான். கோபம் அதிகமாகி எழுந்தார்கள். (நெஞ்சை நிமிர்த்தினார்கள்.) “நீ பல முகங்களைக் கொண்டவன், எங்களுக்கு சாந்தமானதை மட்டும் காட்டுகின்றாய், உன்னுடைய கோரத்துவம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தது தவறு, அதன் தாண்டவமும் தெரியும்” . “எச்சங்கள் இன்னமும் இருக்கின்றன.” – தலைவனது கோபம் பின்னிருந்த உருவை ஆடப் பண்ணி வெளியே இழுத்தது. கடித்துக் குதறி விடுவது போல நெருங்கி கத்தி ஆடியது.
“சாதியின் அரசன் நானே – நானே
உங்களை ஆட்டிட வந்தேன் -வந்தேன்.
பூவுலகெங்கும் சாதியை நாட்டி
உங்களைப் பிரித்திட வந்தேன் – வந்தேன்.
வர்க்கத்தின் அரசன் நானே – நானே
வக்கிரம் தீர்த்திட வந்தேன் – வந்தேன்”
சுயத்தைக் காட்டிவிட்டு பின்னே சென்று ஒழித்துக் கொள்ளவில்லை. தலைவனுக்குப் பக்கபலமாய் இடுப்பில் கைவைத்து “அடிமை வேலையே சரியானது. ஈனமான உங்களுக்கு உகந்தது. நாடு காக்க ஞானமில்லாதவர்கள்” எனத் துரத்தினான். போக மறுத்துக் கொண்டு மனிதர் தோளில் மனிதர் ஏற முடியாதெனவும், சமமாய் வாழ வேண்டுமெனவும் கோசமிட்டனர். கத்தி அடக்க முனைந்தான் தலைவன். ‘கொடுத்து விட முடியாது. பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை உங்களுக்கு, ஊத்தை பட்டுக் கிடைக்கும் எனது காலை, நாக்கை நீட்டி நக்கித் துடைக்க வேண்டியவர்கள் நீங்கள்” “அதற்கு நாங்கள் இருக்கின்றோம் என நினைத்துக் கொண்டிருக்கின்றாய். அது கனவு, விழித்துக் கொள் எங்களது கால்களை நீ துடைப்பது பற்றி ஆட்சேபனை இல்லை. நாக்காலா? கைகளாலா? என்பது உன் விருப்பம்” குனிந்து கொண்டும், முகத்தை சுழித்தும் நாக்கை நீட்டி அழகாய்ச் சொன்னான் ஒருவன், “உதிரத்தை வியர்வைத் துளிகளாக்கி தோலினூடு வெளியேற்றியவர்கள். இனினும் உன் விருப்பின் கீழ் அடக்க முடியாது.”
அவர்களுக்கு உண்மைகள் எல்லாம் புரிந்திருந்தது. யானைகளைப் போல இழைக்கப்பட்ட கொடுமைகளை ஞாபகத்துள் வைத்திருந்தார்கள். கொடுமைகளிலிருந்தும், சித்திரவதைப்பட்ட வாழ்க்கையில் இருந்தும் வெளியேற் வேண்டுமென்பதில் உறுதிப்பட்டிருந்தார்கள். இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனைப் போலவே பாரதிக்குக் கூட சந்தோஷமாய் இருந்தது. நான் மனிதனாய் இருந்து பேச நினைத்துப் பயந்ததை சிலையாய் நின்றவன் பேசினான். யுகப் புரட்சியொன்று எழுந்ததாகக் கூறி சந்தோசத்தைக் காட்டியவன், அப் புரட்சி பற்றியும் எதிர்வு கூறினான். “கொடுங்காலன் அலறி வீழ்வான், பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமல் கண் புகைந்து மடிந்துபோம். வையகத்தீர் புதுமை காணீர்” என்றான். ஆனாலும் தலைவன் இழகிப் போவதாக இல்லாமல் வீரியத்தைப் பற்றிக் கதைத்தான். உருவம் உறுமியது. “நான் சக்தி – பலம் வாய்ந்த சக்தி” எனவும், “உங்கள் எல்லோரையும் விழுங்கிவிடப் போகின்றேன், நீங்கள் அடிமைகள், உங்கள் இரத்தம்.” – நாக்கை நீட்டி விழுங்கிக் கொண்டு ‘என் தாகம் தீர்க்கும் பானம்” பயங்கர சத்தத்துடன் சிரித்தது. அதன் வாய்க்குள் இரத்தச் சிவப்பு தெரிந்தது. நெடியும் அடித்திருக்க வேண்டும். பல் ஈறுகளில் சதைத்துண்டுகளும் சிக்கிக் கொண்டிருக்கலாம். அவர்களுள் ஊடாடி இருந்த கோபம் இன்னமும் அதிகரித்திருந்தது. சலுகைகள் வேண்டாம். உரிமைகளைப் பெற விழித்தெழச் சொல்லி மேடையை அதிரச் செய்தார்கள். – எப்போதும் இது தான் நிகழ்ந்தது. தரவேண்டியதில் பத்திலொரு பகுதியை இரகசியமாகக் கொடுத்து பத்திரப்படுத்தக் கூறுவார்கள். அது பாராட்டித் தரப்பட்டதாகவோ தலைவரின் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதாகவோ எண்ணிக் கொள்வதற்கு – சோர்ந்து வீழ்ந்து கிடந்த காலம் போனது. மிரட்டலுக்குப் பணிந்து இனியும் வாழ முடியாது” எனக் கூவினான் ஒருவன். அவர்களுள் கூனிக் குறுகி கிடந்தது எழுச்சியுற்றதாய்க் கண்டேன். இப்படித்தான் இருக்க வேண்டும்” நிமிர்ந்து அமர்ந்து கொண்டு “விடக்கூடாது இவர்களை ஒழிக்க வேண்டி இருக்கின்றது” – “முடியுமா” என்றேன். “எதையும் முடியாதெனக் கூற முடியாது” என்றான், பக்கத்தில் இருந்தவன். ஒன்றாய் இணைந்திருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாமாம், உலகத்தைக் கூட அடக்கி விடக் கூட முடியுமாம்” என்றான். அடிமைத்தளைகள் போய் கொடுங்கோலாட்சி முடிந்ததாம். மேடையில் இருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் சொன்னான். எல்லோராலும் எழுந்து நிற்க முடியும் என்றும் சொன்னான். மனது சம்மந்தப்பட்டதாய் இருக்கும் அனேகமானவர்கள் உணர்ச்சிவசத்தில் தான் நின்றார்கள். இருப்புக் கொள்ளாமல் முன்னிருந்தவன் எழுந்து உடலைச் சரி செய்து விட்டு அமர்ந்து கொண்டான். மனதுக்குள் முணுமுணுத்த ஒலிகளும், குறிகளும் அவரவர் முகங்களில் தெரிந்தது, பாரதி நின்று கொண்டிருக்க முடியாமல் பீடத்திலிருந்து குதித்தான். அதிகமாய் உணர்வு கொள்பவன்தானே –
‘மாசக்தி – மக்கள் சக்தி
திரண்டெழுந்தது.
சிறு துளியொன்று
பெருந்தீயாய் ஆனது இனி,
வெந்து தணியும் இந்தக் காடு”
கண்கள் அகலித்திருந்தது. கோபத்தில் நிற்க முடியாமல் மக்களையும் கூட்டுச் சேர்த்து ஆடினான். பயமெனும் பேயை விரட்டி பொய்மைப் பாம்பைக் கொன்றுயிரைக் குடிப்பதாகவும், அடிமைத்தளையை அழித்து நல்லறிவுடைய வித்தை வளர்த்திடுவதாகவும், மக்களெல்லாம் ஒன்று கூடி புரட்சி விதையதை நாட்டிடுவதாகவும் கூறி, கொடுங்காலர்களைச் சுற்றிச்சுற்றி ஆட, ஆண்டான்கள் குனிந்து சுருங்கிப் போனாலும் கறுப்புரு கூட்டத்தின் வெடிப்பால் வெளியேறி மாரைத்தட்டி நின்றான். ‘நான்” நிமிர்ந்துக் கொண்டு ‘நான் சாதிகளின் தலைவன் வர்க்கங்களின் அரசன் – கோரங்களின் சக்கரவர்த்தி அழிக்க முடியாது என்னை, யாராலும் முடியாது” இறங்கி ஓடி மறைந்தான் அவனையும் கொன்றிருக்கலாம் உண்மையாகாது – திரண்டெழுந்து தீயாய்மாறி சுட்டெரித்து விட்டதாகவும். ஒன்றுப்பட்டு வாழ்வோமெனவும் (கைகளை இணைத்து உயர்த்திக் கொண்டார்கள்) ஆண்டான்களை அடக்கி விட்டதாகவும் கூறிச் சந்தோசப்பட்டு நின்ற போது மூடிக் கொண்டது.
இப்போது யாரும் யாருக்குக் கீழேயும் குனிந்து கொள்ள விரும்புவதில்லை. உணர்ந்து கொண்டவர்கள் நிமிர சந்தர்ப்பம் தேடியவர்களுக்கு இது உரிய கணமாய்க் கூடத் தோன்றியிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் போகும் பாதை தென்பட்டாலும், அச்சம் காரணமாக வழிகாட்டிகள் தேவைப்பட்டார்கள். அல்லது சேர்ந்து போக எண்ணினார்கள். சேர்த்துக் கொண்டவன் தலைவனானான். ஆனால் காட்டப்பட்ட வழிகள் சரியானதென உறுதிப்படுத்த முடியாது. பலரது அபிப்பிராயமும் இதுவேயாக இருந்ததில் ஆச்சரியப்படவோ, கேள்வி கேட்கவோ முடியாதிருந்தது. அவைகள் முரடானது என்பதைக் காட்டிலும் கொடூரமானது என்பது உண்மை. சுயவளர்ச்சிகள் முன்னின்று கொண்டதால் மீண்டும் மீண்டும் முதுகுகளின் மீதே கால்கள் வைக்கப்பட வேண்டியிருந்தது. நிமிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அவ்வப்போது, குறிப்பாக ஐந்து வருடங்களுக்கொருமுறை வருவதால், மாரை நிமிர்த்திக் கொள்ள முடியும்.
நிஜத்துள் எங்கேயும் இப்படித் தீப்பற்றிக் கொண்டால் சந்தோசமாய் இருக்கும் நனவாக்கப்பட வேண்டிய தேவையாய் தோன்றிய உணர்வுடன் அரங்கிலிருந்து வெளியேறினேன்.
– ஐப்பசி 2001.
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.
| எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026