சிங்கக் குட்டிகளின் சொர்க்கம்
கதையாசிரியர்: திசேரா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 507
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விக்கிரமாதித்தன் சிந்திக்கத் தொடங்கினான். தலையை பிழிந்து கசக்கிக் கொண்டு யோசித்தான். ஊர்வசி, ரம்பை இருவரில் நடனத்தில் சிறந்தவர் யார் எனத் தீர்மானிக்கும் போதோ, வேதாளம் கேட்ட இருபத்து மூன்று கதைகளுக்குமான கட்டை அவிழ்க்கும் போதோ. இந்த மாதிரியாக மூளை குழம்பிப்போக யோசித்ததில்லை, தலை குழம்புவதிலிருந்து இது முக்கியமான கேள்விகளில் ஒன்றாய் இருக்குமென நினைத்தான். ஆனாலும் இந்த எண்ண வளர்வை நிறுத்தி சிங்கக் குட்டிகள் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
இறந்த உடல்களை சிங்கங்கள் ஒரு போதும் உண்பதில்லை. பசித்த புலிகள் புல்லைத் தின்னாதது போல இறந்த உடல்களை உண்ணாத சிங்கங்கள்தான் எல்லாம். அடைத்து வைத்திருக்கும் குட்டியாயினும் கூட அதற்கு இடும் இறைச்சியில் பச்சைரெத்த வாடை அடிக்க வேண்டும். அவ்வேளையில்தான் சொரசொரத்த நாக்கால் நக்கிப் பார்க்கும். இதெல்லாம் அவனுக்கு வேட்டைக்கு போக முன்பிருந்தே தெரியும். ஆனால் யார் சொன்னார் என்பதுதான் மறந்து போனது. இதனடிப்படையில் உயிருள்ளவைதான் சிங்கக் குட்டிகளின் சொர்க்கமாய் இருக்க வேண்டுமெனக் கருதினான்.
பெண் சிங்கங்களுடன் கூடிக்களித்தல்தான் சொர்க்கமாய் இருக்குமோவென எண்ணினாலும் அவை எப்போதும் வேட்டைக்கென அலைந்து கொண்டிருப்பதனால் காமுறுதலுக்கென காலவேளைதான் விதித்திருந்தன. பதுங்கி இருந்து ஏதாவதொரு விலங்கைத்துரத்தி, அடித்து உண்டு மகிழ்ந்து வயிறு புடைத்தன. அதைவிட சொர்க்கம் வேறெதிலும் இருக்குமோ? கிரிடத்தைக் கழற்றி வைத்துவிட்டு தலைகுழம்பிக் குழம்பிச் சிந்தித்தான். மயிர்களெல்லாம் கலைந்து போய் நெட்டாய் நின்றன.
அவனைப் பார்க்கும்போது வேதாளத்துக்குச் சிரிப்பாய் இருந்தது. சிங்கக் குட்டிகள் யாரையும் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை. கூராய் இறைச்சி கிழிக்கவென இருக்கும் வேட்டைப் பல்லும், வெட்டும் முன் பின் கடைவாய்ப் பற்களும் தெரிய அகன்ற செங்குகைபோல இருக்கும் வாயைத் திறந்து கர்ஜிக்கும், பயமுறுத்தும். சிங்கங்களை விடவும் அதை வளர்ப்பவர்கள் வீரபராக்கிரமங்களை மெச்சித் தள்ளினார்கள். குப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது பற்றியும், முதுகு நிலம் படாமை பற்றியும் பயத்தில் தலைதெறிக்க ஓடும் போதெல்லாம் தந்திரமான பின் வாங்கல் பற்றியும் கதை கதையாய்ச் சொன்னர்கள். அந்த வீரதீர சிங்கக் குட்டிகள்தான் விக்கிரமாதித்தனையும் குழப்பி இருந்தன.
விக்கிரமாதித்தனால் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தது. சொர்க்கம் என்பது மேலான இடமாக இருக்கும் அதை எவ்வின்பங்களும் மிஞ்சிவிட முடியாது. திரிசங்கு போல சிங்கங்கள் வானுக்கும், பூமிக்கும் இடையில் சொர்க்கமொன்றை நிர்மாணிக்கக் கூடியவையுமல்ல. அவற்றுக்கு விசுவாமித்திரர் போல உருவாக்கிக் கொடுக்கக் கூடிய மாமுனிகளுடன் நட்பும் இல்லை. அவற்றின் நட்பெல்லாம் வெறியர்களுடனேயே இருந்தது. அவற்றின் சொர்க்கம் பூமியில்தான் இருந்தது. அது எதுவென்பதுதான் பிரச்சினையாயிருந்தது. அவனுக்கோ சிங்கங்களைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஏமாற்றி கிணற்றுள் தள்ளிய கதையும், சாயத்துள் விழுந்தெழும்பிய நரி, கோர மிருகமாய்க் குகைக்குள் இருந்த சிங்கத்தைத் துரத்திய கதையுமே கண்ணுக்குள் வந்து குறுக்கிட்டது.
அவனால் முடியாமல் போனது. அவனால் மட்டுமல்ல அதுபற்றி அடிப்படை உணர்வில்லாத யாராலும் முடியாதுதான். சொர்க்கங்கள் எப்போதும் புலக்காட்சிக்குத் தெரியாதது. அதிலும் சிங்கங்களின் சொர்க்கத்தை அறிந்து கொள்வதென்பது இடியப்பத்தின் தொடக்கம் போலவேதான் இருந்தது.
“ஆனாலும் நீ செய்தது பிழையான வேலை நான் சிங்கமல்ல, மிருகங்களுமல்ல, வேடனுமல்ல, அரசன். நாட்டை நிருவகிப்பது என் தொழில். என்னிடம் சிங்கக் குட்டிகளின் சொர்க்கங்கள் எதுவென வெறுமனே கேட்டது எனை மடக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் உனக்குத் தலை தூக்கியது தானே காரணம்” எனக் கோபப்பட்டான் விக்கிரமாதித்தன். இயலாமையினால் எழுந்த கோபமாகக் கூட இது இருக்கலாம். வேதாளம் எதையோ யோசித்ததாய் சிரித்தது. தலையை ஆட்டிக் கொண்டது.
“பிழையை உணருகிறேன். ஆட்சி செய்பவர்கள் எப்போதும் மக்களைப் பற்றிச் சிந்திப்பது குறைவு தானே மன்னனே, நான் உன் விடயத்தில் அதை மறந்தது தவறு.”
“வேதாளமே என்னையும் அப்பட்டியலில் தானா சேர்க்கிறாய்”
“மன்னாதி மன்னா எனை மன்னிக்க வேண்டும். தங்களேன் காடாறு மாதம் நாடாறு மாதம் வாழ்கின்றீர்? இரண்டாயிரமாண்டு வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் தானே, காடாறு மாதப் பகுதியில் மக்களைப் பற்றிச் சிந்தித்தீரா? அது வேண்டாம். விட்டு விடுவோம். சிங்கக் குட்டிகளின் சொர்க்கத்திற்கு வருவோம். அதைப்பற்றிச் சொல்கிறேன் கேள். கேட்டு விட்டு பதிலிறுத்தாக வேண்டும். இல்லாமற் போகில் நானுனைவிட்டு முருங்கை மரத்திற்கே போய் விடுவேன்” எனக் கதையைச் சொல்லத் தொடங்கியது.
அண்டையிலுள்ள தீவில் சந்திரகுமார விஜயத்துங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியும், தன் ஆட்சிக்காலம் நீடித்திருக்க வேண்டுமென்ற நோக்கிலும் ஒரு படையை ஆக்கி வைத்திருந்தான். அது சிங்கக் குட்டிகளிலாலான படை, அவற்றை அவன் வளர்த்தெடுக்கக் காரணமும் இருந்தது. ஒரு சமயம் நட்புறவாட நம் தேசம் வந்திருந்த போது அவனைச் சந்தித்த ஒரு முனிவர் உனக்கும் உனது ஆயுளுக்கும் எந்த மனிதர்களாலும், தேவர்களாலும், அரக்கர்களாலும் கூட அழிவேற்படாது. ஆனால் விலங்குகளால் தான் அழிவு. அதில் சிங்கம் அடக்கப்படாது” என்றதும், நாடு திரும்பிய மன்னன் சிங்கங்களை மேலும் வலுவுள்ளதாக்கியதுடன், மேலும் சிங்கக் குட்டிகளைப் பெற்று பயிற்சி அளித்து வளர்க்கத் தொடங்கினான். பின்னர் அவற்றைக் காட்டிற்குள் இறக்கி ஏனைய மிருகங்களை வேட்டையாட வைத்தான். அந்நாட்டு மக்களுக்கு யானைகளில் பிடிப்பு இருந்ததனால் அவற்றை நேரடியாக அழிக்க முடியாமையினால் யாருக்கும் தெரியாமல் அவைகளை அழிக்கவென வேடர் கூட்டமொன்றையும் ஏற்பாடு செய்து அவ்வப்போது கொல்லச் சொன்னான். யானைகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல் இருக்கின்றதென பிரசாரம் செய்தான்.
அத் தீவின் காட்டில் இருந்த மிருகங்களுக்கு அதீத பலம் இருந்ததனால் சிங்கங்கள் நுழையும் போதெல்லாம் அவற்றைத் தாக்கியழித்தன. அவற்றின் தோல்வியைக் கேள்வியுற்று தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தமையினால், அவைகள் வெற்றியீட்டி வருவதாக மக்களுக்கு பறை சாற்றப்பட்டதுடன் ஏனைய விலங்குகளைக் கொல்ல வேண்டும் மென்ற மன்னனின் எண்ணத்துடனேயே மக்களும் இருக்க வேண்டும் மென விரும்பி சிங்கங்களைத் தவிர்ந்த மிருகங்களெல்லாம் பொல்லாதவை எனவும், அவற்றை அழிப்பதனால் நிம்மதி கிடைக்குமெனவும், ஒற்றர்களினுடாகச் செய்தியனுப்பி, மக்கள் மத்தியில் மன்னன் பரப்பச் சொன்னான். இராஜதந்திரிகளுக்கும், மந்திரிகளுக்கும், அரசனையும் அவனது செயற்பாடுகளையும் புகழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இல்லாவிடில் சிரச்சேதம் செய்யப்பட்டு விடுவோம் என்ற பயமும் இருந்தது. இதன் காரணமாக அவனையும், அவனது நடவடிக்கைகளையும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.
சிங்கக் குட்டிகள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே போனது. ஏனைய விலங்குகளினால் தாக்கி அழிபடும்போதும், தாக்கப்பட்டு காயமடையும் போதும். ஊரினுள் புகுந்து மக்களைக் குதறி, பிய்த்தெறிந்து இருப்பிடங்களைச் சின்னாபின்னமாக்கின.
இதுபற்றி மக்களாலும் அரச பிரதிநிதிகளாலும் முறையிடப்படும்போதெல்லாம், மன்னன் சிங்கக் குட்டிகளைத் தட்டிக் கொடுத்தான். பிடரியைத் தடவி “அவற்றுக்கு குறும்புதான்” என அவற்றின் வீரச் செயல்களை மெச்சினான்.
ஊருக்குள் சென்று மனிதச் சதையும், இரத்தமும் சுவைக்கண்ட சிங்கக் குட்டிகள் ஊருக்குள்ளேயே திரிய ஆரம்பித்தன. காட்டின் எல்லைகளில் முன்னங்காலை நீட்டி பின்னங்கால்களை பக்க வாட்டில் போட்டு ஒருக்கழித்துப்படுத்துக்கிடந்தவை ஊரின் மூலைகளிலும், வீடுகளிலும், பாடசாலைகளிலும் குடியமர்ந்தன.
ஆண்களை அதுவும் இளம் இளைஞர்களைத் தின்ன ஆரம்பித்தன. அவர்களின் இரத்தம் சூடாக இருப்பதனால் அவற்றை உறிஞ்சிக் குடித்தன. இதனால் பயந்து ஊர் இளைஞர்கள் ஓடினார்கள். காட்டுள் சென்று பாதிப்பேர் விலங்காகவும், மீதிப் பேர் விலங்குகளுடனும் வாழ்ந்தார்கள். யாருமில்லாத ஊரினுள் குட்டிகள் பெண்களின் சதைகளை ருசி கண்டன. இளம் பெண்களின் சதைகளை நக்குவதனால், காட்டு விலங்குகளின் பயத்திலிருந்து நிம்மதியாய் இருப்பதை உணர்ந்தன.
இவ் வேளையில் காட்டுள் நுழையாத சிங்கக் குட்டிகளைப் பார்த்திருந்து ஏமாந்த ஏனைய விலங்குகள் முதலில் இரவுகளிலும், பின்னர் பகலிலும் கூட ஊருக்குள் புகுந்து வேட்டையாடிப் போயின. ஆனாலும் சிங்கக் குட்டிகளோ இளம் பெண்களைப் போகிப்பதில் அலாதி இன்பம் கண்டன. இளம் பெண்களை ருசி கண்ட குட்டிகள் அதிலேயே திளைத்திருந்தன.
ஏனைய விலங்குகளின் படையெடுப்பால் அழிந்து கொண்டிருக்கும் சிங்கக் குட்டிகளின் படைக்கு புதிதாய்ப் பல குட்டிகளை இணைத்துக்கொள்ள யோசித்த சந்திரகுமார விஜயதுங்க மன்னன் மந்திராலோசனைக் குழுவை ஏற்பாடு செய்தான். தன் கவலை குறித்து அவர்களிடமும் சொல்லி ஆலோசனை கேட்டான்.
விலங்குகளின் தாக்குதலால் கால்பாதிக்கப்பட்டு முன்னைய தனது வீர கம்பீர நடையை இழந்து மூன்றாவது காலுடன் நடந்து கொண்டிருந்த மந்திரி அனுருத்தன் “விலங்குகளை அடக்க சிங்கக் குட்டிகளின் வீரதீரச் செயல்களைக் கூறிப்பறை சாற்றுவோம். மக்களிடமுள்ள சிங்கக் குட்டிகளை காட்டுக்கு அனுப்புமாறு கேட்போம்” என்றான்.
அந்த ஆலோசனையின்படி குட்டிகளின் பாராக்கிரமங்கள் பறைசாற்றப்பட்டன. சந்தோஷத்தில் வண்டிகளில் பயணிக்கும் சிங்கக் குட்டிகள் பெண்களைக் கண்டு குதூகலிப்பதாகவும். இயல்பாக வேலைகளில் ஈடுபட்டிருக்கும் குட்டிகள், பெண்களைக் கண்டு அதிர்ச்சி இன்பம் பெறுவதாயும், விளையாடிக் கொண்டிருக்கும்போது பெண்களைக் கண்டு நாக்கைத் தொங்கவிட்டு உமிழ்நீரை வடியவிடுவதாயும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஊருள் கிடந்த குட்டிகள் படையெடுத்துப் போயின. சில அவை இறக்கவெனப் போவதாகவும் காட்டு விலங்குகளுக்கு பலம் அதிகம் என்று கூறிப் பேசாதிருந்தன.
மன்னாதி மன்னா, வீரம், அறிவு, புகழ் நிறைந்த விக்கிரமாதித்தனே! இப்போது சொல். சிங்கக் குட்டிகளின் சொர்க்கம் எது? ‘இதில் சிந்திக்க என்ன இருக்கிறது. பெண்கள்தான்” என்றான் விக்கிரமாதித்தன். சந்தோசப்பட்ட வேதாளம் ஞானசீலனின் வஞ்சக வலையிலிருந்து விடுபடுவதைச் சொல்கிறேன் கேள். ஞானசீலன் குனிந்து காளியை வணங்கச் சொல்வான். நீ அவனை வணங்கி காட்டச் சொல். அவ்வேளையில் அவன் தலையை வெட்டி ஓம குண்டத்தில் போடு. அப்போது உன் வரத்தைக் கேள்.” என்ற வேதாளம் திருப்பிக் கேட்டது.
“நீ காளியிடம் என்ன வரம் கேட்பாய்” விக்கிரமாதித்தன் சொன்னான்.
“அந்தத் தீவு மக்கள் பாவப்பட்ட ஆன்மாக்கள். அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு நலமாய் இருக்க வேண்டுமெனக் கேட்பேன்.”
பாவம் காளி என முணுமுணுத்த வேதாளம், எதுவும் பேசாமல் அவன் தோளிலேயே கிடந்தது.
– ஆவணி 2001.
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.
| எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026