ஒரு கிராமம் அழிந்து போகிறதா?
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 36
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை நான்கு மணிக்கே கண் விழித்துக் கொண்டான் மணிகண்டன். உண்மையில் இரவு முழுதும் அவன் தூங்கவில்லை. தானாக கண் அயர்ந்து போகும்போது அவனுக்கு விழிப்பு வந்து கொண்டே இருந்தது. அப்படிதான் நான்கு மணிக்கும் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் இருக்கிறது. வழமையாக அவன் பத்துமணிக்குள் தூங்கி காலை ஆறுமணிக்கு எழும்பிப் பழக்கப்பட்டவன். நேற்று இரவு அவன் தூங்காமல் உழன்றமைக்கு என்ன காரணம். லண்டனிலிருந்து “கைகொடுப் போம்” அமைப்பினால் அவனுக்கு வந்திருந்த அலைபேசி அழைப்புதான்.
அதை மணிகண்டன் உள்வாங்கிக்கொண்டபோது மயக்கம்போட்டு விழாத குறையாகவே இருந்தான். ஒரு கிராமம் தன் இருப்பையும், தனது மக்களின் உயிர்களையும் இழந்து கொண்டிருப்பதாக லண்டன் கைகொடுப்போம் நெறியாளர் அவனுக்கு செய்தி சொன்னார்.
அத்தோடு உடனே அங்கு சென்று என்ன நிலையில் மக்கள் இருகின்றார்கள்? அவர்களது பிரச்சினை என்ன? அவர்களுக்கு எந்த வகையில் கைகொடுப்போம் உதவலாம் என்ற செய்திகளை ஆதாரத்துடன் அனுப்பச் சொல்லியிருந்தார்
மணிகண்டன் மூதூர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஒரு நேர்மையான பணியாளன். அதே நேரம் மூதூர் பிரதேசத்தில் இயங்கும் கைகொடுப்போம் செயற்பாட்டாளராகவும் இருக்கின்றான். லண்டன் கை கொடுப்போம் அமைப்புக்கு கிடைத்த தகவலின் படி. மூதூர் செயலகப் பிரிவைச் சேர்ந்த வீரமாநகர் கிராமம் குடிநீர், இல்லாமலும், பாவனை நீர் பற்றாக்குறையாலும் பல இன்னல்களை அடைகின்றது என்றும். இருக்கும் ஒரு பொதுக் கிணறில் உள்ள நீரை பலர் பருகியதால் ஒரு சிலர் இறந்து விட்டார்கள் என்றும் திட்டவட்டமாக என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள அந்த பிரதேச கை கொடுப்போம் பிரதிநிதியின் தெளிவான அறிக்கை வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. உடனே அந்தக் கிராமத்திற்கு சென்று தங்களுக்கு உண்மைத் தகவலை அனுப்பி வைக்கும்படி லண்டன் கை கொடுப்போம் அமைப்பு மணிகண்டனை கேட்டிருந்தது. இந்த செய்தி மணிகண்டனை பாதித்திருந்ததால்தான் அவன் இரவு முழுதும் தூக்கமின்றி கிடந்தான். காலையில் வீரமாநகர் கிராமத்திற்கு சென்று,அங்கு மக்களிடம் உண்மைச் சம்பவங்களை கேட்டு அறியவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு உறங்கச் சென்றவன், நித்திரை வராமல் அவதியுற்று பின், ஒரு படியாகத் தூங்கி இப்போது நான்கு மணிக்கே கண்விழித்துக் கொண்டான்.
மணிகண்டன் வாலிபன். வீட்டில் தாய், தந்தை, இரண்டு சகோதரி களுடன் வாழ்கின்றான். போர்ச் சூழல் மத்தியில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்த குடும்பம்தான். மணிகண்டனுக்கு சிறுவயதிலிருந்தே தனது தமிழ் சமூகத்தின் நலனில் அக்கறை இருந்தது. போர்ச்சூழலில் தனது மக்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புகளையும்,தான் நேரிடையாக பார்த்த கொலைபாதகங்களையும் கண்டு. மனதில் ஓர் உறுதி எடுத்துக்கொண்டான். அது என்ன வென்றால் தன் மக்களின் மேம்பாட்டுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மனித நேயத்தோடு செய்யவேண்டும் என்ற உறுதிதான் அது. தனது பகுதியில் அவன் பலவிதத்தில் அவனால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளையும், செற்பாடுகளையும் நண்பர்கள் உதவியுடன் செய்திருக்கின்றான். இந்த நேரத்தில்த்தான் கடந்த வருடம் “கை கொடுப்போம் ” என்ற அமைப்பு கனடா, லண்டன், ஆவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து புத்திஜீவிகளினதும். மனிதநேய செயற்பாட்டாளர்களினதும் முயற்சியில், கிழக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக நலிவடைந்த மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவ முன் வந்து, மாவட்டரீதியில் நல்ல அறிவார்ந்த மக்களை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
நல்ல பல காரியங்களை இந்த அமைப்பு செய்வதை கண்டுகொண்ட மணிகண்டனும் கை கொடுப்போம் அமைப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டு இயங்கினான்.. இதுவரை திருமலை, மூதூர் கைகொடுக்கும் அமைப்பினர் நல்ல பல காரியங்களை செய்திருக் கின்றார்கள். கஷ்டப் பிரதேச மக்களின் சிறுவர் கல்வியிலும், உயர்தரக் கல்வியிலும் மிக அக்கறை எடுக்கொண்டு அவர்களுக்கான பலதரப்பட்ட உதவிகள், பிரத்தியேக வகுப்புகள், என்று வழங்கி வருகின்றார்கள்.இந்த அடிப் படையில்தான் நேற்று லண்டனிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
அது வீரமாநகர் பற்றிய செய்தியை சொன்னது. இது பற்றி சிந்தித்துக் கொண்டே அவன் இருந்ததால் அவன் முழுமையாக தூங்க வில்லை. காலையில் அந்த கிராமத்திற்கு அவன் செல்ல வேண்டும்.அதனால் நான்கு மணிக்கே எழும்பி விட்டான். இவன் எழும்பி லைட்டை போட்டதும், ஹாலில் படுத்து இருந்த மணிகண்டனின் தாயார் எழும்பி விட்டார். அவரும் நித்திரைக்கண்ணில் அழைத்தார்
“மணி, மகன் மணி என்ன லைட் எரிகிறது. நீ எழுபிட்டியா மனே.” அம்மா கேட்டா. மணிகண்டன் மற்றவர்களின் தூக்கத்தைக் குழப்பாமல் மெதுவாக எழுந்து வந்து தன் தாயாருடன் மெதுவாக பேசினான்.”அம்மா இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. அந்த வீரமாநகர் கிராமத்து மக்கள் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேனா என்னால தூங்க முடியல்ல. என்னம்மா குடிக்கும் தண்ணீர் பழுது பட்டதால் அதை குடித்த மக்கள் நோய்வாய்பட்டும், பெரியவர்களும் குழந்தைகளும் இறந்தும் இருக்கிறார்கள் என்று எண்ணும்போது எப்படியம்மா எனக்கு தூக்கம் வரும்? படுக்கையில் புரண்டு, பிரண்டு படுத்தேன் முடியல்ல அதுதான் எழும்பிட்டேன்.”
“சரி ஒன்றும் யோசிக்காத மகன். காலையில போய் அந்த கிராமத்தை பார்த்திட்டு வா. இன்று சனிக்கிழமைதானே லீவு நாள். ஆறுதலாக அந்த மக்களோடு கதைத்துப் பேசி அவர்களின் குறைகளை கேட்டுக்கொண்டு வா”
“ஓம் அம்மா அந்தக் கிராமம் இங்கிருந்து பலமைல்கள் தூரத்தில்தான் இருக்கிறது. நான் ஒருக்காலும் அங்கு போனது கிடையாது. விசாரித்துக் கொண்டுதான் செல்லவேண்டும்”
“அது இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து மைல்கள் தூரத்தில் இருக்கும். புதர்களும், பற்றைகளும், மரங்களும் பார்த்த இடமெல்லாம். இருக்கும். நானும், உன்ர அப்பாவும் அங்கு ஒரு அலுவலுக்காக எப்பவோ ஒரு முறை போய் வந்திருக்கிறோம். சரி. நான் உனக்கு ஏதும் சாப்பாடு செய்து தருகின்றேன். காலையில் சாப்பிட்டுவிட்டு போயிட்டுவா. தனியப் போகாத. யாரையும் துணைக்கு கூட்டிக்கொண்டு போயிட்டு வா.” என்ற மணிகண்டனின் தாய் சத்தமில்லாமல் எழுந்துகொண்டு சமையலறைக்குள் சென்றார்.
காலை எட்டுமணிக்கெல்லாம் மணிகண்டன் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டான். தனது இருசக்கர மோட்டார் வண்டியில் தன் நண்பன் இந்திரன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். இந்திரனும் கை கொடுப்போம் செயற்பாட்டாளர் தான். அத்தோடு அவன் புகைப்படக் கலைஞனும் கூட. எங்கு செல்வ தானாலும் மணிகண்டன், இந்திரன் இல்லாமல் செல்வது கிடையாது. இந்தக்காலத்தில் எந்த விடயத்திற்கும் ஆதாரங்களும், அத் தாட்சிகளும் முக்கியமல்லவா? அதுவும் இன்றைய இந்த டிஜிடல் உலகில் எல்லோரும் எந்த நிகழ்வுகளுக்கும் ஆதாரங்களை எதிர்பார்ப்பார்கள்.
முகநூல், வாட்ஸ் அப், என்ற சமூக பொது வலைத்தளங்கள் இன்று உடனுக்குடன் செய்திகளை, கருத்துப் பரிமாற்றங்களை செய்ய வசதியாக இருக்கிறதல்லவா? ஆகவே இந்திரனின் பங்கும் எமது சமூகத்திற்கு இன்றியமையாததொன்றே
மணிகண்டன் ஏலவே பேசிவைத்திருந்தபடியால் இந்திரன் தயாராக இருந்தான். மணிகண்டனின் மோட்டார்சைக்கில் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றதும் தனது கைப்பையுடன் வெளியே வந்து சைக் கிளின் பின்னல் ஏறிக்கொண்டான். மணிகண்டன் அவனுக்கு முன்னால் இருந்த தலைக் கவசத்தை எடுத்துக் கொடுத்தான். அதை அவன் போட்டுக்கொண்டதும் மோட்டர் சைக்கிள் வீரமாநகர் நோக்கி சென்றது. பிரதான வீதியால் ஏழெட்டு மைல்கள் பயணித்தபின் வீதியோரக் கடையொன்றில் வீரமாநகருக்கு போகும் பாதையை கேட்டு அறிந்து கொண்டார்கள். கடைக்காரன் சொன்ன தகவலின் படி மேலும் ஒருமைல் பயணித்தபின், கடைக்காரன் சொன்ன பாலம் தென்பட்டது. பாலத்தையொட்டி இடதுபக்கம் இருந்த கிறவல் பாதையால் வண்டியை திருப்பிவிட்டான் மணிகண்டன். அந்த பாதைதான் வீரமாநகர் செல்லும் பாதை. ஒரே மேடும். பள்ளமுமாக இருந்தபடியால் மெதுவாகவே பயணிக்க முடிந்தது. மணிகண்டனின் தாயார் சொன்னமாதிரியே எங்கும் புதர்களும். பற்றைகளும் பாதையின் இரு மருங்கிலும் இருந்தன. வரட்சியான பூமி. ஒன்று இரண்டு குடிசை வீடுகள் தென்பட்டன.
மக்கள் நடமாட்டம் இல்லை. நாய்கள் இரண்டு மூன்று குரைத்துக் கொண்டு சைக்கிளின் பின்னல் வந்துகொண்டு இருந்தன. எதிரே ஒரு பெரிய ஆலமரம் தெரிந்தது. அதன் பின்புறத்தில் பல வீடுகள் காணப்பட்டன. ஆலமரத்தடியில் சிலர் நின்றுகொண்டு இருந்தார்கள். மரத்திற்கு கீழே சிலர் அமர்ந்திருந்தார்கள். மணிகண்டன் வண்டியை நிறுத்தினான். பின்னாலிருந்த இந்திரனும் தன் கைப்பையுடன் இறங்கி தலைக்கவசத்தை கழற்றிக்கொண்டு. முன்னால் நின்றுகொண்டு இருந்த ஒருவரை அணுகி கேட்டான்.
“அண்ணே இது வீரமாநகர் தானா அல்லது இன்னும் முன்னால் செல்லவேணுமா”
“இதுதான் வீரமாநகர். முக்கியமாக எல்லோரும் கூடும் இடம்… நீங்க யாரு எங்கிருந்து வாறீங்க” என்று அவர் கேட்கும்போதே மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வந்துவிட்டான் அவனே பதில் சொன்னான்.
“நாங்க மூதூரிலிருந்து வருகின்றோம். வீராமாநகர் கிராமம் பற்றி அறியவேண்டும்”
“இதுதான் வீரமாநகர்,பேரில்தான் வீரம் இருக்கு மற்றபடி இது சோரம் போன கிராமம் எங்கு வந்தீங்க? எதற்கு வந்தீங்க?” எழுபது வயது மதிக்கத்தக்கவர் கேட்டார்.
“நாங்கள் இங்குள்ள மக்களை சந்தித்துப் பேச வேண்டும் ஐயா. எங்களுக்கு உதவ முடியுமா?”
“என்ன பேசப்போறீங்க.. எதைப்பற்றிப் பேசப் போறீங்க? நாங்கெல்லாம் மனிசர்களாக தெரியவில்லை. அரசாங்கதிற் கும், அரசியல் வாதிக்கும். இந்த கிராமத்தில் நாளுக்கு ஒருத்தர் செத்துக்கொண்டே இருக்கிறார். எங்கட குஞ்சுகுரால்களும் செத்துமடியுது. “என்றவர் தொடர்ந்து பேசமுடியாமல் விம்மினார்.
“ஐயா இதுபற்றி விசாரித்து அறியவே நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் விபரங்கள் தேவை” மணிகண்டன் பேசிக்கொண்டு இருக்கும்போதே இன்னும் பல ஆண்களும் பெண்களும் அங்கு கூடிவிட்டார்கள். அவர்களில் வறுமையின் சாயல் தெரிந்தது. ஒட்டிய வயிறு உலர்ந்துபோன தலை முடி. அழுக்கான உடை. இப்படியான தோற்றகளுடன் இருந்தார்கள். அவர்கள் முதல் பேசிய பெரியவருக்கு பின்னால் நின்றுகொண்டார்கள். அதில் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் கேட்டார்.
“யார் தம்பி நீங்க என்ன விசயமாக வந்திருக்கீங்க இங்கு ஒருவரும் வருவதேயில்லை அதுதான் கேட்கிறேன்
“அண்ணே என் பெயர் மணிகண்டன். இவர் இந்திரன். நாங்கள் மூதூ ரிலிருந்து வந்திருக்கின்றோம் இந்தக் கிராமத்திலிருக்கும் பிரச்சினை கள் பற்றி கேள்விப்பட்டோம். அதை பற்றி சற்று விரிவாக அறியவே வந்திருக்கின்றோம். எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா”
“பிரச்சினை கேட்டு என்ன பண்ண போறீங்க? குடிக்கக் கூட தண்ணி இல்லாம கஷ்டப்பட்டு எங்கட புள்ளைபுட்டிகள் சாகிறதே யாரும் கண்டுகொள்ளவில்லையே”
“மாமா நீங்க கொஞ்சம் சும்மா பதட்டப்படாமல் இருங்க. அவங்க ஏதோ கேட்டு விசாரிக்க வந்திருக்காங்க. முதல்ல கேட்போம். அவங்க யாரு என்ன விசாரிக்க வந்தார்கள் என்று?” அங்கு நின்ற ஒரு பெண் பேசினார்.
அதை அவதானித்த மணிகண்டன் அந்தப் பெண்ணிடமே கேட்டான். “நீங்க சொல்லுங்கம்மா உங்கள் குறைகள், இங்குள்ள பிரச்சினைகள். இந்த கிராமத்தில் எத்தனைபேர் இருக்கிறார்கள்? என்று. நாங்கள் அறிந்தவரையில் இங்கு குடிநீர் இல்லாத பிரச்சினை இருக்கிறதாம். பலர் இறந்துகொண்டு இருக்கிறார்களாம். இது பற்றி அறிந்துகொண்டு உங்களுக்கு உதவலாம். சொல்லுங்க இது உண்மையா?”
அப்போது இன்னுமொரு மோட்டார்சைக்கிள் அங்கு வந்து நின்றது. அதைக்கண்டதும் முன்பு பேசிய பெண் சொன்னாள் அவர்தான் எங்கள் விதானையார் என்று. அவர் வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு பேசினார்.
“என் பெயர் தாமோதரம். இந்தப் பகுதிக்குரிய கிராம அதிகாரி. இந்த வீரமாநகர் கூட என்னுடைய பகுதிக்குள் வருகிறது. இவர்களிடம் நீங்கள் கேட்டதுபோல் இங்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. இங்கு இருநூற்றி முப்பது குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு ஒரேயொரு பொதுக்கிணறு உள்ளது. அதில் உள்ள தண்ணீர் குடிக்க நல்லதல்ல. அதைக் குடித்ததால்தான் பலர் இறந்து இருக்கிறார்கள். பலருக்கு கிட்ணி பாதிக்கப்பட்டு செயலிழந்து போய் உள்ளன. பல சிறுவர்கள் அந்த அசுத்த நீரை பருகியதால் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள்.!”
“குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள் கிராம அதிகாரி என்ற வகையில் நீங்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?”
“அதுதான் சொல்லவாறன். கிராம அதிகாரி என்றவகையில் இதுபற்றி மூதூர் பிரதேச செயலகத்திற்கும். பிரதேச சபைக்கும் அறிக்கை சமர்ப்பித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகாதார திணைக் களத்தின் அதிகாரிகளுக்கும் இதுபற்றி அறிவித்தேன் அவர்களும் இதை கண்டுகொள்ளவில்லை. பல அதிகாரிகள் மாற்று இனத்தை சேர்ந்தவர்கள். இது தமிழ் கிராமம் என்ற காரணத்தால் அவர்கள் கண்டுகொள்ள வில்லையோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. அரசியல்வாதிகள் இந்தப் பக்கம்கூட வருவதில்லை. தேர்தல் நேரம் வந்து பொய் வாக்குறுதிகளை தருவதோடு சரி”
“ஐயா நாங்க நாலைந்து மைல்கள் நடந்து கூலிவேலைக்கு போய்வாறமுங்கோ. திரும்ப வரும்போது இங்கு ஏதாவது ஒரு வீட்டில் அழுகிற சத்தம் கேட்கும். யாரவது ஒருவர் செத்துப் போய் இருப்பார். இதுதாங்க இந்த கிராமத்தின் நிலவரம்”ஒரு பெண் சொன்னார்.
“குடிக்க தண்ணி இல்லாம பெரிய கஷ்டப்படுறோம். நாங்க காசு பணம் இல்லாதவங்க. டவுனுக்கு போய் இருநூறு முன்னூறு ‘ரூபா கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி ஒவ்வொருநாளும் குடிக்கமுடியுமா?” அங்கிருந்த மற்றுமொரு பெண் சொன்னார்.
இப்படி அங்கிருந்த ஒவ்வொருவரும் அங்குள்ள பிரச்சினைகளை சொல்லும்போது அதை இந்திரன் தனது பதிவு செய்யும் கருவியால் தவறாமல் பதிவு செய்துகொண்டான். பாதிப்படைந்த பிள்ளைகளை பறிகொடுத்த பெண்கள் சொல்லிச் சொல்லி அழுதார்கள். ஒருசிலர் சொன்னார்கள். அந்த கிணற்று தண்ணீரைக் குடித்து தங்கள் பிள்ளைகளின் கிட்ணி செயலிழந்து போய் விட்டதாகவும் அதை வைத்தியம் பண்ணி சுகப்படுத்த பெரும் பணம் தேவை. ஏழைகள் நாங்கள் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவோம்? அதனால் வைத்தியம் பார்க்க செல்லா மலிருக்கின்றோம். அந்த பிள்ளைகளின் வாழ்வு எங்களின் கைகளில் இல்லை. என்று கண்ணீர்விட்டு அழுதார்கள். மணிகண்டன் அவர்களுக்கு என்ன கூறுவான் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்தார்கள். அவர்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டவனாக மணிகண்டன் பேசினான்.
“உங்கள் கஷ்டமான நிலையை எங்களால் புரிந்துகொள்ள முடியுது. எங்கள் “கை கொடுப்போம் ” அமைப்பின் மூலமாக உங்களுக்கு எப்படி உதவலாம் என்று நாங்கள் கண்டிப்பாக ஆராய்வோம். எங்கள் மேலிடங்கள் கனடா. லண்டன் ஆகிய நாடுகளில் இருக்கின்றன. அவர்களுக்கு உங்கள் உண்மை நிலையை நாங்கள் அறிவிப்போம். அவர்கள் ஆராய்ந்து உங்களுக்கு என்னவைகாயான உதவிகளை செய்யலாமென்று முடிவெடுத்தபின் எங்களுக்கு அறிவிப்பார்கள். அதன்பின் நாங்கள் செய்யவேண்டியதை. செய்வோம். அதேநேரம் உங்கள் பிரச்சினைகள் எல்லைமீறிப் போய்விட்டதென மீண்டும் உங்கள் கிராம அதிகாரிமூலம் அரச அலுவலங்களுக்கு முறைப்பாடு கொடுங்கள். பிரதேச செயலர். பிரதேசசபை தவிசாளர் ஆகியோர் இதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள். ஒரு கிராமத்தின் அழிவை அவர்கள் வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதேபோல் வெளிநாட்டிலுள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இது பற்றி தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களும் சிலசமயம் உங்களுக்கு உதவ முன்வரலாம். எங்கள் அமைப்பு, கிழக்கிலே எமது இனத்தின் கல்வி, சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த அமைப்பு மருத்துவமுகாம் மூலம் பல செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உங்களைபோன்ற நலிவடைந்த மக்களின் கல்வி,தொழில் வளர்ச்சிகளில் அது கவனமெடுத்து தமிழ் சமூகத்தை மேம்படுத்திக்கொண்டு இருக்கிறது. உங்கள் பிரச்சினைகளையும் அது கண்டிப்பாக கவனத்தில் எடுக்கும். நான் சொன்னதுபோல் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் உங்களுக்கு உதவ முன் வரவேண்டும். ஜி.எஸ். ஐயா நீங்கள் கொஞ்சம் கவனமெடுக்க வேண்டும். நாங்களும் உங்களுக்கு துணையாக இருப்போம்.” என்று சொன்னான்.
“கண்டிப்பாக நான் கவனமெடுப்பேன். உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இதை அழுத்தமாக கொண்டுவரலாம். இன்று இங்கு நான் வந்தது நல்லாதாக போய்விட்டது. உங்களை சந்தித்ததால் ஒரு உத்வேகம் வந்திருக்கிறது. எல்லோரும் ஒன்றிணைந்து இந்த கிராமத்தையும்,இந்த மக்களையும் காப்பாற்றுவோம். போகும்போது வாருங்கள் அந்தக் கிணற்றையும் உங்களுக்கு காண்பிக் கின்றேன்.” என்று சொன்னார் கிராம அதிகாரி தாமோதரம்.
இவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டு இருந்த அந்த மக்களின் மனங்களில் ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டது. இதுவரை ஒருவரும் அவர்களை அணுகி இப்படி ஆறுதலாக நாலு வார்த்தை பேசியது கிடையாது. அதானால் ஏற்பட்ட ஒரு மகிழ்ச்சிதான் அது. “கை கொடுப்போம்” அமைப்புக்கு அவர்கள் மனதார மனதுக்குள் நன்றி சொன்னார்கள். வரும் வழியில் கிராம அதிகாரியுடன் சென்று அந்த கிணற்றை பார்வையிட்டு அதை பலகோணத்தில் படமெடுத்துக் கொண்டு மணிகண்டனும். இந்திரனும் தங்கள் இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் மனங்களிலும் அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் நிலைகொண்டிருந்தது.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடென்ன செய்தது நமக்கு?
வளர்கவி
September 15, 2026
நாய் வால்
நீர்வை பொன்னையன்
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
