புது வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 44 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் கண்விழித்துக் கொண்டார் கனகசபை. கண்களை தடவியபடியே படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள விரும்புகின்றார். ஆனால் உடனே அவரால் முடியவில்லை.திரும்பவும் முயற்சிக்காமல் மீண்டும் படுக்கையில் கிடந்தபடி தனது கைகள் இரண்டையும் விரித்துப்பார்க்கின்றார். ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை ஏதோ மங்கலாகத் தெரிகின்றது. 

அவர் விழித்துக் கொண்டதும் கைகளை விரித்துப் பார்ப்பதையே வழக்கமாக கொண்டவர். அந்த பழக்கத்தில்தான் இன்றும் விரித்து பார்த்தார் ஆனால் கைகள் தெளிவாக தெரியவில்லை. 

மங்கலாகத்தான் தெரிகிறது. அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன இது திடீர் என்று கண்களில் ஏதோ புகை படிந்தமாதிரி இருக்கிறது. அதனால்தான் தனக்கு கண்கள் தெளிவில்லாமல் பார்வையில் கோளாறு ஏற்பட்டு விட்டது என்று அறிந்து கொண்டார். கதிரேசனுக்கு வயது எழுபத்தியாறு. கடந்த வருடம் அவரது எழுபத்தியைந்தாவது வயது கடந்து போனது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் வயது எழுபத்தியைந்து என்பது மகிழ்ச்சிக்குரிய வயதல்லவா. அதை பவளவிழா என்று எமது மக்கள் புலம்பெயர் நாடுகளில் மிக சிறப்பாக கொண்டாடுவார்கள் ஆனால் கனகசபை போல் எழுபத்தியைந்து தாண்டியவர்கள் எத்தனைபேர் நமது நாட்டில் இருக்கின்றார்கள் இவர்களுக்கு யார் பவளவிழா கொண்டாடுவது? இவர்களுக்கு அவர்களின் வயதே சரியாக தெரியாது. வயல்காடும். வீடும் என்று இருப்பவர்களுக்கு தங்களை பார்த்துக் கொள்ள,தங்கள் உடல் நலத்தைப் பேணிப்பாதுகாக்க கூட நேரமில்லை. இருந்தாலும் இவர்களின் உடல் எப்பொழுதும் வலுவாகவும் ஆரோக்கிய மாகவும் இருக்கும். காரணம் கடின உழைப்பு. மண்ணோடும், வெயிலோடும் நாளும்,பொழுதும் இவர்கள் உறவாடுவதால் நோய் இவர்களை அணுகவே பயப்படும். 

கனகசபை அவர்களும் இப்படியான கடின உழைப்பாளியே. அவருக்கு பதினெட்டு ஏக்கர் நெற்காணி இருந்தது. சவளக்கடையில் எட்டு ஏக்கர், மோட்டுவட்டையில் ஆறு ஏக்கர், தம்பலவத்தையில் நான்கு ஏக்கர் என்று இருந்தது. தனி மனிதனாக ஒரு சைக்கிளை மட்டும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு இடத்திற்கும் போய்வந்து வேளாண்மை செய்து வந்தார். வாடகைக்கு மெசினை பிடித்து மூன்று இடங்களிலும் உழுது, விதைத்து, பயிர் வளர்த்து, கதிர் பறிந்த பின் காவல் காத்து பின் அறுவடை செய்து, சூடு வைத்து, சூடடித்து,பொலி தூற்றி,நெல் அளந்து சாக்கில் பிடித்து,வியாபாரிக்கு கொடுத்து, களவட்டி பொங்கல் செய்து, அடுத்த போகத்துக்கான விதைநெல். சாப்பாட்டு நெல், பதக்கடை நெல் எல்லாம் ஒரு ட்ரக்டர் பிடித்து அதில் ஏற்றி வீடு வந்து சேரும் மட்டும் கனகசபை ஓயமாட்டார். இது அவரது ஒவ்வொரு வயலிலும் இடம்பெறும் நிகழ்வுதான். இப்படி உழைத்த கனகசபை அவர்களின் குடும்பம் நற்பிட்டிமுனை விபுலானந்தர் வீதியில் சாதாரண மூன்று அறை, மண்டபத் துடன் கூடிய வீட்டிலேயே இருந்தது. மனைவி மங்களத்துடன்,இரண்டு ஆண்பிள்ளைகள்,இரண்டு பெண்பிள்ளைகள் என்று நான்கு பேர் அவருக்கு பிள்ளைகள். எல்லோரையும் படிக்கவைத்தார். 

கல்முனை பாத்திமா கல்லூரியிலும், உவெஸ்லி உயர்தர பாடசாலை யிலும் அவர்கள் படித்து முடித்தபின் ஆசிரியர், எழுதுவினைஞர் என்று வேலைகளை எடுத்துக்கொண்டார்கள். பின்னர் எல்லோருக்கும் நல்ல இடத்தில் பொண்ணு, மாப்பிளை பார்த்து நான்கு பிள்ளைகளுக்கும் கட்டிகொடுத்தார். அதுவரைக்கும் அவருக்கு ஓய்வில்லாத உழைப்புத்தான். தனது காணிகளை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். சவளக்கடையில் இருந்த எட்டு ஏக்கர் பூமியையும் மகன்மார் இருவருக்கும் ஆளுக்கு நான்கு ஏக்கர்படி கொடுத்தார். மோட்டுவட்டையில் இருந்த ஆறு ஏக்கரையும் மூத்த மகளுக்கு சீதனமாக கொடுத்தார். இளையமகளுக்கு தம்பலவத்தையில் உள்ள நான்கு ஏக்கர் நெற்காணியை சீதனமாக கொடுத்தார். நல்ல ஒரு மனிதனாகவும், நற்பிட்டிமுனையில் வாழ்ந்து வந்த மனிதர் இப்போது தனது மனைவி மங்களத்துடன் தனது வீட்டில் வாழ்ந்து வருகின்றார். பெண் பிள்ளைகள் இருவருக்கும் தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வளவுகளுக்குள் பெரிய வீடுகள் கட்டிக் கொடுத்து அதிலே அவர்களை குடியமர்த்தினார். அவர்கள்தங்கள் அப்பாவையும் அம்மாவையும் பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்கின்றார்கள். 

மூத்தமகன் பாண்டிருப்பிலும், இரண்டாவது மகன் கல்முனையிலும்தான் கல்யாணம் கட்டிக்கொண்டு போனார்கள். அவர்களும் அடிக்கடி அப்பாவின் வீட்டுக்கு வந்து போவார்கள். இளைய மகளுக்குத் தான் தங்கள் மறைவுக்கு பிறகு அவர்களின் தாயதி வீடு வளவு என்று எழுதிக் கொடுத்து இருகின்றார். அதனால் இளையமகள் கூடுதல் கவனமெடுத்து தாய் தகப்பனை பார்த்துக்கொள்கின்றார். 

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த கல்முனைப் பிரதேசத்திலேயே தனது ஆயுள் காலத்தை முடித்துக்கொண்டு கண்மூட காத்து இருக்கும் கனகசபை அவர்களுக்கு நெஞ்சிலே மௌனமான வலி இருக்கின்றது. இந்த பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கும், தமிழையே தாய்மொழியாக பேசும் முஸ்லிம்களுக்கும் அடிக்கடி ஏற்படும் மோதல்களால் பலமுறை இயல்பு நிலை குலைந்து போனதுண்டு. நற்பிட்டிமுனை தமிழர்கள் வாழ்ந்த கிராமமாக முன்பு ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்பொழுது இது முஸ்லிம்கள் ஏராளமாக வாழும் இடமாகவும் மாறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்தே இவர்கள் காணிகளை,வளைவுகளை அதிக விலைக்கு தமிழர்களிடம் இருந்து வாங்கி குடியேறி இருக்கிறார்கள் இங்கே அவர்கள் பள்ளிவாசல் ஒன்றும் கட்டி விட்டார்கள். கல்முனை நகரம் தமிழர்கள் வசம் இருந்தது. அது இப்போது முஸ்லிம்கள் வசம் சென்று விட்டது. அவர்கள் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க எத்தனிக்கிறார்கள். அண்மையில் கல்முனை தரவைப் பிள்ளையார் கோவிலும் சில முஸ்லிம்களால் தாக்கப்பட்டது, சேதப்படுத்தப்பட்டது. 

கல்முனை பிரதேசசபைக்கு தவிசாளர் தேர்வு நடந்தவேளை, இம்முறை உதவித் தவிசாளர் பதவி தமிழர் ஒருவருக்கு கிடைத்தது. அதுவும் முஸ்லிம் அரசியல் வாதி ஒருவரின் கட்சி ஆதரவுடன்தான் கிடைத்தது. இரு இன மக்களும் வாழும் இந்த பிரதேசத்தில் சமாதானமாக வாழ இது வழிவகுக்கும் என்று எண்ணியபோது நற்பிட்டிமுனை பள்ளிவாசலுக்கு முன் முஸ்லிம்கள் சிலர் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நேற்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் மனமுடைந்து போய் வந்து படுத்தவர்தான் கனகசபை இப்போதுதான் விழித்து கொண்டார். விழித்ததும் வழமைபோல் கைகளை பார்த்தார். கைகள் மங்கலாக தெரிந்தன. நேற்று நன்றாக தெரிந்த கண்கள் இன்று தெரியவில்லையே என்ற அதிர்ச்சியிலும் பயத்திலும் மனைவி மங்களத்தை அழைக்கின்றார். “மங்களம் மங்களம் எங்கயம்மா இருக்கிறாய்” 

“இந்தா வாறான் குசினிக்குள்ள இருக்கிறன் கோப்பி போட்டுக் கொண்டுவாறன்”

“அதை பிறகு போடலாம் இங்க ஓடிவாப்பா ஒருக்கா அவர் பதட்டத்துடனும், பயத்துடன் அழைத்தார் 

“என்னப்பா எழும்புங்கோவன் என்ன படுத்துக் கிடக்கிறீங்க. கையை கொண்டுவாங்கோ பிடிச்சி எழுப்பி விடுறன்” 

“அந்த கைதானப்பா காட்டிகொடுத்திருக்கு எனக்கு கண்கள் மங்கலாக தெரிகின்றன என்று. அதுதான் உன்னை கூப்பிட்டன். எங்க உன்ர கைகளை காட்டு பாப்பம் ” என்றார். 

மங்களம் கைகளை விரித்து அவருக்கு காட்டினார்.. 

“சரியா தெரியல்ல மங்களம் ஏதோ மறைக்கின்ற மாதிரி தெரியுது.” “அது வயசுபோக போக அப்படி வாறதானப்பா. எனக்கு இந்த கண்ணாடி போடுறதால தெரியுது. இல்லாட்டி எனக்கும் மங்கலாகத்தான் தெரியும். மூத்தவளிட்ட சொல்லி கண்ணை காட்டி ஒரு கண்ணாடி என்னைப்போல வாங்கிப் போட்டால் சரியாப்போயிடும். எழும்புங்கோ எழும்பி முகத்தை கழுவிக்கொண்டு வாங்கோ கோப்பி கொண்டுவாறன். இரவும் சாப்பிடாம படுத்திட்டீங்க சாப்பாடும் எடுத்து வைக்கிறன் கெதியா வாங்க ” என்ற மங்களம் குசினிக்குள் சென்றாள். 

கனகசபையர் மனைவி மங்களம் கொடுத்த காலைச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கல்முனை வைத்தியசாலைக்கு சென்று டாக்டரிடம் கண்களை காட்டுவோம் என்று புறப்பட்டார். கண்பார்வை காலையில் கண்விழித்ததுபோல் இல்லாமல் இப்போது நன்றாக இருந்தது. தனது வீட்டிலிருந்து புறப்பட்டு விபுலானந்தர் வீதியால் வந்து,கிட்டங்கி வீதிக்கு வந்தார். ஆட்டோ ஒன்று வர, அதை மறித்து ஏறிக்கொண்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வந்தார் கனகசபையர். அங்குள்ள பிள்ளையார் கோவிலை கும்பிடபோனவரை அவரது நண்பர் கதிரமலை கண்டுகொண்டார். இருவரும் சேர்ந்து கும்பிட்டுவிட்டு வந்து வைத்திய சாலை வரவேற்பு அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள்.கண்ணாடி போட்டிருந்த கதிரமலையர் பேச்சை தொடங்கினார். 

“என்ன கனகு காலங்காலத்தால வந்திட்டாய் என்ன உடம்புக்கு சுகமில்லையோ?” 

“உடம்பு நல்லாதாண்டாப்பா இருக்கு. என்ர கண்ணுகள்ளதான் கோளாறு போல தெரியுது” 

“கண்ணுகள்ள என்ன கோளாறு நீ கண்ணாடியும் போடாமல் நல்ல பார்வையோடதானே வயல்வட்டை ஊர் உலகமென்று திரிந்த நீ. இப்ப என்னடாப்பா நடந்தது?” 

“நேற்று பள்ளிவாசல் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துவிட்டு மனசு வலியோட வீட்டபோய் சாப்பிடாமலே படுத்திட்டன்” 

“ஓமடா கனகு நானும் கேள்விப்பட்டன். முஸ்லிம்கள் சிலர் பள்ளிவாசலுக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் பண்ணினதால அங்கு இருக்கிற தமிழர்கள் பயத்துடன் இருந்ததாக சொன்னாங்க” 

“அப்படியொரு பதட்டநிலை உருவாகல்ல. அவங்க தங்கட அரசியல் வாதிக்கு எதிராகத்தான் கோஷம் போட்டுக்கொண்டு இருந்தாங்க. அவரை இனி நற்பிட்டிமுனைக்குள் வர விடமாட்டம் துரோகி, தமிழனுக்கு உதவி தவிசாளர் பதவியை கொடுத்திட்டான் சுயநலவாதி என்று கத்திக் கொண்டு இருந்தாங்க” 

“ஏன் கனகு, இவ்வளவு காலத்திற்கும் இந்த நகரசபைக்கு அக்கிராசனராக முஸ்லிம் ஒருவர்தானே இருந்து வந்தது. இல்லையோ” 

“கதிர், முந்தித்தான் கிராமசபை, நகரசபை, என்று சொன்னாங்க. இப்ப பிரதேசசபையாம். அக்கிராசனரை தவிசாளர் என்று இப்போ சொல்லுறாங்க. பல கட்சிகளும் மக்களிடையே வாக்கு கேட்டு வென்றபின் யாருடைய கட்சி கூட உறுப்பினர்களை கொண்டிருக்கோ அவர்களில் ஒருவரை தவிசாளராக நியமிப்பாங்க. சரிக்கு சரியாக இருந்தா மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்பாங்க. 

இங்க அப்படித்தான் நடந்ததாம். தமிழ் கட்சியின் ஆதரவை பெற்று வெற்றி பெற்ற ஒருவர் தவிசாளர் ஆகிவிட்டார். உதவி தவிசாளர் பதவிக்கு ஒரு தமிழர் போட்டி போட அதற்கு அவங்க ஆதரவு கொடுக்க அவர் வெற்றி பெற்றுள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல்த்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம். அவங்களுக்கு தமிழர் ஒருவர் தவிசாளராக வருவது பிடிக்கல்ல அவ்வளவுதான்” 

“மூணு நாலு தலைமுறைக்கு முன்னால தமிழர்கள் வாழ்ந்த இடமென்று சொல்வாங்க உண்மையோ பொய்யோ தெரியாது. எப்படியோ இன்றைக்கு அவங்கதானே உங்கட ஊர்ல பெரும்பான்மை சமூகமாக இருக்கிறாங்க” “அம்பாறை மாவட்டதில் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்று மூன்று இன மக்களும் வாழ்கிறாங்க ஆரும் ஒரு இனத்தை பகைத்துக் கொண்டு, வாழமுடியாது. இவங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையா இருந்தால்தான் இந்த மாவட்டம் அமைதியா இருக்கும்” “ஓம் கனகு பார்த்தியேன்டால், பெரியநீலாவணை-மருதமுனை, அங்கால மருதமுனை -பாண்டிருப்பு கல்முனை-கல்முனைக்குடி. சாய்ந்தமருது/ மாளிகைக்காடு -காரைதீவு. பிறகு காரைதீவு -நிந்தவூர் நிந்தவூர்- அட்டப்பள்ளம் அதன்பிறகு மீனோடைக்கட்டு -அட்டாளைச்சேனை. உள்ளுக்குள்ள திராய்க்கேணி என்ற ஊரும் இருந்தது. அதன்பிறகு அக்கரைப்பற்று. அங்கு தமிழர்கள் குறைவாகவே வாழ்கிறார்கள். இப்படி எல்லைக் கிராமங்களாகவே தமிழ் கிராமங்கள் இருக்கின்றன பார்த்தியா.”

“நீ சொன்னதில மீனோடைக்கட்டும், திராய்க்கேணியும் இப்போ இல்ல. அங்கிருந்த மக்கள் தங்கள் காணிகளை முஸ்லிம்களுக்கு விற்று விட்டு போய்விட்டாங்க. நாம அறிய எப்படி இருந்த மக்கள். தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால அடிக்கடி முறுகல் நிலை இருந்துகொண்டே இருக்கும்” 

“கனகு, நம்மட கண்ணுக்கு பிறகு என்ன நடக்கபோகுதோ ஆருக்கு தெரியும் அதுசரி நீ கண்பார்வையில ஏதோ கோளாறு எண்டு சொன்னாயே” “ஓமடாப்பா காலையில கண் மங்கலா தெரிஞ்சது. இருந்திட்டு புகை மாதிரி எதோ வந்து மறைக்குது?” 

“அது எனக்கும் இப்போ இருக்கு கனகு. கண்ணாடி போட்டும் சரிவராது.”

“உன்ர மருமகன் டாக்டர்தானே அவரிட்ட சொல்லி என்ன எண்டு கேட்கலியே” 

“கேட்டனான் ஒப்பரேசன் செய்யவேணுமாம் என்று சொல்லிப்போட்டார். “புது வெளிச்சம் ” என்ற தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பு மாவட்டம், திருமலை மாவட்டம், மூதூர் மாவட்டம் என்று வைத்திய முகாம் என்ற ஒன்றை ஒரு இடத்தில ஒழுங்கு செய்து பல டாக்டர்கள வரவழைத்து பலருக்கு வைத்தியம் செய்திருக்கிறார்களாம். மருமகன் சொன்னார். 

இங்க நமட அம்பாறை மாவடத்தில வீரமுனையில் இந்த முகாம் அமைத்து வைத்தியம் பார்த்ததாகவும் சொன்னார். அடுத்து அட்டப்பள்ளம் ஊரில் முகாம் அமைக்க இருக்காகங்க. 

இது அவங்கட பதினைந்தாவது மருத்துவ முகாமாம். இதை தொடர்ந்து பதினாறாவது முகாம் திருமலை கும்புறுப்பிட்டியிலும்பதினேழாவது முகாம் மட்டக்களப்பு பட்டிப்பளையிலும், பதினெட்டாவது மருத்துவ முகாம் நம்மட துறைநீலாவணையிலும் பத்தொன்பதாவது முகாம் திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை இணைத்து கதிரவெளி- வெருகல் ஆகிய இடங்களிலும், இருபதாவது மருத்துவ முகாம் நம்மட மாவட்டத்தில் ஆலையடிவேம்பு என்ற ஊரிலும் நடைபெற இருக்கிறதாம். நடக்கப்போகின்ற அட்டப்பள்ளம் மருத்துவ முகாம் நம்மட கல்முனை ஆதார வைத்தியசாலையின் பூரண ஒத்துழைப்புடன்தான் நடக்கப்போகுதாம். அம்பாறை மாவட்ட புது வெளிச்சத்தில் எனது மருமகனும் இணைந்து சேவையாற்றுகிறார். 

நடக்கப் போகும் இந்த மருத்துவ முகாமில் நம்மட மாவட்டதில் உள்ள பல ஊர்களிலிருந்தும் மக்கள் வருவாங்க. பல நோய்களையும் கண்டு கொள்ளகூடிய திறமையான டாகுத்தர்மார் வருவாங்களாம். கண் டாகுத்தர் பலர் வாறாங்களாம் கண் பார்வை தெளிவில்லாத ஆட்களுக்கு சோதிச்சு, உடனே ஒப்பரேஷன் பண்ண ஏற்பாடு பண்ணுவாங்களாம். மருமகன் அந்த மருத்துவ முகாமுக்குதான் என்னையும் கூட்டிப் போக இருக்கிறார் கனகசபை. நீயும் வா. நான் மருமகனிடம் சொல்லிஉன்னையும் கூட்டிபோறன் ” 

“அப்படியே கதிர். கண்டிப்பா நானும் வாறன். அது சரி,இந்த புது வெளிச்சம் என்று சொன்னீயே அவங்க ஆரு ஆட்கள், எங்கிருந்து வாறாங்க” 

“மருமகன்தான் சொன்னார் கனகு. கனடாவிலும்,லண்டனிலும், மற்றும் ஐரோப்பிய. அவுஸ்திரேலியா நாடுகளிலும் இருந்தும் இந்த புது வெளிச்சம் இயங்குதாம். நம்மட ஊர்களை சேர்ந்த, அதாவது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அங்கிருக்கும் பிள்ளைகள், கிழக்கு மாகாண மக்களுக்கு. குறிப்பாக கஷ்டநிலையில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் இருக்கும் ஊர்களை தெரிவு செய்து இந்த மருத்துவ முகாம்களை அமைத்து வைத்தியம் பண்ணுறாங்களாம். முகாமுக்கு செல்பவர்களை பரிசோதித்து, அவர்களுக்கு நீரழிவு நோய் இருக்கிறதா? இரத்த அழுத்தம் இருக்கிறதா? கொழுப்பு கூடி குறைந்து இருக்கிறதா? கண்பார்வையில் கோளாறு இருக்கிறதா? இருந்தால் அவர்களுக்கு வைத்தியசாலையில் ஒப்பரேசன் செய்ய ஏற்பாடு பண்ணி பார்வை வர செய்கிறாங்களாம். கிழக்கு மாகாணத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்களிலும் இந்த புது வெளிச்சம் செயற்பாட்டாளர்கள் இருக்காங்களாம். இவர்கள் மூலமே இந்த நல்ல சேவையை செய்கின்றார்களாம். என் மருமகன் அம்பாறை மாவட்டத்து எமது சமூக உறுப்பினராக இருப்பதால் அவர் எனக்கு இந்த தகவல்களை சொன்னார். இதுமட்டுமல்ல இன்னும் பல வழிகளில் இந்த புதுவெளிச்சம் நலிவடைந்த மக்களுக்கு உதவி செய்கிறதாம்” 

“நீ நல்லா கதைக்க பழகிட்டா கதிர். நல்ல நல்ல தமிழ் கதைக்கிறாய். அதென்ன நலிவடைந்த மக்கள் என்று சொன்னாய்” 

“அதுவந்து கனகு மருமகனும், மகளும் பேசும்போது கேட்டுக் கொண்டு இருப்பதால் நானும் விளங்கி கொள்ளுகிறேன். நலிவடைந்த மக்கள் என்றால் வசதி இல்லாத, கஷ்டப்படுகிற மக்கள்” 

“வேற என்னென்ன உதவிகள் செய்யுதாம் புது வெளிச்சம்” 

“வசதி குறைந்த படிக்கிற பிள்ளைகளுக்கு நல்லாப் படிக்கிறதுக்கு பின்னேர பாடசாலை வைத்து, வாத்திமாரை நியமித்து படிப்பு சொல்லி கொடுக்கிறது, தூரத்தில இருக்கிற பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக சைக்கிள் வாங்கி கொடுக்கிறது. புத்தகம், பென்சில், புத்தகப்பை, வாங்கி கொடுக்கிறது. தண்ணீர் இல்லாத கஷ்டமான கிராமங்களுக்கு குடிதண்ணீர் கொண்ட தண்ணீர் டாங்குகள் கொடுக்கிறது. தொண்டர் ஆசிரியர்களை சம்பளம் கொடுத்து, சனி ஞாயிறு நாட்களில் பிள்ளைகளுக்கு படிப்பிக்க ஒழுங்கு செய்வது, இருக்க வீடு இல்லாமக்களுக்கு அவர்கள் குடியிருக்க வீடு கட்டி கொடுப்பது, கஷ்டத்தின் நிமித்தம், கடன் பட்டு, அதை திரும்ப அடைக்க முடியாமல் மாற்று சமூகத்தினரிடம் அகப்பட்டு அவதிப்படும் பெண்களுக்கு உதவி, அவர்கள் கடனை அடைத்து மீட்பது இப்படி பல உதவிகளை செய்யிறாங்களாம் என்று மருமகன் சொன்னார் கனகசபை. இன்னுமொரு தகவல் சொன்னார் நம்மட புனானை பிள்ளையார் கோவில் உடைஞ்சி தகர்ந்து கிடந்ததே அதைக் கட்டி முடிச்சி இப்ப அழகான கோவிலாக, மக்கள் கும்பிட வழி செய்திருக்கிறாங்களாம். பற்றியும். இதுவரை மக்களுக்கு செய்த உதவிகள் பற்றியும் நேரில் கண்டறிந்து திருப்தி அடைந்துகொண்டு சென்று இருக்கிறார் ” 

“எங்கெல்லாம் கதிரமலை இந்த நல்ல காரியங்களை இந்த புது வெளிச்சம் செய்திருக்கு” 

“ஆ. அதையும் மருமகன் சொன்னார். திருகோண மலையில் ஈச்சலம்பற்று. மட்டக்களப்புல பன்குடாவெளி, மூதூர்ல பாட்டாளிபுரம், அம்பாறையில் வீரமுனை, மற்றும் கிரானில் ஈரலகுளம், இன்னும் கரடியன்குளம், திகலிவட்டை, வாகனேரி, மாவிலங்கத்துறை என்று நீண்டு செல்கிறது கனகு” 

“எவ்வளவு நல்ல காரியங்களை இவங்க செய்யுறாங்க. நாட்டில் இந்த போர் வந்த பிறகு நாமும் முடங்கி மூலைகுள்ளதானே கிடந்தோம். இப்பதானே ஓரளவு நிம்மதியா வெளியில் ஊசலாட முடியுது. வெளிநாட்டில் இருக்கிற நல்ல எண்ணம் கொண்ட நமது பிள்ளைகள் இப்படி புது வெளிச்சம் என்று ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் செயல்பாட்டை இங்குள்ள மக்கள் உதவியுடன் செய்வது பாராட்டவேண்டிய விஷயம் கதிரமலை நம்மட கண்ணோட இந்த நல்ல காரியங்கள் நடப்பதை கேட்பதும், பார்ப்பதும் எவ்வளவு சந்தோசத்தை தருகிறது.” 

“ஓம் ஓம்.. உண்மைதான். இங்குள்ள படித்த, பிள்ளைகள் இந்த புது வெளிச்சத்துடன் இணைந்து செயல்படவேண்டும். நடக்க இருக்கின்ற அட்டப்பள்ளம் மருத்துவ முகாமுக்கு பலரை நாமும் வரச்சொல்லி அழைப்பு கொடுப்போம். பலருக்கும் இந்த புது வெளிச்சம் பற்றி சொல்லுவோம். வேறு என்ன நான் வரட்டா பின்ன. நீ இருந்து டாக்டரை பார்ப்பதாக இருந்தால் பார்த்துவிட்டு வா” 

“நான் இனி என்னத்துக்கு டாகுத்தரை பார்க்கிறது. அட்டப்பள்ளம் மருத்துவ முகாமுக்கு உன்னோட வந்தால் சரிதானே. அப்ப கிளம்புவோம் நான் ஒரு ஆட்டோவை பிடிசிக்கொண்டு போறன் கதிர் சரியா.” 

“சரி சரி வா நானும் வந்து உன்ன அனுப்புறேன்” என்று சொன்ன கதிரமலை, நண்பன் கனகசபையை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு கல்முனை ஆதர வைத்தியசாலை வரவேற்பு அறையிலிருந்து வெளியே வந்தார். கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை மறித்து கனகசபையை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் கதிரமலை. 

ஆட்டோவில் நற்பிட்டிமுனையில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்துகொண்டு இருந்த கனகசபையருக்கு புது வெளிச்சம் செய்கின்ற நல்ல காரியங்கள் நினைவுக்குவந்தன. அரசாங்கமும், அரசியல் வாதிகளும் செய்யாத, வறிய மக்கள் வாழ்வாதார தேவைகளை புது வெளிச்சம் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருவதை நினைத்து மகிழ்ச்சி யுடன் சென்று கொண்டிருந்தார்.

– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.

கோவிலூர் செல்வராஜன் கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *