கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 9,010 
 
 

வானிலிருந்து பாழடைந்த பூமியைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுளின் கண்கள் துக்கத்தில் நனைந்தன. மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு, கிரகம் உயிர்கள் எதுவுமின்றி ஒரு வெறிச்சோடிய பாலைவனமாகக் காட்சியளித்தது. கிரகத்தை உயிர்களால் நிரப்ப அவர் விரைவான ஒரு தீர்வை நாடினார். அதைப் பற்றி விவாதிக்க தன் ஊழியர்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். அங்கே பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டன, சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.

“பூமி இப்போது ஒரு வெற்று கேன்வாசாக இருக்கிறது. அதை மறுபடி எப்படி கோடிக்கணக்கான உயிர்களால் நிரப்புவது?”

“பல்வேறு வகையான இரசாயனங்களை கலந்து முதன் முதலில் பூமியில் உயிர் எப்படி உருவானதோ அது போலவே மறுபடியும் உயிரை உருவாக்கலாமே?”

“உருவாக்கலாம் தான், ஆனால் ஒரு செல் உயிரினமாக ஆரம்பித்து பரிணாம வளர்ச்சியில் மனிதர்களாக உருவெடுப்பதற்கு கோடிக்கணக்கான வருடங்கள் பிடிக்குமே? அது நமக்கு உதவாது.”

“நம்மால் ஜடப் பொருள்களுக்கு உயிர் கொடுக்க முடியும். கிரகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எல்லா இறந்த உடல்களுக்கும் உயிர் கொடுத்து விட்டால், பிரச்சனை தீர்ந்து விடுமே?”

“நல்ல யோசனை தான். ஆனால் இறந்து நீண்ட காலமாகி விட்டதால், உடல்களெல்லாம் சிதைந்து அழுகி விட்டன. அவைகளுக்கு உயிர் கொடுத்து பயன் ஒன்றுமில்லை.”

“கோயில்களிலும் மியூசியங்களிலும் இருக்கும் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் உயிர் கொடுத்து விட்டால்?”

“அவைகள் போதுமானதாக இல்லை. பூமியை நிரப்ப நமக்கு நூறு கோடிக்கும் மேலாக உடல்கள் தேவை.”

இரண்டு நிமிட அடர்த்தியான மௌனத்திற்குப் பின் ஒரு அமைதியான குரல் வெளிப்பட்டது. “கோடிக்கணக்கான திடகாத்திரமான உடல்களை எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்குத் தெரியும்.” எல்லோரும் குரல் வந்த திசையை நோக்க, குரலுக்கு உரியவர் மெதுவாக தன் திட்டத்தை விளக்க ஆரம்பித்தார்.

திட்டத்தை கேட்ட கடவுளின் முகம் முதன் முறையாக புன்னகையில் மலர்ந்தது.


ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவன் திடுக்கென்று விழித்துக் கொண்டான். தான் யார், தன் பெயர் என்ன, தான் எங்கிருக்கிறோம் என்பது எதுவும் நினைவில் இல்லை. சுற்றிலும் இருள் கவிந்திருக்க, பலவீனமான பிற்பகல் சூரிய ஒளி கதவிடுக்கு வழியே உள்ளே கசிந்து கொண்டிருந்தது. அப்போது தான் அவனுக்கு புரிந்தது தான் ஒரு அலமாரிக்குள் இருப்பது.

மெதுவாக எழுந்து நின்றான். அலமாரியின் கதவை பலம் கொண்ட மட்டும் அழுத்தி திறந்து வெளியே குதித்தான்.

அலமாரி இருந்த அறை முழுக்க தூசியும் குப்பையும் நிறைந்திருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் நடந்த மூன்றாம் உலகப்போரில் வெடித்த குண்டு அறையை பெருமளவில் சேதப்படுத்தியிருந்தது. ஜன்னல் கம்பிகள் உடைந்து நெளிந்திருந்தன. மூலையிலிருந்த சிறுவர்கள் படுக்கும் கட்டில் இரண்டாகப் பிளந்திருந்தது. கிழிந்த துணிகளும், உடைந்த விளையாட்டு பொருள்களும், கருகிய தாள்களும் அறை முழுவதும் இறைந்திருந்தன.

தரையில் இருந்த கூர்மையான ஒரு பொருள் தடுக்கி அவன் சமநிலை இழந்து விழப்போனான். நல்ல வேளை, விழவில்லை. சுதாரித்துக் கொண்டு, மண்டியிட்டு உட்கார்ந்து தன்னை தடுக்கிய பொருளைக் கையிலெடுத்தான். உடைந்த கண்ணாடியின் ஒரு துண்டு அது. தன் பிரதிபலிப்பைக் காண அதை தன் பக்கம் திருப்பினான்.

கண்ணாடியில் அவன் பார்த்தது – பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில், இரண்டு அங்குல உயரமுள்ள, ஒரு LEGO பொம்மை.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *